அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 3

நிறைய பேர் மனதிலும் மூளையிலும் குடி கொள்ளும் ஒரு பிம்பம் பெண். அவள் குழந்தையாக இருக்கும் போதும் சரி, பூப்படையும் போதும் சரி, அவள் தாய்மையடைந்த கர்ப்பக்காலத்திலும் சரி, தொடர்ந்து மீண்டும் குழந்தை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல நம்பிக்கைகளுக்கு உள்ளாகிறாள் (உள்ளாக்கப்படுகிறாள்). பெரும்பாலும் பெண்ணின் வாழ்க்கை முறையை கட்டமைக்க பல நம்பிக்கைகள் உட்புகுத்த படுகின்றன. நானும் பெண் என்பதால் இதற்கும் எனக்கும் நேரடி தொடர்ப்பு உண்டு. சிறுவயதில் என்ன நடந்தது என்பதில் எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்து எனக்கு இந்த நம்பிக்கைகள் தெரியப்படுத்தப்பட்டன.
நான் பிறந்து வளர்த்தது தோட்டப்புற சூழலில்தான். நான் கேட்டு பழகிய ஒரு சில விஷயங்களையும் அவற்றின் அறிவியல் சாத்திய கூறுகளையும்தான் இங்கு பகிர போகிறேன். என்னைப்போல் தோட்ட சூழலில் வளர்ந்த பலரும் இன்றைய காலக்கட்டத்தில் நகரத்தில் அடைக்கலமானாலும் இன்னுமும் அவற்றை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பின்பற்றுகின்றனர். அவற்றுள் பின்வருவன.
1.   பெண் எந்த வாசலிலும் படிக்கட்டிலும் அமரக் கூடாது.
2.   சமையலறையில் பெண் பாடினால் கிழவன் தான் மாப்பிள்ளையாவான்.
3.   பெண்ணுக்கு விரைவில் கல்யாணமாக பூக்குளியல் செய்ய வேண்டும்
4. பெண்ணாகிவிட்டாலே கால்களை அகல வைத்து நடக்கக் கூடாது அல்லது வேகமாக தரை அதிர நடக்கக்கூடாது.
5.  மாதவிடாய் காலத்தில் வெளியிலோ அல்லது இரவு நேரத்திலோ வெளியே செல்ல நேரிட்டால் கொண்டையிலோ அல்லது சடையிலோ இரும்பு ஆணி ஒன்றை வைத்து கொள்ள வேண்டும்.
6.   மாதவிடாய் காலத்தில் பூஜை அறையில் புழங்கக் கூடாது. (சாமி கும்பிடக் கூடாது)
7.   மாதவிடாய் குருதியும் மாதவிடாய் கண்ட பெண்ணும் தீண்டத்தகாதவர்கள்.
8.   மாதவிடாய் நேரத்தில் குளிக்கக்கூடாது.
9.   மாதவிடாய் நேரத்தில் தண்ணீரில் நீந்தக்கூடாது.
10. மாதவிடாய் காலத்தில் பெண் பேய்களுக்கு விருப்பமானவள்.
11. கர்ப்பகாலத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது.
12. கர்ப்பகாலத்தில் கூந்தலை வெட்டக்கூடாது.
13. பெண்ணின் முதல் கர்ப்பகாலத்தில் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில்  வளைக்காப்பு செய்தல் வேண்டும்.
14. கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது
15. பெண் கர்ப்பகாலத்தில் மெத்தையின் மேல் காகிதத்தை நறுக்கக் கூடாது.
16. பெண் கர்ப்பகாலத்தில் எந்த மிருகத்தையும் கொல்லக் கூடாது.
இங்கே குறிப்பிடப்பட்டவை கொஞ்சம்தான். இன்னும் பல இருக்கின்றன. ஓரளவு மேலோட்டமாக இந்த நம்பிக்கைகளைப் பார்த்தோமாயின், அவற்றை மூன்று பகுதியாக பிரிக்கலாம். ஒன்று பொதுவாக பெண் கடைபிடிக்க வேண்டிய நம்பிக்கைகள்; இரண்டு மாதவிடாய் சம்பந்தப்பட்டவை; மூன்று கர்ப்பக்காலத்தின் போது கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள்.
இவ்வற்றை இன்னும் ஆழமாக நோக்கும் போது ஏன் பெண்ணைச் சுற்றி இவ்வளவு அவநம்பிக்கைகள் என்னும் கேள்வி எனக்கு எழுந்தது. இதைப் படிக்கும் உங்களுக்கு அதே கேள்வி எழலாம். எனவே இதை யாராவது குறிப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார்களா என தேடும்போது ஒரு ஆய்வு கட்டுரை கண்ணில் பட்டது. அவநம்பிக்கையும் பெண்களும் (Superstitions and Women) என்னும் இவ்வாய்வு கட்டுரையை எழுதியவர் மும்பையைச் சேர்ந்த சந்தோஷ் ஹிராமென் தக்கலே (Santosh Hiraman Takale) என்பவர்.
பெண்ணின் குணாதிசியங்களைப் பற்றி அவர் தனது ஆய்வுக்கட்டுரையில் சில விஷயங்களை முன்வைக்கிறார், அவை பின்வருவன:
1.மனோரீதியாக பெண் அடிமைப்படுத்தப்படுதல்.
2.குடும்பத்தில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும் அவற்றிலிருந்து அவள் மீண்டும் எழாதப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பு முறை மற்றும் மத கோட்பாடுகள்.
3.ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவளே தீர்மானிக்க முடியாதபடி உருவாக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கம்.
இந்த மூன்று கருத்துக்களின்படி அவநம்பிக்கைகள் வலுக்கட்டாயமாக சிறுவயதிலிருந்தே பெண்ணுக்குள் திணிக்கப்பட பின் வருங்காலத்தில் அவளாகவே அவற்றை விரும்பி ஏற்றுகொள்ளும் ஒரு நிலைக்கு தள்ளப்படுகிறாள். இது பெண் மேல் செலுத்தப்படும் ஒரு சத்தமில்லாத வன்முறையாகவே கருதப்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து பெண் என்பவள் தலைமுறை தலைமுறையாக அவநம்பிக்கைகளைக் கடத்தும் ஒரு ஊடகமாக மாறுகிறாள். இதைதான் சந்தோஷ் தனது ஆய்வு கட்டுரையில் இன்னும் விரிவாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
முன்பு சொன்னதுபோல பெண்ணை சுற்றி பின்னப்பட்டிருக்கும் மூன்று பகுதிகளில் முதல் பகுதியைப்பற்றி கொஞ்சம் விவாதிக்கலாம். அதாவது பெண்ணை பற்றிய பொதுவான நம்பிக்கைகள். இவற்றுக்கான மேலும் செய்திகள் சேகரிக்க எனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. அவர் தான் என் பள்ளி உஸ்தாசா.
என் பள்ளி உஸ்தாசா எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் வீட்டில் தங்கி சமைத்து உறங்கி வரும் அளவுக்கு நெருக்கம். அதேபோல் அவரின் கணவர் உஸ்தாசும் மிகவும் அன்பானவர். உஸ்தாசாவை நான் அக்கா என்றே அழைப்பேன். அவரிடம் இந்த மூடநம்பிக்கைகள் பற்றி ஒருநாள் கேட்டு கொண்டிருந்தேன். அதாவது இஸ்லாத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கைகளைக் குராஃபாட் என அழைப்பார்கள் என அவர் சொன்னார். மேலும் அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை நாம் கடைப்பிடித்தால் மதக்கோட்பாடுகளை மீறுவதாக ஆகும், ஆனால் அப்படியே கடைப்பிடிக்காமல் போனால் குடும்ப சம்பிரதாயங்களை மீறுவதாக பொருள்படும். செய்தாலும் தப்பு செய்யா விட்டாலும் தப்பு. இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும்தான் என அவரும் சந்தோஷ் முன்வைத்த அதே கருத்தை சொன்னார். நம்பிக்கைகள் குறித்து அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
1.   பெண் எந்த வாசலிலும் படிக்கட்டிலும் அமர கூடாது
ஒரு பெண் எந்த வாசலிலும் படிக்கட்டிலும் அமரக்கூடாது, அப்படி அமர்ந்தால் திருமணமாகாது என்பது ஐதீகம். இந்த நம்பிக்கை மலாய் சமூகத்தில் இன்றளவும் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நம்பிக்கை. ஏன் இப்படி அக்காலத்தில் சொல்லப்பட்டது? இதற்கான காரணத்தைக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் மலாய்க்காரர்களின் கட்டிடகலையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அக்காலத்தில் மலாய் சமூக வீடுகளின் வாசல்கள் படிகள் வைத்து மாடிகளாக கட்டப்பட்டவை. அதோடு அக்கால மலாய் பெண்கள் பெரும்பாலும் அழகாக இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் வாசலிலோ அல்லது படிக்கட்டிலோ அமர்ந்திருந்தால் தெருவில் போகும் ஆண்கள் அடிக்கடி அவர்களை காண நேரிடும். இதனால் குறிப்பிட்ட அப்பெண்ணில் அழகு குறைந்து, பார்ப்பவருக்கு சலிப்படைந்து விடுமாம். யாரும் பெண் கேட்டு வரமாட்டார்களாம். இதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.
அறிவியல் ரீதியாக எதேனும் காரணம் உண்டா என ஆராய்ந்த போது அதுவும் அழகு சம்பந்தமாகவே கிடைத்தது. அக்காலப் பெண்களுக்கு கல்யாணம் என்பது வாழ்க்கை இலட்சியம். இது மலாய் சமுதாயத்துக்கு மட்டும் சொல்லப்படுவது இல்லை. மொத்த பெண்ணினத்துக்கு அக்காலத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டது. அதாவது அக்கால கன்னிப்பெண்கள் பெரும்பாலும் வெளியே செல்வதில்லை. அதோடு அவர்கள் படிக்கட்டிலும் வாசலிலும் நின்றால் வெயில் பட்டு அவர்கள் கறுத்து போகலாம். எனவே அப்படி நிற்கக் கூடாது என விதி விதிக்கப்பட்டது. இதற்கு கௌரவ ரீதியாக இன்னொரு காரணமும் உண்டு. எங்கே வெளியில் போக வர இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் உறவாகி குடும்பத்துக்கு அவதூறு ஏற்பட்டுவிடும் என பயந்தும் இந்த விதி விதிக்கப்பட்டது.
ஆனால் இக்காலத்தில் இந்த நம்பிக்கை தேவையா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்றும் பெண்கள் தங்கள் அழகில் மிகுந்த சிரத்தை எடுத்து கொள்கிறார்கள். அன்று வாசலும் படிக்கட்டும் என்றால் இன்று ஃபேஸ்புக், இன்ஸ்தாகிராம், டிவீட்டர் என்று சொல்லலாம். இதனால் திருமணமாகாது என்பதற்காக யாரும் இவற்றில் உட்புகாமலில்லை. ஆக இந்த நம்பிக்கை செயலிழந்து விட்டது எனவே சொல்லலாம்.
2.   சமையலறையில் பெண் பாடினால் கிழவன்தான் மாப்பிள்ளையாவான்
இந்த நம்பிக்கையும் மலாய் சமூகத்தில் பரவலாகதான் சொல்லப்படுகின்றன. என் மலாய் தோழிகள் சொல்லியே நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால் சமையலறையில் விரும்பி பாடும் நான் இந்நேரம் யாரோ ஒரு வயதானவருக்கு மனைவியாக இருந்திருக்க வேண்டுமே. ஆனால் இல்லை. அப்படியென்றால் இந்த நம்பிக்கைகுள்ளும் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று தானே அர்த்தம். அறிவியலால் இது இன்னும் நிருபிக்கப்படவில்லை. ஆனால் காரணம் மட்டும் கூறப்படுகிறது.
இது ஏன் என்று கேட்டேன் உஸ்தாசாவிடம். அதாவது சமையலறையில் பாடினால் கவனம் சிதறி சமைப்பதில் தவறு ஏற்படக் கூடும். இதனால் சமைக்கும் உணவு சுவையில் குன்றலாம். இளைஞன் கணவனானால் இப்படி சமைக்கப்பட்ட உணவினால் சண்டை சச்சரவு ஏற்பட்டு உறவு பிரியலாம். ஆனால் வயது முதிர்ந்த ஒரு கணவன் பக்குவமடைந்தவனானதால் சுவையில் கூட,குறைய இருந்தாலும் பொறுத்து கொண்டு இளமனைவியின்பால் அன்பு செலுத்துவான் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்வில் இப்படி ஏதேனும் நடந்துள்ளதா என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் அனுபவத்தைப் பொறுத்தே இந்த நம்பிக்கை காலத்துக்கு ஏற்றதா என்பதை கணித்துக் கொள்ளலாம்.
3.   பெண் விரைவில் கல்யாணமாக பூக்குளியல் செய்ய வேண்டும்
இதுவும் பெண்ணும் திருமணமும் சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கையே. ஆனாலும் இது இருபாலராலும் அனுசரிக்கப்படுகிறது. பூக்குளியல் எனப்படுவது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது என ஒற்றை எண்களாக வாசமுள்ள வெவ்வேறு நிறத்திலான பூக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதை இரவு முழுக்க பனியில் வைத்து மறுநாள் தலையோடு குளிக்க வேண்டும் என்பதுதான் அதற்கான செய்முறை. பெரும்பாலும் மாக் ஊருட் (Mak Urut), பீடான் (Bidan) எனப்படும் மருத்துவச்சிகள் அல்லது அழகு ஒப்பனையாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. திருமணத்துக்கு முன்னும் இப்படி செய்கிறார்கள். மந்திரவாதிகளும் செய்கிறார்கள். இதற்காகச் சொல்லப்படும் காரணம் உடலில் இருக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்றி உடலுக்கு புது பொழிவையும் பிரகாசத்தையும் தரவல்லது இப்பூக்கள் என்பதாகும்.
அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது பூக்கள் பல நிறங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அதிர்வலைகளைக் கொண்டது. ஒவ்வொரு அதிர்வலையும் வெவ்வேறு சக்தி தாரத்தை கொண்டது. எனவே வேவ்வேறு அளவிலான சக்திகள் தண்ணீரில் கலக்கும் போதும் அது நம் உடலில் படும்போதும், நம் உடலில் இருக்கும் நெகதிவ் அயோன்கள் (negative ions) வெளியேற்றப்பட்டு இழந்து போன சக்தியை மீண்டும் பெறும். அதோடு பூக்களிலிருந்து வேளியேறும் வாசமானது எஸ்தர் (Ester) எனப்படும் வேதியல் வகையைச் சேர்ந்தது. இந்த வேதிபொருள் நீரில் கொஞ்சமாகக் கரையக்கூடியது. அதோடு இதை நுகரும்போது மூளையில் உள்ள ஹார்மோன் சுரப்பி (Hormanal gland) உந்தப்பட்டு அது மற்ற சுரப்பிகளை உந்தும். இதனால் உடல் பழைய உற்சாக நிலையை அடையும் என்பதற்காக இந்த பூக்குளியல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
4.பெண்ணாகிவிட்டாலே கால்களை அகல வைத்து நடக்கக் கூடாது அல்லது வேகமாக தரை அதிர நடக்கக்கூடாது
இந்த நம்பிக்கை கொஞ்சம் சுயநலமானது என்றே படுகிறது. பெண்கள் அடங்கி போகவேண்டும், அதிர்ந்து நடக்கக்கூடாது, பதுமையாக நடந்து கொள்ளவேண்டும் என்றெல்லாம் சொல்வது தாம்பத்தியத்தின்போது பெண்ணின் மீது அவள் கணவனுக்கு எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக என சொல்லப்படுகிறது. இது ஏன் என்று பார்த்தோமானால் வேகமாக நடந்தாலோ காலை அகல வைத்து எதேனும் வேலையில் ஈடுப்பட்டாலோ பெண்ணின் யோனி வாயில் உள்ள ஹைமன் (Hymen) என்னும் மெல்லிய பகுதி கிழிய வாய்ப்பு உண்டு. ஆனால் அக்கால பெண்கள் இக்கால பெண்களைப் போல தாவுதல், ஓடுதல் போன்ற கடின நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
ஆக, அக்காலத்தில் பெண்ணின் ஹைமன் கிழிய ஒரே காரணம் என நம்ப படுவது ஒரு ஆணுடன் கொள்ளும் உடலுறவினால்தான். எனவே எங்கே தனக்கு முன் தன் மனைவி இன்னொரு ஆணுடன் உறவு கொண்டு விட்டாலோ என சந்தேகப்படகூடிய சூழ்நிலை வந்து விடுமோ என அஞ்சியே பெண்ணின் நடவடிக்கைக்கு தடைப்போட்டுள்ளனர். அதற்கு கற்பு என்ற அலங்காரத்தினை மாட்டி விட்டிருக்கிறார்கள். காலங்காலமாய் பெண்களிடையே ஊறியும் போயிருக்கிறது இந்த கற்பு கலாச்சாரம். ஆனால் இன்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளார்கள். சைக்கள் ஓட்டுதல், மலையேறுதல் ஜிம்னாஸ்டிக் என பல நடவடிக்கைகள் ஹைமன் கிழிய ஏதுவாகவே இருக்கிறது. இது ஹைமன் உள்ளவர்களுக்கு. ஒரு சிலருக்கு மருத்துவ ரீதியாக யோனி துவாரம் இல்லாமலும், ஒரு சிலருக்கு ஒரே யோனியில் பல துவாரங்ளும் சிலருக்கு பிறக்கும் போதே ஹைமன் இல்லாமலும் என இப்படி பல விஷயங்கள் உள்ளன.. எனவே இதை காரணமாக வைத்து ஒரு பெண்ணின் அன்பை எடைபோடுவது இக்காலத்துக்கு ஏற்றதல்ல. எனவே உடலுக்கும் கற்புக்கும் தேவையில்லாமல் முடிச்சிப்போடப்படிருக்கிறது என்பதே இவ்விடம் தெளிவு. இது உலகில் எல்லா சமூகத்திலும் நடந்து வரும் ஒரு நிலை..
தங்களின் சுகத்தை கருத்தில் கொண்டே ஆண் சமூகம் பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சட்டதிட்டங்கள் கொண்டு வந்து இருப்பது எவ்வளவு கொடூரம். அதையே ஏன் ஆண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என விதி நிருவபடவில்லை? எனவே இந்த நம்பிக்கை காலத்துக்கு ஒவ்வாத ஒரு நம்பிக்கை எனவே தோன்றுகிறது. இப்படி பெண்களையே சுற்றி சுற்றி துரத்தும் அவநம்பிக்கைகள் ஏற்று கொள்ள கூடியவையா இல்லையா என்பது அவரவர் அறிவு சம்பந்தபட்ட தேர்வு. இதைப்பற்றி எழக்கூடிய விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறபட்டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...