வரலாற்றுநாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிக் கூறுகிறார். ”வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது”. இப்படியான ஒரு முயற்சியிலிருந்து சற்று விலகிப் போயிருக்கிறது ஆசிரியர் அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ நாவல். வல்லினம் நடத்திய குறுநாவல் போட்டியில் தேர்வுபெற்ற படைப்பு ரிங்கிட். ஆசிரியரின் முதல் நாவல் முயற்சியாக இருந்தாலும்கூட அதைப் பொறுப்புணர்வுடன் அணுகியிருப்பது பாராட்டுக்குரியது.
தேசிய வரலாறு என்பதே கொஞ்சம் சிக்கலானதுதான். தேசிய வரலாறின் உருவாக்கத்தில் முழுமையான வரலாறு தொகுக்கப்படாமல் தேர்ந்தெடுத்த வரலாறுகள் மட்டுமே தொகுக்கப்பட்டு பல உப வரலாறுகள் நீக்கப்பட்டும் தணிக்கை செய்யப்பட்டும் உருவாக்கப்பட்டவை. ஆக, தேசிய வரலாறு நாட்டின் இறையாண்மையும் அரசியல் தேவையும் பொறுத்துத் தொகுக்கப்பட்டது. அதில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அந்த வரலாற்றை எல்லா வழிகளிலும் தன் மக்களுக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் வழி செய்தது. அதில் ஒன்று, வரலாற்றுப் பாடம். வரலாற்றுப் பாடம் மூலமாக மாணவர் தலைமுறைக்கு நாட்டின் வரலாறு போதிக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்ட வரலாற்றுப் பாடத்தை மட்டுமே படித்துவிட்டு அதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தலைமுறையாக அது படிப்படியாக மாறிவிட்டது. காலத்தேவைக்கேற்ப வரலாறு பாடம் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதன் மூலமாக நீக்கப்பட்ட உப வரலாறுகள் பெருவாரியாக மறக்க வைக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. நம் அன்றாட வாழ்வில் புழங்கும் பணம் பற்றி நாம் அதிகபட்சம் அறிந்து வைத்திருப்பது என்னவாக இருக்கும்! இன்றைய தலைமுறை பணம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்து வைத்திருக்கிறார்களா! ரிங்கிட் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவு என்ன? இதுபோன்ற கேள்விகளை நாம் யோசித்திருப்போமா! இவற்றைப் பற்றி பாடத்திட்டத்தில் எங்காவது இடம்பெற்றுள்ளதா! கணித பாடத்தில் மட்டும் ரிங்கிட்டில் கணக்குக்கொடுக்கப்பட்டிருக்கும். வரலாற்றுப் பாடத்தில் ஜப்பானிய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாழைமர காகிதப்பணம் பற்றி குறிப்பு இருக்கும். அது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, அதனால் ஏற்பட்ட விளைவு என்ன என்பதைப் பற்றி பேசப்பட்டிருக்கும். ஆனால் ரிங்கிட் பற்றி அதுமாதிரியான குறிப்பு ஏதுமில்லை. இதுதான் தேசிய வரலாறு உருவாக்கித்தின் அரசியல்.
1967 – ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய நாணயமான ரிங்கிட் தொடர்பில் எழுந்த சர்ச்சையும் அதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்க காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்புப் பதினைந்து விழுக்காடு வரை வீழ்வது மக்களுக்குப் பெரும் பணச்சுமையை ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்துப் பினாங்கில் இயங்கிய தொழிலாளர் கட்சி அரசு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. காந்திய வழியில் ‘ஹர்தால்’ எனப்படும் கதவடைப்புப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெறும் நிலையில் திடீரென அப்போராட்டம் சில குழப்பங்களால் இனக்கலவரமாக மாறி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு நாட்டில் இனவாதப்போக்கு முற்றுவதற்கும் காரணமானது. இதன் தொடர்ச்சி 1969 மே-13 கலவரத்தில் போய் முடிந்து முற்றும் பெற்றது. தேசிய வரலாற்றில் மே-13 கலவரம் மட்டுமே எல்லோராலும் அறியப்பட்டிருக்கிறது. வரலாற்று பாடத்தில் மே கலவரம் பற்றிய குறிப்பு ஒரு கீற்றாக இடம்பெற்றிருக்கிறது. இப்படியாக ஒரு கலவரம் நடந்தது, அது இங்கு நடந்தது, இத்தனை பேர் இறந்தார்கள் என்று மட்டுமே மாணவர்களுக்குப் பாடம் புகட்டுகிறது. ஆனால் அக்கலவரம் ஒரே நாளில் திடீரென நடந்தது அல்ல. கலவரம் எங்கு தொடங்கியது? கலவரம் ஏன் நடந்தது? நடந்ததற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றிய எந்த விவரங்களையும் வரலாற்றுப் பாடத்தில் பார்க்க முடியாது. இப்படியாக மறக்கப்பட்ட வரலாறுகள் ஏராளம். அப்படியாக, மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட உப வரலாற்றில் ஒன்றுதான் மேற்சொன்ன 1967 இனக்கலவரம். அதனைத் தன் ரிங்கிட் நாவல் படைப்பிலக்கியம் மூலமாக மீட்டெடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நாவலை கோட்பாட்டு ரீதியாக விமர்சிக்காமல் ஒரு வாசகப் பார்வையில் அணுகுவது மூலமாக தேசிய வரலாற்றின் மீதான மாற்றுப் பார்வையைப் பெற முடியும். அவ்வகையில் இந்நாவலை வாசித்து முடிக்கையில், அறிஞர் ஜோர்ஜ் சாண்டியனாவின் ‘The one who does not remember history is bound to live through it again’ வாசகம் நினைவுக்கு வந்தது. நாவலில் பேசப்பட்டுள்ள அன்றைய அரசியலுக்கும் இன்றைய நவீன மலேசியாவின் அரசியலுக்கும் மாற்றம் இல்லை என்பது தெளிவாகும்.
ரிங்கிட் நாவலின் அடிநாதமே இனங்களுக்கிடையே இருக்கின்றே பதற்ற நிலையைப் பற்றி பேசுவதுதான். குறிப்பாக மலாய் மற்றும் சீன சமூகங்களுக்கிடையே நிலவுகின்ற பதற்றநிலை நாவலில் எல்லா நிலைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். மலாய்க்காரர்களின் பார்வையில் சீனர்கள் ஆபத்தானவர்கள், கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டு என்ற சொல்லே மலேசிய அரசியலில் தடை செய்யப்பட்ட வார்த்தை. உலக வரலாற்றில் கம்யூனிஸ்டு சித்தாந்தம் வேறாக இருந்தாலும் மலேசியாவில் கம்யூனிஸ்டு சிந்தாந்தாம் ஒரு தீவிரவாத சித்தாந்தம் போல சித்தரிக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் நாட்டின் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் செய்த அட்டூழியங்கள் என்னென்னவென்றும், அரசாங்கம் கம்யூனிஸ்டை எப்படி சமாளித்து அடக்கியது போன்ற விவரணைகள் வரலாற்றுப் பாடத்தில் இருக்கும். ஆனால் நாட்டின் சுதந்திரத்திற்காக முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதப்போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகளே. கம்யூனிஸ்ட் மீது வரலாற்றில் ஒரு சார்பு பார்வையாக மட்டுமே வைக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை நாவலில் சித்தரித்திருக்கிறார். அதை தேசிய கம்யூனிஸ்டின் பொதுச் செயலாளராக இருந்த கம்யூனிடு தலைவர் சின் பென் மூலமாகவே சொல்லப்பட்டதை போல நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
ஹசானின் தந்தை டாவூட் நண்பர்களுடன் காட்டுக்கு மரம் தேட செல்லும்போது காட்டுக்குள் இரண்டு கம்யூனிஸ்டுகளைச் சந்திக்கும் நிலையில், டாவூட் அவர்களை நோக்கி, ”நீங்கள் நாட்டின் பயங்ரகவாதிகள், உங்களை நாங்கள் உயிரோடு விடக்கூடாது” என்பதிலிருந்து கம்யூனிஸ்டுக்கள் மீதான மலாய் மக்களின் நிலைபாடும் புரிதலும் என்னவென்று புலப்படும். டாவூட்டிடம் கம்யூனிஸ்டுகளில் ஒருவராக இருக்கும் சின் பெங் அவர்களது தரப்பு விளக்கத்தை அளிக்கிறார். “நாங்கள் உங்கள் எதிரி அல்ல, உங்களுக்கும் சேர்த்தே போராடுகிறோம்…அந்நியர்களை விரட்ட ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். நாட்டுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் நாங்கள்” என்று கூறுவதிலிருந்து கம்யூனிஸ்டு தன் தரப்பு அறத்தை விளக்கும் இடமாகப் பார்க்க முடிகின்றது. அதோடு, அது கம்யூனிஸ்டு மீதான மாற்று அரசியல் பார்வையைக் கொடுக்கின்றது.
தேசிய அரசியலில் இன்றுவரை கம்யூனிஸ்டு குறித்து அச்சத்தின் வெளிப்பாட்டை அவ்வப்போது இன அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டு மீதான மக்களுக்கு இருந்த பயம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். நாவலில், ஆமாம்…. நாட்டில் எல்லா எதிர்ப்புகளையும் அடக்க அரசுக்கு அதுதான் ஆயுதம். மலாய்க்காரர்கள் கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள். துங்குவுக்கு இது போதாதா” எனும் கூற்று அதைப் பறைசாற்றுகிறது. அதை வைத்துதான் கண்ணுக்குத் தெரியாத அரசியல் லாவகமாக நடத்தப்படுகின்றது. சீனர்கள் கம்யூனிஸ்டுகள். அவர்களால் மலாய் அதிகாரத்திற்கு ஆபத்து என்றே இன்றுவரையிலும் பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகின்றது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் வசிக்கும் மலாய் மக்களிடையே அந்த எண்ணம் ஆழமாகவே விதைக்கப்பட்டுள்ளது. நாவலில் ஆங்காங்கு இது தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றிருக்கும்.
” கம்யூனிஸ்டுகள் மேல் உள்ள பயத்தை இந்த அரசியல்வாதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்……”
”சீனன் மாதிரி நாம இருக்க முடியுமா? தே கொண்ட்ரோல் தெ எக்கனமி. அவன் கிட்டே நாட்ட கொடுத்தா கோம்னீஸ் ஆட்சிதான் நடக்கும். தெரியும்ல என்னா நடக்கும்னு… ரோட்டுல நிக்க வெச்சு சூட் பண்ணுவான்… நாம கஞ்சிக்குதான் அலையனும்…”
மலாய்க்காரர்களுக்குச் சீனர்களின் அரசியல் ஈடுபாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. சீனர்கள் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பது அவர்களுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. மாறாக, சீனர்கள் அரசாங்கத்தை எதிர்த்து அரசியல் புரியும்போது அது தங்களை எதிர்ப்பதாகவே கருதுகிறார்கள். நாட்டு நலன்மீது உண்மையிலேயே அக்கறையோடு செயல்பட்டாலும் அது எல்லாம் மலாய்க்காரர்களின் உரிமைக்கு எதிராக தொடுக்கப்படும் போர் என்றும் அவர்களது அதிகாரத்தை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டப்படுவதும் இன்றுவரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மசீச கட்சி அம்னோவின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சியாக இருப்பது சிக்கல் இல்லை. ஆனால் தேசிய முன்னணியின் அரசியலை எதிர்த்த ஐ.செ.க மலாய்க்காரர்களின் எதிரியாகப் பார்க்கப்படுவது தற்கால அரசியலில் இருக்கின்ற ஓர் எடுத்துக்காட்டு.
அறுபது ஆண்டு கால அரசியலில் முதன் முதலாக நாட்டின் வரலாற்றில் மே, 2018 14வது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தன. அதில் ஜனநாயக செயல்முறை கட்சியும் (ஐ.செ.க) ஓர் உறுப்புக்கட்சி. அரசாங்க அமைப்பில் முக்கிய பதவியாக பார்க்கப்படும் நிதி அமைச்சு பதவிக்கு ஐ.செ.க கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் நியமிக்கப்பட்டபோது மலாய் அரசியல்வாதிகளிடம் எழுந்த கண்டனங்களும் கூச்சல்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய எதிர்ப்பு மக்களின் எதிர்ப்பு போல காட்டப்பட்டது. நாட்டின் அரசிலமைப்பில் மலாய்காரர்களின் உரிமையும் நலனும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இருந்தும் ஐ.செ.க கட்சிக்கு அப்பதவி வழங்கப்பட்டதால் இந்நாட்டில் வாழும் மலாய்க்காரர்களின் உரிமையும் நலனும் பாதிக்கப்படும் என மாயையை உருவாக்கி அரசாங்க கவிழ்ப்பு செய்ததெல்லாம் மிக அண்மையில் அரங்கேறிய நாடகம். இதை ரிங்கிட் நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கம்யூனிஸ எதிர்ப்பு அரசியல் எச்சத்தின் மிச்சமாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். மற்றொன்று மலேசிய அரசியல் வரலாற்றில் ஐ.செ.க கட்சியும் 1966 ஆண்டு காலக்கட்டத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டு 1969 இல் நடந்த பொதுத்தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு வென்றதை அடுத்து நடந்த வெற்றிக்கொண்டாட்ட பேரணி மீதான காழ்ப்புணச்சி மே-13 இனக்கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆக, மலாய்க்காரர்கள் மட்டுமே அலங்கரித்த பதவியை ஐ.செ.க கட்சிக்கு வழங்கியது மலாய் அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் வரவழைத்த காரணங்களாகக் கூட இருக்கலாம்.
1967 இல் நடந்த கலவரம் கூட ஏழை மக்கள் நலன் மீதும் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டு தொழிலாளர் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றிப் பெறும் நிலையில் இருந்தபோது அது திடீரென ஓர் இனக்கலவரமாக மாறுகிறது. அல்லது அது திட்டமிட்டுக் கூட இனக்கலவரமாக மாற்றியிருக்கக் கூடும் எனும் ஐயத்தை நாவலில் சில இடங்கள் வெளிப்படுத்தும். விக்டரிடம் நீல சட்டைக்காரன் ஒருவன் போராட்டதைப் பற்றி, இது கம்யூனிஸ்டு திட்டம் என்றும் போராட்டம் திசை திருப்பப்படக்கூடும் எனக் கூறுவான். போராட்டத்திற்கு முன்பாகத் தொழிலாளர் கட்சியின் தலைவர் தொண்டர்கள் இடையே உரையாற்றும்போது, ”நாம் இங்கு கவனமாக இருக்க வேண்டும். நான் பலவித வதந்திகளைக் கேள்விப்படுகிறேன். அவை பொய்யாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். நமது நோக்கத்தை சிதைக்க நம் எதிரிகள் காத்திருக்கிறார்கள். ஆகவே, கட்சி உறுப்பினர்கள் மிக கவனமாக இருங்கள்…எந்த சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடியுங்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள்….” என்று கூறுவார். அதுபோல தேசிய அரசியல் கட்சியில் சிறிய பதவி ஒன்றில் இருக்கும் சைனூடின் அனுவாரிடம், ”சீனனுங்க ஏதாவது கலாட்டா பண்ணுனா அது நமக்குதான் ஆபத்து… அவனுங்க மக்களைத் தூண்டிவிடுறானுங்க…. சீனனுங்க எப்ப நாட்ட கைப்பற்றலாம்னு வேலை செஞ்சிகிட்டே இருக்கானுங்க… இதெல்லாம் கூட உள்நோக்கத்தோட செய்யறதுதான்…” எனக் கூறுவது வழியாக முன்கூட்டியே போராட்டம் கலவரமாக மாற்றுவதற்குத் திட்டம் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மே-13 கலவரமும் இதுமாதிரியாகத் திட்டமிட்ட நடத்தியிருக்கக்கூடும் என ஐயம் எழவே செய்கின்றது.
கம்யூனிஸ எதிர்ப்பு அரசியல் எந்தளவுக்கு வெளிப்பட்டது என்பதை கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங் உயிருடன் வாழ்ந்த போது நாட்டுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் அவர் இறந்த பின்னர் அவரது அஸ்தி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பல இடங்களில் தூவப்பட்டதையடுத்து எழுந்த கேள்விகளும் கண்டனங்களும் உணர்த்தும். அதன்பொருட்டு நடந்த புகார்களையும் காவல் துறையின் விசாரணைகளையும் நினைத்துப்பார்க்கலாம். இறந்தவரின் அஸ்தி இந்நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தூவப்பட்டதால் மீண்டும் கம்யூனிஸ சித்தாந்தம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது என கோஷம் எழுப்பியவர்களை என்னவென்று சொல்வது! ரிங்கிட் நாவலில் ஒரே மாதிரியான காட்சியமைப்பு இரண்டு இடங்களில் வரும். ஒன்று டாவூட் நண்பர்களுடன் காட்டுக்குச் சென்று கம்யூனிஸ்டு சின் பெங்கை எதிர்கொள்வதும் அதன் பின்பு கம்யூனிஸ்டு பற்றிய நினைப்பே டாவூட்டின் மனதில் அச்சமாகவும் கேள்வியாகவும் நிறைந்திருக்கும். மற்றொன்றில் டாவூட்டின் மகனான ஹசான் தன் நண்பர்களுடன் காட்டுக்கு வேட்டைக்குச் சென்று புலியை எதிர்கொண்டு நிற்கும்போது புலியின் கண்கள் பெரும் ஜுவாலையாகத் தனக்குக்குள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாகவும், அந்தக் காடு முழுவதும் புலியே வியாபித்து நிற்பதாகவும் ஹசான் எண்ணுவார். இவ்விரண்டு காட்சிகளும் வாசகர்களுக்குக் கொடுப்பது ஒரேமாதிரியான அனுபவம்தான். இக்காட்சிகளை இணைத்துப் பார்க்கும்போது கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங்கும் அவரது கம்யூனிஸ சிந்தாந்தமும் இந்நாட்டு மலாய்க்காரர்களின் மனதில் ஒரு புலியைப் போலவே முழுமையாக வியாபித்து நிற்பதாக எண்ணத் தோன்றுகிறது.
ரிங்கிட் நாவல் ஒரு வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பதிவு செய்த அதேவேளையில் அக்காலக்கட்டத்தில் பிரதமராகச் செயல்பட்ட துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தைப் பதிவு செய்திருப்பது சிறப்பு. வரலாற்றுப் பாடத்தில் நாட்டின் சுதந்திரத் தந்தை, முதல் பிரதமர் என அவரது பெருமிதங்களைக் கற்பிதம் செய்யப்பட்டதை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு அவருடைய பலவீனம் என்னவென்பதை இந்நாவலில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் நமக்கு விளக்குகின்றன. டாவூட் காட்டில் சின் பெங்கை எதிர்கொண்ட சமயம், ”எங்களுக்கு போராட எங்கள் தலைவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறும்போது அதற்கு சின் பெங், ”இந்த நாடு யாரால் அடிமைப்படுத்தப்பட்டிருகிறது…உங்கள் தலைவர்கள் யாருக்காக வேலை செய்கின்றனர்?” எனும் கேள்வியை முன்வைக்கிறார். மலாய் தலைவர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்களுக்கே வேலை செய்பவர்கள் எனும் விமர்சனம் வைக்கப்படுகிறது. அடுத்ததாகத் தொழிலாளர் கட்சியின் அலுவலகத்தில் இடதுசாரியை ஆதரிக்கும் சில மலாய் தலைவர்கள், ”துங்குவுக்கு நம்மைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. அவருக்கு உல்லாசமாக போக்கர் விளையாடவும் குதிரை ரேஸ் போகவும்தான் நேரம் இருக்கு. பல மாதங்களாக மக்கள்படும் அவதிகளை அரசாங்கம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” என கூறுகிறார்கள். துங்கு, கெடா அரச பரம்பரையில் பிறந்தவர். செல்வ செழிப்புடன் வளர்ந்தவர். லண்டனில் கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் பாமரர்களின் கஷ்டங்களை அறிந்து புரிந்து செயல்படாதவர் என விமர்சனம் வைக்கப்படுகிறது. இதே விமர்சனம் மற்றொரு இடத்திலும் வைக்கப்படுகிறது. தொழிலாளர் கட்சியின் தலைவர் கதவடைப்புப் போராட்டத்திற்கு முன்பாக உரை நிகழ்த்துகிறார். அதில், ”நாம் சாதாரண மக்களின் பிரதிநிதியாக இந்தப் போராட்டத்தை நிகழ்த்த வேண்டியது அவசியம். துங்குவின் அரசாங்கத்திற்கு மக்களின் நிதிநிலையை ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லை. அவர் செல்வந்தர்களின் செல்லப்பிள்ளை. ஆகவே ஒவ்வொரு சென்னும் ஏழைகளுக்கு மதிப்பு மிக்க பணம்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்” என்கிறார். இப்படியாகப் பல இடங்களில் துங்கு மீதான விமர்சனங்கள் இந்நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நாவலில் சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையிலான இனப்பதற்றம் ஒருபுறம் இருக்க, இவர்களுக்கு இடையில் இந்தியர்களின் நிலை என்னவாக இருந்தது என்பது நாவலில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதை கொஞ்சம் தெளிவுற அணுக வேண்டியுள்ளது. மலாய்க்காரர்கள் நாட்டின் மீது அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள். மலாய்த்தலைவர்களே நாட்டை ஆள்கிறார்கள். சீனர்கள் பொருளாதார பலத்தைக் கொண்டிருப்பவர்கள். சீனர்களும் அரசியலில் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்தியர்கள் இதிலிருந்து விலகி இருப்பவர்களாகவே வருகிறார்கள். நாவலின் மையமான 1967 ஆம் ஆண்டு கலவரத்தில் இந்தியர்கள் பார்வையாளராகவும் சாட்சியாளராகவும் மட்டுமே இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் தோட்டத்தில் பணிபுரியும் பாமர தொழிலாளிகள் அல்ல. இந்நாவலில் ஓரிடத்தில் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் பற்றி பேசப்பட்டிருக்கும்.
”பிரவுன் எஸ்டேட்டும் வேற கைக்குப் போயிடுச்சினு சொல்றானுங்க. தொரை செத்த பின்னால தொரையம்மா கையில தோட்டம் இருந்துச்சி. இப்ப அவளுக்கும் வயசாயிடுச்சின்னு தோட்டத்த பிரிச்சி சீனங்கிட்டயும் செட்டியார்கிட்டயும் வித்திட்டாளாம். அவனுங்க எப்ப வந்து வெரட்டப் போரானுங்களோ தெரியல. அந்த நிலத்துல பங்கலா வீடு கட்டி விக்கப்போறதா பேச்சு இருக்கு. இந்த அரசாங்கமும் ஒன்னும் பண்ணல. காட்டை நாடா ஆக்குன சனத்துக்கு இதுதான் பரிசு. காசு மதிப்பு கூடுனா என்னா கொறைஞ்சா என்னா? தோட்ட மக்களுக்கு எல்லாம் ஒன்னுதாய்யா…” இந்த வரி தோட்டத்து மக்களைப் பற்றி கிருஷ்ணன் தண்டல் வழியாக விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் பினாங்கு நகரில் இருக்கும் இந்தியர்களின் பிரதிநிதிகள்தான் காளிமுத்துவின் முடித்திருத்தக்கடையில் கூடியிருப்பவர்கள். அவர்களின் பெயர்களின் வழி அவர்கள் எந்தெந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். அவர்களின் உரையாடல்கள் வாயிலாக நகரில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்களில் பெரும்பாலோர் பொருள் ஈட்டுவதற்காக மட்டுமே அங்கு இருப்பவர்கள். போதுமான அளவுக்குப் பொருளீட்டிய பிறகு மீண்டும் சொந்த ஊருக்கே சென்றுவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே வாழ்ந்தவர்கள். அவர்கள் அவ்வப்போது சொந்த ஊருக்குச் சென்று வருபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நாட்டு அரசியலைப் பேசினாலும் அதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அரசியல் சூழலைக் கவனித்துத் தக்க நேரத்தில் சொந்த ஊருக்குப் புறப்பட தயாராக இருப்பவர்கள். இவ்வாறாக இங்கு வந்து, போதிய அளவுக்கு பொருளீட்டிய பிறகு ஊருக்குத் திரும்பியவர்கள் அதிகம். ஆகவேதான், அவர்கள் நாவலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத மக்களாகவே வந்துவிட்டு போகிறார்கள்.
***
தொடக்கத்தில் சொன்னதுபோல ஒரு கலைப்படைப்பாக உருவாக வேண்டிய இந்நாவல் அதிலிருந்து விலகிப்போயிருப்பதற்குச் சில காரணங்களை முன்வைக்கலாம். குறிப்பாக, ஒரு குறுநாவலில் அதிகப்படியான கதாபாத்திரங்கள் வருவதால் நாவலில் மையமான கதாபாத்திரம் என்று சொல்லும்படியாக எந்தக் கதாபாத்திரமும் நிற்கவில்லை என்றாலும் ஃபாத்திமாவின் கதாபாத்திரம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. கலவரத்தில் சிக்கி தாக்கப்பட்டுத் தப்பித்துப்போய் சீனக்கிழவியின் வீட்டின்பின் ஒளிந்துகொள்ளும் ஹசான் தன் இயலாமையினாலும் விரக்தியாலும் சீனக்கிழவியை அடித்து கொன்றுவிட்டு இரண்டு வயது நிரம்பிய அவளது பேத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் விடுகிறார். ஹசான் தானே அக்குழந்தையை வளர்க்கிறார். அந்தச் சீனக்குழந்தை பின்பு ஃபாத்திமாவாக மாறுகிறது. ஆனாலும் வாத்து, ஆங்சா வளர்த்த சீனக்கிழவியின் பேத்தி என்பதன் அடையாளமாக ஃபாத்திமாவின் கால் வளைந்த காலாக அமைந்திருப்பது எதிரப்பாராத ஒன்றுதான். மேலும், கதாபாத்திரங்களுக்கு அதிகப்படியான பின்புல விவரிப்பு கதாபாத்திரங்களுக்கு எவ்வித பலத்தையும் கூட்டவில்லை. முன்னோக்கியும் பின்னோக்கியும் பயணிக்கும் கதைக்களம் மையத்தை வந்தடைவதற்குள் நாவல் அதன் முடிவை நெருங்கிவிடுகிறது.
இதுவரை மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் வெளிவந்துள்ள நாவல்களில் ‘ரிங்கிட்’ நாவல் மலாய் மக்களின் வாழ்க்கை முறையை மிக நுணுக்கமாக அணுகியுள்ளது. அவர்களுடைய கலாச்சாரம், வாழ்க்கை முறையில் இடம்பெற்றுள்ள உணவுகள், குடும்ப அமைப்பு முறை, உடைகள் என அனைத்தும் நேர்த்தியாகவும் இயல்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரின் மலாய் இலக்கிய வாசிப்பின் பிரதிபலிப்பு, மலாய் சமூகத்தின் வாழ்க்கை முறையை நன்றாக உள்வாங்கிக் கொண்டதைப் புலப்படுத்துகிறது.
ரிங்கிட் நாவல் கொண்டாடப்பட வேண்டிய நாவலா என்றால் இல்லை எனலாம். அதுபோல சராசரி நாவல் என்று கடந்துவிடலாம் என்றால் முடியாது எனலாம். மாறாக, இன்றைய தலைமுறைக்கு மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்து அதை ஒரு படைப்பிலக்கியமாக ஆவணப்படுத்திக் கொடுத்திருப்பது அதை வாசிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. நாவலை வாசித்து முடிக்கையில், மீண்டும் நம் கண் முன் நிகழ்ந்து முடிந்த வரலாற்றை நிகழ்த்திப் பார்த்து அதற்குச் சாட்சியாளராக மட்டுமே இருக்க முடியும்.