கடற்கரையில் நான் நின்ற பின்னேரம்

ஒரு பின்னேரம் பாழடைந்து போனதைக் கண்டு
தலைகுத்தி விழுந்தேன் கண்ணீருக்குள்.
என்ன வஞ்சமென்று தெரியவில்லை
ஒரு காக்கையுமில்லை அந்த மாலையில்
கரைந்து கரைந்து அதை மெருகேற்ற

கடல்
அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்
தளம்பிக் கொண்டிருந்தது என்முன்னால்.
என் முகம் பார்க்கத் திராணியற்று
வெம்பியது அது.
கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது எனக்கு.

அது பின்னேரமாக இருக்கவில்லை
கடலின் பின்புறமாக
சூரியனை யாரோ இழுத்துச் சென்றார்கள்
ஒரு கொலைகாரனை இழுத்துச் செல்வதைப்போல

அன்றுதான் என்னையும்
இழுத்துக் கொண்டு போனார்கள்

கடல்
அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்
தளம்பிக் கொண்டிருந்தது என் முன்னால்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...