ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே நிலை உள்ளதை அறிய முடிந்தது.
தமிழவேள், மலேசியாவுக்குத் தமிழ் அரண் அமைத்தவர் என பலவாறாக இன்றும் அவர் பணிகள் போற்றப்பட்டாலும் அவர் குறித்த, அவர் செயல்பட்ட காலத்தய படங்கள் இணையத்தில் இல்லாதது பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கோ.சாரங்கபாணிக்கே இந்த கதி என்றால் கால ஓட்டத்தில் மலேசிய கலை இலக்கியம் மற்றும் மொழியின் நீட்சிக்காகப் பாடுப்பட்ட ஆளுமைகளின் அடையாளங்கள் என்னவாகும் என யோசித்தபோதே இப்படி ஒரு தளம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
முதலில் ஆவணப்பட இயக்கத்துக்காகச் சந்தித்த எழுத்தாளர்களின் சேகரிப்பில் இருந்த படங்களைத்தான் சேமிப்பில் எடுத்துக்கொண்டேன். ஆனால் அவற்றை முறைப்படுத்தி பெரும்பதிவாக்கும் பணியூக்கம் விஜயலட்சுமியிடமிருந்து தொடர்ந்தது.
ஒரு நூலகரான அவருக்கு இம்முயற்சியின் தேவை நன்கு புரிந்ததால் அதை தனது பணியாக அவர் முன்னெடுக்கத்தொடங்கியதும் நான் முற்றிலுமாக அவர் வசம் ஒப்படைத்து சிற்சில ஆலோசனைகளோடு நிறுத்திக்கொண்டேன். விஜயலட்சுமிக்குத் துணையாக தயாஜியும் செயல்படத்தொடங்கினார். எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள் இம்முயற்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டபோது பணிகள் இலகுவாகின. மரணித்துவிட்ட பல படைப்பாளிகளின் இல்லங்களும் அவர்களின் உறவினர்களும் சை.பீர்முகம்மது அவர்களுக்கு நன்கு அறிமுகம் இருந்ததால் அவர்கள் சேமிப்பில் இருந்த படங்களை கேட்டுப்பெறும் பணி இலகுவாக முடிந்தது.
அகப்பக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் பயன்பாடு எவ்வாறு அமையவேண்டும் என்பன போன்ற விடயங்கள் விஜயலட்சுமி மற்றும் தர்மராஜ் இணைவில் உருவானது. எழுத்தாளர் கோணங்கி மூலம் அறிமுகமான ஓவியர் மணிவண்ணன் அகப்பக்கத்துக்கான தலைப்பு மற்றும் முகப்பு வடிவமைப்பைச் செய்துக்கொடுத்தார். ஒரு மிகச்சிறிய துளித்தொடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பிரமாண்டம் அடைவதை பார்வையாளனாக நின்று காண்பது சுவாரசியமான அனுபவம்.
எழுத்தாளர்களின், கலைஞர்களின் முகம் என்பது ஒரு காலத்தின் முகம். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைவிட தங்களை எப்படிக்காட்டிக்கொள்ள விரும்பினார்கள் என்பதே ஒவ்வொரு படங்களும் காட்டின. சடங்கான நிகழ்ச்சிகளில் ஒருவராகவும் தனிப்பட்ட படங்களில் வேறொருவராகவும் இருக்கும் அவர்களின் அந்தப் படங்கள் அவர்களது புனைவிலக்கியத்தில் ஒரு பகுதியோ என்றுதான் தோன்றியது. உண்மையில் இப்பணி சுவாரசியமானது. காலங்களுக்குள் பயணிக்க வைப்பது. ஒருவகையில் எழுத்தாளர்களை இன்னும் அந்தரங்கமாக அறிய உதவுவது.
படங்களைத் தகவல்களுடன் சேகரிக்க வேண்டும் என்ற திட்டம் வளர்ந்து மலேசிய கலை இலக்கிய ஆவணக்காப்பக தளமாக மாறிய முயற்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது அ.பாண்டியன் ‘சடக்கு’ எனும் பெயரை முன்மொழிந்தார். இச்சொல் தூயத்தமிழ்ச் சொல் என்றும் இந்தி சொல் என்றும் இருவேறு கருத்துகள் இருந்தாலும் அசலான மலேசியத் தோட்ட வழக்குச்சொல் என்றபடியால் இப்பெயரை உறுதி செய்தோம். சாலையைக் குறிக்க தோட்ட மக்களிடம் புழக்கத்தில் இருந்த இச்சொல்லே மலேசியத் தமிழ் இலக்கியம் வந்த வழியைச் சொல்லும் வரலாற்றின் சடக்காகவும் இருக்கும் என நம்புகிறோம்.
1 comment for “சடக்கு வந்த வழி”