என் இளமை பருவத்தில் இறந்த தோழர்கள், சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்து வந்தேன்.
முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரத்துவம் எய்திய போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள். தங்களுக்கு ஆகாதவர்கள் மரணங்களுக்கு எழுதிய அஞ்சலிகள் பற்றி ‘எல்லாரும் வாசித்தோம்‘ என்று பட்டும் படாமலும் அழுத்தமாகத் தெரிவிப்பார்கள். ஈழத்து போர்க்கள வாழ்வில் அஞ்சலி எப்பவும் எங்களை நிழல்போல தொடர்ந்ததல்லவா?
ஆனால் இப்ப என்னால் அஞ்சலி எழுத முடியவில்லை. என் கவிதைகளை மொழி பெயர்த்து பிரபலமாக்கிய பேராசிரியர் செல்வா கனகநாயகம் கனடாவில் இறந்தபோது மூன்றுநான்கு மாதமாக என்னால் அஞ்சலி எழுத முடியவில்லை.
என் இனிய தோழன் சுந்தர் கவிஞர் கி.பி.அரவிந்தன் பலவருடங்களின் முன்னம் ஒரு கோடை காலத்தின் பிற்பகுதியில் ஒஸ்லோ (நோர்வே) வந்திருந்தான். அழகிய “சிலத்தலோகா” காட்டுக்கு அவனை அழைத்துச் சென்றேன். இருவருக்குமே வன்னிக் காடுகளின் ஞாபகமாயிருந்தது. போராட்டம்பற்றி பல விடயங்களை ஆரோக்கியமான விமர்சனங்களைப் பகிர்ந்துகொண்டோம்.
சுந்தரும் என் தோழன் தாரகி சிவராம்போல போராட்டத்தை அதன் அரசியல், இராணுவ அம்சங்களுடன் அனுபவப்பூர்வமாக அலசி ஆராயக்கூடிய ஆற்றல் உள்ளவன். இதனால் நாம் நெடுநேரம் அரசியல் இராணுவ விடயங்களையே பேசினோம்.
அடுத்து நாம் கவிதைகளையும் பாடல்களையும் பற்றியே அதிகமாகப் பேசினோம். நாம் இருவருமே கவிஞர்கள். நாமிருவருமே பாடகிகளை மணந்திருந்தோம்.
எனது பல்கலைக் கழக தோழியும் அவனது மனைவியுமான சுமதி பற்றி பேசினோம். சுமதி என்றால் எங்கள் காதுகளுக்குள் “”கனவு கண்ட காதல்” போன்ற பழைய பாடல்கள் ரீங்காரம் செய்ய ஆரம்பித்துவிடும். பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையை கலை அரங்கமாக மாற்றிய தோழி அவர். சுந்தருக்கு என் மனைவி வாசுகியின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு.
அன்று அந்த அழகிய வட துருவக் காட்டிடம் விடைபெறுமுன்னம் அவன் தனக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டிருப்பதாகச் சொன்னான். அவனது போராட்டப் பின்னணியில் எதிர்பார்க்கக்கூடிய பிரச்சினைதான். எனினும் மனசு அதிர்ந்தது. தொடர்ந்து மரணம் பற்றியும் பேசினான். நான் அவனை அள்ளி அணைத்து “மச்சான் எனக்கு அஞ்சலிக்கவிதை எழுதாமல் உன்னைப் போக விடுவேன் என்று நினைத்தாயா?” எனக் கடிந்து கொண்டேன்.
ஆனால் இறுதியில் அப்படித்தான் ஆயிற்று.
சுந்தரின் மரணம் என்னை அதிர வைத்தது. எனக்கு நண்பர்களின் மரணச்செய்தியை கேட்பது விருப்பமில்லை, என்னைத் தேனீக்கள்போல மொய்த்து மூடி ரீங்காரம் செய்யும் இளமையை விடலை மனநிலையை அத்தகைய செய்திகள் கலைத்து விடுகிறது. என் இளமை வெறும் கற்பிதமென உரத்துச் சொல்லும் அத்தகைய சேதிகளை உள்வாங்க அண்மைக் காலமாக என் மனசு மறுக்குது. நண்பர்களின் மரணங்களை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை.
அதனால்தான் இத்தனை நாளாக என்னரும் தோழன் சுந்தருக்கு அஞ்சலி எழுதுவதை எண்ணிக்கூடப் பார்க்காமல் இருந்தேன். சுமதி என்னை மன்னித்துவிடு. உன்னை அழைத்துப் பேசும் தைரியம் எனக்கு வரவில்லை. எப்பவும் எது நடந்தபோதும் இனிய பாடல்கள் உன்னோடும் என் மனைவி வாசுகியோடும் தொடர்வதைத்தான் சுந்தரும் நானும் விரும்புவோம்.
மறுமையில் சுந்தரை சந்திக்கிற போது ஒரு வனத்தில் இருந்து ஈழத் தமிழர்களது போராட்டங்கள் பற்றியும் கவிதைகள் பற்றியும் மட்டுமல்ல சுமதியினதும் வாசுகியினதும் பாடல்கள் பற்றியும் நிச்சயம் பேசுவோம்.