என் பார்வையில் ‘தங்க ஒரு . . . ’

uthayakumariவல்லினம் குழுவின் சிறுகதை கலந்துரையாடல் என்ற புலனக்குழுவில்    பகிரப்பட்ட கதைகளில் என் மனத்தை வெகுவாய் கவர்ந்த கதையாய் அமைந்தது ‘கிருஷ்ணன் நம்பி’ எனும் எழுத்தாளர் எழுதிய ‘தங்க ஒரு’ எனும் கதை. மாய எதார்த்த வடிவில் இக்கதை எழுதப்பட்டுள்ளது.

கதைசொல்லி தன் மனைவிக்கு எழுதும் கடிதம் மூலம் தொடங்குகிறது.

நகரத்தில் தங்குவதற்கு ஒரு நல்லவீடு தேடி அலைகிறான் அவன். தேனாம்பேட்டையின் அசுத்தமான சந்து வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு வேப்பமரத்தினடியில் ஒரு ஜோடி பூட்சிலிருந்து புகையும், தண்ணீரும் வருவதைக் கண்டு, ஆச்சரியத்தோடு அருகில் போய் குனிந்து பார்க்கிறான். இவனது நிழல் பட்டதும், அந்தப் பூட்சுக்குள்ளிருந்து ஒரு சிறியமனிதன் வெளியே வருகிறான். தான், தன் மனைவி, தம் குழந்தைகள் என ஐவர் அந்தப் பூட்சுக்குள் உள்ள வீட்டில் வசிப்பதாய்ச் சொல்கிறான். அந்தச் சிறிய மனிதனுடனான உரையாடல் நீள்கிறது. மிகச்சிறிய வீட்டில் தங்களைக் குறுக்கிக்கொண்டு வசிக்க தொடங்கியதில் உடலும் குறுகி, அவ்வாறு ஆகிவிட்டதாய் அந்தச் சிறிய மனிதன் சொல்கிறான்.

அவனுடனான தன் உரையாடலை தன் மனைவி செல்லாவிடம் கடிதம் வாயிலாகச் சொல்பவன், அந்தக் குள்ளமனிதனைக் காட்டிலும் தாங்கள் அதிர்ஷ்டசாலிதானே என்ற தனது கருத்தையும் வைத்து அக்கடிதத்தை முடிக்கிறான்.

இக்கதை, நகரத்தில் வசிக்க நேர்பவன் நகரத்து வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அவலங்களையும், கற்பனைக்கு எதிர்மாறாக அவனது முகத்தில் அறையும் நிஜத்தையும் கருவாகக் கொண்டிருக்கிறது. நெருக்கித்தள்ளும் பட்டணத்து வாழ்க்கையில் மனிதர்கள் எவ்வாறு தங்கள் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழநேர்கிறது. அவ்வாறு சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் கூடத் தேவைகளும், நெருக்கடிகளும் இன்னும் அதிகமாகி அவர்களின் சுயத்தை உருக்குலைத்துக்கொண்டே போகிறது என்பதைதான் கதாசிரியர் காட்டியுள்ளார்.

அந்த நெருக்கடியான வாழ்க்கையை வெறுமனே வார்த்தையில் வடிக்கும்போது அது பிரச்சாரத்தன்மையைக் கொண்ட கதையாக அமைந்து வாசகனுக்குச் சலிப்பூட்டக்கூடும். மாறாக, அந்த அவலத்திற்கு ஒரு வடிவமாய் காலணிக்குள் ஒரு வசிப்பிடத்தை அமைத்து, சுருங்கிப் போன மனிதர்களை பாத்திரமாய் உலவவிட்டு கதையை நகர்த்திச்சென்றதில் சுவாரஸ்யம் கூடுகிறது.

கதைசொல்லி தன் மனைவியிடம் சொன்னதுபோல் நிஜமாகவே அந்தச் சம்பவங்கள் யாவும் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. கதைசொல்லி நேரில் பார்த்தவற்றை தன் மனைவி புரிந்துகொள்ளும் வகையில் ஒரு படிமத்தை உருவாக்கி, கடிதம் எழுதியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒருக்கால் அந்த பூட்சுக்குச் சொந்தக்காரன் வேறொருவனாக அல்லாமல் இவனாகவே இருந்திருக்கவும் கூடும். தன் மனைவியை இங்கு அழைத்துவந்து குடும்பம் நடத்தினால் பின்னாளில் அவர்களுக்கு என்ன நேரும் என்பதையே உடல் சிறுத்துப்போன போலிஸ்காரன் என்ற பிம்பத்தின் மூலம் உருவாக்கியிருக்கும் சாத்தியம் இருக்கிறதுதானே?

கனமான கருவைக்கொண்ட இக்கதையை எழுத்தாளர் சொல்லியிருக்கும் விதம் அலுப்பூட்டவில்லை. இக்கதையின் உரையாடல்கள் ரசனை நிறைந்ததாய் அமைந்திருப்பது விறுவிறுப்பைத் தருகிறது.

இக்கதைக்கு பெரும் பலம் அதன் வர்ணனை. நகரத்து வீதிகள், மனிதர்கள் நிறைந்திருக்கும் சந்துகள் அழுக்காய் இருப்பதைக்கூட முகம் சுளிக்கவைக்காது, புரிந்துகொள்ளும் வகையில் வர்ணிக்கப்படுகின்றன. உடல் சிறுத்துப்போன அந்த மனிதனின் தோற்றம் குறித்த வர்ணனை வலியையும் சுமந்தே வெளிப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...