பேய்ச்சி: முதல் வாசிப்பு

73087195_2804370296242697_3245688411717107712_nநாவலைப் பற்றிய சில பொதுவான எதிர்பார்ப்புகள் உண்டு. நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும் போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது. ம.நவீனின் முதல் நாவல் ‘பேய்ச்சி’ அவ்வகையில், மேற்கூறிய அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்யும் தமிழ் புனைவு வெளியில்,  மிக முக்கியமான புதுவரவு என சொல்லலாம்.

பெண்ணெல்லாம் பேய்ச்சி ஆகும் கதை என ஒருவரியில் சொல்லலாம். நாவல் 1981, 1999, 2019 என மூன்று காலகட்டங்களில் மாறி மாறி நிகழ்கிறது. இக்காலகட்டங்களுக்கு அப்பால் நினைவுகளின் ஊடாக இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பாக பயணித்து மலேசிய வரலாற்றின் கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் எண்பதுகளில் பல தமிழர்களின் உயிரைக்குடித்த  சாராய உயிரிழப்பு தான் நாவலின் களம். ரப்பரில் இருந்து செம்பனைக்கு மலேசியா மாறிய ஒரு காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. செம்பனை வரத் தொடங்கி முழு பரப்பையும் கைக்கொண்ட ஒரு சித்திரத்தையும் நாவலில் காண முடிகிறது. காலனிய காலம், ஜப்பானியர்களின் காலம், சுதந்திர மலேசியா, கம்யுனிஸ்ட் எழுச்சி என வெவ்வேறு காலகட்டத்து வரலாற்று சித்திரங்களை சன்னமாக நாவல் சொல்லிச் செல்கிறது. பெரும்பாலும் மலேசியத் தோட்டம் மற்றும் கம்பத்தில் நிகழும் நாவல், ஒரு பகுதி மட்டும் தமிழகத்தில் நிகழ்கிறது.

தமிழகத்திற்கு வெளியேயான இலக்கியங்களில் தமிழர்களுடன் இணைந்து வாழும் பிற இனங்களைப் பற்றி நுட்பமான எந்த அவதானிப்புகளும் இல்லை எனும் குறையை நவீனின் இந்நாவல் போக்குகிறது. சின்னி எனும் சீனப் பெண் பாத்திரம் நாவலின் மையப் பாத்திரங்களில் ஒன்று. அவளைத் தவிரவும் பொதுவாக சீனர்களின் இயல்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து கூர்மையான அவதானிப்புகள் நாவலில் விரவிக் கிடக்கின்றன.

நாவலின் மையப் பாத்திரம் ஓலம்மா. தமிழகத்திலிருந்து பிழைக்க கப்பலேறி வந்தவள். அவளுடைய தந்தை கப்பலிலேயே இறந்து கடலில் வீசப்படுகிறார். ஓலம்மாவின் கதையை முன்னும் பின்னுமாக நாவல் பின்னிச் செல்கிறது. ஊர் மக்கள் அவள் மீதும் அவள் ஊர் மக்கள் மீதும் மாறா பிரியம் கொண்டுள்ளார்கள். பக்தி, விசுவாசம், அநீதியை பொறுக்காதவள் என ஓலம்மா ஒரு நாட்டார் தெய்வத்தின் வார்ப்புரு. ஒருவகையில் காத்தாயி, ஓலம்மா, முனியம்மா மற்றும் மாலதி எனும் நான்கு பெண்கள் சந்நதம் கொண்டு தன்னை மீறி பேய்ச்சியாகும் தருணங்களை சொல்லும் கதை என சொல்லலாம். கொப்பேரனும், மணியமும், ராமசாமியும் அவர்களுக்கு இரையானவர்கள். நாயகனாக தோன்றும் மணியம் சதை சபலம் பீடித்து வீழ்கிறார். நெறி வழுவாத வைத்தியர், ராமசாமி பற்றின் காரணத்தினால் பாதகனாகிறார். அநீதி பொறுக்காத ஓலம்மா தான் படைத்த அனைத்தையும் அழித்து கருணையின் மறு எல்லையில் நிற்கும் அன்னையாகிறாள்.

நாவலின் தொடக்கத்தில் பிள்ளையை வாயில் கவ்வியபடி நிற்கும் பேயுரு கொண்ட பேய்ச்சிக்கும் குழந்தையை சீராட்டி வளர்க்கும் தாயுரு கொண்டவளுக்கும் இடையிலான முரண் ஓலம்மாவிற்கு துல்லியமாக பொருந்துகிறது. ஓலம்மாவிற்கு மட்டுமல்ல சின்னிக்கும் கூட பொருந்துகிறது. வெள்ளி வளையல், ரம்புத்தான் மரம் என சில வலுவான படிமங்களை நாவல் வெற்றிகரமாக கையாண்டுள்ளது. சிறுவன் அப்போயின் பாத்திரமும் அபாரமாக உருவாகியுள்ளது.

ஓலம்மா தீவிரமாக தன்னை வருத்தி தைப்பூசத்திற்கு செல்லும் சித்திரம் ஒருவகையில் சாமானியரின் ஆன்மீக தளத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறது. தன் கணவன் மணியம் மாட்டி வைக்கும் பெரியார் படத்திற்கும் அவள் இயல்பாக பொட்டு வைத்து வணங்கி செல்கிறாள். இயற்கையுடன் இயைந்து வாழும் வைத்தியர் ராமசாமி என் மனதிற்கு நெருக்கமான பாத்திரம். மூலிகைகளை பயிரிட்டு மருத்துவம் செய்து வருகிறார். நாவலின் ஆன்மீகப் பகுதி என்பது தொக் குரு ராமசாமிக்கு போமோ கற்றுக்கொடுக்கும் இடம். போமொவின் தத்துவ பின்புலத்தை நவீன் அழகாக எழுதியுள்ளார். நோயுள்ளவனே, வலி கொண்டவனே பிறருக்கு சிகிச்சை அளிக்க முடியும். அவன் நோயாளியின் வலியை வாங்கிக்கொண்டு தன் வலியைக் கடக்கிறான்.

வலுவான மையப்பாத்திரங்கள் மற்றும் அவற்றின் முரண்கள், சீரான மொழி, நுண்ணிய நிலக்காட்சி சித்தரிப்பு என எல்லாமும் நவீனின் முதல் நாவலான ‘பேய்ச்சியில்’ கைகூடி வந்துள்ளது. நாவல் வெளியான பின்னர் விரிவான விமர்சனத்தை எழுதுகிறேன். நவீனுக்கு வாழ்த்துக்கள்.

3 comments for “பேய்ச்சி: முதல் வாசிப்பு

 1. கலைசேகர்
  November 18, 2019 at 2:22 pm

  பேய்ச்சியை/களைப் பார்க்கும் ஆர்வம் மேலோங்குகிறது.

 2. சை.பீர்முகம்மது
  November 27, 2019 at 2:23 pm

  பேய்ச்சி, மலேசிய தமிழ் நாவல்கள் பார்வையில் புதிய பாதையை தோற்றுவிக்குமென்று நம்புகிறேன்.சுனிலின் பார்வையில் “நாவல் வரலாற்றையும் தத்துவங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்ற ” எதிர்பார்ப்புக்கு பேய்ச்சிக்குள் இருக்கும் சாராயச் சாவுகள் ஓர் எடுத்துக்காட்டு. போலி சாராயத்தில் மடிந்தது இதுவரை தமிழார்களே அதிகம். சம்சு என்ற சாராயத்தை காய்ச்சி விற்பவர்கள் பெரும்பாலும் சீனர்களே! ஆனால் நான் நேரில் பார்த்த பல சாராய சீன விற்பனையாளர்கள் சாராயத்தைக் குடிப்பதேயில்லை. ஒவ்வொரு தோட்டாப்புறத்திற்கு வெளி எல்லையில் 2 கிலோ சுற்றுவட்டத்தில் சீனர்களின் பலசரக்குக் கடையின் பின்புறம் சாராய கடையிருக்கும்.இதில் விஷச்சாராயம் குடித்து கொத்துக்கொத்தாக இறந்தவர்கள் தமிழர்களே. தோட்டத் தொழிற்சங்கம் சாராயத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மிக தீவிரமாக தனது “சங்கமணி ” இதழில் முன்னெடுத்தது ஒரு வரலாறு. இப்பொழுது இந்த கள்ளச்சாரயம் நவீனின் நாவலில் வந்திருப்பாதாக சுனில் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.60 களில் கள்ளச்சிராயம் தோட்டப்புற தமிழர்களின் எமனாகயிருந்தது . அப்போதைய என் இளமைக்காலத்தில் ஹிட்லரின் விஷவாயுவில் நாஜிகளால் கொல்லப்பட்ட யூதர்களோடு இந்த கள்ளச்சாராய மரணங்கைளை ஒப்பிட்டுக்கொள்வேன்.நாவலை வாசிக்க
  காத்திருக்கிறேன்.
  சை.பீர்முகம்மது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *