நான்கு கால்களையும் பக்கவாட்டில் வாகாகப் பரப்பிக் கொண்டு முன்கால்கள் இரண்டின் இடையில் முகம் சாய்த்துத் தன்னையே திரும்ப பார்த்துக்கொண்டிருக்கும் பூனைகள் சாலைகளில் அகப்படும். அவற்றுள் சில அரிதாக வாலையும் அருகில் வைத்துக்கொண்டு அரை விழிப்பில் இருக்கும். தான் படைத்துக்கொண்ட அல்லது தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற உலகில் உளம் தோய்ந்து வாழ முடியாத தனிமையும் வெறுமையும் அதிலிருப்பதாய்த் தோன்றும். அப்படிப்பட்ட மனிதர்கள்தான் ஹருகி முரகாமியின் பூனைகள் நகரத்தின் சிறுகதைத் தொகுப்பில் உலாவும் கதைமாந்தர்கள். வம்சி புக்ஸ் வெளியீட்டில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் பூனைகள் நகரம் சிறுகதைத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைககளில் சில கதைகள் ஹருகியின் முன்னரே வெளிவந்த நாவல்களிலிருந்த கிளைக்கதைகளாக இருக்கின்றன.
இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் தமிழ்ச் சூழலைப் பொறுத்தளவில் அந்நியமானதாக இருக்கின்றன; ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு கதைகளை இயல்பானதாகவும் சரளமான மொழிநடையிலும் கொடுத்திருக்கிறது. ஹருகியின் கதைகளில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானிய வாழ்வில் படிந்திருக்கும் வெறுமையும் தனிமையும் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையுமே நிறைந்திருக்கிறது. இன்னொரு தளத்தில் இந்தக் கதைகளின் களங்களான ஜப்பானிய, மேலை நிலம் சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் எந்தவொரு பெரிய சித்திரத்தையும் அளிக்கவில்லை. தனிமையும் வெறுமையும் நிறைந்த எந்த நிலத்து மக்களும் தங்களுடன் பொருத்திப் பார்க்கககூடிய வாசிப்பனுபவத்தைத் தான் இவையளிக்கின்றன. நவீன வாழ்வின் தனிமை ஏற்படுத்தும் வெறுமையும் பொருளின்மையும் வாழ்வில் கவிழ்ந்த பாத்திரமொன்றின் வெவ்வேறான கதைக்களங்கள் என்று கூட இச்சிறுகதைகளை வரையறை செய்ய முடியும். இந்தத் தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மையே சிறுகதைகள் அனைத்தும் இருளிலும் வெளிச்சம் குறைந்த ஒளியிலும் முற்றிலும் நிசப்தத்ததிலும் கதைகள் நடப்பதாகக் காட்சியனுபவத்தை அளிக்கின்றன.
இந்தக் கதைகளில் வரும் கதைமாந்தர்கள் அனைவரும் கூட்டுப் புழவாக கூட்டுக்குள்ளே தனிமையும் வெறிப்பும் நிறைந்த உலகில் வாழ்கிறார்கள். கடக்க முடியாத நீண்ட தனிமையான தருணங்களைக் கடக்க தங்களுக்குள் நிழல் உலகையும் அதில் சில பாத்திரங்களையும் படைத்து உலவவிடுகின்றனர். அப்படியான தருணத்தை உருவாக்கவே தேடுதல் சிறுகதையில் தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிக்கும் தன்னார்வலர் ஒருவரின் அகமொழி வெளிபடுகிறது. தன் மனத்தில் நிறைந்திருக்கும் வெறுமையைப் போக்க, இப்படிச் செய்கிறார். தன் வாழ்வின் போதாமைகள் அல்லது பொருளின்மை மெல்ல அவரை இத்தேடலில் தள்ளிவிடுகிறது. ஒர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தொலைந்துபோன நபரைத் தேடி வருகிறார் கதைசொல்லி. அங்கிருக்கும் ஒவ்வொருவரிடம் காணாமற்போனவரைப் பற்றி விசாரிக்கிறார். சிறுகதையின் இறுதியில் தான் தேடிய நபர் அகப்பட்டும் அவர் தேடல் ஓயவில்லை.
பூனைகள் நகரம் சிறுகதையில் ஆளொழிந்த நகரில் மெல்ல பூனைகள் நிரம்பி கொள்வதாய் ஊடு கதையொன்று வருகின்றது. கதையில் வரும் டெங்கோவும் அவனது தந்தையும் கூட தங்கள் மனத்தில் நிறைந்து நிற்கும் வெறுமையை வேறொன்றை இட்டு நிரப்புகின்றனர். நினைவில் எப்பொழுதோ தன் தாய் இன்னொருவருடன் படுக்கையில் இருந்த காட்சியொன்று மட்டுமே தன் தாயின் மீதான அவன் எஞ்சிய நினைவு. ஆக, மிக நிச்சயமாக இவர் நம் தந்தை இல்லை என்ற எண்ணத்திலே டெங்கோ தன் தந்தையுடனான உறவைக் கொண்டிருக்கிறான். ஞாயிறன்றும் டெங்கோவை அழைத்துக்கொண்டு வீடு வீடாகக் கேபள் டிவி கட்டணம் வசூலிக்கும் வேலையைப் புரிகிறார் டெங்கோவின் தந்தை. தந்தையின் போக்கு அவனின் மனத்தில் தந்தையென்ற சித்திரத்தில் வெறுப்பையும் வெறுமையையே பிரதியாக இட்டு நிரப்புகிறது. மறுபுறம் டெங்கோவின் தந்தையும் டெங்கோவைக் கைவிடமுடியாமல் வளர்க்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். இருவரும் இவ்வாழ்வு ஒரு கூண்டு என்றும் இதில் விடுபடுதலையே நோக்காகவும் கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில் பணி ஒய்வு பெற்று எஞ்சிய வாழ்நாளைக் கடத்த ஒரு முதியோர் விடுதியில் தங்கியிருக்கும் தன் தந்தையைப் பார்க்கப்போகிறான் டெங்கோ. மூப்படைந்து தளர்ந்திருக்கிறார் டெங்கோவின் தந்தை. அவரிடம் தன் தாயையும் தன் பிறப்பையும் அறிய எண்ணி நடத்தும் உரையாடலே இச்சிறுகதையின் உச்சமாக இருக்கிறது. இச்சிறுகதையின் இறுதியில் டெங்கோவின் தந்தை உதிர்க்கும் ஒற்றைக் கண்ணீர்த்துளி கதையின் போக்கை மாற்றுகிறது. இதுவரை அவர் வாழ்வில் இருந்த வெறுமையும் வெறுப்புக்கு அடியாழத்திலிருந்த அன்பின் வெளிப்பாடாகவே அக்கண்ணீர்த்துளியைக் எண்ணுகிறேன்.
ஹருகி முரகாமியின் எழுத்துகளில் மேற்கத்திய பண்பாட்டின் புனைவின் தாக்கம் நிழலின் சாயையாகப் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. காஃப்காவின் உருமாற்றம் நாவல் கிரிகோர் சாம்சா எனும் விற்பனை முகவர் ஒருநாள் திடீரென கரப்பான் பூச்சியாக உருமாறியிருப்பதாக விசித்திரமான கற்பனையிலிருந்து தொடங்கும். தன் தோற்ற மாற்றத்தால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்பவனை, அவன் குடும்பம் எதிர்கொள்ளும் விதம் ஆகியவை சேர்ந்து இருத்தலியல் சிக்கலையும் உளவியல் சார் சிக்கலையும் காப்கா சுட்டியிருப்பார். அந்தக் குறுநாவலின் நீட்சியாக இக்கதைத் தொகுப்பில் சாம்சாவின் காதல் எனும் கதை இடம்பெறுகிறது. பூச்சியாக மாறியிருந்த சாம்சா மீண்டும் மனிதனாக உருமாறுகிறான். இம்மீள்தலில் அவன் மனிதத்தன்மைகளை முற்றாக மறந்து, அவற்றுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதில் நிகழும் சிக்கல்கள் முன்வைக்கப்படுகின்றன. முன்னர் வெளியுலகுக்கு வராமல் இருக்க அவன் பெற்றோரும் தங்கையும் அவனைப் பெரிய பூட்டாலும் சன்னலைப் பலகைகளாலும் மறைத்தும் வைத்திருந்ததைத் தாண்டி வெளிவருகிறான். அவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டைச் சரிசெய்வதற்காகக் கூன் வளைந்த அழகான பெண்ணொருத்தி வருகிறாள். அவளைப் பார்த்ததும் இயற்கையாகவே பாலியல் கவர்ச்சி அடைகிறான். அவளை மீண்டும் சந்திக்க விழைகிறான். ‘பூட்டுகள், பீரங்கி, கடவுள், நான்‘ இதைப்பற்றியெல்லாம் உன்னிடம் பேச வேண்டும் என்கிறான் அவளிடம். தனக்கு அந்நியமானதாகவும் புதியதாகவும் இருக்கக்கூடிய உலக, மனித இயல்புகளை மெல்ல மீண்டும் பொருத்திக் கொள்ள முயல்வதாய் கதை முடிகிறது. இந்த உலகத்தைப் பற்றுவதற்கான அனைத்துச் சரடுகளும் அறுந்து கொள்ள எஞ்சிய ஒரே சரடாக சாம்சாவின் காதல் திகழ்கிறது. இச்சிறுகதைத் தொகுதியில் வாழ்வு மீதான நம்பிக்கையைப் பகிரும் சிறுகதையாக இந்தக்கதையே திகழ்கிறது.
இந்தக் கதைகளை வாசிக்கையில் மாபெரும் தனிமைத் துயரை வாழ்வு அடையக்கூடும் என்பது அச்சமாகவும் கேள்வியாகவும் மனத்தில் எழுகிறது. இந்தத் தனிமை நிச்சயமாக ஒரு தனிமனிதன் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையால் ஏற்பட்டது மட்டுமல்ல. தனியுடைமைச் சிந்தனை மேலோங்கிய நவீன சமூகத்தில் தனிமை தவிர்க்க முடியாததாகிறது. அந்தத் தனிமை ஏற்படுத்தும் வெற்றிடத்தைப் பிறிதொன்றைக் கொண்டு நிரப்புகிற முயற்சியும் தேவையாகிறது. அப்படியான கதையான விநோத நூலகம் சிறுகதை மாயயதார்த்தவாதப் படைப்பாகத் தொடங்குகிறது. கதையின் முடிவில் வரும் நிகழ் உலகச் சித்தரிப்புகளின் வாயிலாகத் தனிமை நிரம்பிய இளைஞனொருவன் தன் வாழ்வின் வெறுமையைப் போக்க தான் படித்த நூல்களிலிருந்து உருவாக்கிக்கொண்ட பிரதி உலகமாகக் கதை புதிய பரிணாமத்தை அடைகிறது. மூளையை விழுங்க காத்திருக்கும் கிழவர், எஜமானுக்கு முழுவதுமாக தன்னை ஒப்படைத்து விட்டு நிற்கும் ஆட்டு மனிதன், குரல் வளையற்ற அழகு நிரம்பிய பெண் ஆகியோர் அவன் உளநிலையின் குறியீடாகவே இருக்கின்றனர். அவனுள் செறிந்திருக்கும் கதைகளே அல்லது வாசிப்பே மூளையுண்ணும் கிழவரின் படிமமாக எழுகிறது. ஆர்தமனின் வரி விதிப்பு தொடங்கி ஆட்டு மனிதன் காமிக் வரை வாசித்த அவன் உளத்திரிபே அந்தக் கிழவர். தொடர்ந்து, பண்டைய ரோமானியப் புனைவுப் பாத்திரமான பவுன் எனும் ஆட்டு மனிதன் பற்றிய உருவகம். அடர் காடுகளில் தனிமையில் இருக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டும் மனிதனாக ஆட்டு மனிதன் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இவனின் நீண்ட தனிமையான நூலகப் பாதாள அறையிலிருந்து மெல்ல விடுவிக்க வழிகாட்டுவதாய் ஆட்டு மனிதன் வருகிறான். அடுத்தாகத் தேவதை போல அவனுக்குப் பிடித்த உணவுகளையும் அவன் அகம் புனைந்திருக்கும் அழகின் அத்தனை சாத்தியங்களையும் கொண்டு எழும் பெண். இந்தச் சிறுகதையிலே ஒரு வரி வருகிறது. அவர் உலகில் நான் இல்லை என்பதால் நான் இல்லாமல் ஆவதில்லை. தனிமையின் ஆழத்தில் தோன்றும் இவர்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் போவதால் இல்லாமல் ஆவதில்லை.
இந்தக் கதையின் மாந்தர்கள் தங்களைத் தாம் சார்ந்திருக்கின்ற இந்தச் சமூகத்தின் எந்த அடையாளத்தையும் கொண்டு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. உதிரி மனிதர்களாகவும் ஆழ்மனத்தின் கொந்தளிப்பில் பிறிதொருவராகவும் பிளவுபட்டு இருக்கின்றனர். இப்படியாக பிளவுபட்டு இருக்கிற ஆளுமைகளின் சித்திரிப்பு என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம். பிற்கால முதலாளித்துவத்தின் ஒரு முன் சரித்திரம் சிறுகதையில் வெளிப்படுகிறது. இந்தச் சிறுகதையின் பெயரே இந்தக் கதையை மீள்வாசிப்புக்குட்படுத்த வேண்டிய கட்டாயத்தை அளிக்கிறது. இந்தக் கதையை மீள்வாசிப்பு மட்டுமின்றி கதை நிகழும் பின்னணியுடனான பின்புல வாசிப்புடனே அணுக முடிகிறது. கதைசொல்லியின் நண்பரின் கடந்தகாலத்தைப் பற்றிய கதையாக வருகிறது. சமூகத்தின் ஒழுக்க வரையறைக்குள் வாழும் இருவர் பள்ளிக் காலத்தில் காதலிக்கின்றனர். பாலியல் மீறல் இல்லாமல் தன் கன்னிமையைக் காப்பாற்ற பெண்ணும் ஆணும் காதல் புரிகின்றனர். இன்னொருவருடனான திருமணத்துக்குப் பின்னால் தன் கன்னிமையை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறுகிறாள். அப்படியான தருணமும் வரும்போது அதை வெறும் உடற்தழுவலாகவே கடந்து போகின்றனர். 1960களில் உலகமயமாக்கலினால் ஜப்பானில் நிகழ்ந்து வரும் ஒழுக்கவியல் புரிதலையும் அதன் தொடர்ச்சியான உளவியலைப் பற்றியதாகவுமே இக்கதை என் வாசிப்புக்குப்பட்டது. பாலியல் இச்சை என்பது இயல்பான ஒன்று. நவீன உலகம் ஏற்படுத்தியிருக்கும் ஒழுக்கவியல் கட்டுப்பாடுகளும் கற்பிதங்களும் அதனைப் புறவயமான நோக்கில் அணுகச் செய்வதைப் பற்றிய கதையாக இதைக் காண முடிகிறது. நன்கு கெட்டியான சில்லிடப்பட்டதாகக் காமம் உறைந்து போயிருப்பதாக வரும் வரியே அதற்குச் சாட்சி. சமூகத்திற்குப் பிடித்தமான வாழ்வை ஒரு சட்டகத்திற்குள் அமைத்துக் கொண்டு வாழும் ஒருவன் தனது கடந்தக்காலக் காதலையும் காதலியையும் பற்றி ஏக்கக் கதையாகத் தொடங்குகிறது.கன்னிமை அல்லது (virginity) என்பது ஒரு பெண்ணுக்கான ஒழுக்க விதியாக மாறியிருக்கும் சமுதாயமாக மாறியிருப்பது ஜப்பானியச் சூழலில் அந்நியத்தன்மையானதாக இருக்கிறது. நன்றாகக் கல்வி கற்று பல்கலைக்கழகத்தில் படிப்பது என தங்கள் இயல்புக்கு மாறாகச் சமுதாயத்திற்கும் பிழைப்புக்காகவும் செய்யும் சூழல் ஜப்பானில் பரவி வரும் முதலாளித்துவத்தின் தாக்கமாகவும் இருக்கிறது.
குஷிரோவுக்கு வந்த பறக்கும் தட்டு எனும் சிறுகதையும் பாலியல் சார்ந்த உளவியல் மீதான கதைதான். கோமுரா என்பவனின் மனைவி ஜப்பானின் கோபேவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்தியை உன்னிப்பாகப் பார்க்கிறாள். அதற்கடுத்த ஆறாவது நாள், வீட்டிலிருந்து காணாமல் போகிறாள் எனக் கதை தொடங்குகிறது. மனம் உழன்று கொண்டிருக்கும்போது தன் பணியிட சகாவான சகாகி கொடுக்கும் மர்மப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு ஹொக்கைடோவிற்குச் செல்கிறான். அங்கு ஷிமாவோ, கெய்கோவை பார்க்கிறான். கையில் கொடுத்த பாரமற்ற பொட்டலத்தை எந்தவிதச் சலனமின்றி வாங்கி பையில் திணித்து கெய்கோவிடம் தருகிறான். அவர்களிடம் தன் வாழ்க்கையின் கதையைக் கூறுகிறான். அவளுடன் உறவுகொள்ள முயல்கிறான். ஷிமாவோ உடனான உறவு தோல்வியடைகிறது. கோமுரா திருமணம் என்பதைத் தன் பாலியல் தேவையை நிறைவு செய்வதற்கான தெரிவாகவே தேர்ந்தெடுத்து வாழ்கிறான். அவனின் உள்ளீடற்ற தன்மையே மனைவியின் பிரிவுக்குக் காரணமாகிறது. விநோதக் கனவுகளும் பாலியல் இச்சைகளுமாக கொந்தளிப்பு மிகுந்த இளமை பருவம் கடக்க உதவிய திருமணம் முறியும்போது குழப்பமும் வெறுமையும் அவனைச் சூழ்கிறது.
நன்கு உறைந்து போய் உள்ளீடற்ற அவன் உளத்தின் உருவகமாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆளொழிந்த பனி பொழியும் வீதியைப் பார்க்கும்போது கரடி வந்து தாக்கும் கதை, பறக்கும் தட்டிலிருந்து வந்த மனிதர்களால் சேக்கியின் மனைவி கடத்தப்பட்டிருக்கலாம் என்று அனுமானம் ஆகியவை அவன் நனவிலியின் கற்பனைகளாக அமைகின்றன. நடைமுறை வாழ்வினின்று மெல்ல தன் ஒரு பாதியைப் பெயர்த்தெடுத்து கற்பனை உலகில் சஞ்சரிக்க விடுவதைப்போல அல்லது மனித உணர்ச்சிகளின் சாத்தியத்தை அறிய மறந்தவன் போல கோமுரா இருப்பதைக் காட்டுகிறது. மனைவியின் மீது தன் உடல் இச்சையைச் செலுத்தித் தன் காமத்தை நிவர்த்திச் செய்து கொண்டிருந்த கோமுரா, தன் பிரதியாக ஷிமாவோவைக் காண்கிறான். மெல்ல அவன் மனத்தில் புனைந்திருக்கும் காமம் மீதான விதிகள் தளர கதை முடிகிறது.
ஷினாகாவா குரங்கு சிறுகதை ஒசாவா எனும் பெண் தன் பெயரை மறப்பதிலிருந்து தொடங்குகிறது. தன்னுடைய சிக்கலைக் களைய ஆலோசகர் ஒருவரைப் பார்த்து ஆலோசனை கேட்கிறாள். பள்ளிப் பருவத்தில் தன்னை விட இளையவளான யூகோவின் பெயரட்டையை இவளிடம் கொடுத்து தற்கொலை புரிந்து கொள்கிறாள். பள்ளியிலே மிகவும் அழகான திறமையான யூகோ தற்கொலை புரிந்து கொள்வதற்கு முன்னர் ஒசாவாவிடம் பேசுகிறாள். அவளிடம் பொறாமை துளியுமில்லை என்பதைக் கேட்டு விட்டுச் செல்கிறாள். யூகோவின் பெயரட்டையையும் தன் பெயரட்டையையும் தன் வீட்டிலிருந்து குரங்கொன்றால் களவாடப்பட்டதே அவளின் மறதிக்கான காரணி என முடிவுக்கு வருகிறார்கள். பெயரட்டையை ஏன் தோக்கியோ நகரின் பாதாளத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் குரங்கு திருடுகிறது எனும் கேள்வி எழுகிறது. இந்தக் குரங்கு விடுதியில் இருந்தபோதே யூகோவின் பெயரட்டையை இடம்மாற்றி விளையாடியிருக்கிறது.
யாரும் காணாத ஆழத்தில் இருக்கும் குரங்கு என்பது ஒசாவாவின் ஆழுள்ளம்தான். தன்னைத் தனிமைபடுத்திக்கொண்டு அல்லது தனித்துவிடப்பட்டோ வளரும் ஒசாவா, யூகோவின் கேள்விக்குப் பின் தன்னடையாளத்தை நோக்குகிறாள். தன்னடையாளம் என்ற ஒன்றை உணராதபோது, அதன் அழுத்தம் அவள் பெயரை மறைக்க செய்கிறது. அவளுடைய வாழ்வும் அடையாளங்களும்கூட இப்படியாக யாருமறியாமற் பாதாளக் குரங்காக உருமாறியிருக்கிறது. பால்யத்தைக் கடக்கும்போது இயல்பாக அடையாளம் குறித்த கேள்வியும் சிக்கலும் எழுவது இயல்பே. அழகும் ஆளுமையும் நிறைந்த யூகோ தற்கொலைக்குச் செய்து கொள்ளுமளவு அவளது தன்னடையாளம் அமைகிறது. மற்றொரு நிலையில் ஆளுமையோ அழகோ இன்றி இருப்பதாக எண்ணும் ஒசாவா தன்னடையாளத்தைத் தேடி வாழ்கிறாள்.
இப்படி தேடிச் சேர்த்த தன்னடையாளம் உதிரும் தருணங்களும் வருகின்றன. ஆளுண்ணும் பூனைகள் சிறுகதையில் மூன்று இடங்களில் பூனைகள் வருகின்றன. முதலாவதாக, வளர்த்த பூனைகளே உரிமையாளர் இறந்த பிறகு பசி தாளாது அவரை உண்ணுகின்றன. இரண்டாவது, பைன் மரத்தில் ஏறி காணாமல் போன கதைசொல்லியின் பால்ய மனத்தில் ஆழப் பதிந்த பூனை. மூன்றாவதாக, இசுமி தன் கத்தோலிக்கப் பள்ளியில் ஆளரவமற்ற படகில் சில பிஸ்கட்டுகளுடன் பூனையும் மனிதனும் தனித்து இருந்தால் மனிதனே அதை உண்ணத் தகுதியானவன் எனும் கதையை நினைவுகூர்கிறாள். இந்த மூன்று பூனைகளுக்கும் இடையில் தங்கள் இணையை விட்டுவிட்டு கிரிக் நாட்டின் தீவாந்திரத்தில் வாழும் இருவரிடம் அவர்களது கடந்த காலம், நிகழ்காலம் சொல்லப்படுகின்றது. சிறுவயதில் காணாமற் போன பூனையைப் போல இசுமியும் ஒருநாள் எங்கேயோ தொலைந்து போகிறாள். உடலைத் தின்னுமளவு பசியும் தினவும் மிகுந்த பூனைகளே அவனின் காமத்தையும் இசுமி சென்ற பிறகு தன் அடையாளம் நீங்கி இருக்கும் அவனின் மனத்தையும் சுட்டும் குறியீடாகக் காண்கிறேன். பூனை பைன் மரத்தில் ஏறியது ஒர் இனிய நினைவாக எஞ்சியிருக்கிறது. அது மீண்டும் இறங்கிச் சென்றது அவனுக்கு நினைவில் இருத்துவதற்கு முக்கியமில்லாததாகக்கூட இருக்கலாம். அதை இசுமியிடம் சொல்வதன் மூலம் அவளுடனான இந்த வாழ்வு அத்தகைய ஒர் இனிய நினைவாக அவனுள் பதிந்துவிட்டது. இனி இந்த வாழ்வு நீடிப்பது பூனை பைன் மரத்தில் இருந்து இறங்கி செல்வதைப்போல சலிப்பூட்டுவதாகவும் முக்கியமில்லாததாகவும் அவனுக்கு இருந்திருக்கக்கூடும் என ஊகிக்க முடிகிறது. அதனாலே இசுமியும் தனக்கான வாழ்வை வாழ படகில் எஞ்சியிருந்த உணவை உண்ண தகுதியுடையவள் என்று தன்னை எண்ணிக் கதைசொல்லியைத் தனியே விட்டுச் செல்கிறாள். தன்னை முந்தைய வாழ்வுடன் பிணைத்துக்கொண்டிருக்கும் ஒரே சங்கிலியான இசுமியும் காணாமற்போனபோது தன்னை முழுமையாகத் தின்றுவிட்டு உள்ளீடின்றி வெறுமையுடன் அடையாளம் நீங்கி நிற்கிறான் கதைசொல்லி.
வெற்றிடம் என்பது பிரபஞ்ச விதிகளின் படி சாத்தியமற்றது. இன்னொன்றை இட்டு நிரப்புவதற்காகவே காத்திருக்கின்றன வெற்றிடங்கள். அப்படியான வெற்றிடங்களில் தன் கதையை இட்டு நிரப்பிச் சில தருணங்களைப் படைத்திருக்கிறார் ஹருகி முரகாமி.