மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்

மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன்
இருபத்தி நான்காம் அறை
நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில்.

புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண்
அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.
மருத்துவத் தாதி என்பது
சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில்
கனிந்த மலர் என்பதுவா
உதிர்ந்த மலர் என்பதுவா
என்றறிய விரும்பிய மனதில்
கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.

அருகே,
முகத்தை மறைக்க விரும்பிய கிழவனொருவன்
அகத்தை மறைக்க முடியாமற் திணறிப் புலம்பினான்.
அவனிடம் உருக்குலைந்த விதியைக் கண்டேன்
மலத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாட்களைத் தள்ள முடியாமல்
விதியின் ஓரத்தில் அவனிருக்கையில்
அவனைப் புதுப்பிக்கிறது மருந்தின் வாசனை
என்னையும்தான்.

வழுகிச் செல்லும் புன்னகையை
விலத்திச் செல்ல முடியாமல்
திரும்பி வரும் தாதியிடம் எதையோ சொல்லத் தேடினேன்
அவளிடமிருந்த கவனமற்ற நிலையிலும்
மிச்சமாக இருந்த ஈரத்தை.

மெழுகாய்க்கனிந்து கொண்டிருந்த ஆஸ்பத்திரியில்
எனக்குப் பதிலாக இன்னொருவர்
மேலும் இன்னொருவர் என வந்து கொண்டிருப்போருக்கிடையில்
புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண்
அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...