வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்தும் எழுத்துகள்

அ.பாண்டியன்

அ.பாண்டியன்

இலக்கியம் வாசகனைப் புதிய அனுபவங்களை நோக்கி நகர்த்துகிறது. உயிரோட்டமும் அனுபவ எதார்த்தமும் கொண்ட எழுத்துகள், வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்துகின்றன. உலகமொழி இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் இருக்கும் பொதுக் குணம் இது. அதேசமயம் ஒரு மொழியின் இலக்கியமானது, அந்த மொழிசார்ந்த இனத்தின் பண்பாடுகளின் அடையாளமாகவும், அரசியல் பதிவாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைந்துவிடுகிறது. சங்க இலக்கியங்கள் தமிழினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் ஒருங்கே கொண்டிருப்பது போலவே, பிற உலக செவ்வியல் இலக்கியங்களும் அமைந்துள்ளன.

அவ்வகையில் நவீன இலக்கியமானது சமகால வரலாற்றுத் தகவல்களையும், மக்களின் சிந்தனைப் போக்கையும், அரசியல் மாற்றங்களையும், சமூக வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கையும் எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. தமிழ்மொழி நவீன இலக்கியங்களை ஓரளவு அறிந்த நாம் நம்மோடு சகபயணியாக வாழும் மலேசிய நாட்டுப் பெருங்குடிகளின் இலக்கியத்தையும் அறிந்திருப்பது நமக்குக் கூடுதல் பலமாக அமையும். வாழ்க்கை விழுமியங்கள் குறித்தோ அன்றாட வாழ்க்கைப்பாடுகள் குறித்தோ நாம் கொண்டிருக்கும் பார்வைக்கோணத்தை விடுத்து மற்ற தரப்புகளின் கண்ணோட்டங்களையும் புரிதல்களையும் அறிய, புனை10307361_1041742342505510_8337013382056083632_nவிலக்கியம் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதன் அடிப்படையில், நான் வாசித்துச் சுவைத்த அல்லது எனக்குள் உரையாடலை நிகழ்த்திய, சில மலாய் சிறுகதைகளின் விமர்சனக் கண்ணோட்டங்களை இந்நூல் தாங்கியுள்ளது. பலநூறு மலாய் படைப்பாளர்கள் நல்லபல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நான் என் நினைவில் நின்ற அல்லது தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தூண்டிய பத்து சிறுகதைகளை மட்டுமே எடுத்தாண்டுள்ளேன். இச்சிறுகதைகள் அனைத்தும் வெவ்வேறு காலப்பின்னணியில் எழுதப்பட்டவை. அதேபோன்று இக்கதைகள் மூத்த மலாய் எழுத்தாளர்களாலும் இளம் படைப்பாளர்களாலும் எழுதப்பட்டவை. ஏதோ ஒருவகையில் மலாய் சிறுகதைத்துறையில் குறிபிடத்தக்கனவாகவும் அமைந்துள்ளவை.

ஆகவே மலாய் சிறுகதைகளை அதன் இலக்கியத் தரத்துடன் மட்டுமின்றி பண்பாட்டு அமைவுகளோடும் அரசியல் நோக்கங்களோடும் தமிழ் இலக்கியத்தளத்தில் இருந்து பார்த்து, ஒப்புநோக்குவதே இக்கட்டுரைகளின் நோக்கமாக இருக்கிறது. சில நேரங்களில் அவை நமது சிந்தனைப்போக்கோடு ஒத்துப்போகின்றன. சில நேரங்களில் மறுதலிக்கின்றன. ஆயினும் இலக்கியப் படைப்புத்தொழிலை அவை நேர்மையாக முன்னெடுத்திருக்கின்றன என்பது மட்டும் உறுதியாகின்றது.

இந்நூலின் மூலக்கட்டுரைகள், வல்லினம் அகப்பக்கத்தில் 2013-ல் எழுதப்பட்டவையாகும். நூலாகத் தொகுக்கும் பொருட்டு சில மாற்றங்களையும் புதிய இணைப்புகளையும் சேர்த்துள்ளேன். முடிவாக, இக்கட்டுரைகள் எழுத உந்துதலாக இருந்த வல்லினம் அகப்பக்கத்திற்கும், இந்நூலை அச்சில் கொண்டுவரும் வல்லினம் பதிப்பகத்திற்கும், நண்பர் ம. நவீனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1.11.2015ல் நடைப்பெறும் கலை இலக்கிய விழாவில் இந்த நூல் வெளியீடு காண்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...