“எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.”

42195067_2125640890782311_2337655256449548288_nம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். அதனை நிரூப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தனது படைப்புகளை நூலாக்கி மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறார். வல்லினம் பதிப்பகம் மூலமாக இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுருக்கும் ம. நவீன், இம்முறை வல்லினத்தின் நிறைவு விழாவான 10-வது கலை இலக்கிய விழாவில் தனது மூன்று நூல்களை வெளியிடவிருக்கின்றார். அவை முறையே ‘போயாக்’ சிறுகதை தொகுப்பு, ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு மற்றும் ‘நாரின் மணம்’ பத்தி தொகுப்பு. இந்நூல்களை வல்லினம் பதிப்பகமும் மற்றும் தமிழகத்தின் யாவரும் பதிப்பகமும் இணைந்து வெளியீடு செய்கின்றன. சென்னையில் யாவரும் பதிப்பகம் மூலமாக நூல்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்று முடிந்திருக்கும் இவ்வேளையில், ம.நவீனோடு நூல்கள் குறித்து சிறப்பு நேர்காணல் செய்யப்பட்டது.

கேள்வி: இம்முறை உங்கள் மூன்று நூல்கள் வெளிவருகின்றன. அந்நூல்கள் குறித்து கூறுங்கள்.

ம.நவீன்: இதுவரை நான் எடுத்த நேர்காணல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நேர்காணல்களை மட்டும் தொகுத்து ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ எனும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். அந்த நேர்காணல்கள் வழி மலேசிய – சிங்கப்பூர் இந்தியர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும்கலைஇலக்கியச்செயல்பாட்டையும் ஓரளவு பதிவு செய்ய முயன்றுள்ளேன். மேலும் இதனூடே மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொழிற்சங்க வரலாறு, தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் எதிர்க்கொண்ட போராட்ட வரலாறு எனப் பல்வேறு தகவல்களை ஒரு வாசகன் விரிவாகவே அறிய முடியும். ஆளுமைகளை அறிவதோடு அவர்களின் வாய் வழி தகவல்களை வரலாற்றின் பதிவாக்கவே இந்நூலைத் தொகுத்துள்ளேன்.

அடுத்து, எனது சிறுகதைகள் அடங்கிய ‘போயாக்’. மற்றும் பத்திகள் அடங்கிய ‘நாரின் மணம்’ எனும் நூல்கள். போயாக் என்னுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு போலவே நாரின் மணமும் எனது இரண்டாவது பத்தி தொகுப்புதான். தனிப்பட்ட முறையில் ‘போயாக்’ தொகுப்பை மிக நெருக்கமாக உணர்கிறேன். பரபரப்பான இலக்கியக் களப்பணிகளுக்கு நடுவில் இத்தொகுப்பு அந்தரங்கமாக எனக்குள் இருக்கும் படைப்பாளனை குதூகலப்படுத்துகிறது.

கேள்வி: ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நூலின் முக்கியத்துவம் என்ன?

ம.நவீன் :முதலில் அது மலேசியா – சிங்கப்பூரில் உள்ள முக்கியமான அல்லது வரலாற்றுக்குப் பங்களித்த ஆளுமைகளை அடையாளம் காட்டும் தொகுப்பு. அவர்கள் வழி மேலும் தகவல்களைப் பெற முனைபவர்களுக்கு இது ஒரு மேற்கோள் நூல். அடுத்ததாக, பல்வேறு வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பாக இந்நூல் இருக்கும். நூலின் இறுதியில் ஒரு பட்டியலை இணைத்துள்ளேன். அப்பட்டியல் மலேசிய தமிழ் இலக்கியம் மற்றும் சமூக முன்னெடுப்புகளில் நிகழ்ந்த முக்கியமான தருணங்களின் வரிசையைக் கொண்டுள்ளது. ஆய்வாளர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை மிக எளிதாக அந்தப் பட்டியல் வழி அடையலாம். மூன்றாவதாக, இலக்கியச் சூழலில் இதுவரை சொல்லப்படாத பல இடைவெளிகளை இந்த உரையாடல்கள் நிரப்புகின்றன. இதன் வழி புதிய மலேசிய இலக்கிய வரலாறு ஒன்றை எழுதவும் அல்லது ஏற்கனவே உள்ள வரலாற்றை மேம்படுத்தவும் முடியும்.

கேள்வி:போயாக்’ உங்களுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு. உங்கள் முதல் சிறுகதை தொகுப்புக்கு வாசகப் பரப்பிலிருந்து எவ்விதமான எதிர்வினை வந்தது. அக்கதைகள் வாசகர்களால் போதுமான அளவு விவாதிக்கப்பட்டதா?

ம.நவீன்: இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஜெயமோகன் தளம் மூலம் ‘போயாக்’ மற்றும் ‘யாக்கை’ பேசப்பட்டதும் முந்தையத் தொகுப்பைத் தேடி வாசிக்கும் சூழல்வாசகர்கள்மத்தியில் உருவானதும் மகிழ்ச்சியளிக்கும் அனுபவம். ஆனால் அதுவும் தமிழகத்தில்தான். மலேசியாவில் இல்லை.

கேள்வி:மண்டை ஓடி சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகளையும் ‘போயாக்’ தொகுப்பில் உள்ள சிறுகதைகளையும், அதன் படைப்பாளி என்ற அடிப்படையில் ஒப்பிட முடியுமா?

ம.நவீன்: சென்னையில் நடந்த போயாக் வெளியீட்டு விழாவில் அந்நூலை விமர்சித்த எழுத்தாளர் சு.வேணுகோபால் இரு நூல்களையும் சரியாகவே ஒப்பிட்டிருந்தார். முதல் தொகுப்பில் இருந்த அங்கதம் இரண்டாவது தொகுப்பில் இல்லை. அதில் உள்ள வேடிக்கைத் தன்மையைக் குறைத்து இந்தத் தொகுப்பில் அனைத்தையும் முதிர்ந்த நோக்கில்தான் அணுகியுள்ளேன். இதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. கடந்து சென்ற இரண்டாண்டுகள் என் வாழ்வில் மனச்சமமின்மையை உருவாக்கிய காலம். அச்சூழலில் உருவான கதைகள் என்பதால் இயல்பாகவே வேடிக்கைத் தனத்தை துண்டித்துவிட்டதாகவே கருதுகிறேன். சு.வேணுகோபால் சொல்லாமல் விட்டது,இரண்டாம்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில் காமம் ஒரு மையச் சரடாக உள்ளது என்பதுதான். ‘மண்டை ஓடி’ தொகுப்பில் சமூகத்தின் முன் நிராயுதபாணியாக நிற்கும் ஒரு குழப்பமானவனின் குரல்தான் தொடர்ந்து ஒலிக்கும். ‘போயாக்’ கதை சொல்லி கொஞ்சம் சூட்சுமமானவன். ஆனால் நுன்மையானவன்.

கேள்வி: அந்தசென்னைவிழாவில்,சு.வேணுகோபால் அதில் இடம்பெற்றுள்ள ‘வண்டி’ சிறுகதையை மிகச் சிறந்த தலித் சிறுகதை என்றார். மலேசியாவில் தலித் இலக்கியம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ம.நவீன்: நான் ஒரு சிறுகதை எழுதுகிறேன். அது தமிழில் எழுதப்படுகிறது. எனவே அது தமிழ் சிறுகதை. அதை விமர்சகர்கள் வாசகர்கள் தங்கள் வாசிப்பில் வகைப்படுத்தி அளவிடுகிறார்கள். ஆனால் நான் அவ்வாறு திட்டமிட்டு குறிப்பிட்ட ஒரு இசத்தையோ அல்லது கோட்பாட்டையோ உள்திணித்து ஒரு கதையை எழுதுவதில்லை. நான் வாசித்த பல நேர்காணல்களில் பல எழுத்தாளர்களும் இதேபதிலைத்தான் சொல்கிறார்கள். அது உண்மையும் கூட. யாரும் தான் தலித் சிறுகதை, பெண்ணிய சிறுகதை, பின் நவீனத்துவச் சிறுகதை எழுதப்போகிறேன் என முடிவெடுத்து எழுதமுடியாது அல்லவா? ஆனால் அக்கதை எதை மையமாகக் கொண்டு பேசுகிறது என்பதைப் பொறுத்து விமர்சகர்கள் புனைவுகளை அவ்வாறு தொகுக்கலாம். புனைவுகள் வழி வாழ்வியலை அறிய முனைபவர்களுக்கு ஆராய முயல்பவர்களுக்கு அத்தகைய பட்டியல் அல்லது வகைப்பாடு ஒரு மூலப்பொருள். அவ்வகையில்தான் சு.வேணுகோபால் வண்டியை தலித் சிறுகதை என்கிறார். அதாவது தலித் மக்களின் வாழ்வைப் பற்றி பேசும் சிறுகதை அது.

மலேசியாவில் தலித் இலக்கியம் என ஒரு பிரிவு இல்லை. அல்லது யாரும் அவ்வாறு நிறுவ முயலவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்ணியப் படைப்புகள், மார்க்ஸிய படைப்புகள் எனவும் மலேசிய இலக்கிய ஆய்வாளர்கள் யாரும் வகுத்துவைக்கவில்லை. நான் மேலே சொன்னதுபோல இலக்கியம் வழி சமகால வாழ்வை ஆராய இதுபோன்ற தொகுத்தல்கள் அவசியம். ஆனால் எழுத்தாளனுக்கு இந்த வகைமைகள் அவசியம் அற்றவை. அவன் தான் உள்வாங்கிய வாழ்வை, அனுபவத்தை, தர்க்கத்தை சுவீகரித்து அதை புனைவாக்குகிறான். யாராவது ஆய்வாளர் 40களில் இருந்து தொடங்கி மலேசியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வலிகளை எழுதிய படைப்புகளைத் தொகுத்தால் அவ்வாறான ஒரு பட்டியல் கிடைக்கலாம். முனைவர் இரா.தண்டாயுதம் தொகுத்த நாட்டுப்புறப்பாடல்களில் அவ்வாறான குரல்கள் ஒலிக்கின்றன. மலாயாவாக இருந்தபோது திராவிட இலக்கியத்தின் தாக்கம் பெற்று உருவான சிறுகதைகளில் சாதிய எதிர்ப்பு மனநிலை இருந்தது. நவீன புனைவுகளில் சீ.முத்துசாமியின் படைப்புகளில் தோட்டங்களில் இருந்த சாதிய ஒடுக்குமுறைகள் காட்டப்பட்டுள்ளன. 2005க்குப் பின் எழுதப்பட்ட சிறுகதைகளை மட்டுமே நான் ஆய்வுக்கு எடுத்தபோது பல சிறுகதைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகள் பதிவாகியுள்ளன. மலாயா பல்கலைக்கழகப் போட்டிக்கு வந்த சிறுகதைகளில்கூட தீண்டாமையைச் சாடி எழுதப்பட்ட கதைகளை வாசித்தேன். இவை சமூகத்தில் உள்ளன. எனவே புனைவாகின்றன. மலேசியாவில் தலித் இலக்கியம் எனப் பட்டியலிட்டால் இவை எல்லாமே உள்புகும்.

கேள்வி: அப்படியானால் வண்டி சிறுகதை எவ்வாறு தலித்திய சிறுகதையாகிறது?

ம.நவீன்: வண்டி சிறுகதை தோட்டத்தைவிட்டு நகரத்துக்குள் நுழையும் ஒரு தலைமுறை எதிர்க்கொள்ளும் தீண்டாமையைப் பேசுகிறது. தோட்டத்தில் மேட்டுக்குச்சி கீழ்க்குச்சி எனச் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டவர்கள் நகரத்தில் நுழைந்தபோது என்னவானார்கள் என்ற கேள்வியும் அதை ஒட்டி செய்த கள ஆய்வுமே இக்கதையின் அடிநாதமாக உள்ளது. அவ்வகையில் சு.வேணுகோபால் அது தலித்திய வாழ்வைச் சொல்லும் சிறுகதை என்றதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சாதியின் ஒடுக்குமுறை வலியைச் சொல்வது மட்டுமே அல்ல தலித் இலக்கியம். குரல் நசுக்கப்பட்டவர்களின், சம உரிமையற்றவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின், விளிம்புநிலை மக்களின் குரலை, வலியைப் பதிவுசெய்யுமாயின் அதுதலித் இலக்கியமே. நான் பெரும்பாலும் தமிழகத்து வரையறைகளை உள்வாங்குவதில்லை. 90களில் அவர்கள் மத்தியில் உருவான தலித்இலக்கிய எழுச்சியுடன் நான் மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பொருத்திப்பார்க்கமாட்டேன். ஓர் இலக்கியவகை அவர்கள் வாழ்வியலுடன் இணைந்து உருவாவது. ஆனால் இந்நாட்டில் வாழும் பல்வேறு சிறுபான்மை இனத்தின் புனைவுகளையும் ஒடுக்கப்பட்ட பூர்வக்குடிமக்களின் வலிகளையும் தலித்இலக்கியமாகத் தொகுப்பது நல்ல முயற்சியாக இருக்கும். இப்படித்தான் இந்நாட்டில் அதிகாரத்தால் நசுக்கப்படுபவர்களின் குரல் ஒன்றிணைய முடியும்.

கேள்வி: ‘போயாக்’ எனச்சிறுகதைதொகுப்புக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் உத்தியாக எடுத்துக்கொள்ளலாமா?

ம.நவீன் :உண்மையைச் சொல்வதென்றால் இத்தலைப்பை ஜீவகரிகாலன் தேர்ந்தெடுத்தார். வல்லினம் மூலம் இம்முறை தயாராகும் 10 நூல்களும் அவரது யாவரும் பதிப்பகத்துடன் இணைந்தே தயாராகின்றன. தமிழகத்துச் சூழலில் மண்டை ஓடி அல்லது போயாக் போன்ற வார்த்தைகள் புதியன. அவ்வகையில் அது அவர்களுக்குப் புதிய ஒன்றாகவே அறிமுகமாகும். அதே சமயம் இந்தத் தொகுப்பில் நான் எழுப்பிக்கொண்ட பல கேள்விகளின் சாரம் போயாக் கதையில் உள்ளது. ஒருவன் வாழ இன்னொருவன் அழிகிறான். ஆனால் அது அதற்கான நியாயம் மிகச்சரியானதாக உள்ளது. சரி – பிழைகள் அற்ற இந்த நியாயத்தினூடே வாழும் மனிதனின் பதபதைப்பை பல கதைகள் சொல்வதால் ‘போயாக்’ பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

கேள்வி: இம்முறை யாவரும் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிட ஏதேனும் காரணங்கள் உண்டா?

ம.நவீன்: அப்பதிப்பக உரிமையாளரான ஜீவகரிகாலன்தான் காரணம். நான் செயல்களைவிட செயலை முன்னெடுக்கும் மனிதர்களை நம்புபவன். மை ஸ்கில்ஸ் போன்ற ஒரு திட்டத்தை ம.இ.கா முன்னெடுத்திருந்தால் நான் எவ்வித ஆதரவான சொற்களையும் கொடுத்திருக்க மாட்டேன். யார் அந்த முயற்சிக்குப் பின் இருக்கிறார் என்பது முக்கியம். ஜீவகரிகாலனிடம் பழகிய அளவில் அவர்மேல் நல்ல அபிப்பிராயமும் அவர் உழைப்பில் மதிப்பும் உண்டு. அதுதான் குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்துடன் இணைய காரணம். அவர் வழி மலேசிய இலக்கியத்தைத் தமிழகத்தில் பரவச் செய்ய முடியும் என நம்புகிறேன். அவரும் அதற்காக உழைக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிடும் பல நூல்களும் தொடர்ந்து இலக்கிய விருதுகளைப் பெறுவது அவரது நூல் தேர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது.

கேள்வி: இலக்கியச் செயற்பாட்டாளர், படைப்பிலக்கியவாதி இவற்றில் எதுவாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்? போயாக் மற்றும் மீண்டு நிலைத்த நிழல்களை ஒப்பீடு செய்து சொல்லலாம்.

ம.நவீன்: சென்னையில் நடந்த என் நூல் அறிமுகவிழாவில் ஜெயமோகனும் சு.வேணுகோபாலும் சொன்ன ஆலோசனையை நினைத்துக்கொள்கிறேன். இலக்கியச் செயல்பாட்டில் புனைவிலக்கியத்தை விட்டுவிடாதே என்பது அவர்கள் ஆலோசனை. நான் கலை இலக்கியவிழாவைப் பத்தாவது ஆண்டுடன் நிறைவாகக் கொண்டு செல்லவும் அதுவே காரணம். நான் உண்மையில் படைப்பிலக்கியவாதியாகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் மலேசியாவில் நல்ல படைப்புகளையும் படைப்பாளிகளையும் இதற்கு முன் இருந்தவர்கள் அடையாளம் காட்ட தவறியதால் நாங்கள் அப்பணியைச் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு முன்னிருந்த படைப்பாளிகளை ஆவணப்படுத்தத் தவறியதால் அதையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. நல்ல படைப்பாளிகளின் படைப்புகள் நூலுருவாக்கம் காணாதது, நல்ல படைப்புகள் உருவாக களம் அமையாதது போன்ற காரணங்களால் இந்தத் தலைமுறை அதை முன்னெடுத்துச்செய்ய வேண்டியுள்ளது. ஆனால் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால் இதற்கு நிறைவு இருக்காது. எனவே அடுத்த ஆண்டு முதல் நான் படைப்பாளியாகவே அதிகம் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்.

கேள்வி: நீண்ட காலமாக மாற்று கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் நீங்கள், இலக்கிய சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இலக்கிய உலகில் சர்ச்சைகளுக்கும் ஒரு தேவை இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்ததுண்டா?

ம.நவீன்: யார் அதை செய்கிறார்கள் என்பது முக்கியம். பல சர்ச்சைகள் அறிவுபூர்வமாக நடப்பதால் இருமாறுப்பட்ட தரப்பின் கருத்துகளையும் அறிந்து தொகுக்க முடிகின்றது. நானே சில இலக்கியச் சர்ச்சைகளை செய்துள்ளேன். ஆனால் அதற்குக் கடுமையான உழைப்பிருக்கும். ஒரு சிறுகதை குறித்த சர்ச்சை எழுந்தபோது ‘தாய்மை என்பது புனிதமானதா?’ என உளவியல், வரலாற்று அடிப்படையில் கட்டுரை எழுதினேன். இதுபோல வாசிப்பு குறித்து, சிற்றிதழ் வரலாறு குறித்து எனப் பல கட்டுரைகள் என் தளத்தில் உள்ளன. அவற்றை வாசிக்கும் நீங்கள் புதிய ஒன்றை கண்டடையலாம். இலக்கியச் சர்ச்சை என்பது அதுதான். அது தீர்ப்பல்ல. ஒரு தரப்பின் பார்வை.

ஆனால் எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. சில சமயம் அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் எந்த வாசிப்பும் இல்லை என உள்ளூர அறிவார்கள். ஆனால் இணையத்தில் தேடி சில பல பெயர்களைப் பட்டியலிடுவதன் வழி தங்களைச் சிறந்த வாசகர்களாகக் காட்டிக்கொண்டு விவாதத்துக்கு வருவார்கள். அந்த விவாவத்தின் முதல் பகுதி அவர்கள் இணையத்தில் பொறுக்கியெடுத்த எழுத்தாளர்களின் பெயர்கள் இருக்கும். இடைப்பகுதியில் அவர்கள் சொல்லவந்த மொண்ணையான கருத்திருக்கும். கடைசியில் வசைகள் இருக்கும். இதை வாசிக்கும் எளிய வாசகன் அவர்களைப் பார்த்து மிரள்வான். அதன் காரணம் முதலில் திருடி எடுத்தப் பட்டியல். நான் இதுபோன்றவர்கள் வரலாற்றுக்குப் பாதகம் தரும் கருத்துகளைச் சொன்னால் மட்டுமே எதிர்வினையாற்றுகிறேன். அது புரியாமல் வாசிக்கும் இளம் தலைமுறையின் நன்மை கருதி. மற்றபடி என்னைப்பற்றிய தனிப்பட்ட சாடல்களைப் பொருட்படுத்துவதில்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் மிக அதிகம். தேவைப்பட்டால் இதுபோன்றவர்களிடம் நேரடியாக விவாதம் செய்யலாம். அவர்கள் அறிவுக்கூர்மையை நார்நாராகக் கிழித்து பொதுவில் தொங்கவிடுவதுகூட இளம் தலைமுறைக்குச் செய்யும் உதவிதான்.

கேள்வி : உங்கள் பத்திகளுக்கு இலக்கியச் சூழலில் எவ்வாறான முக்கியத்துவம் உள்ளது என நீங்கள் நினைக்கிறீர்கள்?  

ம.நவீன்:இலக்கியம் என்பதே வாழ்க்கைகான முக்கியத்துவத்தை உணர்த்துவதுதானே. அவ்வகையில் என் பத்திகள் இலக்கியச் சூழலுக்கு முக்கியத்துவம் பெறுமா எனத் தெரியவில்லை. ஆனால் வாழ்க்கையைச் சொல்லும் அவை, வாழ்க்கையின் சிடுக்குகளை ஆராயும். அவை, வாசகன் தன் வாழ்வில் தவறவிட்ட தருணங்களை மீண்டும் கண்முன் கொண்டுவந்து காட்டலாம்.

நேர்காணல்: க.கங்காதுரை

1 கருத்து for ““எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.”

  1. அண்டனூர் சுரா
    October 8, 2018 at 6:33 pm

    நல்ல பேட்டி. யாவரும் மீதான உங்கள் கணிப்பு சரி. நூல்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதில் கை தேர்ந்தவர் ஜீவகரிகாலன். மேலும் உங்களது பேட்டியில் விமர்சனம், விமர்சனம் மீதான விமர்சனம், அதன் மீதான விமர்சனம் என பல வடிவ விமர்சனங்களையும் எதிர்க்கொண்டே இலக்கிய களமாடவேண்டியிருக்கிறது. அந்த வகையில் விமர்சனம் மீதான பதில் சரியே. இதற்கு முன்பு அம்ருதா இதழில் நீங்கள் கொடுத்த பேட்டி இன்னும் என் கண்ணுக்குளிலிருக்கிறது. ஆனால் இந்தப்பேட்டி சுருக்கமானதாக இருக்கிறது. இன்னும் நிறைய பேச வேண்டிய தேவை இன்றைய இலக்கிய சூழலுக்கு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்த பதிவுகளில் நிறைய பேசுங்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...