சித்துராஜ் பொன்ராஜ் கவிதைகள்

அபிப்பிராய பேதங்கள்சிந்துராஜ் பொன்ராஜ்2

என் அபிப்பிராயங்கள் அனைத்தையும்
வழவழப்பான கூழாங்கற்களாக்கி
வீட்டு வரவேற்பறையில் உள்ள
மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன்.

‘நல்லவிலைக்கு வந்தால் ஒரு கடலும்
வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா.

இன்று ஞாயிற்றுக்கிழமை
இருவரும் கடல் விற்கும்
கடைக்குப் போனோம்.

’மாதாந்திர வாடகைக்கு
பௌர்ணமி அலைகள் சகிதம்
சமுத்திரமே கிடைக்கும்’ என்றான்
கடல் விற்பவன்.

சமுத்திரம் வாங்கி வந்ததில்
மனைவியும் லலிதாவும் மகிழ்ந்தார்கள்.

சமுத்திரத்தையே முறைத்துப்
பார்த்துக்கொண்டிருந்தது
எங்கள் வீட்டுப்பூனை.

’சீ அதற்கென்ன தெரியும்
சனியன் நேற்று வந்ததுதானே’ என்றேன்.

‘அடுத்து ஆமை வாங்கலாம்’ என்று
அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா மறுத்தாள்.
புல்லாங்குழல் வைத்திருக்கும்
கிருஷ்ணன் பொம்மைபோல்
ஆமை வீட்டுக்குக் கேடு
எல்லாம் ஊதிக்கொண்டு போய்விடும்.

மீனும் திமிங்கிலமும் ஆமையும்
பிய்த்துப்போட்ட ரொட்டித்துண்டுகளாய்ச்
சூரியனும்

நீர்மட்டத்தின் மீதிருக்கும்
பசியோடு சுருண்டு படுத்திருக்கிறது
எங்கள் வீட்டுச் சமுத்திரம்.

களவுத்தொகைசிந்துராஜ் பொன்ராஜ்

நீ கலந்து தந்த காப்பியைப் போன்ற
நிறம் உனக்கு.

விசைகளை நீக்கிவிட்டுச்
சனிக்கிழமை மேய்கிறாய்.

கனைத்துக் கொண்டு ஓடுகின்றன
நம் மத்தியானங்கள்.

அலுவலகம் இல்லாத சாவகாசத்தில்
படுக்கை முனைகளை
மடித்துத் தின்கிறோம்.

தொலைபேசி அழைப்பு
என்று எழுந்து சென்றாய்.

ஜன்னல்களை ஆபரணமாக
மாட்டிக்கொண்ட
உன் நிர்வாணம்

கம்பளம் போர்த்திய
தரையாய்ச் சரசரக்கிறது.

தோள்மீது கட்டிடங்கள் சாய
நகம் கடித்துப் பேசுகிறாய்.

கனத்த திரை ஒதுங்க
ஏற்படும் சில்லிப்பில்

குதிரைகளின் வயிற்றைப்போல்
கரும்பச்சை சியாமள குழிவு உனக்கு.

ஓநாய்கள் போன்ற
தாமிர நிறக் கண்களை
எங்கிருந்து கொண்டு வந்தாய்.

படுக்கையைச் சுற்றியும்
வெள்ளிக் குழாய்களாய் வெளிச்சம் வழிய

மேசையோர விளக்குகளின்
அடியில் தீப்பற்றி எரிகின்றன
நாம் கவிழ்த்து வைத்த புத்தகங்கள்.

சர்க்கஸ் சுதந்திரம்

சர்க்கஸ் முடிந்த பின்பு
கோமாளிகளின் கையெழுத்துக்கள்
வாங்கியாகிவிட்ட பின்பு
யானையும் சிங்கமும் கரடியும்
ராத்திரிச் சாப்பாடு சாப்பிட
வீட்டிற்குப் போன பின்பு
தரையில் சரம் சரமாக
சுருட்டி வைக்கப்பட்டிருந்த
பல வண்ண விளக்குகள்
இலவசமாய் வேறு ஏதேனும்
சாகசம் காட்டுமா என்று ஆவலோடு
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
உணவுக் கறையும்
எச்சிலும் படிந்திருக்கும்
முரட்டுத் துணியாலான
முயல் பொம்மையைக்
கையில் இறுகப் பிடித்திருக்கும்
ஆறு வயது சிறுமி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...