விமர்சனங்களை விமர்சித்தல்

pandiyanஇலக்கிய விமர்சனம் என்று ஆரம்பித்தாலே அது சர்ச்சையிலும் சண்டையிலும் மனக்கசப்பிலும்தான் சென்று முடிகிறது. தேசம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இந்தநிலை கலை இலக்கியச் சூழலில் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் விமர்சனம் இல்லாத கலையும் இலக்கியமும் உயிர்ப்பற்றதாகிவிடும் என்பதனால் தொடர்ந்து விமர்சனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

விமர்சனம் என்பது என்ன? அதை யார் செய்யவேண்டும்? தகுதிகள் என்ன? போன்ற பல கேள்விகளை முன்வைத்து விமர்சனங்கள் எதிர்கொள்ளப்படுவதை நாம் காண்கிறோம். ‘இந்தப் படைப்பை விமர்சனம் செய்ய இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்ற கேள்வி பொதுவாக விமர்சனம் செய்பவருக்கு எதிராக வைக்கப்படும் எதிர்வினையாகும். அந்தக் கேள்வி ஓர் அதிகாரத் தரப்பின் குரலாக எழுந்து வந்து விமர்சனம் என்ற ஒரு கருத்து முன்னெடுப்பை தகர்க்க முயல்கிறது. அதோடு இலக்கிய விமர்சனம் என்பதைப் பொதுவாக தனிமனிதத் தாக்குதல் என்ற கோணத்திலேயே படைப்பாளர்கள் பார்ப்பதும் அல்லது அந்தக் கோணத்தில் நிறுத்தி வாசகக் கருணையைக் கோருவதும் வழக்கமாகிவிட்டது. தமிழ்ச்சூழலில் க.நா. சுப்பிரமணியம், தன் விமர்சனப்பணியை பெரும் இலக்கியப்பணியாகவே மேற்கொண்டது முதல் இந்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

படைப்பாளிகள் இலக்கிய விமர்சனத்தைக் கடுமையாகக் கருதி ஒதுக்கினாலும் அதற்கு இலக்கிய உலகில் ஒரு அத்தியாவசியத் தேவை இருப்பதை மறுக்க முடியாது. விமர்சனம் என்பதன் தேவை இலக்கியத்தை வழிநடத்துவதன்று. விமர்சனம் படைப்பு சார்ந்த ஓர் அறிவார்ந்த உரையாடலை வாசகனுடனும் படைப்பாளியுடனும் நிகழ்த்துகிறது. ஒரு படைப்பை ஆய்வு செய்வதன் வழி, விமர்சனம் அதைப் பல கோணங்களில் அணுகி உரையாடல்களை வளர்க்கிறது. ஓர் இலக்கியப் படைப்பு குறித்த தீவிர உரையாடல் வாசகனின் இலக்கிய அறிவை மட்டுமின்றி தத்துவார்த்தப் பார்வையையும் விரிவாக்குகிறது.

படைப்பில் உள்ள சிறப்புகளையும் குறைகளையும் வெளிப்படையாகப் பேச விமர்சனம் வழியமைத்துக் கொடுக்கிறது. ஆகவே, விமர்சனங்கள் பிரதிகளை சில அளவுகோல்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்கின்றன. மதிப்பீடு என்பது வாசகனுக்கு வாசிப்புக்குள் நுழைய எளிய வழிகாட்டியாகிறது. ஆயினும்  ரசனை விமர்சனம் பயன்படுத்தும் அளவுகோல் என்பது விமர்சகனின் தனிப்பட்ட இலக்கிய ரசனைக்கு ஏற்ப அமைவதால் மதிப்பீடும் நிரந்தரத்தன்மை அற்றதாகவே உள்ளது. ஆகவே படைப்புகளை மதிப்பிட எது ‘பெஞ்ச்மார்க்’ என்னும் குழப்பம் விமர்சகரிடையேயும் தர்க்கங்களை உண்டாக்கிவிடுகிறது

அதோடு படைப்புகள் என்றுமே விமர்சனங்களைச் சார்ந்தவை அல்ல. விமர்சனங்கள்தான் படைப்பைச் சார்ந்தவை. படைப்புகள் சுதந்திரமானவைpandiyan-21. விமர்சனங்களின் அடிப்படையில் படைப்புகள் படைக்கப்படுவதில்லை. ஒரு படைப்பு ‘இப்படி இருப்பது சிறப்பு’ என்று விமர்சகன் சில இலக்கணங்களை வகுத்துக் கூறினாலும்  அதையும் தாண்டி எழுதப்படும் படைப்புகளே கால ஓட்டத்தில் நிலைபெறுகின்றன. இதுவரை எழுதப்பட்ட நல்ல சிறுகதைகள் நாவல்கள் எல்லாமே விமர்சனக் கருத்துகளுக்கு உட்படவேண்டும் என்ற சார்புநிலையில் எழுதப்பட்டவை அல்ல. மெளனி. நா. பிச்சமூர்த்தி, லா.ச.ரா. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வண்ணநிலவன், ஜெயகாந்தன் ஜெயமோகன், எஸ்.ரா, ஷோபா சக்தி, இமையம் என்று எல்லா எழுத்தாளரும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் இயல்புக்கு ஏற்ற கலைவடிவத்தில் எழுதியவர்கள்தான். அப்படி எழுதியதாலேயே அவர்களால் இலக்கியப்பரப்பில் ஒரு இடத்தைப் பெறமுடிந்தது. விமர்சகன் வகுத்துக் கூறும் தன்மைகளுக்கு ஏற்ப எழுத முயல்வது அடிப்படைப் பயிற்சிகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியது. அந்தப்பயிற்சி ஓரளவு கைவந்தபிறகு உடனடியாக அதில் இருந்து வெளியேறி தனக்கான கலைவடிவத்தை கண்டடைபவனே தீவிர எழுத்துகளை எழுதமுடியும்,  விமர்சகன் சொல்லும் கலை அமைதியை மனதில் வைத்துக்கொண்டு எழுதும் படைப்பு இயல்பாகவே செயற்கைத் தன்மையுடையதாகி விடுகிறது. ஒரு தரப்பைத் திருப்திப்படுத்தும் உள்நோக்கத்துடன் எழுதப்படுவதால் ஒருவகையில் அதுவும் வணிக எழுத்துதான். கலைவெளிப்பாடு என்பது தனது சுயமான கலைஅமைதியையும் வடிவத்தையும் கொண்டிருக்கவேண்டும்,.         ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி அதற்கு முன் இருந்த எல்லா நாவல் வடிவத்தையும் உடைத்துக்கொண்டு எழுதப்பட்டது, ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் அதற்கு முன்பு  நாவல் குறித்து விமர்சகர்கள் சொன்ன கருத்துகளை முற்றாக மறுத்து எழுதப்பட்டது.

ஆகவே, விமர்சனம் என்பது எப்படி இருப்பது ஆரோக்கியமானதாக அமையும் என்பதை முன்வைத்து சில விடயங்களை விரிவாகப் பேசவேண்டியது அவசியம். படைப்புகள் எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதம் விமர்சனமாக நிலைபெற்றிருக்கும் நிலையில் விமர்சனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் நமக்குத் தேவையான ஒன்றே.

விமர்சனங்கள் பலவகைப்படுகின்றன. ரசனை விமர்சனம் மிகவும் பிரபலமானது. கோட்பாட்டு விமர்சனங்கள்,  நவீன இலக்கியக் கோட்பாடுகளை அளவுகோலாகக் கொண்டு ஒரு இலக்கியப் பிரதியை ஆய்வு செய்கின்றன. மேலும் மார்க்சிய விமர்சனம். பெண்ணிய விமர்சனம், சூழியல் விமர்சனம் போன்ற பல்வேறு வகையிலும் இலக்கியப் படைப்புகள் திறனாய்வு செய்யப்படுகின்றன.

ஆயினும் ரசனை விமர்சனமே மிகவும் புகழ்பெற்று உள்ளது. ஒரு கலைப்படைப்பை பார்வையாளன் தன் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் அது குறித்துக் கூறும் கருத்தே ரசனை விமர்சனத்தின் அடிப்படையாகும். இதை அழகியல் விமர்சனம் என்றும் சொல்லலாம். இந்தவகை விமர்சனங்கள் மிக அதிகமாக முன்வைக்கப்பட்டாலும் இவை அடிக்கடி பெரும் சர்ச்சைகளை உண்டாக்குவதும் உண்டு. பிற கோட்பாட்டு, அல்லது மார்க்சிய விமர்சனங்கள் போன்று, அழகியல் விமர்சனங்கள் கட்டுச்செட்டான வரையறைகளைக் கொண்டவை அல்ல. அவை அரூபத்தன்மை கொண்டவை.  ஆனால், தொடர் விவாதங்களுக்கு இடம் கொடுக்கக்கூடியவை. அதாவது, ஒரு படைப்பை ஒரு விமர்சகன் பார்க்கும் கோணத்துக்கும் மற்ற விமர்சகன் பார்க்கும் கோணத்துக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். அது அந்த விமர்சகனின் கலை இலக்கியம் சார்ந்த புரிதல், வாசிப்பு அனுபவம், தத்துவார்த்த நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடு போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளது. ஆகவே ரசனை விமர்சனங்கள் ஒரு முடிவாகத் தேங்கி விடாமல் தொடர்ந்து வளரும் சாத்தியங்களைக் கொண்டவையாகும். இந்த நெகிழ்வுத்தன்மையின் காரணமாகவே ரசனை விமர்சனங்கள் சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.

உதாரணமாக நான் பார்க்கும் ஒரு திரைப்படம் என்னை கவர்வதற்கும் அதே படம் இன்னொரு நபரைக் கவராமல் போவதற்கும் எது காரணமாகிறது என்பதே அழகியல் விமர்சனங்களின் அடிப்படையாகும். இதில், என்னை ஒரு படம் கவர்வதன் ஒரே காரணத்தால் நான் அந்தப் படத்தை நல்ல படம் என்று கூறுவதும், என்னைக் கவராத காரணத்தால் அது நல்ல படம் அல்ல என்று கூறுவதும் முற்றும் முடிந்த கருத்தாக இருக்கமுடியாது. என் அறிவு, ரசிப்பு, புரிதல், அனுபவம் சார்ந்து நான் எடுக்கும் ஒரு முடிவு மற்றொருவருக்குச் சற்றும் பொருந்தாததாக இருக்கக்கூடும். அதுபோல விமர்சகர்கள் நல்ல சினிமா என்று கூறுவது மக்களுக்குப் பிடிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே பல விருதுபெற்ற படங்கள் மக்கள் மத்தியில் பேசப்படாமல் போகின்றன. ஆகவே, ரசனை விமர்சனத்தின் நெகிழ்வுத் தன்மையை உள்வாங்கிக்கொண்ட பின்னரே நாம் அதன் நேர்மறை எதிர்மறை சாத்தியங்களை விவாதிக்க முடியும்.

விமர்சனத்தின் அடிப்படை நோக்கம் படைப்புகளை உடைத்து, உரையாடலுக்கு உட்படுத்துவதாகும். ஒரு சராசரி வாசகன் ஒரு சிறுகதையைப் படித்த பின்னர் ‘நன்றாக இருக்கிறது’ அல்லது ‘நன்றாக இல்லை” என்று கூறும் சாதாரணக் கருத்தும் விமர்சனம்தான். அது ஒரு மதிப்பீடு. ஆனால், அவனால், தாமன் ஏன் அக்கதை குறித்து அவ்வாறு உணருகிறோம் என்பதை விளக்கிக் கூற முடியாது. அந்தக் கதை அவனுக்கு ஏதோ ஒருவகை பாதிப்பை உண்டுபண்ணியிருப்பதாகவோ அல்லது அவன் நம்பும் ஒரு வாழ்வியலை அக்கதை ஏற்கவோ மறுக்கவோ முற்படுகிறது என்பதையோ அவன் மேலோட்டமாக உணர்வான். அதன் அடிப்படையிலேயே அவனது மதிப்பீடும் இருக்கும்.

ஆனால், ஒரு விமர்சகன் தனது வாசிப்பு அனுபவத்தையும் திரண்ட வாழ்க்கை அனுபவங்களையும் அடிப்படையாக வைத்து தனது ரசனைக்கான காரணங்களை தொகுத்துக் கூற முடியும். அதன் அடிப்படையிலேயே தனது மதிப்பீட்டையும் முன்வைக்க முடியும். ஆகவே விமர்சகன் ஒரு படைப்பை தன் இலக்கிய அறிவின் அடிப்படையில் அளக்க முயலும் முயற்சி விமர்சனமாகும்.

இங்கே குறிப்பிட வேண்டிய விடயம், விமர்சகன் படைப்பில் இருப்பதை அலசிப்பார்த்து பகுத்துக்கூறும் கருத்துகள் இலக்கிய மேம்பாட்டுக்கு அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், அந்தக் கருத்துகளைப் படைப்பிலக்கியத்தின் நிரந்தரச் சட்டதிட்டங்களாகவும் வரையறைகளாகவும் வைத்துக்கொள்ள முயலும்போதுதான் அது சர்ச்சைக்குரியதாகிறது.   விமர்சனம் என்பது படைப்புகளுக்கான இலக்கணத்தை வகுக்கிறதா அல்லது படைப்புகளின் உட்பொருளை ஆய்ந்து வெளிக்கொணருவதன் வழி அதை மதிப்பீடு செய்கிறதா என்னும் வினாவுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.

விமர்சனத்தின் பணி என்பது முன்பே குறிப்பிட்டது போல் படைப்பு குறித்த மதிப்பீட்டை முன்வைப்பதுதான். படைப்புகளுக்கான இலக்கணங்களை வகுப்பது விமர்சகனின் பணி அன்று. எல்லா நவீன படைப்பிலக்கியங்களும் தங்களுக்கான இலக்கணத்தைத் தாங்களே வகுத்துக் கொண்டவைதான். ஒரு காலகட்டத்தில் ஒரு படைப்புவகைக்கு வலியுறுத்தப்படும் இலக்கணம் பிறிதொரு காலத்தில் மாறுவதும் புதிய இலக்கணங்கள் பேசப்படுவதும் இலக்கிய வரலாற்றில் இயல்பானவை. சிறுகதைக்கான இலக்கணம் என்று இன்று கூறப்படும் கூறுகளையெல்லாம் முன்வைத்து சிறுகதை தோன்றவில்லை. அவை தோன்றிய காலத்தில் கூறப்பட்ட வடிவ அமைதி இன்று பல்வேறு மாற்றங்கள் கண்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் விமர்சகர்கள் முன்வைத்த கருத்துகளால் மட்டும் வந்தவை அல்ல. அவை உலக இலக்கியக் கலப்புகளாலும் அரசியல் தேவைகளாலும் ரசனை நகர்ச்சியினாலும் உண்டானவையாகும். இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் சிறுகதைகளுக்கான அழகியல் கூட உலக இலக்கியப் பரப்பில் பேசப்படும் பல நுண்தகவல்களின் திரட்டாக அமைந்ததுதான்.

பொதுவாக தமிழில் ‘விமர்சனம்’ என்னும் சொல்லும் ‘திறனாய்வு’ என்ற சொல்லும் ஒரே பொருளையே தருவதாக தெ.மதுசூதனன் ‘இலக்கிய திறனாய்வுக் கோட்பாடுகள் (பேரா. முனைவர் சபா. ஜெயராசா) என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் அவர், ‘திறனாய்வு’ என்ற சொல் கல்வியாளர்கள் மத்தியிலும், விமர்சனம் என்ற சொல் கல்வியாளர்கள் அல்லாத பிற நவீன எழுத்தாளர்கள் மத்தியிலும் அதிகமாக வழங்குகின்றன’ என்றும் கூறுகிறார்.

ஆனால் நடைமுறையில், விமர்சனம் என்பது ஒரு படைப்பு குறித்த மனம் சார்ந்த கருத்துகளை முன்வைப்பதாயும் திறனாய்வு என்பது அறிவின் (ஆய்வின்) முடிவில் வெளிப்படும் கருத்துகள் என்பதாயும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் திரைப்படங்களை நாம் விமர்சனம் மட்டுமே செய்கிறோம். அவற்றைத் திறனாய்வு செய்வதில்லை. காரணம் திரைப்படம் என்னும் கலைப்படைப்பை, ஒரு பார்வையாளன் தன் மன ரசிப்புக்கு உட்பட்டு ஒரு கருத்தை முன்வைக்கவே விரும்புவான். ஆயினும் ஒரு திரைத்துறை மாணவன் தன் ஆய்வுக்காகச் சில படங்களைப் பார்த்து சில ஆய்வுகளைச் செய்து தன் திறனாய்வு முடிவுகளை முன்வைக்க முயல்வான்.

இலக்கியத்திலும் நாம் இந்தப் புரிதலோடு ‘விமர்சனங்களை’ எழுத முடிந்தால் அது பலவழிகளிலும் ஆக்ககரமாக இருக்கும் என்று கூறலாம். ஆய்வு என்பது ஆய்வுக் கொள்கைகளுக்கு உட்பட்ட அறிவியல் வழிமுறை என்பதால் அதன் முடிவுகள் மேலும் நம்பகத்தன்மையும், புதிய வழிகாட்டல்களையும் கொண்டிருக்கும். ஆகவே அதை தனிமனிதத் தாக்குதல் என்றோ, உள்நோக்கம் கொண்டது என்றோ குற்றம்சாட்ட முடியாது.

ஆயினும் விமர்சனம் எழுதுவது போன்று ஒரு திறனாய்வை சுலபத்தில் எழுதிவிட முடியாது. அதற்கான உழைப்பும் காலமும் அதிகமாகும். ஒரு உயர்கல்வி மாணவன் கடுமையாக உழைத்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு ஆய்வை முடிக்க முடிகிறது. ஆகவே ஒவ்வொரு விமர்சகரும் ஒரு விமர்சனம் எழுதும்போது ஒரு முழுமையான ஆய்வாக அதை எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது எதார்த்தத்திற்கு எதிரானதாகும்.

ஆகவே, விமர்சனங்கள், ஆய்வுத் தரத்தோடும் ஆக்கபூர்வமாகவும் இருக்க அதன் மொழிநடையை மிகவும் கவனமாகக் கையாளவேண்டியது அவசியம் என்று கூறலாம். ஆய்வுக்கென்று ஒரு மொழிநடை உள்ளது. அது கறாரான சொற்களையும் பொருத்தமான கலைச்சொற்களையும் கொண்டிருக்கவேண்டும். கிண்டல் மொழியும் நையாண்டியான சொல்லாடல்களும் சிலேடைகளும் திறனாய்வுகளுக்குப் பொருத்தமானவை அல்ல. அவை அடுத்தவரை சிறுமைப்படுத்தும் வேலையை மட்டுமே செய்யும். அதோடு அதுபோன்ற மொழிநடை, பிரதியை ஆய்வு செய்யும் எல்லைகளைக் கடந்து படைப்பாளியை தனிப்பட்ட முறையில் தாக்குவதாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். விமர்சனங்கள் பொதுவாக எதிரான விளைவுகளைக் கொடுப்பதன் காரணங்களில் மிக முக்கியமானது அந்த உரைநடையின் தன்மைதான் என்று துணிந்து கூறலாம்.

விமர்சனம் என்பது படைப்பாளிக்கும் வாசகனுக்கும் புதிய வெளிச்சங்களைக் காட்டும் பெரும்பொறுப்புள்ள பணியாகும். ஆகவே அதை மிகக் கவனமாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எந்த எழுத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வாசகனை விமர்சகன் தயார்செய்ய வேண்டும். படைப்புகளை நிராகரிக்கக் கோரும் வெறுப்பரசியலை வாசகனிடம் வளர்க்கக்கூடாது. எது நல்ல இலக்கியம் எது போலி இலக்கியம் என்னும் புரிதலை வாசகனிடம் வளர்ப்பதே இன்றைய விமர்சனங்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. சிறந்த விமர்சனங்களை வாசித்துப் பழகும் வாசகன் தானே சுயமாக நல்ல இலக்கியங்களை மதிப்பிடக் கற்றுக் கொள்கிறான். அதே போல் நல்ல திறனாய்வுகளை வாசிக்கும் படைப்பாளி சிறந்த எழுத்துக்கான கூறுகளை தானே கற்றுக் கொள்கின்றான்.

முடிவாக, விமர்சனம் என்பதை மேலெழும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக கையாள்வதால் இலக்கியப் பரப்பில் யாதொரு நன்மையும் ஏற்படாது. மாறாக விமர்சனம் என்பதே பூசலுக்கான முகாந்திரமாகவும் சாடலுக்கான மேடையாகவும் மாறிவிட்டிருப்பது வேதனைதான். அதோடு விமர்சனம் எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருப்போரை முடக்கிப்போடும் ஆயுதமாகவும் செயல்படக்கூடாது. எழுத்தாளர்களின் படைப்பு என்பது ‘வகுப்புக்குள் பிரம்புடன் நுழையும் ஆசிரியரின் குரலாக இருக்கக்கூடாது’ என்பது உடன்பாடானதே. அதேநேரம் விமர்சகர்களின் வேலை ‘ஆசிரியர்களுக்குப் பணிமதிப்பீட்டுப் புள்ளிகள் போட்டு மட்டுப்படுத்தும் தலைமையாசிரியர்கள்’ போலவும் இருக்கக்கூடாது. ஆகவே, விமர்சனங்களை எழுதுவோர் புதியவர்களை  சிறந்த இலக்கிய நுகர்ச்சி மிக்கவர்களாக மாற்றும் கடமையை கொண்டுள்ளனர் என்பதை முற்றிலும் உணர்ந்து பொருத்தமான மொழியைப் பயன்படுத்தி எழுதுதல் மிகச்சிறந்த வழியாகும்.

படைப்பாளிகளும் தொட்டாச்சிணுங்கி போல் சின்ன குறைகூறல்களுக்கும் மனம் வெதும்பி நிற்காமல் புதிய தேடல்களை நோக்கி நகரவேண்டியுள்ளது. படைப்பாளிகள் விமர்சனங்களை தங்கள் படைப்பு குறித்த உரையாடல் களமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். உரையாடல் இல்லாத படைப்புகளால் யாருக்கும் பயன் இல்லை. அவை அலங்காரப் பதுமைகள் போல் இருக்க மட்டுமே லாயக்கானவை. படைப்புகளை மேலும் நுணுக்கமாகக் கவனிக்கவும் புரிதலை வளர்த்துக் கொள்ளவும் விமர்சனங்கள் தேவையாகின்றன. விமர்சனம், பிரதிக்கும் வாசகனுக்கும் இடையில் செயல்படும் நுட்பமான பாலமாகும். பாலங்களைச் சபித்துக் கொண்டிருந்தால் அக்கரைக்குச் செல்வதெப்படி?

 

2 comments for “விமர்சனங்களை விமர்சித்தல்

  1. ரவிசுப்பிரமணியன்
    October 8, 2016 at 4:23 pm

    படைப்பாளிகள் படிக்க வேண்டிய முக்கிய கட்டுரை

  2. Raj Sathya
    October 10, 2016 at 12:52 am

    It is not about comments or criticism it is the ridicule manner which he applied to the Singapore writers namely Mr.Kannabiran and some others.It was the old Indian India Tamil writers attitude to mock and attack Malaysian and Singapore writers but surprise to see this ugly attitude still lives in them – Mr. Jaya Mogan in particular.This great post modernism( pin naveenathuvam) writer proven I was right when I think back of the attitude of Mr.Sundra Ramasamy when he visited Singapore in the early 90s refuse to participate in the dialogue when he is suppose talk on the topic that was given to him.In an interview with late Jayaganthan he was surprised that there are Tamil writers in Malaysia???? It is ridiculous to to compare our 50 years or so development to 2000 years old Tamil development of your country, this is absurd. Relatively there is an argument – Post modernism is dead ( PIN NAVEENATHUVAM KALAVATHI AGI VITTATHU) We have entered into the age of Post- Post Modernism text. ( Pin Pin Naveenathuvam) Can I expect some thing better from these genius as am ready to learn and am prepared to be taught too!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...