ஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன்

220px-ErnestHemingwayஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பியபின் பல புதிய படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். அம்முகாமுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இருந்த பல கதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன். அதில்தான் ஹெமிங் வே எனும் படைப்பாளி எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் எழுதிய கிழவனும் கடலும் என்ற நோபல் பரிசு பெற்ற நாவலின் குறும்படத்தைத் தேடிப் பார்த்தேன். அவர் குறித்து விரிவாக அறிய முயன்றேன். அமெரிக்க நவீன இலக்கியத்தில் அவரது ஆளுமை என்வென்று அறிய கொஞ்சம் விரிவான வாசிப்புத் தேவையாக இருந்தது.

காலனித்துவம் தொடங்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டில்தான் அமெரிக்கா தனது முதல் அடியை இலக்கிய வெளிகளுக்குள் எடுத்து வைத்தது. அதுவும் ஆங்கிலம் பேசும் ஒரு ஐரோப்பியனின் காலனித்துவம் சார்ந்த படைப்பிலிருந்தே அது தொடங்கப்பட்டுள்ளது. அக்காலக்கட்டத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலானவை காலனித்துவத்தால் உந்தப்பட்டவை என்பதால் அவை முற்றிலுமாக அதைத் தழுவியே இருந்துள்ளன. எனவே, அவை காலனித்துவம் இலக்கியம் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் தொடக்க காலம் வரையிலும் அமெரிக்க இலக்கியங்கள் முற்றிலுமாக அரசியல் நோக்கிலேயே படைக்கப்பட்டு வந்துள்ளது. பென்ஜமின் பிராங்கிலின் (Benjamin Franklin), அலெக்சாண்டர் ஹெமில்டன் (Alexander Hamilton), தோமஸ் பைனி (Thomas Paine) அகியோர் அக்காலத்தில் எழுதிய சில முக்கிய அமெரிக்க எழுத்தாளர்கள். தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டுகளின் இடைக்காலத்தில்தான் அமெரிக்க இலக்கியங்களில் புதிய போக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஹென்ட்ரி டேவிட் தோரியவ் (Henry David Thoreau), வில்லியம் லியோட் கரிசொன் (William Lloyd Garrison) , ஹர்ரிட் பீச்சர் ஸ்த்தோவ் (Harriet Beecher Stowe) ஆகியோரை அக்காலக்கட்டத்தில் புதிய கருப்பொருளைத் தொட்டு எழுதிய முதன்மையான சில எழுத்தாளர்களாக நாம் அறியலாம்.

ஆனால், அமெரிக்க இலக்கிய வரலாற்றைப் பொருத்தவரை 20ஆம் நூற்றாண்டுகளில் முதல் உலகப்போருக்குரிய காலக்கட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. போருக்கு முன்னரும், போர் சமயங்களிலும், அதற்குப் பின்னருமாக நாடகம், கவிதை, சிறுகதை ஆகிய பலவடிவங்களில் இலக்கியங்கள் தீவிரமாகப் படைக்கப்பட்டுள்ளன. தனி உத்திகளுடன் நுட்பமான படைப்புகள் பதிவு செய்யப்பட்ட தொடக்க காலமாகவும் அது இருந்துள்ளது. அப்போது இயங்கிய சிற்றிதழ்கள் சில புதிய படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கம் கொண்டே செயல்பட்டுள்ளன. அவ்வகையில் The Dial (1880–1929), Little Review (1914–29), Seven Arts (1916–17), போன்ற சிற்றிதழ்கள் குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தில் நவீனத்துவத்தையும், புதிய அணுகுமுறையையும் கண்டடைய துணைபுரிந்த சிற்றிதழ்கள் இவையென கருதப்படுகிறது. மேலும் 20ஆம் நூற்றாண்டில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் அப்போதைய இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாகவே இருந்துள்ளன.

அக்காலகட்டத்தில் எழுதிய பல அமெரிக்கப் படைப்பாளிகளில் எர்னஸ்ட் ஹெமிங் வே தனித்த ஆளுமையாகவே இலக்கிய உலகில் தன்னை நிறுவியுள்ளார். 1899 தொடங்கி 1961 வரையிலான அவரது வாழ்க்கையில் இலக்கியத்துக்கான பங்கு மிகப் பெரியது. இவரது படைப்புகளைப் போலவே வாழ்க்கையும் தனித்துவம் வாய்ந்ததுதான். அது பல சவால்களுக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஒரு பிரமாண்ட வரலாறு. 1954-இல் நோபல் பரிசு பெற்ற இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 10 நாவல்களையும், 10 சிறுகதை தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். 2 புனைவற்ற படைப்புகளையும் (non-fiction) தொகுப்புகளையும் கொடுத்துள்ளார். இவரது பெரும்பாலான படைப்புகள் அமெரிக்கப் பாரம்பரிய இலக்கியமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உயர் கல்வி கற்ற காலத்திலேயே நிருபராகப் பணியாற்றிய ஹெமிங் வே வெகு விரைவிலேயே தன்னை ஒரு எழுத்தாளனாகவும் கண்டுணர்ந்தார். உயர் கல்விக்குப் பின்னர் ஆறு மாத காலம் கான்சா சிட்டியில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். சுருக்கமாக மொழியைப் பயன்படுத்தும் கலையைக் கைவரக் கற்றுகொண்ட இடம் அதுவாகவே இருந்துள்ளது. எழுத்தில் ஆர்வமுள்ள இவர் சவால்மிக்க பல விளையாட்டுகளிலும், நடவடிக்கைகளிலும் ஆர்வமுள்ளவராக இருந்துள்ளார். காற்பந்து, காளைச் சண்டை, வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற பல நடவடிக்கைகளிலும் தீவிரமான ஆர்வமுள்ளவர் எழுத்தாளர் ஹெமிங் வே. ஒரு எழுத்தாளனின் பரந்த அனுபவம் அவனது படைப்பாற்றலின் முதுகெழும்பு என்பதை ஹெமிங் வே வின் ஆளுமையின் உருவாக்கம் உறுதிப்படுத்துகிறது.

1918-இல் உலகப் போருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பணியாற்றிய இவரது சவால்மிக்க அனுபவங்கள் சுவாரசியமானவை. பொதுச்சேவை சார்ந்த இவரது ஈடுபாட்டை ஒரு புறம் அறிய முடிந்தாலும், அதற்குள் சாவல்களை எதிர்நோக்க விரும்பும் அவரது துணிச்சல்கரமான இளமை துள்ளும் காலம் இவரைப் பிற படைப்பாளிகளிலிருந்து மாறுபடுத்துகிறது. அதே வருடத்தில் விபத்தில் காலில் பெரும் காயத்துடனும் ‘தெ இத்தாலியன் சில்வர் மெடல்’ (the Italian Silver Medal of Bravery) என்ற வீரத்தை ஊக்குவிக்கும் விருதுடன் வீடு திரும்பினார். எனினும் ஒரு படைப்பாளியாக அவர் தனது போர் கால அனுபவத்தை இலக்கியமாக்க தவறவில்லை.

1929 ‘A farewell to arm’ என்ற நாவல் அவரின் போர்க்கால அனுவத்தைத் தழுவி எழுதப்பட்டது. “போருக்குச் செல்லும் வீரனின் கற்பனைக்கு வருவது பிறருடைய கொலைகள்தான், ஆனால், அவன் முதல்முறையாகத் தாக்கப்படும்போதோ காயப்படும்போதோதான் அது தனக்கும் நேரலாமென அறியக்கூட்டும், அது அச்சமூட்டவும்கூடும்,” இப்படி ஹெமிங் வே தனது விபத்து நேர உணர்வை பதிவுசெய்துள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் கழிந்த அவரது ஆறு மாதங்களில் தன்னைவிட ஏழு வயது மூத்த அக்னி வோன் குரொவ்ஸ்கை (Agnes von Kurowsky) என்ற தாதியோடு அவருக்கு முதல் காதல் மலர்ந்தது. ஆனால் அப்பெண் வேரொருவரை மணந்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டபோது ஹெமிங் வே மனப் பாதிப்புக்குள்ளானார். பெண்களின் மீதான அவரது பார்வை காயப்பட்டே அங்கிருந்து உருவானது.

டொராண்டோ ஸ்டார் என்ற வார இதழில் எழுத்தாளராக பணியாற்றும் காலக்கட்டத்தில் அறிமுகமான ஹட்லி (Hadley) என்ற தன்னைவிட எட்டு வயது மூத்த பெண்ணை மணந்தார் ஹெமிங் வே. அழகான மனைவி போதுமான பொருளாதாரமென அவரது வாழ்க்கை மிக அழகானதாக இருந்தது. எனினும், ஃபியர் (Pfeiffer) பௌலினா (paulina), மார்த்தா (maartha) இறுதியாக மேரி (mery) என அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்துள்ளார்.

மேரியோடு வாழும் காலக்கட்டத்தில் அவருக்கு 19 வயது பெண்ணோடு காதல் ஏற்பட்டது. அக்காலக்கட்டத்தில்தான் அவர் நோபெல் பரிசு பெற்ற தெ ஓல்ட் மேன் அண்ட் த சீ (the old man and the sea) என்ற நாவலை எட்டு வாரத்தில் எழுதினார். மணவாழ்க்கையில் ஒரு நிரந்தர மனப்போக்கு இல்லாத ஹெமிங் வே சிக்காகோ, பேரிஸ், கூபா, கீ வெஸ்ட் என்ற பல இடங்களில் வாழ்ந்தார்.

அதிக பயணங்களை மேற்கொள்ளும் அவர் பலமுறை விபத்துக்குள்ளானார். எனினும்,ernest-hemingway-514896254-5c91ba79c9e77c0001e11e36 நான்காவது மனைவியோடு ஏற்பட்ட விமான விபத்தே அவருக்கு மனதளவிலும் உடலளவிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அவர் மரணத்தின் விளிம்புகளைத் தொட்டு மீண்டார். அதற்குப் பின்னரே அவர் வழக்கத்துக்கு மாறாக மது அருந்தத் தொடங்கினார். அதன் உச்சகட்ட தாக்கமாகவே சில காலம் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார். ஹெமிங் வேயின் வாழ்க்கையின் கடைசி வருடத்தில் அவருடைய நான்காவது மனைவியும் அவருடன் இல்லாதது அவரைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. அச்சமயத்தில் மீண்டும் உடல்நலமில்லாமல் போன நிலையில் தனிமை அவரை மேலும் அச்சமுறச் செய்தது. எஞ்சி இருக்கும் வாழ்க்கையைக் கடத்துவதை எண்ணி குழம்பினார். பணத் தேவை, தனிமை, நோய் என எல்லாமாக அவரது முதுமைக் காலத்தை பயமுறுத்தியது.  எழுத்துலகில் ஒரு பெரும் ஆளுமையாக இருந்த அவரே தன்னுடைய கடைசி காலத்தின்போது ஒப்பந்தப்படி 10,000 சொற்களுக்குள் எழுத வேண்டிய காளைச்சண்டை (bull fighting) தொடர்பான அறிக்கையை சுருக்கி எழுத  முடியாமல் அதிலிருந்து பின்வாங்கினார். அது எழுத்தில் அவரது முதல் தோல்வியாகவே கருதப்பட்டது.

அதே காலக்கட்டத்தில் ஹெமிங் வே மருத்துவமனையில் மனநோய் சிகிச்சையும் பெற்றார். பின்னர் அவரது உடல் நிலையைச் செய்தி வழி அறிந்த மேரி அவரை உடன் அழைத்துச் சென்றார். எனினும், மருத்துவ மனையிலிருந்து வந்த ஹெமிங் வே தன்னுடைய 61-ஆவது வயதில் துப்பாகியால் வாயில் சுட்டுக்கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார். ஹெமிங் வே குடும்பத்தில் இது முதல் தற்கொலையல்ல. அவருக்கு முன்னரும் பின்னருமான ஐந்து தற்கொலை மரணங்களை அவரது பரம்பரை சந்தித்துள்ளது. எனவே, என்னதான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டநிலையிலும், முதுமைக்கு அஞ்சியும் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடுமென சொல்லப்படுகிறது.

இப்படி சவால்மிக்க அவரது வாழ்க்கை ஓட்டத்திற்கு மத்தியில் அவர் எழுதினார் என்பதைவிடவும் எழுத்துக்கு மத்தியில்தான் அவர் வாழ்ந்தார் என்பதே பொருந்தும். அமெரிக்க இலக்கியத்துக்கு ஹெமிங் வேயின் பங்கு அளப்பரியது. ‘ஐஸ் பெர்க்’  என்ற அவரது தனித்த எழுத்து முறையே அவரது படைப்புகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அதுவே அமெரிக்க இலக்கிய நடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுமுள்ளது. கலந்துரையாடாமல், விளக்காமல், திறந்து கூறாமல் சிக்கனக் கொள்கையின் அடிப்படையில் மொழியைக் கையாளும் அம்முறை நவீன இலக்கியத்தின் புதிய முகமாகத் திகழ்ந்தது.

அவரது எழுத்து நடையானது ஒரு செயலை, ஒரு உரையாடலை அல்லது ஓர் அமைதியை முன்வைத்துக் கதைச் சொல்லுபவை என அவருக்குப் பின்னால் வந்த எழுத்தாளர்கள் கூறியுள்ளனர். ஹெமிங் வேயின் படைப்புகள் அதிகமானவை காதல், போர், இழப்பு, என்ற கருப்பொருளைக் கொண்டு நகர்பவை. இயற்கைப் பின்னணியும் அவரது சிறுகதைகளிலிருக்கும் மிகப் பெரிய பலமென கருதப்பட்டுகிறது. இதன் காரணமாகவே, இன்றளவும் இவரது படைப்புகள் பெரும்பாலானவை அமெரிக்காவின் பாரம்பரிய இலக்கியமாகவே கருதப்படுகின்றன. ஹெமிங் வேவின் சிறுகதைகள் பெரும்பாலானாவை வாழ்க்கையின் யதார்த்தத்தைப் போகிற போக்கில் மிக சாதாரணமாக சொல்லக்கூடியவை. கடந்து போகும் பல அன்றாடங்களில் நாம் கவனிக்கத் தவறிய எத்தனையோ பல காட்சிகளைதான் ஹெமிங் வே சிறுகதைகள் முன்வைக்கின்றன. அவரது கதைகள் பெரும்பாலானவை அவரிலிருந்தும் பிறப்பவைதான். அவர் பார்த்ததை, அவர் வாழ்ந்ததை அவர் உணர்ந்ததை அப்படியே சொல்லக்கூடியவை. அது நம்மை அந்த சூழலுக்குள் அந்த காலத்துக்குள் கைபிடித்து அழைத்துச் செல்லக்கூடியவை.

நன்கு ஒளியூட்டப்பட்ட சுத்தமான இடம் (A well cleaned, lighted place)

அப்படி அவரது சிறுகதைப் பட்டியல்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியது நன்கு ஒளியூட்டப்பட்ட சுத்தமான இடம் (A well cleaned, lighted place). இக்கதை ஒரு முதியவனுக்கும் இளையவனுக்கு இந்த வாழ்க்கையின் மீது இருக்கும் பற்றுதல், எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பயம் என்ற கூறுகளை மிகக் கச்சிதமான சொற்களுக்குள் காட்டக்கூடியது. நன்கு சுத்தமான ஒளியூட்டப்பட்ட அந்த இடத்தை கதை மிக அமைதியுடனேயே நம் மனதுக்குள் ஏற்றிவைக்கிறது. அங்கு பணியாற்றும் ஒரு இளவயது பணியாளனுக்கு அந்த இடம்தான் பணி செய்யும் இடமாக மட்டுமே இருக்கிறது. எனவே, இரவில் அங்கே அதிக நேரம் செலவிட விரும்பும் ஒரு முதியவனைக் கண்டு எரிச்சலடைகிறான். அவனால் தான் வீட்டுக்கு சென்று தன் மனைவியுடன் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் மட்டுமே அவனுக்கு. ஆனால் அந்த இடம் தன் மனதுக்கு மிக பக்கத்தில் இருப்பதுபோல உணரும் முதியவர் தன் இரவுகளை அங்கே கழிப்பதையே விரும்புகிறார். அந்த முதியவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சி செய்தவர் என்பது கதையில் சொல்லப்படுகிறது. மேலும் அந்த முதியவரின் மனநிலையை விளங்கிக்கொண்ட ஒரு நடுத்தர வயது பணியாளன் அவரை கருணையோடே எதிர்கொள்கிறான். அவனும் முதுமைக்குப் பக்கத்தில்தான் சென்றுவிட்டதை உணர்ந்திருக்கக்கூடும். அவன் இளவயது பணியாளனுடன் உரையாடும் சூழலில் முதுமை அருவருக்கத்தக்கது, நான் அதை விரும்பவில்லை என இளவயது பணியாளன் கூறுகிறான். அது ஹெமிங் வேயின் குரலாகவே அதில் ஒலிக்கிறது. மேலும் கதை ஓட்டத்தின் நடுவே, ஒரு ராணுவ வீரன் ஒரு பெண்ணோடு (பாலியல் தொழிலாளியோடு) அந்த வீதியை மிக வேகமாகக் கடந்து செல்கிறான். அது இரவுகளில் மட்டும் அச்சமூட்டும் தனிமையின் கோரப் பற்களை மிகப் பக்கத்தில் காட்டிச் செல்கிறது. இந்தக் கதை நடக்கும் அந்த விடுதியில் இருக்கும் அமைதியும் ஒளியும் இலைகளில் இடுக்குளில் ஊடுறுவிக்கொண்டு நிழலாக அசைந்து ஆடும் நிலவொளியும் விளக்கொளியும் வாசிப்பவரின் மனதுக்குள் அமைதியைப் படர்விடக்கூடியவை. தனிமைக்கும், இரவுகளுக்கும், சுத்தமான ஒளியூட்டப்பட்ட இடத்திற்குமான தொடர்பைக் காட்டிச் செல்கிறது கதை.

நமது அன்றாடங்களில் நாம் கடந்து போகின்ற எத்தனையோ பல காட்சிகளின் ஒரு சின்ன துகள்தான் அது. அந்த ஒரு துகளில் இருக்ககூடிய வெறுமையின் பூதாகரத்தைப் பற்றியே இந்தக் கதை பேசுகிறது. இதில் சமூக மாற்று கருத்துகளோ, புரட்சியின் குரலோ அல்லது பிரமாண்டமான கதைக் கருவோ இல்லை. ஆனால், உணர்வுகளால் மட்டுமே கடத்தக்கூடிய வெறுமையை காட்சிகளால் மட்டுமே கதைக்குள் வைத்துள்ளார். இக்கதை இன்றளவும் அவரது ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகவே இருக்கிறது. இயல்பாகவே அவருக்கு முதுமையின் மேல் இருந்த பயத்தை இந்தக் கதை காட்டிக் கொடுக்கிறது. அந்த முதுமையை எட்டும் நடுத்தர வயது பணியாளன் முதுமையின் மீது வைத்திருக்கும் பார்வை இவரைப் பிரதிபலிக்கிறது. பின்னாட்களில் எதிர்நோக்கவிருக்கும் முதுமையை எண்ணி அவர் அப்போதே அச்சமுற்றுள்ளதைக் கணிக்க முடிகிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அறியாமல் தன் நிழல்களை, தன் அடையாளங்களை தன் படைப்புகளில் உதிரவிடும் இயல்புநிலைக்கு ஹெமிங் வேயும் அந்நியமானவரல்ல.

Hemingwayஅசாத்தியமான கதைகளை எழுதிய ஹெமிங் வே சில சுமாரான கதைகளையும் எழுதியுள்ளார் என சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த  வகையில் ‘த கில்லர்’ (the killer) என்ற சிறுகதையைச் சொல்லலாம். இதை சுமாரான கதையென விமர்சகர்களால் வகைபடுத்தப்பட்டுள்ளது. காட்சிகளை அடுக்கிச் சொல்லியும் சின்ன சின்ன உரையாடல்களினூடாகவும் இன்னதென்று பகுத்துக்கூற முடியாத உணர்வுகளைக் கடத்தக்கூடிய கதைதான் இதுவும். இந்தக் கதை ஒரு நிஜ சம்பவத்தின் சாரமாகவே எழுதப்பட்டுள்ளது. இக்கதை எழுதப்பட்ட காலக்கட்டத்தில் அண்டர்சன் (Anderson) என்ற குத்துச்சண்டை வீரன் குண்டர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். எனவே, இந்த சிறுகதை முழுக்கவே அந்தக் கொலைச் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டதுதான்.

எனினும், கதையோட்டத்தின் ஊடே ஹெமிங் வே தன்னுடைய தனித்த சிந்தனையை, வாழ்க்கையின் மீதான கண்ணோட்டத்தை மிக நுண்மையாக, மௌனமாக பாத்திரங்களின் மூலம் சொல்லுகிறார்.

அண்டர்சன் (Anderson)  என்ற குத்துச் சண்டை வீரனைக் கொல்லும் நோக்கில் அவர் வழக்கமாக உண்ணும் உணவகத்துக்குச் இருவர் செல்கின்றனர். அங்கே அந்த உணவகத்தை நடத்தக்கூடிய ஜார்ஜ் (George), உணவு உண்ண வந்த ஆடம் நிக் (Adam nick), சாம் (sam) கருப்பின சமையல்காரன் ஆகிய மூவரும் இருக்கின்றனர். வந்தவர்கள் வெகு விரைவிலேயே தங்களது நோக்கத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தி அச்சமூட்டிகின்றனர். அவர்களில் ஒருவன் வாடிக்கையாளனான ஆடம் நிக்கையும், சமையல்காரனையும் கட்டிப்போட்டு மிரட்டும் சூழலில் அண்டர்சனின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அண்டர்சன் வராமல் போகவே அவர்கள் அங்கிருந்து வெளியேருகின்றனர். அண்டர்சனைக் காப்பாற்ற முதலில் அவரை எச்சரிக்க வேண்டும் என மூவரில் இருவர் ஆர்வம் காட்டினர். சமையல்காரனுக்கு அதில் தனக்கு எந்த நன்மையும் வரப்போவதில்லை என்றே விலகிக்கொண்டு அவர்களையும் பின்வாங்கச் சொல்லுகிறான். ஆனால், இளம் வயதான ஆடம் குறையாத பதற்றத்துடனும், அது தனக்கு நடப்பது போன்ற எண்ணத்துடனும் அண்டர்சனைப் பார்க்கச் செல்கிறான். ஆனால், அண்டர்சனோ முற்றிலும் வேறுபட்ட எதிர்வினை காட்டுகிறார். தன்னைக் கொல்லக்கூடுமென அறிந்தபோதும் அதை ஒட்டிய எந்த அதிர்ச்சியும் அவரிடம் ஏற்படவில்லை. மாறாக இப்பொழுது தான் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்று மெத்தையில் அவரது துணிகளோடு சுருண்டு கிடக்கிறார். பலமுறை ஆடம் நிக் சிக்கலை ஆழத்தைச் சொல்லியும் அதை அவர் பொருட்படுத்திக்கொள்ளவில்லை. ஆடம் மீண்டும் உணவகத்திற்குச் சென்றபோது அங்கே தொடக்கத்தில் அவரைக் காப்பாற மும்முரம் காட்டிய ஜார்ஜும்கூட அப்பொழுது அதைப் பொருட்படுத்தாத நிலையில் ஆடம் குழப்பங்களுடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

முதுமைக்குக்கும் இளமைக்குமான வேறுபாட்டை நுட்பமாகச் சொல்லிச் செல்கிறது இக்கதை. நம்முடைய வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய பல தரப்பட்ட மனிதர்களையும் அடையாளம் காட்டும் கதை என இதைக் கூறலாம். ஒரு இளைஞனுக்கு முக்கியமாக தீர்க்கப்பட வேண்டுமென தோன்றும் சிக்கல் இன்னொரு தரப்பினரால் அலட்சியம் செய்யப்படுகிறது. இந்த உயிர், இந்த உடல், இந்த வாழ்க்கை என்ற அடிப்படையில் அவனது எதிர்பார்ப்புகள் அதைக் காக்கவேண்டிய அவசியத்தை அவனுக்குத் தந்துள்ளன. அதே அவசியம்தான் எல்லா தரப்பினருக்குமென்ற சின்ன நம்பிக்கையில்தான் அண்டர்சனைக் காக்கத் துடிக்கிறான். அதே துடிப்பு பிறரிடமும் சம்பந்தப்பட்டவரிடமும் இல்லாமல் போகவே வாழ்க்கை அவனுக்கு புதிய முகத்தைக் காட்டுகிறது. இப்படி ஒரு கொலைச் சம்பவத்துக்கு அடியிலிருந்து பல தத்துவங்களை இந்தச் சிறுகதை சொல்லுகின்றது.

1923 இல் பிரசுரிக்கப்பட்ட அவுட் ஆஃப் த சீசன் (out of the season) எனும் சிறுகதை ‘ஐஸ் பெர்க்’ உத்தியை முயற்சித்த ஹெமிங் வேயின் முதல் கதை. இந்தக் கதை வாசிப்பவருக்கு எளிதாகவே புரிந்துவிடக்கூடியதுதான். அதன் கதைப் போக்கு எந்தச் சிக்கலுக்கும் உட்படாமல் மிகத் தெளிவான வடிவத்திலேயே எழுதப்பட்டுள்ளது. இக்கதை கணவன், மனைவி சிக்னோரியா (signoria),  பெடுஸி (peduzzi) என்ற குடிகார தோட்டக்காரன் ஆகிய மூவரை மட்டுமே கொண்டு  நகர்கிறது. மீன் பிடிக்கச் செல்ல விரும்பும் கணவன் அந்தப் புதிய இடத்தில் தனக்கு வழிகாட்ட உதவும்படி தோட்டக்காரனைக் கேட்கிறான். மூவருமே ஒன்றாக விடுதியைவிட்டு மீன் பிடிக்க வெளியேறுகின்றனர். போகும் வழியில் மதுபானம் வாங்கும் கணவன் மனைவியிடம் மன்னிப்புக்கேட்ட வண்ணமாகவே நடக்கிறான். பெடுஸி (peduzzi) குடித்திருப்பதை அறிந்த மனைவிக்கு அவன் மீது கோபம். நாம் போலீசில் பிடிபடப் போகிறோமென எச்சரித்தபடியே மனைவி வருகிறாள். அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் அவளுக்குப் பயம் ஏற்படுகிறது. அந்தக் குடிகார தோட்டக்காரனைத் திட்டிக்கொண்டே  விடுதிக்குத் திரும்பிவிட கணவனிடம் கேட்கிறாள் சிக்னோரியா. மீன் பிடிக்காமல் திரும்ப இயலாது என்று கூறியபடியே முன்னோக்கி நடக்கும் கணவன் அவளை வேண்டுமானல் திரும்பிப்போகச் சொல்கிறான். தான் போக முடியாது சிறைக்குச் சென்றாலும் கூடவே வருவேன் என்கிறாள். மூவரும் தொடர்ந்து நடக்கையில் இன்னும் 30 நிமிடங்களாகுமென தோட்டக்காரன் சொல்லவே சிக்னோரியாவை விடுதிக்கே திரும்பி அனுப்பி வைக்கிறான் அவளது கணவன், அவளும் செல்கிறாள். தன் பேச்சைக் கேட்டு அவள் சென்றது அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. அனால், அவள் சென்ற சில நிமிடங்களிலேயே மீன் பிடிக்கச் சரியான இடத்தை அடையாளம் கண்டுவிடுகின்றனர். இருவரும் ஆர்வமாக மீன் பிடிப்பதற்காக ஆயத்தமாகினர். ஆனால், மீன்பிடிக்க மிக அவசியமான மண்புழு இல்லாதது அப்போதுதான்  நினைவுக்கு வருகிறது. தோட்டக்காரன் ஆர்வமாக மண் புழு மிக அவசியம் அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது என்கிறான். பல முறை மண்ணைத் தோண்டி புழுவைத் தேடுகின்றனர். ஆனால் கிடைக்கவில்லை. முயற்சி தோல்வியில் முடியவே நாளை மீன் பிடிக்கலாமென தோட்டக்காரன் கூறவே அவனும் சம்மதிக்கிறான்.  பின்னர் தரையில் அமர்ந்தபடி அவன் வாங்கி வந்த மதுபானத்தை மிகுந்த ஆர்வத்தோடு எடுத்து தோட்டக்காரனிடம் நீட்டினான். தோட்டக்காரன் அவனிடமே மீண்டும் கொடுத்தான். பின்னர் அதை ஆர்வத்துடன் அவன் குடித்து முடிக்கிறான். பிறகு, இந்நாள் எனக்கு மகிழ்ச்சிகரமான நாள், புத்துணர்ச்சியான நாள் என தன்னுடைய கட்டற்ற மகிழ்சிச்சியைக் கட்டுப்பாடின்றி வார்த்தைகளால் சத்தமாகச் சொல்கிறான். விடுதிக்குத் திரும்பும்போது நாளை மின் பிடிக்கத் தேவையான எல்லாப் பொருள்களையும் வாங்கி வருவதாகக்கூறி அதற்கு 5 லிராக்கள் கேட்டான் தோட்டக்காரன். அதைக் கொடுத்துவிட்டு புறப்படுகிறான் கணவன். ஆனால், அடுத்த நாள் காலை தோட்டக்காரன் வருவதற்கு முன்னதாகவே  தம்பதியர் அங்கிருந்து வேறு இடம் சென்றுவிட்டிருந்தனர். இப்படிக் கதை முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கதை ஒரு சாதாரணமான கதையாகவே மேலோட்டமான வாசிப்புக்குத் தென்படலாம். ஆனால் அதற்குள் அடங்கிக் கிடக்கும் சுதந்திரத் தேடல்களை, கட்டுப்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் அறியலாம். அன்பு, அக்கறை என்பதன் பேரில் ஒரு பெண் ஓர் ஆணின் சுய வெளிகளைச் சுருங்கச் செய்வதை கதை மிக நாசுக்காகக் கூறியுள்ளது. இது ஹெமிங் வேயையும் அவரது மனச்சுரண்டலையும்கூட ஒரு விதத்தில் காட்டிக்கொடுக்கவே செய்துள்ளது. மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ள ஹெமிங் வே மது அருந்தும் பழக்கமுடையவராகவும் இருந்துள்ளார். எனவே, இந்தக் கதையில் வரும் கணவனுக்கு ஹெமிங் வே தனது சாயலையே பூசியிருக்கிறார். மேலும் ஹெமிங் வே-வின் நிலையில்லாத மணவாழ்க்கையைக் கொண்டு நாம் அவருக்கான தேடல் இன்னதென்று அறிய இந்தக் கதாபாத்திரம் வழிவகுக்கிறது.

 1938-இல் பிரசுரமான த ஓல்ட் மேன் அட் த ப்ரிட்ஜ் (the old man at the bridge) எனும் சிறுகதை இரண்டே பக்கங்கள்தான். ஸ்பானிய நாட்டுப் போரின்போது மக்கள் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள  பந்தூன் (Pantoon) என்ற பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு சூழலில் கதை தொடங்குகிறது. அமைதியான ஒரு சூழல் சட்டென பரபரப்புக்கும் உயிர் பயத்தின் பதற்றத்துக்கும் ஆளாகிறது.  தூரத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் இல்லாத முதியவர் ஒருவர் உட்கார்ந்திருப்பதை ராணுவ வீரன் கவனிக்கவே அருகில் சென்று அவரை விசாரிக்கிறான். தன்னுடைய ஊரிலிருந்து 12 கிலோமிட்டர் தூரம் நடந்து வந்ததாகக் கூறும் அந்த முதியவரை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறான் ராணுவ வீரன். ஆனால், பலமுறை வற்புறுத்தியும் அந்த முதியவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் இல்லாத நிலையில் ஏதோதோ புலம்பத் தொடங்குகிறார். அந்தப் புலம்பலில்தான் கதையின் அரசியல் அடங்கியுள்ளது.

தன்னுடைய கிராமத்தில் விட்டு வந்த வளர்ப்புப் பிராணிகளைப் பற்றி மீண்டும் மீண்டும் வருந்துகிறார். இரண்டு ஆடுகள், நான்கு ஜோடிப் புறாக்கள் ஒரு பூனை என பிராணிகளின் பட்டியலை வருத்ததுடன் குறிப்பிடுகிறார். அதில் பூனையைப் பற்றி தனக்குக் கவலை இல்லை அது எப்படியும் தன்னைத் தற்காத்துக்கொள்ளுமெனக் கூறுகிறார். இதைக்கேட்ட ராணுவ வீரன் இந்த முதியவன் இப்படிப் பேசுவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென கேட்கவே; அவன் தனக்கு எந்த அரசியல் நோக்குமில்லை, எனக்கு 76 வயதாகிறது, மேலும் நான் 12 கிலோ மீட்டர்கள் நடந்து வந்துவிட்டேன். இனி நடக்க முடியாது என்கிறார். ராணுவ வீரன் மீண்டும் முதியவரைக் காப்பாற்றும் நோக்கில் அவரைக் கொஞ்ச தூரம் சென்று அங்குள்ள வண்டியில் ஏறிக்கொள்ளும்படி வற்புடுத்துகிறான். ஆனால், அவர் அதற்கு எதிர்வினையாக மீண்டும் தரையில் சரிந்தார். இனி நடக்கமுடியாது என கூறுகிறார். இதைச் சொல்லிய பிறகு மீண்டும் தன்னுடைய பிராணிகளைப் பற்றியே புலம்புகிறார். தன்னுடைய நான்கு ஜோடிப் புறாக்களின் கூண்டுகள் பூட்டப்படவில்லை எனவே, அவை நிச்சயம் பறந்துவிடுமென அந்த வீரனிடம் கூறுகிறார். அவன் பலமுறை முயற்சித்தும் அந்த முதியவர் தன்னைக் காப்பற்றிக்கொள்ள எந்த வகையில் முயற்சிக்கவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவரை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறான். தன்னோடு பேசியதற்கு முதியவர் நன்றி கூறி அவனை வழியனுப்பி வைக்கிறார்.

1938-இல் நடந்த ஸ்பானியப் போரின்போது  ஒரு ஈஸ்டர் ஞாயிறன்று ஹெமிங் வே கவனித்த காட்சிப் பதிவே இந்தக் கதை. இது ராணுவ வீரனின் குரலில் எழுதப்பட்டுள்ளது. இதில் முதியவர் குறிப்பிடும் மூன்று பிராணிகளும் அரசியல் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் புரியும். அந்த மூன்று பிராணிகளில் பூனையும், புறாவும் தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு என்று கூறுபவர் ஆடுகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மாறாக தன்னைவிடவும் தனது பிராணிகளை எண்ணியே வருந்துவதாகக் கூறுகிறார். எனவே, அவர் ஆடுகளாகக் கூறுவது ஒன்றுமறியாத அப்பாவி மக்களை என நாம் யூகிக்கலாம். போர் ஒட்டுமொத்தமான இழப்புகளைக் கொண்டு வருகிறது. குடும்பங்களை, உறவுகளை உடைக்கக்கூடியது. அது சமத்துவமற்றதென அறியமுடிகிறது.

அமைதியிலிருந்த ஒரு நகரம் சட்டென பரபரப்புக்குள்ளும் அச்சத்துக்குள்ளும் மூழ்கித் தன்னுடைய அமைதியை இழப்பதையும் அதற்குக் காரணம் போர் என்பதையும் கதை ஒரே முதியவரைக் கொண்டு முன்வைக்கிறது.

ஹெமிங் வே நிருபராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில் இச்சிறுகதை எழுதப்பட்டுள்ளது. எனவே, இதனை ஒரு செய்தி அறிக்கையாகவும் வகைப்படுத்தலாம்

1920-களின் தொடக்ககால எழுத்தாளரான ஹெமிங் வே-வின் படைப்புகள் அசாத்தியமானவை. அமெரிக்க இலக்கியத் திசைகளை மாற்றியமைத்த ஒரு புயலாக ஹெமிங் வேயின் படைப்புகள் இருந்துள்ளன. அளவான மொழிக்குள் அளவில்லாத உணர்வுகளைக் கடத்துவதிலும் காட்சிகளை அடுக்கிச் செல்வதிலும்தான் நவீன இலக்கியத்தின் ஆளுமை போற்றப்படுகிறது. மொழியாளுமை உள்ளவர்கள், மொழியாற்றல் உள்ளவர்கள் யாவரும் நவீன இலக்கிய படைப்பாளியாகிவிட முடியாது; அது மொழியைத் தன்னளவில் கட்டுப்படுத்த அறிந்தவர்களுக்கு மட்டுமே உரிய கலை. அனுபவங்களை, காட்சிகளை, சம்பவங்களை சுய உணர்வுகளின் அடிப்படையில், சுய புரிதலின் அடிப்படையில் ஒரு பிரக்ஞையோடு வாசகனிடம் சேர்க்கக் கோர்க்கப்படும் சொற்களில் நவீன இலக்கியம் தோன்றுவதில்லை. அது பார்த்ததில், கடந்ததில் மிக நுட்பமான ஒன்றை மட்டும் அதே நுட்பத்தோடு எந்த சுய உணர்வுகளையும் வழிய திணிக்காமல் காட்சிகளாக்கும் கலை. அப்படியான காட்சிகளிலிருந்து வாசகன் தனக்கான ஒரு உணர்வைத் தனக்குள் கடத்தக்கூடிய படைப்புகளாகவே ஹெமிங் வேயின் படைப்புகள்.

1 கருத்து for “ஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன்

  1. penniamselvakumariselvakumari0020
    July 1, 2019 at 7:42 pm

    கெமிங்வே பற்றிய நீண்ட நெடிய கட்டுரை மிகச் சிறப்பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...