ராஜேஷ் ஜீவா கவிதைகள்

நன்னெஞ்சுநன்னெஞ்சு

விரல்மைதுனம் ஒவ்வொன்றிற்கும்
அவள் கார்கூந்தலில்
வெள்ளிக்கம்பிகள் உதிக்கின்றன
சத்துடானிக் மூலிகைக்குளியல் அக்குபங்சர் ஆராஹீலிங்
என சகலத்திற்கும்
தலையை ஒப்புக்கொடுத்த
பின்னரும் கணக்கு மட்டும்
தீர்ந்தபாடில்லை
நேர்ச்சைகளும்
குறைந்தபாடில்லை
அவ்வையென சகதோழிகள்
சீண்டிச் சிரிக்கும்
சமயங்களிலும் அவளுக்கு
சங்கடங்கள் நேர்ந்ததில்லை
கண்ணைத் திறந்த ஆட்டுக்குட்டி
மலங்கமலங்க விழிப்பது போல
குழலில்  பெருகும்
நரைகள் குறித்து
பெற்ற உள்ளம்
குழம்பித் துயரில் வீழ
நன்னெஞ்சோ
வரும் சிரிப்பை
அடக்க நினைத்து
இருமித் தொலைக்கிறது

 

 

ஆனைக்கண் பூனைக்கண்

ஊரே கூடியிருக்கும்
திருவிழா பொட்டலில்
நேர்ந்து விட்ட சேவலின்
உதிரம் குடிக்க ஓடோடி
வருகிறான் பெரிய சூரன்
ஏ ஆனைக்கண்ணா
ஏ பூனைக்கண்ணா
சிங்கமுகா எலிமுகா என
உறுமுகிறான் சின்னசூரன்
மணலில் துடிதுடித்து
சாவின் சித்திரம் வரைகிறது
உயிர் பிரியும் உடல்
வதம் முடிந்த பின்னிரவில்
ஆனைக்கண் சிங்கமுகத்தில்
பெரியவனும் பூனைக்கண்
எலிமுகத்தில் சின்னவனும்
குதியாட்டமாய் நுழைகின்றனர்
குழந்தைகளின் கனவில்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...