தமிழ் நவீன இலக்கியம் நிலைபெற்றுள்ள நாடுகளில் மலேசியா தனித்த போக்கைக் கொண்டது. பல்வேறு குழுக்களாக தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்திருந்தாலும், ரப்பர் தோட்டங்களில் பால்மரம் சீவுவதற்காக வந்தவர்களே இங்கு இலக்கியத்தை அதிகம் முன்னெடுத்தனர். இவர்கள், தங்களிடம் இருந்த அடிப்படைத் தமிழறிவையும் கலையுணர்வையும் கொண்டு இலக்கியத்தை வெளிப்படுத்தினர். தமிழ் மொழியின்மீது இருந்த தீராக் காதலால் இவர்களின் படைப்பு முயற்சிகள் தொடர்ந்தன. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒருசிலர், அதன் தொடர்ச்சி கெடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்துவதைப் பணியாகச் செய்துள்ளனர்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், தமிழ் இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு அரசு விருதுகளும் விருதுகளின்வழி தேசிய இலக்கியவாதிக்கான கவனமும் கிடைக்கின்றன. தமிழகத்தில், வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் ஞானபீடம்போல இலங்கையில், சாகித்திய ரத்னா விருதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சிங்கப்பூரில் நிலையே வேறு. தமிழை அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகக் கொண்ட அந்நாட்டில், நூல் பதிப்பிக்க சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் எழுத்தாளர்களுக்குப் பணம் வழங்குகிறது. உள்ளூர் புத்தகங்களைப் பிரபலப்படுத்த ‘singlit’ மூலம் கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்படுகிறது. சிங்கப்பூர் புத்தக மன்றம், ஈராண்டுக்கு ஒருமுறை சிறந்த நூலுக்காக பத்தாயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்குகிறது. அரசாங்கத்தின் தங்க முனை விருது எனும் பெயரில் நான்கு மொழியிலும் போட்டி நடத்தி தமிழ்க் கவிதை, சிறுகதைகளுக்கு பெரும் தொகை வழங்குகிறது. கலாச்சார விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு, அவரது படைப்புகளை வெளியிட்டுப் பிரபலப்படுத்தி பெரும் தொகை வழங்குகிறது.
ஆனால் இந்நிலைகள் மலேசியாவில் இல்லை. மலேசியாவில், தமிழில் இயங்கும் தமிழ்ப் படைப்பாளி ஒருவருக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் எட்டாக்கனி. மலேசியாவின் தேசிய மொழியாக மலாய் மொழி இருப்பதால், இங்கு தேசிய விருதுகள் அனைத்தும் மலாய் மொழியில் இயங்கும் படைப்பாளிக்கு மட்டுமே உரியவை. இப்படி, எவ்வித அரசு அங்கீகாரமும் அற்ற சூழலில்தான் மலேசியப் படைப்பாளிகளில் மிகச் சிலர் ஒவ்வொரு காலத்திலும் நவீன இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிவந்துள்ளனர். சிற்றிதழ் நடத்துவது, சிறு இலக்கியக் குழுக்களை அமைத்து கலந்துரையாடல்கள் நிகழ்த்துவது என்பது தொடங்கி, நூல் பதிப்பித்து வெளியீட்டு விழாக்கள் செய்வது வரை கடந்த 60 ஆண்டுகளில் எவ்விதத் தொய்வும் இருந்ததில்லை.
இந்த முன்னெடுப்புகளுக்கு பொருளாதார பலம் தேவை எனும் நிலை வரும்போது, நாளிதழ்களுக்கும் அமைப்புகளுக்கும் தனவந்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டிய சூழல் எழுத்தாளனுக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலுடன் பொருந்தமுடியாமல் அல்லது முரண்படும் சிலர், வசதியும் தொடர்புகளும் உள்ளபட்சத்தில் மலேசியாவைத் தாண்டி தங்கள் படைப்புகளை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தியும் உள்ளனர். அதேநேரம், பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புலகத்தை முடக்கிக்கொண்டும் உள்ளனர்.
இவ்வாறான வறண்ட சூழலில், பல்வேறு அமைப்புகள் நடத்தும் இலக்கியப் போட்டிகள் எப்போதுமே மலேசிய எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் களமாகவே உள்ளது. பல நூல்கள் பதிப்பித்திருந்தாலும் தங்கள் படைப்புகளை போட்டிகளின்வழி அடையாளப்படுத்த அதில் ஆர்வத்துடன் ஈடுபடும் பல மூத்த எழுத்தாளர்களை இன்றும் மலேசிய இலக்கியச் சூழலில் காணமுடிகிறது. ஒரு தேசத்தில், தமிழ் வாசகர்களைத் தாண்டி வேறெங்கும் கடந்துசெல்ல முடியாத தமிழ்ப் படைப்பாளிக்கு, போட்டிகள் மட்டுமே ஆறுதலாக இருப்பதை குறையாகச் சொல்லமுடிவதில்லை. பல அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் இலக்கியப் போட்டிகளை நடத்திக்கொண்டிருப்பது ஒருவகையில், இந்நாட்டில் தமிழ் இலக்கியம் உயிர்ப்புடன் இருக்க காரணமாகிறது. வல்லினம் இலக்கியக் குழுவும் சிறுகதைகளுக்கான போட்டிகளை அவ்வாறான ஒரு நோக்கத்திலேயே 2016இல் முதன்முறையாக முன்னெடுத்தது.
எதிர்பார்த்ததுபோலவே, நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் அதில் பங்குபெற்றனர். அதுபோல, மறுஆண்டும் (2017) வல்லினத்திற்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் தேர்வுபெற்றவை பதிவேற்றமாகி அதில் சிறந்த கதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு, மலேசியாவில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே சிறப்பாக தமிழ்ச் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டு சிறந்த கதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் வல்லினம் குழுவினர் எதிர்பார்க்கும் சிறுகதைக்குரிய கலைநுட்பங்கள் சார்ந்த பட்டறைகள் நடத்தப்படுவதுண்டு. வழக்கமாக, இந்நாட்டில் நடத்தப்படும் போட்டிகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டதாக வல்லினம் போட்டிகள் அமைந்தன. அதற்கு முதன்மையான காரணம், எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்தான். புனைவுகளுக்கு பக்க வரையறை உட்பட எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆகவே, பண்பாட்டுக்கு முரணான விடயங்கள், விழுமியங்களைக் கேள்வியெழுப்பும் தொனிகள், கலாச்சார சீண்டல்கள் என போட்டிக்கு வந்த பல சிறுகதைகள் முயன்று பார்க்க எத்தனித்தன. கருத்துப் பிரதிநிதிகளாக உலவிய மலேசியாவின் மரபான சிறுகதைப் போக்கிலிருந்து, மாறுபட்டு ஒலித்த இந்தக் குரல்களில் புதிய புனைவுக்கான கலையம்சம் இருந்ததால் வல்லினத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடந்த போட்டிகளில் இளைஞர் பட்டாளம் கலந்துகொள்ள மும்முரம் காட்ட ஆர்வமூட்டியது.
வல்லினம் நடத்திய போட்டிகள் ஒவ்வொன்றிலும் தரமான படைப்பாளிகள் நடுவர்களாக நியமிக்கப்பட்டார்கள். நாஞ்சில் நாடன், கோணங்கி, சு.வேணுகோபால் போன்றவர்களே இறுதிச்சுற்றுக்கு வந்த கதைகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தார்கள். அவ்வாறு, கடந்த மூன்று ஆண்டுகளில் வெற்றிபெற்ற சிறுகதைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தி, தேர்வுசெய்த பத்துக் கதைகளின் தொகுப்பாகவே இந்நூலை பதிப்பித்துள்ளோம். போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்கள், இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் சுட்டிக்காட்டிய போதாமைகள் அவற்றின் ஆசிரியர்களின் துணையுடன் திருத்தி, செறிவு செய்யப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
2016இல் நாஞ்சில் நாடன் முதல் பரிசு வழங்கிய ஒரு சிறுகதை, 2017இல் கோணங்கி சிறந்தனவாகச் சுட்டிக்காட்டிய ஐந்து சிறுகதைகள், 2018இல் சு.வேணுகோபால் தேர்ந்தெடுத்த சிறுகதைகளில் நான்கு என, ஒன்பது எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவர்களில் எஸ்.பி.பாமா, செல்வன் காசிலிங்கம் ஆகியோரைத் தவிர ஏனைய எழுவரும் இளம் எழுத்தாளர்கள் என்பதில் வல்லினம் உற்சாகம்கொள்கிறது. அவ்வகையில், இந்தத் தொகுப்பு இளம் எழுத்தாளர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து இலக்கியத்தில் இயங்குவதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும் என நம்புகிறது.