“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

dr.sivaமருத்துவர் மா.சண்முகசிவா மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. 1987 – இல் ‘அகம்’ எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலமாக படைப்பிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மலேசிய இலக்கியத்தின் தரமும் படைப்பாளர்கள் தரமும் உயர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் மேலோங்கி இருந்தது. இவருடைய தொடர் முயற்சி இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்களிடம் நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதோடு அவர்களிடமிருந்து நல்ல தரமான படைப்புகளை வெளிக்கொண்டு வந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு தன் பங்களிப்பாக தரமான படைப்புகளைத் தந்தவர். 1998 ஆம் ஆண்டு தனது முதல் சிறுகதை தொகுப்பான ‘வீடும் விழுதுகளும்’ தொகுப்பை வெளியிட்டார். அதை தவிர்த்து மருத்துவக் கேள்வி பதில் அங்கமும், இலக்கியக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். வல்லினம் இலக்கியக் குழுவுக்கு ஆதரவாளராகவும் உறுதுணையாகவும் இருக்கிறார். இலக்கியத்தைத் தவிர்த்து மைஸ்கீல்ஸ் அமைப்புடன் இணைந்து சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். அவ்வப்போது வல்லினம் தளத்தில் அவரது படைப்புகள் இடம்பெறுவதும் உண்டு. இருந்தாலும் தன்னுடைய முதல் தொகுப்பைத் தொடர்ந்து வேறெந்த தொகுப்பையும் அச்சுக்கு கொண்டு வந்திராத இவர், இரண்டு தசாப்தங்கள் கழித்து ‘மா.சண்முகசிவா சிறுகதைகள்’ எனும் தேர்ந்தடுத்த சிறுகதைகளின் தொகுப்பு நூல் வல்லினம் பதிப்பகம் வாயிலாக யாவரும் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிடப்படவிருக்கின்றது. இந்நூலின் முதல் அறிமுக நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 21 தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் சூழலில் மிகுந்த உற்சாகத்துடன் மருத்துவர் மா. சண்முகசிவாவை அவரது நூல் குறித்தும், அவரது இலக்கியச் செயல்பாடுகள் குறித்தும் நேர்காணல் செய்யப்பட்டது. 

கேள்வி: உங்களது முதல் சிறுகதை தொகுப்பு ‘வேரும் வாழ்வும்’. இருபது வருடங்களுக்குப் பின் இந்த புதிய தொகுப்பு வருகிறது. ஒரு வாசகனாக நீங்கள் இவ்விரண்டுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென உணர்கிறீர்கள்?

மா.சண்முகசிவா: எனது முந்தைய தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் பல அதற்கு முன் நான் வாசித்த கதைகளின் பாதிப்பில் எழுதியது. அதற்கு அன்றைய வாசிப்பும், அவை கொடுத்த தாக்கமும் காரணியாக இருந்தன. இன்று எனது பாணி எனக்கான தனித்துவத்தைத் தேடுகிறது. நான் வாழ்க்கையைப் பற்றி என்ன உணர்கிறேன் என நானே ஆராய, அறிய என் கதைகள் உதவுகின்றன. நான் யாராக இருந்து என்னவாகச் சிந்திக்கிறேன் என்பதை என் கதைகள் எனக்குச் சொல்கின்றன. இத்தொகுப்பில் புனைவின் மொழியை இன்னும் எளிமைப்படுத்தியுள்ளேன். அவ்வகையில் முந்தையத் தொகுப்பில் இருந்து இத்தொகுப்பு மொழியாலும் கூறும் முறையாலும் வாழ்க்கை குறித்த தனித்தப் பார்வையாலும் மாறுபட்டுள்ளது.

கேள்வி: இருபது ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது தொகுப்பு வருகிறது. ஏன் இத்தனை தாமதம்?

மா.சண்முகசிவா: என்னிடம் அடிப்படையில் ஒரு சோம்பல் குணம் உண்டு. மருத்துவராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் தொடர்ந்து மக்களிடம் உரையாடுகிறேன். அதுவே பல சமயங்களில் என்னை ஆற்றுப்படுத்தி விடுகிறது. சிறுகதை என்பதும் ஒரு உரையாடல்தான். எனக்கும் சூழலுக்கும் நடக்கும் உரையாடல்கள் சில சமயங்களில் எனக்கு போதுமானதாக உள்ளது. பல சமயங்களில் அனைத்து சிக்கல்களும் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. அதனால் இனி என்ன சொல்வது என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. எனது தனித்தப் பார்வையை அங்குப் பதிவு செய்ய முடியாதபோது புனைவு முயற்சியிலிருந்து பின்வாங்கிவிடுகிறேன்.

கேள்வி: முதல் தொகுப்பு மலேசிய இலக்கியச் சூழலில் எவ்வாறான பாதிப்புகளை உருவாக்கியது?

மா.சண்முகசிவா: நிறைய வாசகர்களைப் பெற்றுக்கொடுத்தது. ஆனால் அவர்கள் என்ன தரத்தினர் என சொல்லத் தெரியவில்லை. அதாவது எவ்வகையான வாசிப்புப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என உறுதிப்படுத்த முடியவில்லை. அச்சூழலில் அந்நூல் குறித்த உரையாடல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. சில கதைகள் மலாயா பல்கலைக்கழக பாடத்தில் வைத்தார்கள். அதே சமயத்தில் சா.கந்தசாமி, மாலன் போன்றவர்கள் சாகித்திய அகாதமி மூலம் அயலக பதிப்புக்காக எனது சிறுகதைகளை இணைத்துக் கொண்டார்கள். பிரபஞ்சன், வண்ணதாசன் போன்றவர்கள் இத்தொகுப்பை வாசித்து பாராட்டியது மகிழ்ச்சியளித்தது.

கேள்வி: பல கதைகள் உங்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது. நீங்கள் அதில் பாத்திரமாக வருவதாகவும் உணர முடிகிறது. அனுபவங்களை மீளுருவாக்கம் செய்யும் காரணம் என்ன?

மா.சண்முகசிவா: நான் சந்திக்கும் மனிதர்கள் மீது எனக்கு இருக்கும் அக்கறையையே இக்கதைகள் வழி உணர்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் நான் பார்வையாளான மட்டுமல்லாமல் என் கதைகள் வழி அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கவும் செய்கிறேன். நான் அவர்கள் வாழ்க்கைச் சூழலை எப்படிப் பார்க்கிறேன் என்றும் எனக்கு அக்கதைகளை மீள்வாசிப்பு செய்யும்போது உணர முடிகிறது. சில சமயங்களில் நான் அவற்றை முன்வைத்து உருவாக்கும் கதைகளில் ஒரு போதாமையை உணர்கிறேன்.  அதேபோல இன்னும் பல மானுட துன்பங்களைச் சொற்களின் வழி கொண்டு வர முடியவில்லையே என்ற ஏக்கமும் உண்டு.

கேள்வி: உங்கள் கதைகள் பற்றி வரும் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

மா.சண்முகசிவா: இப்போது அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனநிலை இல்லை. அதேபோல எதிர்மறையான விமர்சனங்களால் துவண்டுவிடுவதும் இல்லை. இதை முதிர்ச்சி எனச் சொல்லமாட்டேன். ஒரு மனநிலை இது. அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனநிலையும் விமர்சனத்தால் துவலும் மனநிலையும் இருப்பது படைப்புக்கான ஒருவித ஊக்கம்தான்.

கேள்வி: மருத்துவரான நீங்கள் உளவியல் அறிந்தவர். உங்கள் உளவியல் அறிவு  உங்கள் கதைகளில் எந்த அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்றது?

மா.சண்முகசிவா:  அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை. அவ்வாறு உருவாவதே என் சிறுகதைகள்.  மனமும் மனத்தை அணுகும் விதமுமே என் கதைகள். என் கதைகளில் வரும் மாந்தர்களும் அதில் அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை நான் எனது மொழியில் நிகழ்த்திப் பார்க்கிறேன். பின்னர் நானே அதை நான் ஒரு பார்வையாளனாக பார்த்து அறிய முயல்கிறேன். மற்றபடி என் திறனை அவர்களுக்குள் மேலதிகமாகச் சென்று புகுத்திப் பார்ப்பதில்லை.

கேள்வி: உங்கள் கதைகளில் மீண்டும் மீண்டும் பரிதாபத்திற்குறிய சிறுமிகள் வருகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. எதனால் உங்கள் கதைகளில் இக்கூறுகள் அதிகம் உள்ளன?

மா.சண்முகசிவா: நான் சிறுவனாக இருந்தபோது சிறுமிகள் பலர் என் வீட்டில் வேலைக்காரப் பெண்களாக இருந்துள்ளனர். தமிழகத்தில் எங்கள் ஊரைச்சுற்றி வறுமை அதிகம். அவ்வாறு வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள சிறுமிகள் பலர் எங்கள் வீட்டில் பூப்படையும் வரை வேலை செய்துள்ளனர். அவர்களில் சிலரை என் வீட்டில் உள்ளவர்கள் கையாளும் விதம் என் மனதை மிகவும் பாதித்துள்ளது. என் அம்மா அன்பானவர். அவர் அவர்களை தனது குழந்தைகள் போலவே பார்த்துக்கொண்டார். ஆனால் எல்லாருமே அம்மா போல இருப்பதில்லை. அவர்கள் நிலையைப் பார்த்து என் மனம் அடைந்த பாதிப்புகளே சிறுகதைகளில் பிரதிபலிப்பதாக எம்.ஏ.நுஃமான் சொன்ன பின்பே அறிந்துகொண்டேன்.

அதற்குப் பின்பே என்னால் என் கதைகளுக்குள் சிறுமிகள் உலாவுவதை காணமுடிந்தது. நான் மருத்துவரானப் பின் தாங்கள் பாலியல் துன்பத்திற்கு ஆளாவதை என்னைச் சந்திக்க வரும் சிறுமிகள் வழி அறிந்தபோது  என் கதைகளிலும் அத்தகைய சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் இயல்பாக வந்து அமைந்துவிடுகிறது. இன்று மை ஸ்கில்ஸ் அறவாரியத்துடன் இணைந்து செயல்படும்போது சிறுமிகள் குறித்த என் கரிசனை மேலும் அதிகரித்துள்ளது.

கேள்வி: இன்று உங்களின் சமீப கதைகள் அடங்கிய இத்தொகுப்பைக் காணும்போது என்ன உணர்கிறீர்கள்?

மா.சண்முகசிவா: கதை சொல்லும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையில் உள்ள பல்வேறு துண்டுகளில் ஒரு துண்டை எடுத்து காட்டும் முயற்சியாக நான் என் கதையை முன்வைக்கிறேன். பட்டாபிசேகத்தில் உள்ள ராமனை மட்டும் காட்ட வேண்டும் என்பதில்லை. சராயு நதியில் அவன் மூழ்கி அடையும் மரணமும் வாழ்வின் ஒரு பகுதிதானே. முன்பு நான் வாழ்வின் மீது மட்டும் அசையாத நம்பிக்கைவாதியாக இருந்தேன். இப்போது  வாசகன் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. வாசகனால் மேலும் ஆழமாக ஒரு கதையின் இடைவெளியில் அறிய முடியும் என நம்புகிறேன்.

கேள்வி: பெரும்பாலும் தோட்டம் சார்ந்த வாழ்வு மட்டுமே இங்குப் புனைவுகளாக உள்ளன. ஆனால் உங்கள் தந்தையின் வாழ்வியலை பதிவு செய்வதன் வழி அக்கால நடுத்தர வர்க்க வாழ்வை உங்களால் மிகச்சிறந்த புனைவாக்க முடியும். ஏன் அப்பங்களிப்பை மலேசிய இலக்கியத்திற்கு வழங்க மாட்டேன் என்கிறீர்கள்?

மா.சண்முகசிவா: தவறுதான். நான் அதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.  Inertia என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். செயலுக்கு முன் உள்ள செயலற்ற  நிலை. அது எப்போதும் என்னிடம் உண்டு. சில வண்டிகள் கொஞ்சம் தள்ளினால்தான் ஓடும். எனது இரண்டு தொகுப்புகளும் நான் மெனக்கெடாமல் எனக்காக மெனக்கெட்டவர்களால் நடந்தது.

நேர்காணல்: க.கங்காதுரை

1 கருத்து for ““அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

  1. October 26, 2018 at 8:10 am

    //அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை.// டாக்டர் சண்முகசிவா இந்த கருத்தை சற்று விரிவாக சொல்லியிருப்பது அவசியம். எல்லா சிறுகதைகளும் எழுத்தாளருடைய உலக பார்வையை வெளிக் கொணரும் கருவி மட்டுமல்ல, அதன் வழி அவரது நிலைப்பாட்டை வாசகர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. வெறுமனே அது எழுத்தாளருடைய பார்வை என்பதை விட, சிறுகதை எழுத்தாளருடைய புரிதல் என்பதே சரி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...