புல்லின் விதைகள்

ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து01 வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது. அ.பாண்டியன் தன்னுடைய முதல் குறுநாவலான ‘ரிங்கிட்’டில் மலேசிய வரலாற்று நீரோட்டத்தில் ஒரு குறுந்தகவலாகச் சொல்லிச்செல்லப்பட்ட செய்தியை விரிவாக்கி, வாழ்வாக்கியுள்ளார்.

1967ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக பவுண்ட் நாணயத்தின் மதிப்பை 14.7% குறைத்தது. பவுண்ட் நாணயம் புழக்கத்திலிருக்கும் அதன் முன்னாள் ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலும் மிகப் பெரும் தாக்கத்தை நாணய மதிப்பிழப்பு ஏற்படுத்துகிறது. அப்படியாக அதன் பாதிப்பு உணரப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. பினாங்கு மாநிலத்தில் சோசிலிச கருத்துகளை முன்னெடுக்கும் தொழிலாளர் கட்சி நாணய மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டிப்பதற்காக ஒருநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. சோசிலிச கருத்துருவாக்கத்தை மையமாகக்கொண்டெழுந்த பினாங்கிலிருந்த தொழிலாளர் கட்சி தன் போராட்ட வழிமுறையாகக் காந்திய வழியிலான ‘ஹர்த்தாலி’ல் ஈடுபடுகிறது. பெரும்பாலும் சீனர்களே அங்கத்துவம் பெற்றிருக்கும் தொழிலாளர் கட்சியின் நடவடிக்கை சீனர்களின் நலனைப் பாதுகாப்பதற்கான முயற்சியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சுதேசி இனத்தவர்களான மலாய் மக்களையும் இந்தப் போராட்டத்தில் வலிந்து திணிக்க முற்படும் முயற்சி இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை உருவாக்கியது. அந்த முறுகல் முற்றிக் கலவரமாகி எட்டுப் பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடையவும் பினாங்கு, வட மாநிலங்களின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் அக்கலவரம் காரணமாகிறது. மலேசிய வரலாற்றில் பெரும் இனக்கலவரமாகக் கருதப்பட்ட 1969 மே 13 கலவரத்துக்கான விதையும் இங்கிருந்து தொடங்குகிறது என எண்ணப்படுகிறது. இந்தக் கலவரத்தைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல்தான் ரிங்கிட்.

வரலாற்றைச் சொல்லிச் செல்வது புனைவின் முதன்மை நோக்கமாக இருக்கமுடியாது. பல நூறு சரடுகளால் இழுபட்டு மெல்ல ஒரு சாமானியனின் வாழ்வு எப்படி இந்த வரலாற்றுப் பின்னணிக்குள் புனைவாக உருமாறுகிறது என்பதையே ‘ரிங்கிட்’ நாவல் முன்வைக்கிறது. தமிழில் முன்னரே வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புனைவுகளான வெள்ளை யானை, 18வது அட்சக்கோடு, புயலிலே ஒரு தோணி ஆகியவையும் இவ்வாறே அமைந்தவைதான். வரலாற்றுப் புனைவு குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொண்டே இந்நாவலை அணுக வேண்டியுள்ளது. வரலாற்றுப் புனைவு எனும்போது வரலாற்றுத் தருணங்களையும் தகவல்களையும் பயன்படுத்திக்கொண்டு புனைவைக் கட்டமைப்பதே ஆகும். எனவே, வரலாற்றுப் புனைவு முற்றிலும் உண்மை என்றோ பொய் என்றோ வகைப்படுத்திவிட முடியாது.

கலவரத்துக்கு இடையில் சீனர்களின் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்கியிருக்கும் ஹசான் என்பவர் சீனக் கிழவி ஒருவரைத் தாக்கி விடுகிறார். கண் முன்னாலே சீனர்களிடம் அடிவாங்கும் சக இனத்தவர்களைக் காப்பாற்ற முடியாமல் ஓடிக்கொண்டிருக்கின்றவன் மனத்தில் இயல்பாகவே வன்மமும் அச்சமும் உருவாகிறது. அந்த வன்மமே சீனக் கிழவியைத் தாக்குவதற்கு உந்துகிறது. ஆனால், அங்கே சரியாகப் பேச முடியாமல் அழுதுகொண்டு இருக்கும் சீனக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்து வளர்க்கிறார்.  அந்தத் தருணமே இந்நாவலை வரலாற்றுப் புனைவாக ஆக்கும் புள்ளியாகிறது. பின்னாளில் சீன பாத்திமாவாக அறியப்படும் பெண்ணும் அவள் மகள் (ஆய்ஷா) வழி நீளும் கதையும் ஒரு சரடாக சொல்லப்படுகிறது. ஹசானுக்கும் சீன பாத்திமாவுக்கும் அவள் குழந்தைக்கும் இடையில் நிலவுகிற அன்பு, வாஞ்சை இவற்றைச் சொல்லிச் செல்கிறது. ஹசானைக் காலத்தின் முன் சாட்சியாக்கிவிட்டுச் சுற்றிலும் நடக்கும் அரசியல் சமூக மாற்றங்களைச் ஆய்வுக்குட்படுத்திச் செல்கிறது நாவல். ஹர்த்தால் நடைபெறுவதற்கு முன்னர் தொழிலாளர் கட்சியினரின் தயார்நிலை, எண்ணவோட்டம் மற்றொரு கண்ணியாக நீள்கிறது. இந்தப் போராட்டத்தில் பார்வையாளராக இருக்கும் தமிழர்கள், மலாய்க்காரர்கள் ஆகியோரின் நிலையும் இடையிடையே விவரிக்கப்படுகிறது.

இக்கதையை அ.பாண்டியன் சொல்ல எடுத்துக்கொண்ட குறுநாவல் வடிவத்தினால் பலவற்றை முழுமையாகச் சொல்ல இயலாது போயிருக்கலாம் என எண்ணுகிறேன்.  பலவற்றையும் சிறுகீற்றென உட்பிளந்து காட்டும் தருணங்கள் இதில் வருகின்றன. கம்யூனிசத்தின் மறுபக்கம் அல்லது மறுக்கப்படுகின்ற முகம் வெளிப்படுகிறது. காட்டில் சந்தித்துக்கொள்கின்ற கம்யூனிஸ்டுகள் மலாய்க்காரர்களிடம் ‘நீங்கள் அறப்போராட்டம் செய்கிறீர்கள்….(பக் 34) என வரும் உரையாடலில் கம்யூனிசம் எப்படி போராட்ட வழிமுறையாகிப் போகிறது எனத் தெரிய வருகிறது. எளிய கண்டறிதலில் கடவுள் மறுப்பு என்பதனாலே மலாய் சமூகத்தினரால் கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ளாமல் போக முடிகிறது என அறியலாம். மேலும், தன்னுடைய சீனப் பின்புலத்தைத் துடைத்துக் கொள்வதற்காக பாத்திமா தொடர்ந்து குர்ஆன் ஓதுகிறாள் என வரும் விவரிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தங்களுடைய நிரந்தர அடையாளமாகச் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைக் களைய இவ்வாறான முயற்சிகள் அவசியப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் என அடையாளப்படுத்தப்படுகின்ற சீனர்கள், வந்தேறிகள் என அடையாளப்படுத்தப்படுகின்ற சீனர்களும் இந்தியர்களும் என அனைவரும் இந்த அடையாளச் சுழலில் சிக்கியிருக்கின்றனர். குற்றவுணர்ச்சி எனும் மனச்சுழலும் ஓயாமற் மனிதமனத்தைத் துரத்தும் சித்திரமும் இடம்பெறுகிறது. சீனக் கிழவியின் பராமரிப்பில் இருக்கும் சிறுவயது பாத்திமா, ஹசான் சீனக்கிழவியைத் தாக்கியபோது  அநாதரவாகிப் போகிறாள். அவளைப் போதைப்பித்தன் ஒருவனுக்கு மணம் புரிந்து வைப்பதில் அவளின் எதிர்காலமும் சூன்யமாகிப் போகிறது. இவ்வாறாக அவளின் நிலைக்குத் தானும் காரணம் எனும் குற்றவுணர்ச்சி ஹசானுக்கு வாழ்நாளெல்லாம் தொடர்கிறது. அந்தக் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடாகத்தான் மரணத்துக்கு முந்தைய பெரும் ஹசானின் அரற்றல்கள் அமைந்திருக்கின்றன.

இந்நாவலின் வாசிப்பனுபவம் பல தளங்களைத் தொட்டு உரையாடலை தொடங்கியிருக்கிறது. முதலாவதாக, இந்நாவலில் மலேசியாவில் மிக நீண்ட பாரம்பரிய வரலாற்றுத் தொன்மை மிக்க இரு இனங்கள் இன்னொரு நாட்டில் வாழ்வியல் தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்து வாழ்க்கை நடத்துகின்றனர். கடலில் இருந்த இரு வேறு மீன் இனங்கள் தொட்டிலில் சந்தித்ததைப் போன்று என்றே இதை உவமைப்படுத்தலாம். இந்த நாடு எல்லாவகையிலும் இந்தியர்களைப் பொறுத்தவரையில் குடியேறிய நாடு என்ற பிம்பம் நீங்காமல் இருக்கிறது. ராமன் ஆண்டா என்ன….. (பக் 71) என நாவலில் வரும் கடைகள் வைத்திருந்த தமிழர்களின் உரையாடல் மலேசியாவை முற்றிலும் பிழைக்க வந்த நாடாகவே எண்ணுவதைக் காட்டுகிறது. சீனர்களைப் பொறுத்தளவில் தேசிய உணர்வு என்பது இனப்பாற்பட்டதாகவே இருந்தாலும் நாட்டை அந்நியமானதாக எண்ணும் மனநிலை மிகுந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. மாறாக மையச் சீன நிலத்தில் வேரூன்றியிருந்த கம்யூசத்தின் வழி இம்மண்ணில் தங்களுக்கானதொரு அரசியலை அமைத்துக்கொள்ளும் முனைப்பு அவர்களிடன் இருந்தது. அதே போல் இடதுசாரி அரசியல் சிந்தனைகளும் தேசியவாத மனப்பான்மையும் ஒரு கணம் சந்தித்துக்கொண்ட புள்ளியாகக்கூட இந்தப் போராட்டத்தை வகைப்படுத்த முடியும்.

ரிங்கிட்தொடர்ந்து, மலேசியாவின் சமூக அரசியல் சூழலைக் கவனிப்பவர்களுக்கு சீனர்கள் தொடர்ந்து கம்யூனிச சித்தாந்ததுடன் தொடர்புபடுத்தப்படுவது புலனாகும். சீனாவில் சிங் பேரரசை வீழ்த்துவதற்கு டாக்டர் சன் யாட் சென் போன்றவர்கள் கம்யூனிச சித்தாந்ததை முன்வைத்து ஆட்சியைக் கைபற்றுகின்றனர். 1910ஆம் ஆண்டு வாக்கில் சீனாவிலிருந்து பினாங்குக்குத் தப்பி வரும் டாக்டர் சன் யாட் சென் தன்னுடைய வருங்கால சீனப்புரட்சிக்கான செயல்திட்டத்தைப் பினாங்கிலே தீட்டினார். புலம்பெயர்ந்த சீனர்கள் அவரின் திட்டத்துக்குப் பெரும் ஆதரவைத் தந்தனர். அந்தக் கொள்கையின் ஈர்ப்பு மலேசியாவிலும் பரவுகிறது. ஆனால், பின்னாளில் சீனாவில் நிலவும் ஒற்றைப்படையான ஆட்சி பலருக்கும் உவப்பில்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இருப்பினும் முன்னமே குத்தப்பட்ட அம்முத்திரை பின்னாளில் நிலைத்துவிட்ட ஒன்றாகவே இருக்கிறது.

காந்தி கனவு கண்ட சுமூகமான உலகுக்கு அகிம்சை இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும், மனிதனின் ஆதார உணர்ச்சியாக வன்முறை இருக்கிறது. வன்முறை இன்மை என்பது எல்லா வகையிலும் மனிதனின் இயல்புக்கு மாறான ஒன்றாகவே இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் உணவுக்கான தேடுதல் தொடங்கி இணையைத் தேடுவது வரையில் அந்த வன்முறைச் சரடு இருந்திருக்கிறது. பின்னாளில் மனித வாழ்வு பல வகையில் மேம்பட்ட பின்னரும் உள்ளுறைந்த வன்முறை என்பது எதோ ஒரு வடிவில் இருந்துகொண்டே வந்திருக்கிறது. அந்த வன்முறையின் பேருருதான் அகிம்சை போராட்டத்தைக் கலவரம் நோக்கியதாக மாற்றியிருக்கிறது. தொடர்ந்து, சோசிலிசம், கம்யூனிசம் என எல்லா இசங்களும் இங்குத் தங்கள் நலனைக் காப்பாற்றிக்கொள்வதற்கான கேடயமாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு சாராருக்கான போராட்டமாகவே இதனை மலாய்க்காரர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் கருதியிருக்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் பொதுப்புள்ளியிலே தன் போராட்டத்தை முன்னெடுத்த காந்தியின் வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்றே உணர முடிகிறது. சான்றாக, பொது மக்களுக்கு இன்றியமையாத உப்பு மீதான வரியைக் கண்டித்து காந்தி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்குகிறார். இந்த மாதிரியான பொதுப்புள்ளியைக் கண்டடையாமல் அனைவரையும் வலிந்து உள்ளிழுத்து முன்னெடுக்கப்படும் காந்தியப் போராட்டம் உப்பு நீரில் வாழும் மீனை ஆற்று நீரில் வாழ வைக்க முனைவதாகவே அமையும்.

மலேசியத் தமிழ் புனைவிலக்கியப் பரப்பில் இந்தியர்களல்லாதோரின் சித்திரிப்பு என்பது வெறும் பெயரளவில் அல்லது திரளாகக் குறிப்பிட்டுச் சொல்கின்ற அளவிலே எஞ்சு நிற்கிறது.

இந்த நாவலில் மலாய்க்காரர்கள் குறிப்பாக கம்போங் எனப்படும் கிராம மக்களின் வாழ்வு மிகச் செறிவாக இடம்பெற்றிருக்கிறது மலாய்க்காரர்களின் வாழ்வியல்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் அன்றாடவாழ்வின் அடர்த்தியான சித்தரிப்பு இந்த நாவலில் இருக்கிறது. உணவுப் பழக்கம் முதல் காட்சிப்பின்னணி விவரிப்பு வரை புறச்சூழல் நன்கு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இந்தப் புறச்சூழல் சித்திரிப்பும் இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. மலேசியாவின் சமூக அரசியல் சூழலை அறிவதற்கு அ.பாண்டியனின் ரிங்கிட் பெருந்திறப்பாக அமையும்.

இந்நாவல் முழுதும் இழையோடும் வரலாற்று, சமூக, புறச்சூழல் சித்திரிப்புகளின் அடர்த்தியே மேலோங்கி இந்நாவலுக்கு ஆவணப்படுத்தும் தன்மையை அளிக்கிறது. இந்நாவல் முழுவதும் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பினாங்கு நகரின் சூழலும் கதைமாந்தர்களின் நடவடிக்கைகளுமே கதையின் பின்னணியையும் சூழலையும் புரிந்துகொள்ளச் செய்கிறது. ஆனால், நாவலின் இறுதி வரையில் இது நீள்கிறபோது அதுவே கதையின் வாசிப்புக்குத் தடை போடுவதாகவும் இருக்கிறது. புறச்சூழல் சித்திரிப்பு என்பது கதைச்சூழலுக்குத் தொடர்புடையதாகவும் இருக்கவேண்டும். நாவலின் இறுதியில் ஹசானின் உயிர் பிரிவதற்கு முன்னால் வருகின்ற உளவோட்ட சித்திரிப்பு நீங்கலாக கதைமாந்தர்களின் உளவோட்டத்தை வெளிப்படுத்த இந்நாவல் தவறிவிட்டது. ஹசானின் மரணத்துக்கு முந்தைய அரற்றல்கள் அவரின் வாழ்வை, கொந்தளிப்பைச் சொல்லி விட்டுச் செல்கின்றன. நாவலின் புறச்சூழல் சித்தரிப்பில் இருந்த கவனமும் லாவகமும் கதைமாந்தர்களின் உளவோட்டத்தைப் பிரதிபலிப்பதில் கைகூடவில்லை. குறிப்பாக, பாத்திமாவுக்கும் ஹசானுக்குமான உறவின் நுண்மை சரியாகப் புலப்படவில்லை. ஹசான் மனத்தில் பாத்திமாவின் வாழ்வை சூன்யமாக்கியதான குற்றவுணர்ச்சி இருக்கிறது என்பதை ஊகிக்கமுடிகிறது. ஆனால், அதன் நுண்மையைப் புலப்படுத்தும் காட்சிகள் அமைந்திருக்கவில்லை.

இக்குறுநாவலில் இயங்கும் கதைமாந்தர்களிடையே சிடுக்கும் பிணைப்பும் குறைவானதாகவே இருக்கிறது. இத்தன்மையும் நாவலை ஆவணம் நோக்கியதாக ஆக்குகிறது. மேலும், சோசிலிச கருத்துகளை முன்வைக்கும் தொழிலாளர் கட்சியின் கடையடைப்புப் போராட்டம் கம்யூனிச சித்தாந்தத்தால் ஆட்பட்டிருக்கும் ஒரு சிலரினால் எப்படி வன்முறையாக மாறுகிறது என்பதற்கு விரிவான காட்சிகளை வைத்திருக்கலாம். 1940களில் அகில மலாயா வர்த்தகக் கூட்டமைப்பு ஹர்த்தாலை முன்னெடுத்திருக்கிறது. தோட்டத்தில் பணியாற்றியத் தமிழர்களும் வேலை நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால், 1967இல் வன்முறைக்கு திசை திருப்பப்பட்டதாக இப்போராட்டம் அமைந்திருக்கிறது. மலாய் மக்கள் இடையே இனவுணர்வைத் தூண்டும் வகையில் தொடர்ந்து மலாய் அரசியல்வாதிகள்  பேசி வருகின்றனர் எனும் வரி இந்நாவலிலே அமைந்திருக்கிறது. மலாய் தீவுக்கூட்டத்தின் நாடுகளுள் சீனர்கள் செறிந்து வாழும் சிங்கப்பூர் தனி நாடாக ஆக்கப்படும் அளவுக்கு சீனர்களின் கை ஓங்கியிருக்கிறது. இம்மாதிரியான சூழலிலே மலாய் மக்களிடையே அச்சம் எழுவது தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கிறது. அனைவரையும் ஒருங்குபடுத்திப் போராட்டத்தை முன்னெடுக்காததும் மலாய் மக்களின் அச்சமும் சேர்ந்தே போராட்டத்தை வன்முறையாக மாற்றியிருக்கிறது. ஆனால், இம்மாதிரியான சாத்தியங்களை ஆராய்வதற்குப் போதுமான வாசிப்பு சாத்தியங்கள் இந்நாவலில் இல்லை எனலாம்.

இந்நாவலின் இறுதியில் ரிங்கிட் நோட்டை சில்லறையாக மாற்ற ஆயிஷாவும் சீனச் சிறுமியும் சந்தித்துக்கொள்ளும் தருணமும் மிகச் சிறந்தப் படிமமாக உருமாறுகிறது.  கலவரத்துக்குப் பிந்தைய மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இருவர் நாணயத்தை மாற்றிக்கொள்கின்றனர். அவர்களையும் சாட்சியாக்கிவிட்டு காலத்தின் உறைபனியில் அழுந்தியிருக்கிறது ரிங்கிட்டுக்கான போராட்டம் என அமைந்திருக்கிறது. ரிங்கிட் நாவல் காலத்தின் இடுக்குகளில் மறைந்திருக்கும் வரலாற்றுத் தருணத்தைப் புனைவாக மாற்றும் முயற்சி எனும் அடிப்படையில் குறிப்பிடத் தகுந்த முயற்சி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...