கலைஞனின் தும்பிக்கை

IMG-20191008-WA0037‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.

மலேசிய நாவல் இலக்கியத்தில் இது, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு படைப்பாக இருக்கும். இந்நாவலை, மூன்று அடிப்படைகளில் கவனப்படுத்தவேண்டிய முக்கியத்துவம் இருப்பதாகக் கருதுகிறேன்.

முதலாவதாக, இந்த நாவலில் தொய்ந்துள்ள வரலாற்றுப் பின்புலம்.

இந்நாவல், காலனித்துவ ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கும் கதையை விவரிக்கிறது. இரண்டாம் உலகப் போர், தென்கிழக்காசியாவில் ஜப்பானிய ஆதிக்கம், பின் மீண்டும் பிரிட்டி‌‌ஷ் ஆட்சி என்று, மலேசிய வரலாற்றில் 1930களின் பிற்பகுதி தொடங்கி 1960கள் வரையிலான காலகட்டத்தை துன்பமும் கொந்தளிப்பும் துயரமும் நிறைந்திருந்த காலகட்டம் எனக் குறிப்பிடலாம். இந்நாட்டு மக்களுக்கு, இந்த மண்ணின் மீதும் தங்கள் வாழ்வின் மீதும் பற்றை ஏற்படுத்திய காலப்பகுதி இது என்றே சொல்ல வேண்டும்.

மரபாக இருந்து வந்த அரசியல் புரிதல்களோடு, நவீன அரசியல் சித்தாந்தங்களின் உரசலும் ஒருங்கிணைவும் இந்நாட்டில் வேரூன்றிய காலகட்டமாகவும் இது அமைந்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக வாழ்ந்து, இந்நிலத்தில் உழைத்துவந்த சாமானிய மக்கள், தங்கள் உரிமைகளையும் உணர்வுகளையும் மீட்டெடுக்கத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

இந்நிலத்தில் வாழ்ந்த எல்லா இன மக்களிடமும் ஒருமித்து எழுந்த விடுதலை உணர்வும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களும் இக்காலகட்டத்தில் உச்சம் பெற்றன.

இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த 1940களின் தொடக்கத்தில், இந்தோனேசியாவிலும் மலாயாவிலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் விளைவாக, இந்நாட்டு மலாய்க்காரர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மாற்று அணியாக, சுபாஷ் சந்திரபோஸால் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம், இந்நாட்டு இந்தியர்களுக்கு விடுதலை உணர்வையும் அதன்மூலம் ஓர் உயர்வுணர்வையும் ஏற்படுத்தியது. INA படையில் சிங்கை-மலாயா தமிழர்கள் இணைந்து ஆயுதப் போராட்டத்துக்குத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டது, போராட்ட வரலாற்றில் முக்கியத் திருப்பமாகும்.

அதேபோல கம்யூனிஸ சித்தாந்தத் தாக்கம், மலாயா மக்களிடம் தன்னுரிமை, சமத்துவச்  சிந்தனைகளை விதைத்தது. வர்க்க வேறுபாடுகளை ஒழிக்கும் அடிப்படை நோக்கோடு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் தரப்பின் ஆதரவைப் பெற்று வளர்ந்தது. ஆயினும் மலாயாவில் ரஷ்ய ஆதரவு கம்யூனிஸத்தைவிட, சீன ஆதரவு கம்யூனிஸம் பலம்பெற்று வளர்ந்ததால் அவ்வமைப்பில் சீனர்களின் செல்வாக்கு உயர்ந்திருந்தது.  அந்த வகையில், 1930கள் முதல் 1960கள் வரை மலாயாவில் ஒரு தீவிரவாதப் போக்குடைய சக்தியாக விளங்கிய கம்யூனிஸம், மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய தேசிய ராணுவத்தைப் போலவே, மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் சிங்கப்பூரில் தொடக்கம் கண்டது. 1927-1928களுக்கிடையில், சிங்கப்பூரில் நன்யாங் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் தொடங்கிய இக்கட்சிதான் பின்னர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியானது. அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் இக்கட்சி, மலேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தைச் செலுத்தியது. பிரிட்டிஷ்  காலனித்துவத்துக்கு எதிராக தன் போராட்டத்தைத் தொடங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சி, மலாயா ஊழியர் அணியின் பெரும்பான்மையினரான தொழிலாளர்களை அரவணைத்துக்கொண்டது. அவர்களின் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுத்தது. தொழிற்சங்கங்களுடன் இணைந்து 1930களில் வேலைநிறுத்தங்கள், போராட்டங்களில் ஈடுபட்ட இந்த அமைப்புக்கு பிரிட்டி‌ஷிடம் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. 1941இல் ஜப்பானியர் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர், ஜப்பானியரை எதிர்க்க கம்யூனிஸ்ட்டுகளை பிரிட்டன் பயன்படுத்தத் தொடங்கியது.

மலாயா மக்கள், ஜப்பானிய எதிர்ப்பு ராணுவம் (Malayan People’s Anti-Japanese Army (MPAJA)) எனும் பெயர் மாற்றத்துடன் உருவாகிய இப் படை, ஜப்பானுக்கு எதிரான கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டது. பிரிட்டனின் ஆதரவால் ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் பெற்ற  கம்யூனிஸ்ட்டுகள்,  உலகப் போர் முடிந்து மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டதும், மலாயா தேசிய விடுதலைப் படை (Malayan National Liberation Army (MNLA)  என்ற பெயரில் பிரிட்டி‌‌‌ஷுக்கு எதிராகத் திரும்பினர். மலாயாவைக் கம்யூனிஸ்ட் நாடாக்கும் முயற்சியில்  மின் நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துதல், பொதுப் போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்தல்,  தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல்  என்று,  பிரிட்டிஷ் அரசுக்குப் பெரும் பொருளியல் இழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், பெரும்பகுதி சீனர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு இந்தியர்களும் சில மலாய்க்காரர்களும் இணைந்திருந்தனர். இந்தியர்களைப் பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பாத்தாங்காலி, களும்பாங், பத்து ஆராங், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட் போன்ற இடங்களில் வாழ்ந்த இந்தியர்கள் கூடுதலான ஆதரவுகளை வழங்கிவந்தனர்.

உலகின் எல்லா ஆயுதப் போராட்டங்களைப் போலவே மலாயா கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்துக்கும் ஏற்பும் மறுப்புமான இருவகை கருத்துகள் இருந்தன. அரசாங்கம்,  மலாயா கம்யூனிஸ்ட்டுகளை பயங்கரவாத தரப்பாகச் சித்திரித்து, கடுமையான சட்டங்களின்வழி ஒடுக்கியுள்ளது. ஆயினும் மலாயாவில் அந்நிய ஆட்சி எதிர்ப்பு நிலைபாட்டுடனும் சுதந்திர வேட்கையுடனும் மிகத் தீவிரமாக செயல்பட்ட அமைப்பு அது என்பதை மறுக்கமுடியாது. ஜப்பான், ஆங்கில ஆட்சிகளை இந்நாட்டில் எதிர்த்த ஒரே அமைப்பாக கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. அந்த வகையில், மலாயா கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுத் தரப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இருப்பினும், கம்யூனிஸ்ட் ஆதரவுத் தரப்பின் குரல் இந்நாட்டுப் புனைவிலக்கியங்களில் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கம்யூனிஸ்ட்டுகளை முற்றுமுழுதாக பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்ட படைப்புகளும் அதிகம் உள்ளன. அவ்வகையில், இந்தியர்களின் கம்யூனிஸ ஈடுபாட்டை மையமாகக்கொண்டே ‘அக்கினி வளையங்கள்’ நாவல் புனையப்பட்டுள்ளது.

அவசர காலம் நடப்பில் இருந்த 1948 முதல் 1960 வரையில், மலாயாவின் உழைப்பாளி மக்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், எப்போதும் அச்ச மனநிலையில் பெருந்துன்பங்களை அனுபவித்தனர். இந்தக் காலகட்டத்தில், சிலாங்கூர் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் கம்யூனிஸ தாக்கங்கள் எவ்வாறு இருந்தன என்று இந்த நாவல் சொல்லிச் செல்கிறது.

காடுகளில் மறைந்து வாழ்ந்து, கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்ட கொரில்லா தாக்குதல்கள், காலனித்துவ முதலாளிகளுக்குச் சொந்தமான பல சொத்துகளையும் தோட்டங்களையும் அவர்கள் அழித்தது, மலாயா தேசிய விடுதலைப் படையை ஒடுக்க பிரிட்டன் மேற்கொண்ட புதுக்குடியேற்றத் திட்டம் இதன்மூலம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மக்களிடமிருந்து உணவும் பொருளும் கிடைப்பதில் ஏற்பட்ட தடை என பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை உள்ளடக்கியிருந்தாலும், இவற்றினூடே காட்டில் போரிட்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு உணவு கிடைக்க உதவிய எளிய மக்களின் பதற்றத்தை இந்நாவல் மையமாகக் கொண்டுள்ளது.

மலாயாவில் பல சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்த சர் ஹென்றி கர்னி, அங்கிருந்த கம்யூனிஸ்ட்டுகளை அழிக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர். அவர், 1951இல் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் புக்கிட் கெப்போங் தாக்குதல் போன்றவை மலாயா மக்களிடையே கம்யூனிஸ்ட்டுகளின்மீது பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை ஏற்படுத்தின. இதுபோன்ற பெருநிகழ்வுகளை உள்ளடக்கியுள்ள இந்நாவலில், கம்யூனிஸ போராட்டத்தில், தனது பங்கும் இடமும் என்னவென்று முடிவு செய்யமுடியாத குழப்பத்துடன் பயணிக்கும் முத்து என்னும் இளைஞனின் வழியே நாவல் நகர்கிறது.

அந்த வகையில், இந்நாவலின் இரண்டாவது சிறப்பம்சமாக முத்து எனும் கதாபாத்திரத்திடம் உள்ள தடுமாற்றமான பயணத்தைக் குறிப்பிட வேண்டும்.

தான் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும், ஒரு போராட்ட இயக்கத்தில் தனது இடம் என்ன என்ற குழப்பத்துடனேயே நாவல் முழுவதும் முத்து பயணிக்கிறான். சக மனிதர்களை, தன்னிடம் அன்பு செலுத்துபவர்களை, தன்னை நம்பிவந்தவர்களை – ஒரு லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவன், அந்தரங்கமாக தான் கொண்டுள்ள நியாயங்களின் தராசுகளில் எவ்வாறு நிறுத்தியும் நிராகரித்தும் செல்கிறான் என்பதாக நாவல் புனையப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, சண்முகம்பிள்ளையின் பார்வையில் வாழ்வுகுறித்து முன்வைக்கும் தரிசனம் இந்நாவலை முக்கியமானதாக மாற்றுகிறது. நாவலின் தொடக்கம் முதலே தனது நுண்ணுணர்வுகளை அவர் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனதின் நிகழ்வுகளுக்கு முரணான பாவனைகளை நிகழ்த்திக்காட்டுவதும் அதன் உச்சமாக அவர் ஏற்றுக்கொள்ளும் தனிமையும் இறுதியில், அதுவே வன்மமாக மாறுவதும் அந்த வன்மத்துக்கான நியாயங்களை தானே உருவாக்கிக்கொள்வதும் என சை.பீர்முகம்மது மிக வலுவான கதாபாத்திரமாக சண்முகம்பிள்ளையை உருவாக்கியுள்ளார்.

மலேசியாவின் கம்யூனிஸ வரலாற்றை முழுமையாகச் சொல்லும் புனைவாக இந்த நாவலை சித்திரிக்கமுடியாது. ஒடுக்குமுறைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துன்பம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைகள், நாடு கடத்தல் போன்ற விவரங்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளபோதிலும், கட்டாய மக்கள் அடையாளப் பதிவு (IC), உணவுப் பங்கீடு, கம்யூனிஸ்ட்டுகளை கண்ட இடத்தில் சுடும் இராணுவ அனுமதி, ஆஸ்திரேலிய இராணுவப் படை, நியூசிலாந்து இராணுவப் படை, இந்திய-சீக்கியப் படை, கூர்கா போர்ப்படை எனப் பல படைகள் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கின என்ற வரலாற்றின் பல்வேறு சம்பவங்களை நாவல் தொடவில்லை என்றாலும் அது குறையும் அல்ல.

இந்நாவலின் நோக்கம் வரலாற்றைச் சொல்வது அல்ல. ஒரு வரலாற்றுத் தருணத்தில் கடந்துசென்ற எளிய மனிதர்களைப் பற்றிய கதை இது. யானையின் தும்பிக்கை ஒரு மரத்தைச் சாய்க்கமுடிவதுபோல, மிகச்சிறிய ஊசியையும் எடுக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு போராட்டத்தில், பெரு வரலாற்றைச் சொல்லும்போதே, அப்போராட்ட அடுக்கில் மிகக் கீழேயிருக்கும் எளிய மனிதர்கள் என்னவாக உருமாறுகிறார்கள் எனச் சித்திரிப்பதில் இந்நாவல் வெற்றிகண்டுள்ளது.

இந்த எளிய மனிதர்கள் வழியேதான் சை.பீர்முகம்மது வாழ்வை விசாரணை செய்து பார்க்கிறார். அந்த விசாரணையில் எந்த மனிதரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ இல்லை. ஆயுதங்களுடன் காடுகளில் போராடும் ஒவ்வொரு போராளியும் ஒரு தருணத்தில் பெரும் அலையில் அடித்துச் செல்லப்படுகிறான். தாக்குவதும் இறப்பதும் அந்தப் பேரலையின்  உக்கிரத்தில் விசாரணைகளற்று நடக்கிறது. நகரப் பெருங்கூட்டத்தில் வாழும் மனிதர்களும் உணர்வுகளால் அப்படியானவர்களாகவே இயங்குகின்றனர். அதன் ஒரு பகுதி முத்து என்றால், சண்முகம்பிள்ளை மறுபகுதி.

2019ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதை சை.பீர்முகம்மது பெறுவதையொட்டி இந்த நாவலை வல்லினம் பதிப்பிப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

1 comment for “கலைஞனின் தும்பிக்கை

  1. Chandran panakaran
    November 27, 2019 at 12:59 pm

    அறுமையான. விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *