நிகழ்வது நிமித்தமாக

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் பூங்குழலி வீரனின் ‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ எனும் கவிதை தொகுப்பின் முன்னுரை

kulali.book.coverகவிதை எனப்படுவது நிகழ்தல்; நிகழ்தல் வழி பிறக்கும் பதிவுகள். நிழல்படங்களைப் போல்தான் கவிதையும். ஒரு நினைவிற்காக பத்திரப்படுத்தி வைக்கும் நிழல்படங்களில் நம்மை மட்டும் பார்க்கின்றோம். கவிதைகளில் நம்மையும் நாம் உணர்ந்தவற்றையும் பார்க்கிறோம்.

என்னைக் கடந்த போன காலத்தைத்தான் நான் என் கவிதைகளில் கிடத்தியிருக்கிறேன். சில வேளை என்னைக் கடந்து போயிருக்கும் நீங்களும் கூட உங்களுக்கே தெரியாமல் என் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

நான் கடக்காத ஒன்றை எழுதும்போது பெரும்பாலும் வார்த்தைகள் வசமாவதில்லை. அவை அந்நியப்பட்டு விடுகின்றன. அந்நியமாதலை நான் பெரும்பாலும் விரும்புவதில்லை; வெறுப்பதுமில்லை. ஆனால், என்னைக் கடந்துபோனவை என்னை அதிகம் விரும்புகின்றன. அந்த விருபத்திற்கேற்றவாறே என் வார்த்தைகளும் வசப்படுகின்றன. என் கவிதை பிறக்கிறது.

நான் பதிவு செய்திருக்கும் விடயம் உங்களுக்கு மிகச் சாதாரணமாக தோன்றலாம். ஆனால், எனக்கு அது அப்படியன்று. எனக்குள் அந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கம் அளவில்லாதது. அந்த அளவுகளை நானே தீர்மானிக்கிறேன். பெரும் துன்பங்களைச் சட்டென கடந்து போகும் பலத்தை என் கவிதைகள் எனக்கு தந்தபடியே இருக்கின்றன.

இந்த வேளையில், இந்த தொகுப்பு வெளிவர காரணமாயிருந்த வல்லினம் ஆசிரியர் தோழர் ம. நவீன் அவர்களுக்கு நன்றி. தொகுப்பு வெளியிட வேண்டும் என தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த செம்பருத்தி ஆசிரியர் திரு. கா.ஆறுமுகம் என் அன்புக்கு உரியவர். என் கவிதைகளின் கருவாக என்னைச் சுற்றிக் கொண்டிருக்கும் அன்பு குழந்தைகள் யாழினி இனியவளுக்கும் அண்ணன் இராஜனுக்கும் அண்ணி ஜானகிக்கும் எப்போதும் என் அன்பு. என் கவிதைகளின் பலமாய் இருக்கும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...