மொபைல் வைத்திருப்போருக்கு மோட்சம் இல்லை

Untitledநவீனின் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு மூன்று வகையான கவிதைகளைப் பிரதானமாகப் பேசுகின்றன. பிரிவு குறித்தான ஏக்கம், மாயா என்ற சிறு குழந்தையின் உலகம், அலைக்கழிக்கப்படும் சமகால வாழ்வு.

பொதுவாகக் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் அந்தத் தொகுப்பிலிருந்து கவிதைகளை மேற்கோள் எடுத்துக்காட்டி எழுதுவது உ.வே.சா காலத்தில் தொடங்கிய வழக்கம். நான் அவற்றிலிருந்து விடுபடலாம் எனக் கருதுகிறேன். மேற்கோளால் இங்கு அழிந்து போனது ஏராளம். மேற்கோள் வழியாகவே இங்கு பலர் ”இறவாமல் வாழ்ந்து” கொண்டிருக்கிறார்கள். மேற்கோள் வழியாக கொல்லப்பட்டவர்கள் அநேகர். மேற்கோள் ஒரு கணக்கில் சமாதி. சாரம் எப்பொழுதும் அநாதைப் பிள்ளையாய்த் தேம்பி தெருவில் திரிகிறது. நான் சாரத்தைப் பற்றியே உரையாட விரும்புகிறேன்.

நவீனின் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் யாரேனும் சொன்னலொழிய ஓர் அயல் தேசத்திலிருந்து எழுதப்பட்டவை என்று கண்டுபிடிக்க இயலாது. அரிதான சில கவிதைகளில்தான் மலேசியன் மெட்ரோ இரயில் ஓடுகிறது. மற்றபடி மைய நிலமான (தமிழ்நாடு) தமிழ் நிலத்தின் நவீன கவிதையின் குரலில் இருந்து எந்த வேறுபாட்டையும் காண முடியாது.

இத்தொகுப்பில் உள்ள பிரிவும், பிரிவின் நிமித்தமுமான கவிதைகள் நம்மைப் பாதிக்கின்றன. பிரிவு பற்றி எழுதாத கவிஞர்கள் குறைவு. பிரிவு பிறந்ததே கவிஞர்களால் எழுதப்படத்தானோ என்ற சந்தேகம் எப்பொழுதும் எனக்கு உண்டு. கவிஞர்கள் மாத்திரம் இல்லையெனில் பிரிவு அப்பொழுதே ஜப்பானிய முறைப்படி ஹரா-கிரி செய்து கொள்ளும்.

பிரிவு என்பது அந்திப்பொழுது. துல்லியமாகச் சொன்னால் மூவந்தி. இந்த நல்ல தமிழ்ச் சொல்லை நாம் பயன்படுத்துவதில்லை. சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. மலையாளத்தில் இப்பொழுதும் பயன்பாட்டில் இருக்கிறது. மூவந்தி எனப்படுவது அந்தியின் இறுதி இருள் வரத் தொடங்க சாம்பல் நிறம் மங்கத் தொடங்குகின்ற பொழுது. திரை மொழியில் இதை magical hour என்று சொல்வது வழக்கம். அதை அதிகாலை என்றும் சொல்லலாம், அந்தியின் இறுதி என்றும் சொல்லலாம். இரண்டுமாகப் பயன்படுத்தலாம் என்பதையே சினிமா அதை அப்படிச் சொல்கிறது. மலையாளக் கவிஞர் ரஃபிக் அகமதின் பாடல் வரி ஒன்று உண்டு

“ நிழல்கள் சாயும் அந்தியிலானு
புலரியிலானு
ஆதியம் நம்மள் கண்டு”

கால குழப்பமிக்க அப்பொழுதைத்தான் ரஃபிக் சொல்கிறார்.

பிரிவுக்கான பொழுது மூவந்தி அந்த மூவந்தி பொழுதை நிறைய கவிதைகளில் எழுதிப் பார்க்கிறார் நவீன். அவை துயரம் தோய்ந்ததாக, நம்மீதும் அந்த மூவந்தி பொழுதின் மர்ம இருட்டுப் படிவதாக இருக்கிறது.

குழந்தைக்கும் அவருடைய தாயோ அல்லது தகப்பனுக்கோ இடையில் நடக்கும் உரையாடல்கள் இன்னொரு வகைமையான கவிதைகள். குழந்தையின் அற்புத உலகத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகள் அதற்கு லெளகீக வாழ்வில் இருந்து நாம் சொல்லும் சம்பிரதாயமான பதில்கள் அல்லது பதில் சொல்லமுடியாத கேள்விகள் என விரிகின்ற இந்தக் கவிதைகள். தமிழில் குழந்தை இலக்கியங்களைவிட நவீன கவிதைகளில்தான் அசலான குழந்தைகளின் உலகம் வெளிப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எப்பொழுதும் உண்டு. முகுந்த் நாகராஜ் ஆக சிறந்த உதாரணம். கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருந்தார் போன்ற குழந்தைகளின் அக உலகத்தை சொல்லுகின்ற கதைகள் மிகக் குறைவே. ஆர்.சூடாமணி குழந்தைகளின் அக உலகத்தைப் பற்றித் துல்லியமாக எழுதியிருக்கிறார். மற்றபடி நவீன கவிதைகளில்தான் சின்னக் குழந்தைகள் துள்ளித் திரிகிறார்கள். நவீன் கவிதைகளில் மாயா திரிகிறாள்.

வாழ்வு சார்ந்த நெருக்கடிகள், சுதந்திரமின்மை, நிரூபிக்க இயலாத உண்மைகள், பெருநகர நெருக்கடிகள், மூச்சு முட்டச் செய்யும் ஒழுக்க விதிகள் போன்றவற்றைப் பற்றி ஒட்டியும், வெட்டியும் எழுதிப் பார்க்கிறார் நவீன்.

சர்வம் ப்ரம்மாஸ்மி-2009, வெறி நாய்களுடன் விளையாடுதல்-2014, இரண்டு தொகுப்புகளிலிருந்தும் அதற்கு பிறகு நவீன் எழுதிய கவிதைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இவை. சர்வம் பிரம்மத்திலிருந்து, வெறி நாய்களுடன் விளையாடுதல் (தலைப்பே ஒரு மாற்றத்தைச் சொல்கிறதுதான்) பின்பு இந்த ஐந்தாண்டுகளில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு இடையில் நவீனின் ஐந்தாண்டு ஐந்தாண்டு பாய்ச்சலில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற காத்திரமான உரையாடலை நவீன் தனக்குள் நிகழ்த்த வேண்டும். அது நவீனை காத்திரமான கவிதையை நோக்கி இட்டுச் செல்லும்.

மொபைல் போன் வந்தபின் இந்த வாழ்வு மேலும் சிக்கலாகி விட்டது. உண்மை, அறம், கற்பு, ஒழுங்கு, நேர்மை, எல்லாம் எட்டு வழிச்சாலையில் அடிபட்டுச் சாகின்றன. நம்மைவிடப் பெரிய சாலைகள் மலேசியாவில் உண்டு. நம்மைவிடக் கூடுதலான நெருக்கடி நவீனுக்கு உண்டு. அந்த நெருக்கடிகள் கவிதையில் நிகழ வேண்டும். “உங்களில் மொபைல் போன் வைத்திராதவர் யாரோ அவர் முதற்கல்லை வீசுங்கள்” என்கிறார் கர்த்தன். யாரும் வீசவில்லை. கர்த்தரின் சிவந்த அங்கியில் சினுங்குகிறது மொபைல் போன்.

3 comments for “மொபைல் வைத்திருப்போருக்கு மோட்சம் இல்லை

  1. பி.மதியழகன்
    November 12, 2019 at 7:30 am

    அழகான, ஆழமான முன்னுரை வழங்கிய கவிஞர் சாம்ராஜ் அவர்களுக்கும் சிறந்த சிந்தனையும் தெளிவும் பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் அன்பு தம்பி நவீன் அவர்களுக்கும் வாழ்த்துகள். கவிதை நூலை படிக்க ஆவலாக உள்ளேன்.

    இசைக்கவி பி.மதியழகன்
    சிங்கப்பூர்.

  2. அன்பு
    November 12, 2019 at 1:28 pm

    கர்த்தரின் சிவப்பு அங்கியில் சிணுங்குகிறது மொபைல் போன்….

  3. Sunthari Mahalingam
    November 13, 2019 at 5:36 pm

    Sirappana oor arimukam. Valthukkal

Leave a Reply to பி.மதியழகன் Cancel reply