‘ரிங்கிட்’ – மதிப்பு வீழாத நாணயம்

ரிங்கிட் 02மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருடைய மரணம் நிகழ போவது அவருக்கு மட்டுமே தெரியும். அது எப்படி இருக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் செத்து மீண்டும் பிழைத்து வந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிகழ்வு நடக்கப்போவது இல்லை. பிறகு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சொல்ல முடியும். அந்த மாதிரியானதொரு அனுபவத்தைத் தன் எழுத்துகளால் தர முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் நாவலாசிரியர் அ.பாண்டியன். மலேசிய படைப்புகளில் இப்படியொரு குறுநாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டயதே எனக்கு வியப்பாக இருக்கிறது. நாவலைப் படித்த மறுகணமே என்னை விமர்சனம் எழுத வைத்த குறுநாவல் ‘ரிங்கிட்’. 1967 ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய நாணயமான ‘ரிங்கிட்’ தொடர்பில் எழுந்த விவாதம் பின்னர் பெரும் இனக்கலவரமாக வெடித்த அந்தப் பினாங்கு சம்பவத்தைப் பற்றி பேசும் நாவல்.

நாவல் பல கிளைக்கதைகளைக் கொண்டிருந்தாலும் அவை சிதறிப்போகாமல் திரண்டு வந்து மைய  கதையில்  லாவகமாக இணைந்து கொள்வது நாவலின் பலம்.

தமிழ்க் குமுகாயத்தையே அதிகமாக மையப்படுத்திய மலேசிய நாவல்களின் வரிசையில் இந்தக் குறுநாவல் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. அதற்குக் காரணம் மலேசிய அரசியலையும் அதை வழிநடத்தும் மலாய் இனத்தவரையும் முதன்மை கதை மாந்தர்களாக கொண்டு நகர்வதுதான்.

எப்பொழுதும், ஒரு புனைவை வாசிக்கையில் அது அடிப்படையில் தான் கொண்டிருக்கும் கரு, வரலாறு, பாத்திர வார்ப்புகளைத் தாண்டி புனைவில் உச்சங்களைத் தொட்டு மீண்டும் வாசிக்கும் ஆர்வத்தை உருவாக்குகிறதா? புதிய உத்திகள் மூலம் வாழ்வின் நுண்மையான பகுதிகளைக் காட்டுகிறதா என ஆய்வது வழக்கம். அதே அடிப்படையில் இந்நாவலையும் ஆய்ந்தேன். குறுநாவல் என்பதால், சொல்ல வேண்டிய கருத்துகளை அம்மட்டே புனைவுகளோடு நெஞ்சை உலுக்கும் வாக்கிய தொடர்களோடு அமைந்திருக்கிறது.

மலேசிய நாட்டின் பெரும்பான்மை இனமான மலாய்க்கார்களின் தொடக்கக்கால வாழ்வு, அதாவது மலேசியா விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்குப் பின் எவ்வாறு இருந்தது என்பதை விவரிக்கிறது. அவர்களின் எண்ணத்தில் புகுந்து வாழ்ந்திருக்கிறார் நாவலாசிரியர். 1967 வரைக்குமான இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மனதில் புரையோடிக்கிடந்த தன்னூர், வாழ வந்த ஊர் என்ற வித்தியாச பாகுபாட்டை கதிரேசன் மற்றும் அவனது மாமன் காளியப்பன் வழியாக வேறுபடுத்திக் காட்டியிருப்பது தெளிவாக இருக்கிறது.

ஆய்ஷா எனும் மலாய் பெண்ணை கதையின் நாயகியாக வைத்துக் கதை தொடங்குகிறது. பார்ப்பதற்குச் சீனப் பெண்ணின் சாயல் உள்ள ஆய்ஷாவின் அம்மாதான் கதைக்கு முடிச்சி போடப்பட்ட பேரிளம் பெண்ணாக வலம் வருகிறார்.

மளிகைக்கடை நடத்தும் அஸ்கார்காரர் ஹசான் கதைக்கு வலு சேர்க்கிறார். ஆய்ஷாவின் தாத்தா ஹசான். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஹசானைப் பேத்தியான ஆய்ஷா பார்க்கப் போகிறாள்.

கோலாலம்பூரில் இருக்கும் ஆய்ஷா, தொடர்வண்டின் மூலமாகத் தாத்தாவைப் பார்க்க செல்லும், அந்தப் பினாங்கு மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தை, வாசகனுக்குப் புனைவோடு வரலாற்றை மனத்தில் நிறுத்திக் கொள்ள கையாளப்பட்ட முறை ஏதுவாக இருக்கிறது.

இன்றைய வளர்ச்சி அடைந்த மலேசியாவில் நின்று கடந்த கால மலேசியாவின் அங்கங்களை இரசிக்க வேண்டுமாயின், இந்நாவலை வாசகன் வாசிக்க வேண்டும். சாலையின் இரு புறங்களிலும் இருந்த கடைகளையும், பள்ளிவாசல், அதற்காக அமைக்கப்பட்ட கார்கள் நிறுத்துமிடம், இரவு சந்தை என ஒருவன் நின்று பார்க்கும் போது அவன் கண்களில் என்னென்ன தெரியுமோ அதை கவிஞனாக இருந்து இரசித்துக் கவிதைப் பாடாமல் சாதாரண நுகர்வோராக இருந்து தந்திருக்கிறார்.

மாற்று திறனாளியான ஃபாத்திமாவுக்கு உறுதியான மனதைக் கொடுத்து அவளை வாசகன் உள்ளத்தில் வாழ வைத்து விட்டார் நாவலாசிரியர். ஹசானின் அரவணைப்பில் வளர்ந்த ஃபாத்திமா சீனத்தியின் மகள் என்றும், தன் பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னரும் பெற்றெடுத்த பெற்றோரைப் பற்றி தெரிந்து கொள்ள அவள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், வாசகனின் மனதில் அந்த ஆவலை விதைத்து விடுகிறார் அ. பாண்டியன்.

கம்யூனிஸ்டுகள் பதுங்கி வாழும் அந்தச் சூழலில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணரிங்கிட் 03 மதிப்பு வீழ்ச்சியால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்பட போவதாகச் சீனர்கள் மத்தியில் உள்ளூர பயம் இருக்கவே செய்தது. காரணம், நாட்டின் பொருளாதாரத்தைத் தன் கையில் வைத்திருந்தனர் சீனர்கள். அதனால் அவர்களுக்கு அதிக நட்டம் ஏற்படும் என பயந்தனர். துங்கு அப்துல் ரகுமானுக்கு எதிராக அப்போதைய வளரும் கட்சியாக இருந்த எதிர்கட்சி சீன தலைவர்கள் சிலர் மக்களை கதவடைப்புப் போராட்டம் நடத்த தூண்டிவிட்டனர். இதனை வரலாற்றுச் செய்தியாகச் சொன்னால் பதியாது எனும் நோக்கில் நாவலாசிரியர் திரண்டு திரண்டு புனைவோடு தீட்டுகிறார்.

நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு பயணப்பெட்டியை தான் இரசிக்கும் கண்ணோடு இரசிக்க வைத்த ஆசிரியரின் கலைநுட்பத்திற்குப் பாராட்டு வழங்கியே தீர வேண்டும். ‘கெட்டியான அந்தப் பயணப்பெட்டி ஒரு வளர்ப்பு பிராணி போல் அவள் பின்னே கொஞ்சலோடு முனகிக் கொண்டு ஓடியது’ என்று அவர் எழுத்தாளனுக்கே உரிய பாணியில் வர்ணிப்பது கவரசெய்கிறது.

பெய்து கொண்டிருக்கும் மழையும், கொந்தளித்துக் கொண்டிருக்கும் கடலலையும் இன்றைய காலத்துக்குள் இணைந்து பின்நோக்கிய காலத்துள் கொண்டு தள்ளுதல் திரைப்பட காட்சியாக அமைத்தது கதைக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

மலாய்க்காரர்கள் கம்போங், இந்தியர்களின் எஸ்டேட், சீனர்களின்  பட்டணம் என பிரிந்து கிடந்த பகுதிகளைக் கடக்க உதவும் பாலத்திலும் நடக்கும் சம்பவங்களை இருவேறு இடங்களில் இலாவகமாகக் கையாண்டு தந்திருப்பது அழகாய் இருக்கிறது. இந்தியர்கள் வாழ்ந்தபோது இருந்த சூழலும், சீனர்கள் வந்தபோது இருந்த கலவரமுமாக அந்தப் பாலத்தின் முன், சாலையில் வரலாற்றைப் பதிவு செய்கிறார். கதைக்குள் கதையாக கம்யூனிஸ்டு கட்சி சின் பேங்கை சந்திக்கும் காட்சியைப் கையாண்டிருக்கும் விதம் வாசகனுக்குக் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி நிற்கிறது.

தொடர்ந்து பெய்யும் மழையில் நடக்கும் அந்த கொடூர நிகழ்வு மனத்தை பதைபதைக்க வைக்கிறது. அங்கிருந்து மீட்டு வந்த நாவல், 1967 ஆம் ஆண்டு நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் மூச்சு விடாமல் ஒவ்வொரு பகுதியாக மாற்றி மாற்றி தொலைக்காட்சியில் வெவ்வேறு அலைவரிசைகளில் ஒளிப்பரப்புவது போல நடத்திச் செல்கிறது.

லிம், விக்டர் என்ற சீனர்கள்தான் கதவடைப்புப் போராட்டத்தை முன் நின்று நடத்தும் துடிப்பு மிக்க இளைஞர்கள். அவர்களை வழிநடத்தும் சீன தலைவர் ஒருவர். மலாய்க்காரர்கள் சிலரும் அந்தப் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர்.

எப்படியாவது மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உருவெடுத்து விட வேண்டும் என நோக்கம் இருந்தாலும், துங்கு அப்துல் ரகுமானைக் கவிழ்த்து விட வேண்டும் எனும் எண்ணமும் அவர்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது.

அதற்காகச் சுற்றறிக்கைகளை மக்களுக்கு விநியோகம் செய்ததோடு, பண மதிப்பின் வீழ்ச்சி குறித்தும் விளக்கம் கொடுத்து மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தினர். ஆனால், மலாய்க்காரர்களுக்கு, அதனால் எல்லாம் பாதிப்புப் பெரியதாக வரபோவது இல்லை என்பதால் வழக்கம் போல கடைகளைத் திறந்தனர். அதனால் ஆத்திரமடைந்த சீனர்கள் அவர்களை மிரட்டியதோடு அடிதடியிலும் ஈடுப்பட அது கலவரமாக வெடித்தது. கம்பத்திலிருந்து பட்டணம் வரும் ஹசான் கடும் காயத்திற்கு இலக்காகி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்சாக்களும் வாத்துகளும் இருக்கும் கம்பி வேலிக்குள் மறைந்து கொள்கிறார்.

கதிரேசனின் கண்முன்னால் நடக்கும் அந்தக் கொடூர சம்பவத்தைப் புரியும் ஹசான்தான், ஃபாத்திமா எனும் வளர்ப்பு மகளான சீன பெண்ணின் பாட்டியை அடித்துக் கொன்று விடுகிறார். அந்தக் குற்ற உணர்ச்சியில் அவளைத் தன் சொந்த மகளாக வளர்த்து திருமணமும் செய்து கொடுக்கிறார். கணவன் போதை பித்தனாக இருந்து மாண்டு போன பிறகும் அவளைத் தன் அரவணைப்பில் வைத்து பாதுகாக்கிறார்.

அந்தப் பழைய கால நினைவுகளோடே தன் மரணத்தோடு பேசும் ஹசானின் வாழ்வு குறித்த குறிப்புப் புத்தகமாக இருக்கிறது இந்த குறுநாவல். தமிழ்நாட்டுக்கும் மலேசிய தமிழர்களுக்கும் இருக்கும் தொப்புள்கொடி உறவு அற்றுப் போகாதபடி காளியப்பன் மலேசியாவுக்கு வந்த சம்பவங்களை இட்டுக்கட்டாமல் புனைந்திருப்பது சிறப்பாய் அமைந்திருக்கிறது. கிருஷ்ணன் தண்டல், டக்சி டிரைவர் மாதவன், கொஞ்சம் தமிழ்ப்பேசும் தோமஸ் டிரசர் ஆகியோரின் அரசியல் பேச்சு அத்தோடு போச்சி என்பதாக முடித்திருக்கிறது நாவல்.

ஊமையனுக்கும் ஊமைச்சிக்கும் பிறந்த ஃபாத்திமா ஊமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆயிரத்தில் ஒரு பிள்ளை அப்படி பிறப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சீனர்களின் மாஜோங் விளையாட்டு கிளாப்பை கட்சி அலுவலகமாக வைத்திருந்த சூழலும் அன்றைய உண்மை செய்தியைத் தாங்கி நிற்கிறது. மேலும், கூடுதல் சிறப்பாக, ‘அலியாஸ், ஹெக்ஸ் மிட்டாயின் பையை மடித்து பாக்கேட்டில் வைத்துக் கொண்டான்’ என்றபோது குப்பையைத் தெருவில் வீசாமல் பையில் வைத்துக் கொண்ட அவனின் நன்னெறி பண்பை விளக்க ஆசிரியர் முனைகிறாரே என்று நினைக்கும் நேரத்தில், ‘அதை விறைப்பாக இழுத்து உதட்டோரம் வைத்து ஊதினால் ஸ்ஸ்வீவீட் என்ற காதை குடையும் சந்தம் எழும்’ என்று இந்தச் சிறுவனின் நிலையில் இருந்து சொன்ன விதம் வியப்பாக இருக்கிறது.

இறுதியாக, ஹசானின் கனவுத்திரைக்குள் கொண்டு வந்து படமோட்டிக் கொண்டே வாசகனுக்கு முடிவு கொடுக்கும் நாவல் தொடர்ந்து என்ன நடந்திருக்கும் என்ற ஆர்வத்தேடே முற்று பெற்று விடுகிறது.

எழுத்தாளர் அ.பாண்டியனின் முதல் நாவல் என்றாலும் நெஞ்சைத் தொட்ட நாவலாக அமைந்திருக்கிறது. ‘ரிங்கிட்’ மதிப்பு வீழாத நாவல் நாணயம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...