அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

20170203_201914

19 வயதில்

“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர்.

அது உண்மைதான்.

என் பதினேழாவது வயதில் அது நடந்தது. 1999இல் எம்.ஏ.இளஞ்செல்வன் கூலிமில் தனது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அக்கினி மற்றும் பத்மினியை அழைத்து என் கையை அவர்களிடம் கொடுத்து “இவன நல்ல படைப்பாளியா ஆக்கணும்” என்றார். பத்மினி, எம்.ஏ.இளஞ்செல்வனுக்கு மகள் முறை. அப்போது பத்மினி ஞாயிறு நண்பனின் துணை ஆசிரியராக இருந்தார். அக்கினி மக்கள் ஓசை வார இதழின் ஆசிரியர். இந்த இரு பத்திரிகைகளிலும் ஒரு படைப்பு வருவதே பெரிய அங்கீகாரம்தான். அந்த வயதில் அப்படி ஒரு வாசல் திறந்திவிடப்படும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.

நான் அக்கினியை அப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தேன். ஒடுங்கிய உடல். நெற்றியில் சரிந்துவிழும் முடி. அவர் முகத்துக்குத் தாடி அறிவின் அடையாளம் போல இருந்தது. சிரித்தபோது சற்று பெரிய பற்களாகத் தெரிந்தது. நன்கு வாயை விரித்தச் சிரிப்பு. என்னைக் கூர்ந்துப் பார்த்தார்.

எனக்கு அக்கினி என்ற பெயர் நல்ல அறிமுகம். ஞாயிறு நண்பனின் அவர் ஒவ்வொரு வாரமும் அறிவியல் கட்டுரைகள் எழுதுவார். இந்த வாரம் எதைப்பற்றி எழுதப்போகிறார் என காத்திருந்து வாசிப்பேன். எவ்வளவு கடினமான விடயத்தையும் மிகச் சுலபமாகப் புரியவைப்பதில் கில்லாடி. நகைச்சுவையாக எழுதக்கூடியவர். அவர் முன் நான் நிற்கிறேன் என்பதையே பதற்றமாக உணர்ந்தேன். பத்மினி சிரித்த முகமாக இருந்தார். அவர் முக வாட்டமே அப்படித்தான் அமைந்திருந்தது. அவரது முகத்துக்கு அழுகை என்பது சாத்தியமற்றது என பார்த்தவுடன் சொல்லிவிடலாம். இருவரும் உற்சாகமாக என் கைகளைப் பற்றி ‘பத்திரிகைக்குப் படைப்புகளை அனுப்பு’ எனச் சொன்னப்பிறகு ஓயாமல் எதையாவது அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை.

இதெல்லாம் சரிவராது என முதல் கோலாலம்பூர் பயணத்தில் நேராகக் கவிதைகளுடன் அக்கினியைச் சந்திக்கச் சென்றேன். உடன் பெற்றோரும் ஓவியர் ராஜாவும் வந்திருந்தனர். ஏதோ ஒவ்வொரு நாளும் பேசி இடையில் விடுபட்ட உரையாடலைத் தொடர்வதுபோல அவ்வளவு இயல்பாகப் பேசத்தொடங்கினார். என் அம்மா “உங்க அறிவியல் கட்டுரையெல்லாம் படிப்போம்” என்றவுடன் அது குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர ஆரம்பித்தார். “ஏன் சார் எப்பவும் தாடியோட இருக்கீங்க?” என்றேன். “போர் அடிச்சா இப்படி கைய விட்டு சொறிஞ்சிக்கலாம். அதான்” என்றார். அவரால் அனைத்தையும் கிண்டாகத்தான் சொல்ல முடிந்தது. அவ்வப்போது முகத்தில் சரிந்து விழும் தலைமுடியை விலக்கிவிட்டது ஸ்டைலாக இருந்தது. நான் எடுத்துச்சென்ற என் மொத்தக் கவிதைகளையும் அவரிடம் கொடுத்தேன். அவற்றுடன் என் படத்தையும் இணைத்திருந்தேன்.

அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் புத்தகத்தின் பின் அட்டையில் தங்கள் படத்தை ஸ்டூடியோவில் பக்கவாட்டாக நின்றபடி எடுத்து பதிப்பித்ததால் நானும் அவ்வாறே நின்று எடுத்தப்படம். ஞானசூன்யமான புகைப்படக்காரன் என்னை நேராக அமரச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் நாற்காலியில் பக்கவாட்டாக அமர்ந்து பிடித்திருந்ததை கவிதைகளுடன் இணைத்திருந்தேன்.

“இலக்கியத்துல கவிதைய மட்டும் யாரும் யாருக்கும் சொல்லிக்கொடுத்துட முடியாது. உணர்வ வெளிப்படுத்த சொல்லித்தர முடியுமா? உனக்கு தோணுறதுபோலதான நீ அழ முடியும்? இப்படி அழுன்னு நான் எப்படி சொல்ல முடியும்?” என்றார். மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டேன்.

அடுத்த சில வாரங்கள் என் படத்துடன் மக்கள் ஓசையில் நான்கு கவிதைகள் ஒரே சமயத்தில் பிரசுரமாகின. எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. கவிதைகள் பெரும்பாலும் செறிவு செய்யப்பட்டு அர்த்தமும் மாற்றப்பட்டிருந்தது. அதெல்லாம் ஒன்றும் சிக்கலாகத் தெரியவில்லை. என் அற்புதமான பக்கவாட்டு முகம் வந்திருந்தது. அப்போதே நான் பெரும் கவிஞனாகிவிட்டதாக உற்சாகமடைந்தேன். தொடர்ந்து மக்கள் ஓசை வார இதழுக்கு எழுத ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் எனக்கு கார்ட்டூன் வரைவதில் ஆர்வம் இருந்ததால் அதையும் வரைந்து அனுப்புவதுண்டு. அப்படி ஒரு கார்ட்டூனை அக்கினி தீபாவளி சிறப்பு மலரில் தனது கேள்வி பதில் அங்கத்தில் பிரசுரித்திருந்தார். அது எனது உற்சாகமான தீபாவளியாக இருந்தது.

மறு வருடமே நான் குடும்பத்துடன் கோலாலம்பூருக்கு வீடு மாறியிருந்தேன். அதிஷ்டவசமாக என் அப்பா வாடகைக்குப் பிடித்திருந்த வீடு இருந்த குடியிருப்பில்தான் அக்கினியின் வீடும் இருந்தது. அப்போதெல்லாம் நாகரீகமாக நடந்துகொள்வது பற்றி பெரிய கவலைகள் இல்லாததால் அவ்வப்போது அவர் வீட்டுக்குச் செல்வதுண்டு.

அக்கியை முதன் முறையாக நான் அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்த அனுபவம்index சுவாரசியமானது. வாசலில் நின்று “சார்” என அழைத்தபோது, அவர் காரில் இருந்து “வாப்பா” என வெளிப்பட்டார். உடல் நன்கு வியர்த்திருந்தது. “வியர்த்தா உடம்புக்கு நல்லது. ஆனா எக்ஸர்சைஸ் செய்ய எங்க நேரம் இருக்கு. அதான் காருக்குள்ள கொஞ்சம் அடைஞ்சி கெடந்தா வியர்க்கும் பாரு” என்றார். ‘தமாஸான மனிதர்’ எனும் பதம் அவருக்குத்தான் பொருந்தும் எனத் தோன்றியது. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் அவரது அனைத்துச் செயல்பாடுகளும் இருந்தன. கவிஞனிடம் இருக்க வேண்டிய அபோதம் (innocent) குணம் அது.
அக்கினி என்னிடம் அதிகம் கவிதை குறித்துதான் பேசினார். அவரைச் சந்திக்க செல்லும் முன் ‘கனா மகுடங்கள்’ தொகுப்பை முழுமையாக வாசித்திருந்தேன். அவருக்கு வானம்பாடி கவிஞர்களின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆதி.குமணனுடன் அவர் இணைந்து நடத்திய வார ஏட்டுக்கு ‘வானம்பாடி’ என்ற பெயரை அவர்தான் வைத்தார். அப்பத்திரிக்கை 70களில் மலேசியாவில் புதுக்கவிதை சூழல் உருவாக பெரும்பங்களித்தது. தொண்ணூறுகளிலும் அவரிடம் வானம்பாடிகள் உருவாக்கும் சொற்களின் முரண் கொடுக்கும் மெல்லிய திகைப்பின் மேல் ஈடுபாடு இருந்தது. காசி ஆனந்தனை வெகுவாகப் பாராட்டிக்கொண்டிருந்தார். அறிவுமதியை அவருக்குப் பிடித்திருந்தது. சிற்றிதழ் நிகழ்வுகளும் அவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்தன. அந்த வரிசையில் முக்கியமான ஆளுமைகளையும் அறிந்து வைத்திருந்தார். ஆனால் அவர்கள் குறித்து எவ்வித சிலாகிப்பும் இல்லை.

“மலேசியாவுல எனக்கு புடிச்ச எழுத்தாளருனா முத்துசாமிதான். அவரோட சிறுகதை ஒன்ன மக்கள் ஓசையில போட்டிருக்கேன் பாரு. என்னா ஒரு மொழி. கவிதை” என சீ.முத்துசாமியின் எழுத்து குறித்து முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்துவைத்தது அவர்தான். “இருபது முப்பது வருஷமா படிச்சிக்கிட்டே இருக்கேன். பல பேரோட மொழி எனக்குள்ள அப்படியே புகுந்து இருக்கு. இப்பகூட சுஜாதா மொழிநடையிலயோ ஜெயகாந்தன் மொழி நடையிலயோ என்னால ஒரு கதை எழுதிட முடியும்” பெரும்பாலும் அவருடம் பேசிக்கொண்டிருக்கும்போதெல்லாம் பத்மினியும் உடன் இருப்பார். உரையாடலில் கலந்துகொள்வார். அவர் அக்கினியின் வாழ்க்கை முழுவதும் உரையாடுவதற்கான நல்ல துணையாகவே இருந்தார்.

மன்னன் மாத இதழில் என்னுடைய தொடர்க்கதை (பருவகால பறவைகள்) அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன் என பலரும் அழைத்துக் கண்டித்தனர். அக்கினிக்கும் அது குறித்து தகவல் போயிருந்தது. “அது இடைநிலைப்பள்ளி மாணவர்கள் வாழ்க்கைய சொல்லுற கதை சார். அவங்க மொழியிலதான எழுதனும்” என்றேன். “இந்த வயசுல வேணாம். இளஞ்செல்வன் எழுதுறாருன்னா அவர் அடைஞ்சிருந்த உயரமே வேற. நீ அப்படி இந்த வயசுல எழுதாத” என்றார். எனக்குச் சங்கடமாக இருந்தது. 2002இல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் ஈப்போக்குச் சென்றுவிட்டேன். அதன் பின்னர் வல்லினம் இதழ் முன்னெடுப்பில் நாளிதழ்களுக்குப் படைப்புகளை அனுப்புவதை முற்றிலும் தவிர்த்திருந்தேன்.

சில வருடங்கள் அக்கினியுடனான தொடர்பும் முற்றிலும் இல்லாமல் போய் மீண்டும் எங்கள் சந்திப்பு நாளிதழில்தான் நிகழ்ந்தது.

ஆதி.குமணன் மறைவுக்குப் பின் மலேசிய நண்பன் – மக்கள் ஓசை ஆகிய நாளிதழ்களின் பணியாளர்களிடையே பெரும் முரண்பாடுகள் நடந்தன. பலரும் பல இடங்களுக்குப் பந்தாடப்பட்டனர். புதிய நாளிதழ்கள் உருவாகின. அக்கினி சிக்கல்களில் மாட்ட விரும்பாதவர். சமாதானமான விலகிச் செல்பவர். புதிதாக உருவான ஒரு நாளிதழுக்கு ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பின்னர் அந்த நாளிதழும் நிறுத்தப்பட அதில் பணியாற்றிய பலருக்கும் தமிழ் நேசனின் வேலைவாய்ப்பு கிடைத்தது. அக்கினி அதில் ஆசிரியராக இருந்த குறுகிய காலத்தில் நான் தமிழ் நேசன் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்லும் சூழல் உருவானது.

arivippu-02தமிழ் நேசன் நிர்வாகத்தின் கீழ் 1.6.2010‍இல் உருவான ‘முகவரி’ எனும் இருவார இதழுக்கு நான் அப்போது ஆசிரியராக இருந்ததால் வேலை பரபரப்புக்கு நடுவில் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் அவரது நினைவுகளிலிருந்து சம்பவங்கள் பலவற்றை மீட்டுச்சொல்வார். சுவாரசியமாக இருக்கும். பொதுவாகவே நாளிதழின் ஆசிரியர்களிடம் ஓர் அதிகாரத்தொணி தொற்றியிருக்கும். பரபரப்பின் பிசுபிசுப்பை எப்போதுமே முகத்திலும் உடலிலும் தேய்க்கொண்டே திரிவார். அக்கினி அலுவலகத்தைவிட்டு டீ சாப்பிட வெளியேறும் தருணங்களில் சட்டென ஒரு பறவைபோல அவ்வளவு கனமற்ற மனிதராகத் தெரிவார். இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோலவும் தான் தனக்குள் ஆழத்தில் ஜாலியாகவே இருப்பதாகவும் அவரது பேச்சில் புலப்படும்.

ஆதி.குமணன் மறைவுக்குப் பின் நிகழ்ந்த எந்தச் சச்சரவுகளும் புறக்கணிப்புகளும் அவருக்குள் இருந்த எழுத்தாளனைப் பாதிக்கவே இல்லை. தனக்குள் இருக்கும் ஒரு சுதந்திரமான மனிதனை அவர் இன்னும் இழக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் இலக்கியம் குறித்த அவர் புரிதலுடன் பல்வேறு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் சொல்வதில்லை. கேட்டுக்கொள்வதோடு சரி. அவர் பேசுவதில் விருப்பம் உள்ளவர். வல்லினம் படைப்பிலக்கியங்களைப் பிரசுரிக்கும் இதழ் எனும் அளவில் புரிந்துவைத்திருந்தார். ‘முகவரி’ இடைநிலை ஏடாகத் தயாரானதால் அவருக்குப் பிடித்திருந்தது. அவ்விதழ் ஆறு மட்டுமே உருவாகி நின்று போனதால் தமிழ் நேசம் அலுவலகம் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.

மார்ச் 2011இல் ஜொகூரில் நடந்த முதல் மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டில் பேச நண்பர் வாசுதேவன் அழைத்திருந்தார். நெடுநாட்களுக்குப் பிறகு நான் அக்கினியைச் சந்தித்தது அங்குதான். மாநாட்டில் நான் பேசியதும் அணிந்திருந்த உடையும் சர்ச்சையானது. மாநாட்டுக்கு நன்கொடை கொடுப்பவருக்காக ஏற்பாட்டுக்குழு காத்திருந்ததில் நேரம் கடந்தது. நேரம் கடந்து நிகழ்ச்சி தொடங்கியதால் முதல் பேச்சாளரான திருமாவளவனுக்கு நேரம் குறைக்கப்பட்டது. மிக அவசரமாக பேசவைத்து சீட்டுக்கொடுத்து அமர்த்தப்பட்டார். அடுத்து நான் பேசும்போது “நன்கொடை கொடுப்பவருக்காக நேரத்தை விரையம் செய்து ஒரு அறிவார்ந்த மனிதருக்கு நேரம் குறைக்கும் இந்த மாநாடு எவ்விதத்தில் ஆக்ககரமான ஒரு பகிர்வை இளம்தலைமுறைக்குச் செய்யப்போகிறது?” என ஆரம்பித்தேன். கல்லூரி மாணவர்கள் உற்சாகமாகி கைத்தட்டத் தொடங்கிவிட்டனர். விரிவாக வல்லினம் முன் வைக்கும் இலக்கியப் போக்கு குறித்து பேசினேன். இளம் தலைமுறை பலருக்கும் அப்பேச்சு பிடித்திருந்தது. கலாச்சார காவலர்கள் கருத்துடன் மோத முடியாத சூழலில் நான் அணிந்திருந்த டி-சட்டையும் கிழிந்த ஜீன்ஸும் கற்றோர் சபையில் அநாகரீகமானது என பார்ப்போர் எல்லாம் கொஞ்சம் கடிந்து கொண்டனர். நான் எதையும் பொருட்படுத்தவில்லை. திட்டமிட்டுதான் அப்படியான உடையை அணிந்து சென்றிருந்தேன். பேசிவிட்டு வெளியே இருந்தபோது அக்கினி எதிர்க்கொண்டார்.

“நான் உன்னைய முன்னவே பார்த்தேன். என் மனசுல நான் சின்ன வயசுல பாத்த நவீன்தான் இத்தனை காலமும் இருந்தான். நீ பேசுனத கேட்டேன். எவ்வளவோ மாறிட்ட.” என்றார். கட்டியணைத்துக்கொண்டார். பத்மினியும் உடன் இருந்தார். “ஒருநாள் வீட்டுக்கு வா” என இருவரும் அழைத்தனர். அன்று சிவா பெரியண்ணன் அகப்பக்க உருவாக்கம் குறித்து பேசியது அவரைப் பெரிதும் கவர்ந்தது. “அது எப்படி?” என ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அக்காலக்கட்டத்தில் அவருக்கு மீண்டும் இலக்கியச் சூழலில் இயங்க ஆர்வம் எழுந்தது. என்னுடன் ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு வரவும் செய்தார். சில சிறிய சந்திப்புகளில் கலந்துகொண்டார். எனக்கும் சிவா பெரியண்ணனுக்கும் ஒரு திட்டம் இருந்தது. நாங்கள் இருவருமே அக்கினியின் அறிவியல் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டு இளமையில் வாசிக்கத் தொடங்கியவர்கள். எனவே மீண்டும் அவரை எழுத வைத்து மாணவர்கள் மத்தியில் வாசிப்பைத் தூண்டினால் என்ன என்ற எண்ணம் உருவானது. அக்கினியைச் சந்தித்து திட்டத்தைக் கூறினோம். உற்சாகமாகச் சம்மதித்தார். இம்முயற்சி மூலம் தன்னையும் மீட்டுக்கொள்ள முடியும் என நம்பினார். ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை எளிய நூலாக்க முடிவெடுத்து அதன் எட்டுப்பாகங்களை அடுத்தடுத்து மிக விரைவாகவே எழுதி அனுப்பினார். மேலும் ஓரிரு பாகங்கள் இருக்கையில் அவரால் தொடர முடியாமல் போனது. “கடைசி கடைசியா உள்ளதெல்லாம் ரொம்பவும் தொழில்நுட்பம் சார்ந்ததா இருக்கு. தொடக்கத்தில அவர் வாழ்க்கையில இருந்த ஓர் ஆன்மிக தரிசனம் இல்லாம வரட்சியா போவுது. அதுக்கான நுட்பமான சொற்கள் கிடைக்கல” எனக்கூறி நிறுத்திக்கொண்டார். அம்முயற்சிக்கு அக்கினியைத் தவிர வேறொருவரை பொருத்திப்பார்க்க முடியாததால் அப்படியே நின்றுபோனது.

யார் குறித்தும் நல்லனவற்றையே சொல்ல முயல்பவர் அக்கினி. அவருக்கு கருத்து முரண்பாடுகள் இருப்பவர்களிடம் உள்ள கெட்டிக்காரத்தனத்தைப் பாராட்டுபவர். ஒரு பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் இருந்த ஆதி.குமணனுடன் தொடக்கக் காலம் முதல் நம்பிக்கைக்குறியவராக இருந்து, அவருடன் இணைந்து சில போராட்டங்களில் ஈடுபட்டு, அவருடன் வானம்பாடி இதழை வளர்க்க பக்கபலமாக உடன் நின்று, எல்லா நிலைகளிலும் உடன் சென்று பின்னாளில் ஆதி.குமணன் பத்திரிகை அதிபராக இன்னும் இன்னும் பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் மேலே செல்லும்போது அந்த ஆபரணங்கள் தன் பறத்தலுக்குத் தடையென தன்னை எழுத்தாளனாகவே தக்க வைத்துக்கொண்டவர். வேறு எந்த அடையாளமும் இல்லாதவர்கள் ஆதி.குமணனுக்கு செருப்பாகக் கூட இருப்பேன் என கூஜாவெல்லாம் தூக்கி பதவிகளைப் பிடித்தபோது அமைப்புகளும், அதிகாரங்களும் தன் ஆளுமைக்கு ஒவ்வாதது என விலகியே நின்றார் அக்கினி. அவருக்குள் இருந்த ஓர் உற்சாகமான மனநிலையை எளிதாக இன்னொருவரிடம் பற்ற வைக்க முடிந்தது. வீட்டில் கைலியுடன் சாவகாசமாக அமர்ந்திருக்கும் நிலைதான் அவர் தன் வாழ்நாளெல்லாம் விரும்பியதோ எனப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும்.

நாளிதழின் பரபரப்பான வாழ்க்கை கசந்தபோது அக்கினிக்கு அகப்பக்கங்கள் மீது ஆர்வம் எழுந்தது. அவர் பெயரிலேயே ஒரு இணையத்தளம் ஆரம்பித்தார். பின்னர் மயில் மாத இதழில் கொஞ்ச காலம் பணியாற்றினார். இறுதியாக அவர் வணக்கம் மலேசியா இணையத்தளத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது நிம்மதியாகக் காட்சியளித்தார். தன் நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப வேலை அமைந்ததாக மகிழ்ச்சியடைந்தார்.

அவர் முற்றிலுமாகத் தன்னை தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்ட மனிதர். அவரிடம் ஒரு நிர்வாகத்தை நடத்தும் மனநிலை உருவாகவில்லை. பணத்தை கையாளும் திறன் தன்னிடம் இல்லையென அவரே கூறியுள்ளார். பத்மினி அவர் வாழ்க்கையைச் செப்பனிட்டார். அக்கினி முழுவதுமாக தன்னை அவர் கையில் ஒப்படைத்துவிட்டு எப்போதும்போலவே ஜாலியாக இருந்தார். அதனாலேயே தன் படைப்புகளைத் தொகுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபடவே இல்லை. சிங்கை இளங்கோவனின் வற்புறுத்தலால் ‘கனா மகுடம்’ கவிதைத் தொகுப்பு, ஆதி.குமணன் வலியுறுத்தலால் ஒரு குறுநாவல் வெளிவந்தன. ஆனால் அவரது முதன்மையான படைப்பு இலங்கை பயணம் குறித்த ‘மண்ணே உயிரே’ என்ற பயணக்கட்டுரை நூல்தான். ஓர் எழுத்தாளன் பயணம் செய்வதற்கும் ஒரு பத்திரிகையாளன் பயணம் செய்தவற்குமான மிகச் சரியான பேதத்தை இத்தொகுப்பு காட்டும். பயண முழுவதும் தனது அந்தரங்கத்தில் நடக்கும் மாற்றங்களைச் சுவாரசியமாகப் பதிவு செய்திருப்பார் அக்கினி.

கடந்த ஆண்டு மலேசிய கவிதை வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் கோ.முனியாண்டி மற்றும் அக்கினியை ஆவணப்படம் எடுத்தேன். நான் இயக்கியதில் மிகச்சிறந்த ஆவணப்படம் அது. கால அவகாசத்தால் வெளிப்புற படப்பிடிப்பு சாத்தியப்படாவிட்டாலும் அக்கினி அன்று எவ்வித மனத்தடையும் இல்லாமல் உரையாடினார். தன் வாழ்நாள் முழுக்க வாழ்வதற்காக மட்டுமே தன்னை திரித்துக்கொண்ட மனநிலையை ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். “ஆதி.குமணனோட இருந்தப்போ பகுத்தறிவுவாதின்னு சொன்னாங்க. அப்புறமா கல்யாணம் ஆனப்பிறகு கோயிலுக்கெல்லாம் போக ஆரம்பிச்சேன். பிரம்மகுமாரிகளோட தொடர்பு ஏற்பட்டு கொஞ்ச காலம் அவங்க மேடையில பேசுனப்போ ஆன்மிகவாதின்னு சொல்லிக்கிட்டேன். நமக்கென்ன? எங்க இருக்கறமோ அப்படியாயிட வேண்டியதுதான். நான் ஒரு திரிபுவாதி பாத்துக்க.” எனச் சிரித்தார். அச்சிரிப்பு எனக்கு எப்போதும் புதுமைப்பித்தனை நினைவுறுத்தும். கொஞ்சமும் மிச்சம் வைக்காத சிரிப்பு. அத்தலைப்பிலேயே அந்த ஆவணப்படம் வெளியீடு கண்டது. அக்கினி அதில் கலந்துகொண்டார். அவரை நான் கடைசியாகப் பார்த்ததும் அந்த நிகழ்ச்சியில்தான்.

அக்கினியுடன் நான் பழகியவரை அவர் தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கிருந்த அபோத (innocent) குணத்தைத் தக்க வைக்கவே போராடியதாகத் தோன்றுகிறது. “இப்ப நினைச்சாலும் ஒரு நல்ல கவிதை எழுதிடலாங்கற எண்ணத்திலயே காலம் ஓடுது. எழுதறனோ என்னவோ இந்த நம்பிக்கை கொஞ்சம் தெம்பை கொடுக்குது” என ஆவணப்படப்பிடிப்பில் கூறினார். அவரது சொற்களுக்கு இடைவெளியில் இருந்த கவிஞனின் வதையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

3.10.2019 அக்கினி இறந்துவிட்டதாகத் தகவல் வந்தபோது அது பொய்யாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். தொடர் அழைப்புகள் உறுதி செய்தன. டாக்டர் சண்முகசிவாவுடன் சென்றேன். பத்மினி அக்காவின் அழுத முகத்தை எதிர்கொள்ள சங்கடமாக இருந்தது. கட்டியணைத்துக்கொண்டார். “அவருக்கு இப்படி நடக்குமுன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு அதான் அவர படம் எடுத்திருக்க” என்றார். அக்கினி முகம் கருத்திருந்தது. புற்று நோய்க்கு தொடர் மருந்துகள் கொடுத்ததன் விளைவு.

“கடைசி கடைசியா வீட்டுக்கு கூட்டிப்போயிடுங்கன்னு வற்புறுத்த ஆரம்பிச்சிட்டாரு. கூட்டி வந்தோம். வீட்டிலதான் உயிர் போச்சு” என்றார் பத்மினி.

‘இப்ப அமர்ந்தாலும் என்னால நல்ல கவிதை ஒன்ன எழுதிட முடியும்’ என்றது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அதற்காகவாவது வீட்டுக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கூடுமோ?

1 comment for “அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

  1. கலைசேகர்
    November 2, 2019 at 12:21 am

    ஒரு முக்கியமானவரின் பேரிழப்பால் மனம் அடைந்திருக்கும் சோகத்தை அழுது தான் தீர்க்க வேண்டும் என்றில்லை…அழுத்தமான ஒரு கட்டுரை வழியாகவும் அதிலிருந்து மீளலாம் என உணர்த்தும் எழுத்து.
    அக்கினியின் அனலையும் தங்களின் தவிப்பையும் உணர்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *