13 ஆவது பொது தேர்தல் – நம் கோழைத்தனத்தை வரலாறு மன்னிக்காது

pru-13னக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை ஆகையால் எனக்கு அது தொடர்பாகக் கருத்தில்லை எனச் சொல்பவர்களைக் கண்டித்தே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நம் வாழ்க்கையை, நம் நிலத்தை, நம் மூளையை ஆண்டு கொண்டிருப்பதே இந்த அரசியலாக இருக்கும்போது எப்படி தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என ஒருவர் கூற முடியும்? அரசியலில் களம் இறங்கி தனக்கொரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதும், அல்லது அரசியலில் விமர்சகனாகத் தன் உரிமையை வெளிப்படுத்துவதும், இரண்டுமே அரசியல் நடவடிக்கைகள்தான். உலகளவில் அரசியல் புரட்சியும் மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டம் என்பது அடித்தட்டு மக்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் வலுவான அரசியல் விழிப்புணர்ச்சி வேண்டும் என்பதை நினைவுக்கூர்வதாக அமைகின்றது.

உலக அரசியல் நீரோட்டத்திலிருந்து எப்பொழுது நாம் அந்நியப்பட்டுப் போகின்றோம்? நம் நிலத்தில் நம் எல்லைக்குள் நடக்கும் அரசியல் சம்பவங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் அலட்சியப்படுத்துவதிலிருந்தும், அதைப் பற்றி எந்தவொரு கருத்தாக்கமுமின்றி இருக்கும்போதும் நாம் உலக அரசியலிலிருந்து துண்டிக்கப்பட்டவனாகின்றோம். டத்தோ அம்பிகா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ‘மலேசியத் தமிழனுடைய பிரச்சனை என்பது இனி இந்த எல்லைக்குள்ளே தீர்மானிக்கப்படுவது கிடையாது. உலகில் வாழும் கோடான கோடி தமிழர்களின் பிரச்சனையாக மாறும் அளவிற்கு மலேசிய அரசியல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது’ எனக் கூறினார். இப்பொழுது நீங்கள் மலேசிய அரசியலைக் கவனப்பதில் அதைக் கூர்மையாக விமர்சிப்பதில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றவர்கள் என உணர முடிகின்றதா?

தோட்டப்புறங்களில் வாழும் ஒரு சிலரையும் சில நண்பர்களையும் சந்தித்து அரசியல் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் குறுகிய உரையாடலாக இருப்பினும் அவை அர்த்தமுள்ளதாக உள்ளுக்குள் ஆறிப்போய் கிடந்த நியாயமான கோபங்களைக் கிளறுவதாக இருந்தது. அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியான கேள்வியுடன் தான் உரையாடலைத் தொடங்க நேர்ந்தது. ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கிறீர்களா? ஏன்?

பட்டவெர்த்: திரு.க.முனியாண்டி

மலேசிய அரசியல் பல்லின மக்களின் நலனை நியாயமான முறையில் கையாளும் ஆற்றலை இழந்துவிட்டதாகவே கருதுகிறேன். மகாதீர் ஆட்சியில் இருந்த காலத்திலிருந்து இனவாத மேலான்மைமிக்க நாடாக மலேசியா மாறத் தொடங்கியிருந்தது. மகாதீர் ஆட்சி காலத்தில்தான் மலேசியாவிற்கு வேலைக்கு வந்த பிலிப்பைன்ஸ், பர்மா, இந்தோனேசியா எனப் பல்லாயிரத்திற்கும் மேலான வெளிநாட்டவர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில்தான் இந்த மண்ணிலேயே வாழ்ந்து காடு மலைகளைக் கரைத்து உழைத்து வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமை வசதி இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர். தன் மண்ணிலேயே வாழ்ந்து சுதந்திரத்திற்காகப் போராடிய சிறுபான்மை மக்களின் குடியுரிமையைப் பற்றி கவலைப்படாமல், தன் இனத்தின் பெரும்பான்மையைப் பெருக்கிக் கொள்ள மட்டும் செயலாற்றிய மகாதீரைத் தமிழ் இனத்தின் துரோகி என்றுத்தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் எத்தனையோ காலம் போராட்டத்திற்குப் பிறகு மலேசிய அடையாள அட்டை பெற்ற நம் தமிழர்கள் வெட்கமில்லாமல் தொலைக்காட்சியில் வந்து பரிதாபமிக்க தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினார்கள். 50 வருடம் தன் நாட்டிலேயே குடியுரிமை அந்தஸ்த்து இல்லாமல் வாழ்ந்தது எத்தனை கொடுமையானது? அதை ஒரு நாளில் மறந்துவிட்டு கிடைத்தால் போதுமென நம் இந்தியர்களின் மீதான புறக்கணிப்பை அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

ஸ்காப்ரோ தோட்டம்: திரு.ம.மூர்த்தி

ஆளும் கட்சி இன்னும் 200 வருடங்கள் ஆனாலும் ஆளும் கட்சியாகவே இருக்க வேண்டும் என நினைப்பதே தன் ஆட்சியின் மீதான பலவீனத்தை ஒப்புக்கொள்வதைப் போலவே இருக்கின்றன. ஏன் நாம் குறைந்தபட்சம் 5 ஆண்டு காலமாவது வேறொரு ஆட்சியை எதிர்க்கொள்ள முடியாது? 50 ஆண்டுகளில் நடந்துவிடாததா 5 ஆண்டுகளில் நடந்துவிடப்போகிறது என நினைக்கிறீர்களா? 5 ஆண்டு காலம் புதிய ஆட்சியின் முயற்சிகளையாவது நாம் பார்த்து மதிப்பீடக்கூடும்.

ஆட்சி மாற்றம் ஏன் மலேசியாவில் சாத்தியில்லாமல் போகின்றது என நாம் முதலில் கேள்வி எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சியால் முடியாது அவர்கள் திராணியற்றவர்கள் என்பதை முதலில் அவர்களுக்கு வாய்ப்பளித்த பிறகு நாம் செய்ய வேண்டிய முடிவுகள்தானே? அவர்களைக் களத்தில் இறக்காமல் வெளியேயே வைத்து அவர்களால் முடியாது எனச் சொல்வது மிகவும் அபத்தமான விசயமாகும்.

ஸ்காப்ரோ தோட்டம் – திரு.மணிமாறன்

முதலில் வயதானவர்களை மாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள்தான் நான் அதைத் தவிர வேறு எதற்கும் ஓட்டுப்போட மாட்டேன் என விழிப்புணர்வில்லாமல் இருக்கிறார்கள். முன்பு தான் எதை நம்பி ஓட்டுப் போட்டேனோ அதற்குத்தான் மீண்டும் ஓட்டுப் போடுவேன் என விடாபிடியாக இருக்கிறார்கள். அவர்களால்கூட நாம் கனவு கண்டிருக்கும் ஆட்சி மாற்றம் இனி நடைப்பெறாமலே போகக்கூடும்.

முதிர்க்குடிமக்களின் மூளை இறுகி போயிருக்கின்றது. உலக நடப்பு அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 50 வருடமாகத் தனக்கு கிடைக்காத அடையாள அட்டை நேற்று கிடைத்ததும் அதுவே தன் இனத்திற்கான மாபெரும் விடுதலை என நினைத்து உடனே சமாதானம் அடைந்துவிடுவது எந்தவகையில் நியாயம்? தொலைக்காட்சியில் உணவு கிடைத்த அகதிகள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை ஒத்திருந்தது அவர்களின் திருப்தி. ஆனால், அவர்கள் இதுநாள்வரையில் குடியுரிமை அங்கீகாரம் இல்லாமல் நாட்டினுள்ளேயே நாடற்றவர்களாக வாழ்ந்த துயரங்களை உணராமலேயே இருக்கிறார்கள். இதைக் கண்டித்தே ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

பாகான் : திருமதி.மு.கலைவாணி

அரிசி மூட்டையும் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டால் ஓட்டுப் போட்டுவிடுவோம் என எங்களை நினைப்பது ஆட்சிக்காரர்களின் தவறான மனப்போக்கு ஆகும். இந்தியாவில் வீடு வீடாகச் சென்று காலில் விழுந்து ஓட்டுக் கேட்பார்கள் எனக் கேள்வியுற்றுள்ளேன். ஆனால், அதே வழிமுறை இங்குக் கொஞ்சம் நாகரிகமாக நடத்தப்படுகிறது. மூளை சலவை செய்வதற்காகவே எல்லாம் திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன. மக்களும் அதற்கு இசைந்து கொடுக்கிறார்கள். நாம் ஏன் ஏமாறுவதற்குத் தயாராக இருக்கின்றோம்? 2007ஆம் ஆண்டு ஹிண்ராப் புரட்சி நடந்தபோது மலேசிய அரசியலையே மாற்றியமைத்த பெருமைக்குரிய தமிழர்கள் ஏன் இப்படிச் சுணங்கிப் போக வேண்டும்?

பினாங்கு – அ.பாண்டியன்

13ஆவது பொதுத் தேர்தல் என்பது 3ஆம் தலைமுறை இளைஞர்களின் தேர்தல் என்றே நினைக்கிறேன்.கல்வியும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களின் பார்வையை விசாலப்படுத்தியுள்ளன. பெரும்பகுதி மக்கள் மாற்றத்தையே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். ஒரு கட்சி அரசாங்கம் என்பது ஊழலைத்தான் வளர்க்கும் எனத் தாராளமாகச் சொல்லலாம். அப்படியொரு நிலைக்கு நம் நாட்டை ஆளாக்கக்கூடாது. இத்தனை வருடங்கள் கடைப்பிடிக்கப்பட்ட அடிமைத்தனத்தையே மீண்டும் நிறுவக்கூடாது.

கெடா-திரு.பிரகாஷ்

எதிர்க்கட்சி கேட்டப்பிறகுத்தான் அரசாங்கம் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு BR1M கொடுக்கத் துவங்கியது. ஆனால், பினாங்கில் ஐசெகா கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே இங்குள்ள அனைத்து இனத்தையும் சேர்ந்த முதியவர்களுக்கு தலா 300 ரிங்கிட் வழங்கி வருகின்றது. யார் வற்புறுத்தலும் இல்லாமல் சுயமாக பினாங்கு மாநில அரசு செய்த இந்த முயற்சி பாராட்டத்தக்கதாகும். இத்தனை நாள் ஏன் அரசாங்கத்திற்கு மக்களின் வறுமை குறித்தும் பிரச்சனை குறித்தும் தெரியாமல் இருந்தது?

பினாங்கு-  திரு.செல்வம்

50 வருட ஆட்சி காலத்தில் ஏன் தமிழர்களின் சொத்துடமையில் மாற்றமே ஏற்படவில்லை? ஆட்சி ஜனநாயகமாக இருக்கும்போது பாராபட்சமில்லாமல் அனைத்து இனத்தவர்களின் ஏழ்மை நிலையும் சொத்துடமையும் சம அளவில் வளர்ந்திருக்க வேண்டும் அல்லவா? மகாதீர் ஆட்சி காலத்தில் சிறப்பு சலுகை என்பது முதண்மைப்படுத்தப்பட்டு பிற இன சலுகைகள் பிற்படுத்தப்பட்டுவிட்டன என்றே சொல்ல வேண்டும். ஆனால், அதைக் கேள்விகுபடுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் அது தேசிய குற்றமாகவும் கருதப்படுகிறது. இது என்ன நியாயம்? நாங்களும் இந்த மண்ணில் உழைத்து இந்த மண்ணிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லவா? எங்களுக்கு ஏன் உரிமை இல்லை?

சுங்கை பாக்காப் – திரு. மகேந்திரன்

அவசியம் மாற்றம் வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்த மாற்றம் மட்டுமே மலேசிய அரசியலின் நிலைத்தன்மையையும் ஜனநாயகத்தன்மையையும் காப்பாற்றும். ஓட்டுரிமையை நிர்ணயிக்கக்கூடிய சக்தி தனிநபர்களிடமே உள்ளன. அதனை யாரும் விலைக்கு வாங்கக்கூடாது. ஆனால். ஆளுக்கொரு பக்கம் தனிநபர்களின் உரிமையை விலைப் பேசுவதற்காகவே திட்டங்களை முன்னெடுக்கின்றனர். மக்கள் ஓரளவிற்கு விழித்துள்ளனர் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தொகுப்பு :

மேற்கண்ட அனைவரும் மாற்றத்தையே கனவாகக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் வெறும் கனவாகவே போய்க்கூடாது. இப்பொழுது இல்லாமல் வேறு எப்பொழுது? இதுவே தமிழர்களின் குரலாக இந்தத் தேர்தல் காலத்தின் பிரச்சாரமாக மாறியிருக்கின்றது. மேற்கண்ட கருத்துகளை அளித்தவர்களில் சிலர் இப்பொழுது அரசாங்க வேலையில் இருப்பவர்கள்தான். தன் சோற்றில் மண் விழுந்துவிடும் என்று அஞ்சி இப்பொழுது அமைதியாகிவிட்டால் எதிர்க்கால தலைமுறையின் வயிற்றில் அடித்த பாவம் நம்மை வந்து சேரும் என இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இப்பொழுதும் நாம் பயந்து பின்வாங்கிவிட்டால் நம்முடைய கோழைத்தனத்தை வரலாறு என்றுமே மன்னிக்காது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கருத்துரைத்தவர்களின் அனுமதியோடு என்னுடைய மொழிநடையில் தொகுத்து வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

6 கருத்துகள் for “13 ஆவது பொது தேர்தல் – நம் கோழைத்தனத்தை வரலாறு மன்னிக்காது

 1. ஸ்ரீவிஜி
  April 29, 2013 at 4:10 am

  நல்ல அலசல்.

 2. சர்வேஸ்வரன்
  April 29, 2013 at 7:18 am

  ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழர்களின் நலன்களை மேலோங்கச் செய்யும்.

  • periasamy
   May 4, 2013 at 8:38 am

   atchi matram seivom

 3. Uma
  May 3, 2013 at 4:06 am

  nammai arisiyum paruppum koduthu yeamaatrividalam yeandru ninaithu vittargal.

 4. விமலி
  May 3, 2013 at 1:12 pm

  நல்ல கருத்துகள் பலவற்றைச் சொல்லியுள்ள இக்கட்டுரை பலராலும் படிக்கப்பட வேண்டும்.

 5. periasamy
  May 4, 2013 at 8:37 am

  Barisan Nasional katchiyai mootai kattuvom.ethir aniku vakalipom.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...