மலேசியத் திரைவிமர்சனம்: மெல்லத் திறந்தது கதவு

mtk-aகார்த்திக் ஷாமளன் என்கிற மலேசிய இளைஞரால் இயக்கப்பட்டு டிவிடியின் மூலம் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மலேசிய சூழலில் கொஞ்சம் வித்தியாசமானது. நண்பர்கள், முகநூல் மூலம் இப்படம் தொடர்பான பகிர்வுகள், விமர்சனங்கள் பரவியப்படியே உள்ளன. இன்று பதாகைகளோ அல்லது பத்திரிகைகளோ அவையனைத்தையும்விட முகநூல், தகவல்களைச் சேர்ப்பதிலும் மக்களை இணைப்பதிலும் முதன்மை வகித்து வருகின்றது. கார்த்திக் ஷாமளனால் முகநூலில் இப்படம் குறித்து பெரிய அலையை உருவாக்க முடிந்துள்ளது. அடுத்து வரும் இளம்தலைமுறை படைப்பாளர்கள் பத்திரிகைகளில் காலில் விழாமலும் விளம்பர நிறுவனங்களுடன் சமரசம் செய்துகொள்ளாமலும் மக்களை அடைய இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்றே கருத முடிகிறது.

கதை

படித்த மேல்தட்டு பெண்ணொருவரின் (ஸ்வஸ்னா) வாழ்வில் நிகழும் ஒரு துர்சம்பவத்தைச் சுற்றிய கதை இது. புகைப்பழக்கமுள்ள ஒரு துணிச்சலான பெண்ணாகக் காட்டப்படும் அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் வழியில் லோரோங் சந்தில் இன்னொரு பெண் ஒரு ஆசாமியால் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதை நேரில் பார்த்துவிடுகிறார். அங்கிருந்து அவர் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகுவதாக மீதிப்படம் நகர்கிறது. அதாவது இப்படத்தை இரண்டு விதமாகப் பிரித்துணர முடிகிறது. ஒன்று பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு முன்பான அவருடைய வாழ்க்கை; அடுத்ததாக அந்த பாலியல் வல்லுறவு சம்பவத்திற்குப் பிறகான அப்பெண்ணின் வாழ்க்கை. ஒரு பாலியல் வல்லுறவு சம்பவம் கதையின் மையமாக இருந்து கதையின் இருவழி பாதையைத் தீர்மானிக்க உதவுகிறது.

பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு முன்பான வாழ்க்கை

mtk-bபடத்தின் முதல்பாதி அப்பெண்ணின் காதலையும் அவருடைய வாழ்வின் நெருக்கங்களையும் முதன்மையாக வைத்துப் பேசுகிறது. அவர் இரு சக பெண் தோழிகளுடன் ஒரு தனியான வீட்டில் வசிக்கிறார். அவர் குடும்பப்பின்னணியெல்லாம் படத்தில் பெரிதாகக் காட்டப்படவில்லை. அவருடைய காதலன் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தடுமாறும் போர்த்துகிசீய பின்புலமுள்ள ஒரு மேல்தட்டு பணக்காரர். காதலில் உருகுகிறார். அப்பெண்ணை மிகவும் நேசிக்கிறார். படம் முழுக்க சுதந்திரமாக இருக்க நினைக்கும் அப்பெண்ணின் வாழ்வை நெறிப்படுத்திப் பாதுகாக்க நினைக்கும் ஓர் ஆணாக வருகிறார். இவரின் கதைப்பாத்திரம் விரிவாகச் சொல்லப்படாதது கதைக்குப் பலவீனமாகிவிடுகிறது.

புகைப்பழக்கம் உடையவராக அப்பெண்ணைக் கார்த்திக் ஷாமலன் படத்தில் காட்டியது பெண்கள் மீதான சமூக ஒழுக்க மதிப்பீடுகளைக் களைத்துப் போடுவதாக முதலில் தோன்றலாம். ஆனால், அவர் அடுத்தடுத்து அப்பெண்ணை நிறுவும் விதம் விமர்சனத்திற்குரியதாக மாறுகிறது. உணவகத்தில் தன் காதலனுக்குத் தெரியாமல் அவர் புகைப்பிடிப்பதைக் காதலனின் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டுத் தகவல் கூறுகிறார். ஆனால், அவர் அப்பெண்ணைப் பற்றி விவரிக்கும் விதம் அப்பெண்ணின் கதைப்பாத்திரத்தை மேலும் பலவீனமாக்கிவிடுகிறது. தான் புகைப்பழக்கம் உடையவர் என்பதற்காக அவர் சமூகத்தின் முன் வெட்கப்படுவதாக அவர் விவரிக்கப்படுவது அக்கதைப்பாத்திரத்தின் உருவாக்கத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய முரண்பாடு. ஒரு துணிச்சல்மிக்க பெண்ணாகவும் சமூகத்தின் மதிப்பீடுகளைப் பற்றி கவலைப்படாதவருமாகக் காட்டப்பட்டு பிறகு மீண்டும் தான் செய்யும் காரியத்திற்குத் தானே வெட்கப்படும் ஒரு சராசரி பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

பாலியல் வல்லுறவு சம்பவத்திற்குப் பிறகான வாழ்க்கை

இந்த இரண்டாம்பாதி படம்தான் மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. திரைக்கதையின் நகர்ச்சி பார்வையாளனை வசீகரிக்கின்றது. அப்பெண்ணின் கதைப்பாத்திரத்தின் மனநிலை பாதிப்பும் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் அப்பெண் அந்த ஆசாமியையும் அந்தப் பாலியல் வல்லுறவு சம்பவத்தையும் நினைத்துப் பதற்றமடைகிறார். அந்த ஆசாமி அவரைப் பின்தொடர்வதாகவும் அவரையே கண்காணிப்பதாகவும் படத்தின் இரண்டாம்பாதியில் தீவிரமாகக் காட்டப்படுகிறது. தன் வீட்டுக்குள் இன்னொரு புதிய ஆளின் நடமாட்டத்தையும் இருப்பையும் அவள் உணரத் துவங்கும் காட்சிகள் மிரட்டலாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு பின்னிரவில் அந்த ஆசாமி அவளின் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றான். எப்படி வந்திருப்பான் என்கிற திகில் சட்டென மனத்தை ஆட்கொள்கிறது. அவளின் முகத்தின் அருகே வந்து உற்றுக் கவனிக்கின்றான். அவளைத் தொட முயல்கிறான். நாக்கை வெளியே நீட்டி அவளின் உடலைத் தீண்டும்படியான பாவனைக்குள்ளாகுகின்றான். திடீரென அவளின் கட்டிலுக்கடியில் படுத்துக் கிடக்கிறான். அந்த ஆசாமியைப் பார்த்து அவள் பதற்றமடைந்து ஓட முயல்கிறாள். ஆனால் எந்தப் பரப்பரப்புமின்றி அவன் அங்கேயே தன் வலது கையைத் தரையில் நீட்டியவாறு படுத்திருக்கிறான். இந்த இடத்தில் அவனொரு சாதாரண சமூக எதிர்த்தன்மை கொண்டவன் அல்ல, அவன் மனரீதியில் சிக்கல் உள்ளவனைப் போல காட்டப்பட்டிருக்கிறான். இருப்பினும் கதையின் முடிச்சுகள் அதனையும் பலவீனப்படுத்திவிடுகிறது.

கதையின் இறுதியில் அவன் அப்படி அப்பெண்ணின் வீட்டில் தோன்றுவதும் அவளைப் பிந்தொடர்வதும் அனைத்தும் அவளுடைய சுயக் கற்பனை என்றே சொல்லப்படுகிறது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவளும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகிறது. பிறகு மீண்டும் கதை முதல் பாதியின் உச்சக்காட்சிக்கு நகர்கிறது. லோரோங் சந்தில் அந்த அடையாளம் தெரியாத பெண்ணுடன் இப்பெண்ணும் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்பதுதான் கதையின் ஆரம்பத்தில் மறைக்கப்பட்ட உண்மை. படத்தின் கதாநாயகி அடையாளம் தெரியாத அப்பெண்ணை இந்த ஆசாமி பாலியல் வல்லுறவு செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு ஓட நினைக்கும் வழியில் கால் இடறி கீழே விழுந்துவிடுகிறாள். அடுத்த கணமே அந்த ஆசாமி அவளையும் பாலியல் வல்லுறவு செய்துவிடுகிறான். அதிர்க்குள் மூழ்கிய அவள் அதனை உணராமல் மீதிக் கதை முழுக்கத் தான் பாலியல் வல்லுறவு சம்பவத்தைப் பார்த்ததால்தான் இப்படிப் பாதிப்பிற்குள்ளானேன் என்கிற வகையில் நம்மையும் நம்ப வைக்கின்றாள். படத்தின் முடிச்சுகளில் செல்வராகவனின் திரைக்கதை பாணியின் தாக்கம் இருப்பதையும் உணர முடிகின்றது.

பாலியல் வல்லுறவு சமூகப் பிரச்சனையா?

mtk-cபாலியல் வல்லுறவு என்பதை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையாகவோ அல்லது தனிமனிதன் சார்ந்த பிரச்சனையாகவோ அல்லது ஒரு பெண் சார்ந்த பிரச்சனையாகவோ படம் விவாதிக்கத் தவறிவிட்டது என்பதுதான் இன்னொரு சிக்கல். பாலியல் வல்லுறவு ஒரு சம்பவமாக மட்டுமே படத்தின் இரு பாதி வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு நிகழும் மாற்றங்களைக் காட்டிவிட்டுப் போகிறது.

முதல் பாதி படத்தின் இடைவேளையில் அவள் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறாள், ஆனால் அருகில் இருப்பவர்களுக்கும் நமக்கும் அது தெரியாமல் இருக்கிறது. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் கண்டிப்பாக உடல் ரீதியிலான அவஸ்த்தைக்கும் ஆளாகியிருப்பாள். ஆனால் படத்தில் அவளின் மன உளைச்சள் மட்டுமே பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் போதாமை படத்தின் கதை விவாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. அகிரா குரோசாவா போன்ற இயக்குனர்கள் ஒரு திரைக்கதைக்கான அனைத்து சாதகப் பாதகங்களை தீர ஆராய்ந்துவிட்டுத்தான் படத்தை இயக்குகிறார்கள். இது நல்ல சினிமாவிற்கான பயிற்சி என்றே கருதுகிறேன்.

பாலியல் வல்லுறவை ஒரு சமூகப் பிரச்சனையாகப் படம் பேசியிருந்தால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான அந்தப் பெண்ணைச் சமூகம் எப்படி எதிர்க்கொள்கிறது என்பதனைக் காட்டியிருக்கலாம். PC.Sriram அது தொடர்பாக தனது ஒரு படத்தில் விரிவாகப் பேசியுள்ளார். அதே போல பாலியல் வல்லுறவை ஒரு பெண் மனோவியல் சார்ந்த விசயமாகப் பேசியிருக்கலாம். இப்படம் பாலியல் வல்லுறவு செய்தவனை நோக்கிய பயங்களையே கட்டமைக்கின்றது. ஸ்வஸ்னா அந்தக் குற்றவாளியை நினைத்து அவன் இருப்பை நினைத்துத் தினம் அச்சமுறுகிறாள்; மனம் பிறழ்கிறாள். ஆனால் படத்தின் இறுதிவரை அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளானதால்தான் அப்படியொரு பயங்களை அடைகிறாளெனச் சொல்லப்படவில்லை. மேலும் அவள் அடையும் உளவியல் தடுமாற்றம் ஒரு பாலியல் வல்லுறவு சம்பவத்தைப் பார்த்த பெண்ணின் ஒரு நிலையாகவே படத்தில் உணர முடிகிறது.

அடுத்து, பாலியல் வல்லுறவைப் பெண் சமூகத்திற்கான பிரச்சனையாகக் காட்டியிருந்தாலும் படம் ஒரு சமூக அக்கறையை உருவாக்கியிருக்கும். பாலியல் வல்லுறவை எப்படிப் பெண் சமூகம் சார்ந்த பிரச்சனையாகப் பார்த்திருக்கலாம்? அது சார்ந்து பிரச்சாரத்தனமற்ற ஒரு விழிப்புணர்வை உருவாக்க முயன்றிருக்கலாம். எப்படி ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், ‘மெல்ல திறந்தது கதவு’ பாலியல் வல்லுறவு செய்த ஒரு குற்றவாளி கைதாகுவதிலிருந்து இப்பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் எனப் பேசுகிறது. பாலியல் வல்லுறவு என்பதன் பின்னணி, ஆண்களின் மனநிலை, அவர்களின் உணர்வெழுச்சி எப்படி அவர்களை உடல் மீதான வன்முறைக்குத் தூண்டுகிறது, சமூகத்தின் எந்தப் பின்னணியில் உள்ள ஆண்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் எனப் படம் கொஞ்சம் அக்குற்றவாளியாகக் காட்டப்படுபவனையும் கவனப்படுத்தியிருக்க வேண்டும். கதைநாயகிக்கு நிகழ்ந்த பாலியல் வல்லுறவைப் படம் விவாதிக்கத் தவறி, தண்டனையை மட்டும் வழங்கியதில் முடிவுறுகிறது. கதைப்பொருள் முழுமையாகக் கையாளப்படாத தேக்கம் படத்தில் தெரிகிறது.

மேலும் படத்தில் வரும் அந்தக் குற்றவாளியாகச் சித்தரிக்கப்படுபவன் கதையின் மையப்பொருளுடன் எதிர்த்தன்மை கொண்ட கதைப்பாத்திரமாகும். நல்லதைக் கட்டமைக்கத் தீமையின் மகா உச்சத்தைப் பற்றி சொல்லியாக வேண்டியிருக்கிறது. அதே போல இப்படத்தில் பாலியல் வல்லுறவை செய்யும் எந்தப் பின்புலமும் அற்ற சராசரி ஆசாமியாக அவன் காட்டப்பட்டிருக்கிறான். யார் அவன்? பாலியல் வல்லுறவு என்பது ஒரு அசாதாரண தூண்டல் இல்லையா? தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதும் தெரியாமல் அவள் மனம் சிதைவது எதனால்? போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் படம் கரைகிறது.

ஒரு துணிச்சல்மிக்க கதைப்பாத்திரத்தைப் போல காட்டப்பட்டிருந்த ஸ்வஸ்னாவை வைத்து தமிழ்ச்சமூகம் காலம் காலமாகச் சொல்லி வரும் கற்பு, கற்பை அழித்தல் போன்ற மானுட முரண்களைப் பற்றியாவது கார்த்திக் ஷாமளன் பேசியிருந்தால் அது ஒரு அரசியல் புரட்சியாக இருந்திருக்கும். ஓர் ஆண் வழி சமூகத்தால் கற்பிக்கப்படும் நடத்தைகள்தான் ‘கற்பு’ என்றும் அதையும் ஓர் ஆணால்தான் அழிக்க முடியும் என்பது போன்ற விவாதங்களைப் படத்தில் நடத்தியிருக்கலாம். இந்தச் சமூகத்திற்கான மாற்றுச்சிந்தனையாக இதையெல்லாம் சினிமா போன்ற கலை வடிவங்கள் முன்னெடுப்பது அவசியம் எனக் கருதுவதாலேயே இதை இங்கு முன் வைக்கின்றேன்.

திரைக்கதை

mtk-dஒரு குறும்படத்திற்கான சிறிய வடிவ கதையே இப்படம். இதைப் பெருங்கதையாக மாற்றும் பணியில் திரைக்கதை அலட்சியப்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பெரும்பாலும் மிக மெதுவாக செய்வதற்கு ஒன்றும் இல்லாததைப் போல கதை நகரும் சோர்வுத்தன்மை இரசனைக்கு இடையூறாகி விடுகின்றது. குறிப்பாக மெத்திவ் கதைப்பாத்திரத்தின் உடல்மொழி, குரல்வளம் அனைத்திலும் ஒரு சோர்வுத்தன்மை தொற்றியிருப்பதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. மலேசிய இயக்குனர்கள் கதையைத் தேடுவதில் அடைந்த மாற்றங்களைத் திரைக்கதை உருவாக்குவதிலும் அடைய வேண்டும் என்றே நினைக்கிறேன். கதை விவாதங்கள் நடக்கிறது என்றால் மகிழ்ச்சி ; அப்படி இல்லாதபட்சத்தில் ஒரு படம் உருவாவதற்கு முன்பாக அப்படம் தொடர்பான கதை விவாதங்களை அப்படக்குழு முன்னெடுக்கலாம்.

கார்த்திக் ஷாமளனின் இந்த முதல் முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் இந்த விமர்சனத்துடன் முடிந்துவிடுவதல்ல. படத்தைப் பார்க்கும் யாவருக்கும் அவை தோன்றலாம். கார்த்திக் ஒரு விமர்சனக் கலந்துரையாடலை நடத்தினார் என்றால் அவரின் அடுத்த படத்தில் அவர் மேலும் ஆழமாகச் சென்று சிறந்த படத்தை உருவாக்கும் திறனை வளர்க்க உதவலாம் என நினைக்கிறேன். மலேசியப் படைப்புகள் தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுமானால் நிச்சயம் இங்கும் கலை மேம்படும்.

2 comments for “மலேசியத் திரைவிமர்சனம்: மெல்லத் திறந்தது கதவு

  1. yuwaji
    February 11, 2014 at 11:49 pm

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. திரைவிமர்சனம் என்று தலைப்பிட்டு வெறும் கதை மற்றும் கதாபாத்திரங்களைப் பற்றி எழுதியிருப்பது சரியா? படத்தின் பாடல்கள், பின்னணி இசை மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட பிற தொழில்நுட்பங்களான ஒலி மற்றும் ஒளிப்பதிவு, வசனம், முக ஒப்பனை.. இப்படி பல விஷயங்களையும் நீங்கள் தவற விட்டிருப்பதைக் கருத்தில் கொள்ளவும். என் பாடல்வரிகளையும் புதிய அறிமுகமான ஓவியா எனும் பாடலாசிரியரின் பாடல் வரிகளைப் பற்றியும் நீங்கள் ஒன்றும் எழுதவில்லையே? அப்படியென்றால் இது திரைவிமர்சனம் இல்லை.. வெறும் கதை விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

  2. February 17, 2014 at 9:43 pm

    திரைப்படம் ஒவ்வொரு கணமும் ஒரு பார்வையாளனுக்கு வெவ்வேறு முறையில் தனது திறப்புகளைச் சாத்தியப்படுத்திக்கொண்டே இருக்கும். ஒருவேளை இப்படத்தின் தொடர் விமர்சனமாக அடுத்தக்கட்டங்களில் அதைப் பதிவுச் செய்யக்கூடும். இதை நீங்கள் என்ன விமர்சனம் எனச் சொல்லிக்கொண்டாலும் எனக்கு சிக்கல் இல்லை. நன்றி. ஏற்கனவே என் முகநூலில் இப்படத்தின் இசையைப் பற்றி எழுதியிருந்தேன்.

Leave a Reply to Balamurugan Cancel reply