ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்


kar1980-களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக்கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ.கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். முகவரி நூலில் இருந்தது. ஒரு புல்ஸ்கேப் தாளில் எழுதப்பட்ட என் பார்வையின் பதிவு அது. அதற்கு முன்னும் அதற்குச் சில ஆண்டுகள் கழித்தும் அவரைச் சந்த்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

‘வானத்து வேலிகள்’ நாவல் என்னை அக எழுச்சி பெறச்செய்த நூல். பிறநாவல்கள் வாசிப்புக்கான  நுழைவாயிலைத் திறந்து வைத்திருந்தது. என் முதிராப் பருவத்தில் என்னை வாசிப்பு இன்பத்தில் ஆழ்த்திய நூல். அந்நூலின் நிலக்காட்சிகளில் என் வாழ்க்கைப் பின்புலத்தை துல்லியமாய்ப் பார்த்தேன். அதில்  இருபது ஆண்டுகளாக நான் எதிர்கொண்ட கதை மாந்தர்கள்  உயிர்ப்போடு இருந்தார்கள். ரப்பர் மரக்காடு, கள்ளுக்கடை, மாரியம்மன் கோயில், லைன் வீடுகள், கிராணிகள், மண்டோர்கள், தோட்டக் கூலிகள், வெள்ளைக்காரத் துரை என, தோட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் இருந்தார்கள். இது என் அகத்துக்கு மிக நெருக்கமான வாழ்வனுபவத்தைச் நகல் எடுத்துக் கொடுத்திருந்த நாவல் என்பதால் அதனை நான் நெஞ்சார சுவீகரித்துக் கொண்டேன். நான் வாழ்ந்த தோட்டப்புறத்தில்  நான் பார்த்த முதலாளித்துவம, சுரண்டல், மிரட்டல், கூன்விழ அடி பணிதல், என எல்லா வகை வாழ்க்கை அவலங்கள் இருந்தாலும் அதில் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் உரிமைக்கு போராடும்  முக்கிய காதாபாத்திரமான நாயகனின் சித்திரம் என்னை கவர்ந்திழுத்திருந்தது. ஒரு தோட்டப் பாட்டாளியின் மகனாக நான் கடந்து வந்த கொத்தடிமை வாழ்க்கை இன்னல்களுக்கு ஒரு அகவய வடிகாலாக இந்நாவல் என்னைப் பெரிதும் ஆசுவாசப்படுத்தியிருந்தது. வாசிக்கும்போதே உணர்ச்சிக் கொந்தளிப்பைச் சீண்டுவதாக இருந்ததால் வாசித்துமுடித்த கையோடு அவருக்கு என் விமர்சனத்தை எழுதி அனுப்பியிருந்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு இலக்கிய விழாவில் நான் அவரைச் சந்திக்க நேர்கிறது. கொஞ்சம் தயங்கித் தயங்கி அவர்முன் போய் நின்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். “ஓ… புண்ணியவான் நீங்கள் என்நாவலைப் படித்துவிட்டு  எழுதிய கடிதத்தை வாசித்தேன். அக் கடிதத்தை இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டே என கைகளைக் குலுக்கினார். அந்த முதல் சந்திப்பிலேயே நான் அவருக்கு நெருக்கமாகிவிட்ட நட்பை அல்லது உறவை உணர்ந்தேன். நான் எழுத்துத் துறையில் அறிமுகமாகி ஓரிரு சிறுகதைகள் வெளியாகியிருந்த சமயம். அதனையும் அவர் குறிப்பிட்டுப் பேசியது புனைவாளன் என்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற திருப்தி அன்று எனக்கு.

“அங்கே என் சில நாவல்களை விற்பனைக்கு வைத்திருந்தேன். அவற்றுள் ஒரு நாவல் மட்டுமே விற்பனையாகியிருந்தது. யார் வாங்கியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உங்கள் கடிதத்தை வாசித்ததும்தான் தெரிந்து கொண்டேன்,” என்று சொல்லிப் புன்னகைத்தார். ரெ,காவை நான் பெரிய ஆளுமையாக மனதில் ஏற்றி வைத்திருந்த தருணம் அது. தமிழ் நேசனில் அவர் சிறுகதைகளை வாசித்து மகிழ்ந்ததில் உருவெடுத்த பிம்பம் அவருடையது. அவர் எழுத்தாளராக மட்டுமின்றி சிறந்த கதைகளைத் தேர்வு செய்யும் நீதிபதியாகவும் பணியாற்றியதாலும், பலக்லைக்கழகப் பேராசிரியர் என்பதாலும் அப்பிம்பம் மேலும் பெரிதாக உருவெடுத்திருந்த காலம் அது. இவ்வளவு  பெரிய மனிதர், நான் நெருங்கவே சுணங்கும் அளவுக்கு இருக்கும் கல்விமான், முதல் சந்திப்பிலேயே கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் ‘ஒரே ஒரு நூல்தான் விற்றது’ என்று மறைக்காமல் உள்ளதைச் சொல்லும்போது ஒரு திறந்தமனம் கொண்ட எழுத்தாளனை அறிமுகமாக்கிக் கொண்ட  பெருமை என்னுள் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது.

நான் கார்த்திகேசுபோல எழுத்துத் துறையில் வளர்ந்த பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம் அவரின் எழுத்தும், பண்பும், நேரடித் தன்மையும் என்னை ஆளாக்கிய வண்ணம் இருந்தது.

பின்னர் சிலகாலம் கழித்து அவருடைய கட்டுரை ஒன்றில் என் படைப்புப் பற்றி எழுதிய ஒரு வாக்கியம் என்னை இன்றுவரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மலேசியச் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு ஆய்வேடு அது. அதனை அவருடைய ’‘மலேசியாவிலிருந்து ரெ.கா’ என்ற வலைத் தளத்தில் வாசிக்கலாம். தொன்னூறுகளின் இறுதியில் எழுதப்பட்ட கட்டுரை. அதில் “கடந்த பத்தாண்டுகளில் சிறுகதை வடிவத்தை படித்துப் புரிந்துகொண்டு நல்ல சிறுகதைகளைத் தந்து கொண்டிருக்கும் புண்ணியவானைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்” என்பதே அந்த வாய்மொழி. நான் மனதிலேற்றிப் போற்றும் ஓர் ஆளுமை என் வளர்ச்சியைப் பதிவு செய்யும் பேறு எத்தனைப் பேருக்குக் கிட்டும்? அவ்வார்த்தைகள் என்னை, மேல் நோக்கி எரியும்  தீக்கொழுந்துபோல வளர்த்துக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு என் எழுத்தின் சூடும் தாக்கமும் அவர் என்னைச் சுவீகரித்துக் கொண்டதால் உண்டானதே. அதன்பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் என்னை அவர்பால் மேலும் நெருங்க வைத்தது. எப்போதுமே மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்சிதை மாற்றங்கள் குறித்த நுண்ணிய பார்வை அவரிடம் இருந்தது. ஒருமுறை ‘கெடாவிலிருந்து எழுதும் இந்தப்பையன் சிறுகதைத் துறையில் நல்லா வருவான்’ என்ற அபிப்பிராயத்தை முன்வைத்தார். அந்தப் பையனின் சிறுகதையைத் தேடிப் படித்தபோது அவர் சொன்னதில் உண்மை இருந்ததை உணர்ந்தேன்.. அந்தப் பையன் பின்னாளில் அவரை மோசமாக விமர்சித்து எழுதியதால் இப்போதைக்கு அந்தப் பையனின் பேர் எழுதுவதைத் தவிர்த்துவிடுகிறேன்.. அவர் குறிப்பிட்ட சிலர் இன்றைக்கு தேர்ந்த எழுத்தாளர்களாக வளர்ந்திருக்கிறார்கள். மலேசிய இலக்கிய வளர்ச்சி குறித்த அவரின் நுணுக்கப்பார்வையைச் சொல்லவே இந்த எடுத்துக்காட்டு.

அவர் பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு புலம் பெயர்ந்த தகவல் எனக்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் தெரிய வந்தது. அநத  இடப் பெயர்வு என்னை சற்றே ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருந்தது. என் கட்டுரை ஒன்றில் நான் அதனைப் பதிவு செய்தேன். பினாங்கு யவ்வனம் மிக்க ஓர் ஊர். கடலின் நீல அலைகளையும்,  மலைகளின் பச்சை விதானத்தையும், பட்டணத்தின் புராதன கட்டமைப்பையும், நவீன நகர்மயமாதலையும், நெரிசலற்ற வீதிகளையும் விட்டுவிட்டு அவர் ஏன் செல்லவேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இலக்கிய வளர்ச்சிக்கு வட மாநிலம் ஓர் தனித்த இலக்கிய அடையாளத்தை இழந்த வருத்தத்தை  அக்கட்டுரையில் மறைமுகமாகத் திணித்திருந்தேன். கெடா பினாங்கு மாநிலங்களின் இலக்கியச் செயல்பாடுகளில் ரெகாவின் அருகாமை  தைரியத்தைக்  கொடுக்கும். ஓர் எழுத்துப் பிரபலத்தை இலக்கியக்கூட்டங்களில் முதல் நாற்காலியில் அமர வைப்பதில் எங்கள் அமைப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை இழந்த பரிதவிப்பை நான் உணர்ந்ததால் அந்தக்கட்டுரையை வரைந்தேன். பின்னர் அவரின் புலம்பெயர் நோக்கம் அறிந்ததும் வியப்புதான் மேலிட்டது.

நான் கைகளால் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என்னிடம் சிலமுறை சொல்லிப் பார்த்து சலித்துப்போன சம்பவம் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். “நீங்கள் கணினியில் எழுதலாமே. ஏன் இன்னும் வலிக்க வலிக்க கைகளால் எழுதுகிறீர்கள்?” என்று என்னைச் சந்திக்கும்போதெல்லாம்  அறிவுறுத்தி வந்தார். அந்த மடைமாற்றம் மனதளவிலும் நிகழவே இல்லை. கணினி ஒரு அதிநவீன இயந்திரம் அது புதுயுக மனிதர்க்கு மட்டுமேயானது என்ற குறுகிய அபிப்பிராயம் என்னை அதன் பால் ஈர்க்கவில்லை. ஆனால் அவர் விடாப்பிடியாய் வற்புறுத்திவந்தார். இதனை ஏன் என்னிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும்?. என் எழுத்து உற்பத்தி மீதான சிறப்பு அக்கறையின்றி வேறில்லை இந்த வலியுறுத்தல். அவர் கணினி பாவித்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்தே ஆமையாய் நகர்ந்து என் மாற்றத்தை நிகழ்த்துகிறேன். அதற்குப் பிறகுதான் நான் ஒரு பந்தயக் குதிரையாக மாறினேன். என் படைப்பில் செம்மையும் சீர்மையும் கணினி மூலமே நிகழ்ந்தது. இதற்கு எப்படி இனி அவரிடம் நன்றி சொல்வேன்?

ஆகக் கடைசியாக அவரோடு பேசியது அவர் மறைவுக்கு மூன்று மாதத்துக்கு முன்னர். அவர் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அவருக்குத் தொந்தரவு தரக்கூடாது என்று என்னைத் தணிய வைத்துக்கொண்டிருந்தேன். ஆறு மாதத்துக்கு முன்னரே தன் நோய்மை பற்றி அவர்தான் சொன்னார். எப்போதும் போலவே, “நலமா டாக்டர்?” என்றே உரையாடலைத் துவங்கினேன் அன்றும். “இல்லைங்க புண்ணியவான் உடல் அவ்ளோ நல்லால்ல!” என்றார். “என்ன ஆச்சு டாக்டர்?’ என்றேன். “வயித்தில ஆப்ரேஷன். இப்போ ஆஸ்பிட்டல்லதான் இருக்கேன்,” என்றார். வயிற்றில் ஆப்ரேஷன் என்றவுடன் என் குடல் அதிர்ந்தது. நான் அதற்குமேல விசாரிக்க துணிவற்று. “ஒடம்ப பாத்த்துக்கோங்க, டாக்டர்,” என்றேன். “வயசாயிடுச்சு புண்ணியவான்,” என்றார். அவ்வார்த்தை சற்றே அவநம்பிக்கை விளிம்பின் குரலாய் ஒலிக்க நான்மேலும் உரையாடலை நீட்டிக்க அஞ்சினேன். “யாருக்கும் தெரியவேணாம் புண்ணியவான்“ என்று மென்மையான ஒரு கட்டளையையும் பிறப்பித்தார்.  நம்மில் பலருக்கு நோயாளியை ஆசுவாசப்படுத்த சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. மாறாக நோய்மை அவர்களை மேலும் பாதிக்கும் வண்ணம், முகத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி, கண்ணீர் சொரிந்து, எதிர்மறையாகப் பேசிவிட்டு வந்து விடுகிறோம் .அவ்வார்த்தைகளின் மனப் பாதிப்பால் நோய் மேலும் சீற்றங்கொள்ளும். அதனை அவர் தவிர்க்கவே அக்கட்டளை என்று நம்பினேன். அதற்குப் பிறகு அவரிடம் பேசத் துணிவற்று இருந்தேன். அந்திமக் காலத்தில் கொடிய நோய் தாக்கிய ஒருவருக்கு ஆறுதல் சொல்வதன் போலித்தனத்தை என்னால் செய்யமுடியவில்லை. என்னிடம் அதற்கான வார்த்தைகள் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருப்பதை பல தருணங்களில் உணர்ந்தும் இருக்கிறேன். இந்த ஆண்டு (2016) மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை நாவல் கருத்தரங்கில் அவர் கலந்து கொள்ள இயலாமையை நினைத்து என் மனம் துணுக்குற்றது. பின்னர் ராஜேந்திரன், அவரின் நோய் சீற்றம் கண்டதைச் சொன்னபோது நான் அதிர்ந்தேன்.

மலேசிய இலக்கிய வளர்ச்சி குறித்து அவருடைய முனைப்புகளுக்கு நாம் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர் ஒரு படைப்பிலக்கியவாதியாக, விமர்சகராக, நடுவராக சளைக்காமல் பணியாற்றிய காலம் 60 ஆண்டுகளைத் தொடும். இதற்காக அவர் கைகள் நோக நோக எழுதிய சொற்களின் எண்ணிக்கையை எண்ணி முடித்துவிட முடியுமா?. மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் யாரும் நெருங்கிவிட முடியாத சொற்களின் தொகை அவை. ஒரு பேராசிரியராகத் தன்னை உயர்த்திக் கொண்ட, தமிழ் இலக்கியத்துக்காகத் தன்னை இடைவிடாமல் அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தன்னை முழுவதுமாய் அர்ப்பணிக்கவே அவர் பினாங்கிகிருந்து கோலாலம்பூருக்குப் புலம் பெயர்ந்தார். அவர் ஓய்வு பெற்றதும் சிங்கைப் பலகலைக்கழகம் அவரை வேலைக்கு அழைத்தும் அவர் போக மறுத்ததற்கு ஒரே காரணமும் மலேசிய இலக்கிய மேம்பாட்டுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவே என்பதைக் கேள்விப்படும்போதே அவரின் இழப்பு உள்ளபடியே ஈடுகட்ட முடியாத ஒன்றுதான் என்று நிஜத்தை உணர வைக்கிறது.

 

2 கருத்துகள் for “ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்

 1. Raj Sathya
  November 3, 2016 at 11:54 pm

  Thank you sir for your write up on Dr.Re.Ka. The great man who started his career in RTM had his fair contribution towards Malaysia n Tamil Writings.KATHALINAL ALLA was one of my favorites as the story takes a reader to the campus in USM; Dr.Re.Ka. was not spared from criticism by certain groups, this is because of his association with Tamil Writers Association.Nevertheless this humble man never openly ridicule anyone instead he appreciated and encouraged many including the writings of the SMALL boy of Kedah. However that Kedah Boy or the present Vallinam boy had his principles too!

 2. VIJAYALATCHUMY
  November 7, 2016 at 12:48 am

  Tamil literary criticism in Malaysia until now praise and petting all kinds of writing. As a result we can see from the quality of the literary works.
  All kinds of criticism in literature should be viewed from the context of a critique towards the literary works. Seeing criticisms as a personal attack is a shallow thought.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...