சர்வ ஃபூதேஷு

aasan 01எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன்.

அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில் அந்தத் தமிழ்நாட்டுக்காரன் இருக்கிறான். அவன் உள்ளே போய் ஒருமணிநேரமாகிறது. அவன் இந்நேரம் வேகவைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு போல ஆகியிருப்பான்”. மாத்தன் சிரிக்கும்போது அழகான பல்வரிசை தெரிந்தது. அவன் ஒரு பூதக்குழந்தை என்று தோன்றியது

நான் ஆவியறைக்குச் செல்ல மாத்தன் என் பின்னால் வந்தான். “வைத்தியரே, தெரியாமல் கேட்கிறேன். இப்படி ஆவிபிடிப்பது எதற்காக?” என்றான்

“உள்ளிருந்து கெட்டநீர் வியர்வையாக வெளியே போகும்”

“ஏன் மூத்திரத்தால் போகாதா?”

“எல்லா வடிவிலும் போகும்… ஆனால் தசையிலிருந்து போகவேண்டும் என்றால் வியர்வைதான் வழி”

“எச்சில்? நான் நிறைய எச்சில் துப்புவேன்”

“எச்சிலும்தான்”

“வைத்தியரே கண்ணீர்? கண்ணீர் விட்டால் நாம் தூய்மையாகிவிடுவோம் என்று ஃபாதர் புஞ்சக்காடன் சொன்னார்…”

“அதுவும் நல்லதுதான்”

“நான் சர்ச்சில் நிறைய அழுவேன்”

உள்ளே முத்துப்பாண்டியை சங்கரன் வெளியே கொண்டுவந்துகொண்டிருந்தான். கரிய உடலில் வியர்வை வழிந்தது.

“உருகி இல்லாமலாகிவிடுவேன் என்று தோன்றியது… வெளியே எடுத்தால் எலும்புக்கூடுதான் வரும் என்று சொன்னேன்” என்றான் முத்துப்பாண்டி

நான் சிரித்து “ஆவி நல்லது” என்றேன் “உடலுக்குள் புகைக்குழல்போல கரி படிந்திருக்கும்… எத்தனை ஆயிரம் சிகரெட்டுகள்”

முத்துப்பாண்டி வெட்கத்துடன் சிரித்து “இனிமேல் இல்லை” என்றார்

ஆனால் அடுத்த ஆண்டு இன்னும் மோசமானநிலையில் திரும்பி வருவார். சங்கரன் “மாத்தச்சா வா” என்றான்

“இன்றைக்கு நேரமாகிறது…நான்…” என்று மாத்தன் நழுவப்போனான்

“வா மாத்தச்சா ” என்று சொல்லி சங்கரன் அவன் கையைப்பிடித்து இழுத்துச் சென்று அவனை ஆவிப்பெட்டிக்குள் அமரச்செய்தான். கதவை மூடியபோது வெட்டிவைக்கப்பட்ட தலை போல அவன் முகம் தெரிந்தது

தலை புன்னகைத்து “அவள் யார்?” என்றது

“யார்?” என்றேன்.

“அந்த வெள்ளைக்காரி… பாவம். அவளுக்கு போதைப் பழக்கம்தானே?”

“இங்கே ஒருவர் இன்னொருவரைப்பற்றி கேட்கக்கூடாது, அனுமதி இல்லாமல் பேசக்கூடாது.”

“நான் எதற்குப் பேசப்போகிறேன்? எனக்கு ஆங்கிலமே தெரியாது” என்றான் மாத்தன்.

நான் வெளியே செல்லும்போது அவன் என் பின்னால் “ஆனால் அவள் என்னை பார்த்தாள்” என்றான்.

நான் திரும்பிப் பார்த்தேன்.

“என்னை அவளுக்குத் தெரியும் என்று தோன்றியது. அன்பான பார்வை…” என்றான் மாத்தன் “வைத்தியரே நான் எட்டு வருடம் முன்பு கத்தோலிக்க வாலிபர் கழகத்தின் உறுப்பினராக இருந்தேன். இவள் கத்தோலிக்க வாலிபர் கழகத்தில் உள்ளவளா?”

”இல்லை” என்று சொல்லி நான் வெளியே சென்றேன்

ஆனால் மாத்தன் ஒருமணி நேரத்தில் என்னை தேடிவந்துவிட்டான். ஷார்ட்ஸ் அணிந்து பூதாகரமான தொடைகளுடன் இருந்தான். அவன் எப்போதுமே மிக அகலமாக புன்னகைப்பவன். அது புன்னகை அல்ல, சிரிப்புதான்.

“வைத்தியரே, அவள் பெயர் எல்லா ஆன்ஸெல். பிரெஞ்சுக்காரி. போதைப்பழக்கத்தை விடுவதற்காக இங்கே வந்திருக்கிறாள்…”

“எங்கே போய் விசாரித்தாய்?” என்று கோபமாக கேட்டேன்.

“இங்கேயும் எனக்கு ஆள் உண்டு” என்று மாத்தன் சிரித்தான். “உண்மையான விசுவாசிகளுக்கு கர்த்தர் உதவுவார், ஹஹஹஹா!”

“சரி, உழிச்சில் முடிந்தது என்றால் நீ போய் ஓய்வெடுக்கலாம்” என்றேன்.

“அவளுக்கு என்னை எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான்.

நான் “அவளுக்கு எல்லாரையும் தெரியும்” என்றேன்.

“எப்படி?” என்று அவன் குழப்பமாக கேட்டான்.

“எல்லாரையும் பார்க்கிறாள் அல்லவா?”

“ஓ” என்று அவன் சொன்னான். குழப்பத்துடன் யோசித்து “ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியைப் போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்.”

“நீ ஓய்வெடுக்கவேண்டும்.”

“அவ்வளவு துயரம்… ஏன் வைத்தியரே போதைப்பொருள் அத்தனை துயரத்தை அளிக்குமா என்ன?”

“எல்லாமே துயரத்தைத்தான் அளிக்கும்” என்றேன்.

அவன் சிரித்து “மட்டன், சிக்கன், எல்லாமா?”என்றான்.

“ஆம்.”

“பீஃப்?”

“அதுவும்தான்.”

“சோறு? குழம்பு? அவியல்? வைத்தியரே அவியல்?”

நான் “ஆம்” என்றேன்.

அவன் உரக்கச் சிரித்து “இங்கே தரும் எண்ணெயும் லேகியமும்தான் சுகத்தை அளிக்கும் இல்லையா?” என்றான்.

நான் சிரித்தேன்.

“நான் வருகிறேன். நல்ல டீ போட்டு வைக்க நாராயணியிடம் சொன்னேன்.”

அவன் சென்றபின் நான் அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். கட்டப்பாயி காண்டிராக்டரின் மூத்தமகன். பெரும்செல்வம், உறவுப்பட்டாளம். ஆனால் கொஞ்சம் அப்பாவி. ஆகவே தொழில்களை தம்பிகள் எடுத்துக்கொண்டு விட்டார்கள். மனைவி பிரிந்துபோய் வேறு திருமணம் செய்துகொண்டாள். அதன்பின் தனிமைதான். சாப்பாடுதான் அவனுடைய போதை.

காலையில் நான் என் அறைக்கு வந்து சன்னல்களை திறந்துகொண்டிருந்தபோதே மாத்தன் வந்துவிட்டான். கதவை வெளியே நின்றபடியே தட்டினான். “வா” என்றேன்.

உள்ளே வந்ததுமே உடைந்த குரலில் “வைத்தியரே” என்றான். “நான் செத்துப்போய்விடுவேன்… உடனே நான் போகவேண்டும். சர்ச்சுக்குப் போகவேண்டும்… அல்லது ஒரு பாதிரியாரை இங்கே கொண்டுவந்தால்கூட போதும்.”

அவன் நாற்காலியில் அமராமல் அதை பிடித்தபடி நின்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“முதலில் உட்கார்” என்றேன்.

அமர்ந்தபின் “நான் செத்துப்போனால் அப்படியே நரகத்திற்கு போவேன், நான் பாவமன்னிப்பு கோரவேண்டும்.”

“என்ன ஆயிற்று?”

“நான் நேற்று எல்லா ஆன்ஸலிடம் போய் பேசினேன்.”

நான் அதை எதிர்பார்த்திருந்தேன்.

“அவள் மிக அன்பாக இருந்தாள். குண்டானவர்களை அவளுக்குப் பிடிக்கும் என்றாள். சிகரெட் வாங்கி கொண்டுவந்து தரமுடியுமா என்று கேட்டாள். நான் அதெல்லாம் பிரச்சினையே இல்லை என்று சொல்லி வாங்கிக்கொண்டுவந்து தந்தேன்.”

“நீ வெளியே போனாயா?”

“இல்லை’ என்றான். விழிகளை தாழ்த்தி “இங்கேயே சிலபேர்…”

‘சரி” என்றேன்.

“அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவள் என்னைப்பற்றிக் கேட்டாள். மிக நல்லவள். அவள் மேரிமாதா போல இருக்கிறாள் என்று சொன்னேன். அவள் சிரித்தாள்.”

“பிறகு?”

“பிறகு நான் ஒரு கனவு கண்டேன்.”

அவனை கூர்ந்து நோக்கினேன். அவனுடைய பெரிய உடல் குறுகுவதுபோல தோன்றியது.

“சொல்”

“நான் கனவில் எல்லாவுடன் இருந்தேன். அவளை நான்…”

நான் ”சொல்” என்றேன்

“நான் கெட்டவன்… அழுக்கானவன்… என் உடல் முழுக்க நாற்றமடிக்கும் கொழுப்பு. இதையெல்லாம் உங்களால் கரைக்க முடியாது.”

“நீ எப்படி கனவு கண்டாய்?” என்றேன்.

“நான் இங்கே சரியாக தூங்குவதில்லை… கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையான தூக்கம் வந்துவிடும் என்று சொன்னீர்கள்.”

“ஆம்”

“ஆகவே நான் எதையாவது யோசித்துக்கொண்டு படுத்திருப்பேன்.”

“எதை?”

“என் அம்மாவை… என் அம்மா என் நினைவில் எப்போதும் அழுதபடியேதான் வருகிறாள்… அவள் சாகும்போது எனக்கு எட்டு வயது. அவள் அழுதது மட்டும்தான் எனக்கு நினைவிலிருக்கிறது.”

“சொல்லியிருக்கிறாய்.”

“அப்பா குடிகாரர்… மூர்க்கமானவர்.”

“தெரியும்”

“நான் ஆன்னியை நினைப்பதே இல்லை. அவள் நினைவு வந்தாலே எனக்கு கசப்பாக இருக்கும். ஆகவே நினைப்பு வந்ததுமே தவிர்த்துவிடுவேன்…“

“புரிகிறது”

“அதற்கு ஒரு வழி இருக்கிறது. என் மைத்துனன் அமெரிக்கா போனபோது வாங்கிக் கொண்டுவந்து தந்தான். ஆலீஸ் என்று நான் பெயரிட்டிருக்கிறேன்.”

“யார் அது?”என்றேன்.

“அது ஒரு பொம்மை… உண்மையான பெண் போலவே இருக்கும். பார்க்கும், பேசும்”

நான் “ஓ” என்றேன்.

“அதற்கு ஆலீஸ் என்று நான் பெயரிட்டேன். ஆலிஸுடன்தான் நான் இரவு படுப்பேன். அவளுடன் நான் பெண்போலவே உறவுகொள்ள முடியும். உண்மையில் அவளுடன் மட்டும்தான்…” அவன் கைதூக்கி சற்றே திக்கலுடன் “ஆலீஸ் என் வீட்டில் இருக்கிறாள். இங்கே அவளை நினைத்துக்கொள்வேன்… பிறகு…” என்றான்

“சொல்”

“அதன்பிறகு தூங்கினேன். கனவில் ஆலீஸ் என்னை எழுப்பினாள். நாங்கள் வெளியே போனோம். ஒரு அழகான புல்வெளி. சுற்றிலும் மலைகள். குளிர்ந்த காற்று வீசியது. அவள் என்னை முத்தமிட்டாள். நான் அவளுடன் நெருக்கமாக இருந்தேன். அப்போது தெரிந்தது அது ஆலீஸ் அல்ல, இவள். இந்த வெள்ளைக்காரி. நான் அழுதுவிட்டேன்.”

நான் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவன் சிறுகுழந்தைபோல முகம் சிணுங்க அழுதான்.

“இது அவளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தேன்… ஆனால் இனி என்னால் அவள் முன் போக முடியாது. நான் அழுக்கானவன்…”

“நான் ஒன்று சொல்லவா?” என்றேன்.

“சொல்லுங்கள்… எனக்கு மருந்து வேண்டும்” என்றான் “அல்லது நான் வீட்டுக்கே போகிறேன்.”

“நான் சொல்வதைக் கேள்.”

“சொல்லுங்கள்.”

“எல்லா என்ன தொழில் செய்தாள் தெரியுமா?”

“அவள் பாடுவாளா? இல்லை பியானோ?”

“இல்லை. அவள் ஒரு பாலியல்பட நடிகை”

“சினிமாவா?” என்றான்

“நீ பாலியல் படங்கள் பார்த்ததில்லையா?”

அதன்பின்னர்தான் அவன் துணுக்குற்றான்.  “ஆ!” என்றான்

“என்ன?”

“நான் நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். என் மைத்துனனுடன்… ஆனால் எனக்கு அதையெல்லாம் பார்த்தால் ஒரே பயம்… ஆன்னி சட்டையை களைந்தாலே எனக்கு பயம்தான்…”

“அந்த வகையான படங்களில் அவள் நடித்திருக்கிறாள். நிறைய படங்களில்…”

அவன் வாய் திறந்தே இருந்தது.

“அவளுடைய உருவத்தை பொம்மைகளாகச் செய்து விற்கிறார்கள். உன்னிடம் இருப்பது அதுதான்…”

“இல்லை. இவள் ஆலீஸ்”

“நன்றாக ஞாபகப்படுத்திப் பார்”

அவன் இமைக்காமல் என்னைப் பார்த்தான்

“அவளுக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. போதைப்பழக்கம், பல நோய்கள், ஆளே மாறிவிட்டாள்.”

அவன் “ஆமாம்” என்றான்

“ஆகவே நீ செய்தது பிழை இல்லை”

“ஆனால் நான்…” என்றான் “அது எல்லா இல்லை. அது ஆலீஸ்”

“ஆமாம்… அது ஆலீஸ். இவள் ஆலீஸாகவும் இருந்தாள். அப்படி ஆயிரக்கணக்கான பெண்களாக இருந்தாள்… இப்போது எல்லாவற்றிலும் இருந்து வெளியே வந்து எல்லாவாக இருக்கிறாள்.”

“ஓ”என்றான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஆகவே நீ செய்தது தவறு இல்லை. நீ அவளிடம் இதை சொன்னாலும் தவறில்லை.”

“நான் அவள் முன் போகமாட்டேன்” என்றான். “இனி அவளிடம் பேசவே மாட்டேன்.”

“அது உன் விருப்பம். பேசாமலிருந்தாலும் ஒன்றுமில்லை. நீ கவலைப்படாதே. ஏற்கனவே உனக்கு ஏராளமான மன அழுத்தம்.”

“எனக்கா?”

“ஆம்”

“இல்லையே. நான் சிரித்துக்கொண்டேதானே இருக்கிறேன்.”

“சிரிப்பதே அதனால்தான்.”

“எனக்கு துக்கமே இல்லையே… நான் அப்படி உணர்ந்ததே இல்லை.”

“அப்படியென்றால் நீ ஏன் இங்கே வந்தாய்?”

“என் வலக்கை மரத்துவிட்டது. சிலசமயம் வலதுகால்… நல்ல தூக்கமும் இல்லை.”

“அதெல்லாமே மனஅழுத்தத்தால்தான்” என்றேன் “உனக்கே தெரியாத மனஅழுத்தம்தான் ஆபத்தானது.”

“வைத்தியரே” என்று அவன் அழைத்தான். “எனக்கு மனஅழுத்தம் எதனால்?”

“நீ சொல், எதனால்?”

“எனக்கு தெரியவில்லை.”

“உனக்கே தெரியவில்லை என்றால் எனக்கு எப்படி தெரியும்?”

அவன் சீற்றத்துடன் “பிறகு எப்படி என்னை குணப்படுத்திவீர்கள்?”என்றான்

“இதோபார், ஒரு பானையில் அருவிபோல நீர் விழுந்துகொண்டே இருக்கிறது. அதில் நீர் நுழைவதை தடுக்க அருவியை நிறுத்தமுடியுமா என்ன? அந்தப் பானையை கவிழ்த்து வைப்பதுதானே நல்லது?”

“ஆம்” என்றான். “கவிழ்த்து வைக்கலாம்” என்றான். நான் சொன்னது அவன் மண்டைக்குள் புகவில்லை.

பின்னர் எழுந்துகொண்டு “ஆகவே பாதிரியார் வேண்டாம் என்கிறீர்கள்.”

“நாம் தப்பே செய்யாதபோது பாதிரியார் எதற்கு?”

“உண்மைதான்” என்றான்.

எழுந்துகொண்டு ஒன்றும் சொல்லாமல் நடந்து சென்றான்.

ஜெயமோகன்

அவன் அதற்குமேல் எல்லாவிடம் பேசமாட்டான் என்றுதான் நினைத்தேன். எல்லா குணம்பெற்று வந்தாள். அவள் பெரும்பாலான நேரம் புத்தகங்கள்தான் படித்தாள். எல்லாமே மில்ஸ் ஆண்ட் பூன் வகையான இளங்காதல்கதைகள். அவை முடிவில்லாத எண்ணிக்கையில் இருந்தன. அவளுடைய கிண்டில் கருவி ஓர் ஊற்றுபோல. உள்ளிருந்து ஊறி ஊறி வந்துகொண்டே இருந்தது. அவள் என்னிடம் மாத்தன் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

மாத்தன் என் அறைக்குள் வந்தபோது முகம் நன்றாக தெளிந்திருந்தது. “நான் உங்களிடம் பேச வந்தேன்” என்றான்.

“சொல்” என்றேன்.

அவன் அமர்ந்துகொண்டு ”நான் அவளிடமே சொன்னேன்” என்றான்.

“எதை?”

“ஆலீஸைப் பற்றி” என்றான். முகம் சிவந்து “அவளை பார்க்காமல் நான் வழிமாறி நடந்தேன். அவளே என்னிடம் வந்தாள். சிகெரெட் வாங்கி வரச் சொன்னாள். நான் கொண்டுசென்று கொடுத்தபோது ஏன் அவளிடம் நான் பேசுவதில்லை என்று கேட்டாள்.”

நான் பேசாமல் பார்த்தேன்.

“நான் அழுதேன். ஏன் அழுகிறேன் என்று கேட்டாள். நான் உடனே எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவள் என்னை அப்படியே கட்டிப்பிடித்து முட்டாளே இதற்கா அழுகிறாய் என்று கேட்டாள். நான் முட்டாள் இல்லை என்று சொன்னேன். என்னை அப்படிச் சொல்லித்தான் திட்டுகிறார்கள். ஆனால் நான் பிளஸ்டூவில் எழுபது சதவீதம் மதிப்பெண் வாங்கினேன். கணக்கில் நூற்றுக்கு நூறு. அதை அவளிடம் சொன்னேன். அவள் அரண்டு விட்டாள். மன்னித்துவிடு மன்னித்துவிடு என்று சொன்னாள். சரி பரவாயில்லை என்று நான் சொன்னேன்.”

அவன் எழுந்துகொண்டு “அவள் சிகரெட் பிடிப்பதை நீங்கள் பார்க்கவேண்டும். வேடிக்கையாக இருக்கும். கைக்குள் பொத்திக்கொண்டு இழுக்கிறாள்…”

“கஞ்சா இழுப்பதைப்போல” என்றேன்.

“கஞ்சாவை அப்படியா இழுப்பார்கள்?”

“நீ அவளிடம் எதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாய்?”

“மீன்பிடிப்பதைப் பற்றி!” என்று அவன் சொன்னான். “நான் எங்கள் ஏரிகளில் மீன்பிடிப்பேன். எனக்குத்தான் அதிகமான மீன்கள் கிடைக்கும். என் தம்பிகளெல்லாம் மீனே பிடித்ததில்லை. ஏன் தெரியுமா?”

“சொல்”

“தூண்டிலை வீசிவிட்டால் போதாது. பொறுமையாக அமர்ந்திருக்கவேண்டும். கையை எப்படி அசையாமல் வைத்துக்கொண்டாலும் நாம் பொறுமையிழந்தால் தூண்டிலில் அது தெரிந்துவிடும். அதோடு நம்பிக்கை வேண்டும். மீன் வராது என்று நினைத்தால் மீன் கொத்தாது.”

“யார் சொன்னது இதை?”

“ஈப்பன்… எங்கள் கூமன்குளம் எஸ்டேட்டில் தோட்டக்காரன். நல்லவன், பாவம் செத்துவிட்டான்.”

“நீ மீன்பிடிக்கலாம்…” என்றேன்

“இவளிடம் நான் கேட்டேன், நீ தூண்டில்போடுவாயா என்று. எதற்கு தூண்டில்போடவேண்டும், நான் வலைபோட்டு மொத்தமாக அள்ளிவிடுவேன் என்கிறாள். முட்டாள் பெண். ஹஹஹஹா!”

நானும் சிரித்தேன்.

“நான் வருகிறேன்” என்று எழுந்துகொண்டான்.

“அவளுக்கு நீ சிகரெட் அதிகமாக வாங்கிக்கொடுக்காதே. ஒருநாளுக்கு ஒரு சிகரெட், அதற்குமேல் வேண்டாம்.”

“இல்லை” என்றான்.

அவன் நடையில் ஒரு துள்ளல் இருந்தது. எப்போதும் ஒருபக்கம் சரிந்து தோளை சற்று தூக்கியபடி நடப்பான். வேறெங்கோ கவனம் இருக்கும். தலையைச் சரித்திருப்பான். அன்று சுவரில் வருடிக்கொண்டே சென்றான். படிகளை அடைந்ததும் பையில் கையை விட்டுக்கொண்டு தாவி இறங்கினான்.

அவர்களை அவ்வபோது நான் பார்த்தேன். அவன்தான் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த மரபெஞ்சுகளில் மதியத்தில் அமர்ந்திருந்தார்கள். அவள் அவனை கேட்பதாகவும் தெரியவில்லை. ஆனால் முகத்தில் புன்னகை இருந்தது.

சாந்தம்மா என்னிடம் “அவர்கள் இரண்டுபேரும்தான் இப்போது கூட்டு” என்றாள்.

“வேறு எவரைவிடவும் இவன் மேல்” என்றேன் “விஷமத்தனமாக ஒன்றும் சொல்ல மாட்டான்.”

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அவன் அவளுடைய பாலியல்படங்களை பார்க்க முனையலாம். அப்போது அவன் எண்ணம் மாறலாம். ஏதோ ஒன்று பிழையாகப் போகலாம்.

சாந்தம்மா “போகிற போக்கைப் பார்த்தால் அவன் அவளைக் கட்டுவான் என்று தோன்றுகிறது” என்றாள்.

“அதற்கெல்லாம் வாய்ப்பில்லை” என்று நான் சொன்னேன்.

ஆனால் அவர்களின் உறவைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். உழிச்சிலின்போது நான் மாத்தனிடம் கேட்டேன். “எல்லா என்ன சொன்னாள்?”

அவன்  “அவளுக்கு மாட்டிறைச்சி பிடிக்காதாம். அசைவமே சாப்பிடப்போவதில்லை என்கிறாள். நான் சொன்னேன், எங்கள் வீட்டில் மாட்டிறைச்சி வறுத்தால் மணம் காற்றெல்லாம் பரவியிருக்கும் என்று” என்றான்.

“அவளிடம்  வேறென்ன பேசிக்கொண்டிருப்பாய்?”

“நிறைய விஷயங்கள். நான் பானிபூரியே சாப்பிட்டதில்லை. அதை சாப்பிடுவதை கண்டாலே பிடிக்கவில்லை.”

“அவளை அதற்குப்பின் கனவில் கண்டாயா?”

“கனவிலா? ஆம், இரண்டு முறை. நான் அவளை கடலில் நீந்தச் சொல்லிக்கொடுத்தேன்.”

“பிறகு?”

“மீன் வாங்கும்போது என்னுடன் அவளும் சந்தைக்கு வந்தாள்.”aasan 02

“வேறுவகையில்?”

‘வேறுவகையில் என்றால்?”

“முதலில் வந்ததுபோல?”

“ஆ!” என்றான். பின்னர் “இல்லை” என்றான்.

நான் உழிச்சிலை தொடர்ந்தேன்.

“அப்போது கனவில் வந்தது அவள் இல்லை” என்றான்.

“வேறு யார்?”

“அவளுடைய பொம்மை… அதுதான் கனவில் வந்திருக்கிறது. அவளுடைய இப்போதுள்ள கோலத்திலேயே பொம்மைகள் உள்ளன, அவையும் கடைகளில் கிடைக்கின்றன.”

“ஓகோ”

“அவள்தான் சொன்னாள்” என்றான் மாத்தன் “அவளுடைய பொம்மைகளைத்தான் மக்கள் தொடமுடியும்.”

“சினிமாக்களில் நடித்தது?”

அவன் குழம்பி, சந்தேகமாக “அவையும் பொம்மைகள்தான்…” என்றான்.

“உன்னிடம் இருக்கும் ஆலீஸை நீ இனிமேல் பயன்படுத்துவாயா?” என்றேன்.

“ஏன்?” என்றான்.

நான் அவனிடம் “ஆலீஸை நீ பயன்படுத்தலாமா என்று அவளிடம் கேட்டுப்பார்.”

“அவளிடமா?”

“ஆம்”

அவன் ஒன்றும் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

“அவள் என்ன சொன்னாள் என்று என்னிடம் வந்து சொல்” என்றேன்

“ம்” என்றான்.

மறுநாள் அவன் சொல்லவில்லை, நானே கேட்டேன். “அவள் என்ன சொன்னா? நீ ஆலீஸை பயன்படுத்தலாமா?”

“அவளிடம் சொன்னேன். அவள் சிரித்துவிட்டாள். நெடுநேரம் சிரித்தாள். அதன்பின் நீ மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று என்னிடம் சொன்னாள். வைத்தியரே, அவள் சிரித்தால் அழகாக இருக்கிறாள்.”

“உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா?” என்றேன்.

“ஆமாம், உலகத்திலேயே அவளைத்தான் பிடித்திருக்கிறது” என்றபடி எழுந்துவிட்டான்.

“படு” என்றேன். அவன் படுத்துக்கொண்டான். “அவளுக்கு உன்னை பிடித்திருக்கிறதா?”

“ஆமாம், நானே கேட்டேன். அவளுக்கு என்னை மிகமிக பிடித்திருக்கிறது. உன்னைப்பிடிக்காமல் யாரைப்பிடிக்கும் என்று சொன்னாள்.” அவன் எழுந்து “என்னை தினமும் முத்தமிடுகிறாள்” என்றான்.

“படு” என்றேன். அவன் படுத்தான். “மாத்தச்சா, அவள் அந்தமாதிரி படங்களில் நடித்தது உனக்கு பிரச்சினை இல்லையா?”

“அது அவள் அல்ல ,பொம்மை.”

“சரி. அப்படியென்றால் நீ அவளை திருமணம் செய்துகொள்ளலாமே.”

அவன் அமைதியாக இருந்தான்.

“மாத்தச்சா”

அவன் “ம்” என்றான்.

“நான் இரண்டுபேருக்கும் நன்மை அளிப்பதை சொல்கிறேன்.”

அவன் “ம்” என்றான். ஆனால் செத்தவன் போல ஆகிவிட்டான்.

“நீ அவளிடம் கேள்.”

அவன் பதில் சொல்லவில்லை.

“நீ கேட்பாயா?”

அவன் மீண்டும் முனகினான்.

“தைரியமாகக் கேள். தவறு ஒன்றும் இல்லை. நான் சொன்னதாகச் சொல்லியே கேள். இருவருக்குமே நல்லது.”

அவன் ஓசையே இல்லாமல் இருந்தான். உழிச்சில் செய்யும்போது ஒரு குளிர்ந்த சடலம்தான் என் கையில் இருந்தது என்று தோன்றியது.

மாத்தன்னை மறுநாள் கண்டதும் அதை கேட்டேன். ‘சொல்லிவிட்டாயா?”

அவன் உடனே விழிகள் அணைந்து உடல் தளர இல்லாதவன் போல் ஆனான்.

“என்ன ஆயிற்று? சொன்னாயா?”

இல்லை என்று தலையாட்டினான்.

“சொல். பயப்படாதே.”

‘சரி’ என்று தலையாட்டினான்.

மறுநாள் கேட்டபோதும் அவன் சொல்லியிருக்கவில்லை. அதற்கு மறுநாளும். “நீ பயப்படுகிறாய். அதற்குத் தேவையே இல்லை. அவள் தவறாக நினைக்க மாட்டாள். நான் உறுதி அளிக்கிறேன். தைரியமாக கேள்.”

அவன் அப்படியே உறைந்து போய் நின்றான். அவன் விழிகள் தாழ்ந்திருந்தன.

அதன்பின் அவன் என்னை தவிர்ப்பதுபோல் தோன்றியது. உழிச்சிலின்போது நான் சொன்னேன். “உனக்காக நானே கேட்கட்டுமா?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை

“உனக்கும் அவளுக்கு ஒரு நல்ல வழி அது. வைத்தியனாக நான் அதை இருவருக்குமே சிபாரிசு செய்வேன். நான் அவளிடம் பேசட்டுமா?”

அவன் ஒன்றுமே சொல்லவில்லை.

“சொல்”

அவனிடம் அசைவே இல்லை.

“சொல்லட்டுமா?”

அவன் குளிர்ந்து போயிருந்தான்.

“நான் நாளை அவளிடம் சொல்வேன். உன் அனுமதியுடன்.”

அவன் பெருமூச்சுவிட்டான்.

அதன்பின் நான் என்னென்னவோ பேசினேன். அவன் மறுமொழியே சொல்லவில்லை. அமைதியாக எழுந்துசென்றான்.

அவளிடம் சொல்லிவிடுவதென முடிவுசெய்தேன். அவள் பாதங்களுக்கு உழிச்சில் செய்யும்போது சொல்லலாம் என நினைத்தேன். அப்போது நினைவுக்கு வந்தது, அவள் ஒருமுறைகூட நாத்தவறிக்கூட மாத்தன் பற்றி என்னிடம் சொன்னதில்லை. பேச்சை தொடங்கவே கடினமாக இருந்தது. அந்தத் தயக்கம் எனக்கே வியப்பூட்டியது.

அவர்கள் இருவரும் இருக்கும்போது இயல்பாக அருகே சென்று பேச்சைத் தொடங்கி சாதாரணமாக அதைக் கேட்பதே நல்லது என்று தோன்றியது. அதற்கான தருணங்களை தேடிக்கொண்டிருந்தேன். காலையில் என் அறையை திறந்துவிட்டு மாடிக்கு தைலங்களை எடுக்கச்சென்றேன். மரப்படிகளில் ஏறி வராந்தா வழியாக நடந்தபோது கீழே ஆற்றங்கரை மணல்மேட்டில் மாத்தனும் எல்லாவும் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

எல்லா ஒரு பெரிய பழுப்புநிற சால்வையை போர்த்தி கால்மடித்து அமர்ந்திருந்தாள். மாத்தன் அவள் மடியில் மல்லாந்து படுத்திருந்தான். அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். கைகால்கள் தளர்ந்து தொங்கின. அவள் முகத்தை சற்றே தூக்கி வானை நோக்கிக்கொண்டிருந்தாள். காலைச் சூரியன் அப்பால் எழுந்துகொண்டிருந்தது. அதில் அவள் முகம் ஒளிகொண்டிருந்தது.

நான் எண்ணெய்ப்புட்டிகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தேன். அதன்பின் நான் அவர்களைப்பற்றி அவர்களிடமோ பிறரிடமோ எதுவும் பேசவில்லை.

3 comments for “சர்வ ஃபூதேஷு

  1. PrakashG
    March 5, 2020 at 1:17 am

    வார்த்தைகளில்லை.. அருமை

  2. March 25, 2020 at 2:38 pm

    என் வீட்டு வாசல் மரத்தில் காம்பை விட்டு கழன்ற ஓர் காய்ந்த இலை சிலந்தி வலை இழையுடன் இணைந்து ஆடிய மெல்லிய அசைவாய் கதையின் நடை ….சர்வஃபூதேஷூ மெல்ல நழுவி இதயத்துள் விழுந்தது…அருமை

  3. April 7, 2020 at 11:34 pm

    அருமையான எழுத்து நடை. ஒரு திரைப்படம் பார்த்தது போல இருந்தது. கதையில் முடிவு மிக கவித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply to நலவேந்தன் அருச்சுணன் வேலு Cancel reply