‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்

100-00-0002-357-3_b-01பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால் இந்தப் புறத்தோற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் ஆராயப்படுவதில்லை.

தமிழ் சிற்றிதழ்களின் தோற்றம்

ஆய்வாளர் ராஜமார்த்தாண்டம் (2005) சிறுபத்திரிகை சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து'(1959) இதழிலிருந்து தொடங்குவதாகவே கூறுகிறார். சிற்றிதழ்களின் ஆய்வாளராகக் கருதப்படும் வல்லிக்கண்ணன் அவர்களும் தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற நூலில்(1991) இதே கூற்றை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

‘புதுமை இலக்கிய மாத ஏடு’ என்ற அறிமுகத்துடன் பிரசுரம் கண்ட முதல் ‘எழுத்து’ சிற்றிதழின் நான்கு பக்க முன்னுரையில் ‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஓர் இலக்கியப் பத்திரிகையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கின்ற முயற்சிதான்’ (ஜனவரி 1959) எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த வரியின் மூலம் ஒரு சில விடயங்களை பகுத்துப்புரிந்துகொள்ள முடியும்.

 • ‘எழுத்து’ பாமரர்களுக்கான இதழ் இல்லை.
 • ‘எழுத்து’ இதழ் கருத்து ஆழத்தையும் கனத்தையும் அறியும் கல்வி கற்ற சமூகத்துக்கு உரியது.
 • கல்வியும் அறிவும் பெற்ற சமூகம் ஆதிக்க சமூகமாக அக்காலக்கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். எனவே அது ஆதிக்க சமூகத்தின் வாசிப்புக்கு உரியது.
 • இவ்விதழ் ஒடுக்கப்பட்டவர்களின் தேவைக்காக, அவர்கள் குரலுக்காக உருவாகவில்லை.

‘எழுத்து’ ஆரம்பித்த சில வருடங்களில் கா.நா.சுவிற்கும் செல்லப்பாவிற்கும் இடையில் விமர்சனக் கலை குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவ, க.நா.சு இலக்கிய வட்டம் (நவம்பர் 1963) என்ற சிற்றிதழைத் தொடங்கினார் என்பது வரலாறு. இவ்விதழ் இலக்கியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கியது என்பதை ‘இலக்கியவட்டம்’ இதழ் தொகுப்பின் (2004) முன்னுரையின் வழி அறியமுடிகிறது.

வல்லிக்கண்ணன் முதல் ஜெயமோகன் வரை எழுத்துக்கு முன்பே வெளிவந்த இலக்கிய இதழ்களான மணிக்கொடி போன்றவை சிற்றிதழ்கள் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சா. கந்தசாமி (2014), ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’ எல்லாம் வெகுஜன பத்திரிகையாகவும் இல்லாமல் சிற்றிதழாகவும் இல்லாமல் இடைத்தரமான பத்திரிகைகளாகவும் அவற்றில் வெகுஜன ரசிப்புக்கு ஏற்ற கதைகள், கவிதைகள் வெளிவருவதுடன் முதல் தரமான, மற்றும் சோதனை முயற்சிக்கான கதைகளும் வெளிவரும் என்கிறார். அவை இன்றைய இடைநிலை ஏடுகளைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, தமிழ் இதழியல் சூழலில் ஆராய்ந்தால் சிற்றிதழ் – வெகுசன இதழ்கள் என்பது முற்றிலும் இலக்கியத்திறனாய்வுகள், இலக்கிய விமர்சனங்கள், இலக்கியத்தின் புதிய முயற்சிகள், என இலக்கியத்தை மட்டுமே மையப்படுத்தி பகுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. ஆனால், இன்றை நமது கேள்வி இந்தப் பகுப்பு முறை சரியானதுதானா என்பதுதான்.

சிறுபத்திரிகையின் முரண்

பிரிட்டன் நூலகத்தில் சிறுபத்திரிகை குறித்து ஓரளவு சுருக்கமான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிற்றிதழ் என்பது லாபநோக்கமற்று சமகால இலக்கியத்தில் குறிப்பிட்ட வாசகர்களை முன்னோக்கி எடுக்கப்படும் இதழில் முயற்சி என்பதாகப் புரிந்துகொள்ளலாம். ஒப்பீட்டளவில் தமிழ் சிற்றிதழ் சூழலிலும் இலக்கியமே பிரதானமாக இருந்தது என்றாலும் அரசியல் நீக்கம் செய்த படைப்புகளும் அல்லது அரசியல் எழுதுவது இலக்கியத்துக்குள் இணையாதது என்ற மனப்போக்குள்ள படைப்பாளர்களுமே இச்சிற்றிதழ்களை முன்னெடுத்தனர். இந்த நிலை ‘பிரக்ஞை’ இதழில் மாற்றம் கண்டதாக எழுத்தாளர் ராஜமார்த்தாண்டம் (ஏப்ரல் 2008) குறிப்பிடுகிறார்.

அக்டோபர் 1974இல் ‘பிரக்ஞை’ மாத இதழ் வெளியீட்டைத் தொடங்கியது. அதன் ஆசிரியர் ஆர். ரவீந்திரன். பதிமூன்றாவது இதழில் (அக். 1975), “சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறுபத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாற வேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலைநோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்,” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். இது அன்றைய கால இலக்கியச்சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நீட்சியாக சமகால அரசியலை அலசும் போக்கை உருவாக்குவதில் பிரக்ஞை இதழே முன்னோடியாக இருக்க, ‘படிகள்’, பரிமாணம்’, நிறப்பிரிகை‘ போன்ற இலக்கியத்தை அரசியல் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராயும் இதழ்களும் இலக்கியத்தூய்மைவாதம் பேசும் ‘கொல்லிப்பாவை‘, சுந்தர ராமசாமி ஆசிரியராக இருந்த ‘காலச்சுவடு’ போன்ற இதழ்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் தத்தம் இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்தன.

சிறுபத்திரிகைகளின் வரையறை

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா (2012) வல்லினம் இணைய இதழின் நேர்காணலில் முன்வைத்த கூற்றுப்படி, அந்நிய நாட்டவரின் சுரண்டலுக்குப் பதிலாக சுதேசிச்சுரண்டலை முன்னெடுத்தவர்கள் தங்கள் பிரச்சாரத்துக்காக இந்தியாவில் பத்திரிகைகளை உருவாக்கினர் என்கிறார். பத்திரிகைகளைத் தொடங்குவதற்குரிய முதலீட்டுப்பலம் அவர்களிடம்தான் இருந்தது. இந்தச் அதிகார வர்க்கத்தின் குரலாக ‘விடுதலை விடுதலை‘ என்று இந்தப்பத்திரிகைகள் பெருமுழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தன. சுதேசிகளால் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் அடிமைப்படுத்தப் பட்டிருந்தவர்கள் எதுவிடுதலை, எதிலிருந்து விடுதலை, யாரிடமிருந்து யாருக்கு விடுதலை என்கிற எதிர்க்கேள்விகளையும் புதுவிளக்கங்களையும் முன்வைக்க தங்கள் சக்திக்குட்பட்டு பத்திரிகைகளைத் தொடங்கினர். இந்திய சிறுபத்திரிகைகளின் தோற்றமாக இதையே கருதமுடியும் என்கிறார். மேலும் விளக்கமாக, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துப் பரம்பலுக்காக உருவானவையே சிறுபத்திரிகைகள் என்ற முடிவுக்கு வரமுடியும் எனவும் தெளிவாக வரலாற்றின் துணைக்கொண்டு கூறுகிறார் . தன் சொந்த முயற்சியால் ஆராய்ச்சி நூலகம் உருவாக்கிய ரோஜா முத்தையா அவர்களிடம் இருக்கும் அறிய நூல்கள் குறித்த பட்டியலைப் பார்த்தால் ஆதவன் தீட்சண்யாவின் கூற்றில் உள்ள உண்மை புரியும்.

1842 முதல் 1942 வரை ஏராளமான தமிழ் இதழ்கள் உதயமாகி இருப்பதும் அவை சமூகத்தின் பொதுபுத்திக்கு மாற்றான கருத்துகளை முன்வைத்து இயங்கியதும் அவற்றில் சில விளிம்புநிலை சார்ந்த இதழ்கள், பகுத்தறிவு இதழ்கள், பெண்கள் நடத்திய இதழ்கள் போன்றவை உள்ளன என்பதும் மாற்றுவெளி ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சிறப்பிதழில்'(2010) இடம்பெற்ற கோ.கணேஷ் அவர்களின் கட்டுரை வழி அறிய முடிகிறது. அதோடு ‘ஒரு பைசாத் தமிழன்(1907) என்ற வார இதழையும் அயோத்திதாசப் பண்டிதர் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசப் பண்டிதர் இவ்விதழை தங்கள் வாழ்வியல் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட வேதமத, பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, சமூகநீதி, சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்வதற்காக நடத்தினார். இவ்வாறு தமிழில் நடந்த அத்தனை இதழியல் முயற்சிகளையும் புறக்கணித்துவிட்டு சிற்றிதழுக்கான புறவடிவம் மற்றும் பொருளாதார சூழலை மட்டுமே கணக்கில் கொண்டு இலக்கிய இதழ்களை மையப்படுத்துவது கவனித்து ஆராயவேண்டிய பகுதியாகவே இருக்கிறது.

1955-1975ல் மராட்டி சிற்றிதழ் சூழலில் ஆதிக்கம் செலுத்திய நவீனத்துவம் மற்றும் தலித்தியச் சூழலும் வங்காளத்தில் 1923ல் நிகழ்ந்த நவீனத்துவ சிந்தனை சிற்றிதழ் போக்கைத் தீர்மானித்ததையும் இதற்கு ஆதாரமாகக் கொண்டு இந்தியச் சிற்றிதழ் சூழலைச் சிந்திக்க முடிகிறது. அதோடு இலங்கையில் மலையகத் தமிழர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நடத்திய சிற்றிதழ்களின் துவக்கத்தையும் அதன் தேவையையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

இவ்வாறு உலக சிற்றிதழ் போக்கையும் தமிழகச் சிற்றிதழ் போக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் சிற்றிதழுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிகிறது. அதை பின்வருமாறு சுருக்கலாம்.

 • சிற்றிதழ், குரல் நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் ஓர் ஊடகம்.
 • அதிகார பலமும் பொருளாதார பலமும் இல்லாத சூழலில் வாழும் சிறுபான்மை மக்களால் நடத்தப்படுவதால் அதன் அச்சாக்கம் குறைவான தரத்தில் உள்ளது.
 • அதிகம் விநியோகம் ஆகாத சிற்றிதழ்கள் சிலசமயம் பொருளாதார சிக்கலால் நின்றுவிடுகிறது. பின்னர் தொடர முடியாமல் போகிறது.
 • வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கம் இல்லாததால், சில இதழ்கள் முன் அட்டை இல்லாமல் முதல் பக்கத்திலிருந்தே படைப்புகளைத் தொடங்கிவிடுகின்றன. வண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை.

ஆக, தமிழகத்தில் இவ்வித அம்சம் எதுவும் இல்லாமல் ‘எழுத்து’ சிற்றிதழின் தொடக்கமாக வரையரை செய்யப்பட வேண்டிய காரணத்தை ஆராய வேண்டியுள்ளது.

அதற்கு அக்காலக்கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலையே மீள்பார்வைக்குட்படுத்தலாம். தொடக்கத்தில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது பொதுவான வரலாறு.

இந்தக்காலக்கட்டத்தில் அதுவரை தமிழகத்தின் சகல அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டிருந்த பார்ப்பனர்கள் திராவிட கழகத்தின் எழுச்சியால் தங்கள் குரல் நசுக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். அதன் பொருட்டே அதிகார பலம் அற்றவர்களான அவர்கள் வெளியிடும் ஒன்றை சிற்றிதழின் தொடக்கமாக வரையரை செய்கிறார்கள் என உணர முடிகிறது.

பார்ப்பனர்களின் அரசியல் சூழலில் ‘எழுத்து’ இதழை சிற்றிதழ் என ஏற்க முடிந்தாலும் அதை தமிழின் சிற்றிதழ் தொடக்கமாக சொல்வது வரலாற்றுப்பிழையாகவே கருத முடியும்.

ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடு இதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் தீண்டப்படாதோர் நடத்திய இதழ்களைப் பட்டியலிட்டுள்ளார். சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), ஜான் ரத்தினம் நடத்திய திராவிட பாண்டியன் (1885), வேலூர் முனிசாமி பண்டிதரின் ஆன்றோர் மித்திரன் (1886), டி.ஐ. சுவாமிக்கண்ணுப் புலவரின் மகாவிகட தூதன், இரட்டைமலை சீனிவாசன் நடத்திய பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப் புலவரின் பூலோக வியாசன் (1900), அயோத்திதாசப் பண்டிதரின் தமிழன் (1907), சொப்பனேஸ்வரி அம்மாள் நடத்திய தமிழ்மாது (1907), எனச் செல்லும் இந்தப் பட்டியலில் தீண்டப்படாதோரின் இதழியல் பயணம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது புரிகிறது.

திராவிட இயக்க ஆய்வாளர்களான க. திருநாவுக்கரசு, ப. புகழேந்தி போன்றோர் 1942 – 1962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர் என்பது நாம் அறிந்ததே. திராவிட இயக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இதழ்கள் 265 க்கும் மேற்பட்டவையென்றும் இதில் 14 திராவிட இயக்க இதழ்களின் முன்னோடியாக வெளிவந்தவை என திராவிட இயக்க சிந்தனையாளர் க. திருநாவுக்கரசு ‘திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சாதி மறுப்பை தன் அடிப்படை அரசியலாகக்கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ (1907), அரசாங்க ஒடுக்குமுறையில் பெரியார் நடத்திய குடியரசு, 1925ல் தொடக்கப்பட்டதையும் 1928ல் பெரியாரின் துணைவியரால் தொடங்கப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்டின்’ போன்ற பிரபலமான பட்டியல் அனைத்தையும் மறுத்துவிட்டு பார்ப்பனியத்தை முன்வைத்து வரலாறு பேசும் அபத்த நாடகங்களின் ஒன்றாகவே தமிழ் சிற்றிதழ் வரலாற்றைப் பார்க்க முடிகிறது.

 1. கீரைத்தமிழன். (2004). சிற்றிதழ் வகைகளும், படைப்பாளுமையும்https://thoguppukal.wordpress.com/
 1. ஜெயமோகன். வாசகனும் எழுத்தாளனும். http://www.jeyamohan.in/7781.
 2. ஆதவன் தீட்சண்யா. (2012). ஆதவன் தீட்சண்யா பதில்கள். http://www.vallinam.com.my/issue40/aathavanbathilgal.html.
 3. எம்.ஏ.நுஃமான். (2006). தனது மொழியும் இலக்கியமும். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
 4. கந்தசாமி, சா. (2014). சிற்றிதழ்கள். http://maattru.com/pp/?p=402.
 5. ராஜமார்த்தாண்டம். (2005). தமிழ் இனி 2000. சென்னை: காலச்சுவடு அறக்கட்டளை.
 6. வல்லிக்கண்ணன். எழுத்து-முதல் வருடம். http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=180&pno=83
 7. (1991). தமிழில் சிறு பத்திரிகைகள். சென்னை: ஐந்திணை பதிப்பகம்.
 8. (2004). இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு. சென்னை: சந்தியா பதிப்பகம்.
 9. (ஏப்ரல், 2008). காலச்சுவடு இதழ். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
 10. (2010). மாற்றுவெளி. சென்னை: பரிசல் புத்தக நிலையம்.
 11. (ஜூன், 2012). காலச்சுவடு இதழ். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
 12. ராஜமார்த்தாண்டம், தமிழினி 2000 – 2005

 14.  வல்லிக்கண்ணன், தமிழில் சிறு பத்திரிகைகள் – 1991

 1. 15. Gorgon, H. T. (1961). Little Magazines. http://www.bl.uk/reshelp/findhelprestype/journals/littlemagazines/littlemagazines.html
 2. 15. Peter Brooker & Andrew Thacker (2009). The Oxford Critical and Cultural History of Modernist Magazines: Vol. 1 Britain and Ireland 1880-1955. Oxford: OU
 3. Wolfgang G. (1993). Little Magazine Profiles: The Little Magazines in Great Britain, 1939-1993. Salzburg: University of Salzburg.
 4. இதழ் 93, செப்டம்பர் 2007

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...