நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

நுண்வெளி கிரணங்கள்எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது நான்கு கால்களையும் மொத்தமாய் திருப்பி மறுபுறம் சீறும் கணம் குபுக்கென பார்வையாளர்களுக்குத் தூக்கிப்போடும். மேலிருந்து கீழாக அதன் சாகசத்தைப் பார்க்கும் கண்களுக்கு அதன் துள்ளல்கள் பழகப் பழக அத்தனையும் ஓர் ஒழுங்கில் நிகழ்வதாகத் தோன்றும். நுண்வெளி கிரகணங்களை வாசித்து முடித்தபோதும் அந்நாவல் சு.வேணுகோபாலின் கட்டற்ற துள்ளல்கள் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு என்றே மனதில் முதலில் தோன்றியது.

இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியதுமே பின்வாங்க ஒரு வாசகனுக்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. முதல் காரணம் சு.வேணுகோபாலின் கச்சாவான மொழிநடை. நூற்றுக்கும் மேற்பட்ட வட்டாரச் சொல்லாடல்கள் நாவலுக்குள் ‘புரிந்து’ நுழைய சில தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். ஆனால் மூன்று பாகங்களை கடந்துவிட்டால் நாவல் காட்டும் பாத்திரங்களில் பெரும்பான்மையானவை அறிமுகமாகிவிடும். பின்னர் அவர்களின் மொழி வழியாகவே வாசகனுக்கு ஒரு விவசாயக் குடும்பத்தில் வாழும் அனுபவத்தை நாவல் வழங்கத்தொடங்கும்.

எல்லா நாவல்களையும் நெருக்கமாக அறிந்துகொள்ள ஒரே மாதிரியான வாசிப்பு முறை உதவுவதில்லை. நுண்வெளி கிரகணங்களைப் பொறுத்தவரை மொத்தக் குடும்பத்தின் வரைபடம் ஒன்றை மனதில் உருவாக்கிக்கொள்ளுதல் நிகழ்வுகளைக் கோர்த்துச்செல்ல வசதியாக இருக்கும். ஆம்! கோர்க்கத்தான் வேண்டும். காரணம் இந்த நாவல் குறிப்பிட்ட ஒரு சிக்கலைப்பிடித்து, அதன் பல்வேறு கிளைகளை விரித்து, ஒன்றுடன் ஒன்று முயங்கியும் பிரிந்தும் பரபரப்புடனோ எதிர்பார்ப்பைத் தூண்டியபடியோ முடிவை நோக்கிச்செல்லும் தன்மையைக் கொண்டதல்ல. வரலாற்றில் எந்த இனக்குழுவாவது தனித்துவம் என்ற ஒன்றை பேண முடியுமா என்ற அழுத்தமான கேள்வியை முன்வைத்து, நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுடன் பல கிளைக்கதைகள், நுண்தகவல்கள் என சு.வேணுகோபாலின் அசாத்திய துள்ளலுடன் தாண்டியும் பாய்ந்தும் சம்பவங்களைச் சொல்லிச் செல்கிறது நாவல். முஸ்லிம்களால் தங்கள் இனத்துக்குள் கலப்பு வந்துவிடுமோ என கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த காப்புகுல ஒக்கலிகர் இனத்தவர்களின் குடும்பத்தில், அவர்கள் குலப் பெருமைகள் காலத்தின் முன் அர்த்தம் இழந்துபோகின்ற மைய கதையைத் தொற்றிக்கொண்டு படரும் கிளைக்கதைகள் சில சமயம் புதிராகத் தன்னைத்தானே ஓரிடத்தில் நிறுத்திக்கொள்கின்றன. சில கதைகள் காத்திருப்புகளோடு முடிவுறுகின்றன.

நாவலில் ரங்கசாமியை ஒரு மையமாகப் பிடித்துக்கொள்வது வரைபடத்தை உருவாக்க வசதியாக இருக்கும். அவருக்கு இரு அண்ணன்கள். மூத்தவர் போரையா. அடுத்தவர் சீரங்கு. ரங்கசாமியின் தங்கை சௌடம்மா. ரங்கசாமி தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் தங்கையுடன் வசிக்கும் சித்தையன் கோட்டை மிகப்பிரம்மாண்டமான வீடு. இந்த வீட்டைக் கட்டியவர் சித்தைய கௌடர். (கௌடர் என்பது கன்னடத்து சாதிப்பிரிவு) சித்தைய கௌடர் ரங்கசாமியின் தாத்தா. பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியும் என நம்பும் அளவுக்கு வசதி கொண்ட சின்ன ஜமீன். இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவி சீனியம்மா, இரண்டாவது மனைவி தேவம்மா. சித்தைய கௌடருக்கு ஜமீந்தாருடன் ஏற்பட்ட ஒரு வழக்கில் இருந்து மீள்வதற்காகத் தன் மகன் ஒருவனைக் கொலை செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது. மனஸ்தாபத்தால் மூத்த மனைவியை மறந்து இரண்டாவது மனைவியுடன் வாழும் அவர் தன் தேவையை தேவம்மாவிடம் சொல்ல அவள் உடன்பட மறுக்கிறாள்.

தேவம்மாவுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் மல்லையா சுதந்திரப்போராட்டம், ஆங்கிலேய எதிர்ப்பு எனத் திரிபவன். இரண்டாவது மகன் திம்மையா விவசாயம் பார்க்கிறான். இடையில் ஒரு பெண் பிள்ளைக்கு அடுத்து பள்ளி செல்லும் வயதில்  இரு மகன்கள். எவ்வளவு போராடியும் தேவம்மா மகனைக் கொல்ல ஒத்துக்கொள்ளாத நிலையில் சில ஆண்டுகள் பகையை மறந்து மூத்த மனைவியைத் தேடிச்செல்கிறார். அவளுக்கு ஏழு பிள்ளைகள். அவள் ஏக்கத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவளது மகன் கதிரையாவை ஆள் வைத்து வயல்வெளியில் கொலை செய்கிறார். குழந்தை பலி கொடுக்காத தேவம்மாவின் வாரிசுகளுக்கு சொத்தென எதுவும் கொடுக்காமல் எல்லாவற்றையும் மூத்த மனைவியின்  பிள்ளைகள் பெயரிலேயே எழுதி வைக்கிறார் சித்தைய கௌடர். இறுதிக்காலத்தில் குற்றவுணர்வு அழுத்த ஏழுவில்பட்டியில் கட்டிய பிரம்மாண்டமான வீட்டினை தேவம்மாவின் பையனான திம்மைய கௌடருக்கு எழுதி வைக்கிறார். அன்று தேவம்மா சம்மதித்திருந்தால் திம்மையாவுடைய தலைதான் உருண்டிருக்கும். இந்த திம்மையா கௌடருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளில் (ரங்கசாமி மற்றும் சகோதர சகோதரிகள்) சீரங்கு –  அவர் மனைவி குஞ்சம்மாவுக்குப் பிறந்த பத்மா வழியும் ரங்கசாமி – தங்கம் வழி பிறந்த வாரிசுகள் அசோக், காயத்திரி, தனகோபால் வழியும் நாவல் பல இடங்களுக்கு நகர்ந்து செல்கிறது.

அசோக் நித்யாவையும் காயத்ரி சதீஷையும் காதலிக்கிறார்கள். சாதியின் காரணமாக அந்தக் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு வருகிறது. ரங்கசாமி தனது கௌரவம் சித்தையன் கோட்டை வீட்டிலும் தனது சாதியிலும் உள்ளதென நினைக்கிறார். ஆனால் அசோக் சொல்வதுபோல சித்தையன் கோட்டை பெரியதுதான். உள்ளே புற்றுநோய். டோப்பா தலைபோன்ற வாழ்க்கை. சித்தைய கௌடர் எழுதிவைத்த பிரம்மாண்டமான வீட்டைப் பராமரிக்க முடியாத நிலையில் அக்குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வீடு கைவிட்டு போவதும் மணமாகி கணவனைப் பிரிந்த தங்கை சௌடம்மா ஒரு முஸ்லிமுடன் ஓடிப்போவதும் பயிரில் போட்ட பணம் மூழ்குவதால் வீட்டை மீட்க முடியாமல் இழப்பதும் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நாவல் இறுதியில் ரங்கசாமியின் மரணத்துக்குக் காரணமாகின்றன.

ரங்கசாமியின் மரணம் ஒருவகையில் காப்புகுல ஒக்கலிகர் இனக்குழு கடைப்பிடித்து வந்த தனித்துவத்தின் மரணம் என்றும் சொல்லலாம்.

காப்புகுல ஒக்கலிகர் இனத்தைச் சேர்ந்த அந்தக் குடும்ப உறுப்பினர்களை நேர்காணல் செய்து முனைவர் பட்ட ஆய்வேட்டை முடிக்க விக்னேஷ் என்ற இளைஞன் வருகிறான். அவ்விளைஞன் வழி மட்டுமல்லாமல் நாவலின் தொடக்கத்தில் தனகோபால் காணும் கனவு, திம்மையா  கௌடர் மனைவி பொம்மக்கா நினைவுகள் என அவ்வினம் குறித்த வரலாறும் சடங்குகளும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. பொம்மக்கா நினைவுகளில் வரும் தொன்மக் கதை சுவாரசியமானது. தனகோபால் முஸ்லிம் படையினர் தனது இனப்பெண்களைப் புணர்வதாகக் கனவு காண்கிறான். அந்தக் கனவிலிருந்தே நாவலும் தொடங்குகிறது. ஆனால் பொம்மக்கா உறுதியாகக் காப்புகுல ஒக்கலிகர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் முஸ்லிம்கள் கையில் சிக்கவில்லை என அந்தத் தொன்மக் கதையை நினைவு கூர்கிறாள். சுல்தானின் ஆணைக்குக் கட்டுப்படாவிட்டால் சேதாரம் அதிகம் என்பதால் முதலில் அவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த குதிரை வீரர்களுக்குத் தங்கள் பெண்களை மணமுடிக்கச் சம்மதிக்கின்றனர். பொட்டு வைப்பதையும் ராமர் வழிபாட்டையும் தடுக்கக்கூடாது என்பது மட்டுமே அவர்கள் வேண்டுகோள். சம்பந்தம் பேசும் நாள் அன்று மாட்டின் மாமிசம் விருந்தாகப் படைக்கப்படுவதைக் கண்டு பயந்து ஓடும் அவர்கள் தப்பிப்பது தொன்மக் கதைகளுக்கே உரிய மிகுபுனைவு அனுபவங்களுடன் சொல்லப்படுகிறது.

நாவலின் ஓட்டத்தோடு சொல்லப்படும் பல சித்தரிப்புகளும் நுணுக்கமான தகவல்களும் அபாரமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன. கிணற்றில் செங்குத்து சொருக்கு அடிக்கும் சாகசம், ரேஸ் மாடுகளைப் பராமரிக்கும் வித்தை, உருமி இசையின் நுட்பங்கள், கழுதையின் கல்யாணத்துக்கு முன்பான சேஷ்டைகள், நெல் அவிக்கும் ஆவியால் மாடுகள் படும் கஷ்டம் என கிராமத்தின் வாழ்வை முழுக்க உள்வாங்கியவர்கள் மட்டுமே அனுபவித்திருக்கும் நினைவுகள் நாவலை அந்நிலத்துடன் நெருக்கமாக்குகின்றன.

நாவல் அந்த மிகப்பிம்ரமாண்டமான வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாலும் என்னால் அதன் பிரம்மாண்டத்தை  உணரமுடியவில்லை. அதுபோலவே பட்டணத்தில் அசோக் தங்கியுள்ள வீடும் மனதில் உருவாகாமல் சொல்லாக மிஞ்சுகிறது.  கலைநுட்பம்  நிறைந்த எழுத்தாளனாக சு.வேணுகோபால் தன் பார்வைகளைப் பிரம்மாண்டத்தில் பதிவிடுவதில்லை.  மேன்மைகளையும் நொய்மைகளையும் வாழ்ந்துணர்ந்த விவசாயியாகவே அவர் எழுதுகிறார். அந்தப் பெரும் வீட்டின் பிரம்மாண்டத்தை நோயுள்ள அழகான உடம்பு என்றே  தங்கம், அசோக், ரங்கசாமி என அந்த வீட்டில் வசிப்போர் பல்வேறு தருணங்களில் சொல்கின்றனர். அந்த வீட்டின் அழகும் அமைப்பும் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை, அதில் வாழும் மனிதர்களின் மனங்களை அறியத்தக்கவர்கள் என நாவல் சொல்லாமல் சொல்கிறது.  அதேபோல் விவசாய நிலங்களின் தோற்ற அழகை, ஏர் மண்ணைக் கொத்திச் செல்லும் பாங்காலும், ஏரை இழுக்க முரண்டு பிடிக்கும் காளை வழியாகவும்  முளை பதிக்கும் பெண்களூடாகவுமே காண முடியும்.

சு.வேணுகோபால்சு.வேணுகோபாலின் கலைவெளிப்பாடு மனிதர்கள் வழிமட்டுமே புறப்படுகிறது. மனிதர்களின் பிறழ்வும், முறிவும், தடுமாற்றமும், துரோகமும், எழுச்சியுமே பாவனையின்றி நாவலை ஆக்கிரமிக்கின்றன. அவரது சிறுகதைகளையும் குறுநாவல்களையும் வலுவாக்கும் அவரது கதாபாத்திரங்களே இந்த நாவலிலும் வாழ்ந்து முடித்துச் செல்கிறார்கள். நவீன இலக்கிய வாசகன் ஒருவன், விரிந்த வாழ்வை வாழ்ந்து முடித்த அகச்சோர்வையோ; கதாமாந்தர்கள் வழி தத்துவங்களையோ; சம்பவங்களில் வரும் அறச்சிக்கல்களையோ இந்நாவல் வழி அடையப்போவதில்லை. மனிதன் தவறு செய்பவன்தான்; ஆனாலுமே அவன் மன்னிக்கப்பட வேண்டியவன் என்றும்; மனிதன் திடமான கொள்கையும் ஒழுங்கும் கொண்டவன்தான் ஆனாலுமே ஒரே நிமிடத்தில் அவற்றை தூக்கியெறியக்கூடியவன் என்றும்; மனிதன் எந்தப் பாதகமும் செய்யக்கூடியவன்தான் ஆனாலும் ஒரு கணத்தில் முழுமுற்றாய் திருந்தக்கூடியவனும் என்றும்; மறுபடி மறுபடி சொல்லிப் பார்க்கிறார் சு.வேணுகோபால். இப்படி அனைத்து மனிதர்களையும் தடையின்றி ஏற்றுக்கொள்ளும் பேரன்பு மனமே அவர் படைப்பின் ஆதாரம். அதுவே அவர்  படைப்பில் காட்டும் தரிசனமும்.

வீரசிக்கு – சௌடம்மா வாழ்க்கையில் நிகழும் திருப்பங்கள் அனைத்தும் நாவலின் ஆன்மா எனலாம். சௌடம்மாவைத் திருமணம் செய்துகொண்டாலும் வீரசிக்குவிற்கு ஜானகி என்ற இரு குழந்தைக்குத் தாயான பெண்ணிடம் திருமணத்துக்கு முன்பே ஏற்பட்ட தொடர்பு விலகாமல் இருக்கிறது. சௌடம்மா அவர்களைப் பிரிக்க மூர்க்கமாகவே செயல்பட்டு அதில் வெற்றியும் அடைகிறாள். அன்று இரவு அவளுடன் முயங்குவதுபோல பாவனை செய்த வீரசிக்கு களை எடுக்கும் கொத்தின் மரக்கைப்பிடியைப் பெண்ணுறுப்பில் நுழைத்துச் சிதைக்கிறான். வலியில் துடித்தவள் கருவில் இருக்கும் குழந்தை தொடையிடுக்கில் சிதைந்து ஒழுகும் கவிச்சியுடன் பேருந்தில் பயணம் செய்து தன் அண்ணன் குடும்பத்தை அடைகிறாள். அந்தக் குடும்பத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாகிறாள். பின்னர் இதே சௌடம்மா ஏற்கனவே திருமணம் புரிந்த ஜமீல் என்ற இஸ்லாமிய வியாபாரியுடன் சந்தர்ப்பவசத்தால் உறவுகொண்டு கர்ப்பமாகி அவனுடன் ஊரைவிட்டே ஓடியும் விடுகிறாள். எது தனக்கு நிகழ்வதைத் தடுத்தாளோ அதையே இன்னொரு பெண்ணுக்குச் செய்து அதனால் பெரும் பழிக்கு உள்ளாகிறாள். காப்புகுல ஒக்கலிகர் இனம் இஸ்லாமியரைத் திருமணம் செய்யக்கூடாது என எத்தனை பிடிவாதமாகத் தங்கள் நிலத்தை விட்டு குடிப்பெயர்ந்தார்களோ அந்த வம்சத்தில் ஒரு பெண் மதம் மாறுகிறாள். ஆனால் அவள் அந்தரங்கமாக உணர்வது பெண்ணுக்கு எந்த மதங்களிலும் விடுதலை இல்லை என்பதைதான். அதுவரை குற்ற உணர்ச்சியோடு இருந்த வீரசிக்கு அவள் ஓடிப்போனது அவ்வளவு பெரிய குற்றமல்ல எனும் நிலைக்கு மனம் மாறுகிறான். அடியாழத்தில் கனவுகள் வழி சௌடம்மா மீது வன்மமும் தன் அனுபவங்களின் வழி யதார்த்தமும் அவனை மாறி மாறி அலைக்கழிக்கிறது. அது ஒரு தலைமுறையின் அலைக்கழிப்பு. இந்தக் குழப்பமும் இரட்டை நிலையும் வெவ்வேறு தலைமுறைகளின் விளிம்பில் இருக்கும் ரங்கசாமிக்கோ அசோக்குக்கோ ஒருபோதும் உருவாகாது.

வெவ்வேறு தலைமுறைகள் என்றாலும் இருவரும் ஒன்றே. ரங்கசாமி தன் அண்ணனின் மனைவியுடன் ரகசியமாக உறவு வைத்துக்கொண்டவர் என்றால் அசோக் தன் நண்பன் அம்மா கீதாஞ்சலியின் வற்புறுத்தலால் உறவு வைத்துக்கொள்கிறான். இரண்டு சம்பவங்கள் ஒரே சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத கணத்தில் தனகோபால் உடம்பில் புகுந்த ஆவியின் மூலம் வெளிவருகிறது. ரங்கசாமி அண்ணனிடம் மாட்டிக்கொண்டு அதிலிருந்து விடுபட்டவர். அசோக் அவனாகத் திருந்தி ஊர் வந்தவன். ரங்கசாமி அதனைத் தன் உடல் பலத்தால் நிறுவிக்கொண்டவர். அவரளவில் அது ஆதி மனதின் இச்சை. அசோக்கிற்கு அது ஒரு சந்தர்ப்பம். அதில் தனது தவறு என்ன என்பது மட்டுமே தலையாய கேள்வியாக உள்ளது.

சௌட்டம்மாவைப் போலவே அடுத்த தலைமுறையில் திருமணம் செய்துபோகும் பத்மாவுக்கும் நிகழ்கிறது. ஆணாதிக்கம் தன் திமிரைக்காட்ட பெண்ணுறுப்பையே பலி கேட்கிறது. கேட்ட பணத்தைக் கொடுக்காததால் கணவன் அவள் யோனியில் மிளக்காய் பொடியை திணிக்கிறான். ஊருக்கு ஓடிவந்தவள் தனக்கு நிகழ்ந்த கொடுமையைச் சொல்கிறாள். முதலில் அவனைக் காயப்படுத்த நினைத்த உறவினர்கள் அவன் காணாமல் போகவே கால ஓட்டத்தில் கர்ப்பவதியான பத்மாவை மீண்டும் அவனுடன் வாழ வைக்க முயல்கின்றனர். பத்மா அதை எதிர்க்கிறாள். தான் ஒரு பண்டம் இல்லை என்பதை வலியுறுத்துகிறாள். தனக்கான உணர்வுகளும் அறிவும் உள்ளதைச் சொல்கிறாள். ஒருவகையில் இந்த நாவல் முழுவதும் பெண்களின் மீறல்களால் நிரம்பியுள்ளது. மீறல்களால் வரும் விளைவுகளை அறிந்தே அவர்கள் அதனைச் செய்கின்றனர்.

தேவம்மா கணவனுக்காகத் தன் மகனைப் பலியிட மறுத்து, தன் மனதின் நீதிப் படி நடக்க முடிவெடுக்கிறாள். சௌடம்மா  குலப் பெருமைகளை  அறிந்தும் இனி ஒருபோதும் வீடு திரும்ப முடியாது எனத் தெரிந்தும் முஸ்லிமுடன் செல்கிறாள். பத்மா தனக்குத் திருமணம் செய்து வைத்த  பெரியவர்களின் பேச்சுகளை மறுத்து தன் வாழ்வைத் தானே முடிவு செய்ய நினைக்கிறாள். நித்யாவும் தன் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிவர தயாராக இருக்கிறாள். தன் தந்தை தாழ்ந்த சாதியைச் சேர்ந்த வேலைக்காரனைக் கட்டிவைத்து அடிப்பதை பொறுக்கமுடியாத காயத்ரி பெரும் மதிப்பு வைத்திருந்த தன் அப்பாவையே எதிர்க்கிறாள். அவன் வீடு வரை சென்று ஆறுதல் சொல்கிறாள். பெண்களின் இந்த மீறல்கள் மூலமே காப்புகுல ஒக்கலிகர் இனத்தின் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அந்த மாறுதல்களே நாவலை முன்னகர்த்திச் செல்கின்றன.

பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரது தடுமாற்றங்களையும்  புரிந்து ஏற்று, மறந்துவிட வேண்டும் என்பது வேணுகோபாலின் எல்லா எழுத்துகளிலும் ஒலிக்கும் அடிக்குரல். இந்த நாவலில் தடுமாற்றம் இல்லாத மாந்தர் எவருமில்லை. அத்தையின் அழகு அசோக்கை தடுமாற வைக்கிறது, அக்காவின் அழகு தனபாலைத் தடுமாறச் செய்கிறது. அண்ணியுடன் உறவு கொள்கிறார் ரங்கசாமி. வீடு மதிக்கும் செல்லப் பெண்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் வலம் வரும் சௌடம்மாவும் காயத்திரியும் தடுமாறுகிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரனான மல்லையாவிலிருந்து, பொம்மக்காவிலிருந்து  எல்லாருமே யாதர்த்தமாக வாழ்க்கை வாழ்ந்துசெல்லும் சராசரி கதைமாந்தர்கள்.  குறைகளும், பலவீனங்களும் தடுமாற்றங்களும் நிறைந்தவர்கள். வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் இந்த சராசரி மனிதர்கள், மனதின் மேன்மையால் எட்டும் உச்சத்தை தொட்டுக்காட்டுவதே வேணுகோபாலின் எழுத்து. குடிகாரனான சீரங்கு, இறுதியில் தன் மனைவியைப் புணர்ந்த தம்பியை மன்னித்ததோடு, இந்த ஒரு சின்ன விஷயத்துக்காக நான் என் அருமைத் தம்பியை விட்டுவிட்டேனே என வருந்துகிறார். வீட்டைக் காப்பாற்றாமல் விட்டோமோ எனக் கவலைப்படுகிறார். அதற்கும்மேலாக, குடும்பத்தை தன் வீட்டில் கொண்டு வந்து வைத்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுடன் நித்யாவைக் குடும்பத் தலைவியாக்கும்போது, அவர் மேன்மைமிக்கவராக உயர்ந்து விடுகிறார்.

வெள்ளை உடையும் கறார் தன்மையும் மிக்கவராக வாழ்ந்த ரங்கசாமி, தன் குற்றம் வெளிப்பட்டவுடன் உயிரை விட்டுவிடுகிறார். காமுலம்மாள் இறந்ததைக் கேள்விப்படும் பொம்மக்கா, அவளுக்கு  இழைக்கப்பட்ட  துரோகத்துக்காக வருந்துகிறாள். தன் மகள் சௌடம்மாவுக்குப் பொம்மை கட்டி எரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதும், தன்னால் வாழ்விழந்து பொம்மை கட்டி எரிக்கப்பட்ட காமுலம்மாவை நினைத்து, அவள் சாபத்தை நினைத்து நடுங்குகிறார் திம்மையா கௌடர். அதை மட்டும் செய்ய வேண்டாம் எனக் கெஞ்சுகிறார்.

மெல்ல மெல்ல ஒவ்வொரு மனதின் தோலையும் உரித்து, அவர்களது கீழ்மைகளைக் களைந்து, மனிதத்தின் மாண்பைச் சாதாரணமானவர்களின் போராட்டமிக்க வாழ்க்கை மூலம் முன்வைக்கிறது ‘நுண்வெளி கிரகணங்கள்.’ அந்தத் தரிசனத்தை நவீன இலக்கிய அழகியலின் வாசிப்பு அனுபவத்துடன் தேடும் வாசகர்களால் வேணுகோபாலின் எழுத்தில் கண்டடைய முடியாது. காய்ந்த மண்ணில் உயிர்வளர்க்க, உயிர்சொரிந்து உழும் விவசாயியின் பெருமனத்தைப் பெறவேண்டியுள்ளது.

3 comments for “நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

  1. A.Punithawathy
    May 1, 2020 at 9:01 am

    சிறந்த ஆளுமையின் படைப்பை இன்னொரு சிறந்த படைப்பாளியின் விரிவான உண்மையான விமர்ச்சனம்

  2. Sunthari Mahalingam
    May 3, 2020 at 2:49 am

    Muthalil kathain ottham puriyaa vittaalum kathayai thodarnthu vaasikkum poluthu, Athan uyirotam nammai asaithuthaan paarkirathu. Vaasikka sirantha oru padaippu. Valthukkal

  3. கதிரவன்
    February 22, 2023 at 10:45 pm

    அருமையான மதிப்புரை. இந்நூல் வாசிப்பு குறித்து நீங்கள் குறிப்பிட்டுள்ளவை சிறப்பு. நானும் முதல் 106 பக்கங்கள் படித்துவிட்டு, வட்டாரவழக்கு புரியாமையாலும் கதைமாந்தர்களை பிரித்தறிய இயலாமையாலும் மீண்டும் முதலிலிருந்து படித்தேன். ரங்கசாமியை மையமாக வைத்தே உறவுகளைப் புரிந்துகொண்டேன். நல்ல அவதானிப்பு. வாழ்க வாழ்க.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...