பறை 2 – வெளியீடும் அறிமுகமும்

வல்லினம் குழுவினர்

வல்லினம் குழுவினர்

கடந்த ஜீலை திங்கள் 6ஆம் நாள், பறை 2 பாயா பெசார் தியான மன்றத்தில் வெளியீடு கண்டது.  வாசகர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் என இந்நிகழ்வில் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு நவீன இலக்கிய களத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வை தயாஜி சிறப்பாக வழிநடத்தினார்.

‘பறை’ இதழ் உருவான விதத்தை அதன் ஆசிரியர் ம.நவீன் கூறினார்.  சிற்றிதழ் எனும் இயக்கத்தின் தேவைகுறித்தும் அது எவ்வாறு பெரிய இதழ்களோடு மாறுபட்டுள்ளது எனவும் விளக்கம் கொடுத்தார். குறிப்பாக வணிக இதழ்கள் வாசகனைத் தேடி வருகின்றன எனவும். அது வாசகனின் நுகர்ச்சிக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதாகவும் கூறிய அவர், தீவிர இதழ்கள் வாசகனை தன்னை நோக்கி வர வைக்கின்றன என்றார்.

தொடர்ந்து பேசிய நவீன இலக்கிய களத்தின் ஆலோசகரான சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி,parai 01 இலக்கியம்யாருக்கும் பணிந்து செயல்படுவதல்ல என்பதை வலியுறுத்தி, சில சமயம் காத்திரமான விமர்சனங்கள் தனிநபர் பகைமைக்கு இட்டுச்செல்லும் அபாயத்தையும் சுட்டிக்காட்டினார்.  அதோடு பறை இதழ் தரம் குறித்தும் வெகுவாகப் பாராட்டினார்.

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்

நூல் விமர்சனத்தை எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் காத்திரமாகவே செய்தார். நவீன இலக்கியகளத்தின் தலைவராகவும் இருக்கும் அவர், தலையங்கத்தில் அவருக்கு இருக்கின்ற மாற்று கருத்தை அழுத்தமாகவே பதிவு செய்தார். குறிப்பாக கே.பாலச்சந்தர் திரைப்படங்கள் முக்கியமான கருத்துகளை உள்ளடக்கியவை என்றும் அவர் மீடியக்கர் (mediocre) அல்ல எனும் கருத்தையும் முன்வைத்தார். அதேபோல ரெ.கார்த்திகேசு தன்னளவில் முக்கியமான படைப்பாளி என்பதையும் பதிவு செய்தார். மேலும் ‘பறை’யில் இடம்பெற்றுள்ள ‘இலட்சியப் பயணம்’ குறித்தக் கட்டுரை அவசியமற்றது எனவும் தன் விமர்சனத்தை முன்வைத்தார். பிற உள்ளடக்கங்கள் குறித்து நேர்மறையான கருத்துகள் கோ.புண்ணியவானிடமிருந்து வெளிபட்டன.

மற்றொரு நூல் விமர்சகரான மணிஜெகதீசன், பக்க அமைப்பு, வடிவமைப்பு, எழுத்துரு என அனைத்தையும் கவனத்தில் கொண்டு பேசினார். ‘பறை’ இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற தன் ஆர்வத்தை பேச்சின் வழி வெளிப்படுத்தினார்.

மணிஜெகதீசன்

மணிஜெகதீசன்

விமர்சனங்களுக்கு பதில் கூறிய அதன் ஆசிரியர் ம.நவீன், ‘எஸ்.பி.எம்’ மாணவர்களுக்காக இணைக்கப்பட்ட ‘இலட்சியப்பயணம்’ கட்டுரை இனி தனியான இணைப்புடன் வரும் என்றார். பறை மாணவர் இலக்கியத்திலும் அக்கறை காட்டும் என்றார். வழங்கப்பட்ட கருத்துகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதேபோல எழுத்தாளர் பாண்டியனும் முதல் பறை இதழ் குறித்து விரிவாகப் பேசினார்.

‘பறை’ இதழ் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு ரிங்கிட் திட்டம் இந்நிகழ்வில் அறிமுகமானது. ஒரு நாளைக்கு ஒரு ரிங்கிட் வீதம் மூன்று மாதத்துக்கான 100 ரிங்கிட்டை வழங்குவதன் மூலம் இத்திட்டத்தில் தனிநபர்களும் விளம்பரம் செய்யலாம்.

நிகழ்வு பூங்குழலி வீரனின் நிறைவுரையுடன் முடிந்தது. பறை 3 பற்றிய பேச்சுகள் தொடங்கின.

2 கருத்துகள் for “பறை 2 – வெளியீடும் அறிமுகமும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...