வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

வாழ்கமௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக இல்லை. அவனை அந்த நகரின் பிரபல வழக்கறிஞர் என அவன் அணிந்திருக்கும் ‘சில்க் சட்டை விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தை’க் கொண்டே முடிவு செய்து கொண்டு அந்த ஆள் துரத்தி இருக்கிறான். நகரில் வழக்கமாக பெரிய மனிதர்கள் அணியும் அந்த உடையை  அன்றைய நாளில் இவன் மட்டுமே அணிந்திருக்கிறான் என்பதால் அந்த ஆள் இவனை வழக்கறிஞர் என நினைத்து விடுகினான். அன்று நடக்கவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு ‘ஜவஹர்’ வர இருப்பதால் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கதர் சட்டைக்கு மாறி இருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன் இக்கதையை வாசித்தபோது இது எழுதப்பட்ட ஆண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாடபுத்தகங்கள், அரசியல், இலக்கியம் என அனைத்தும் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவை சுதந்திரத்துக்கு முன் பின் என்றே யோசிக்க கற்றுக் கொடுத்துவிட்டன. (காமத்தின் அடுக்குகளுக்குள் நுழையும் மோகமுள் கூட காந்தியின் இறப்புக்கு வருத்தப்படுகிறது!). ‘சுதந்திர தாகத்தால்’ இந்தியர்கள் வறட்சியடைந்து கிடந்ததாக இன்று நம்பப்படும் ஒரு காலத்தில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்டத்தின் ஒரு பாவனையான முகத்தைக் காண்பிக்கிறது. சுதந்திரப் போராட்டமே பாவனையானது என்று சொல்லவில்லை. அதன் ஒரு பாவனையான அம்சத்தை மட்டும் தொட்டுக் காண்பித்து தன்னை முடித்துக் கொள்கிறது. ஊதிப் பெருக்கப்படும் சமூக நிகழ்வுகளில் ஒரு கலைஞன் நிகழ்த்தக்கூடிய இடையீடு இத்தகையதாகவே இருக்க இயலும். தரப்புகளாலும் எதிர்த்தரப்புகளாலும் முனைகள் வெட்டப்பட்டு ஒரு ‘திருத்தமான வரலாறு’ உருவாக்கப்படும்போது இலக்கியம் அவ்வரலாற்றில் ஒரு கூர்மையான இடையீட்டினை நிகழ்த்துகிறது. மதிப்பீடுகளின் மீது கலை நிகழ்த்தும் இத்தகைய இடையீடே சமூகத்தை தொந்தரவுக்கு உள்ளாக்கி அம்மதிப்பீடு சார்ந்த விவாதங்களை உருவாக்குகிறது.

இமையத்தின் ‘வாழ்க வாழ்க’ என்ற நெடுங்கதை மாறாட்டம் கதையைப் போல ஒரு சமகால அரசியல் சூழலைப் பேச முனைகிறது. இக்கதை அதனை எவ்வளவு வெற்றிகரமாக செய்திருக்கிறது என்பதைப் பேச வேண்டியிருக்கிறது. நூலில் இப்புனைவு குறுநாவல் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் எடுத்துக் கொண்டிருக்கும் ஒற்றை பரிணாமம் கொண்ட பேசுபொருள் அதை ‘தொண்டர்களின்’ கோணத்தில் இருந்தே சொல்லிச்செல்லும் தன்மை போன்றவற்றைக் கொண்டு இப்புனைவை ஒரு நெடுங்கதையாக வாசிக்கலாம் என எண்ணுகிறேன். ஒருவேளை கதையில் ‘தலைவியின்’ கோணமும் சொல்லப்பட்டிருந்தால் ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் இரண்டு பார்வைக்கோணங்கள் கதைக்குள் வெளிப்பட்டு நாவல் தன்மையை அடைந்திருக்கும். ஆனால் இக்கதை நாவல் என்ற வகைமையை விட சிறுகதை என்ற வகைமைக்கே நெருக்கமாக இருக்கிறது. புனைவின் உள்விரிவு காரணமாக இதனை நெடுங்கதை என வகுத்துக் கொள்ளலாம்.

கதை நிகழும் காலம் ஒரு நாள்தான். வெங்கடேசப் பெருமாள் என்ற உள்ளூர் அரசியல்வாதி தேர்தல் பிரச்சார கூட்டத்துக்காக ஆள் சேர்ப்பதில் கதை தொடங்குகிறது. பேரனை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக ஆண்டாள் ஐநூறு ரூபாய் பெற்றுக் கொண்டு கட்சிக் கூட்டத்துக்கு புறப்படுகிறாள். பிரச்சாரக்கூட்டத்தில் ஆண்டாள் உட்பட வேறு சில பெண்களின் காத்திருப்புகளும் அங்கலாய்ப்புகளும் புலம்பல்களும் கதையுடலை கட்டமைக்கின்றன.

இந்த கதைச்சூழலின் வழியே இமையம் சமகால அரசியல் இயக்கங்கள் மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கிறார். பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரால் ஓட்டுக்குப் பணம் பெறுகிறவர்கள், காசுக்காகவும் மதுவுக்காவும் உணவுக்காகவும் கட்சிக்கூட்டத்துக்கு செல்கிறவர்கள் என்று ஏளனமானகப் பார்க்கப்படும் சாமானியர்களே இக்கதையில் பாத்திரங்களாக வருகின்றனர். அவர்கள் பக்கத்தின் நியாயங்களை இக்கதைப் பேசவில்லை. மாறாக சித்தரிப்புகளின் வழியாக இயல்பாகவே இத்தகைய அவலங்களின் காரணங்களை நோக்கி வாசகனை இயல்பாக நகர்த்தி விடுகிறது.

தொலைக்காட்சிகளின் பரவலாக்கத்துக்கு முன் ஒரு கட்சித் தலைவரை நேரில் பார்ப்பது பரவசம் தரக்கூடிய அனுபவம். சிறு வயதில் திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட ஒரு வெள்ளப்பெருக்கின் போது அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் பார்த்ததை இன்றும் என் அம்மா பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் இன்று பிரபலமானவர்களின் அன்றாடங்கள்கூட – அல்லது கட்டமைக்கப்பட்ட அன்றாடங்கள் – சமூக வலைதளங்களில் காணக் கிடைக்கின்றன. மேலும் வெகுஜனத்துக்குபெரும்பாலான தலைவர்கள் மீது உள்ளார்ந்த ஈர்ப்பும் அன்பும்கூட இருப்பதில்லை. ஆகவே தங்களுடைய செல்வாக்கை  ‘இயல்பாக’ எந்தத் தலைவராலும் நிரூபிக்க முடிவதில்லை. செல்வாக்கும்கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய ஒன்றாக மாறிவிடுகிறது. தலைவர்களைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் மக்கள் திரள்வது என்ற நிலை மாறி மக்களை கூலி கொடுத்து கூட்டிக்கொண்டுவந்து அமரவைக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படியான குறைந்த கூலிக்கு வரக்கூடியவர்கள் அடித்தட்டினராகவே இருக்கின்றனர். ஆகவே ஒரு பெரும் அரசியல் கட்சியின் பிரம்மாண்டமான கூட்டத்தை ஒரு வகையில் ஏழைகளின் கண்காட்சி என்று சொல்லலாம். பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்கு மேடையில் இருக்கும் தலைவர்கள் காட்சிப் பொருளாகிறார்கள்.  இந்த புதிய ‘கலாச்சாரத்தை’ சித்தரித்து இருப்பது இக்கதையின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இக்களத்தில் நின்று கொண்டு உரையாடல்கள் வழியாக இமையம் பலimayam விமர்சனங்களை முன்வைக்கிறார். ஒட்டுமொத்தமாக ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதற்குள்ளும் ஜாதிய அதிகாரத்தைப் பேண முயல்தல்(ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தங்கள் அருகில் அமரக்கூடாது என்று ஆதிக்கசாதி என்று தங்களை நினைத்துக்கொள்ளும் பெண்கள் பிரச்சினை செய்கிறார்கள்), ஒரு கூட்டம் நடத்தப்படுவதில் நடக்கும் ஊழல் (பிரியாணிக்கு பணம் பெற்றுக் கொண்டு குஸ்காவை கொடுப்பது), ஆளுங்கட்சியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவூட்டும் அதன் தலைவியுமே பிரதானமாக விமர்சிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பெரும் அரசியல் கட்சிகள் மக்கள் நலனை எந்த அளவுக்கு புறக்கணிக்கின்றன என்பது சார்ந்த பேச்சுகள் என தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலை இக்கதை நன்றாகச் சித்தரித்து இருக்கிறது. பெரும் பொருட்செலவில் நடைபெறும் கூட்டத்தில் தற்காலிக கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்படாதது குறித்தும் இக்கதை விசனப்படுகிறது.

சமகால சமூக விமர்சனம் மட்டுமே இப்படைப்பின் நோக்கம் என்றால் அது நிறைவேறி இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ஒரு சமூக விமர்சனத்தை மட்டும் முன்வைக்கும் புனைவு ஒரு முதன்மையான புனைவாகுமா என்று கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிலும் இமையம் போன்ற ஒரு முன்னணிப் படைப்பாளியுடைய ஆக்கம் எனும்போது இக்கேள்வியை இன்னும் சற்று அழுத்தமாகவே கேட்கலாம் என நினைக்கிறேன்.

மீண்டும் மாறாட்டம் கதைக்கே வரலாம். அக்கதை நினைவில் தங்குவதற்கு முதன்மையான காரணம் அது வெளிப்பாட்டுக்கு தேர்ந்து கொண்ட வடிவம்தான். ஒரு மர்மக்கதையை போல நகர்ந்து திடீரென மொத்த ஊரும் ‘கதர் மயமாகி’ இருப்பதை கதையின் முக்கியப் பாத்திரம் கண்டு கொள்ளும் இடத்தில் கதை முடிகிறது. காங்கிரஸ் கூட்டம் நடத்தும்போது மட்டும் செல்வந்தர்கள் இப்படி கதர் உடுத்துவது வழக்கம்தானே என்று இயல்பாகச் சொல்லிச் செல்கிறது. அந்தப் பக்க அளவும் ஒரு சிறு திறப்பாக கதையை முடித்துவிடுவதும் அந்த விமர்சனத்தை ஒரு புன்னகையுடன் நினைத்துக் கொள்ளும்படி செய்கிறது. சுந்தர ராமசாமியின் பள்ளம் கதையில் சினிமா, இலக்கியம், போதை வஸ்துகள், குழந்தையைக் கொஞ்சுதல் என அனைத்தையுமே நாம் எப்படி ‘லாகிரி’யாக மட்டுமே பார்க்கிறோம் என்பது கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கும். அக்கதையில் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனம் லாகிரி வஸ்துகளும் அதன் துய்ப்பும் பல மடங்கு பெருகவிட்ட இன்றைய சமூகத்துக்கு மேலும் பொருந்துகிறது.

வாழ்க வாழ்க கதையின் முதன்மையான பிரச்சினை இந்த கச்சிதமின்மையே. கச்சிதம் என்ற சொல்லின் வழியாக வடிவநேர்த்தி என்பதை நான் உத்தேசிக்கவில்லை. கட்சிப் பிரமுகரான வெங்கடேசப் பெருமாள் குறித்தும் அவனுடைய திருட்டுத்தனங்கள் குறித்தும் மூன்று இடங்களில் கதையில் சொல்லப்படுகிறது. கண்ணகி, ஆண்டாள், சொர்ணம் என ஒரு சில பெண்களைச் சுற்றியே கதை நடக்கிறது. இவர்களுடைய பிரத்யேக குணநலன்களை எவ்வளவு தூரம் சொல்வது என்பது குறித்த ஒரு குழப்பம் கதை முழுக்கவே தொடர்கிறது. காலையில் பத்து மணிக்கு மாநாட்டுப் பந்தலில் வந்து அமர்கிறவர்கள் மாலை வரை தலைவிக்காக காத்திருக்கின்றனர். அந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு  தலைவி வரும்போது கூட்ட நெரிசலில் ஒரு விபத்து நிகழ்கிறது. கதையின் பிரதானமான நிகழ்வு இந்த விபத்துதான். தலைவி மேடையில் ‘உயிரினும் உயிரான மக்களே’ என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவராலேயே சில உயிர்கள் போய்விட்டிருக்கின்றன. ‘வாழ்க வாழ்க’ என்ற கோஷம் சூழக் கேட்டுக் கொண்டிருக்கும்போது இறப்புகள் நிகழ்கின்றன. கட்சித் தலைவியின் உருவத்தைத் தாங்கிய ஒரு தட்டி வயிற்றில் செருகிக்கூட ஒரு பெண் இறக்கிறாள். இதிலிருக்கும் அபத்தமும் முரணுமே இக்கதையில் இருந்து வாசகனை வந்து அடையக்கூடியது. ஆனால் அதற்கு முன்னதாக கதை பல இடங்களைச் சுற்றி வருகிறது. அதில் பெரும்பகுதி சமகால தமிழக அரசியல் செயல்பாடுகளை  கவனிக்கும் யாருக்கும் தெரிந்திருக்கூடியதே. அதில் ஒரு கலைஞன் வந்து கண்டு சொல்லும் இடங்கள் குறைவாகவே இருக்கின்றன. பொதுவான விஷயங்களைத் தவிர்த்து உயரமான மேடையில் இருப்பவர்களுக்கும் அவர்களைக் காண்பதற்காக நாள் முழுக்கத் திடலில் அமர்ந்து அவர்களாலேயே உயிர்விட நேர்கிறவர்களுக்குமான இடைவெளியை மட்டும் பேசியிருந்தால் இந்த நெடுங்கதை மாறாட்டம், பள்ளம் போன்ற கதைகளைப் போல நினைக்கப்படுவதாக இருந்திருக்கும்.

1 comment for “வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...