விலகிச் செல்லும் பாதை

crepuscular-old-man-1918.jpg!Largeகோயிலுக்கு வந்த கந்தசாமி பெரிய தகரக்கூண்டால் மூடப்பட்டிருக்கும் தேர் அருகில் நின்றார்.  மதிய உணவு உண்ண மனசில்லாமல் வந்துவிட்டார். வந்த பின் கோயிலுக்குள் செல்ல மனம் வரவில்லை. மூன்றுமுறை வந்துவேண்டியும் ஜோதியின் வாயசைவில் ‘சரி’ என்று ஒரு வார்த்தையை வரவழைக்க முடியவில்லை. கோயிலுக்குள் போனாலும் அவளைத் திருத்தமுடியும் என்று தோன்றவில்லை. பழனிச்சாமி ஐயாவைப் பார்த்தும் ஐந்து மாதத்திற்கு மேலாகிறது. ஐயாவைப் பார்த்தால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. சொல்லமுடியாது தவிக்கும் சில விசயங்களை அவரிடம் பேசவும் முடியும். அங்கு போனால் வந்திருக்கும் இதழ்களில் ஒன்றைச் சொல்லி அதனை வாசிக்கச் சொல்வார். ஒரு பத்தி முடியுமுன்னே அதவிடுங்க, அடுத்த கட்டுரையைப் படியுங்க என்பார். முக்கியமான கட்டுரை என்றால் சில பத்திகளைத் திரும்பப் படிக்கச் சொல்வார். முப்பது பக்கம் என்றாலும் முழுக்க படித்துவிட்டு அது பற்றி தன் கருத்துக்களைச் சொல்வார்; மற்றவர்களிடமும் கேட்டு விவாதிப்பார். ஞாயிற்றுக்கிழமையென்றால் ‘ஒரு நிகழ்ச்சி இருக்கு போவோமோ’ என்பார். மறுதலிக்கத் தோன்றாது. நண்பர்கள்தான் ஐயாவிற்கு ஊன்றுகோல். அங்குச் செல்பவர்களுக்குத் தெரியும்.

பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தபோது ஐயா மூத்த ஆசிரியராக இருந்தார். அவருக்குக் கண்ணில் பார்வைக் கோளாறு வந்திருந்தது. பழனிச்சாமி ஐயாவிற்கு முற்றாக பார்வை போனபின்னும் அவரை எம்.எல்.காரர்கள் அடிக்கடி பார்க்க வருவார்கள். செல்லப்பா என்ற முதியவர் வந்த தினம் அவ்வளவு பரவசப்பட்டார்.

விருப்ப ஓய்வு வேண்டாம் என்று இளம் ஆசிரியர்கள் எல்லாம் மனம் உவந்து வந்து கேட்டார்கள். ஐயாவின் வகுப்புகளைப் பிரித்து எடுத்துக்கொள்வதாகவும் சொன்னார்கள். ஐயா பார்வை இழந்தபின் முடியவே முடியாது என்று போய்விட்டார். நாற்பத்தொன்பது வயது. இப்போது எண்பதைத் தொட்டிருக்கலாம். முப்பது ஆண்டுகள் வேறொரு மனிதராக பிறந்து வாழ்ந்துவிட்டார். உதவியாளரை வைத்து படிக்கவும் செய்கிறார். எழுதுகிறார். முக்கியமான பிரச்சனைகளில் முன்நின்று பேசுகிறார். பிள்ளைகளையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு உயர்த்திவிட்டார். அந்த அம்மாவும் பெரிய உபகாரிதான். யாரால் முடியும்? வருபவர்களுக்கு மனம் கோணாமல் காப்பி தர. பல கூட்டங்களுக்கு அவரைக் கைபிடித்து போனது கூட பாக்கியம்தான்.

மறுபடி பேருந்தில் ஏறினார்.

உண்மையிலேயே எங்காவது தொலைந்து போய்விடலாமா என்றிருந்தது. தெருக்காரர்கள், சொந்த பந்தங்கள், உடன் பணியாற்றியவர்கள் எல்லோர் முன்னும் தலைகுனிவை எற்படுத்திவிடுவாள் என்கிற அச்சம் நிம்மதியைக் கெடுத்தது. ‘படிக்க வச்சீங்கில்ல அதுக்கு நல்ல பேரு வாங்கித்தந்துட்டா. இப்ப எதுக்குப்பா ரெண்டுபேரும் முட்டிட்டு கத்துறீங்க. அது கல்லுமனசுப்பா ஏழேழு ஜென்மமென்னாலும் உங்களால கரைக்கமுடியாது. இப்ப புலம்பி என்னப்பா செய்யப்போறீங்க. பி.எட்.ட அப்புறம் பாக்கலாம். நல்ல இடம்ப்பா, நாங்க கண்ணாற கண்ட மாப்பிள்ளை. அப்படி சுத்தமா வளர்த்திருக்காங்கன்னு எத்தன தடவ சொன்னோம். நீங்க காதுல வாங்குனீங்களா. இப்ப அய்யோ அப்பான்னு சொல்லி என்ன புரோஜனம். திமிர்பிடிச்ச கழுதை. ஒங்கள சாகடிச்சிட்டு அது நிம்மதியா இருக்கும் பாத்துக்காங்க’ மூத்த மகள் கவிதா திட்டிவிட்டு இங்கே விட்டிருந்த தன் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு போய்விட்டாள்.

திரும்பத்திரும்ப ‘ரெண்டு பேரும் செத்துப்போயிருவோம்’ என்று சொல்லும்போது அந்த வார்த்தைக்குக்கூட வலு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. அதைச் சொல்வதற்குப் பதிலாக செய்திருக்கலாம் என்று தோன்றியதை நிறைவேற்றமுடியவில்லை. எப்படியும் தன் சொல் கேட்டு ஜோதி மீண்டுவிடுவாள் என்ற நம்பிக்கை திரியில் தீபம் குதிப்பதுபோல குதித்துக்கொண்டே இருக்கிறது. செட்டியாரோ, நாயக்கரோ என்றாலும் பரவாயில்லை. பறையர் இனப் பையனைக்கட்டுவன் என்ற ஒத்தகாலில் நிற்கிறாள். பி.எட்.படிக்கும்போது பழகி இருக்கிறார்கள். அது இப்படி வந்து நிற்கிறது.

நீ எனக்கு மகள் இல்லை. உனக்கும் எனக்கும் எந்த தொந்தமும் இல்லை. உன் பங்கை கோவிலுக்குத்தான் போடுவேன். ஒத்தபைசா உனக்குக் கிடையாது என்று எழுதிவாங்கிவிடவேண்டும் என்று நினைத்தார். பையன் மாணிக்கம் மங்களூரிலிருந்து விழுந்தடித்து வந்து கத்தினான். முடியைப் பிடித்து ராத்தி முதுகில் இரண்டு மூன்று குத்துக்களையும் விட்டான். மசியவில்லை. வலுக்கும் எதிர்ப்புகளை எல்லாம் உரமாகமாற்றி தன் காதலின் வேரடியில் இட்டுக்கொண்டேதான் இருக்கிறாள். “ஆசை ஆசையா நல்ல பேர் வச்சேன் பாரு ஜோதின்னு. எங்க வாழ்க்கையவே இருட்டாக்கிட்டேயடி” அம்மா தலையில் அடித்தபோது “நீதான் என்ன இருட்டில தள்ளப்பாக்கிற” என்று எகுறுகிறாள்.

பி.எஸ்.சி முடித்தபோது சின்னமாமா குடும்பத்தார் ஜோதியைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று நின்றார்கள். விமல் மின்சாரவாரியத்திற்கு உதவி இயக்குநராக வந்திருந்தான்.  விழுப்புரத்திலிருந்து வந்தால் மாமா மாமா என்றுதான் கிடப்பான். ஒரு வருடம் கழித்துக்கூட மணம் முடித்துக்கொள்ளலாம் என்றார்கள். அதில் அவர்களுக்கு மனத்தாங்கல். ஜோதி நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாள். பி.ஜி. முடித்ததும் பி.எட். படிக்க பிரியப்பட்டாள். வந்ததுவினை. விமலுக்குக் கொடுத்திருந்தால் இன்று இப்படி அசிங்கப்பட வேண்டியிருக்காது. அவர்களின் முகங்களை இனி எப்படி பார்த்து பேசமுடியும். ‘நல்ல லட்சணத்தில் வளத்திருக்கடா’ என்பார் நக்கலாக.

குறுகலான நீண்ட பாதையில் நடந்தார். பாதையின் முகப்பில் இருபுறம் இருக்கும் தடுப்புச்சுவர் முடிந்ததும் எதிரும் புதிருமாக இருக்கும் கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தார். தென்வடலாக போகும் பெரிய தார்ச்சாலையில் முட்ட, காளீஸ்வரி கோயில் தெரிந்தது. கோயிலின் இடப்பக்கம் திரும்பி மறுபடி மேற்கே அகன்ற தெருவில் நடந்தார். ஐந்துமணியைக் கடந்துவிட்டிருந்தது. வீடுகளின் முன் அறைகள் எல்லாம் கடைகளும் பட்டறைகளுமாகிவிட்டன.

கேட் பூட்டியிருக்கவில்லை. வெறுமனே கொக்கியால் மாட்டியிருக்கிறது. மாடியில் யாரோ ஒருவரின் பேச்சு கேட்டது. படியில் மெல்ல ஏறிவந்து வாசல்முன்படி பெரிய இடமாக இருப்பதில் நிற்கவும், “யாரு? கந்தசாமியா” என்றார். “ஆமாங்கையா” எப்படி கண்டுபிடித்தார்? “பாத்து எத்தன நாளாச்சு வாங்க வாங்க” முகமெல்லாம் புன்னகை மலர அழைத்தார். செருப்பு சத்தத்தை வைத்தே சில சமயம் இன்னார் என்று சொல்லிவிடுகிறார். சந்திரக்குமார் ஏறிவந்து வாசல் நுழையும் முன்னே “வாங்க சந்திரன்” என்பார். கேட்டில் நின்று ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளிவிட்டுத்தான் படியேறுவார் சந்திரக்குமார். வாசத்தோடு வரும் மனிதர் என்பார். செருப்பை ஓரத்தில் விட்டு நீட்டிக்கொண்டிருக்கும் ஐயாவின் கையைப் பிடித்தார். ஐயா அதன்மேல் மற்றொரு கையை வைத்து செல்லமாக அமுக்கிப் பார்த்தார். “கந்தசாமி உள்அறையில் இடது பக்கம் சேர் இருக்கு எடுத்து வந்து இப்படிப் போடுங்க” நெற்றியில் விழுந்திருந்த நரைத்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டுக்கொண்டார்.

விலகிப்போய் சேரை எடுத்துவந்து பேசிக்கொண்டிருந்தவருக்கு வலது பக்கம் போட்டார். அவர்களின் இருக்கையின் ஓரம் இரண்டு சில்வர் தம்ளர்கள் இருந்தன. இரண்டு தம்ளர் மேல்விளிப்பிலும் ஈக்கள் நகர்ந்தபடி இருந்தன. ஒரு ஈ தம்ளரின் உள்ளே போனது. அளவான மாடி முற்றம். இடது பக்கம் எக்கச்சக்கமான புத்தகங்கள் அடுக்கிய பெரிய அறை திறந்து இருக்கிறது. அறைகளுக்குச் செல்லும் வராந்தா கிழக்காக இருக்கிறது.

“கந்தசாமி இவர் மோகன். மதுரையில இருந்து வந்திருக்கிறார். கட்சிமார்க்சியர். இவர பாத்திருக்கீங்களா.”

“இல்லிங்கையா”

“மோகன், இவரு நான் வேலை பார்த்த பள்ளியில வேலை பாத்தாரு. ஓய்வு பெற்றிட்டீங்களா கந்தசாமி.”

“ஆமாங்க ஐயா. நாலு மாசம் ஆச்சு”

“அவ்வளவு வயசாச்சா ஒங்களுக்கு.”

“ஆச்சில்லிங்கையா…”

“சொல்லுங்க மோகன்.”

“வர்க்க முரண்பாடுகளைக் கடந்து வர்க்கமற்ற சமூகத்தை கண்டடையறதுதான் மார்க்சோட கனவா இருந்திச்சு.”

“அதத்தான் இன்னும் கொஞ்சம் ஆழமா நானும் எஸ்.என்.னும் சொல்றோம். முதலாளி எங்கிறது ஒரு வர்க்கம். அந்த முதலாளிக்குள்ள இருக்கிற வர்க்கத்தையும் களைந்து அவனுக்கும் விடுதலை தர்றதே மார்க்சியத்தின் மெய்யியல். காந்திகூட இந்தமாதிரி இடங்களுக்கு வந்திருக்காரு. ஆங்கிலேயர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்கிறத உணரல. அவங்கள உணரவைக்கிறதுதான் என்னோட அகிம்சையின் அடிப்படை என்கிறார்.”

“நீங்க சொல்றது தத்துவம். தத்துவம் வேற. யதார்த்தம் வேற. ஆட்சியதிகாரத்தின் வழி ஓரளவுக்குத்தான் தத்துவத்த மக்கள்கிட்ட கொண்டுபோக முடியும். அவங்களுக்கு பல்வேறு நம்பிக்கைகள் இருக்கு. உலகம் ஒரே நாடா இல்லையே. ஒரு நாட்டச்சுத்தி பல நாடுகள். பல கொள்கைகள் இருக்கே. அப்ப ஆட்சியதிகாரம் இல்லன்னா மக்களுக்கு பல நன்மைகள செய்ய முடியாம போயிடும்.”

“ஏன் அப்படி நினைக்கிறீங்க. தன்னிலிருந்து விடுதலை அடைகிறவன்தான் மார்க்சியன். புத்தர், ஏசு, காந்தி, தாகூர் எல்லாம் அப்படித்தான்.”

“ஆனா, அவங்க ஆட்சி செய்ய முடியாது. தோத்துப்போயிருவாங்க. இங்கயும் அப்படித்தான். தேவர் இனம் அதிகமா இருக்கிற இடத்தில் ஒரு தலித்த நிறுத்தி வச்சு ஜெயிக்க முடியாது. அரசியல் கட்சி என்ன பண்ணுது யார் மெஜாரிட்டி இனமா இருக்காங்களோ அந்த இனத்திலேயே ஆள நிப்பாட்டுறாங்க. சாதிதான் முக்கியமே தவிர, நேர்மையான ஆள் முக்கியமில்ல.”

“லெனின் ஆட்சியாளர்தானே. தன்னை இழந்து அனைவரும் வாழ்வதற்கான ஒரு வாழ்க்கையை உருவாக்குறவன்தான் செயிண்ட்டுன்னு லெனின் சொல்றார். அதுமட்டுமில்ல தனக்குள்ள போராடி தனக்குள்ளே உன்னதத்த மீட்டெடுக்கிறவன்தான் மகாத்மா”

“லெனினும் அதிகார வழி ஆட்சி நடத்தியவர்தானே ஐயா. மக்கள ஒரு கட்டுக்கோப்புல கொண்டு வர்றதுக்கு அது தேவையா இருக்கு.”

கந்தசாமி வருவதற்குமுன் பேசிக்கொண்டிருந்ததின் தொடர்ச்சியாகப் பேச்சு தொடர்ந்தது. இங்குகூட வந்திருக்க வேண்டாம். இவர்கள் பேசுவது தன்னைத் துரத்தியடிப்பதாகத்தான் இருக்கிறது. ஐயா மட்டும் இருந்திருந்தால் கொஞ்சம் பாரத்தை இறக்கிவைத்திருக்கலாம். நிதானமாகக் கேட்டு தன் உள்ளத்தை உணர்ந்து சொல்வார். நிம்மதியை உண்டாக்கும் குரல் அவரிடம் இருக்கிறது. இன்று இசை கேடாக வந்துவிட்டதாகவே படுகிறது. உள்ளத்திற்கு சாந்தி தராத இந்தத் தத்துவப் பேச்சினால் என்ன புரோஜனம். அவர்கள் தீவிரமாகப் பேசப்பேச இருக்கவே சிரமமானது.

கடைசி கடைசி என்று எத்தனையோ முறை வெவ்வேறு வழிகளில் சுற்றிவந்து கெஞ்சியும், ஆங்காரத்தால் கத்தியும் மிரட்டியும் பார்த்தாயிற்று. எதுவும் நடக்கவில்லை. என்ன நடந்தாலும் சுவரில் சாய்ந்து சாப்பிடாமல் தலைவாராமல் காலைக்கட்டிக்கொண்டு இருக்கிறாள். ஜோதியோடு மோதி திரும்பத் திரும்பத் தோற்றுக்கொண்டிருப்பது அவமானமாக இருக்கிறது. எவ்வளவு செல்லமாக வளர்த்தும் சின்னபாசம்கூட அல்லை ஓரத்தில் துடிக்கவில்லையே என்பது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. எதை எடுத்து வைத்துப் பேசினாலும் தலையைக் குனிந்துகொண்டே ஒரே விசயத்தைத்தான் பேசுகிறாள். எந்த மரியாதையும் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. வீட்டில் இருக்க இருக்க இது பூதாகரமாகத் தாக்குகிறது.

இரண்டு மூன்று நாட்கள் வீட்டிற்கே போகக்கூடாது. தேடட்டும், அலைமோதட்டும். போகும் பாதையில் பஸ்காரனோ, லாரிக்காரனோ அடித்து நசுக்கிப் போட்டுப் போகும்படி நேர்ந்தாலும் நல்லதுதான். அப்போதேனும் மகள் இறங்கிவரக்கூடும். தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கட்டும் என்று கைபேசியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்த வீம்பு ஆறுதலாக இருந்தது. எங்கு இருக்கிறான் என்பது தெரியக்கூடாது. இதற்குள் எத்தனைபேர் அழைத்திருப்பார்கள். என்ன பதில் சொல்லி இருப்பார்கள். அவர்களுக்குப் பதட்டத்தைக் கொடுத்தால்தான் அடங்குவார்கள். எண்ணங்கள் தறிகெட்டு ஓடினாலும் மகள் பிடிக்கும் முரண்டுதான் இங்கு வந்தாலும் விஸ்வரூபம் எடுக்கிறது.

பேசிக்கொண்டிருந்தவர் விடைபெற்று கிளம்பியபோது ஒருவழியாக அப்பாடா என்றிருந்தது. காலடியில் வைத்திருந்த தோள்பையை எடுத்துக்கொண்டு படி இறங்கிச் சென்றார். “கீழ ஜன்னல் கிராதி நெத்தியில தட்டிடும்” “சரிங்க பழனிச்சாமி” ஐயாவை பெயர்சொல்லி அவர் பேசியது வித்தியாசமாக இருந்தது. ஐயாவைவிட வயது குறைந்தவர். நல்ல உயரமாக இருந்தார்.

“கந்தசாமி”

“ஐயா”

“நாலஞ்சு மாசமா ஆளவே காணோம். இப்பவாவது பாக்கணுமன்னு தோனிச்சே.”

“வீட்டில கொஞ்சம் வேலைங்கையா”

“என்ன நீங்க இடையில ஏதாவது பேசுவீங்கன்னு பாத்தேன். வாயவே தெறக்கல. இருக்கீங்களா, எந்திருச்சுப் போயிட்டீங்களாங்கிற மாதிரி இருந்துச்சு.”

“கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் ஐயா.”

“சுரத்தே இல்லையே. ஆனா இதையெல்லாம் கேக்குறதுக்கு ஒரு மனநிலை வேணுமில்லையா. ம்ம்… மணி என்ன ஆச்சு”

“ஆறரையாகப் போகுதுங்கய்யா”

“சுவிட்சு எனக்குப் பின் சுவர்ல இருக்கு. லைட்டப் போடுங்க” கந்தசாமி எழுந்து போட்டார். வெளிச்சமும் இருந்தது. அந்தச் சிறிய முற்றத்தில் குண்டு பல்பினுள் மஞ்சள் ஒளி பிரகாசித்தது.

“ஐயா அம்மா எங்கைய்யா”

“அம்மா நீங்க வர்றதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் போனாங்க. ஒரு ரிசப்சன். உங்களுக்கு அவசரமான வேலை ஏதாவது இருக்கா?”

“அப்படியொன்னும் இல்லிங்கைய்யா.”

“ரிசப்சனுக்கு என்ன கூட்டிட்டுப் போறீங்களா”

“ஆகட்டும்மய்யா”

“ரொம்ப கம்பல் பண்ணினான் மதன். போகலாமா, வேணாமான்னு இருந்திச்சு. அதனாலதான் அம்மாவ போகச்சொன்னேன். அம்மாகூட நான் போனா என்னைய பாத்துக்கிட்டு அவ நாளுபேரோட நின்னு பேசமுடியாது. அதான் போகல. நான் போனா சந்தோசப்படுவான். அம்மாவுக்கு கொஞ்சம் தூரத்து உறவு. போனா அம்மாவும் சந்தோசப்படும். ஆனா போகாம இருக்குறதும் ஒரு வகையில நல்லதுதான். நீங்க வந்திருக்கலையன்னா இந்த யோசனை கூட வந்திருக்காது.”

“போகலாம் ஐயா.”

“சரி அது கிடக்கட்டும். பிள்ளைகள் என்ன பண்றாங்க”
கவிதா, மாணிக்கம் பற்றிச் சொன்னார். பேரனும் பேத்தியும் பற்றிச் சொன்னார்.

“ஓரளவு நல்ல நிலைக்கி கொண்டு போயி வச்சிட்டீங்க”

“ஆமாங்கைய்யா.”

“ரெண்டுபேர்தான”

“இல்லிங்கைய்யா கடைசி பொண்ணு ஒன்னு இருக்கில்லையா. சொல் பேச்சு கேக்கமாட்டெங்கிது ஐயா.”

“என்ன காதலா.”

“அது என்ன காதலுங்கையா. எங்கள சந்திசிரிக்கவைக்கிற காதலு. நிம்மதி போச்சுங்கய்யா.”
தன் இருகை விரல்களைக் கோர்த்திருந்த பழனிச்சாமி ஐயா வலக்கை பெருவிரலை மட்டும் சுழற்றிக்கொண்டு ஏதோ ஒன்றில் ஆழ்ந்திருந்தார்.

“பையன் தலித்தா”

“ஆமாங்கையா”

“ம்ம்ம்ம். சரி பேசுவோம்.”

பட்டென்று இருட்டு கவிழ்ந்தது. மின்சாரம் போய்விட்டதைச் சொல்லலாமா வேண்டாமா என்று பேசாமல் இருந்தார். மாடி முற்றத்திலிருந்து தெரிந்த வீடுகள் அனைத்தும் இருளில் மூழ்கின.

“கந்தசாமி கரண்ட் போயிடுச்சா.”
திக்கென்றது. எப்படி உணர்ந்தார். “ஆமாங்கையா.”

“இந்த வருடம் பூராம் கரண்ட் எப்பப் போகுது எப்ப வருதுன்னு சொல்ல முடியல கந்தசாமி. சின்னச்சின்ன தொழில் நடத்துனவங்கள்ல பல பேரு மூடிட்டாங்க. எப்ப விடுவானோ?”

தலைக்குமேல் எரிந்த குண்டு பல்பின் வெப்பத்தை வைத்து தெரிந்து கொண்டாரா, சட்டென தெருக்கடைகள், வீட்டில் ஓடிய தொலைக்காட்சிகளின் சலசலப்பு அடங்கியதை வைத்து அறிந்தாரா என்று தெரியவில்லை. அதுபற்றி கேட்க சங்கடமாக இருந்தது.

“கந்தசாமி நமக்குள்ள பல பழைய கருத்துகள் பலமா பதிஞ்சிருக்கு. ரத்தத்தில ஊறியிருக்கு. அதிலிருந்து வெளிவராம வேதனையிலிருந்து மீளமுடியாது. ஒருவகையில நாமெல்லாம் அதுக்கு பலிகடாதான். மனப்புரட்சி இல்லாம சாத்தியமில்ல. அத செய்யுறதுக்கு இங்க ஒரு ஆள்கூட இல்ல. நான் சொல்றது ஒரு செயிண்ட் மாதிரி ஒரு ஆளு இல்ல எங்கிறதுதான். இந்த இங்கிலிஸ்காரன் கொஞ்சம் செஞ்சான். வேலையில சமத்துவமுன்னு, அதுக்குமேல அவன் போகல. கந்தசாமி குளத்துப்பாளையம் ராஜலட்சுமி திருமணமண்டபம் போயிருக்கீங்களா.”

“மாமா வீடு அதையெல்லாம் தாண்டித்தான் ஐயா. அடிக்கடி அந்தப்பக்கம் போயிருக்கேன். அந்த மண்டபத்துக்கும் போயிருக்கேன்”

“அப்பசரி. பேசிக்கிட்டே போகலாம். இருங்க பணம் எடுத்துட்டு வர்றேன்.”

கையால் நாற்காலிக்கு அடியில் துழாவினார். “ஐயா என்னங்கய்யா” “தம்ளர்தான்” மறக்காமல் இரண்டு தம்ளர்களையும் தொட்டு எடுத்தார். டீ அருந்திய தம்ளர்கள்.

இருட்டில் எழுந்து வாசலுக்குள் அடைந்திருக்கிற கன்னங்கரிய இருட்டிற்குள் எட்டு வைத்ததும் மறைந்துவிட்டார். நான்கடி அகலத்தில் போகும் வராந்தா, பெரிய அறை, அடுத்து சின்ன அறை, ஹால், சமையல்கட்டு, குளியலறை எல்லாம் இருளில் மறைந்துவிட்டது. எங்காவது முட்டிக்கொள்வாரோ, இடறி விழுந்து விடுவாரோ, எதிலாவது மோதி காயமாக்கிக் கொள்வாரோ என்ற திகைப்பு உண்டானது. அவர் வெளிச்சத்திற்குள் போவதுபோல போய்விட்டார். தான் வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் புகுந்துகொண்டதுபோல ஆகிவிட்டது. ஏதாவது அவர்மேல் விழுந்தால் எப்படிப்போய் விலக்கி எடுப்பது, எப்படி தூக்குவது, எப்படி வெளியே கொண்டு வருவது, வழிதெரியாமல் திக்குமுக்காட வைக்கிறது. அப்படியே விழுந்தால் அவரின் குரலை வைத்து இருட்டிற்குள் தடவித் தடவி போகவேண்டும். வந்தால் இந்த முற்றத்தில் அமர்ந்து பேசுவதோடு சரி. சிறு வராந்தா வழி அறைகளின் கதவுகள் தோராயமாகத் தெரியும்.

தட்டை எடுத்துவைப்பது கேட்டது. தம்ளரில் தண்ணீர் எடுக்கிறார்போல. இருட்டில் தடுமாறி மேசையிலிருந்து குடம் விழுந்தால் கால்பாதம் நசுங்கிவிடும். எப்படி இருட்டிற்குள் விழுந்து கிடப்பவரைத் தூக்குவது. அவர் இருட்டிற்குள் இருக்க இருக்கப் பதட்டம் கூடியது. ஷோகேஷ் கண்ணாடியில் மோதி உடைந்த கண்ணாடி கிழித்து விட்டால்? முகத்திலோ, தோளிலோ, சதை ஆழமாகப் பிளந்து ரத்தம் பீரிட்டு வரும். குபுகுபுவென வரும் ரத்தத்தை எப்படித் துணியால் கட்டி நிறுத்த? ஐயோ சட்டென வெளியே வந்தால் நல்லது. கந்தசாமி அந்த இருட்டுக்குள் கண்களை இடுக்கி இன்னும் கூர்மையாகப் பார்த்தார். ஒரு எழவும் தெரியவில்லை. இருட்டு வீட்டையே இல்லாது ஆக்கிவிட்டது. இல்லாத இடத்தில் ஐயா எங்கு நிற்கிறார். என்ன செய்கிறார். எதுவும் தெரியவில்லை. திரும்பியே வராமல் நின்று விடுவாரா? அப்படியே இருளோடு இருளாகப் போய்விட்டால்? ஒருவித தனிமை வெறுக் என்றது. ஆளில்லாத அடுத்தவர் வீட்டில் காரணமற்று துயரத்தில் அமர்ந்திருப்பதுபோல இருந்தது. ச்சே. இந்த எண்ணத்தை உடனே தொழைக்க வேண்டும்.

எங்கு நிற்கிறார், என்ன செய்கிறார். எதுவும் தெரியவில்லை. திரும்பி வராமல் நின்று விடுவாரா? நேரம் ரொம்ப தூரம் கடந்துவிட்டதுபோலத் தோன்றியது. அழைத்தால் எப்படிப்போய் தொடுவது. சுவரைத் தொட்டுக்கொண்டே போகலாம். இருட்டிற்குள் மிதக்கிறது இந்த மாடி. ஒரு நாற்காலி போட்டு அமரும் அளவில் அந்தப்பக்கம் சிறு முற்றம் உண்டு. தெருவிலிருந்து பார்த்தால் தெரியும். அதன் கைப்பிடிச்சுவர் தனிவானது. தடுமாறி கவிழ்ந்தால் சந்தின் அடிவார இருட்டிற்குள் விழுந்து நொறுங்கிப்போய்விட நேரும்.

தரைதோய அடர்ந்த இருட்டிலிருந்து வெளியே வந்தார். ஆசுவாசம் ஏற்பட்டது.

“கந்தசாமி வெளிச்சம் இருக்கா”

“லேசா தெரியுதுங்கய்யா..”

“இதுல அறுநூத்தி அம்பது இருக்குமன்னு நினைக்கிறேன். சரியான்னு பாருங்க.”

கந்தசாமி வாங்கிப் பிரித்தார் 500 இல் ஒரு தாள், 100இல் ஒருதாள், இரண்டு இருபது ரூபாய், ஒரு பத்து ரூபாய் நோட்டுக்கள் என்பதை அனுமானிக்க முடிந்தது.

“ஆமாங்கையா.” “சரி”
வாங்கி மேல்சட்டைப்பையில் வைத்தார்.

“கந்தசாமி இடதுபக்கம் புத்தக அறை இருக்கில்ல. அதுல மேசை மேல ஐந்து அடுக்கா புத்தகங்கள் இருக்கு. மூணாவது அடுக்கில ரெண்டாவது புத்தகத்த எடுங்க”

“சரிங்க ஐயா”

பழனிச்சாமி ஐயா சொன்னதும் அறைவாசலின் வலதுபக்கம் பெரிய மேசை இருந்தது நினைவிற்கு வந்தது. அடியிலும் வழியிலும் புத்தகங்கள் இருந்தன. மெல்ல சுவரைத் தொட்டு வாசலைத் தாண்டி நின்று திரண்ட இருட்டில் துழாவினார். இருட்டு வெளிக்குள் விரல்நுனி எதுவும் தொடவில்லை. இருண்டுவிட்ட உலகில் நிற்பதுபோல இருந்தது. எதையும் தட்டி விடுவோமோ என்று கவனமாக கையை நீட்டி தடவினார். பிளாஸ்டிக் நாற்காலி தட்டுப்பட்டது. “கந்தசாமி இன்னும் ரெண்டு எட்டு வைங்க. நீங்க சேர் பக்கம் நிக்கிறீங்க.” அவருக்குத் தெரிகிறது. அனுமானாம் கண்ணாகிறது. தனக்கு உண்மையில் தெரியவில்லை. அடுக்கு அடுக்கி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் அறையில் மறைந்துகொண்டன.

மேசை தட்டுப்பட்டது. சந்தோசமாக இருந்தது. ஒரு எட்டுவைத்தார். காலடியில் புத்தகங்கள் டமடமவென சரிந்தன. “கந்தசாமி, அப்படியே இருங்க. நீங்க ரொம்ப எட்ட நின்னு தடவுறீங்க. இடதுகால் பட்டிருச்சு. அரையடி முன்னால நகர்ந்து நின்னு தொடுங்க.” காலை இரண்டு இரண்டு இஞ்சாகத் தேய்த்துவந்து வயிற்றில் மேசை விளிம்புபட நின்றார். கையை நீட்டினார். ஒரு புத்தகமும் இல்லை. இடமாகவும் வலமாகவும் கையை நீட்டி மெல்ல நகர்த்தினார். புத்தகங்கள் இல்லை. லேசாக கால்கள் நடுங்கத் தொடங்கின.

“கந்தசாமி சும்மாவே நின்னிட்டு இருக்கீங்களா”

“ஐயா புத்தக அடுக்கவே காணோம் ஐயா.” அவர் சிரிப்பது கூச்சத்தை உண்டாக்கியது.

“கந்தசாமி கைய ரொம்ப மேல தூக்கிட்டீங்க. மொதல்ல மேசைமேல மூணுவிரல வச்சு நகர்த்தித் தொடுங்க… தொட்டுட்டீங்களா” “ஆமாங்கையா இருக்கு…” “சரி எடுங்க.” அடுக்கின் இரண்டாவது புத்தகத்தை எடுத்து ‘தப்பிச்சேன்டா சாமி’ என்று வாசலைத் தாண்டி வந்தார். இந்தப் புத்தகத்தின் மீது சிறிய புத்தகம்தான் இருந்தது.

“இந்தாங்கையா” வாங்கி அட்டைமேல் தடவினார். “கந்தசாமி இது இல்ல. நீங்க நாலாவது அடுக்கில ரெண்டாவது புத்தகத்த எடுத்திட்டு வந்திட்டீங்க. இது வெய்டிங் ஃபார் இந்தியான்னு ஆங்கில புத்தகம். யேன் மிர்தால் எழுதுனது. பையனுக்கு ‘கிழக்கும் மேற்கும்’ ன்னு நாகராஜன் எழுதுனத தரலாமன்னு எடுத்து வச்சேன். சரி இப்படி வாங்க.” என்றார். சங்கடமாக இருந்தது.

பழனிச்சாமி ஐயா மறுபடி சிறிய இருட்டு அறைக்குள் நுழைவது தெரிந்தது. கால் இடறி சரிந்த புத்தகங்களைத் தட்டி எடுத்து அடுக்குவது கேட்டது. நாய்க்குந்தலாக அமர்ந்து செய்கிறாரா? குனிந்தவாக்கில் செய்கிறாரா என்று தெரியவில்லை. அவரது விரல் நுனிகள் எல்லாம் கண்களாக மாறிவிட்டன.

வாசலைத்தாண்டி புத்தகத்தைத் தட்டினார். அவர் சிரிப்பதை யூகிக்கவும் முடிகிறது. “இப்படி வாங்க” கையைப் பிடித்து அழைத்தார். இறங்கும் படி பக்கம்தான் அழைக்கிறார். “முதல் படியில விசுக்கன்னு கால வச்சிராதீங்க. அது கால் அடிதான். தடுமாறினா பிடிக்கிறதுக்கு எதுவுமில்லை. விழுந்தா மூக்க வெட்டிறும். உருண்டுபோய் விழவேண்டியதுதான். அடுத்தடுத்த படிதான் முக்காலடி.” உண்மையில் கண் தெரியாத தன்னை கண்தெரிந்த பழனிச்சாமி ஐயா நிதானமாக அழைத்துக்கொண்டு போவதாக மாறியது.

கேட்டை பூட்டிவிட்டு இடது ஓரம் கையைப்பிடித்தபடி நடந்தார். சில வீடுகளில் மெழுகுவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. முக்குவந்ததும் இடப்பக்கம் திரும்பினார். இருண்ட ஒரு கடைமுன் ஒருவர் பீடி குடித்துக்கொண்டிருக்கிறார். “அந்தப்பக்கம் மாசாணியம்மன் பட்டறைக்காரன் கம்பிகள போட்டு வச்சிருக்கான். எத்தன தடவ சொன்னாலும் திரும்ப ரோட்டோரத்திலதான் இறக்கிப் போட்டிருக்கான். தட்டுனா கால் எலும்பு சதை பேந்திடும். இரும்பு பிசுறுக நிறைய கெடக்கும். வீட்டுக்கு வந்தா செருப்புல குத்துனத எடுக்கணும். கந்தசாமி முன்ன போஸ்ட் மரம் தெரியுதா?” “ரொம்ப மங்கலா தெரியுதுங்கய்யா” “அத ஒட்டி மளிகைக்கடை இருக்கில்ல” “ஆமாங்கய்யா. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நல்லாவே தெரியுது.” “கீழ பாருங்க பெரிய பள்ளம் தெரியுதா” “ஆமாங்கய்யா” “பாத்து காலவையுங்க.” இந்த நிமிடத்திலிருந்து இரவு பகல் என்றில்லாமல் உலகம் இருட்டாய் போய்விட்டால் இந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே விநோதமாக இருந்தது. அதிலும் இந்த நாய், நரி, ஆடு, மாடு, காகம், கிளி, யானை, மான், கரடி, மயில், புலி எப்படி உலவும். தலையை ஆட்டிக் கொண்டார்.

venu

பழனிச்சாமி ஐயா கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகிடக்கும் இடங்களை வார்த்தைகளால் வெளிச்சமாக்கிக்கொண்டு அழைத்துப் போனார். வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி கிளைகளை நீட்டி குட்டையான மரம் அடர்ந்திருக்கிறது. கொஞ்சம் சாக்கடை வாசம் வந்தது. “கந்தசாமி காம்பௌண்ட் சுவர் தாண்டி நிக்கிதே கொய்யாமரம். சரியான வம்சம். காய் சல்லை சல்லையா பிடிக்கும். காய்பிடிச்சிருக்கிற சமயத்தில அப்படி போன கிளை காயோட தொங்கி என் தலையிலபடும். நாட்டுமரம். நல்ல ருசியா இருக்கும். பருவெட்டா பிடுங்கணும். இப்ப காப்பு முடிஞ்சிட்டது. கொப்பு எல்லாம் மூனடி நாலடி மேல போயிட்டது” சாக்கடை வாய்க்காலை பாவுக்கல்லால் மூடிய இடம் வரவும் “கிழக்கால ரோடு போகுதா” என்றார். “ஆமாங்கய்யா” “அதுல போகலாம்.” ஐயா, மாயமாகி இருக்கும் உலகத்தை தன் கற்பனையால் உயிர்பெற வைக்கிறார்.

இருவரும் சிறிய மேட்டில் ஏறி பாதையில் நடந்தார்கள். வீடுகள் கட்டாத மனை இடங்கள் இருபுறமும் அங்கங்கே கிடந்தன. எதிரே வந்தவர் மோதுவதுபோல் வந்து நின்று பழனிச்சாமி ஐயாவின் கையைப் பிடித்தார். அவர் பிடித்த கையின் மேல் வைத்து “அட” என்று தட்டி “பிரிட்டோ எப்படி இருக்கீங்க” என்றார். “இருக்கோம்” சற்று பேசாமல் நின்றார்கள். டூவீலர் வண்டி வெளிச்சத்தை வீசிக்கொண்டு கடந்து சென்றது.

“இப்படி ஓரமா வாங்க பழனிச்சாமி சார்” காலி இடத்தின் முன்பகுதியில் முள்ளைவெட்டி போட்டிருப்பதுபோல தெரிந்தது. திரும்பவும் பேசாமல் இருந்தவர் பேசினார்.

“நீங்க எடுத்துச் சொல்லியிருந்தா ஒழுங்குக்கு வந்திருக்கும் சார். எங்களுக்கெல்லாம் ரொம்ப மனவருத்தம். ரிசப்சனுக்குப் போறீங்களா.”

“பிரிட்டோ, நான் போகாம இருந்தா நின்னிருமா. என் உதவியாளர் இருந்தாங்கல்ல மீனாட்சி, அவங்க பிள்ளைக்கு மொட்டை எடுக்க திருச்செந்தூர் போயிருக்காங்க. ஒரு வாரம் ஆகும் வர. அதனால இங்கயும் வரமுடியாதுப்பான்னுதான் சொல்லியிருந்தேன். அம்மா போயிருக்காங்க. இவரு கந்தசாமி, பள்ளி ஆசிரியர். வந்திருந்தாரு. எனக்கும் இப்படியே நடந்துபோய் வந்தா நல்லா இருக்குமன்னு நெனச்சேன். நானும் இந்த உலகத்தப் பாக்க இவங்க மாதிரி ஆட்கள் வந்தா தானே முடியுது.”

“அது சரிதான்.”

“விடுங்க பிரிட்டோ. நடக்கிறது நடந்துதானே தீரும்.”

“அதில்லிங்க பழனிச்சாமி சார். ஒரு கன்னியாஸ்திரி இப்படி பண்ணலாமா? இறை அழைப்பு யாருக்குக் கிடைக்கும். எல்லோருக்குமா கிடச்சது. இந்த ஜூலிக்குத்தானே ஊழியம் செய்யக் கிடச்சது. ஆனா அத உதாசீனப்படுத்திட்டா. தேவனுக்கே இது பொறுக்காது. ஏழை பிள்ளையன்னுதான் சபை வாய்ப்பு கொடுத்துச்சு. படிக்க வச்சிச்சு. இங்கிலீஸ் கத்துக்கிட தனி கோச்சிங் அனுப்பிச்சு. எங்களை எல்லாம் தலைகுனிய வச்சிட்டா ஜூலி. இவ கன்னியாஸ்திரியா இருந்திருந்தா கர்த்தர் அவளோட குடும்பத்த பூராம் ஆசிர்வதிச்சிருப்பார். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா எல்லாத்தையும் மேடேத்தியிருப்பாரில்லையா. படிச்சு வேலைக்குப் போறவரைக்கும் அப்படி நடந்தா. கீழ்ப்படிதலின்னா என்னங்கிறதுக்கு ஃபாதர் ஜுலியத்தான் காட்டுவாரு. எல்லாத்தையும் நாசமாக்கிட்டா. குடும்பமே அவமானத்தால வெளிவராம கிடக்குது. சபையில அவங்க தலைநிமிர்ந்து நிக்க முடியுமா? கன்னியாஸ்திரி ஜுலியா இப்படின்னு கேக்குறப்போ அவங்களால எப்படி தாங்கிக்க முடியும். ஏழ்மைய போக்குவான்னு நெனச்சவங்க வாயில மண் அள்ளிப் போட்டிட்டா சார். ஐ.சி.எம்.சபையே ஆடிப்போச்சு. ‘கன்னியாஸ்திரியா நான் தொடர்ந்து ஊழியம் செய்ய விரும்பவில்லை. மணவாழ்க்கையை தேர்கிறேன்னு’ லெட்டர எழுதி நீட்டிட்டு கிளம்பிட்டா. ஃபாதர் எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா? சபை கிளார்க் கேட்கிறாரு. ஜூலி தினம் தினம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லல, காதலனுக்குத்தான் ஸ்தோத்திரம் சொல்லிட்டு வந்திருக்கான்னு. இதையெல்லாம் கேக்கும்படி வச்சிட்டா. சபை அவளோட குடும்பத்தையே ஆசிர்வதிக்க தயாரா இருந்திச்சு. எல்லாத்தையும் கெடுத்துப்போட்டா. அப்படியே இவளுக்கு மணவாழ்க்கைதான் தேவையன்ன ஒரு கிறித்துவ பையன தேர்ந்தெடுத்திருக்கலாம் சார். எங்க சபையவே அவமானப்படுத்திட்டா சார். இவளுக்கு ஒருபோதும் தேவன் பரலோக ராஜ்ஜியத்தில இடம் தரமாட்டார் சார்.”

“உங்க வருத்தத்த புரிஞ்சுக்கிறேன் பிரிட்டோ. ஜூலி இப்பயும் தன் குடும்பத்த காப்பாத்துவேன்னுதான் சொல்றா. அப்படி அவ கைவிடமாட்டா. ஏன்னா அவ கன்னியாஸ்திரி பாதையிலிருந்து வந்தவ, காருண்யமன்னா என்னான்னு அவளுக்குத் தெரியும்.”

“இல்ல பழனிச்சாமி சார். அவ ரொம்ப பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டா. அவளுக்கு ஆம்பளசுகம் கேக்குது. இத காதல் கத்திரிக்காயின்னு சொல்றா. இவ எப்படி கர்த்தருக்கு ஊழியம் செய்வா. இந்த செல்லுவந்து எல்லா ஒழுங்கையும் சீரழிச்சிட்டது.”

“சரி பிரிட்டோ. நம்ம கையில எதுவும் இல்ல. வருத்தப்படாதீங்க”

“ஓ.கே. ஆல்ரைட்” விடைபெற்றனர்.

கொஞ்சம் கடந்து வந்ததும் ஐயா சொல்லத் தொடங்கினார். “பிரிட்டோ ஜூலிக்கு ஒன்றுவிட்ட பெரியப்பா. சபை பொறுப்பு குழுவில இருக்காரு. தாசில்தார் ஆபீசில கிளர்க்கா இருந்தாரு. எல்லோருக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா தத்துவத்தாலும் விளக்கிவிட முடியாத இடங்களும் இருக்கத்தான் செய்யுது. ஒருநாள் நானும் ஜூலிகிட்ட பேசினேன். அவ ஒரு குண்ட தூக்கிப்போடுறா. அங்கிள் ‘அப்படியில்லாம’ நான் நேர்மையா ஒரு கல்யாணம் பண்ணி வாழ்றது தேவனுக்கு ரொம்பப் பிடித்தமானதுன்னு நம்புறேன். எத்தன கன்னியாஸ்திரிய ஏமாத்தி வலைக்குள்ள வீழ்த்தியிருக்காங்க. நானா, அங்கிள் கன்னியாஸ்திரியா போகணும்ன்னு அடம்பிடிச்சேன். வீட்டு வறுமை அனுப்புனாங்க. சபை எனக்கு கல்விய குடுத்திருக்கு. வேலைய வாங்கி தந்திருக்கு. அதுக்கெல்லாம் நான் நன்றியோடதான் இருப்பேன் அங்கிள். அப்பிடீன்னா. இந்த காதல் பெரும் புதிராதான் இருக்கு. சிலசமயம் நம்ம விருப்பங்கள தவுடுபொடியாக்கிறுது. கட்டுதிட்டத்தையெல்லாம் நொறுக்கிப்போடுது. காதலுக்கு காதல் மட்டும்தான் தெரியுது. பல விசயங்கள் அற்பமாயிடுது. நம்மால அத ஏத்துக்க முடியல. நம்ம வேறயா இருக்கோம். காதல் வேறொன்னா இருக்கு.”

அங்கங்கு பட்பட்டென்று வீடுகளில் தெருக்களில் கடைகளில் விளக்குகள் எரிந்தன.

“ஐயா கரண்ட் வந்திருச்சுங்கையா”

“பரவாயில்ல. இல்லன்ன மண்டபத்திலே ஜெனரேட்டர் சத்தம் காதைப் பிடுங்கி எடுத்திடும். கந்தசாமி வீட்ல சுவிட்சு அணைக்கலையல்ல”

“அணைக்கலைய்யா”

“அணைக்கலைதான்”

“கிளார்க்கோட கடைசி பையனோடுதான் மதன் படிச்சான். இப்ப நாங்க இருக்கிற தெருவிலதான் பத்து வருசம் இருந்தார். ஜூலி லீவில் வந்தா, கிளார்க்கோட மூத்தமகள் பிள்ளைய தூக்கிட்டுத்திரிவா. மதனோட சொந்தக்காரங்கன்னு எங்களோட பிரியமா இருந்தாங்க. சர்வேயர் காலனி பக்கம் இவரு வீட்ட கட்டி வந்திட்டார். இந்தா இப்பிடி ஒரு பாதை போகுதா… தனியா… அதுதான் அதுலபோனா அவர் வீட்டுக்குப் போயிடலாம். வடக்குப் பக்கம் போகும் பாதையைக் காட்டினார்.

“மதன் நல்ல பையன்தான். மன்மதனா இருப்பான்னு நெனைக்கல. நேவியில இருக்கான்” மெல்லிதாக சிரித்தபடி சொன்னார். பெரிய புயலாக மாறி இறுதியில் ஜூலி கரைகடந்து வந்ததை வரிசையாகச் சொன்னார்.

நிறுத்தத்தில் 21ஏ பேருந்து வரவும் ஏறினார்கள்.

ஐயாவிற்கு பின் இருக்கையில் இருந்த பையன் எழுந்து இடம்கொடுத்தான். கந்தசாமி வலப்பக்கம் கம்பியில் சாய்ந்து நின்றார். ஒட்டிய இருக்கையில் அமர்ந்திருந்தவர் தொட்டு, “எங்க போறீங்க” என்று கேட்டார். “குளத்துப் பாளையம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்துக்கு” “நான் அடுத்த ஸ்டாப்பில இறங்குறேன். உக்காருங்க” எழுந்து இடம்விட்டார். எப்போதாவது இப்படி நின்ற இடத்தில் வந்தவுடன் இடம் கிடைத்துவிடுகிறது. தள்ளி நின்றிருப்பவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

ஐயா உதட்டில் சுட்டுவிரலால் தட்டி எதையோ நினைக்கிறார். எப்படி கண்பார்வை போனபின் இவ்வளவு படித்தார். இவ்வளவு பெரிய ஆளுமையாளராக உயர்ந்தார். இவருக்கு உண்டாகி இருக்கும் பெயர் பெருமைக்குரியதுதான். தனக்கும் கண்பார்வை போயிருந்தால் என்னவாகியிருக்கும். இவரளவு அதை சாதகமாகப் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சொல்லத் தெரியவில்லை. விளையாட்டுத்தனமாக ஒரு எண்ணம் தோன்றுகிறது. மண்டபம் போகும் வரையில் கண்பார்வைபோய் இறங்கும் நேரத்தில் வந்துவிட்டால் எப்படி இருக்கும். கண்பார்வை திரும்ப வராமலே போய்விட்டால்… ஐயோ வேண்டாம். மண்டபம் வரை கண்ணை மட்டும் இறுக மூடிக்கொண்டு போய்ப்பார்க்க ஆர்வம் எழுகிறது.

கந்தசாமி கண்களை மூடினார். அருகில் அமர்ந்திருந்தவரின் தோள் மட்டும் தொடுகிறது. வலது கை பக்கம் தொடாமல் உடம்பை விலக்கினார். வண்டியில் அனைவரும் இல்லாமல் போய்விட்டனர். வண்டியும் மறைந்துவிட்டது. ஒன்றுக்கு ஒரு அடி அகலத்தில் தன்னை மட்டும் இருண்ட வெளிக்குள் இயந்திரம் இல்லாத இயந்திரம் ஏந்திக்கொண்டு போகிறது. வண்டியின் கூடு இல்லை. முன் இருந்த இருக்கைகள் இல்லை. அமர்ந்திருந்த, நின்றிருந்த மனிதர்கள் இல்லை. ஓட்டுநரும் இல்லை. நடத்துநரும் இல்லை. வண்டி தூக்கியடித்தால் வான் இருட்டில் போய்விட நேரும்போல இருக்கிறது. இல்லாத வண்டியில் இருந்து இருக்கை தாங்கிக்கொண்டு போகிறது.

தார்ச்சாலை இல்லை. கட்டிடங்கள் இல்லை. மின்விளக்குகள் இல்லை. உருவமில்லாமல் குரல்கள் மட்டும் கருப்புவெளிக்குள் மிதக்கின்றன. காற்று லேசாக வந்து மோதுகிறது. காற்று, குரல், கருப்புவெளி, தொடும் பொருள் இவை தவிர எதுவும் இல்லை. அவையும் அகண்ட கருப்புவெளிக்குள்தான் இருக்கின்றன. தன் உடல் தவிர அருகில் அமர்ந்திருந்தவரின் உடல்கூட இல்லை.

‘பால் கம்பெனி இறங்கணும்’ குரல் வருகிறது. வலப்புறம் கூடை பின்னும் மக்கள் கூட்டம் இல்லை. சிறுசிறு வீடுகள் இல்லை. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான கூடைகள், நிறுத்தி வைத்திருக்கும் மூங்கில் கூடுகள், கிடத்தியிருக்கும் தப்பைகள், பூவரசு மரங்கள், குழந்தைகள், யாரும் இல்லை. சீந்திருப்பாய் கிடக்கும் வாழைத்தார் சந்தைத்திடல் இல்லை. இடப்புறம் குளத்திற்குள் இறங்கிச் செல்லும் சின்னத்தெரு, நெருக்கமான சிறுசிறு வீடுகள் சட்டென தெரிந்து மீண்டும் சின்னச்சின்ன ஓட்டுவீடுகளால் மறைந்துவிடும் அந்தக் குளம் இல்லை. சின்னச்சின்ன வீடுகளுக்கு பின் உள்ள குளக்கரையில் வளர்ந்து அடர்ந்திருக்கும் அரசமரம் இல்லாமல் போய்விட்டது.

வண்டி நிற்கிறது. யாரோ இறங்குவதுபோல் கேட்கிறது. பாட்டுபாடிக்கொண்டு யாரோ உருவமில்லாமல் ஏறுகிறார். யாரோ இடத்தோள் ஒட்ட நிற்கிறார். மேல் பாக்கெட்டில் விரல்விட்டு பணத்தை எடுத்தால்கூடத் தெரியாது. கையை பாக்கெட்டில் வைத்தார். எதற்கும் கண்திறந்து ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். பணம் இருந்தால் திறந்தது அற்பத்தனமாகத் தோன்றும். இன்னும் கண்ணை இறுக்க மூடினார். விரலைவிட்டுத் தடவிப் பார்த்தார். பணமும் சிறிய பாக்கெட் நோட்டும் தட்டுப்படுகிறது. நல்லவேளை கண் திறக்காமலே இருந்தது.

உறக்கத்தில் உலகம் மறைந்து விடுவது இல்லாமையின் அமைதி தருணமாக இருக்கிறது. இறப்பு இப்போது கண்முன் ஒன்றுமில்லாது கிடப்பதுபோல அல்ல. நினைப்பும் இல்லாது கிடக்கும் கருப்புவெளியும் இல்லாது போகும். பார்வை இல்லாமல் இருப்பது மறைந்துவிட்ட இருப்புக்குள் மறைந்துபோய் இருப்பது.

தடதடவென வண்டி அதிர்கிறது. வண்டிதான் சுமந்து செல்கிறது. இது எந்த இடம்? யாரேனும் சொன்னால் தெரியும். நிறுத்தம் வந்தால் தெரியும். இருபுறம் வீடுகளா? வீடுகளைக் கடந்து வந்துவிட்டதா? ட்ரைவர் நிறுத்தத்தின் வலப்புறம் குட்டையான சாய்ந்த பூவரசு மரம் இருந்தது. அந்த இடத்தை நெருங்கிவிட்டதா? கடந்துவிட்டதா? அடுத்து விவசாய கல்லூரியின் விரிந்த நிலப்பகுதி எங்கே? களைமேவி சீரில்லாமல் பருத்தி கிடக்கும். நிலமே இல்லாது போய்விட்டது. வலப்புறம் இருந்த குளம் இல்லை. வண்டி மட்டும் தரையில் உருள்கிறது. குழந்தையின் அழுகுரல் எழுகிறது. ‘இல்லடியம்மா’ தாயின் குரலா? பாட்டியின் குரலா? ஐயா இந்த உலகத்தை எப்படி எதிர்கொண்டார். நான்கைந்து இருக்கைக்கு முன் இருந்து ஒருவர் எழுந்துவந்து தொட்டால் அவரின் உருவம், நிறம், உயரம், வயது எதுவுமே தெரியாது. குரலை வைத்தும் காணமுடியாது. பெருங்கூட்டத்தில் வரும் குரலை ஓரளவு ஊகிக்கமுடியும். தொடுகின்ற மனிதனைத் தவிர எதிர்நிற்கும் மனிதர் கூட்டம் இல்லை. இருப்பதை ஐயா எப்படி தனக்குள் வரைந்து கொண்டார். கண்பார்வை போவதற்கு முன் பார்த்த காட்சிகள் ஓரளவு எழுந்து வருமா? அப்படி வந்தாலும் இப்போது இருப்பது அல்லவே அது. முப்பது ஆண்டுகளில் எவ்வளவு காட்சிகள் மங்கி மறைந்திருக்கும். பழைய காட்சிகள் மாறியிருக்கும். மனிதனுக்கு வயதானது போல மரங்களுக்கும் வயதாகியிருக்கும். வீடுகள் பழையதாகியிருக்கும். இருந்த வீடுகள் வீழ்ந்து புதுவீடுகள் உருவாகி இருக்கும். தோட்டமாக இருந்தது புது குடியிருப்பதாக மாறியிருக்கும். இதையெல்லாம் எப்படி விரித்துக்கொள்வார். சிறுவயதில் திருச்சி மலைக்கோட்டை கோயிலைப் பார்க்கப் போகிற வழியில் ஒரு கல்லாங்காடு. சுற்றிலும் கிலுவை வேலி. கொஞ்சம் வயதான மனிதர் உருமால் கட்டியிருக்கிறார். வடக்கயிற்றில் அமர்ந்து இறவை மாடுகளை ஓட்டுகிறார். இதற்குள் பேருந்து கடந்துவிட்டது. மறுபடியும் வேறொரு கல்லாங்காடு. இன்று அந்த காடு எப்படி இருக்கும். இருபுறம் இருந்த வேப்ப மரங்கள் இருக்குமா? கமலை இருக்குமா? அன்று பார்த்தக் காடாகத்தான் இருக்குமா? மாறியிருக்கும். அங்கு மாறியிருக்கும் காட்சிகளை அப்படியே துல்லியமாக யூகித்துவிடமுடியுமா? ஒரு காட்சி உருவாகிறது. அதுதான் அதுவா? மற்றொரு காட்சியை உருவாக்குகிறது. இன்று அங்கு அது இருவேறு காட்சியாக எப்படி இருக்க முடியும்.

கண்கணிலிருந்து காட்சிகள் மறைந்தாலும் காட்சிகள் இருக்கின்றன. மனிதர்கள் இருக்கிறார்கள். பறவைகள், விலங்குகள், காடுகள், வயல்கள், நீர்நிலைகள், ஊர்கள், நகரங்கள் இருக்கின்றன. நிலத்திலும் வெளியிலும் இருப்பவை இருக்கின்றன. காணுவதிலிருந்து இல்லாமல் இருக்கின்றன. உருவ வடிவங்கள் மறைந்து ஒலி வடிவங்கள் தனது உடலற்ற உடலைக் காட்டுகின்றன. நாய் குரைக்கிறது. நாயொன்று இருக்கிறது. ‘நம்பியழகன்பாளையம் இறங்கு’ என்கிறார் கண்டக்டர். குரலால் நகர்ந்து போகிறார். பிரேக் மிதிக்கிற கிரீரீச்ச் ஒலி. எதிர்வரும் வண்டி ஒலி எழுப்புகிறது. வண்டியின் வேகம் சட்டென குறைகிறது. விலகி நகர்கின்றன. சுழலும் காற்றாடி கொண்டுவரும் தடித்தக் காற்றிலிருந்து மரத்தின் ஊடே வரும் மெல்லிய காற்றின் ஓசை வேறாக இருக்கிறது. ஏதுமற்று இருக்கும் இருட்டில் குரல்கள் விதவிதமாக உலவுகின்றன. குரல்கள் உருவாக்கிய உலகம், குரல்களிலிருந்து உயரம், குரல்களிலிருந்து இனிமை, இசை, மணம், நிறம், ஆசை, குரோதம், காமம், கருணை, கனிவு, வெறி, பாசாங்கு… மாயம் கொண்டு உலவுகின்றன. அதுவும் இல்லாது போனால் மரணம். மரணத்தில் என்ன தெரியும்? அனைத்தும் இருட்டில் இல்லாது போகும். கௌரவம், தத்தளிப்பு, விருப்பம், மனைவி, மக்கள், சாதி, மதம் தன்னிலிருந்து சட்டென இல்லாது போகும். அதற்கடுத்து? இல்லாத உலகம். இல்லாத உலகத்தில் இல்லாமல் போகும் முன், இருக்கின்ற உலகில் இந்த மனம் ஏன் இந்த பாடுபடுகிறது? என்றும் இருப்பதாக நம்பிக்கொண்டு இல்லாது போவதுதானே நேரப்போகிறது. தெரிந்தும் விட்டு வெளியேற முடிவதில்லையே. விநோத வாழ்க்கை. வாழ்க்கையின் விநோதம். வாழவாய்த்த சின்னஞ்சிறு நாட்களில் சுமைகளோடுதான் பிறக்க வேண்டியிருக்கிறது. சுமைகளை இறக்கி விடுபவன் ஞானிதான்.

இல்லாது இருக்கும் இந்த உலகத்திலிருந்து பழனிவேல் ஐயா எவ்வளவோ உயர்ந்து நிற்கிறார். நிஜத்தில் இருக்கிறார். கண்முன் இருக்கிறார். பட்டென கண்திறந்து பார்த்தார். ஐயா இருக்கிறார். இருக்கைகளில் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். நடுவண்டியில் ஆட்கள் நிற்கிறார்கள். ஜன்னலுக்கு வெளியே வடிகால் மதகு இருக்கிறது. குட்டைக்குள் முழங்கால் அளவு கோரை வளர்ந்திருக்கிறது. இந்த இருப்பை ஐயா தன் அகவிழியால் காண்கிறாரா? அப்படிக் காணத்தான் முடியுமா? பார்வை இடையில் போனவர்களுக்கு இருந்தபோது கண்டவையிலிருந்து புதிதாக விரித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பிறக்கும்போது இல்லாதவர்களுக்கு இருட்டு. இடையில் போனாலும் சரி, பிறப்பிலேயே போனாலும் சரி, பார்வை இல்லாதிருப்பது பேரிழப்புத்தான். இந்தப் பேரிழப்பிலிருந்து ஒரு மனிதன் இந்த மனித சமூகத்திற்கு ஒரு ஆளுமையாளராக நிற்பது ஆகப்பெரிய சாதனைதான். ஐயாவால் ‘மலைகளின் காலடியில் உலவும் கடவுள்’ நூலை எப்படி எழுத முடிந்தது? இதுபோன்ற ஒரு நூல் இதுவரை எழுதப்படவில்லை என்று கொண்டாடுகிறார்கள். அழகு இல்லாத வெளி, கவர்ச்சியில்லாத உயிர், திணை இல்லாத உலகம், நிறங்கள் இல்லா மலர், அலையில்லா கடல் முழக்கம்…. எத்தனையோ இல்லாமல்போன தன் உலகிற்கு மகத்தான இருப்பை – பங்களிப்பைத் தந்துவிடுவது பேரெழில்தானே! பேரெழுச்சி இல்லாதவனால் பேரொளியைத் தந்துவிட முடியாது.

திருமண மண்டபத்திற்குப் போகும் வழியின் ஓரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்கள் நிரம்ப நிற்கின்றன. மண்டபத்தின் முன்வாசலில் சாகவாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயதான தம்பதிகள் மண்டபத்தைவிட்டு வெளியே வருகிறார்கள். பீடா மென்ற குழந்தை அப்பாவிடம் நாக்கு நீண்டி சிவப்பேறியதைக் காட்டுகிறது. வாழ்த்திவிட்டு வந்தவர்கள் பேருந்திற்கு நிற்கிறார்கள். வாழைத் தோரணத்தோடு பாக்குகுலை சரத்தையும் செவ்விளநீர் குலையையும் இணைத்துக்கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். சீரியல் லைட்டுகள் மாலைமாலையாக மண்டபம் வளாகம் எங்கும் ஜொலிக்கின்றன.

மண்டபத்தின் இடப்புறம் ஐஸ்கிரீம், பாதாம்பால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பையன் நின்றுகொண்டு இனிப்பு பீடாக்களை முக்கோண வடிவில் மடக்கி செய்து ஒற்றை மிளகை குத்தி மேசையில் வைத்துக்கொண்டே இருக்கிறான். இளம் குமரிகள் இரண்டு பீடாக்களை எடுக்கிறார்கள். சல்வார் காமிக்ஸில் வந்த பெண் ‘அக்கா உனக்கு வேணுமா’ என்கிறாள். மண்படத்திற்குள்ளிலிருந்து தவுள் சத்தமும் நாதஸ்வர ஓசையும் வருகிறது.

வரவேற்பு மேசையில் சந்தனம், குங்குமம், பழங்கள், பன்னீர் கும்பம் தட்டுக்களில் இருக்கின்றன. ஐயா முதல் படியில் கால்வைத்ததும் வரவேற்பில் நின்றிருந்த அம்மா வேகமாக வந்து கையைப் பிடித்தார். “மதன் அம்மா” என்றார்.

“சித்தப்பா எங்க நீங்க வரமாட்டீங்களோன்னு நினச்சேன். அம்மா கூட வராதுன்னுதான் சொன்னாங்க. சந்தோசம் சித்தப்பா”

“வராம இருக்க முடியுமா”

அந்த அம்மா ஐயாவின் முழங்கைக்கு மேல் ஒரு பிடியைக் கொடுத்து அழைத்துப் போனார்.

“எங்க வீட்டம்மா எங்க”

“அவங்க ரொம்ப பிஸியா இருக்காங்க” ஐயா சிரித்தார்.

“பெண் வீட்டுப்பக்கமிருந்து வந்திருக்காங்களா.”

“வரலைங்க சித்தப்பா. ஒத்த பையனா போயிட்டானேன்னுதான் நம்மளும் தலைய ஆட்ட வேண்டியதாகிவிட்டது.”

காலியாக இருந்த இருக்கையில் அமரவைத்துவிட்டு வரவேற்பறைக்குப் போனார். மண்டபம் முழுக்க கஜகஜவென பேசிக்கொண்டிருக்கிறார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கிச் செல்லச்செல்ல வரிசையில் நிற்பவர்கள் மேலே நகர்கிறார்கள். இருபுறமும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். மண்டபத்தில் அங்கங்கு வயசு பிள்ளைகள் கூட்டமாக நின்று செல்பி எடுக்கிறார்கள். மேடைக்கு இடப்பக்கம் சற்று பள்ளமான மேடை. விரித்த போர்வையில் அமர்ந்து நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. அதை யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர், “கன்னியாஸ்திரியை போயி பிடிச்சிருக்கானே. வேற ஆளே கிடைக்கலையா” என்றார். கந்தசாமி எதேச்சையாகத் திரும்புவதுபோல திரும்பினார். உடன் அமர்ந்திருந்தவர். “அது துணிஞ்சு வந்திருக்கே” என்றார். “எல்லா ஒழுங்கும் போயிருச்சு. இந்த செல்லு வந்து எல்லாத்தையும் தலைகீழா புரட்டிப் போட்டிருச்சு. நம்ம ஒண்ணும் பண்ணமுடியாது. அதிலதான் எந்த கட்டுப்பாடும் இல்லையே. காலம் மாறிப்போச்சு. நாம பேசாம வேடிக்கைய மட்டும் பாக்கவேண்டியதுதான். நம்ம யோசனையெல்லாம் இனி அம்பலமேறாது” என்றார். கூட்டம் கூட்டமாக நின்று சலசலவென பேசுகிறார்கள. ஒரே இரைச்சல்.

வாழ்த்திவிட்டு மண்டபத்தின் நடுமைய வழிவந்த தம்பதிகள் நின்று திரும்பிindex மணமேடையைப் பார்க்கிறார்கள். என்னவோ சொல்கிறார்கள். நெருங்கி வருகிறார்கள். “எப்படி இந்தப் பொண்ணு இப்பிடி முடிவெடுத்திச்சு.” “இதுல என்ன அவளும் மனுஷிதானே. அவளுக்கும் ஆசாபாசம் இருக்காதா” என்று அவர் மனைவி சொல்லிக்கொண்டு போகிறார். மண்டபம் முழுக்க எல்லோர் வாயிலிருந்தும், மனசிலிருந்தும் இதுபற்றிதான் பேசிக்கொண்டிருப்பதாகப்பட்டது. வந்ததிலிருந்து தனக்குள்ளும் இந்த ஜோடியின் திருமணம் பற்றித்தான் ஓடுகிறது. இந்த ஜோடியை இது விசயமாக பார்க்க வந்தவர்கள்தான் நிரம்ப போல.

“ஏங் கந்தசாமி. நான் முன்ன நெனைச்சதுண்டு. ரஸ்யா, சீனா போல உலகம் பூராம் கம்யூனிசம் பெரிய புரட்சிய ஏற்படுத்துமன்னு, ஆனா இந்த செல்லு வந்து வேற புரட்சிய ஏற்படுத்தியிருச்சு.”

“அதுதான பிள்ளையையும் கெடுத்து வச்சிருக்கு”

“கந்தசாமி நம்ம அம்மா கண்ணில தட்டுப்படுறாங்களா”

“தெரியலைங்கய்யா”

“இருப்பா, சொந்தபந்தங்களோட, என்னைவிட்டுட்டு இது மாதிரி வர்ற நாளிலதானே அம்மா மனம்விட்டு பேசிக்கிட முடியும். கந்தசாமி பையன் என்ன உடை உடுத்தியிருக்கிறான்.”

“ஐயா பட்டுவேட்டி சட்டையில” லேசாக சிரித்துக் கொண்டார்.

“நான் கோட்டு சூட்டு போட்டு நிப்பானோன்ன நெனச்சேன்”

“நல்ல கூட்டமா”

“ஆமாங்கைய்யா”

“யப்பா, பேசித்தீக்கத்தான் வர்றாங்க போல. வேற எதுவும் காதுல விழாதுபோல.”
இடையில் டம்மென்று பூவெடி வெடித்து கலர்காகிதங்கள் மணமக்கள் முன் பறந்தன. இளைஞர்கள் ஊஊவென்று கத்துகிறார்கள். பழனிவேல் ஐயா லேசாக குனிந்து தலையை அசைக்கிறார்.

“கந்தசாமி இந்த நாதஸ்வரக்காரன் என்னமா வாசிக்கிறான்” கந்தசாமிக்கு அந்த நினைப்பே இல்லை. மனம் எங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. சட்டென எந்தப் பாடல் என்று யூகிக்க முடியவில்லை. தொடக்க வரிகளுக்கு வந்தால்தான் பிடிக்க முடியும். தவுள் முழங்குகிறது. ஐயா “‘மாலைசூடும் மணநாள் இந்த மங்கையின் வாழ்வில் திருநாள்’ எப்படி இப்படி லெகுவா எழுதிட்டான். இந்த கண்ணதாசன் இருக்கானே பெரிய கவிஞன். ‘மங்கையின் வாழ்வில் திருநாள்’ ன்னு சும்மா ஒரு வரிய தூக்கிப்போட்டுட்டானே. உடம்ப பேணாம போயிட்டான் நாயி. இருந்திருந்தா என்ன என்ன எழுதியிருப்பான்! என்றார். அடைத்திருக்கும் சலசலப்பிலிருந்து ஐயாவின் மனம் மட்டும் எப்படி தாவிப்பறந்து அமர்ந்தது.’

கந்தசாமி அப்போதுதான் நாதஸ்வரக்காரர்களைப் பார்த்தார். இரு நாதஸ்வரங்களிலும் சீவாளிகள் நிறைய தொங்குகின்றன.

“அட இவன்க கலைஞன்தான்யா. கந்தசாமி. ரெண்டுபேரும் சீவாளிய சரியா மாத்திட்டாங்க பாத்தியா. அவன்களுக்குத் தெரியும், எந்த சீவாளியில எந்தப்பாட்டு கனிஞ்சு ஆறா ஓடும்ன்னு. ஆகா, “அமுத மழை பொழியும் முழுநிலவிலே ஒரு அழகுச் சிலை உடல் முழுதும் நனைந்ததே… அடடா ஒரு தேவதையும் மயங்கிடும். எந்தன் ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும் ஈம் ஈம்ம்ம்… யப்பா. பீத்தோவான் இசையில லெனின் மயங்கி வீழ்ந்தது உண்மைதான்யா.”

பழனிச்சாமி ஐயா நாதஸ்வரத்திலிருந்து வழியும் இசையை வரிகளாக கவிதையாக்கினார். தமிழ்ல கொஞ்சமா பாடினாலும் ஜெயச்சந்திரன் நல்ல நல்ல பாட்டு பாடியிருக்கான். பழைய பாட்ட ராத்திரியில கேக்கணும்.” ஐயாவிற்கு இயல்பிலேயே இந்த இசை ஆர்வம் இருந்ததா. கண்பார்வை போனபின் பாடல் கேட்பதில் மூழ்கி இசை ரசிகராக மாறினாரா என்று கேட்கவேண்டும்.

உதட்டிற்கு வண்ணம் தீட்டிய முகத்தில் ஜிகுனா பொட்டுகள் மினுங்க இரண்டு குழந்தைகள் பட்டுப்பாவாடை சரசரக்க மேடைக்கு ஓடுகிறார்கள். “கந்தசாமி என்ன அந்த நாதஸ்வர கலைஞர்கள்கிட்ட கூட்டிட்டுப்போங்க.” எழுந்தார். ஐயா முன் இருந்த ஜனங்களின் பரபரப்பு விலகிக் கொண்டுவிட்டதுபோல இருந்தது. கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்றார். குட்டிப்பாப்பா தரையில்படுத்து நாற்காலிக்கடியில் கிடக்கும் கலர் காகிதங்களோடு என்னமோ பேசுகிறது. “ஐயையோ புது ட்ரஸ். அழுக்காக்கிட்டையா. ஒன்ன…” தாய் அவளைத் தூக்கி ஒரு அடி கொடுக்கிறாள். “கந்தசாமி அந்த குழந்தையை அந்த அம்மா அடிச்சாளா” “வலிக்காத மாதிரிங்கைய்யா” “அப்ப சரி, சட்டை அழுக்கான என்ன. குழந்தையன்ன விளையாடணும்.” இது எப்படி ஐயாவின் கவனத்துக்கு வந்தது. நிஜத்தைக் கனவுகாட்சிகள்போல காண்கிறாரோ? புதுவிதமான மாயக்காரன்.

மெல்ல நாதஸ்வர கலைஞர்கள் வாசிக்கும் மேடையில் ஏறி நின்றார்கள். புத்தகத்தை கந்தசாமியிடம் தந்தார். வாசிக்குக் கொண்டிருக்கும் பாடல் முடியும்வரை புன்னகையோடு கேட்டார். முடிந்ததும் இரு கைகளை அவர்களை நோக்கி நீட்டினார். அவர்கள் புரிந்து கொண்டார்கள். வெற்றிலை கரைபடிந்த உதட்டில் சிரிப்போடு நெருங்கி வந்து கையைத் தொட்டனர். “ஒங்க கைய மொத மொத தொடுறேன். நீங்க இப்ப வாசிச்ச அந்த ரெண்டு சீவாளிய தொடணும்” அவர்கள் நாதஸ்வரத்தைப் பக்கவாட்டில் கொண்டுவந்து “இதுகதான்யா” என்று ஒவ்வொன்றாகத் தொடவைத்தார்கள். ஒன்றை உதட்டில் வைத்து புர்புர் என ஊதினார்.

“என்னய்யா பாட்டு. எப்படி ரெண்டு பேரும் பிசுருதட்டாம பாடுறீங்க. அப்பா. நீங்க எல்லாம் பெரிய கலைஞர்கள். எங்க தவுள்காரங்க. பிரமாதம்.” தவுள்காரர்கள் எழுந்துவந்து கையைப் பற்றினார்கள். “இதுபோதும். இதுக்கு மேலாயா வாசிக்க முடியும்” கந்தசாமி திரும்பி கூட்டத்தைப் பார்த்தார். யாரும் இவர்களை கவனித்ததாகத் தெரியவில்லை. பாடினாலும் சரி, பாடாமல் இருந்தாலும் சரி யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. என்ன சட்டென நாதஸ்வரம் நின்றுவிட்டது என்றுகூட யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.

“நான் உள்ள நுழையிறப்ப ஒரு பாட்டு வாசிச்சீங்க. முழுசா கேக்கல. அதத் திரும்ப வாசிக்க முடியுமா. ஆனா அது எந்தப்பாட்டுன்னு நான் சொல்லமாட்டேன். சீரும் சிறப்புமா இருக்கணும்” சொல்லி வாய்விட்டுச் சிரித்தார்.

“உங்க ஆசிர்வாதம் ஒன்னே போதும்” என்றனர்.

மண்டபத்திற்குள் நுழையும்போது என்னபாட்டு வாசித்தார்கள் என்று கந்தசாமிக்கு நினைவிற்கு வரவில்லை. அது எந்தப்பாட்டு? மெல்ல படியில் கால்வைத்து இறங்க நாதஸ்வரக்காரரும் உதவினார்.

jjமணமேடை நோக்கி ஏறும்போது முன்னால் ஒரு குடும்பத்தினர் கூட்டமாக வாழ்த்த நின்றிருந்தனர். நாதஸ்வரத்திலிருந்து பவித்திரத்தோடு ராகம் பொங்கியது. “கந்தசாமி நான் நெனச்ச பாட்ட சட்டென்று பிடிச்சிட்டாங்க பாத்தியா” நாதஸ்வரத்திலிருந்து தேனாகி வருகிறது பாடல்.

“நூறாண்டு காலம் வாழ்க. நோய்நொடி இல்லாமல் வளர்க…”

“இதையும் அந்த நாய்தான் எழுதினான். என்ன மனம்! என்ன விசாலம்! அவன நான் கட்டிப்பிடிக்க வாய்க்கலையே. கேளு கேளுன்னு சிலநாள் ராத்திரியில சாகடிப்பான் மனுசன். இவங்கதான்யா மனசார இந்தத் தம்பதிய வாழ்த்துறாங்க. ஆகா… பிரமாதம். யாருக்குத் தெரியும் இது”

மணமக்கள் பழனிச்சாமி ஐயாவைக் கண்டதும் விழுந்து வணங்கினார்கள். ஜுலி உணர்ச்சிமேலிட ‘அங்கிள்’ என்று கையைப் பற்றினாள். “அழாதே. எதுக்கு அழணும். நல்லாவாழணும். சரியா” அவள் தலையில இரு உள்ளங்கைகளை வைத்து வாழ்த்தினார்.

“டேய் மதன். இந்த நாதஸ்வர கலைஞர்கள் ரொம்ப பிரமாதம்டா. மனசார… ஆமா மனசார…”

“தாத்தா, இது எனக்குத் தோணவே இல்லையே.”

“யாருக்குத் தோணும்.”

“தாத்தா நாங்க அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குறோம்.”

“அத முதல்ல செய்யி” புத்தகத்தைக் கொடுத்துவிட்டு இறங்கினார்கள்.

இந்தக் கண்கள் பலவற்றைக் கேட்கவிடாமல் செய்துவிடுகிறது. பழனிச்சாமி ஐயாவிற்கு காதுகள் கண்களாகிவிட்டன. காதுக்கண்கள், கண்களுக்கானதையும் காதுகளில் காணத்துவங்கிவிட்டார். பாதங்களில் இடங்களை வரைந்து வைத்திருக்கிறார். மூச்சுக் காற்றின் வழிகூட சுவரை தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ. தனக்கான தேவையைத் தானே உருவாக்கிவிட்டார். ஓசையிலிருந்து காட்சியைக் கண்டுவிடுகிறார். தொடுவதிலிருந்து உருவத்தைக் கொண்டுவிடுகிறார். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்.

கந்தசாமியின் மனதில் சட்டென ஒரு காட்சிவந்தது. இதே ஆடை அலங்காரத்தில் இதே மக்கள் நிறைந்திருக்க ஜோதியும் அந்தப் பையனும் மேடை ஏறி வருபவர்களை வணங்கிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. மின்னலென ஒரு பதட்டம் உடலெங்கும் ஓடியது. திரும்பிப் பார்த்தார். அவர்கள் இல்லை. ஜுலியும் மதனும்தான் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜோதி எதற்கும் கட்டுப்படவில்லை. என்றாலும் திரும்பத் திரும்ப “நீங்க ரெண்டு பேரும் என்னை வாழ்த்தி அனுப்புங்க” என்று மட்டும் அடம்பிடிக்கிறாள். அம்மா பழனிச்சாமி ஐயாவைப் பார்த்துவிட்டார். வட்டமாக அமர்ந்திருந்த கூட்டத்திலிருந்து சிரித்தபடி எழுந்து வருகிறார். கந்தசாமி மெல்ல மனதிலே பாடினார். “நூறாண்டு காலம் வாழ்க…”

7 comments for “விலகிச் செல்லும் பாதை

 1. Paadhasaari vishwanathan
  March 2, 2020 at 1:20 am

  சு.வேணுகோபால் கதையில் , பழனிச்சாமி ஐயா , திடீரென ஓரிடத்தில் பழனிவேல் ஐயா ..என்று வந்துள்ளது…குறையொன்றும்.இல்லை..இயலுமாயின் மாற்றிவிடலாம்.

 2. March 2, 2020 at 9:19 am

  வாசிக்க இனிமையாகவும், மனதை ஆழமாகத் தொடவும் செய்த கதை! நன்றியும் நல்வாழ்த்துக்களும்!!

 3. சுப்ரமணிய பாலா
  March 2, 2020 at 7:35 pm

  கந்தசாமியின் மனம் சந்திக்கிற தாழ் நிலை உணர் வை ….பழனிசாமி அய்யாவின் உடன் ஆன பயணமும்….அங்கு மணமகனாக நிற்கும் மாப்பிள்ளை அணிந்த உடை தனைகேட்கிற பழனிசாமி அண்ணாவின் அக மன தாகம்….நாதஸ்வர தவுல் வாசிக்கும் நபர்களும் அவர்கள் வாசிக்கும் பாடலும் அதன் பாடலாசிரியரும்….என கண்கள் அற்ற பழனிசாமி அய்யா …பெண்டுல மனலை கந்தசாமி…மெல்ல சூழல் கண்டு எடுக்கும் முடிவை நூறாண்டு காலம் வாழ்க…..என முடிகைகையில் நான் பழனிச்சாமி அய்யாவாகவேணு ரைகேட்க்றேன்…..என்னவேணுசார் சினிமா மாதிரி யை முடிச்சிட்டிங்க…….நாவலா நான் எழதவா…..மீதி யை ….

 4. March 4, 2020 at 12:13 pm

  சு. வேணுகோபாலின் கதைகள் இயல்பாகவே திறப்புகளைக் கொண்டிருக்கும்.இதனை விழிப்புணர்ச்சி தரும் கதை என்று சொல்லிக்கொள்ளலாம். சாதிக் கட்டமைப்பையும் சமூகம் இதனால் வீழ்ந்திருக்கும் போக்கையும் கதையினூடே திறந்து காட்டுகிறார்.ஆனால் கதை நேரடியாக எந்த புத்திமதியையும் பறைசாற்றவில்லை. கதையின் காட்சிகள வழி, கதை மாந்தர்களின் வழி, உரையாடல்களின் வழி கதை தன் உச்சத்தை அடைகிறது.மிக எளிமையாக கதை சொல்லல் நகர்கிறது. ஒவ்வொரு காட்சியும் கதையின் மைய நோக்கத்தை கண்டடைகிறது.கதைக்குள்ளே குறியீட்டு உத்திகளை வைத்து வெளிச்சம் பாய்ச்சுகிறார்.கந்தசாமி கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டு உலகத்தை அவதானிக்கிறான்.ஐயா பார்வை இழப்பில் உலகைக் காண்கிறார்.கண்களை மூடியிருந்தவனுக்கு எல்லாமே மர்மமாக இருளாக இருக்கிறது. ஆனால் அகம் திறந்திருக்கும் பார்வையற்ற அய்யாவுக்கு மனிதர்கள் தெரிகிறார்கள். அவர்களின் குணாதிசயம் தெரிகிறது. சிடுக்குகளைக் களையும் அவதானம் புரிகிறது. ஆனால் கண்களைத் திறந்துள்ள கந்தமியும் அகம் மூடிக்கக்கிறது.இதுதான் கதை. கந்தசாமியின் மகள் காதலுக்காகப் பிடிக்கும் அடம் கந்தசாமியின் சாதி மேலான்மை தடுப்புச் சுவராக வளர்ந்துகொண்டே இருக்க, கதையின் காட்சிகளின் அமைப்பு அந்தச் சுவரை கடப்பாறையில்லாமல் ஊதியே தகர்க்கிறது. கந்தசாமியின் இறுகிய மனம் தளர்ந்து தன் மகளின் மணக்காட்சிக் கோலத்தை அகத்தின் வழி அவதானித்து தன்னை உளச்சிறையிலிருந்து விடுவித்துக் கொள்கிறார். ஜூலி என்ற பாத்திரம் சிறிதாயினும் அது வாழ்க்கையைக் காட்டும் பாதை மெய்யியல் சார்ந்து மிகத் தெளிவாக இருக்கிறது.மனிதர்களைத் தங்கள் வாழக்கை சிக்கல்களைக் கண்களை மூடி. அகம் திறந்து அவதானித்தால் பல சிக்கல்கள் உடைந்து பஸ்பமாகும். அய்யாவின் பாத்திரம் மனதுக்குள் துலங்க்கிகொண்டே இருக்கிறது சு. வே வும்தான்.

 5. Viji
  March 13, 2020 at 5:43 pm

  கதை முடிந்துவிட்டதா சார்? கு(கொ)ல வெறி முடிந்ததாகத் தெரியவில்லையே. சூழல் தற்காலிகமாக அதைக் காணடித்திருக்கலாம். கண்மூடி கொஞ்சநேரம் இருந்தாரே அதுபோல். தூங்குகிறவனை எழுப்பலாம். தூங்கியதைப்போல் நடிப்பவர்களை..!? இருள், ஒளி வந்தால் போய்டும். அப்படித்தான். அதுசரி, பெயரை ஏன் குழப்பியுள்ளீர்கள்.? மறைமுக செய்தி எதேனும் உள்ளதோ. ? மீள் வாசிப்பில் கண்டுகொள்கிறேன்.
  ஸ்ரீவிஜி

 6. இரா.முரளி.
  July 23, 2020 at 9:04 pm

  மகளின் காதலை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்க முடியாமல் அவதிப்படும் கந்தசாமி கள் நம்மைச்சுற்றி ஏராளமானவர்கள் உள்ளனர். கதாசிரியர் நேரடியாக போதனைகளை செய்யாமல் இன்னொரு தளத்தில் நடைபெறும் நிகழ்வுகளுடன் பயணித்து அக வெளியில் மாற்றத்தை உணர்வது சிறப்பு. எழுத்தாளரின் முற்போக்கு எண்ணங்கள் மட்டுமல்ல இசை, பாடல் குறித்த நுண்ணுணர்வு ஊடும்பாவுமாக இழைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *