1.5.2015 (வெள்ளி)
பங்கோர் தீவில் வல்லின இலக்கியச் சந்திப்புக்குக் கங்காதுரைதான் முழு பொறுப்பு ஏற்றிருந்தார். உணவு மற்றும் தங்குமிடம் என நேர்த்தியான ஏற்பாடுகள். தொழிலாளர் தினத்துடன் விசாக தின விடுமுறையும் இணைந்திருந்ததாலும் தலைநகரில் அன்று ஜி.எஸ்.தி வரிக்கு எதிராக ஆங்காங்கு எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்ததாலும் மூன்று மணி நேர பயணம் சாலை நெரிசலால் எட்டு மணியாக நீடித்தது. முதல் நாள் இரவு எதுவும் பேச முடியாத களைப்பு. அவரவர் சித்தியவானில் ஏற்பாடு செய்யப்பட்ட அறைகளில் முடங்கிக்கொண்டனர்.
மறுநாள் சொல்லியபடி காலை ஏழு மணிக்கு அனைவரும் ஆஜர். சந்துரு மற்றும் யோகி நள்ளிரவில் புறப்பட்டு அதிகாலை ஆறுக்கெல்லாம் விடுதிக்கு வந்திருந்தனர். பாண்டியன், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்துடன் வந்திருந்தார். சரவணதீர்த்தாவும் அப்படியே. நான், பூங்குழலி, தயாஜி, விஜயலட்சுமி, கங்காதுரை மற்றும் அவர் மனைவி என நீண்ட பட்டியலில் தமிழகத்திலிருந்து வந்து தற்பொழுது மலேசிய மாப்பிள்ளையாகப்போகும் ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களும் இணைந்துகொண்டார். ஆக 20 பேர் அடங்கிய குழுவை ஏற்றிக்கொண்டு லூமூட்டிலிருந்து பங்கோருக்கு கப்பல் புறப்பட்டது.
2.5.2015 (சனி)
கப்பலில் வெளிப்புறம் திறந்த வெளியில் நின்று கடலை ரசிக்க வசதி செய்துத்தரப் பட்டிருந்தது. கப்பல் நகர்ந்தகொஞ்ச நேரத்தில் அடை மழை. மழை வந்ததும் அனைவரும் ஒதுங்க இடம் தேடினர். மேல் தடுப்பில்லாத வெளிப்புறம் சாரல்களால் நனைந்தது. மற்றவர்கள் ஓடலாம்; எழுத்தாளன் ஓடினால் உலகம் என்ன சொல்லும்? ஐயகோ! பலத்த கைத்தட்டல்களுக்கு நடுவே தயாஜி மழையில் நனைய பூங்குழலியும் சந்துருவும் இணைந்துகொண்டனர். நாமெல்லாம் ஒரு கலைஞனா என மழைக்கு ஒதுங்கி நின்ற நாங்கள் வெட்கி தலைக்குனிந்துகொண்டோம். அலைகளின் சீரல்களுக்கு நடுவே வேடிக்கைப் பார்த்த சீன நண்பர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
முதல் அமர்வு (காலை மணி 10.00- 11.00)
‘தமிழுக்கு அப்பால்’ எனத் தலைப்பின் கீழ் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு முழுக்க முழுக்க பிற மொழி இலக்கியங்கள் குறித்த கலந்துரையாடலுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. முதல் நிகழ்வு சரியாக காலை மணி 10க்கு என திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடைந்தோம். பங்கோரில் கடல் ஓரமாக இருக்கும் மாரியம்மன் ஆலய மண்டபத்தில் முதல் அமர்வு. ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்கள்தான் முதல் பேச்சாளர். தமிழகத்தில் (மதுரை) ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர் மொழிப்பெயர்ப்புத்துறையில் தீவிரமாகச் செயல்படுபவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், நேர்காணல்கள் என 7 வருடமாக மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துவருகிறார். உலக இலக்கியத்தை ஒட்டிய விரிவான வாசிப்பைக் கொண்ட இவரின் வருகையால் நிகழ்ச்சியின் ஆழம் கூடியது. ரஷ்யா, ஜெர்மன், ஜப்பான், லத்தின் அமெரிக்கா மற்றும் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அதோடு உலக இவ்விலக்கியங்கள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுவது குறித்தும் அவற்றின் தன்மைகள் மற்றும் தரம் குறித்தும் பேசினார். அவரிடம் ஒருசில கேள்விகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இரண்டாம் அமர்வு (காலை 11.00 – 12.00)
இரண்டாவது அமர்வு அ.பாண்டியன் அவர்களால் வழிநடத்தப்பட்டது. ஷாஹானுன் அமாட் என்ற மலாய் இலக்கியவாதியின் புனைவுலகை அடிப்படையாக வைத்து மலாய் இலக்கிய உலகையும் தனது விரிவான பார்வையில் அலசினார். பாண்டியன் இயல்பாக எதையும் நுணுகிப்பார்க்கும் தன்மையும் கூர்மையான அரசியல் சிந்தனையும் கொண்டவர். எனவே மலாய் புனைவுகள் குறித்த அவரது ஆழமான தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பாண்டியனிடன் எப்போதும் ஒரு நிதானம் இருக்கும். அதிகம் வாசிப்பவர்களிடம் உள்ள நிதானம் அது. அவர்களால் தன்னையும் தன் சமூகத்தையும் சுற்றி நடக்கும் அரசியலை அறிந்துகொள்ள முடியும் அதே வேலை அதை பதற்றமின்றி எதிர்க்கொள்ள முடியும். இந்தக் குணத்தை நான் ஆதவன் தீட்சண்யாவிடம் பார்த்துள்ளேன். வாசித்து வாசித்து வரும் சமநிலை அது. விரிந்த அறிவுலகத்தை அறிந்த ஒருவருக்கு ஏற்படும் நிதானம் என அதை சொல்லலாம். இந்தக் கூர்மையான அரசியல் பார்வையால் அவர் நிகழ்ச்சி முழுக்கவுமே உயிர்ப்புடன் நகர உதவினார்.
கடல் பயணம் (நண்பகல் 12.00 – இரவு 7.00)
நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே எனக்குள் ஒரு சின்னப்பதற்றம் இருந்தது. முழுக்கவும் இலக்கியமாகப் பேசி விடுமுறைக்குக் குடும்பத்துடன் வந்திருக்கும் குழந்தைகளை நோகடித்துவிட்டால் என்னாவது? பெற்றோர்கள் செக்காவையும் மாண்டோவையும் சொல்லியா குழந்தைகளைச் சமாதானம் செய்ய முடியும்? ஒருவேளை அந்தக் குழந்தைகளைச் சமாதானம் செய்ய முடிந்தாலும் தயாஜி, குழலி, விஜயா போன்ற குழந்தைகளைச் சமாதானம் செய்வது சாத்தியமாகாது. எனவே அனைத்தையும் கவனம் வைத்தே நிகழ்ச்சி நிரலை வடிவமைத்திருந்தோம்.
மதிய உணவுக்குப் பின் கடல் பயணம். இருபது பேர் அமரக்கூடிய இயந்திரப்படகில் அட்டகாசமான உலா. படகில் கூச்சலுக்குப் பஞ்சமிருக்கவில்லை. ஶ்ரீதர் கடல் குறித்த தனது பயத்தின் படிமங்களை நகைச்சுவையாக்கிக்கொண்டிருந்தார். நான் பொதுவாக சாகச பயணங்களில் கத்துவதில்லை. குறிப்பாகக் கடல். இலக்கியத்தையும் நான் இரண்டு விதமாகவே பார்க்கிறேன். ஒன்று கடலில் இருந்து கரையைப் பார்ப்பது. மற்றது மலையில் இருந்து கீழே பார்ப்பது. முன்னது ஒவ்வொரு நிமிடமும் சாகசத்தில் இயங்கிகொண்டே இன்னொரு அமைதியான வாழ்வை அறிய முயல்வது. மற்றது அமைதியான இடத்தில் இருந்து அர்த்தமற்ற வாழ்வை அறிய முயல்வது.
கடல் ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் இருப்பது. மலைக்கு எதிரானது. மலை உயிர்ப்பை ஒளித்து வைத்திருக்கும். கடல் கொப்பளித்துக்கொண்டிருக்கும். பயணத்தின் ருசி அறிய நானும் தயாஜியும் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டோம். மழைக்குப் பின்பான கடல் கப்பலுக்குள் அலைகளை தாவ அனுமதித்தது. கால்கள் நனைந்தன. வாயில் உப்பு.
படகோட்டி எங்களை ஒரு தனி தீவில் விட்டார். நண்பர்கள் ஒரு நிமிடம் கூட பொறுக்கவில்லை. நான் ஓய்வெடுக்க இடத்தைத் தேடினேன். தொடர்ச்சியாக ஒரு வாரம் ஓய்வில்லை. முந்தைய நாள் எட்டு மணி நேர பயணம் மேலும் சோர்வடைய வைத்திருந்தது. யாரோ எப்போது கட்டிய கயிற்றுக்கட்டில் இருந்தது. உள்ளே புகுந்தேன். ஶ்ரீதர், கங்கா மற்றும் அவர் மனைவியைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே கடலில். எல்லோரும் அவரவருக்குப் பிடித்தக் கடலைத் தேடிக்கொண்டிருந்தனர். கங்கா தீவிரமாகக் காதலித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரும் கூச்சல் கேட்டு கண் விழித்தேன். எதையோ தூக்கிப்போட்டு விளையாடுவதில் ஏற்பட்ட கூச்சல். நண்பர்கள் குழந்தைகளாகி நெடுநேரமாகிவிட்டிருந்தது. அதுதான் கலைஞர்களின் இயல்பு. குழந்தை தன்மையே கலைஞர்களின் அடிப்படை குணம். கொஞ்சம் சோர்வு குறைந்திருந்தது.
மூன்றாவது அமர்வு (இரவு 7.00 – 8.00)
சரவணதீர்த்தாவின் கட்டுரை மொத்த சோர்வையும் நீக்கியிருந்தது. தெளிந்த வாசிப்பு. ‘வாட்டர்’ திரைப்படம் குறித்த தனது கருத்தை மிகத்தெளிவாக முன்வைத்தார். சரவணதீர்த்தாவின் இந்தக் கட்டுரை கைக்குக் கிடைத்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவரால் இத்தனை நல்ல கட்டுரை எழுத முடியும் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பாசாங்கில்லாத கட்டுரை. தெரிந்ததை மட்டுமே சொல்லும் கட்டுரை அழகானது. சரவணதீர்த்தா அதைச் செய்திருந்தார். அதோடு அவர் பக்தி பிடிப்பு உள்ளவர். இலக்கிய வாசிப்பு அவரை அது குறித்து கேள்விகள் கேட்க வைத்திருப்பதும் தொடர்ச்சியான மன தர்க்கத்தில் இருப்பதும் அவருடனான கலந்துரையாடல்களில் எப்போதும் காணமுடியும். எதையும் தயக்கமின்றி தனக்குத் தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அங்கிருந்து மாறுபடும் அவர் வாசிப்பு நிலை அவர் சிந்தனையையும் மேம்பட வைத்திருந்தது. சரவணதீர்த்தாவின் கட்டுரையின் அடிப்படியில் பாண்டியன் சில ஐயங்களை வெளியிட்டார். குறிப்பாக, அப்படம் மனு ஸ்மிருதிக்கு எதிராகப் பேசவில்லை என்றும் மாறாக அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனும் தோராணையில் இருப்பதாக கருத்தை முன்வைத்தார். உரையாடல் கொஞ்சம் மனு ஸ்மிருதி குறித்து சென்றது.
நான்காவது அமர்வு (இரவு 8.00 – 9.00)
அன்றைய இறுதி அமர்வாக தயாஜியின் ‘பட்டு’ எனும் இத்தாலிய நாவல் குறித்த பகிர்வு இருந்தது. தயாஜி அதை சுவாரசியமான மொழியில் எழுதியிருந்தார். ‘கடவுள்’ போலவே ‘காதலும்’ ஒரு கருத்தாக்கம் தான் என விவாதம் தொடங்கியது. நான் காதல் புனிதமாக்கப்பட்டதின் பின் உள்ள அரசியல் குறித்து கொஞ்சம் தொட்டுப்பேசினேன். பாண்டியன் ‘காதல்’ என்பது புனிதமாக்கப்பட்ட அபத்தத்தை ஏற்காவிட்டாலும் அது ஆதி உணர்வென தனது பார்வையை முன்வைத்தார். இந்த விவாதம் கொஞ்சம் சுவாரசியமாகவே இருந்தது. எலிசபத் (சரவண தீர்த்தா மனைவி) உள்ளிட்ட பலரும் விவாதத்தில் பங்கேற்றனர். தயாஜி இல்லாத வல்லினம் நிகழ்வுகள் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். அவரால் சூழலை சட்டென சிலிர்க்கவைக்க முடியும். பலகுரல் பேசுவதில் திறன் பெற்ற அவரைப் பேசச்சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். குழந்தைகள் உற்சாகமானார்கள்.
இரவு உணவு எங்களுக்காகத் தயாராக உணவகத்தில் காத்திருந்தது. உணவகம் எனச் சொல்வதைவிட சாலை ஓரம் இருக்கும் ஒட்டுக்கடை. 20 பேர் அடங்கிய திடீர் கூட்டம் திக்கு முக்காட வைத்திருக்கும் போல. உணவைக் கொடுப்பதிலிருந்து விலையை மொத்தமாகக் கணிப்பதுவரை அனைத்தும் தாமதமாவதின் நியாயம் புரிந்தது. கங்காதுரை கொஞ்சம் பரபரப்பாகத்தான் இருந்தார். அவர் ஏற்பாடு. தவறுகள் நடக்கக் கூடாது என்பதில் அக்கறை தெரிந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் சிரிக்கும் நண்பர்களுக்கு எதையும் நினைத்து வருந்தி புகார் செய்ய அவகாசம் இல்லை. இரவு உற்சாகமாகவே கழிந்தது.
சரவணதீர்த்தாவின் மனைவி மற்றும் அவரது அக்காவும் எங்களைப் பேணுவதில் முழு அக்கறை எடுத்திருந்தனர். தேவைப்படும் நேரம் அறிந்து தேநீர் தயாரித்துக் கொடுத்தார். அவர் மனைவியின் அக்கா வீட்டைச் சுத்தப்படுத்த அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். எல்லோருக்கும் அக்குணம் வருவதில்லை. சிலரே தங்களை எந்தச் சூழலிலும் பிறருக்கான மனிதனாக மாற்றிக்கொள்கின்றனர்.
3.5.2015 (ஞாயிறு)
ஐந்தாவது அமர்வு (காலை 9.00 – 10.00)
மறுநாள் முதல் அமர்வு என்னுடையது. மாண்டோவின் சிறுகதைகள் குறித்து பேசினேன். குறிப்பாக ஜெயமோகன் மாண்டோவின் சிறுகதைகள் பிரிவினைவாத அரசியல் சூழலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்றும் அவரின் எழுத்து முறை கடைசி பத்தியில் அதிர்ச்சி தரும் திருப்புமுனை முறையைக் கொண்டது என்று எழுதியிருக்கிறார். என் வாசிப்பில் அவர் அவ்வாறான எழுத்தாளர் இல்லை என்றும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஆளுமை என்றும் சில உதாரணங்கள் மூலம் குறிப்பிட்டேன். ஶ்ரீதர் உடனிருப்பது பெரும் உதவியாக இருந்தது. நாம் சொல்லும் கருத்துகளை அவ்வப்போது மேம்படுத்தி செல்லவும் புதிய அணுகுமுறைகளில் சிந்திக்கவும் அவர் கருத்துகள் துணைப்புரிந்தன. பாண்டியனும் தன் நினைவில் இருந்து சில கதைகளை நினைவு கூர்ந்தார்.
ஆறாவது அமர்வு (10.00 – 11.00)
ஹென்ரிக் இப்சன் என்ற நாடகக் கலைஞர் குறித்து யோகி பேசினார். அனேகமாக அது அவர் குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் விரிவான கட்டுரையாக இருக்கலாம். அக்கட்டுரை உருவான கதையில் தொடங்கி இப்சனின் நாடகம் குறித்து பேசினார். இப்சனின் நாடகம் யூ டியூப்பில் இருப்பதால் அதை பார்த்து விவாதிக்கும் சூழலை ஏற்படுத்தாத என்னை அந்நேரம் நொந்துகொள்ளதான் முடிந்தது. அடுத்த சமயம் இதுபோன்ற நாடகம் தொடர்பான விவாதங்களில் அதை ஒளிப்பரப்பும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிந்துகொண்டேன்.
ஏழாவது அமர்வு (11.00 – 12.00)
அவரைத்தொடர்ந்து விஜயலட்சுமி கட்டுரையைப் படைத்தார். கே.எஸ். மணியம் என்ற மலேசிய எழுத்தாளரை பலரும் அறிந்திராத சூழலில் அவர் ஆங்கில எழுத்துலகில் எவ்வளவு முக்கியமான ஆளுமையாக இருக்கிறார் என அக்கட்டுரை உணர்த்தியது. சிறுகதையில் உள்ள படிமங்கள் குறித்து கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டன. ஶ்ரீதர், விஜயா கொண்டுவந்திருந்த கே.எஸ். மணியத்தின் ஆங்கில சிறுகதை ஒன்றை வாசித்திருந்ததால் அது குறித்து தனது கருத்தைக் கூறினார். நிச்சயம் அவர் முக்கியமான எழுத்தாளர் என தனது அபிப்பிராயத்தைக் கூறினார். மலேசியத் தமிழ்ச்சூழலுக்கு ஒரு முக்கியமான ஆளுமையை அறிமுகம் செய்யும் விஜயலட்சுமியின் கட்டுரை நிச்சயம் கவனிக்கப்படும்.
மதிய ஓய்வும் உணவும்
சரவண தீர்த்தாவின் மகன் தீர்த்த பாதா ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர். தனது ஓவிய தொகுப்பைக் கொண்டு வந்திருந்தார். அதை அனைவரின் பார்வைக்கும் கொண்டுச்சென்றோம். ஓவியர் சந்துரு ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார். அனைவரும் அச்சிறுவனை வெகுவாகப் பாராட்டினர்.
மதிய உணவு கங்கா ஏற்பாடு செய்திருந்த அதே கடை. உண்மையில் சுவையான சமையல். நான் ஒரு உணவுப்பிரியன். நாக்கின் சுவை அறியும் பகுதியெல்லாம் அபரிமிதமாக வேலை செய்யும் . இரண்டாவது முறை மீன் குழம்பை சுவைத்து முடித்தபோதுதான் திருப்தி. மதிய உணவுக்குப் பின் வெளிப்புறம் எங்காவது சந்திப்பு வைக்கலாம் என முடிவாகியிருந்தது. அதற்கேற்ப ‘பாசிர் போகாக்’ எனுமிடத்தில் எட்டாவது அமர்வு தொடங்கியது.
எட்டாம் அமர்வு (2.00 – 3.00)
கடலின் அலைகளை பின் காட்சியாகக் கொண்டு எட்டாம் அமர்வு தொடங்கியது. ஓவியர் சந்துருவின் உரை. மலேசியாவில் மிக முக்கியமான ஓவியர்களாக வேண்டியவர்களை பத்திரிகைத்துறை எப்படி பாதித்தது என அந்தக் கட்டுரையின் சாரம் இருந்தது. ஓவியர்களை ஓவியர்களாகப் பார்க்காமால் வடிவமைப்பாளர்களாகப் பார்க்கும் கோணம் எவ்வாறு தமிழ்ப்பத்திரிகை உலகில் பொதுபுத்தியாகிவிட்டது என்றும் அவர் தனது பேச்சில் கூறினார். சலனமில்லாத பேச்சு சந்துருவுடையது. 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது அவருடனான நட்பு. பெரிதாக எந்த மாற்றமும் அவரிடம் இல்லை. அதே எளிமை.
ஒன்பதாம் அமர்வு (3.00 – 4.00)
ஒரு வாசகனாக இந்த அமர்வில் என்னைக் கவர்ந்த கட்டுரை பூங்குழலியினுடையது. முதல் காரணம் அது எனக்கு புதிய அறிமுகங்களைச் செய்து வைத்தது. இரண்டாவது அது கடும் உழைப்பில் உருவாகியிருந்தது. கட்டுரையின் சாரத்தைக் குழலி வாசித்து விளக்கினார். ஆப்பிரிக்க இலக்கியம் குறித்த அவரது பேச்சு தொடர்ந்து அதை ஒட்டிய தேடலுக்கான ஆர்வத்தைக் கொடுத்தது. குறிப்பாக “உங்கள் கருப்புத் தோல்களை உங்கள் உடம்பை மூடும் ஓர் அங்கியைப்போல் அணிந்து கொள்ளாதீர்கள். அதை ஓர் போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்.” என்ற வரிகள் மீண்டும் மீண்டும் எழுச்சியைக் கொடுப்பதாய் இருந்தது.
பத்தாவது அமர்வு (4.00 – 5.00)
இறுதி அங்கம் கங்காதுரையினுடையது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர் என்பதால் அதற்கான வெகுமதியாகக் கொடுத்திருந்தோம். மலேசிய சீன இலக்கியத்தை ஒட்டி அவரது பேச்சு இருந்தது. குறிப்பாக ‘மலேசிய நவீன சீன இலக்கியச் சிறுகதை’ என்ற ஆங்கில தொகுப்பை ஒட்டிய தனது வாசிப்பு அனுபவத்தைப் பேசினார். சீன இலக்கியம் எவ்வாறான அம்சங்களை 1967களிலேயே பெற்றிருந்தனர் என அவர் தனது புரிதலிலிருந்து கூறினார். விரிவுரையாளர் என்பதால் அவரது விளக்கங்கள் தெளிவாக இருந்தது.
இறுதி அமர்வு (5.00 – 6.00)
இறுதி அமர்வில் வல்லினத்தை மேம்படுத்துவதற்கான கருத்துகளைக் கேட்டேன். தாராளமாக பொருளாதார சங்கடங்கள் இல்லாமல் அவரவர் தத்தம் திட்டங்களைக் கூறலாம் என்றேன். ஆனால் அத்திட்டம் ஜனரஞ்சகமாகவோ கூடிக்கலையும் அம்சங்களையோ கொண்டிருக்கக் கூடாது என்பது அடிப்படை விதி. நண்பர்கள் பலரும் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இளையோர் இலக்கியம் குறித்து வல்லினம் செயல்பட வேண்டிய அவசியம் மற்றும் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களை உருவாக்க வேண்டிய தேவை அதில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
முடிவு
முதலில் கால்களை மட்டுமே நனைப்பதாகக் கூறிச்சென்ற பாண்டியனின் மகன் கடலில் முழுக்க நனைந்து வந்தான். குழலியும் விஜயாவும் பாண்டியனும் அவர் மனைவியும் நல்லப்பெற்றோர்கள் எனக்கூறிக்கொண்டிருந்தனர். எவ்வளவு குறும்பு செய்தாலும் ஒரு குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் பெற்றோர்களைப் பார்ப்பதே அரிதாகி விட்ட சூழலில் அவர்கள் அப்பாராட்டுக்குத் தகுந்தவர்களே.
பாண்டியன் அன்று மாலையே புறப்பட்டு விட்டார். பிறகு பங்கோரைச் சுற்றினோம். படங்கள் எடுத்துக்கொண்டோம். அர்த்தமான பயணமாக இப்பதிவை எழுதும் இந்த நொடிவரை மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
GREAT..YOU SHD INCLUDE MORE ON DISCUSSION OF EACH MAIN THEMES TOO!
அருமையான பகீர்வு… வாழ்த்துக்கள்