முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

07picஇலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை அனுபவங்களோடு உரசியும் எதிர்த்தும் செறிவாக்கம் பெருகிறது.  இந்தச் செறிவாக்கத்தின் வெளிப்பாடே இலக்கிய விமர்சனமாகின்றது.

ஓர் இலக்கிய படைப்பை வாசகன் உள்வாங்கும் முறையை நாம் விமர்சனம் என்று குறிப்பிடுகிறோம். அது ஒரு வாசிப்பு முறை. இலக்கிய விமர்சகர் என்று தனித்த பிரிவினர் யாரும் இல்லை. தேர்ந்த வாசகர் எல்லாரும் விமர்சகர்தான். இதன் காரணமாகவே இலக்கிய பரப்பில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் செயல்படுகின்றனர். ஆனால் இலக்கிய விமர்சனம் செய்ய நேர்மையும் நுண்ணிய வாசிப்பும் தேவை.

மலேசிய இலக்கிய வெளியின் போதாமைகளில் தலையாயது விமர்சனங்கள் அற்ற சூழலாகும். இங்கு நீண்ட காலமாகவே இலக்கிய விமர்ச்னங்கள் மீது எதிர்மறை பார்வை வைக்கப்படுவது தீயூழ் என்றே கூறவேண்டியுள்ளது. ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது போன்று நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் கூட போதிய அளவு விமர்சிக்கப்படாத நிலையையே இங்குக் காணமுடிகிறது.  நூல் வெளியீட்டு மேடையில் சடங்காகப் பேசப்படும் புகழ்ச்சிகளும்  மேலோட்டமான குறிப்புகளும் மட்டுமே படைப்பாளியின் உழைப்புக்கு கிடைக்கும் விமர்சன அங்கீகாரமாக இருப்பது அவலம். உண்மையில் கறாரான விமர்சனம் செய்யப்படாதப் படைப்பு வாசகனைச் சென்று சேராத படைப்பு என்பதே பொருள்.

ஆனால், இலக்கிய விமர்சனம் என்பதை ‘வசை’ சொல்லாகவே புரிந்து கொண்ட பலரும் அதை தவிர்க்க நினைப்பது வெளிப்படை. படைப்பாளிகள் விமர்சகன் வைக்கும் கூர்மையான அவதானிப்புகளை ஏற்க முடியாமல் அவற்றை முற்றாக புறக்கணிப்பதும், படைப்புகளில் காணப்படும் போதாமைகளுக்கு தங்கள் அளவில் சில வெற்று சமாதானங்களைச் சொல்லி கடந்து செல்வதும் இயல்பாகிறது. மேலும் விமர்சனம் என்பது எழுத்தாளனின் படைப்பூக்கத்தை கெடுக்கும் செயல் என்ற தவறான புரிதலும் உள்ளது. இதன் காரணமாகவே மலேசிய இலக்கியம் இத்தனை ஆண்டுகளிலும் தனித்த அடையாளங்களின்றி, எழுதப்படுவன எல்லாமே இலக்கியம்தான் என்ற தட்டையான புரிதலை கொண்டிருக்கிறது. தெளிவாக சொல்வதென்றால், படைப்புகளில் எது இலக்கியம் எது இலக்கியம் அல்ல என்று தெரிவு செய்து சொல்லும் உரிமை வாசகனுக்கு உள்ளது. அந்த உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்கும் பணியையே இலக்கிய விமர்சனம் செய்கிறது.

இந்நூலில் மலேசிய நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்திருக்கும் பத்து படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கிய விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். இயல்பாகவே இக்கட்டுரைகள் படைப்பளிகளின் கால வரிசைப்படி அமைந்திருப்பது எதிர்ப்பாராதது. இது படைப்பாளிகளை தரவரிசை செய்யும் முயற்சி அல்ல. மேல் கீழ் என்று படைப்புகளை அடுக்கும் பணியும் அல்ல.  படைப்பாளர்கள் அவரவர் வெளியில் சென்றிருக்கும் தூரங்களையும் நிரப்பப்படாத காலி இடைவெளிகளையும் ஒரு வாசகனாக கண்டு சொல்வது மட்டுமே இந்நூலின் நோக்கம். எனக்குள் படைப்புகள் நிகழ்த்திய எதிர்வினைகளை நேர்மையாகவே பதிவு செய்துள்ளேன்.  இக்கட்டுரைகள் அனைத்தும் என் வாசிப்புக்கும் புரிதலுக்கும் உட்பட்டவை மட்டுமே. முடிவான வரையறையன்று. இவை ஒரு உரையாடலுக்கான தொடக்கம்தான். வாசகர்கள் இக்கட்டுரைகளில் குறிப்பிடப்படும் படைப்புகளை வாசித்து சுயமான விமர்சனப் பார்வையை முன்வைப்பதை வரவேற்கிறேன்.

முடிவாக, இக்கட்டுரைகளில் சில கடந்த ஆண்டு வல்லினம்100 தொகுப்புக்காக எழுதப்பட்டவை. புதிய கட்டுரைகளும் உள்ளன. இக்கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளிக்கொணரும் வல்லினம் பதிப்பகத்திற்கு யாவரும் பதிப்பகத்துக்கும் நன்றி.

1 கருத்து for “முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

 1. சை.பீர்முகம்மது.
  October 11, 2018 at 12:48 am

  நம் நாட்டில் விமர்சனம் பத்திரிகையிலானாலும்
  கூட்டகளானாலும் மிகக் குறைவான இடத்தையே பெருகின்றன. தீர்க்கமான பன்முகத் தன்மை கொண்ட விமர்சனங்கள் வருவதில்லை. 1970லிருந்து 1973ஆண்டுவரை
  தமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதை கருத்தரங்களில் கொஞ்சம் விமர்சனங்கள்
  வெளிப்பட்டன.அவை அப்போதையக்கு ரசனை விமர்சனங்களாக இருந்தாலும் தன் கதையும்
  எப்படிப் பார்கப்படுகிறது என்ற எதிர்பார்ப்பால்
  சிறுகதைகள் வீச்சான புதிய புதிய பார்வைகளைப் பெற்றன. 1970 திலிருந்து 1977வரையிலான நம் நாட்டு கதைகளை ஓர் ஆய்வுக்கு எடுத்தால் சில மாற்றங்களை அறிய முடியும். பிற்கால 2000க்குப்பின் விமர்சனங்களில் குழு மனப்பான்மை ஓங்கிவிட்டது. வல்லினம் குழு, எழுத்தாளர் சங்கம் இவை தாண்டிய இலக்கிய அமைப்புகள்
  விமர்சனங்களை முன்னெடுக்க வில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...