நானும் ரௌத்திரம் பழகுகின்றேன்.

08அந்த நிகழ்விற்குப் போக வேண்டும் என்ற எந்தத் திட்டமும் எனக்கில்லை. நிகழ்விற்கு முதல் நாள் தானும் மணிமொழியும் நிகழ்விற்குப் போகவிருப்பதாக யோகி அழைத்திருந்தார். நாங்கள் மூவரும் இப்படியான பொது நிகழ்வுகளில் சந்தித்து நீண்ட நாள்களாகிறது. அதற்காகவே, இந்த “மலேசிய தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்” நூல் வெளீயிட்டு விழாவிற்குச் செல்லலாம் என முடிவெடுத்திருந்தேன். ஏற்கனவே, இந்த நூல் குறித்து நவீனும் பாலமுருகனும் எழுதியிருந்த எதிர்வினைகளைப் படித்திருந்தேன். இருந்தும் போக வேண்டும் என்ற எழுந்திருந்தது.

நான் மாலை 530 மணிக்கெல்லாம் நிகழ்வு நடக்கிற வளாகத்திற்குச் சென்றுவிட்டேன். கொஞ்ச நேரம் வெளியே சுற்றிவிட்டு உள்ளே போனேன். ஒரு கலந்துரையாடலுக்கான கூட்டம் அங்கிருந்தது. தெரிந்த முகமாக மலாயாப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியமும், நூலகவியலாளர் கோமதியும் இருந்தனர். நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கும் கூட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பெரிய அரங்கில் சிறு குழுவிலான மக்கள் இருந்தனர். இப்போது தெரிந்த முகங்கள் கொஞ்சம் அதிகமாகியிருந்தனர். மணிமொழி வேறு தனக்கும் யோகிக்கும் இடம் பிடித்து வைக்க சொல்லியிருந்தார்.

ஆண்களைவிட அதிகமான பெண்கள் கூட்டம் இருந்தது. 5.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்வு இரவு 7.00 மணியாகியும் தொடங்கவில்லை. என்னுடைய பொறுமையும் கொஞ்சம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. 7.15 அளவில் நிகழ்வு தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள்.

நிகழ்வின் முதல் அங்கமாக தமிழ்வாழ்த்து பாடப்பெற்றது. அப்படியானதொரு தமிழ்வாழ்த்துப் பாடலை நான் இதுவரை நான் கலந்து கொண்டிருந்த எந்தவொரு நிகழ்விலும் கேட்டதில்லை. தமிழ்வாழ்தது பாடுவதற்கென்று ஒரு வரைமுறை இருப்பதாக நினைக்கிறேன். ஒரு நாட்டுக்கு தேசிய கீதம் எப்படியோ அதுபோலத்தான் ஒரு மொழிக்கும் அந்த மொழிக்குறிய வாழ்த்துப் பாடல் விளங்குகிறது. அந்த வரைமுறை இந்நிகழ்வில் மீறப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். அதுவும் பெருஞ்சித்திரனாரின் அப்பாடல் தமிழ் வாழ்த்தாக இடம்பெறவில்லை. “தமில் வால்த்தாக” மட்டுமே இருந்தது.

நிகழ்வு இப்படியாக போய்க் கொண்டிருக்க கிருஷ்ணன் மணியம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நான் வேறோர் அலுவல் காரணமாக நிகழ்விலிருந்து பாதியிலியே வெளியேறிவிட்டேன். அடுத்த நாள் காலையில் நிகழ்வு குறித்த எதிர்வினைகளை அறிந்தேன். அதைப்பற்றி கருத்துரைக்க ஒரு பெண் படைப்பாளர் என்கிற முறையிலும் ஒரே ஒரு முறை எழுத்தாளர் சங்கத்தின் விருதொன்று எனக்கும் கிடைத்திருப்பதாலும் இது குறித்து கருத்துரைக்க எனக்கு எல்லா தகுதியும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

தான் பொறுப்பேற்ற பிறகு கண்டிப்பாக பெண் படைப்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் கட்டாயமாக விருது வழங்குவதாக எழுத்தாளர் சங்கத் தலைவர் கூறுகின்றார். மலேசிய எழுத்தாளர்களின் முகவரி என தன்னைப் பறைச்சாற்றிச் கொள்ளும், ஊர் ஊராக சென்று அவ்வாறாகவே தங்களை விளம்பரத்திக் கொள்ளும் எழுத்தாளர் சங்க தலைவர் இப்படியான கருத்தை வெளியிடும் முன் யோசிக்கவில்லையா? அல்லது எப்போதும் கைத்தட்டி விட்டு போகும் கூட்டம்தானே என்று நினைத்துவிட்டாரா? இலக்கிய கூட்டத்தோடு தொடர்பில்லாத உவமைகளும் எடுத்துக்காட்டுகளும் என தரமற்ற ஓர் உரை நிகழ்த்திப் போயிருக்கிறார் திரு. இராஜேந்திரன்.

ஏதெதற்கோ கோட்டா முறை வைத்தது போல் படைப்பாளர்களைக் கௌரவிப்பதிலும் கோட்டா முறையைப் பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. பெ. ராஜேந்திரன்.

ஆக, இந்த முறை விருதுக்கு இத்தனை ஆண்களும் இத்தனை பெண்களும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் எல்லா விருதளிப்பு  விழாக்களும் நடத்தப்படுவதாக நான் கருதுகிறேன். இல்லையென்றால் இப்படி ஒரு கருத்தை பொதுவில் கூற வேண்டிய அவசியம் இராஜேந்திரனுக்கு ஏற்பட்டிருக்காது.

படைப்பெனப்படுதல் தரத்தோடு தொடர்புடையது. கோட்டா முறை என்பது நிபந்தனைகளோடு கூடிய கட்டாயம் சார்ந்தது. எழுத்துக்கு ஏன் கட்டாயமும் நிபந்தனையும். “மலேசிய பெண்கள் யாரும் தரமாக எழுதவில்லை – ஆகையால் கோட்டா முறையை உருவாக்கி கட்டாயத்தின் பேரில் அவர்களுக்குப் பரிசளிக்கிறோம் என சொல்ல வருகிறீர்களா!… அதைத்தான் ஆண்களின் பெருந்தன்மை என்கிறீர்களா…

யாருக்கு வேண்டும் உங்கள் பெருந்தன்மை… பெண்ணியத்தை ஆண்களின் பெருந்தன்மையால் எல்லாம் வாங்கிவிட முடியாது… கொஞ்சம் மேலே போய் உயர்பதவிகளின் அதிகமான பெண்கள் இருப்பதும் பல்கலைக்கழகங்களில் அதிகமான பெண்கள் இருப்பதும் ஆண்களின் பெருந்தன்மையினால்தான் என்பீர்கள் போல் இருக்கிறதே…

பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பவர் எவருமே அதை மேடையில் இவ்வாறு கூவிக் கொண்டிருக்க மாட்டார்கள். நம்மிடம் இல்லாத ஒன்றை அல்லது நாம் செய்யாத ஒன்றைப் புதிதாய் செய்ய தொடங்குகிற போதுதான் அது குறித்து பேசுவோம். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.

இலக்கிய மேடையில் எதைப் பேச வேண்டும் என்கிற அடிப்படை நாகரீகமின்றி உரை நிகழ்த்தியுள்ள எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு. பெ. இராஜேந்திரனின் கருத்துகள் கண்டனத்துக்குறியது.

எப்போது பெண்களை ஒரு சக படைப்பாளர் என்றும் (படைப்பாளரிடையேயும் படைப்புகளிடையேயும் ஏன் பால் வேறுபாடுகள் என்றுதான் எனக்குப் புரியவில்லை) படைப்புகளை மட்டும் முன்னிறுத்தி என்று பேச தொடங்குகிறீகளோ அதுவரை எங்களின் ரௌத்திரம் தொடரும்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...