பேச்சி

IMG-20180304-WA0005“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன்.

நிமிர்ந்து பொன்னியின் படத்தைப் பார்த்தேன். கடந்த தீபாவளிக்கு இரண்டு கால்களும் இருக்கும்போது துடைத்தது. கனகாம்பர மாலை காய்ந்து பழுப்புச் சங்கிலியாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அவளுக்குக் கடைசி மாலையாக இருக்கலாம். செல்வம் என் படத்தைப் பொன்னிக்குப் பக்கத்தில் மாட்டிவைத்தாலே பெரிய கொடுப்பினைதான். நினைவு வந்தால் பார்த்துக்கொள்ள படங்களைக் கைப்பேசியில் சேகரிக்கும் தலைமுறை அவன். நான் நினைவுகள் உருவாகப் படங்களைச் சுவர்களில் மாட்டிவைப்பவன்.

சக்கரை அதிகமாகி எனக்குக் கண்பார்வை குறையத்தொடங்கியதும் வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என முகப்பறையில் மாட்டப்பட்டிருந்த  படங்களைத்தான் முதலில் கழட்டத் தொடங்கினான். பெரும்பாலும் தாத்தா வெள்ளைக்காரத் துரையுடன் பிடித்தப் படங்கள். நான் தாத்தாவுடன் பிடித்தப் படங்கள். தன் இளமைகாலத்தை நான் நினைவுப்படுத்துவதாக தாத்தா அந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் தோளை அழுத்திச்சொல்வார். அம்மா, அப்பாவின் படங்கள் ஒன்றுகூட இல்லை. என் அம்மாவைப்பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் தாத்தா தேவடியாக் கழுதை என்றுதான் திட்டுவார். ஊர்பேர் தெரியாதவனிடம் வயிற்றில் வாங்கி வந்தாளாம். விறகுக்கட்டையில் எவ்வளவு அடித்தும் வயிற்றில் கைவைக்க விடவில்லையாம். வலுக்கட்டாயமாக எள்ளெண்ணெய்யை வாயில் புகட்டப்போனபோதுதான் ரப்பர்மர உளியை வீசி தாத்தாவின் புருவத்துக்கு மேல் சிதைத்துவிட்டாள். மரவட்டைபோல இருக்கும் தழும்பைத் தடவியபடியே தாத்தா இந்தக் கதையை அடிக்கடி சொல்வார்.

“ஒருவேள அதெல்லாம் உங்க இலுஷனா இருக்கலாம்பா.  யூ சி, மனுஷ மூளைக்கு அதெல்லாம் பாசிபல். இப்பவெல்லாம் சைக்காலஜி மாதிரி ஏதாச்சும் போட்டு கொழப்பிவிட்டா நல்ல கதன்னு சொல்லிடுறாங்க. மே பி வீ கென் மேக் நியூ வேவ்?”

கண்ணாடியைக் கழட்டினேன். எதையும் தெளிவாகப் பார்ப்பதில் விருப்பமில்லாமல் போயிருந்தது. பார்க்கவேண்டிய அனைத்துமே எனக்குள்ளேயே தெளிவாக இருந்தன.

கழுத்தை ஒரே வாக்கில் வைத்திருக்க முடியாமல் வலது பக்கம் சாய்த்தேன். செல்வம் மடிக்கணினியை வாகாகத் திருப்பிக் காட்டினான். அதன் வெண்ணொளி கண்களைத் துன்புறுத்தியது. முடிவை மட்டும் எழுதினால் பூர்த்தியாகிவிடும் என்றான். எறும்புகள் போல எழுத்துகள் மொய்த்தன. கையெழுத்தில் எழுதாமல் நான் சொன்னதை டைப் அடிப்பதே பிணத்துக்குப் பொட்டுவைப்பதுபோல இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் என்னிடம் ஒரு அனுபவமும் அதில் ஒரு முடிவும்தான் இருந்தது. உண்மையில் நடந்த அனைத்தையும் அவனிடம் முழுமையாகச் சொல்லியதை நான் கூச்சமாக உணர்ந்தேன். ஒவ்வொருமுறை அவன் என் உடம்பைத் துடைத்துவிடும்போதும் ஏற்படும் கூச்சத்தைவிட இந்தக் கூச்சம் வலிமையாகக் கசந்தது. ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும். வேறு யாரும் அவனிடம் இதைச் சொல்லப்போவதில்லை.

***

முனிப்பன்றியைப் பார்த்ததும் செம்பனைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். கையில்20180304_161641 வைத்திருந்த கருப்புக்கோழியின் அலகை இரு விரல்களால் அமுக்கி மூன்று விரல்களை அதன் கழுத்திலும் வளைத்தான். விரல்களில் அதன் நாடித்துடிப்பின் கெஞ்சல் படபடப்பைக் கூட்டியது. சிறுவனாக இருந்தபோது தாத்தாவுடன் பலமுறை காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்றிருக்கிறான். தாத்தா பிரிட்டிஷ்காரர்களின் விசுவாசி. நாட்டை விட்டுப்போகும்போது அவர்கள் பரிசாகக் கொடுத்த ஒரு துப்பாக்கி அவரிடம் இருந்தது. தாத்தா அதை ஒரு குழந்தைபோலப் பாதுகாத்து வைத்திருந்தார். எண்ணெய் தேய்க்கப்பட்ட குழாய் எப்போதும் பளபளக்கும். தோட்டம் மேற்கு மலேசிய எல்லையில் இருந்ததால்  ரவைகளை தாய்லாந்திலிருந்து வரும் லாரிக்காரர்களிடம் மான் கறியைக் கொடுத்து பண்டமாற்று செய்துகொள்வார். நாய்கள் வளைத்துப் பிடித்ததும் தாத்தா குறிபார்த்துச் சுடுவார். எந்த உயிரானாலும் பெரும்பாலும் ஒரே ரவையில் அடங்கும். தனியாகச் சுற்றும் காட்டுப்பன்றியின் மேல் முனியேறியிருக்கும். அதனால் அதனைச் சுடக்கூடாது என்பார். அவன் சின்னவயதில் ஒரே ஒருமுறை தனியாகச் சுற்றிய காட்டுப்பன்றியைப் பார்த்துள்ளான்.  நாய்களைத் தாக்க முனையும்போது அதன் பிடரியில் உரோமம் சிலிர்த்து உறுமிக்கொண்டு நின்றது. பருத்த வலுவான உடல். சகதியில் புரண்டெழுந்த தடையங்கள் கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்தன. தாத்தா ஆசையாக வளர்த்த கொம்பனின் வயிற்றைக் கூரிய பற்களால் குத்தித் தூக்கியெறிந்து, தரையில் புரட்டி, குடலைக் கிழித்து உடலைச் சிதைத்தபோதும் தாத்தா வணங்கி நின்றாரே தவிர குறிபார்க்கவில்லை. மற்ற நாய்கள் காடுகளுக்குள் ஓடியே விட்டன. செத்த கொம்பனின் அருகில் சென்று பார்த்தபோது ரத்தச் சதையின்மீது கறுப்புக் கம்பளி போர்த்தப்பட்டிருந்தது போலக் கிடந்தது. அதற்குப் பின்னர் அவன் தாத்தாவுடன் வேட்டைக்குப் போவதை முழுமையாக நிறுத்திவிட்டான்.

ஒரு தேர்ந்த வீரனின் வாள்போல இடவலமாக சுழன்று கொண்டிருந்த அதன் வாலை மட்டுமே முதலில் அவன் பார்த்தான். கொஞ்ச நேரத்தில் திரண்டு புடைத்த பிருஷ்டம் தெரியவும் சிறுவயதில் ஏற்பட்ட நடுக்கம் தொற்றிக்கொண்டது. மிக ஆக்ரோஷமாக மண்ணைக் கிளரிக்கொண்டிருந்த அதனிடமிருந்து மெல்லிய உறுமல் வந்துகொண்டிருந்தது. அவ்வப்போது விடும் அதன் பெருமூச்சில் குழியில் இருந்து மண் தூசியாகச் சிதறிப் பறந்தது. முனிப்பன்றியின் கோரைப்பல்லைப் பார்ப்பது வரிப்புலியின் கண்களைப் பார்ப்பதுபோல முதுகெலும்பைச் சில்லிட வைக்கும். பன்றிகள் சாகும் வரை அவை வளர்ந்துகொண்டே போகும். அவன் வீட்டில் ஏராளமான காட்டுப்பன்றியின் கோரைப்பற்கள் இருந்தன. கொன்ற பன்றிகளின் தலையை மட்டும் தாத்தா புதைத்து வைப்பார். மண் தின்று எஞ்சிய ஓட்டிலிருந்து பல்லை அறுத்தெடுப்பார். வெள்ளைக்காரத் துரை தோளில் கைகளைப் போட்டிருக்க பக்கத்தில் இடுப்பு உயரத்தில் இருக்கும் துப்பாக்கியுடன் தாத்தா நிற்கும் கம்பீரமான படச்சட்டகத்தைச் சுற்றிலும் காட்டுப்பன்றியின் பற்கள்தான் அலங்கரித்திருந்தன. அவன் பலமுறை அந்தப் பற்களைத் தொட்டுப் பார்த்துள்ளான். முனிப்பன்றியின் இரு பற்களைச் சட்டகத்தின் தலைப்பகுதியில் காளை கொம்புகள் போல ஒட்டவைத்தால் படத்துக்குக் கம்பீரம் கூடுமென நினைத்திருந்தான். அவனுக்கு அதன் பற்களைக் காணவேண்டும் என ஆசை கிளர்ந்தது. முனி துரத்தினால் எப்படித் தப்பிக்க வேண்டுமென தாத்தா சொல்லிக்கொடுத்ததை நினைவில் மீட்டுக்கொண்டான்.

காட்டுப்பன்றிகளுக்குக் கழுத்துக் கிடையாது. அவை அருகில் வந்ததும் இடவலமாகச் சில அடிகள் நகர்ந்துவிட்டால் சட்டென அவற்றால் திரும்ப முடியாது. மொத்த உடலையும் குதித்துத் திருப்பும். அல்லது பெரிய வளைவோட்டம் போட்டு மீண்டும் தாக்க வரும். பதற்றமாகி ஓடாமல் நகர்ந்து நகர்ந்தே அதனைச் சோர்வடைய வைத்துவிடலாம். அல்லது தாக்குதலைத் தள்ளிப்போடவைக்கலாம். மெல்ல மறைவிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தான். தின்ன எதுவும் கிடைக்காமல் வேறெங்கோ போயிருக்க வேண்டும். செம்பனைக் காட்டைப் பார்க்க பிரத்தியேகக் கண்கள் தேவை. கவனமாக ஆராய்ந்து உறுதி செய்தபின் அது கிளறிய மண்மேட்டின் அருகில் சென்றான். கருமண் மூர்க்கமாகத் தோண்டப்பட்டு அடியில் இருந்த செம்மண் குழம்பாகத் தெறித்திருந்தது. அவனுக்குக் கொம்பனின் வயிறு நினைவுக்கு வந்தது. தன்னை முனிப்பன்றி எங்கோ நின்று கவனித்துக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தபோது தொடர்ந்து மரத்தின் ஓரமாகவே நடக்க ஆரம்பித்தான்.

எல்லா மரத்தின் அடியிலும் நான்கைந்து செம்பனை விதைகள் உதிர்ந்திருந்தன. அறுப்புக்கு ஏற்ற பருவத்தின் குலைகள் அடங்கிய பகுதியில் நடப்பது அச்சத்தை அதிகமாக்கியது. பருவம் அடைந்த செம்பனைப் பழத்தைத் தின்ன வரும் எலிகளுக்காக வெண்ணாந்தைகள் காத்திருக்கும். மாலையாவதற்குள் தோட்டத்தின் கோடியை அடைந்துவிடவேண்டும் என நடையைத் துரிதமாக்கினான். காய்ந்த செம்பனை மட்டையின் முட்கள் கால்களில் இட்ட கீறல்களில் வியர்வை பட்டு எரிந்தது. நடந்துவந்த தூரத்தை வைத்து தோட்டத்தின் மையத்தில் இருப்பது புரிந்தது. உள்ளே நுழைந்தபோது பார்த்த குலை வெட்டும் இந்தோனீசியத் தொழிலாளர்கள், அவர்களின் லய வீடுகள், மோட்டாரில் பார்வையிடும் தண்டல்கள் என கொஞ்சம் கொஞ்சமாக மனித அரவம் குறைந்திருந்தது. உச்சி வெயிலிலும் கருமேகம் சூழந்ததுபோல் இருக்கும் தோட்டம் மாலைக்குள் முழுமையாக இருட்டிவிடலாம். எந்தத் திசையில் போவது என்று பிடிபடவில்லை. எந்தத் திசையில் போனாலும் தோட்ட விளிம்பை அடைந்துவிட்டால் அதன் ஓரமாகவே நடந்து ஆலமரத்தைக் கண்டுபிடித்துவிடலாம். விழுதுகள் படர்ந்து ஒரு வயதான தாடிக்கிழவனைப்போல நிதானமான மரம். அதன் அரவணைப்பில்தான் பேச்சியம்மன் கோயில் இருந்தது. அது பெரிய கோயிலாகவே அவன் நினைவில் பதிந்திருந்தது. எட்டு சாண் தகரக்கொட்டகை கோயில் என தாத்தா நினைவுபடுத்தியவுடன் அவனால் நம்பவே முடியவில்லை. கோழி, புறாவைப்போலக் குனுகத்தொடங்கியதும் துண்டை ஈரமாக்கி அதன் தலையில் போர்த்தினான். அடங்கிப்போனது. தொண்டையை நனைத்துக்கொண்டான். மீண்டும் காட்டைச் சுற்றிலும் பார்த்தான். செம்பனை மட்டை நிழல்கள் சற்று கோரமானவை. ராட்சசியின் பற்கள்போல தரையில் அலைந்தன. பேச்சியம்மனின் பற்களும் அப்படி இருக்கலாம்.

அந்தத் தோட்டத்தின் பூகோள அமைப்பு அவனுக்கு நன்கு பழக்கமான ஒன்று. முன்பு வெளிச்சத்தை வசதியாக உள்ளே அனுமதித்த உயர்ந்த மரங்கள் இருந்த ரப்பர் தோட்டம் அது. சுற்றிலும் புலிகள் உள்ள பெருங்காடு. தோட்டத்துக்கு மையமாக நதி ஓடி காட்டினுள் நுழையும். காடு தொடங்கும் ஒரு கரையில் ஆலமரம் இருந்தது. அவன் அதன் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்து குளித்துள்ளான். கிளைகளில் ஏறி சொரப்பான் குத்தியுள்ளான். தாத்தா அந்த ஆலமரத்தடியில்தான் பேச்சியம்மன் கோயிலை அமைத்திருந்தார். லிங்க வடிவில் இருந்த கல்லில் கருப்புச்சேலை சுற்றப்பட்டிருக்கும். சந்தனக்கண்களுடன் குங்குமம் நீண்ட நாக்காயிருக்கும். தாத்தா சுட்ட கருவாடு, முருங்கை பிரட்டல், கப்ப ரொட்டி போன்றவற்றை அவ்வப்போது பேச்சிக்குப் படையலாக வைப்பார். எறும்புகள் மொய்க்கத் தொடங்கினால் அவன் கப்ப ரொட்டிகளை எடுத்துத் தின்றுவிடுவான். பேச்சி குழந்தைகளிடம் கோவிக்கமாட்டாள் என தாத்தா சொல்லியிருந்தார்.  சில இரவுகளில் தாத்தா கருப்புக்கோழியைப் பேச்சியம்மன் கோயிலுக்குப் பலிகொடுக்க எடுத்துச்செல்வதை அவன் பார்த்துள்ளான். அதுபோன்ற சமயங்களில் தாத்தா அவனை உடன்வர அனுமதித்ததில்லை. மறுநாள் அவன் அங்குக் குளிக்கச் செல்லும்போது கோழியின் இறகுகள் சிதறியிருக்கும். பேச்சியின் நாக்கு சிவந்திருக்கும். பேச்சி மாமிச விரும்பி என அவனுக்கு அப்போதே தெரியும். ஆலமரம் இருந்த ஆற்றின் ஒரு கரையின் ரப்பர் தோட்டத்தைத் தனியார் நிறுவனம் வாங்கியவுடன் அது செம்பனைத் தோட்டமாக மாறி இருள் அடர்ந்தது. இந்தோனீசியத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு செம்பனை குலை அறுக்கத்தெரியாத தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். தோட்டத்தைவிட்டு வெளியேறும் முன் தாத்தா அவர் வளர்த்த அத்தனை சேவல்களையும் கோழிகளையும் பலிகொடுக்க பேச்சி கோயிலுக்கு எடுத்துச்சென்றதை அவன் பார்த்துள்ளான்.

கொன்றை மலர்களை அந்நிலம் ரப்பர் தோட்டம் இருக்கும்போது கண்டதில்லை. பார்க்கும் இடங்களெல்லாம் மஞ்சள் நிறம் அப்பியது. அவை பூத்திருக்கும் இடங்களெல்லாம் வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்க முடிந்தது. கொன்றை மலர்களின் மகரந்தத்தை அவை செம்பனையின் பூக்களில் இணைத்தால் மட்டுமே செம்பனைப் பழங்கள் சிவந்து பழுத்து எண்ணெய் அதிகம் சுரக்கும். குலைகள் பெருக்கும். விந்தை கருமுட்டையில் சேர்ப்பதுபோலதான். அவனுக்குச் சட்டென பொன்னியின் ஞாபகம் வந்தது.

ஊரில் தூரத்துச் சொந்தமென தாத்தாதான் தேடிப்பிடித்துக் கட்டிவைத்தார். சல்லி வேராக இருந்தாலும் ஊருடன் மெல்லிய ஒட்டில் இருப்பது அவருக்கு மெத்த திருப்தி. தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டப்பின் அவர்கள் ஒரு மலாய் கம்பத்தில் வாடகைக்குக் குடியிருந்தார்கள். பலகைத்தரை அதிராமல் பூனையின் காலடிகளைப்போல நடந்துவந்த அவளை அவனுக்கும் உடனே பிடித்துப்போனது. தலைமுடி நடுவகிடுக்கு நேர்க்கோட்டில் மூக்கின் நுனி இருந்தது. மெலிந்து நீண்ட புஜங்களைப் பார்த்தே உடலின் மீத அழகையும் கணித்துக்கொண்டான். முதல் இரவில் தென்னங்கள்ளை ஒளித்து வைத்துவிட்டாள் என ஓர் அறை கொடுத்தபோதுதான் எல்லாமே தொடங்கியது. அறையை வாங்கிக்கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள். அப்படி அவள் நிற்பது அவனுக்குச் சவால் விடுவதுபோல இருந்தது. அவள் தோள்களைப் பிடித்துத்தள்ளினான். அசைக்க முடியவில்லை. மார்புகள் மட்டும் விம்மி விம்மி எழுந்தும் அடங்கியும் தவித்தன. கள்ளைத் தேடிக்குடித்து அவள் முகத்தருகில் ஏப்பம் விட்டான். சத்தமாகக் கத்தி அவள் முகத்தில் கள்ளெச்சிலைக் காரித்துப்பினான். அசையவில்லை. மீண்டும்  அவளை அறைய கைகளை எடுத்துப்போகும்போதுதான் அவள் ‘ஏய்’ என்றாள். அந்தக் குரலில் மெல்லிய உறுமல் கலந்திருந்தது. அவன் பதில் ஒன்றும் பேசாமல் அன்றிரவுக் குப்புறப்படுத்து உறங்கிப்போனான்.

மறுநாள் அவள் ஒன்றும் நடக்காததுபோல எல்லாக் கடமைகளையும் செய்துவைத்ததைப் பார்க்கும்போதுதான் ஆச்சரியமாக இருந்தது. “பொண்டாட்டியாச்சேன்னு சும்மா விட்டேன்” என அவன் சும்மா சொல்லிப் பார்த்தான். அவள் சாந்தமாகவே தெரிந்தாள். முகம் முழுதும் மஞ்சள் பூசியிருந்தாள். நிறைந்த திலகம். அவ்வப்போது மென்மையாகச் சிரித்தாளே தவிர முகத்தில் வேறெந்த மாற்றமும் இல்லை. “பொட்டச்சிக்குத் திமிறப்பாரு” எனச்சொல்லி ‘தூ’ எனத் துப்பியபோது அவனுக்குக் கம்பத்து முட்டையை உடைத்து குடிக்கக்கொடுக்க பூசிய மஞ்சளின் வாசம் அவள் கைகளில் வீசியது. எந்நேரமும் அவள் முகத்தில் ஒரு வெட்கம் பரவியிருப்பதுபோலவே அவனுக்குத் தோன்றியது. இதழ் ஓரங்கள் மேல்நோக்கி இருந்ததால் நிரந்தரமாக முகத்தில் புன்னகை படிந்திருந்தது. அவள் அப்படி இருப்பதை அவன் பெரும் அவமானமாக உணர்ந்தான். அவள் ஏதாவது பதிலுக்குப் பேசினால் தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் என்றும் அதன்பின் புணரவேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆனால் அவள் அப்படி எதுவும் செய்யாமல் அவனுக்கான பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். தாத்தாவுக்குத் தேவையானவற்றையும் முழுமையாக நிறைவேற்றுபவளாக இருந்தாள்.

இரவு வரை அவன் எங்குமே செல்லவில்லை. அவள் அடுக்கிவைப்பதை களைத்துப்போட்டும் தூய்மைப்படுத்துவதை அசுத்தப்படுத்தியும் ஏதாவது பொருளை தேடி எடுத்துவரும்படியும் வேலை வாங்கியபடியே இருந்தான். ஆறேழு கரங்கள் உடையவள்போல் முகத்தில் ஒரு சிறிய சுருக்கத்தைக்கூட காட்டாமல் அவள் அத்தனையையும் இலகுவாகச் செய்துமுடித்தது அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பணிகளை ஏவும்போது அவள் நடையில் அவசரம் இருக்கவில்லை. பூமி அதிராமல் நடக்கும் சதைப்பற்றுள்ள பாதங்கள் அவளுக்கு. ஒருவேளை இரவில் தான் பார்த்தது எல்லாமே போதை உண்டாக்கிய கற்பனையோ என நினைத்துக்கொண்டான். ஆனாலும் கொஞ்ச நாட்களுக்குத் தண்டனையாக அவளை நெருங்காமல் படுத்திருந்தான்.  அதைப்பற்றி அவளும் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. காற்றாடியை அவனுக்கு வாகாகத் திருப்பிவைத்து படுத்துவிடுவாள். பொழுதுவிடியும்வரை கையில் தலைவைத்து ஒருக்களித்துப் படுத்த பாவனையில் எந்த மாற்றமும் இருக்காது. எழுந்தபிறகும் படுக்கையில் சுருக்கம் இருக்காது. பக்கத்தில் ஒருத்தி அவ்வளவு நேரம் படுத்திருந்தாளா என்றுகூட அவனுக்குச் சந்தேகமாக இருக்கும்.

இரண்டு வாரங்கள் கடந்த பின்னர்தான் அவன் அவளை மீண்டும் நெருங்கினான். அதற்கான அறிகுறிகளை காலையில் இருந்தே காட்டத்தொடங்கியிருந்தான். தாத்தாவின் அசைவுகள் இல்லாத சமயங்களில் அவள் பின் கழுத்தைத் தீண்டிவிட்டுச் சென்றான். காதுகளில் ஊதி கூசச்செய்தான். சிற்சில சில்மிஷங்களால் அன்றைக்கு இரவு தயாராகும்படி செய்கை செய்து அவளை வெட்கமடைய வைத்தான். இரவில் அவள் சீக்கிரமே படுக்கைக்கு வந்திருந்தாள். கோபமெல்லாம் குறைந்த கண்களில் பேதையாகத் தெரிந்தபோது தான் கொடுத்த தண்டனை அதிகமோ என்றுத்தோன்றியது. கனகாம்பரத்தைச் சரம் தொடுத்து அணிந்திருந்தாள். கால் விரல் நகங்களுக்கு மருதாணி போடும் வரை கவனம் கொண்டிருந்தாள். ஒளிவீசும் மஞ்சள் வண்ணமாகத் தெரிந்தாள்.  அவள் உடல் அவ்வளவு சூடானதென்றும் அந்தச் சூடு அவனை அவ்வளவு உசுப்பும் என்றும் இரண்டு வாரம் தெரியாமல் இருந்ததை எண்ணி முதல் முத்தத்தின்போதே தன்னை நொந்துகொண்டான். பரிசுத்தமான உதடுகள். ஒரு பயந்த அலுங்குபோல அணைக்கும் உடலை மடக்கி அவனுக்குள் சுருண்டுபோகும் அவளைப் பார்த்து “ஏற்கனவே பழக்கமா? எல்லாம் தெரியுது” எனக் காதோரம் கேட்டபோதுதான் கட்டிலில் இருந்து வீசியெறியப்பட்டான்.

சேலை சரிந்த, கூந்தல் சரிந்த, படுக்கை விரிப்பு சரிந்த கட்டில் அவனுக்குக் காடுபோல் தெரிந்தது. “புருசன தள்ளுவியாடி தேவடியா முண்ட” எனக் கத்தினான். அவள் உடலில் அசைவில்லை. விழுந்த இடத்திலிருந்து அவள் இடதுகால் பாதத்தைப் பார்க்க முடிந்தது. அது அவன் முகத்துக்கு நேராக இருந்தது. ரத்தச் சிவப்பில் மருதாணியை அடையாளம் இல்லாமல் ஆக்கியிருந்தது. வலது காலை மடித்து இடதுகாலுக்குக் கீழ் சொருகியிருந்தாள். கைகள் இரண்டையும் முறுக்கேற்றி மெத்தையில் வலுவாக ஊன்றியிருந்தாள். ஒரே அழுத்தில் மெத்தையில் இருந்து வானுக்குப் பறக்கத் தயாராவதுபோல ஒரு அபிநயம். “கண்டார ஓலி” எனக் கையை ஓங்கியபோது அவள் பார்த்த பார்வையில் பின்னிழுத்துக் கொண்டான். வியர்வையில் முன்னே சரிந்திருந்த கூந்தல் முகத்துடன் ஒட்டிக்கிடந்தது. அதற்கிடையில் கண்கள் அறை முழுதும் அலைந்தன. நகர்ந்தால் விபரீதம் நேரலாம் என அங்கேயே நின்றுகொண்டான். அப்படி நிற்பது, தான் அவளுக்குப் பயப்படவில்லை என சொல்வதாகவும் அர்த்தப்படும் என்பதால் அசையவில்லை. எதிரில் இருந்த கண்ணாடியில் தன் திடமான உடலைப்பார்த்தபோது குமைந்தது.  மடங்காமல் ஒரு மரம்போல  அவள் மெத்தையில் மல்லாக்க சாய்ந்தபிறகுதான் மெல்ல அறையை விட்டு வெளியேறினான்.

இதுநடந்து பல மாதங்கள் கடந்தும் அவன் அவளிடம் பேசவே இல்லை. அவளும் வழக்கமான தன் கடமைகளைச் செய்துகொண்டிருந்தாள். மரலாரி ஓட்டிவிட்டு மூன்று நாள் விடுமுறையில் வருபவனின் கால்களை இரவு முழுவதும் தைலம் தேய்த்துப் பிடித்துவிட்டாள். வாய்க்கு ருசியாக சமைத்து வைத்தாள். கால்விரல் நகங்களிலும் காதுகளிலும் அழுக்கெடுத்து அவனைப் புதியவனாக்கினாள்.  இந்தப் பணிவிடைகள் அவனைக் கிரங்க வைத்தன. பணிவிடைகள் என்பது அவன் உணராதது. தாத்தா அவனை ஒரு வேட்டை நாயாக வளர்த்திருந்தார். அவன் அறியாத அவனது உடல் இடுக்குகளில் எல்லாம் அவள் அக்கறைக்காட்டி தூய்மை செய்தது அவனை நெகிழவைத்தது. சில சமயம் அவளை நெருங்கிச்செல்லும் வேட்கை தோன்றும்போதெல்லாம் இந்திரியங்கள் அனைத்தையும் மனம் சுருக்கியது. முதலில் அவன் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் சில மாதங்கள் தொடர்ந்த உடலின் முடங்கு உணர்வால் அவன் தனக்கு ஏதோ நோய் என்றே பயந்துபோனான். வேறுவழியில்லாமல்தான் கூச்சத்தைவிட்டு நண்பர்களிடம் சொன்னான்.

அவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் அனைவரும் உறங்கிய பின்பு நீலப்பட வீடியோ கேசட்டை ஓடவிட்டு நரம்புகள் முறுக்கியதும் அறைக்குள் நுழைவான். அவளது மிரட்டும் விழி நினைவுக்கு வந்ததும் நரம்புகள் தளர்ந்து சுருண்டுவிடும். அறையை முழு இருளாக்கி அவனுக்குப் பிடித்த ஶ்ரீபிரியாவாகக் கற்பனை செய்துகொண்டு கைகளைத் தொடுவான். அவள் உறக்கத்தின் முணகல் உருமல்போல ஒலிக்கும். கடைசியாக ஒரு நண்பன் தாய்லாந்திலிருந்து வாங்கி வந்த மாத்திரை ஒன்றைக் கொடுத்தான். அவன் உடல் வலுவுக்கு அரை மாத்திரை போதும் என்றான். இரண்டு மாத்திரைகள் போட்டும் எதுவும் நகரவில்லை. இதயத்துடிப்பு அதிகரித்து தலைவலி கொன்றது. அவள்தான் அன்றிரவு முழுவதும் தலையைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள்.

அவனே நேராக தாய்லாந்துக்குச் சென்று தனது உடலில் எந்தக் குறையும் இல்லை என நிரூபித்துக்கொண்ட பின்னர்தான் பொன்னியின் கண்களில் ஒரே ஒருமுறை பயத்தைக் கண்டுவிட்டால் எல்லா மனத்தடைகளும் விலகும் எனப் புரிந்துகொண்டான். அவள் அச்சம் அவளைப் பெண்ணாக்கும். தன்னை ஆணாக்கும் என முடிவெடுத்தான். ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் அந்த அறையில் பேச்சொலி கேட்டது. வெட்டுமரத்தை இறக்கச்சென்ற நாட்டில் தான் ஒரு பெண்ணிடம் எவ்வாறெல்லாம் இருந்தேன் என பொன்னியிடம் சொல்லத் தொடங்கினான். அவள் வனப்பை வர்ணித்தான். அதைக்கேட்டு அவள் அடங்கியே தீர வேண்டும் என்பது அவனது கணிப்பாக இருந்தது. தன்னை வஞ்சிக்க வேண்டாம் என காலில் விழுந்து மன்றாடும் அவளை எட்டி உதைக்க வேண்டும். ஊரிலிருந்து வந்த பெண் இதைத் தாங்கவே மாட்டாள். ஒரு நாய்க்குட்டிபோல காலைச்சுற்றி வரும்போது அணைக்க வேண்டும். அப்போது அவள் கண்ணீரைத் துடைக்கும் கனம் வீரியம் கிளரும். ஒருவாடிய தளிர்போல அவன் முறுகலான கைகளில் அவள் சரிவாள். வாடிய தளிரை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம். அவனால் அனைத்தையுமே தீர்மானிக்க முடிந்தது. முதலில் அவன் தாய்லாந்துகாரியைப்பற்றி உண்மையில் தொடங்கினாலும் மிகையான அவனது வர்ணனைகள் அவனையே உசுப்பிவிட்டன. அவனால் அந்த வர்ணனையை நிறுத்தமுடியவில்லை. அவன் ஆறு மாத வேட்கையை சொற்களில் அதிகமாக்கி புனைந்துகொண்டிருந்தான். கற்பனையின் சாத்தியங்கள் அவனை பிரமிக்க வைத்தன. அவன் மனதில் அதுவரை இச்சைகளைத் தூண்டிய எல்லா பெண்களின் அங்கங்களையும் ஒரு பெண்ணுக்குள் புகுத்தி புணர்ந்தான். அவளிடம் பதில் ஒன்றும் இல்லை. தலையை தொங்கப்போட்டு அமர்ந்திருந்தாள். அவன் தன் வர்ணனையில் இப்போது பொன்னியின் அங்கங்களையும் இணைத்துக்கொண்டான்.  ஒருகணம் ஒரே ஒரு கணம் அவனால் பொறுக்கமுடியாமல் “அவள நெனச்சிக்கிட்டே உன்னைய செஞ்சுக்கிறேன்” என அணுகியபோதுதான் அவனது குறி வீங்கியது. கீழே விழுந்து புரண்டான். பொன்னி எட்டி மிதித்த காலை இறக்காமல் வைத்திருந்தாள். அவள் பாதம் செந்நிறமாக இருந்தது. “தேவடியா முண்ட” எனக் கத்திக்கொண்டே அவன் அறையைவிட்டு ஓடியேவிட்டான்.

“கழிச்சல்ல போறவனே” என தாத்தா காரித்துப்பினார். தொடைகள் இரண்டையும் இறுக்கிப் பிணைந்தும் வலி தாங்காமல் அவன் நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டிருந்தான். அது தனக்கே நடந்ததுபோல அவமானத்தில்  முணங்கத் தொடங்கினார். மண்வெட்டியால் அழுத்தி கீறல் போட்டதுபோல இருக்கும் நெற்றிக்கோட்டின் மையம் கீழ் வளைந்து அவர் முகத்தைக் கொடூரமாகக் காட்டியது. வெண்ணிற உரோமம் அலைந்த மார்ப்பைத் தேய்த்துக்கொண்டே இருந்தார். அவன் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். அவர் முரட்டு ஆசாமி. போதை தலைக்கு ஏறினால் பெண்கள் விசயத்தில் அவரது வீரதீர செயல்களை அவனிடம் சொல்வார். ஒருமுறை சாராய வெறி தலைக்கேறி இரண்டு மூன்று கோழிகளைக் கற்பழித்து கழுத்தைத் திருகி தூக்கியெறிந்ததாகச் சொல்லும்போது அவனுக்கு வியப்பாக இருக்கும். தாத்தாவின் உடல் இன்னும் முறுக்கிவைத்ததுபோல இருந்தது. வயிற்றில் தொடங்கி முதுகு வரை உரோமம் போர்க்கவசம் போல சூழ்ந்திருக்கும்.

போதை தெளிந்த மறுநாள் தாத்தா அவனைப் பார்த்து “பேச்சியம்மா” எனக் கண்கலங்கி அழுதார். தான் செய்த பாவத்தின் விளைவு என அவனை அணைத்துக்கொண்டார். தாத்தா சொன்ன பிறகுதான் அவனுக்கு முன்பு ரப்பர் காட்டு ஓரம் இருந்த பேச்சியம்மன் கோயில் நினைவுக்கு வந்தது. “பேச்சி நம்ம கொல சாமி. உன் அம்மை எனக்கு ஒம்பதாம் பொண்ணு. அவளுக்கு பேச்சாயின்னு பேரு வச்சேன். அதுக்கு முன்ன பொறந்த எல்லாத்தையும் பேச்சி காவு வாங்கிட்டா. ஊருல இருந்து வந்த பெறவு அவள நெனைக்கலன்னு கோவம். அப்பதான் அவளுக்கு ஒரு கோயில் வச்சி, கருவோலை வளையல் செஞ்சி போட்டு, ரெட்ட கடா பலி கொடுத்தேன். பேச்சாயின்னு பேரவச்சிக்கிட்டு உன் அம்மை கள்ளம் செஞ்சா. உன்ன பெத்தெடுத்த நாள்ல ஒனக்காக ஒரு கடாவை பலி கொடுத்தேன். பேச்சி ஏத்துக்கல. உன்னைய காத்து உன் அம்மைய பலியா எடுத்துக்கிட்டா. கம்பத்துக்கு வந்த பெறவு பேச்சிய மறந்தே போயிட்டேன். ஏண்டா மறந்தன்னு உம்பொஞ்சாதி ஒடம்புல பூந்து ஞாவகப்படுத்துறா. பேச்சி என்னை மன்னிச்சிடு ஆத்தா,” என வானத்தைப் பார்த்து கதறினார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாகவும் மாறி இறந்துவிட்டார். அவருடன் சேர்த்து துப்பாக்கியும் புதைக்கப்பட்டது.

***

செல்வம் இவ்வளவு தெளிவாக நடந்தவற்றை எழுதியுள்ளது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதேபோல ‘அவன் இவன்’ என என்னைச் சுட்டியுள்ளதும் அந்நியமாக இருந்தது. அடுத்தடுத்த தலைமுறைக்கு நான் விட்டுப்போகும் வரலாற்றுக் கதை என்னை கொடியவனாகக் காட்டுவது சங்கடமாக இருந்தது. நான் அவ்வளவு மோசமானவன் இல்லை. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல் அவன் கதையில் எங்குமே இருக்கவில்லை. திட்டமிட்டே நீக்கியிருந்தான். நேர்த்தியாக நான் சொன்ன சம்பவங்களை முன்னும்பின்னுமாக அடுக்கி படிப்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்படி செய்துள்ளான். எனக்கும் அவன் அம்மாவுக்கும் இடையில் நிகழ்ந்த அந்தரங்கங்கள் அவன் புரிதலுக்காகச் சொல்லப்பட்டவை; அதை சுருக்கமாகச் சொன்னால் போதும் என்றேன். அப்படி சொல்லும்போது பொன்னியின் நினைவு மீண்டும் மனதில் எழுந்து உடலை அழுத்தியது. மங்கலாகத் தெரிந்த அவளது படத்தைப் பார்த்தேன்.

செல்வம் ஒன்றும் சொல்லாமல் தொடர்ந்து கதையை வாசிக்க ஆரம்பித்தான்.

***

20180304_162353பேச்சி ஓர் ஆங்கார தெய்வம் என அவனிடம் தாத்தா சிறுவனாக இருக்கும்போது அடிக்கடி கூறியுள்ளார். அவள் காளியின் அவதாரம். ஆறு கைகளும் நீண்ட நாக்கும் பிதுங்கிய கண்களும் கோரப் பற்களுமாக இருப்பாளாம் பேச்சி. காலில் ஓர் ஆடவனை மிதித்துக்கொண்டும் இரு கைகளில் குழந்தையை அணைத்துக்கொண்டும் செத்தவனின் குடலை மாலையாக அணிந்துகொண்டும் இரு கைகளில் ஆசி வழங்குவதை  அவன் கனவுகளில் பலமுறை கண்டுள்ளான். “பேச்சி காலுக்கடியில கெடக்குறது ஆருன்னு நெனைக்கிற. வெவரம் தெரியாதவன் ஏதேதோ சொல்லுவான். எனக்குத் தெரியும். அது அவ புருஷன்தான். அவ பேச்சி இல்லடா. பேய்ச்சி. சோதிடத்துல தனக்கு பொறந்த கொழந்தையால சாபமுன்னு பேச்சி பொறந்துவச்ச ஒடனே அவ புருசன் கொழந்தைய கொல்ல வரான். கொலங் காக்க அவன குத்திக் கொடலெடுத்து மாலையா போட்டுக்கிட்டா.” என தாத்தா சாகும் முன் உடல் அதிர சொன்னப்பிறகுதான் அவன் பேச்சிக்குப் பலிகொடுத்து வணங்குவதென முடிவுசெய்தான்.

செம்பனை தோட்டத்தின் விளிப்பை அடைந்துவிட்டிருந்தான். அதற்குப்பின் அடர்காடு. விளிம்பில் வளர்ந்திருந்த செம்பனைகளைக் கண்டு மிரண்டான். அவை ஆண்மரங்கள். வண்டுகள் வந்து மகரந்தத்தைச் சேர்க்காமல் குலைகள் சூம்பி தென்னையைப்போல வளர்ந்திருந்தன. அப்பகுதிக்கு வேலையாட்கள் யாரும் வரப்போவதில்லை. அம்மரங்கள் குலைகளைக் கொடுப்பதும் இல்லை. அவை காட்டின் ஒரு பகுதியாகிவிட்டிருந்தன. பல ஆண்டுகள் மனிதனின் பாதம் படாத நிலம் என மண்டிக்கிடந்த புதர்கள் கூறின. கொசுக்கள் வினோத உயிரைப் பார்த்த ஆச்சரியத்தில் மொத்தமாக அவனைச் சூழ்ந்துகொண்டன. கோழி தலையைத் தொங்கப்போட்டுவிட்டது. ஈரத்துணி எங்கோ விழுந்தும் அதனிடம் அசைவில்லை. காட்டின் முனையிலிருந்து இப்போது தோட்டத்தைப் பார்க்க முற்றிலும் வேறாக இருந்தது. காற்றில் எப்போதாவது பறந்துவரும் காய்ந்த இலைகள் ஒவ்வொன்றும் வினோதப் பறவையென அவனைத் திடுக்கிட வைத்தன. நடக்கும் இடமெல்லாம் ஈரம். தொடைகளுக்கிடையில் ஏதோ ஊர்வதை உணரமுடிந்தது. அட்டையாக இருக்கலாம். அகற்றிப்பார்க்க அது இடமில்லை. கால்கள் ஈரப்புற்களில் ஆழ புதைந்தன.  மீனா செடிகள் முழுமையாகச் சூழ்ந்துகொண்டு ஒவ்வொரு செம்பனைமரமும் பெரும் புதர்கள்போல காட்சி கொடுத்தன. சிறிது நேரத்தில் அவனால் ஓடையின் சலசலப்பை வைத்து அவ்விடத்தை அடையாளம் காண முடிந்தது. செம்பனை நீர்விழுங்கி. நதி ஒரு சூம்பிய நீரோட்டமாக எஞ்சி இருந்தது. அதைப் பின்தொடர்ந்து போனால் ஆலமரம் வரும். ஆலமரத்தின் அருகில் பேச்சியம்மன். உற்சாகம் பிடித்துக்கொண்டது. இருட்டுவதற்குள் கோழியை பலிகொடுக்க விரைந்து நடந்தான்.

இப்போது அவனுக்கு அந்த நிலம் மிகவும் அறிமுகமானதாக மாறியது. ரப்பராக இருந்தபோது தடுக்கிவிட்ட வேர் முறுக்குகள் இப்போது இல்லாதபோதும் நினைவில் வைத்து குதித்து ஓடினான். சகதி புள்ளிகளாக உடையில் தொற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்த வரைபடம்போல படிந்தது. நேரம் நெருங்க நெருங்க இங்குதான் இங்குதான் என மனம் அரற்றியது. உடல் முற்றிலும் அவனைச் சிறுவனாகவே ஏற்றுக்கொண்டிருந்தது. சரியாக ஆலமரத்தைப் பார்க்கவும் முனிப்பன்றி அருகில் வந்து பாயவும் சரியாக இருந்தது.

***

நேற்று சொல்லிமுடித்த இடத்தோடு செல்வம் எழுதி முடித்திருந்தான். இனி அவனுக்கு முடிவு தேவை. அவன் சொல்வதுபோல கதையின் முடிவு. நான் அவனிடம் மிச்ச கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.

“அற்புதங்கள போல கொடூரத்தையும் வாழ்க்கையில ஒருதரவதான் பாக்க முடியும். ஒரு புலி உம்முன்னுக்குப் பதுங்கினா ஒன்னால ஓட முடியாது பாத்துக்க. அதை திரும்பப் பாக்க கெடைக்காது. மனசு ஓடவுடாது. ஒரு நல்ல தெனவெடுத்த முனி, சீறி நிக்கும்போது கத்துக்கிட்ட எல்லா வித்தயும் மறந்துபோச்சி. அதோட கோரப்பல்ல நேருக்கு நேரா பாத்தேன். செவன் தலையில இருக்கும்பாரு பெற. அதுபோல அது வாயில ரெட்ட பெற. முடிய சிலுப்பிக்கிட்டு ஓடியாருது. ஒரு அடி பின்ன வைக்கல நா. என்னைய அப்படியே தூக்கி போட்டு மேல பறக்கவுடுது. விழுந்ததும் கொம்பன குதறுன மாதிரி கொதரப்போவுது. நான் பேச்சின்னு கத்துனேன். காட்டுக்குள்ள நா பேசுன மொத வாத்தையும் கடசி வாத்தையும் அதுதான்.

அப்பதான் கத்தியோட ஒரு பொம்பள பாஞ்சா. கருப்பு பாவாட மட்டும் சுத்தியிருக்கா. மொல ரெண்டும் ஆங்காரமா குலுங்குது. குத்துப்பட்ட முனி மொறச்சிக்கிட்டு அவளப்பாத்து பாஞ்சி வருது. திரும்ப சீறிப்பாஞ்சி கழுத்துல குத்துறா. வயித்தக் கிழிக்கிறா. ரத்தம். அவ ஒடம்பு பூரா ரத்தம். ரத்தம்தான் அவளுக்கு ஒடையாவுது. என்னால் ஏந்திரிக்க முடியல. கருப்பு பெட்ட எங்கயோ பறந்திருச்சி. தொடையில சதை கிழிஞ்சி தொங்குறத அப்பதான் பாத்தேன். எலும்பே செவப்பா தெரியுது. ரத்தத்த பாத்ததும் மயக்கம் வந்துடுச்சி. கண்ணுல ஏதோ பீச்சி அடிச்சப்ப சட்டுன்னு முழிச்சேன். அவ மொலப்பாலு. கையெடுத்து கும்பிட்டேன். வாத்த வரல. சிரிச்சா. ஒடம்பபோல பல்லும் கருப்பா கெடந்துச்சி. பசிச்சது. பாலு கொடுத்தா. நா குடிச்ச மொத தாய்ப்பாலு. என்னைய தோள்ள தூக்கி போட்டுக்கிட்டு கல்லு முள்ளு பாக்காம ஓடுனா. ரொம்ப தூரம் நிக்காம ஓடுனா. காத்த தின்னுகிட்டு ஓடுனா. அது ஓட்டம் இல்ல. பாய்ச்ச. அவ முதுகுல சரிஞ்சிகிட்டே அவளோட எட பாதத்த பாத்தேன். செவந்திருந்திருச்சி. அது பொன்னியோட பாதம். தாயோட பாதம்.”

எனக்கு அழுகை பீரிட்டுக்கிளம்பியது. மூச்சடைத்தது. கதறி அழ உடலில் காற்று போதவில்லை. வீரிட்டு அழுதால் கதையை முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் செத்துவிடுவேனோ என பயம்வந்தது. அடக்கிக்கொண்டு கண்களைத் துடைத்தபடி தொடர்ந்து பேச்சியின் தரிசனத்தைச் சொல்ல செல்வத்தைத் தேடினேன். கதையின் முடிவுக்குக் காத்திருந்தவன் அதை தெரிந்துகொள்ளாமலேயே அறையை விட்டுப்போயிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

ஓவியம் : தீர்த்த பாதா

3 comments for “பேச்சி

  1. March 15, 2018 at 7:59 pm

    அம்மாடி ……….

  2. PON MAHALINGAM
    March 21, 2018 at 3:36 pm

    பேச்சி படித்தேன்.
    சம்பவங்களை மனக்கண்ணில் தத்ரூபமாகக் காணமுடிந்தது. மலேசியாவில் வாழ்வதால் காடுகளையும் விலங்குகளையும் உங்களால் உன்னிப்பாக கவனித்து எழுதமுடிகிறது. ஜெயமோகனின் காடு வாசிக்கும்போது காட்டுக்குள்ளேயே சென்ற உணர்வு தோன்றும். அதேபோல் செம்பனைக் காட்டுக்குள் சற்று நேரம் உலவிய உணர்வு வந்தது பேச்சி வாசிக்கும்போது.
    மலேசியா செல்லும்போது பேருந்தில் இருந்தவாறே செம்பனைத் தோட்டங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இறங்கி உள்ளே சென்று பார்த்ததில்லை. ஒற்றை முனியிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்ற உபாயத்தை இந்தக் கதையில் தெரிந்துகொண்டேன்.
    கதை தொடங்கியதுமே தென்படும் தலைமுறை இடைவெளி என்னை இயல்பாகக் கதைக்குள் பொருத்திக்கொள்ள உதவியது.
    “அம்மாவைத் தாத்தா தேவடியாக் கழுதை என்றுதான் திட்டுவார்” என்ற வரி துணுக்குறச் செய்தது. ஒருவேளை இவர் தந்தைவழித் தாத்தாவோ என்று நினைத்தேன். பெற்ற மகளைத்தான் சொல்கிறார் என்பது பின்னால்தான் வருகிறது.
    வட்டார வழக்குச் சொற்கள் சில எனக்குப் பிடிபடவில்லையென்றாலும் சூழலை வைத்துப் பொருள் கொள்ளமுடிகிறது. பொன்னி அறிமுகமாகும்போதே அவள் இப்படித்தான் இருப்பாள் என்று ஊகித்தேன். கதையில் என்னைக் கவர்ந்த பாத்திரம் பொன்னிதான். நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்ததற்கு நன்றி நவீன்.
    -பொன் மகாலிங்கம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...