கல்லறை

ooo0சின்னச் சின்ன மனிதக் கூடுகள் நிறைந்த காங்கிரீட் அடுக்குகள்.  இருபது அடுக்குகளுக்குள் நூற்றுக்கும் குறையாத பத்துக்குப் பதினைந்து கூடுகள். மனிதப் புழக்கத்திற்கும் குறைந்தபட்ச இடைவெளிக்கும் சாத்தியப்படாத நெரிசல். அது அது, அதனதன் கூட்டுக்குள் முடங்கி, நொந்து நூலாகிக் கிடக்கும் வானந்துச் சிறை அது. தரையில், மண்ணோடு கலந்து வாழும் சுகத்தை  இழந்த மானுடப்பறவைகளின், சோகம் இழையும் பெருமூச்சு. நான்கு பக்கமும் எழும்பி நிற்கும் காங்கிரீட்  சுவர்களில் மோதி, வான்வெளி  எங்கும் எதிரொலிக்க, நிரந்தமாகிவிட்ட துயரம்.

அவர்களுள் அவளும் ஒருத்தியாகி நேற்றோடு, ஒருவருடம். முதல் தளத்தில், வலது பக்கம் திரும்ப, கடைசிக்கு இரண்டாவது கூடு அவளுடையது. மின் தூக்கிக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், நான்கு எட்டில் படிகளில் ஏறி, ஏறக்குறைய பத்துக் கூடுகளாவது கடந்துதான், அவளது கூட்டுக்குப் போக வேண்டும். போகும் வழியில், அபூர்வமாய்த் திறந்துகிடக்கும், ஏதேனும் ஒரு கூடு.

அவள், தனது வீட்டுச் சுவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரிட்டு அடையாளப்படுத்தியிருந்தாள். கிழக்குச் சுவரைச் சேரன் என்பாள், மேற்கு சோழன், வடக்கும் தெற்கும் முறையே சீசர், சர்ச்சில். அவற்றோடு  உரையாடுவதற்கு ஒரு மனித முகம் தேவைப்பட்டபோது, அவள் அங்கீகரித்திருந்த  பெயர்கள் அவை. அதுவும், தனது மன ஆதங்கத்தைப் புரிந்து, நியாயம் சார்ந்து பேசக்கூடிய மனோதிடம் மிக்க ஆண் மக்களாய் அவர்கள் இருத்தல் அவசியம் என்கிற பிடிவாதத்தில் விளைந்த பெயர்கள். மீசை முளைத்தவர்கள் எல்லாம் ஆண்மகன் என்கிற கருத்தியலில், அவளுக்குத் தளர்வு உண்டாகி நாளாகிறது.

கொஞ்ச காலத்திற்கு முன்புவரை, அவளுக்கு இந்தச் சுவர்களும் பல்லிகளும், அதில் பறந்து திரியும் கரப்பான்களும் மழைக்காலத்தில் படை திரண்டு வந்து மின் விளக்கை மொய்க்கும் ஈசல்களும், அந்நியமான வஸ்துக்களாக  விலகி இருந்தன என்று சொன்னால் நம்புதவற்குச் சிரமம்தான்.

துணைக்கிருந்த கருப்புப் பூனை போதுமானதாக இருந்தது, அவளது தினப்படி இருப்புக்கு – அடர்ந்த நீள முடியில், கறுமையும் திட்டுத்  திட்டான வெண்மையும் கலந்த கலவையில், வாலின் அடி தொடங்கி நுனிவரை கூடுதலான அடர்த்தி. இருளை ஊடுருவும் வெளிச்சத்தில், மினுங்கும் கண்கள் கால்களின் அடிப்பாகமும் நாக்கும்- மென் சிவப்பில் மெத்தென்று. நாட்டுப்பூனைதான். ஆனாலும், ஜாதிப் பூனைகளின் தன்னம்பிக்கையுடன் மிடுக்கும் அழகும் தூக்கலாய் இருந்தது.

அதன் படுக்கை என்பது, அவளது மடிதான். அவளது உடல் சூடு கொடுக்கும் கதகதப்பில், சுருண்டு கிடந்து அவள் பேசுவதைக் கேட்டிருக்கும். மிகவும் சுவாரசியமான உரையாடலின்போது, காது மடல்கள் விரிந்து நிமிர, உன்னிப்பாய்க் கேட்டிருக்கும். அவளது குரல்வளையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கவனமுடன் குறித்துக்கொண்டு, அதன் பின்னனியில் செயற்படும் உணர்வுக் கூறுகளைத் துல்லியமாய்ப் பிரித்தறிய, அது கற்றிருந்தது. அவளது நீண்ட உரையாடலின்பால் தனக்குண்டான புரிதலை, அவளுக்கு உணர்த்தும் சின்னச் சின்ன முக அசைவுகளை, குரளசைவுகளை வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஒருநாள், வெளியில் உலவப்போன பூனை, பின்னிரவு தாண்டியும் வராமல் போக, அவள் பதற்றத்துடன் வாசலில் உட்கார்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு குரலுக்குப் பின்னும் இடைவெளி விட்டு, இருளில் ஏதெனுமொரு இடுக்கிலிருந்து வரப்போகும், மியாவ் எனும் பதிலுக்காகக் கலக்கத்துடன் காத்திருந்தாள். நிசப்தம்  நிறைந்த இடைவெளியை நிரப்பும் மறுகுரல், எதிர்முனையிலிருந்து கடைசிவரை  வராமலே போனது.

ஒரு நல்ல மழை  இரவில்தான், மீண்டும்  ஒரு குரல் – அவளுக்கு மிகவும் பிடித்த அந்தக் குரல், அவளை ஆகர்ஷித்தது. படுக்கைக்குள் போர்வையின் அரவணைப்பில் முடங்கிக் கிடந்தவனின் காதுகளில், பச்சிளங்குழந்தையின் அழுகுரலாய்க் கேட்டது. மழையில் தொப்புர நனைந்திருக்க வேண்டும். உடலின் வெடவெடப்பு குரலிலும் தொக்கி, பிசிறு தட்டி வந்தது.

பத்துப் பதினைந்து நாள் குட்டியாக இருக்கலாம். கண்கள் திறந்திருக்குமா என்பது தெரியவில்லை. அம்மாவின்  மார்க்காம்பை, தட்டுத்தடுமாறி  தேடிப் பிடித்து, பால் குடித்திருக்கும்போது, பிடுங்கி வந்திருக்கலாம். வளரவிட்டால், நாளை இதைத் தேடிக்கொண்டு நாலைந்து ஆண் பூனைகள் நடுச்சாமம் தாண்டியும், கூரை மேல் அதம் பண்ணி, காமக்குரல் கொடுத்து தூக்கத்தைக் கலைக்கலாம், என்கிற மனக்கணக்குக் காரணமாய் இருந்திருக்கும். ஏனிந்த வேண்டாத வம்பு என்று, பிளாஸ்டிக் பையில் திணித்துப் போகிற போக்கில், அல்லூர் பார்த்து வீசிப் போயிருப்பான், வளர்ந்தவன்.

கிழக்குப் பார்த்த சன்னலண்டை நின்று, உற்றுக்கேட்க, கீழே, அல்லூரில் சுழன்று ஓடும் நீரின் ஓசை காதை அடைத்தது. நகர்ந்து, விளக்கைப் போட்டாள். அவன் முணுமுணுப்புடன் போர்வையை விலக்கி, வெளிச்சத்தில் கூசும் கண்களை, புறங்கையால் மறைத்து, அவளைப் பார்த்து முறைத்தான்.

சட்டை செய்யாமல், சன்னலைப் பார்த்து நகர்ந்தவளைப் பார்த்துக் கத்தினான் – “ஒனக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு? ஒரு சனியன் இப்பதான் தொலஞ்சிச்சு…. அதுக்குள்ள இன்னொன்னா? எனக்கு இந்தச் சனியங்க ஒத்துவராதுன்னு தெரியுமில்ல!”

அவள் ஜன்னலைத் திறந்து குரல் வந்த திக்கை இருளுக்குள் துழாவி, திரும்பிக் கத்தினாள் – “ஒனக்கென்ன? பொழுது விடிஞ்சா போற, எல்லாம் அடங்கனப்புறம் வர்ர… இந்தச் சொவத்த பார்த்துகிட்டு; பொழுதன்னைக்கும் இருந்து பாரு…. நரகன்னா என்னானு புரியும்… எனக்குன்னு இந்த வீட்டுல யாரு இருக்கா சொல்லு.”

அவன் போர்வையை மீண்டும் தலையோடு இழுத்து மூடி, மௌனமாய் முடங்கிப்போனான்.

அவனை முடக்கிப் போட்ட திருப்தியுடன் திரும்பி, ஜன்னலை அகலத் திறந்துவைத்தாள். நாலா பக்கமும் பார்வையை ஓடவிட வசதியாய் இருந்தது. சாலையோர விளக்குக் கம்பங்களிலிருந்து ஒளிப் பாய்ச்சல் விரவிக் கிடந்தது. அல்லூரில் மழைநீர், கூடுதல் அழுத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.

அவள் விடாப்பிடியாய் ஜன்னல் கம்பிகளை இறுகப்பற்றி, இருளைத் துழாவி நின்றிருந்தாள். இன்னமும் நம்பிக்கையோடு  இருப்பது போல இருந்தது. காது மடல்கள் கூர்மைப்பட்டு, சடசடக்கும் மழை இரைச்சலின் ஊடாய், அமுக்கி வரும் அழுகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம், பின்னிரவின் மழை நாள் இருள் மண்டிக் கிடந்தது.

முதல் முறையாய், அவள் இருளைக் கண்டு பயந்தாள்.

இருள் என்பது சமீப காலத்தில், அவளோடு ஐக்கியமாகிவிட்ட ஒரு வஸ்து. அவள் முழு மனத்துடன் அங்கிகரீத்துத் தனது இருப்பு வளையத்துள் அனுமதித்துவிட்ட பாதுகாவலன். நீரில் மீனாய் இருளுள் நீந்திக் கிடந்தவளுக்கு – இருளின் பயம் ஏதுமில்லாமல் இருந்தது.

ஆனால், இந்த மழைநாள் இருள், புதிய பரிமாணத்துடன் வானளவு உயர்ந்து, அண்டத்தை அடைத்து நின்று பயமுறுத்தியது. வினாடிப் பொழுதில், தானே அந்த நித்திய அந்தகாரத்துள் சன்னஞ் சன்னமாய் உறிஞ்சப்பட்டு- நிர்மூலமாகிப்போன உணர்வில் உறைந்துப்போனாள்.

தன்னைக் கண்டு  நடுங்கி  நிற்பவளை, திரும்பிப் பார்த்துச் சிரித்தது மழைநாள் இருள்.

ரசிப்பதற்கு லாயக்கில்லாமல் போய்விட்ட முகம். பருத்து கறுத்துத் தொய்ந்து கிடக்கும் கன்னக் கதுப்புகள். அதில் புதைந்து மரணித்த கண்கள். தாடை, எலும்புகள் மறைய, தொண்டைக் குழிவரை பிதுங்கி ஆடும் சதைக்கூட்டம். சிக்கலும், சிடுக்குமாய், எண்ணெய் பாராமல் பின்னிக்கிடக்கும் கூந்தல்.

குளிர்நீரை முகத்தில் சலம்ப அடித்து, துடைத்து ஒத்தி எடுத்துப் பூசிய பவுடர். முக வெறுமையைக் கொஞ்சமேனும் குறைத்திருக்கலாம். இருப்பது தெரியாத அளவிலான லிப்ஸ்டிக் பூச்சு சிறிது, துணைக்குச் சின்னதாய் ஒரு குங்குமப்பொட்டுக்கூட இருந்திருக்கலாம். ஆடைகளைத் தினமும் மாற்றினாலும், தோற்றத்தில் ஏதேனும் வித்தியாசம் பளிச்சிடலாம்.

இன்றைய நிலவரத்தில், ஒரு நூறு கிலோ அசைந்து நகரும் மாமிச மலை அவள். ஐந்தரை அடி உயரத்தில், குறுக்கு விட்டம், இரண்டடிக்கும் குறையாமல், அதீத மாமிச சதைக் கூட்டணியின் சுமை தாளாமல், பக்கவாட்டில் வளைந்திருக்கும் பாதங்கள்.

தனது பொழுதின் பெரும்பகுதியை டெலிவிஷன் பெட்டி முன்பே கழிக்கிறாள். பருத்த உடம்பைச் சிரமத்துடன் தரையில் கிடத்தி, கால்களை நீட்டிப்போட்டு, தலைக்குத் தலையணை முட்டுக் கொடுக்க தனது தனிமை தந்த சுதந்திர உணர்வில், சில பொழுது விலகிய ஆடைகளும் ஒரு பெருட்டாக இல்லாமல் போனது, அவளுக்கு.

சாப்பாட்டு மேசையில் சிதறிக் கிடக்கின்றன, காலையோ மதியமோ இரவோ உணவுண்டு, மீந்த கழிவுகள், சில கோழி எலும்புத் துண்டுகள். தலையுடன் கூடிய  மீன் முட்கள். உலர்ந்த ஆரஞ்சுத் தோல்கள். ரொட்டித் துண்டுகள். இறைந்து கிடக்கும் சோற்றுப் பருக்கைகளைச் சுமந்து, மேசைக்கால்களில் ஊர்ந்து இறங்கும் எறும்புக் கூட்டம். உணவுப் பருக்கையைத் தேடி, சுவரை  விட்டிறங்கித் தரைக்கு வந்திருக்கும் பல்லிகள். அவனோடு ஒரு நள்ளிரவில் நடந்த யுத்தத்திற்குப் பின், அவள் ஆக்ரோஷமாய் அறைந்து சாத்திய கதவின் இடுக்கில் சிக்கித் துண்டித்துப்போன வால், இன்னமும் முழுமையாய் வளராமல், மொட்டையாய்ப் பல்லி ஒன்றும், அவற்றின் நடுவே.

பகலிலேயே குப்பைக் கூடையை அலசிக்கொண்டிருக்கும் எலிக் கூட்டம். மாதக் கணக்கில் திறக்கப்படாமலே கிடக்கும் மேசை டிராயரிலிருந்து வரும், எலிக் குஞ்சிகளின் முனகல். துணிக்கொடிகளில் உலர்ந்துக்கொண்டிருக்கும் அவனது வேலை இடத்துச் சட்டையும் சிலுவாரும். வேலைக்குப் புறப்படும் முன் அவனே அலசிப்போட்டுப்போனவை. காற்றுக்கு உதிர்ந்து கேட்பாரற்றுத் தரையில் கிடக்கும் அவளது ரவிக்கை ஒன்று.

சில பொழுதுகளில், சுயநினைவு தப்பிய நிலையில், அவள் பெரும் குரலெடுத்துக் கத்த, அச்சூழலில் அனைத்து இயக்கங்களும் தற்காலிகமாய்ப் பின்னகர்ந்து, அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து மௌன அஞ்சலி செலுத்தும்.

மேசை டிராயருக்குள் அமைதி நிலவும். பல்லிகள் சுவருக்குத் தாவி, மோட்டு வளையில் பதுங்கிக்கொள்ளும். பாச்சைகள் கொம்புகள் ஸ்தம்பிக்க, அசைவற்றுக் கிடக்கும். சோற்றுப் பருக்கையோடு பயணப்பட்டிருக்கும் எறும்புகளின் பயணம், தடைப்பட்டு, குழப்பத்துடன் சுற்றுமுற்றும் பார்க்கும். குப்பைக் கூடையை அலசிக்கொண்டிருக்கும் எலிகள், காதைக் கூர்மையாக்கி, ஓசை வரும் திக்கை நோட்டமிடும்.

ஆப்கானிஸ்தான் போர், உச்சத்தில் இருந்த சமயம். பெட்டிக்குள்ளிருந்து, விமானங்களின் கிறீச்சிடலும் தீப்பந்தமாய்க் கடலுக்கடியிலிருந்து மின்னலாய்ச் சீறிப்பாயும் ஏவுகணைகளும், இடிபாடுகளிடையே உடலுறுப்புகள் சிதைந்து மரண ஓலமிட்டுக் கதறி அழும் மக்களும்- என நாள் முழுக்கக் கண் முன்னே விரிந்த காட்சிகள்.

அதில் ஓரளவேனும் மனம் ஒன்ற முடிந்தது, அவளால். சினிமாவில், செயற்கையாய் உருவாக்கப்பட சண்டைக் காட்சிகளைப் பார்த்து அலுத்துக் கிடந்தவளுக்கு, நிஜ யுத்தக் காட்சிகள் வசீகரமாய் இருந்தன.

மனித இருப்புக்கு அர்த்தப்பாடுகளை வழங்கும் அனைத்துமே, கண்முன் புஸ்வானமாக, அழுது அரற்றும் அந்த ஆப்கானிய சிறுமிக்குப் பதினைந்து வயது இருக்கலாம். அப்பன், அவளது அணைப்பில் பிணமாய்க் கிடந்தான். காமிரா நெருங்கி வர, கண்களின் சோகம், முழுவீச்சில் திரையில் பதிந்திருந்தது. உலகைச் சபிக்கும் கோபக் கண்கள்.

ஏனோ அவளுக்கு, அக்கணத்தில், ரொம்ப காலமாய்ப் பார்க்காமல் இருக்கும் தனது சொந்த பந்தங்கள், நினைவுக்கு வந்தனர்.

வீட்டுக்கு எதிரே, வேப்பமரத்தடியில் சாய்வு நாற்காலியில் பேப்பரும், கையுமாய் ஆஸ்துமாவில் முடங்கிப்போன அப்பா. பக்கமே, முகத்தைப் பார்த்துப் படுத்திருக்கும் வெள்ளச்சி. சதா அடுப்பங்கரையில் எதையாவது உருட்டிக்கொண்டிருக்கும் அம்மா, பரீட்சை நெருக்கத்தில், நடுநிசி கடந்தும் புத்தகங்களோடு மல்லாடும் சின்னதம்பி. இன்னும் சரியான வேலை கிடைக்காத சோகத்தில் ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும்  அண்ணன்.  வயது வந்தும் கல்யாணம் ஆகாமல், விசனத்துடன் உட்கார்ந்திருக்கும் அக்கா.

மெல்ல மெல்ல உடைந்து, திரையில் கண்ட ஆப்கானியச் சிறுமி போல, தலையில் அடித்துக்கொண்டு, “யாரு சொன்னதையும் கேக்காம இவன நம்பி வந்தேனே…”

இப்போதெல்லாம் நொறுக்குத் தீனி நிறையத் தேவைப்படுகிறது அவளுக்கு.

அப்படி, பல்லில் அரைபட ஏதும் இல்லாமல் போய்விடும் பொழுதுகளில், மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாகி, வீடு முழுக்க அலைமோதுவதும்- விளிம்புகளில் ரத்தம் கசிய நகங்களைக் கடித்துத் துப்புவதும்- எலிகள் கொண்டு போயிருக்கும் என்பது தெரிந்தும், சந்து பொந்துகளில் துழாவி மிச்சம் மீதியைத் தேடுவதும், பிரிட்ஜைத் திறந்து பார்த்து, அறைந்து சாத்தி “எங்கடா ஒளிச்சு வச்ச தேவடியா மவனே,” எனக் கத்துவதும் தொடர்கிறது.

அதன் நீட்சியாய், தனது இந்த அவல நிலைக்குக் காரணகர்த்தாவான அவளது உடல்மீது- அவளது கவனம் குவிமையும் கொள்கிறது. தன்னையும் தன் உடலையும் பிரிந்து, தள்ளிவைத்துப் பார்க்கும் மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த அவளுக்கு, அது மிகுந்த வேதனையளிக்கும் அனுபவமாகியது.

ooooஅதனைத் தீவிரப்படுத்தும் ஒரு நிகழ்வாக, ஒருநாள், அவள் காதுக்குள் கேட்கத் தொடங்கியது, அந்தச் சிரிப்பொலி- முதன்முறை அதைக் கேட்க நேர்ந்த கணத்தில், அவள் திகிலுடன் சுற்றுமுற்றும் பார்த்து, கலவரமடைந்தாள். தன்னை தவிர வேறு யாருமில்லாத வேளையில் எங்கிருந்து வந்தது சிரிப்பொலி என்கிற கேள்வி குழப்பியது. மறுமுறை அரைத் தூக்கத்தில், பாதி விழி திறந்து, கட்டிலில் கிடந்தபோது கேட்டது.

மூன்றாவது முறை, காதுக்குள் நக்கலும் ஆரவாரமும் கைகோர்த்து, உரத்துக் கேட்டது சிரிப்பொலி. அவள் திடுக்கிட்டு எழுந்து, காதைக் கூர்மையாக்கிக் கேட்டாள். அது வரும் திசையை இந்த முறை தவறாமல் பிடித்துவிட வேண்டும் என்கிற தீவிரத்துடன், பார்வையைச் சுழலவிட்டாள்.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வலம் வந்தது. எங்குமே  அந்தச் சிரிப்பொலியின் பிறப்பிடம் வெளிப்படவில்லை. ஏமாற்றத்துடன், தன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் போய் நின்று, மீண்டும் ஒருமுறை கவனத்துடன் ஆராய்ந்தாள். எதுவும் தட்டுப்படாத நிலையில் படுக்கையில் வந்து விழுந்தவள் காதில் – மீண்டும் அந்தச் சிரிப்பொலி பொறிதட்டியதுபோல் இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தாள். தன் காதருகிலேயே பிறப்பெடுத்து, பல்கிப் பெருகி, உள்ளே வழிந்தோடும் பேரிரைச்சலை உணர்ந்து திகிலடைந்தாள்.

அதனைத் தடுத்து நிறுத்தும் பிரயத்தனமாகக் காதிரண்டையும் கைகளால் பொத்தி, முழங்கால்களுக்கிடையே தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். விடாமல் துரத்தியது, உயிரைப் பிறாண்டும் ஏளனச் சிரிப்பு. அதனைத் தொடர்ந்து வந்தது, முதல்முறையாய் பேச்சுக்குரல்.

‘அந்த கண்ணாடி முன்ன போயி நில்லுடி’ – அவள் விதிர்விதித்துப் போனாள். வியர்த்துக் கொட்டி, கைகால்கள் நடுக்கம் கண்டிருந்தன. மெல்ல நடந்து, அறையின் மூலையிலிருந்த நிலைக்கண்ணாடி முன்போய் நின்றாள்.

தனது அலங்கோலப் பிம்பத்தைக் கண்டவள், திட்டமிட்டே, அந்தக் குரல், தன்னை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருப்பதைப் புரிந்துக்கொண்டாள். மனம் குமைந்தாள். நிலைக்கண்ணாடி முன் நிற்பதை நிறுத்தி நீண்டகாலம் ஆகிற நிலையில், இது முற்றிலும் தன்னை அவமதிக்கவும் பரிகசிக்கவும் நடந்த ஏற்பாடு என்பதை உணர்ந்து – அந்தக் குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குரூர வன்மம் நினைத்து, அதனை மனதுக்குள் திட்டினாள்.

மீண்டும் காதுக்குள் அந்தக் குரல் – ‘சட்டையை ஒண்ணொன்னா கழட்டிப் போடுடீ’.

இருளைக் கிழித்து, ஜன்னலின் ஊடே வரும் ஒளி, அவனது மோட்டார் சைக்கிளினுடையதுதான்.

பத்து வருடப் பழமையில், தேய்மானம் கூடி, முக்கி முனகி நகரும் வண்டி. வாங்கிய புதிதில் இருந்த மிடுக்கு ஏதுமற்று, ஒருவிதச் சீரற்ற ஒலி. வீட்டை நெருங்க, அதன் ஒலிக்கூறு இருளின் நிசப்தத்தைக் கலைக்க, தூங்குமூஞ்சி மரத்திலிருந்து படபடக்கும் பறவைகளின் பேச்சுக்குரல். முச்சந்தியில் படுக்கை போட்டிருக்கும் தெரு நாய்களும் குரைக்கத் தொடங்கிவிட்டன. அவனை வீடுவரை துரத்தி வரும். ஏனோ, அவனை நாய்களுக்குப் பிடிக்காமலே இருந்தது.

மாடியின் அடித்தளத்தில் இருந்தது, வாகனங்கள் நிறுத்தும் இடம். வழக்கம்போல ஒன்றிரண்டு மின் விளக்குகள் மட்டுமே கண்சிமிட்ட, முக்கால் இருளில் மூழ்கிக் கிடந்தது. தட்டுத் தடுமாறி, அடுக்குமாடி பராமரிப்பு நிர்வாகத்தைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே, இடம்பிடித்து வண்டியை நிறுத்தினான்.

மாடிப்படிகள், இன்னமும் முழு இருளில் மூழ்கிக்கிடப்பதைக் கவனித்தவனின் எரிச்சல் மேலும் கூடியது. ‘தேவடியா மவனுங்க… நேத்துதான் அந்த செக்ரடரியப் பார்த்து நாலு நாறக் கேள்வி கேட்டுட்டு வந்தேன். இன்னமும் பல்ப மாத்திச் சரி பண்ணாம இருக்கானுங்க. பொழுது விடியட்டும். உங்கள உண்டு இல்லன்னு பண்ணிடறேன்…’

போன வாரத்தில் ஒரு நாள், இருளில் மூழ்கிக் கிடந்த மாடிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவனின் காலில், ஏதோ இடற, குனிந்து தொட்டுப் பார்த்தான். மனம் துணுக்குற விலகி நடந்து, வீட்டிற்குச் சென்று கைவிளக்கோடு திரும்பி வந்தான்.

இறுகச் சுருட்டிய துணிக்குள், முகம் தெரிந்தது. மிகவும் சிறய சிவந்த முகம். கண்கள் மூடி சவமாய்க் கிடந்தது. பிறந்து சில மணிநேரமே ஆன, கருவறையின் மணத்தோடும் தொப்புள் கொடியின் ரத்தக் கசிவோடும் எறும்புகள் மொய்த்த பச்சிளங் குழந்தை. தரையில் விழுந்த மறுவிநாடி வீறிட்டலறும் சந்தர்ப்பம் தரப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதற்குள் குரல்வளை நெறிக்கப்பட்டு, உயிர்போயிருக்க வேண்டும்.

நூற்றுச் சொச்சக் கூடுகளில், ஏதேனும் ஒரு கூட்டில் வேண்டாத விருந்தாளி. பள்ளி மாணவி ஒருத்தியின் காம இச்சையின் விளைவாய் இருக்கலாம் என்பது, அவன் கணிப்பு.  தாய்மையின் கனிவு மேலெழ, கொல்வது சிரமமாக இருந்திருக்கலாம். அழுதுகொண்டே கழுத்தை நெறித்திருக்கலாம். அந்த நினைவு இப்போது வந்து குறுக்கிட, ஒவ்வொரு அடியையும் மெல்ல கவனத்துடன் எடுத்துவைத்து மேலேறிச் சென்றான். ஒவ்வொரு படியிலும் நின்று, வலது காலால் அடுத்த படியைத் துழாவினான். ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பே, அடுத்த அடி வைத்தான்.

கடைசிப் படியில் கால் பதித்தபோது, எங்கிருந்தோ, மியாவ் என்ற அலறலுடன் வந்து, காலில் இடறிச் சீறிப்போன பூனை திடுக்கிடவைத்தது. பூனை ஓடிய திசையைப் பார்த்துக் கத்தி, படிகளில் இறங்கி ஓடுனான். பூனை மாயமாய் மறைந்திருந்தது. அதன் நகங்கள் பதிந்த இடங்களில் எரிச்சல் எடுத்திருந்தது. குனிந்து தொட்டுப் பார்த்தான். ஈரந் தட்டியது. முகர்ந்து பார்க்க ரத்தவாடை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன அவளது கறுப்புப் பூனையின் நினைவு வந்தது. பயம் கவ்வியது. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க, அச்சத்துடன் சுற்றும்முற்றும் கண்களைச் சுழலவிட்டான். எங்கும் கறுப்புப் பூனையின் ராட்சஷ பிம்பங்கள். ஆக்ரோஷமாய், தாக்குதலுக்குத் தயார் நிலையில் அணிவகுத்து அசைந்தன.

முன்னங்கால் நகங்கள், பளபளக்கும் சாணைபிடித்த கத்திகளாக உருமாறி, அவனைச் சூழ்ந்து வட்டமடித்தன. காதோரம், இடிமுழக்கமிட்ட, ஆயிரம் பூனைகளின் ஒட்டு மொத்தக் கதறல். அவனடது தேகம் கிடுகிடுத்தது.

ஒரே பாய்ச்சலில், படிகளைத் தாண்டி, மேலே போய் நின்று, பீதியில் உறைந்துபோனான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, கருவாட்டுத் துண்டுக்கு ஆசைப்பட்டுத்தான், அவனை நெருங்கிப் போய் நின்று குழைந்தது கறுப்புப் பூனை. விருட்டெனக் குனிந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டான். ஆபத்தை உணர்ந்ததும் பூனை எச்சரிக்கையானது. சீற்றத்துடன் முன்னங்கால்களால் பிறாண்டி, தப்பிக்கப் போராடியது. அவன் விடுவதாய் இல்லை. ஒரு முடிவோடுதான் வந்திருந்தான். வெளியில் உலாவப் போகும் நேரத்தை கவனத்தில் வைத்து, காத்திருந்து, கண்ணியில் சிக்கவைத்திருந்தான். இன்னொரு சமயம் வாய்க்காமல் போகலாம். வாய்த்தாலும், மறுபடியும் பூனையைச் சிக்கவைப்பதில் பிரச்சனை எழலாம். அது மிகவும் புத்திசாலி என்பதில் அவனுக்கு எந்தவிதமான சந்தேகமுமில்லை. பிடியை மேலும் இறுக்கினான். மூச்சுத் திணறி உடல் தளர்ந்து துவண்டது.

அவனது முகத்தில் வக்கிரப் புன்னகை. தாடை இறுகித் துடித்தது. வாலை இறுகப்பிடித்து சுழற்றித் தரையில் பலங்கொண்டு திரும்பத் திரும்ப, மூச்சிரைக்க அடித்து துவைத்தான். மண்டை ஓடு நொறுங்க, வாயில் பீறிட்டு வந்த குருதி, அவன் மேலும் சிதறியது.

கறுப்புப் பூனையின் கதறலை ரசித்தபடி, சிகிரெட்டைப் பற்றவைத்து, மேலெழும்பிய புகை வளையத்துள் விரல்களை நுழைத்து, துரத்திப் பிடித்து விளையாடினான். விசிலடித்தான். பூனையின் கடைசி மூச்சும் அடங்கி, உடலின் அசைவுகளும் முடிவுக்கு வந்த கணத்தில், விசில் உச்சஸ்தாயில் இழைந்து கொண்டிருந்தது.

கறுப்புப் பூனையை அடித்துக் கொன்றபோது கேட்ட அதே கதறல்தான். இப்போது பல்கிப் பெருகி, காதடைக்கும் ஒப்பாரியாய், அவனைச் சூழ்ந்து சுழன்று, கலங்கடிக்க, பயத்தில் உடல் ஆடிக்கொண்டிருந்தது.

கதவு, ஒருக்களித்துக் கிடந்தது.

வாசலில் தயங்கி நின்றான். உள்ளே, அரை வெளிச்சத்தில் உருவம் கோட்டுருவாய்த் தெரிந்தது. முகத்தை முழங்கால்களுக்கு இடையில் புதைத்துக் கவிழ்ந்துகிடந்தது. அவன், வாசலில் நிற்பது தெரிந்தும் அசைவற்று இருந்தது.

பதற்றத்துடன், சட்டைப் பாக்கெட்டிலிருந்து, சிகரெட்டை உருவி, பற்றவைத்தான். தம்கட்டி, ஒரே இழுப்பில், அதிகமான நிகோடினை மூளைக்குச் செலுத்த, கைகளில் நடுக்கம் குறைந்து வந்தது.

பனி இறங்கிய பின்னிரவில், குளிரிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது-

திரும்பிப் பார்த்து உச்சத் தொனியில் கத்தினான் –  ‘நாளக்கி அவளோடவே போயிடப் போறன்டி’.

இவ்வாண்டின் விஷ்ணுபுரம் விருதுபெரும் சீ.முத்துசாமியின் சிறுகதை தொகுப்பு நூலில் இருந்து மீள்பிரசுரம் காண்கிறது

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...