தமிழ் தேசியம். ஏன்? எப்படி?

essay - a.pandianஉலக தமிழர் அரசியலோடும் பண்பாட்டு அசைவுகளோடும் அணுக்கமான தொடர்பு கொண்டிருக்கும் பலரின் சமகால சிந்தனை, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து விவாதித்து வருவதை அறியமுடிகிறது. இன்றைய நிலையில் தமிழ் தேசியம், தமிழ் ஆர்வளர்கள் என்று தங்களை முன்னிருத்தும் பலரின் பாடுபொருளாக இருப்பது கண்கூடு. தீவிர ஆதரவுக்கும் பலத்த எதிர்ப்புக்கும் நடுவில் சிக்கி மக்களின் கவனத்தை பெற்றிருந்தாலும், தமிழ் தேசியத்தை ஒரு வழக்கமான உணர்ச்சிமிகு அரசியல் சிந்தனை சார்ந்த செயல்பாடாக அலட்சியபடுத்தமுடியாது. அது மிக முக்கியமான நுண் அரசியலையும், வர்க்க பேத விடுதலை உணர்வையும், குழு அரசியல் சார்ந்த பாசீசத்தையும் ஒருங்கே கொண்டு எதிர்கால தமிழ்ச்சமுதாயத்தை மறு உருவாக்கம் செய்ய முனைவதாயும், நிரந்தர பதற்ற சூழலுக்குள் இருத்தி வைக்கக் கூடியதாயும் அமைந்திருக்கிறது.

எனினும் தமிழ் தேசியம் என்று பலராலும் வரையறுக்கப்படும் கட்டுமானம் தனது அடிப்படை கொள்கைகள், அரசியல் தேவைகள், போதாமைகள், மனோவியல் மாற்றங்கள், சமூகவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு தளங்களில் தனது நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்க்கவும் உறுதி செய்யவேண்டிய நிலையிலுமே இயங்கிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

தமிழ் தேசியம் என்னும் சிந்தனை தனக்கென ஒரு மெல்லிய வரலாற்று பதிவை கொண்டுள்ளது உண்மை என்றாலும், இந்திய அரசியல் வரலாற்றில் அது தெளிவான வரையறைகளை கொண்ட இயக்கமாக இருந்ததில்லை என்றே கூறமுடியும். இந்தியாவில் வடநாடு தென்னாடு என்னும் மண் சார்ந்த அரசியல் கோட்பாடுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அது ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை. மேலும் இந்திய விடுதலை உணர்வலைகள் தோற்றுவித்த பல்வேறு ‘தேசியமய’ மாற்றங்களினாலும் தமிழ் பேசும் மக்களிடையே ஆரிய-திராவிட போராட்ட அரசியல் சிந்தனை மேலோங்கியதாலும் தமிழ் தேசியம் என்னும் கோட்பாடு ஒரு பண்பாட்டு விழிப்புச் சிந்தனையாகவே இருந்து வந்துள்ளது.

ம.பொ. சிவஞானம் தனது தமிழ் குடியரசு இயக்கத்தை தமிழக எல்லைகளை அமைக்கும் போராட்ட இயக்கமாக முன்னெடுத்த வரலாறு தமிழ் தேசியம் சிந்தனையின் ஆரம்ப நிலையாக கூறப்படுகிறது. என்றாலும் ம.பொ.சி யின் போராட்டத்தின் சாரம் இன்றைய தமிழ் தேசியம் முன்வைக்கும் போராட்டத்தின் சாரத்தினின்று மிகவும் வேறுபட்டே இருக்கிறது. அதேப் போன்று பெரியாரும் பெரியார் முன்வைத்த திராவிட கோட்பாடும் இன்று தமிழ் தேசியம் பேசுவோரின் கடுமையான தாக்குதலுக்கு நிலையாவதும் தொடர்கின்றது. அதோடு தமிழ் தேசியம் குறித்த பலமான சிந்தனை அலை தமிழீல விடுதலை போராட்டத்தோடும் இலங்கை தமிழினப் படுகொலை அரசியலோடும் மிக நெருங்கிய தொடர்பு உடையதாக உள்ளது. 2007 முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகான தமிழ் தேசியம் குறித்த பேச்சுகளில் புது வேகமும் விசையும் தென்படுவதை மறுக்க முடியாது. எனினும், பல்வேறு வரலாற்று சான்றுகளோடும் திரிபுகளோடும் தமிழ் தேசியம் பலமுறை பலராலும் விவாதிக்கப்பட்டு வருவதால், நான் இக்கட்டுரையில் பொதுவாக பேசப்படும் வரலாற்று குறிப்புகளை தவிர்த்து விட்டு இன்றைய சூழலில் தமிழ் தேசியத்தின் தேவையும் போதாமையும் குறித்து மட்டும் எழுதுவதை நோக்கமாக கொள்கிறேன்.

தமிழ் தேசியம் குறித்து விவாதிக்கும் பொதுவான நிலைகள் இரண்டு அடிப்படை வினாக்களில் இருந்து துவங்குவது எளிமையான அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏன்? எப்படி? என்ற மூல கேள்விகளுடன் தமிழ் தேசியத்தை தொடர்பு படுத்தி விவாதிப்பதன் வழி தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் அதன் போதாமைகளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

முதலாவதாக தமிழ் தேசியத்தின் தேவை என்ன? என்பதிலிருந்து இது குறித்த உரையாடலை தொடங்க முடியும் என்றாலும் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த தெளிவு மிக முக்கியமாகும். ஆனால் துரதஷ்ட வசமாக ‘இதுதான் தமிழ் தேசியம்’ என்று அறுதியிட்டுக் கூறக் கூடிய உறுதியான; எல்லாரும் ஏற்றுக் கொண்ட கொள்கை வரையறையை தமிழ் தேசியம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

விக்கிபிடியா தமிழ் தேசியம் குறித்து, ‘தமிழ்த் தேசியம் ஒரு பல்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில் தமிழ்த் தேசியம் வெவ்வேறு போக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் நோக்கிச் சில பொதுப் பண்புகளை சுட்டலாம். தமிழ்த் தேசியம் தமிழர் மரபுத் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம்தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமூகஅரசியல்பொருளாதார நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக வெளிப்பட்டு, அவற்றால் பயன்பெற்று, அவற்றைப் பேணி, பகிர்ந்து, மேம்படுத்த ஏற்ற சூழமைவை கட்டமைப்பதை நோக்காக கொண்டது. இதன் அடிப்படைக் கருத்தியல் தமிழரிடையே காணப்படும் ஆண் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள், வர்க்க விரிசல்களுக்கு எதிராக அமைகின்றது. மேலும், சமய புவியல் சார்புகளை மீறி, ஒரு ஒற்றுமைக் கூட்டமைப்பை ஏற்படுத்தி, இன்றைய உலகமயமாதல் சூழமைவில் தமிழரின் அடையாளத்தையும், உரிமைகளையும், நலன்களையும் உறுதிசெய்ய இது முனைகின்றது. தமிழ்த் தேசியத்துக்கு எந்தவித சட்ட வரையறையும் இதுவரை இல்லை என்று விளக்கம் தருகிறது.

மேலே, வில்கிபீடியா தமிழ் தேசியம் குறித்து முன்வைக்கும் விளக்கங்கள், பல்வேறு தரப்பு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் விளக்கங்களின் தொகுப்பாகவே இருப்பதை உணரமுடிகிறது. காரணம் சமயம், சாதியம் வர்க பேதங்கள் குறித்த நடைமுறை சிக்கல்களில் தமிழ் தேசிய தலைவர்கள் இதுவரை தனித்தனி கருத்துக்களை கொண்டவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசியம் திட்டவட்டமான கருத்து வடிவத்தை இன்னும் அடையாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், தமிழ் தேசியத்தை முன்னிருத்த பொதுவான தலைவர் யாரும் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகிறது. தற்போது தமிழ் தேசியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு செயல்படும் அனைத்து தலைவர்களும், விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் மேதகு பிரபாகரனையே தமிழ் தேசிய தலைவர் என்று வரித்துக் கொண்டதாக கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். ஆயினும் பிரபாகரன் தன் போராட்டத்தில் தமிழ் தேசியம் குறித்தோ தன்னை தமிழ் தேசியத் தலைவன் என்று கூறிக் கொண்டதோ கிடையாது என்பதே உண்மை. பிரபாகரன் தன் மண் சார்ந்த விடுதலை வீரராகவே செயல்பட்டார் என்பதை சிலர் தங்கள் வசதிக்கு மாற்றி அமைத்து பிரச்சாரம் செய்வது சுயநல அரசியல் அன்றி வேறில்லை.

இதன் வழி,

1) தமிழ் தேசியம் பொதுவான சட்டகம் எதையும் கொண்டிருக்க வில்லை

2) தமிழ் தேசியத்தின் தலைவன் என்று கூறத்தக்க தலைவன் ஒருவன் இன்றுவரை தோன்றவில்லை

என்பதும் தெளிவாகிறது.

ஆகவே, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் மிகுந்த நெகிழ்வு தன்மையுடன் அமைந்திருப்பதானது அதனை தீவிர உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை வலுவாக்குகிறது என்றே கூற முடியும்.

ஆயினும், பொதுமக்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்கிற ஒரு அடிப்படை சிந்தனை தோன்றி தொடர்ந்து உரையாடப்பட்டும் வருவதில் இருந்து தமிழ் தேசியம் ஏன் முக்கியமாக கருதப்படவேண்டும் என்னும் அடுத்த கட்ட உரையாடலுக்கு நாம் செல்லவேண்டியது அவசியம். ஆகவே, பொதுக்கொள்கையோ தனி தலைவனோ இல்லாத தமிழ் தேசியம் அடிப்படையில் ஒரு மக்கள் இயக்கமாக இருப்பதையே நாம் கவனப்படுத்துதல் அவசியமாகிறது. தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம், நீண்ட காலமாக தமிழ்ச் சமுதாயத்தின் உள்ளத்தில் கிளர்ந்த அரசியல் மற்றும் மனித உரிமை மீட்சியின் கூட்டு வெளிப்பாடாக அமைகிறது. ஆக தமிழ் தேசியம் என்பது தங்கள் அரசியல் உரிமையைக் கோர விளையும் ஒரு இனத்தின் ஒளிவு மறைவு அற்ற உள்ள வெளிப்பாடு என்றே கொள்ள முடியும். ஆகவே தமிழ் தேசியம் தற்போது பரவலாக பேசப்படுவது போல் அரசியல் தளத்தில் விவாதிக்கப்படும் ஆற்றலை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதே தெளிவு.

மாறாக, அச்சிந்தனை போக்கை உணர்ச்சிமிகு அரசியலாகவும் பாசிச இனச்சிந்தனையாகவும் வளர்த்தெடுக்க முனையும் சில தரப்பினரின் செயல்பாட்டை நாம் கண்டித்தே ஆகவேண்டும். காரணம் முழுவதும் பக்குவப்படாத ஒரு இன உரிமை சார்ந்த சிந்தனையை தம் போக்கிற்கும் தம் சுயநலத்துக்கும் சாதகமாக மாற்றி அமைக்க முயலுவது அம்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய தீங்காகவே முடியும். அம்மக்கள் முன்னெடுக்க நினைக்கும் உரிமை சார்ந்த சிந்தனையின் ஞாயமும் உலக பார்வையில் மறைக்கப்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இயங்கிவரும் போலி இனமீட்சி சிந்தனையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் தேசியம் மிக கவர்ச்சிகரமான, மக்களைக் கவரக் கூடிய, மேடைப் பேச்சுக்கு உதவக் கூடிய ஒரு கருத்தாக்கமாக மட்டுமே பயன்பட்டு வருவதையே காணமுடிகிறது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு முரண்பட்ட கருத்துகளையும் பாசிச வெறுப்பையும் மிகச் சாதாரணமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்

அடுத்து, தமிழ் மக்கள் தங்கள் உரிமை சார்ந்த கொதிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்த பல்வேறு வெளி உள் நெருக்குதல்களை நாம் மொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது. குறிப்பாக இலங்கையில் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் அந்நியராகவும் ஆக்கப்பட்டு கொன்று குவிக்கப்பட்ட கொடூரங்களும், அதை தடுத்து நிருத்த முடியாத தமிழ் நாட்டு அரசியல், சமூகத் தலைவர்களின் கையாலாகாத்தனமும், தொடர்ந்து இந்திய அரசாலும், தமிழக அரசியலாலும் தமிழர் மீது திணிக்கப்பட்டு வரும் உரிமை மீறல்களுமே தமிழினத்தை தமிழ் தேசியம் குறித்த சிந்தனைக்கு உந்தித் தள்ளி இருக்கும் நிலையையே நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் பெரியாரால் நிலைநாட்டப்பட்ட திராவிட கொள்கை தமிழர் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருப்பது கண்கூடு. குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் அதன் செல்வாக்கு மிக அதிகம். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணம் தமிழ் நாட்டு வாக்குச் சந்தையில் கலந்துவிட்ட திராவிட சிந்தனையேயாகும்.

ஆனால், திராவிடம் என்கிற பரந்த வட்டத்துக்குள் அடக்கப்படவேண்டிய கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற பிற மாநில மக்கள் பெரியார் காலத்திலேயே திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோ தங்களை திராவிடனாக உணர்ந்ததோ கிடையாது. தமிழ் நாட்டுக்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் மக்கள் (திராவிட பரந்த சிந்தனையால்) பெற்ற அணுகூலங்களை, பிற மாநிலங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெற முடியாமல் போனதும் உண்மை. தமிழ் நாட்டு அரசியல், கலை, பொருளாதார பரப்பில் (திராவிடர் என்ற பொது பெயரில்) பிற மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் பெற்ற செல்வாக்கு யாவரும் அறிந்ததே. திராவிட அரசியல் கட்சிகளில் இடம் பிடித்த தெலுங்கர்களும் மலையாளிகளும் ஆட்சி பீடத்தை பிடிக்கும் அளவுக்கு உயரமுடிந்தது. ஆனால் தமிழர்கள் பிற மாநிலங்களில் வந்தேறிகளாகவே நடத்தப்பட்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. அதனினும் மேலாக, திராவிட நண்பர்களாக இருக்க வேண்டிய கர்நாடகம், கேரளா போன்ற மாநில அரசாங்கங்களின் செயல்ப்பாடு தமிழ் நாட்டு விரோத செயலாக இருப்பதையும் நதி நீர் திட்டங்களின் வழி அறிய முடிகிறது. காவேரி ஆற்று பிரச்சனையை மத்திய அரசோ நீதிமன்றமோ முழுமையாக தீர்க்க முடியாத சூழலையே தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர். அதே போன்று பாலாறு பிரச்சனையும் பெரியாறு அணைக்கட்டு பிரச்சனையும் திராவிட நட்பு மாநிலங்களாலேயே அநீதி இழைக்கப்படுகிறது.

தமிழ் நாட்டின் முதல்வர் பதவியை பெறுமளவுக்கு பிற மாநில மக்கள் தமிழ் நாட்டில் சிறப்புடன் வாழ திராவிடம் வகை செய்துள்ளது. ஆனால் அதே திராவிட கட்டுக்குள் இணைந்து தமிழ் நாட்டுக்கு நட்புகரம் நீட்ட வேண்டிய அண்டை மாநிலங்களின் செயல் முரணாகவும் வருங்கால தமிழகத்துக்கு பாதகமாகவும் இருப்பதை கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆகவே தமிழ் தேசிய சிந்தனை தோன்றவும் வளரவும், பெரியார் முன்னெடுத்த திராவிட ஒருமைப்பாட்டு சிந்தனையை தமிழர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டதும், அதே சமயம் பிற மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளாததும் முக்கிய காரணங்களாகின்றன. திராவிட நாடு கொள்கை, மொழிவாரி மாநிலங்களின் அமைப்பிற்கு பின்பு பொருளற்றதாகி விட்டது. திராவிட அரசியல் பார்ப்பனரை தமிழின விரோதிகளாக காட்டினாலும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளில் தமிழ் நாட்டின் விரோதிகளாக பிற திராவிட மாநிலங்களே செயல்படும் நிதர்சனத்தை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.

திராவிட அரசியல் கொள்கையில் உள்ள போதாமைகளை சாக்காக கொண்டு தமிழ் தேசியவாதிகள் பலர் ஈ.வே.ரா வை தாக்குவதையும் காணமுடிகிறது. ஈ.வே.ராவை தமிழின துரோகியாக காட்டுவதன் வழி அவர் முன்னெடுத்த எல்லா சமுதாய போராட்டங்களையும் சிதைப்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. தமிழினத்தை இன்றுவரை அரித்து தின்னும் கரையானாக சாதியமும்  மூட நம்பிக்கைகளின் உறைவிடமாக சமயமும் இருந்தாலும் தமிழ் தேசியவாதிகள் அவை பற்றிய கவலை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் தேசியம் ஆரியத்தை ஆதரித்து திராவிடத்தை எதிர்க்கும் குழப்பமான நிலையிலேயே செயல்படுகிறது.

ஆகவே எனது பார்வையில் தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் தோன்றவும் வளரவும் பின்வரும் 3 காரணங்களை முதன்மையானதாக கூற முடியும்

1) தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி பாங்கு.

(கவனிக்க: இந்த தலைவர் வந்தேறி வடுகர், அந்த தலைவரின் பாட்டனார் கன்னடர் ஆகவேதான் இவர்கள் தமிழினத்திற்கு தீங்கு செய்கிறார்கள். தமிழனே ஆட்சி செய்தால் தமிழினம் சிறப்பாக வாழும் என்கிற போக்கில் சொல்லப்படும் அசட்டுத்தனமான காரணங்களை இதோடு தொடர்புபடுத்த வேண்டாம். இன அடிப்படையில் இன்றி பொதுவாக அவர்களின் அரசியல் பிழைகளையும் தவறுகளையும் சுட்டியே இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. )

2) மாநில சுய ஆட்சிகளை கொண்டு மாநிலங்கள் இயங்கினாலும் தேசிய தேவைகளை முன்னிட்டு பொறுப்பாக செயல்பட வேண்டிய  இந்திய மத்திய அரசாங்கத்தின் கையாலாகத்தனம்.

(நதி நீர் திட்டங்கள், மின்சார உற்ப்பத்தி, தொழிற்துறை வளர்ச்சியில் மாநில பங்கேற்பு போன்ற செயல்பாடுகளில் அரசியல் நோக்கோடும் தனி விருப்பு வெறுப்புகளோடும் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது )

3) இலங்கையில் தொடங்கிய தமிழீழ போராட்டமும் அதன் உணர்வு அலைகளும்.

(பொதுவாக இலங்கை தமிழர்களின் போராட்டம் உலக தமிழர்களுக்கு பண்பாட்டு அடிப்படையில் புது தெம்பை தந்திருக்கிறது. அதே சமயம் இலங்கை இனப்படுகொலைகளும் அதை தடுக்க முடியாத இயலாமையும் குற்ற உணர்வாக பல தமிழர்களின் மனதிலும் தேங்கிக்கிடக்கிறது. இந்த குற்ற உணர்வில் இருந்து வெளிப்படும் வகையாகவும் தமிழினம் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்னும் கற்பிதத்தாலும் தமிழ் தேசியம் மிக தீவிரமாக பேசப்படுகிறது).

ஆகவே தமிழ் தேசியத்தின் பொது கட்டுமானம் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையிலேயே இருந்தாலும், அதன் அடிநாதமாக உயிர்ப்போடு நிற்கும் தமிழின உரிமை மீட்பு வெளிப்பாட்டு உணர்வு பொருளற்றதாகி விடாது. அந்த உணர்வை பக்குவப்படுத்தி அரசியல் அரங்கில் நேர்மையான, பொருத்தமான போராட்டமாக தகவமைக்க தமிழ் தேசியத்தில் அக்கரை செலுத்துவோர் சிந்திக்க வேண்டும்.

அடுத்த நிலையில் தமிழ் தேசியம் எப்படி அமைக்கப்படப் போகிறது என்னும் அடுத்த கட்ட வினாவுக்கு விடையாக தற்போது தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பலர் கூறும் கருத்துக்கள் மிகுந்த சர்ச்சைகளைக் கொண்டதாகவும் பல்வேறு கற்பிதங்களை சொல்லி மக்களைக் குழப்பக்கூடியதாகவும் இருக்கிறது.

தமிழ் நாட்டில் தமிழனை இன ரீதியாக அடையாளப்படுத்தும் மிக வினோதமான ஆபத்தான இயக்கமாக தமிழ் தேசியம் செயல் படுவதை ஏற்க முடியாது. பல நூறு போர்களையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களையும் பல தலைமுறைகளையும் தாண்டி வாழும் மக்களிடம் தனி இனக் கூறுகளை தேட முயல்வதும் அவ்வாறு தேட தூண்டுவதும் பாசிச அரசியல் அன்றி வேறல்ல. இது போன்ற மனித விரோத செயல்கள் ஹிட்லரின் இன வெறி போக்கை ஞாபகப்படுத்தி அச்சமூட்டுகிறது.

சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம் முன் வைத்த அடக்கு முறை இனவாத கொள்கை அறிக்கை தமிழினத்தின் இன்றைய நிலையை எள்ளளவும் உயர்த்தாது என்பது தெளிவு. அடிப்படையில் ‘தேசியம்’ என்பது மக்களை விலக்கி வைக்கும் போக்கை பேசக்கூடியதாக இருக்கூடாது. ஆனால் நாம் தமிழர் கட்சி அதையே தனது கொள்கையாக கொண்டுள்ளது.

அதே போன்று தமிழ் தேசியம், தமிழ் இன மக்களின் அடிப்படை பிரச்சனையாகிய சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு தக்க தீர்வு எதையும் முன்வைக்க தயங்குகிறது. ‘தமிழர்களாக ஒன்றுபடுவோம்’ போன்ற மழுப்பலான பரப்புரைகளின் வழி அடித்தட்டு தமிழர்களை ஏமாற்றவும் மேல்தட்டு தமிழர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தவுமே தமிழ் தேசியம் வழி செய்கிறது.

முடிவாக, தனி அரசியல் சுதந்திரம் உள்ள ஒரு தேசமே தன் மக்களுக்கான தனி அடையாளங்களை சட்ட ரீதியாக வகைப்படுத்த முடியும். சட்ட முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்டே தனி மனிதனின் இனம், மதம் போன்றவை முடிவு செய்யப்பட முடியும்.     ஒரு மொழியை பல இன மக்கள் பேசலாம். ஒரு இன மக்கள் பல நாடுகளில் வாழலாம். அதே போன்று பல இன மக்களும் ஒரே அரசாங்கத்தின் குடிமக்களாக வாழ முடியும் என்பதே இயல்பான நிலை. எந்த மொழி பேசினாலும் எந்த இனத்தவனாக இருந்தாலும் பொருத்தமான அரசியல் சட்டங்களின் வழியும் பொறுப்பான அரசாங்கத்தின் வழியுமே ஒரு தேசத்து மக்களாக வாழ முடியும். ஆகவே, ‘தமிழர் தனிநாடு’ என்னும் கோட்பாட்டில் இருக்கும் அரசியல் தெளிவும், அவசியமும் தமிழ் தேசியத்தில் இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

5 கருத்துகள் for “தமிழ் தேசியம். ஏன்? எப்படி?

 1. கார்த்திக்
  June 23, 2015 at 12:38 pm

  அருமையான கட்டுரை

 2. November 29, 2015 at 11:23 am

  விக்கிபீடியாவின் கருத்தின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ள இந்த கட்டுரையில் பல கருத்துப் பிழைகள் உள்ளன. முதலில் தமிழ் தேசியம் என்ன என்பது தெளிவாக விளக்கப் படுதல் அவசியம். விக்கிப்பீடியா சொல்வது போல அதற்கு ஒரு தனித்துவமான வரையறை இருத்தல் அவசியம் இல்லை. தமிழ்த் தேசியம் அடிப்படையில் தமிழ் மொழி, இன அடிப்படையில் உருவான ஒரு சித்தாந்தம். அந்த சித்தாந்தம் ஒரு நிலபரப்பையோ அல்லது கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை முதன்மை படுத்தி இருக்கலாம். அல்லது அது வெறுமனே ஒரு சமூக பிரக்ன்யைகாகக் கூட இருக்கலாம். அதன் வளர்ச்சி காலத்தால் நிர்ணயிக்கப் படும். ஜனாயகம் ஏதென்சில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், அந்த சித்தாந்தம் பிரெஞ்சு புரட்சியின் போது புதிய அடையாளத்தை உள்வாங்கிக் கொண்டதையும் தொடர்ந்து அது பரிணாம வளர்ச்சி அடைந்துவருவதையும் அறிஞர்கள் மறுக்கவில்லை.

 3. January 2, 2016 at 1:02 am

  சாதி ஒழிப்பே தமிழ்தேச விடுதலை என்கிற தோழர்.தமிழரசனின் கூற்றை வல்லினம் எப்படி பார்க்கிறது.தமிழ் தேசியத்தின் முக்கிய காரணியாக கூறப்படுவது சாதிய,வர்க்க பிரிவினைதான் என்றால் அதன் கூறுகளை தெளிவாக விவரித்திருக்கிறார் அல்லவாhttp://4.bp.blogspot.com/-gbBUYwEkW00/U44uwJZiNdI/AAAAAAAAA7s/9KAB8N29WfM/s1600/kalagam+End-43.jpg

 4. June 6, 2018 at 11:14 pm

  குழப்பமான விக்கிபீடியா கட்டுரைகள் சமூகத்தையே குழப்பிவிடக்கூடும் என்று அச்சப்படுகிறேன். தமிழ்த்தேசியம் என்பது கருவாகி உருவாகி வளர்ந்துவரக்கூடிய அரசியல். அதை நாம் இன்னமும் ஆழமாகப் பயிலவேண்டும்

 5. Baskar.k
  June 30, 2019 at 6:06 pm

  தமிழ் பேசும் இந்த நிலப்பரப்பில்..தமிழ் தேசியம் தான் இருந்து இருக்க வேண்டும்..நாம் தவறிழைத்து பிற மொழி பேசும் இயக்கங்களை வாழவும்.. ஆளவும் ..விட்டது நம் முன்னோர்கள் செய்த அறியாமை பிழை..

  இனி வரும் தலைமுறைகள் இந்த தமிழ் மண்ணில் தமிழ் தேசியம் ஆள..என்ன செய்ய வேண்டுமோ..அதை செய்யும்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...