மலாய், சீன இலக்கியங்களின் எழுச்சியும் தனித்து வளர்ந்த தமிழ் இலக்கியமும்
இக்காலகட்டத்தில்தான், (1950களில்) மலாய், சீன இலக்கியங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
சீன இலக்கியத்தில் சமூகம், கலாசாரம் சார்ந்து இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார் டாக்டர் டான் சீ லே (Chee Lay, Tan, 2015). முதலாவது மலாயா சீன இலக்கியத்தின் தனித்தன்மையை வளர்க்கும் நன்யாங் மயமாதல் இயக்கம். சீனா மீது பற்றை வலியுறுத்தும் இறக்குமதி இலக்கியப் போக்குக்கு மாற்றான இந்தப் போக்கு உள்ளூர் எழுத்துகளை வளர்க்கும் உள்ளூர் முயற்சிகளை வலுப்படுத்தின. இதன் ஒரு பகுதியாக ஏராளமான மலாய் இலக்கியங்கள் சீனத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. மற்றது 50களில் தைவானில் எழுந்த நவீனத்துவ இயக்கத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நவீனத்துவ எழுத்து இயக்கம்.
அதேபோல் அசாஸ் 50 (Asas ’50) எனப்படும் Angatan Sasterawan 50 என்ற இலக்கிய இயக்கத்தின் வாயிலாக மலாய் இலக்கியம் புதிய எழுச்சியைப் பெற்றது. சமூக அக்கறையுடன் தீவிர இலக்கியம் படைக்கப்பட்டது. மலாயாவின் இந்த சீன, மலாய் இலக்கிய எழுச்சிகளின் மையங்களாக சிங்கப்பூர் அப்போது திகழ்ந்தது. இந்நாட்டின் மூன்று இனங்களும் தங்களது இன, மொழி, பண்பாட்டுக் கலாசார மேம்பாடுகளை இலக்கியம் வழி தீவிரப்படுத்திய காலகட்டம் அது.
அதேநேரத்தில், இந்த இலக்கிய எழுச்சிகள் தமிழில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதைக் கவனித்தில் கொள்ளவேண்டும். பிற இனத்தவரிடமும் வெவ்வேறு மொழிகள் பேசும் இந்தியரிடையும் உரையாடும் பொது மொழியாக மலாய் மொழி இருந்தபோதும், பின்னர் தேசிய மொழியாக ஆனபோதிலும் மலாய் இலக்கியம் குறித்த அக்கறை சீனர்களிடம் ஏற்பட்டதைப்போல் தமிழர்களிடம் ஏற்படவில்லை. அதேபோல் தமிழ் இலக்கியமும் மற்ற இனங்களால் கண்டுகொள்ளப்படவில்லை.
இதற்கு இனச் சமூகங்கள் தனித் தனிக் குழுக்களாக இயங்கியதுடன், தமிழ்நாட்டு இலக்கியச் சிந்தனையை அடியொட்டி சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வார்ப்புகள் இருந்து வருவதும் காரணமாக உள்ளது.
மொழி, இலக்கியம் மூலம் தமிழ் உணர்வை எழுச்சியுறச் செய்த அதேநேரத்தில் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டிய தேவை குறித்தும் சாரங்கபாணி குரல் எழுப்பியுள்ளார்.
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் 1962 மார்ச் 16, 17, 18 தேதிகளில் சிங்கப்பூர், மலேசியாவின் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழி எழுத்தாளர்களையும் ஒன்றுகூட்டிய முதலாவது மலாயா எழுத்தாளர் மாநாட்டில் பேசிய சாராங்கபாணி, தேசிய இலக்கியத்தின் தேவை குறித்துப் பேசுகிறார் (தமிழ் முரசு 18.3.1962). அந்தத் தேசிய இலக்கியம் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் என எந்த மொழியிலும் எழுதப்படலாம் என்றார். சீனர்களாய், தமிழர்களாய், மலாய்க்காரர்களாய் சமூக அடிப்படையில் வாழ்பவர்களை ஒரே நாட்டினராய் உணரச் செய்வதற்கான இலட்சியங்களை உருவாக்கு இந்தத் தேசிய இலக்கியம் தேவை எனக் கூறியுள்ளார்.
மொழிபெயர்ப்பும் இலக்கியப் பரிமாற்றமும்
இக்காலகட்டங்களில், ஆங்காங்கே மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பி.பி.காந்தம் தமிழ்முரசில் சீனச் சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளார். சூசை என்பவர் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்திலும் மலாயிலும் மொழி ஆக்கம் செய்துள்ளார். சி.கமலநாதன், சோசப் செல்வம் ஆகியோர் மலாய்ப் பாடல்களை தமிழாக்கம் செய்துள்ளனர். சீன மொழிப் பாடல்களை மெ.சிதம்பரம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் (முல்லைவாணன், 1979).
எனினும், பெரிய அளவிலான பண்பாட்டு, சிந்தனைப் பரிமாற்றங்கள் இல்லாததால், ஓர் ஒட்டுமொத்தமான சிங்கப்பூர் சமூகப் பார்வை என்பது தமிழ்ப் படைப்புகளுக்கு சாத்தியமற்றதாகிறது. மற்ற இனங்களுக்கிடையிலான ஊடாட்டங்கள், உரசல்கள், போட்டிகள், மதிப்பீடுகளைக் காண்பது அரிதாகிறது.
தமிழ்ச் சமுதாயத்துக்குள்ளிருக்கும் பிரச்சினைகளும் சவால்களும் பூசல்களுமே முக்கிய கதைக் களங்களாக உள்ளன. படைப்புகளில் அவ்வப்போது வந்து செல்லும் சீன, மலாய் பாத்திரங்களும் (லட்சியங்களின் ஊனங்கள், மா.இளங்கண்ணன், லாட்டிரி சீட், செ.ப.பன்னீர்செல்வம்,) நல்லவர்களாகவும் நல்லிணக்கம் மிக்கவர்களாகவுமே காணப்படுகிறார்கள்
எனினும், இன விவகாரங்கள்பற்றி, ஆங்கிலேயர்களும் சீனர்களும் தமிழர்களும் தங்களது வெளியையும் உரிமைகளையும் எடுத்துகொண்டதுபற்றியும் தங்களது பூர்வீக நாட்டில் தாங்கள் சிறுபான்மையினராகிவிட்டது பற்றியும் மலாய் இலக்கியத்தில் கதைகளிலும் வலியோடும் வலிமையோடும் பதிவுசெய்திருப்பதை இந்த ஆண்டு தேசிய கவிதை விழா (28.7.2017) தொடக்கநிகழ்ச்சி சிறப்புரை ஆற்றிய மலாய் இலக்கிய ஆய்வாளரும் தேசிய கல்விக்கழக விரிவுரையாளருமான டாக்டர் சாய்டா புவாங் சுட்டினார். 1830களில் சிங்கப்பூரில் வாழ்ந்த துவான் சிமி என்ற கவிஞர் முதல் இன்றைய கவிஞர்கள் இதுகுறித்து எழுதியிருப்பதை விளக்கிய துவான் சிமி தமது கவிதையில் கிலெங் குறிப்பிட்டிருப்பதை எவ்விதத் தயக்கமுமின்றி அவர் வாசித்தார். அதுகுறித்துக் கேட்டபோது, மலாயில் கிலெங் என்பது கலிங்கத்தில் இருந்து வந்தவர்களைக் குறிக்கும் சொல். அந்த அர்த்தத்தில்தான் மலாய்க்காரர்கள் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இந்தியர்களுக்குச் சங்கடம் தரும் சொல் இது என்று இதுவரை தமக்குத் தெரியாது என்று மன்னிப்புக்கேட்டார்.
இனங்களின் பண்பாடுகளுடன் வலிகளையும் பெருமைகளையும் தலைமுறைகளுக்குக் கடத்துபவை இலக்கியங்கள். இலக்கியப் பரிமாற்றங்களும் உறவாடல்களுமே இனங்களுக்கிடையிலான கசப்புகளைக் காயம் ஏற்படுத்தாமல் வெளிப்படுத்தி, அவற்றைக் களைய வழிகளைக் கண்டடைந்து, இயல்பான ஒட்டுறவை வளர்த்தெடுக்க முடியும்.
அரசாங்கத்தின் ஆதரவுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புகளும் நான்கு மொழிப் படைப்புகளையும் தொகுப்புகளும் பெருகி வருகின்றன.
The Poetry of Singapore (1985), The fiction of Singapore (1990), Words for the 25th Readings by Singapore writers (1990), Journeys: Words, Home and Nation (1995), Memories and Desires, A Poetic History of Singapore (1998), Rhythms: A Singaporean Millennial Anthology of Potry (2000), Reflecting on the Merlion (2009), Fifty on 50 (2010), UNION (2015), Singathology (2015), Eye/Feel/Write: Experiments in Ekphrasis (2015), Love at the Gallery (2017), SG Poems 2015-2016 (2016) போன்ற பல நான்கு மொழி இலக்கியத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள படைப்புகளும் இலக்கிய வரலாறு முன்னுரைகளும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்த அறிமுகத்தை மற்ற மொழியினருக்குத் தருகின்றன.
எனினும் வெவ்வேறு இன, மொழி, சமய அடையாளங்களைக் கொண்ட மக்களும் ஒரு நாட்டின் குடிமக்களாக புதிய அடையாளங்களுடன் இந்த நாட்டில் வேரூன்றியபோதிலும் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த தேசியக் கலை, இலக்கிய உருவாக்கம் என ஒன்று இல்லாதநிலையில், தனித்தனி இனக்குழுக்களாகவே ஒவ்வொரு சமூகமும் அதனதன் அக்கறைகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
தனித்துவிடப்பட்ட சிங்கப்பூரில் செழித்த தமிழ் இலக்கியம்
அறுபதுகளின் மத்தியில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து, பிரிந்து, தனிநாடாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறது. பொருளியல் வளர்ச்சி ஒன்றையே இலக்காகக்கொண்டு சிங்கப்பூரின் ஆரம்பம் இருந்த அக்காலகட்டத்தில், இந்த நாட்டை அதன் குறைநிறைகளோடு, அதனுடனான ஒட்டுதல் விலகல்களோடு தங்கள் நாடாக இலக்கியம் மூலம் வடித்தெடுக்கும் முயற்சியில், பி. கிருஷ்ணன், மா.இளங்கண்ணன், இராம.கண்ணபிரான், நா.கோவிந்தசாமி, சே.வெ.சண்முகம், பொன்.சுந்தரராசு, பரணன், முல்லைவாணன், ஐ.உலகநாதன் மெ.இளமாறன், முருகதாசன் க.து.மு.இக்பால், அமலதாசன், பார்வதி பூபாலன் போன்ற பல சிங்கப்பூர் படைப்பாளர்கள் தீவிர பங்காற்றுகின்றனர். சீர்திருத்தக் கருத்துகளை எழுதி வந்த ந.பழநிவேலு, சிங்கை முகிலன் போன்றோர் பிரச்சார பாணியிலிருந்து மாறி, சமூகம் சார்ந்த யதார்த்த பாணியில் எழுதத் தொடங்கினர்.
சிங்கப்பூரின் வளர்ச்சியூடே தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அல்லல்பாடுகளையும் கதைகளாகவும் கவிதைகளாகவும் வடித்தனர். தமிழகத்துடனான உறவுகள், ஊர், உணர்வுசார்ந்த பற்று ஒரு பக்கம், வேலை, வாழ்க்கை உயர்வு போன்றவற்றால் இந்த நாடு தந்த உயர்வுமனப்பான்மை மற்றொருபக்கம் என அலைக்கழித்த உழைப்பாளி வர்க்கத்தின் மன உளைச்சல்கள், சாதி அடையாளங்களால் ஏற்பட்ட தாழ்வுகளிலிருந்து உயர்வதற்கான போராட்டம் என சமூக அடையாள மாற்றங்களையும் அதனூடாக பரிணமித்த பண்பாட்டு மாற்றங்களையும் இந்த காலகட்டத்தின் படைப்புகள் (எ.கா. இழப்புகள், நாடோடிகள், கண்ணபிரான்) பதிவுசெய்துள்ளன.
இந்த உளப் போராட்டங்களையும் அதன்மீதான விமர்சனங்களையும் மறைமுகமாக அல்லது தணிந்த தொனியில் சொல்வதற்காக வகைமை சார்ந்த பல முயற்சிகளையும் படைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். உருவகக் கதைகள் (சிங்கை முகிலன்), நனவோடைக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் (சே.வெ.சண்முகம்) போன்ற பல முயற்சிகளைச் சொல்லலாம். பா மு கழகத்தில் வெள்ளி விழா – (தமிழ் முரசு 28.10.73) பராக்! கும்பகர்ணன் குமரப்பா (6.1.74), சந்திர மண்டலத்தில் சாம்பு ஐயர் (27.1.1974) சிங்கை சாந்தியின் (மு.அமீர் ஹம்சா) போன்ற சமூக மனப்போக்குகளை விமர்சிக்கும் அங்கதக் கதைகள் குறிப்பிடத்தக்கவை.
பாரதியைவிடுத்த பாரதிதாசனைப் போற்றக் காரணமான தமிழ் மரபு
இக்காலகட்டத்தில் அடுத்த தலைமுறையை ஒழுக்கமிக்கதாக, தமிழ்ச் சிந்தனையோடு பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்பதே இலக்கியத்தின் பொது இலக்காக இருந்துள்ளதைக் காணலாம். தமிழ் இலக்கியத்தில் பல கட்டுடைப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. கு.அழகிரிசாமி தமிழ்நேசனுக்கே வந்து பணிபுரிந்து, கதை வகுப்புகளையும் நடத்தியுள்ளார். புதுமைப்பித்தன் கதைகள் தமிழ்முரசில் பிரசுரமாகின. காரசாரமான விவாதங்களும் நடந்துள்ளன. அன்று தமிழகத்தில் வெளிவந்த பத்திரிகைகள், இதழ்கள் பெரும்பாலும் அனைத்தும் இங்கு கிடைத்துள்ளன. லா.சா.ரா, கு.பா.ரா, விந்தன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் என பல எழுத்துகளையும் தேடிப் படித்திருக்கிறார்கள். மேற்கத்திய, ரஷ்ய எழுத்துகளை மொழிபெயர்ப்புகள் மூலம் அறிந்துள்ளனர். ஆனாலும், ஒழுக்கப் போதனைக்காகவே எழுதிய மு.வவையே பற்றிக்கொண்டுள்ளனர்; இன்றுவரையிலும் பிள்ளைகளுக்கும் தருகின்றனர்.
வேதமரபை முன்வைத்து பாரத தேசம் என்று முழங்கிய பாரதியைவிடுத்து, 2,000 ஆண்டு சங்ககாலப் பாரம்பரியத்தை முன்நிறுத்திய திராவிடம் பேசிய பாரதிதாசனைக் கொண்டாடியுள்ளனர். பாரதிதாசன் ஆதர்ச கவிஞராகத் திகழ்கிறார். வசதி, கல்வி அறிவு குறைந்தவர்களையும் தனிஆட்களாக வாழ்ந்தவர்களையும் மேற்கத்திய தாக்கம்கொண்டிருந்தவர்களையும் அதிகளவில் பெற்றிருந்த அன்றைய சமூகத்தின் தேவை அது. பொருளாதார பலமற்ற சிறுபான்மையான தமிழ்ச் சமூகம், தடுமாற்றங்களால் வழிமாறிப்போய்விடாமல், இந்நாட்டில் நிலைபெற்று உயர்வுநோக்கிச் செல்ல இனம், மொழி சார்ந்த உயர்வுமனப்பான்மை மிகவும் தேவைப்பட்டது. அதற்காக எண்ணத்தையும் மனதையும் எழுத்தையும் இறுக்கிப்பிடித்து வைத்திருந்தனர் படைப்பாளர்கள். பெரும்பாலும் சாதாரண தொழில்களைச் செய்த அன்றைய படைப்பாளிகள், கிடைத்த மிகக் குறைந்த நேர ஓய்வில், கடும் மூளை உழைப்பைக் கோரும் படைப்பிலக்கிய வாசிப்பிலும் படைப்பிலும் ஈடுபட்டதை, தங்கள் மீதான வலியுறுத்தலாகவும் சுய ஊக்கமாகவுமே காணமுடிகிறது.
வளர்ச்சியின் பக்கவிளைவான வெற்றிடம்
ஏறக்குறைய ஒரு தலைமுறைக்காலம். இலக்கியம் மெல்ல எழுந்து, வளர்ந்து, நிலைபெறத் தொடங்கியிருந்த 1970களின் இறுதியில் பொருளியல் வளர்ச்சியில் அக்கறை செலுத்திய அரசாங்கத்தின் பயனீட்டுவாத சிந்தாந்தம், துரித நகர மறுசீரமைப்பினால் சமுதாய அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், சாரங்கபாணியின் தளர்வு, மறைவு, தமிழ் முரசு, தமிழ் மலர் நாளிதழ்களின் நலிவு எல்லாமாகச் சேர்ந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றன.
தமிழாசிரியர்கள் பற்றாக்குறையினால், ஆங்கிலக் கல்வி கற்போர் பெரும்பாலும் மலாய் மொழியை இரண்டாம் மொழியாகக் கற்க நேர்ந்ததால் தமிழ்ப்படிப்பறிவும் குறைகிறது. 1957ல் சிங்கப்பூர் இந்தியர்களில் 48.6% தமிழறிவு உடையவர்களாக இருந்துள்ளனர். 1970ல் அது 38.% ஆகக் குறைந்துள்ளது (ஜான் கிளாமர், 1981). டாக்டர் கோ கெங் சுவீயின் 1980ஆம் ஆண்டு கல்வி அறிக்கை, தமிழ்ப் பிள்ளைகளில் கிட்டத்தட்ட 45% தமிழை இரண்டாம் மொழியாகவும் 55% மலாய் அல்லது மாண்டரினை இரண்டாம் மொழியாகவும் பயில்வதைக் காட்டுகிறது (கோ.கந்தசாமி, 1981).
தொடரும்
நவீன்,
வணக்கம். லதா எனக்குப் புலனத்தில் இத்தொடர்பை அனுப்பி வைத்ததால், இக்கட்டுரையைக் படிக்க இயன்றது. நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை.
பாராட்டுகள்.பங