இலக்கியத்தின் மணல் தூண்கள்…

05நான் இதை எழுத தொடங்கும்முன்… சிலவற்றை உங்கள் நினைவில் முன்வைக்க விரும்புகின்றேன்… இது கட்டளையாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எதிர்வினையைப் வாசிக்கும் முன் கீழ்கூறவரும் எண்ணங்கள் உங்களிடம் இருந்தால் அதை அவிழ்தெரிந்துவிட்டு இதைப்படிக்க தொடங்குவீர் எனநம்புகிறேன்.

1.குறைக்கூறவந்துட்டா…
2.ஒரு நிகழ்சியைக்கூட சுயமா நடத்தியதில்லை, ஆனாபேசவந்துட்டா…
3.பெண்ணியம் பேச இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு?…
4.இதுங்களுக்கு என்ன தெரியும்?
5.இந்நாள்வரை பெண்களுக்கு ஆதரவா குரல் கொடுத்திருகாங்களா…  திடீர்ன்னு எங்கிருந்து இந்த அக்கறை முளைத்தது” என்று விதண்டாபேச்சு இங்கு வேண்டாம் என்று நினைக்கின்றேன். சுரணையின் முனையிலிருந்து இந்த எதிர்வினை முளைக்கிறது. ஆகவே, அறிவிற்கு மட்டும் கட்டுப்பட்டு இதன் மீது விமர்சனத்தைப்பரப்புங்கள்… அதைஏற்றுக்கொள்கிறேன்.

தொடர்ந்துவாசிக்க…

அண்மையில் 12.7.2013 அன்று கா.பாக்கியத்தின் ‘தமிழ் இலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ஆய்வுநூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். சாலை நெரிசலில் நானும் யோகியும் மாட்டிக்கொண்டு ஒருவழியாக மண்டபத்தை வந்தடைந்தோம். அங்கு எங்களுக்காக குழலி காத்துக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழ்த்துகள்!!! ஏற்பாட்டு குழுவினருக்கு. நாங்கள் மண்டபத்தில் நுழையும்போது உமாபதிப்பகத்தின் உரிமையாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.

திருசோதிநாதனுக்குப் பிறகு நிகழ்ச்சியில் பேசியவர் முனைவர் க.கிருஷ்ணன்மணியம். அவரது உரையில் “தமிழகத்தில் பெண்ணியம் எனவரம்புமீறி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மலாதிமைத்ரி, குட்டிரேவதி போன்றவர்கள் அவையங்களைப் படைப்பிலக்கியங்களில் கொண்டுவருகிறார்கள். நாம்  இன்னமும் அந்தநிலைக்குப் போகவில்லை. நம்முடைய இலக்கியம் அந்தச்சூழலுக்கும் போகவில்லை. இந்தச்சமூகமும் அதற்குதயாராக இல்லை. நாம் நம்முடைய வழியிலேயே அந்தப் பெண்ணியத்தைப் பார்க்கமுடியும்.” என்று அவர் வெளியிட்ட கருத்து ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரு பேராசியர் ஆய்வுகளுக்கு உட்பட்டவர். இப்படி எதையும் ஆராயாமல் பேசுவதை என்னவென்று சொல்வது.

சங்க இலக்கியத்தில் ஆண், பெண்கவிகள் வெளிப்படையாக, அங்கம் அங்கமாக ஓர் ஆண்பெண்களின் உறுப்புகளைப்பற்றிப் பேசுவதை “ஆ..ஆ…ஓ…ஓ… அவனின் கவித்துவ மேகவித்துவம்”, என புகழ்பாட முடியும்போது, அதை ஒருபெண் பேசினால் அல்லது எழுதினால் ‘கேவலம்’, ‘வரம்புமீறல்’ என்று பரைச்சாற்றுவது எவ்வளவு பெரிய அபத்தம். இன்னமும் இந்நிலைக்கு போகவில்லை என்று யாரை முன்வைத்து சொன்னார் என்பது புரியவில்லை. இப்பொழுது எழுதிவரும் பெண்களின் கவிதைகளை இவர் கவனத்திலிருந்து தப்பி இருந்திருக்கும்போல… திரையில் இல்லாத ஆபாசத்தை குட்டிரேவதி, லீனாமணிமேகலை, சுகிர்தராணி, மாலதிமைத்ரி அவர்களின் படைப்புகளில் காட்டிவிடவில்லை. பெண்களின் உறுப்புகளை இன்றுவரை பாதுகாத்துகொண்டிருக்கும் ஆண்களுக்கு ஒருநினைவுறுத்தல். பெண்கள் தங்கள் உறுப்புகளைப்பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அவை ஒன்றும் அதிசயம் இல்லை. ஆணாதிக்கத்திற்கு எதிராக அவற்றை புனைவுகளில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதில் தடைகளும் இல்லை.

மேலும் அவர் கூறுகையில் “இந்தச்சமூகம் தாயாராகவில்லை. நாம் நமது வழியிலே பெண்ணியத்தைப் பார்ப்போம்” என்பதை எந்த ஆவணத்தின் அடிப்படையில் தீர்மானம் செய்தார் என்று புரியவில்லை. காலம், சிந்தனை இவை மாறிக்கொண்டிருப்பதை அவர் மறந்திருக்ககூடும். ஒரு ஆபாசபடத்திற்கு நிகராக வெளிவரும் திரைப்படங்களைக் கும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் அளவில் பலரின் மனம்பக்குவம் அடைந்துவிட்டது. ஒருகாலத்தில் ரகசியமாகப் பேசப்பட்ட மாதவிடாய் பற்றியெல்லாம் இன்று குடும்பங்களில் பகிர்ந்து கொள்ளும் அளவில் இறுக்கம் தளர்ந்துள்ளது. இப்படி இன்னும் மறைத்து எழுதவும் மறைத்துகாட்டுவதற்கும் மிச்சம் எது உள்ளது? முடிந்தால் சொல்லுங்கள். மற்றொன்று, ‘நாம் நமது வழியிலே பெண்ணியத்தைப் பார்போம்’ என்பது. பெண்ணியதிற்கு எதாவது வரையறைகள் உண்டா? நம்வழியிலேயே பார்ப்போம் என்றால் எது நமது வழி ?அதற்கு கோட்பாடுகள் உள்ளதா? இருந்தால் கொஞ்சம் அடுக்குங்கள் சார். முனைவர் மேல் எனக்கு நிறைய மதிப்புண்டு. காரணம், அவர் சிந்திக்கும் விதத்தில் மற்ற பேரசிரியர்களைவிட வித்தியாசமாகவும் இலக்கியத்தின் நடப்பு விஷயங்களை அறிந்தவராக இருப்பதால்தான். ஆனால் இவரே இப்படி சிந்தித்தால், இனிவரும் மாணவர்களின் சிந்தனையில் என்ன எழுச்சிநிற்க போகிறது என்பது கேள்வியாக உள்ளது.

அடுத்து, எழுத்தாளர் சங்கத்தலைவர் பேசினார். தலைவர் என்றாலே தாங்கள் செய்தநற்பணிகளைப் பற்றிச் சுயபிரச்சாரம் செய்யாமல் விடுவதில்லை. குழலிசொன்னதுபோல ‘கோட்டா’முறையில் எழுத்தாளர்களுக்கு வழங்கும்பரிசுகளும் விருதுகளும் ஒருவரின் தகுதியை விளக்கி வைக்கிறது .உண்மையான திறமைக்குப் பூட்டுபோட நினைக்கும் தலைவருக்குப் பாராட்டு விழா எடுப்பதில் தவறே இல்லை. எழுத்தாளர்களை இரண்டு பாலாகபிரித்து 3ல் ஒருபங்கு பெண்களுக்குக்கட்டாயம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை, தான்சங்கத்தில் முன் வைத்ததாகக் கூறுகிறார். அதனோடு, அவர் சொன்ன கருத்திற்குப் பாதுகாப்புகவசமாக தன்னைதற்காத்து கொள்ள அவர் சொன்னபதில், ‘அதற்காகதரம் இல்லாத பெண்படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்குவதாக அர்த்தமில்லை” எனவும் கூறினார். அப்படியென்றால் 3 ஆண்களுக்குப் பரிசு பெறும் தகுதி இருந்தாலும் கூட தன்னுடைய நிபந்தனையின் காரணமாக அந்த மூன்றாவது ஆளைதள்ளிவிட்டு அவரைவிடபரிசு பெறதகுதியில் குறைந்த பெண்ணுக்குப் பரிசுவழங்குவார் போலும். வேடிக்கை. இப்படியும்பேசுவார். அப்படியும்பேசுவார். ஆனால் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லமாட்டார்.

மேலும்,“ஏன் பெண்கள் தனித்து தங்களுடைய வெளிபாடுகளைக் காட்ட வேண்டும்? ஆண்கள் பெண்களை அடக்கி ஆழவில்லை. பெண்கள்தான் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறார்கள்” என்றார். அதற்கு அவர்சொன்ன அல்ப உதாரணம் இன்னும்வேடிக்கையானது. ஏன் பெண்கள் தங்களை தனிச்சையாக வெளிப்படுத்கூடாது. அவர்கள் எப்பொழுது ஆண்களால் ஒதுக்கப்பட்டும் தூற்றப்பட்டும் வருகிறார்கள். அவர்களின் நிலைப்பாடுகளைகத் தனித்துக்காட்டுவதில் இவருக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை.  க. பாக்கியத்தின் முயற்சியில் இவர் மூக்கு நுழைப்பதில் எந்த நியாயமுமில்லை.

இப்படிப் பிற்போக்கான சிந்தனையில் மூழ்கி இருக்கும் இவர்கள் போன்றவர்களைத்தயவு செய்து மலேசியாவின் இலக்கிய  தூண்கள் என்று சொல்லிவிடாதீர்கள். அதைவிட கேவலம் மலேசிய இலக்கியதிற்குவராது. ஒருவர் மேடைஏறும் முன்முதலில் தன்னை முழுமையாக தயார்ப்படுத்தவேண்டும். மேடைபேச்சு கேட்பவர்களுக்கு விழிப்புணர்வைத் தரவேண்டும். புதிய விஷயத்தைக்கற்று கொடுக்க வேண்டும். அப்படி செய்யமுடியவில்லை என்றால் மேடையில் ஏறி உலறி வைத்தால் இப்படிதான் பதிலடி கிடைக்கும்.

ஆதாரம்:https://www.facebook.com/photo.php?v=549519475112486&comment_id=4921582&offset=0&total_comments=25&notif_t=video_comment_tagged

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...