மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எதுவும் தெரியாமல் மற்றவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் (பெ.இரா) அவர்களின் விசயத்திலும் இதுவரை அப்படியே இருந்துள்ளேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும் அதை எதையும் மனதில் வைத்து நான் இதை எழுதவில்லை. முகநூலில் சகோதரி மணிமொழி ஏற்றிய காணொளிப் பதிவைப் பார்த்தேன். அதை தொடர்ந்து ம.நவீனின் பதிவைப் படித்தேன்.
“சந்தானத்தின் நகைச்சுவை சி.டி யாருக்கும் கிடைக்கவில்லை என்றால் முகநூலில் உள்ள மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரனின் பேச்சைக் கேட்கலாம்”- ம.நவீன்
நகைச்சுவை என்று சொல்லிவிட்டு காத்திரத்தைக் கொட்டிவிட்டாரே ம.நவீன் என்று தோன்றியது. யோசித்துப் பார்த்ததில் தன்னுடைய ஆத்திரத்தை நகைச்சுவையென காத்திரமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.
அக்காணொளியில் இடம்பெற்றுள்ள பெ.இரா உரையின் அபத்தத்தை உணர்ந்து இப்பதிவை எழுதுகிறேன். இவருடைய அபத்தப் பேச்சைக் கண்டித்து ஏற்கனவே முகநூலில் இலக்கிய நண்பர்கள் கே.பாலமுருகன், தயாஜி, பாண்டியன் அன்பழகன், பிரேம் ஆனந்த், இளம்பூரணன் என பலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டனர். அதன் உச்சக்கட்டமாக இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சிறுகதைப் பரிசளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளனர். இது மலேசியாவில் தன்மானமுள்ள இலக்கியவாதிகள் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றது.
சபை நாகரீகம், இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பதை இன்னும் பெ.இரா அவர்கள் உணரவில்லை போலும். அதற்கு அக்கொணொளியே சாட்சி. ஒருவரைப் பற்றி அவதூறாக பேசிவிடக்கூடாது என்பற்காக மூன்று முறை அக்கொணொளியைப் பார்த்தேன். இறுதியில் பெ.இரா சொல்ல வந்ததைப் புரிந்துக்கொண்டேன். அபத்தங்கள் நிறைந்த பேச்சு அவரது பேச்சு. தன்னுடைய ஆணாதிக்கப்போக்கை வெளிப்படுத்தும் பேச்சு அவரது பேச்சு. தலைமைத்துவமற்ற சர்வதிகாரத்தனமான பேச்சு அவரது பேச்சு. ஆண்களின் பெருந்தன்மையினால்தான் பெண்களுக்கு விருதுகளும் முக்கியத்துவங்களும், அங்கீகாரங்களும் கொடுத்து வருகிறோம் என தனது உரையில் குறிப்பிட்டதின் வாயிலாக இதுவரை மலேசியாவில் படைக்கப்பட்ட பெண்களது இலக்கியங்களின் நிலையும் அதன் தரமும் கேள்விக்குள்ளாகின்றன. கட்டாயத்தின் பேரில் வழங்கப்படுவது விருதுகளா அல்லது பிச்சையா? என்பதை பெ.இரா தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை சங்கத்தின் சார்பாக கட்டாயத்தின் பேரில் பரிசு கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படி கொடுப்பதாக இருந்தால் முதலில் பரிசீலிக்கப்படுவது என்ன? கண்டிப்பாக படைப்பாளி ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் அல்லவா? பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவரது படைப்புகளும் படைப்பின் தரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அப்படித்தானே? இந்தச் சூழலில் கேவலப்படுத்தப்படுவது யாரென்று சற்று யோசித்துப் பாருங்கள்! அப்படைப்பாளியும் அவரது படைப்புகளும்தானே? இது எத்துனை பெரிய அவமானம்!
பெண்ணியத்தை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. இதில் வருந்தத்தக்க செய்தி யாதெனில் க.பாக்கியம் ஏற்பாட்டில் நடந்த ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்” எனும் நிகழ்ச்சியில்தான் பெ.இரா தனது பெண்ணியச் சிந்தனையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அவரது பெண்ணியச் சிந்தனை தன் மனைவியையும், சங்கத்திற்காக பம்பரமாய் சுழன்றும் பெண்களையும், இதுவரை ம.த.எ சங்கத்தில் பரிசும் விருதுகளும் பெற்ற பெண் படைப்பாளர்களையும் என அனைவரையும் கேவலப்படுத்தியுள்ளது. இவர்களில் எத்தனை பேர் எதிர்ப்புக்குரல் கொடுக்க முன்வருவார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக இதில் க.பாக்கியம் அவர்களின் நிலைபாடு நாம் அறிய வேண்டியிருக்கிறது.
ம.த.எ சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் அவர்கள், பெருந்தன்மைக்கும் பெண்ணியத்துக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டு, தாம் கூறிய கருத்துக்களை மீட்டுக் கொள்ள வேண்டுகிறேன். அதேவேளை தவறான கருத்துக்களை இடம் பொருள் ஏவல் அறியாது வெளியிட்டமைக்கு மன்னிப்பும் கோர வேண்டுகிறேன்.