மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திடீர் முடிவு – ஒரு தனி நபர் தாக்குதல்

malaysia.tamil.writers.associationதினக்குரல் நாளிதழில் (15.8.2013) மலேசிய எழுத்தாளர் சங்க சார்பாக அதன் செயலாளர் திரு. குணநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை கண்ணுற்றேன். பலரும் அச்செய்தியை வாசித்து வருத்தமுற்றிருக்கலாம். தனிப்பட்ட முறையில் தயாஜிமேல் ஆத்திரமும் பட்டிருக்கலாம். இச்செய்தி பற்றி எனது கருத்தைக் கூறுவதற்கு முன் அதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளுதல் நலம்.

1. எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் காலாண்டு சிறுகதை ஆய்வையும் ஆண்டு இறுதி புத்தக வெளியீட்டையும் பரிசளிப்பையும் இவ்வாண்டு (2013) நிறுத்திக் கொள்கிறது.

2. இவ்வாண்டு (2013) திட்டமிடப்பட்ட புதுக்கவிதை பட்டறையையும் புத்தக வெளியீட்டையும் பரிசளிப்பையும் நிறுத்திக் கொள்கிறது.

3. முன்பே திட்ட மிட்டு மொழிமாற்று வேலையில் முடிக்கும் கட்டத்தில் இருக்கும் மற்றொரு இலக்கிய திட்டத்தையும் நிறுத்தி வைக்கிறது.

4. இவ்வாண்டு வெளியிடப்பட்ட 2012-ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை நூல் (பந்துவான்) மேற்கொண்டு வேறெங்கும் வெளியிடப்படாமல் முடக்கப்படுகிறது.

5. மலேசியாவில் இலக்கிய போட்டிகள் நடத்தும் மலாயா பல்கலைக்கழகம், தோட்ட தொழிலாளர் கூட்டுறவு கழகம் போன்ற அமைப்புகளும் தங்கள் திட்டங்களை மறு ஆய்வு செய்யவேண்டும்.

சுருக்கமாக சொன்னால் ‘இலக்கிய சுற்றுலாக்களைத்’  தவிர ம.எ.சங்கம் தன் மற்ற பல திட்டங்களை இவ்வாண்டு கைவிட்டிருக்கிறது. அதோடு மற்றவர்களையும் நடத்த வேண்டாம் என்று ‘போட்டுக் கொடுத்துள்ளது ’

இத்தனை கடுமையான முடிவுகளை ம.எ.சங்கம் மேற்கொண்டதற்கு காரணம் ஒரு எழுத்தாளரின் கருத்தாம். தயாஜி, ம.எ.சங்க சிறுகதை நூல் குறித்து அதன் உரிமம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். கடந்த மாதம் நடந்த விவாதத்தின் ஒரு பகுதியாக தயாஜி மேற்கண்ட கேள்விகளை வல்லினத்தில் முன்வைத்தார். அந்த கேள்விகளின் ‘மூர்க்கத்தனம்’ காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி கூறுகிறது.

சரி. தயாஜி முன்வைத்த கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. பல அனுபவசாலிகளைக் கொண்டு இயங்கும் எழுத்தாளர் சங்கம் இக்கேள்விகளை எதிர்கொண்டதும் நேர்மையாக என்ன செய்திருக்க வேண்டும்? தயாஜியின் கூற்றை விளக்கி அல்லது மறுத்து அறிக்கை விட்டிருக்க வேண்டும். தயாஜியின் கருத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். மேன்மை பொருந்திய அவையோருக்கு அதுவே அழகு.

ஆனால் கடந்த ஒரு மாதமாக மொளனம் சாதித்து விட்டு இப்போது திடீர் என்று தயாஜியை காரணம் காட்டி தங்களது நிகழ்வுகளை மீட்டுக் கொள்வதன் நோக்கம் ஒன்றுதான் என்பது தெளிவாக தெரிகிறது. தயாஜி என்கிற தனிநபரை மலேசிய வாழ் எழுத்தாளர்கள் மத்தியில் ‘வில்லனாக’  காட்டிவிட வேண்டும் என்னும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே காரணமாக தெரிகிறது. அதன் வழி ம.எ.சங்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் எல்லா எழுத்தாளர்களையும் மிரட்டிப்பார்க்கும் முயற்சியாகவும் இதை வகைப்படுத்தலாம்.

ம.எ.சங்கம் சங்கத்தின் மேற்கண்ட முடிவு அவர்களின் செயலவையின் கூட்டு முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.. பல அறிஞர் பெருமக்களை கொண்ட அந்த செயலவையின் இந்த சிறுபிள்ளைத்தனமான முடிவு வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தனிப்பட்ட மனிதன் விடுத்த ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் ஆற்றல் இன்றி தனது நிகழ்வுகளை மீட்டுக் கொள்கிறேன்… இனிமேல் செய்ய மாட்டேன் என்றெல்லாம் கூறுவது கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீடு செல்லும் அப்பாவி பெண்களின் செயல் போல உள்ளது. நல்ல வேளை, இத்துடன் எழுத்தாளர் சங்கத்தையே மூடிவிடுகிறோம் என்று அறிக்கை விடவில்லை.

அடிப்படையில் தயாஜி முன்வைத்த உரிமம் தொடர்பான கேள்வியின் உட்சாரத்தையோ நாட்டின் பதிப்புரிமை சட்டம் குறித்த தெளிவையோ ம.எ.சங்கத்திடம்  கொண்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக நாட்டின் பல்வேறு அமைப்புகளும் நடத்தும் இலக்கிய போட்டிகளில் பங்குபெறும் / வெற்றி பெறும் படைப்புகளுக்குரிய உரிமை அந்த நிறுவனத்திற்கே சொந்தமானது. அதை படைப்பாளிகள் கேள்வி கேட்க முடியாது. அதே போல் நாளிதழ்களில் வரும் படைப்புகளுக்கும் பதிப்புரிமை கிடையாது. மேலும் பதிப்புரிமைச் சட்டத்தில் பல்வேறு நுணுக்கங்கள் உள்ளன. ஆனால் தயாஜி கேட்டது மற்ற அச்சு இதழ்களில் வந்த படைப்புகளை ம.எ.சங்கம் நூலாக கொண்டு வந்து விற்பனை செய்யலாமா? என்பதுதான்.  அதிலும் அக்கதைகளுக்கு கொடுக்கப்படும் பரிசு உண்மையில் அவற்றுக்கான உரிமப் பணம் என்ற கருத்தை வலியுறுத்தவே தயாஜி அதைக் எழுதி இருந்தார். அதற்கு ம.எ.சங்கம் தக்க விளக்கம் கொடுக்க வேண்டியது அதன் கடமை. அதை விடுத்து அது மலேசிய தமிழ் எழுத்தாளர்களை மிரட்டலின் வழி பணியவைக்கப் பார்க்கிறது.

அதோடு, இது நாள் வரை ம.எ.சங்கம் உரிமம் குறித்து சிந்தித்ததில்லை என்பதையும் திரு. குணநாதன் தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். நாட்டின் மிக முக்கிய இலக்கிய அமைப்பாக செயல்படும் ம.எ. சங்கம் இதன் வழி தன் இயலாமையையே காட்டிக் கொள்கிறது. பல படைப்பாளர்களோடு தொழில் ரீதியான தொடர்பை வைத்திருக்கும் ம.எ.சங்கம் பதிப்புரிமை குறித்து சிந்தித்ததில்லை என்பது அபத்தம். அவர்களுக்கு பதிப்புரிமை விழிப்புணர்வு இல்லாததும் பதிப்புரிமை சட்டம் குறித்த அக்கரை இல்லாமல் இருப்பதும் தயாஜியின் குற்றம் அல்ல. வினா தொடுக்கப்பட்டால் அதற்கேற்ற விடை கூற ஆற்றல் இருக்கவேண்டும். ஆனால் மேற்கண்ட ம.எ.சங்கத்தின் முடிவு அதன் போதாமையையே காட்டுகிறது. இத்தவறுகளுக்கு பொறுப்பேற்று, தங்கள் திட்டங்களை மீட்டுக் கொள்வதை விட அதன் தலைவர் கொளரவமாக பதவி விளகிக் கொள்வதுதான் சரியானது. இதுவரை நடந்த தவறுகள் இனியேனும் நடக்காமல் இருக்கும். புதியவர்கள் மேலும் சிறந்த தொழில்ரீதியாக (professional) பணியினை சங்கத்திற்கு வழங்க முடியும். இப்படி தனி நபர் தாக்குதலும் ஒழிந்து போகும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...