அகிராவின் கண்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில் நுழைய முடியாமல் கஷ்டப்பட்ட அந்தக் காலத்தில் மகத்தான படைப்புகளில் உழல்வதில் இருந்து மனம் விடுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.

நோய்மை, கவலை, அவமானம் போன்றவை பல சமயம் சில்லறை ரசிப்புக்கு நம்மை இழுத்துச்செல்லும். வலியிலிருந்து தற்காலிக விலகலுக்கு அவை ஒரு போதை வஸ்துவாக பயன்படும். அதன் சூழ்ச்சியை உணர்ந்து மேம்பட்ட கலைகளுக்குள் நுழைந்து வாழ்வை இன்னும் தீவிரமாக அறிய விளைவதே நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளும் வழி. நண்பர் காளிதாஸ் அதற்கு உதவினார். திரைப்படங்கள் குறித்த என் ரசனையை மாற்றி அமைத்தவர் அவர். 

அந்தத் தொகுப்பில் இருந்த படங்களில் நான் முதலில் பார்த்தது செவன் சமுராய் (Seven Samurai) திரைப்படம். ஏறக்குறைய மூன்றரை மணி நேரத் திரைப்படம். எந்தச் சோர்வும் இல்லாமல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. நான் அகிரா குரோசாவாவை (Akira Kurosawa) அறிந்து கொண்டது அங்குதான்.

எனக்கு குரோசாவா எப்படிப்பட்ட ஆளுமை என்றெல்லாம் அப்போது தெரியாது. ஆனால் காளிதாஸும் அவர் அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜனும் அகிரா குரோசாவா குறித்து அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தான் அவர் குறித்து எளிய அறிமுகம் கிடைத்தது. பின்னர்  தேடி வாசிக்கத் தொடங்கினேன். அப்போது வந்த இலக்கிய இதழ்களைப் பெரும்பாலும் உலக சினிமா குறித்த கட்டுரைகள் ஆக்கிரமித்திருந்தபடியால் அது மிகச்சுலபமாக அமைந்தது. அவ்வகையில் 1910இல் தோக்கியோவின் ஒரு சாமுராய் குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் குரோசாவா என்ற அறிமுகமே எனக்கு ஈர்ப்பாக இருந்தது. உண்மையில் நான் அந்தத் திரைப்படத்தை முதலில் பார்க்கத் தேர்ந்தெடுக்கவும் ‘சாமுராய்’ என்ற பதமே காரணம்.

இடைநிலைப்பள்ளியில் எனது வரலாற்றுப் பாட ஆசிரியர் சுவாரசியமான கதைசொல்லி. அவர் சாமுராய்கள் மத்தியில் இருந்த ‘ஹராகிரி’ எனும் வயிற்றைக் கிழிக்கும் பாரம்பரிய வழக்கம் பற்றி விரிவாகவே கூறியுள்ளார். தமது வயிற்றைத் தாமே கிழித்துக்கொண்டு தற்கொலை செய்கின்ற அந்தக் காட்சியை வெற்றுக்கைகளில் நாடகம்போல அவர் செய்துக்காட்டுவதை நான் பலமுறை பிசைய பிசைய மனதில் ஓட்டிப் பார்த்திருக்கிறேன். கத்தியை செருகிக்கொள்வதோ தன்னைத் தானே குத்திக்கொள்வதோ தமிழ்ப்படங்களில் பார்த்து கொஞ்சம் பழக்கமாகியிருந்தது. ஆனால் ஒருவன் தன் வயிற்றைத் தானே கிழித்துக்கொள்ள முடியுமா, தன் குடல் சரிந்து விழுவதை அவனாலேயே அனுமதிக்க முடியுமா, எனற வரலாற்றின் உண்மைகள் அறுத்தெடுத்தன.

எதிரியிடம் சரணடையாமை குறித்த அவர்கள் எண்ணமும் அதற்காக இடமிருந்து வலமாக வயிற்றை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதும் நினைவில் தேங்கிக்கொண்டன. அந்தத் திகைப்பில் உருவான ஈர்ப்பே அகிரா குரோசாவாவை நெருங்கிச்செல்ல காரணியாக அமைந்தது. 

குரோசாவா மொத்தம் முப்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். சன்ஷிரோ சுகடா (Sanshiro Sugata) என்ற முதல் படத்தை தனது முப்பத்து மூன்றாவது வயதில் இயக்கினார். ‘செவன் சமுராய்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு அவரது அந்த முதல் படத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்து தேடினேன். அப்போதெல்லாம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Amcorp Mallஇல் மட்டுமே உலகத் திரைப்படங்கள் கிடைக்கும். கீழ்த்தளத்தில் இயங்கிய அந்தக் கடை, இணையப் புழக்கம் அதிகமானபின் மூடப்பட்டுவிட்டது. ஆனால் எனக்கு அங்குதான் ‘சன்ஷிரோ சுகடா’ கிடைத்தது. ஜூடோ, ஜூ – ஜித் – சு ஆகிய இரு தற்காப்பு கலைகளிடையிலான மோதலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது. சன்ஷிரோ என்ற இளைஞனை மையமாகக்கொண்டே கதை நகர்ந்தது. 

சன்ஷிரோ என்ற இளைஞன் ஒரு தற்காப்பு கலைப்பள்ளியில் இணைந்து அதில் திறன் பெற்று அக்கலையின் மாஸ்டராக வேண்டுமென விரும்பும் இளைஞன். அதற்காக நகரத்துக்கு வரும் அவன் ஒரு ஜூடோ பள்ளியில் ஷோகோரோ யானோ எனும் குருவைக் கண்டடைகிறான். திறமையும் உறுதியான உடலும் கொண்டிருந்தாலும் சன்ஷிரோ துடுக்கானவன். சச்சரவுகளில் ஈடுபட்டு குருவின் கோபத்திற்கு உள்ளாகிறான். அவர் நிராகரிப்பை அனுமதிக்க முடியாதவன் குருவுக்காக மரணத்தையும் சந்திப்பேன் என சதுப்பு நில குளத்தில் குதிக்கிறான். அவ்விரவில்தான் அவன் தன்னை உணர்கிறான். குருவிடம் மன்னிப்புக்கேட்டு மெல்ல மெல்ல அப்பள்ளியின் முன்னணி மாணவனாக மாறுகிறான்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு இப்படம் ஒரு ‘காராத்தே கிட்’ திரைப்படம் பார்ப்பதுபோல வேகமெடுக்கும். உள்ளூர் காவல் நிலைய ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க தற்காப்பு பள்ளியின் உதவி தேவையாக இருக்கிறது. எனவே இரு பள்ளிகளுக்கு இடையில் (ஜூடோ,  ஜூ – ஜித் – சு) நடக்கும் போட்டியில் சான்ஷிரோ தேர்வு செய்யப்படுகிறான். அதன்பின் தொடரும் காதல், வன்மம் என கதை செல்லும். ஆனால் இப்படம் சண்டையைப் பற்றிய படமல்ல என்பதுதான் குரோசாவாவை முதல் திரைப்படத்திலேயே தனித்து அடையாளம் காட்டியது. 

திரைப்படத்தில் முக்கியமான காட்சி குருவுக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல். வம்புகளில் ஈடுபட்டு வரும் சன்ஷிரோவிடம் குரு, “நீ தெருச்சண்டையிட்டதில் மகிழ்ந்திருப்பாய், நான் அந்தச் சண்டையை பார்த்திருக்க வேண்டும். நீ உறுதியானவன்… மிக உறுதியானவன்… என்னைவிட உறுதியானவன்… ஆனால் உன் ஜூடோவும் என் ஜூடோவும் வேறு. ஏன் தெரியுமா? உனக்கு மனிதநேயம் என்றால் என்னவென்று தெரியவில்லை. நான் உனக்கு ஜூடோ சொல்லிக்கொடுத்ததை ஒரு பைத்தியக்காரன் கையில் கத்தியைக் கொடுத்தனுப்பியதாய் உணர்கிறேன். நீ நோக்கமும் இலக்கும் இல்லாமல் வாழ்கிறாய். எங்கே உன் மனிதநேயம்? அதுதான் இயற்கையில் அசையாத விதி. நாம் இறந்தாலும் வாழ்ந்தாலும் அதுவே என்றைக்குமானது. இதை உணர்ந்தால் மட்டுமே உன் மரணம் நிம்மதியானதாக இருக்கும்,” எனக் கடுமையாகக் கூறுகிறார்.

சன்ஷிரோ தனக்கு மனிதநேயம் உண்டு என்கிறான். தன்னை மன்னிக்கும்படி கேட்கிறான். இறுதியில் குரு சொன்னால் தான் சாகவும் தயார் எனக்கூறுகிறான். குரு அதையும் பொய்யென்கிறார். அவன் சொற்கள் அனைத்துமே பொய் என்கிறார். குருவின் சொற்களால் சீண்டப்படும் அவன் ஓடிச்சென்று அருகில் உள்ள குளத்தில் குதிக்கிறான். இரவு வரை குளிரில் இருக்கும் அவனை குரு அழைக்கவே இல்லை. மற்ற மாணவர்கள் கெஞ்சலையும்  பொருட்படுத்தாமல் “அவனாக வருவான்… அவனுக்கு சிந்திக்க நேரம் தாருங்கள்,” என்கிறார். 

அதே நேரத்தில் அவனை ஒரு புத்த பிக்கு சீண்டத் தொடங்குகிறார். அந்த உரையாடல் முற்றிலும் குறியீடுகளால் ஆனது.  அதுவே திரைப்படத்தின் ஆன்மா. 

“நீ மிகவும் சுகமான சூழலில் இருக்கிறாய்போல. இதிலிருந்து பின் வாங்கமாட்டாயா?” என்றே அந்த புத்த பிக்கு தொடங்குகிறார். அதற்கு சன்ஷிரோ “இல்லை” என அழுத்தமாகவும் மூர்க்கமாகவும் சொல்கிறான். “உன் அழுத்தமான பேச்சின் வழி நீ இன்னும் கொஞ்ச நேரம் தாக்குப் பிடிப்பாய் எனத் தெரிகிறது. ஆனால் நீ கவனித்தாயா சன்ஷிரோ நீ முழுமையாக உன்னை ஒரு குத்துக்கட்டையிடம் ஒப்படைத்துள்ளாய்,” என்கிறார். உண்மையில் அவன் குளத்தில் விழுந்தது முதல் அந்த குத்துக்கட்டையைப் பிடித்தபடி நிற்கிறான். 

“சன்ஷிரோ அதுதான் உன்னை உயிருடன் வைத்துள்ளது. அது இல்லாவிட்டால் நீ சேற்றில் இழுக்கப்பட்டு  எப்போதோ மூழ்கி இருப்பாய். மரணம் அருகில்தான் இருக்கிறது,” என்பவரை நோக்கி வாயை மூடும்படி கத்துகிறான் சன்ஷிரோ. புத்த பிக்கு அதற்கெல்லாம் அசையவில்லை. “நீ ஏன் உன் முயற்சியில் இன்னும் பின்வாங்கி வெளியே வராமல் இருக்கிறாய்?” எனச் சீண்டுகிறார். 

அவன் முடியாது எனக் கத்தவும் “உன்னைச் சரிப் படுத்திக்கொள். இன்று நிலவு அழகாக உள்ளது. பார்த்து ரசி,” எனச்சொல்லிவிட்டு புறப்படுகிறார். அவன் மெல்ல மெல்ல சோர்ந்து போகிறான். அப்போது நிலவு ஒளியில் அல்லி மலர்வதைப் பார்க்கிறான். அது உண்மையில் அற்புதமான காட்சி. எந்தப் பிடிமானமும் இல்லாமல், எந்தத் துணையும் இல்லாமல் அது உறுதியாக, நிதானமாக, பிரகாசமாக தன் இருப்பைச் சொல்கிறது. அதன் இதழ்களின் விரிவு அவன் மன விரிவுக்கும் காரணமாக உள்ளது. அவனது அழுத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது. தான் எவ்வளவு எளியவன் என உணர்கிறான். குருவை நோக்கி ஓடுகிறான். மன்னிப்புக் கேட்கிறான். புதிய மனிதனாக மாறுகிறான்.  அதன்பின் அவன் எதிர்கொள்ளும் எல்லா சண்டைகளிலும் தன் மனிதத்தைத் தக்கவைத்துக்கொள்கிறான். இறுதியில் அவனைச் சண்டையிட்டு கொல்ல வருபவனிடம் மரணத்தை எதிர்கொள்ளும் தருவாயில் மீண்டும் அல்லியில் நினைவு வந்து அவனை வீழ்த்துகிறான்.  

உண்மையில் இப்படம் ஜூடோவை கற்கும் சன்ஷிரோ பற்றியதல்ல. தன்னைத்தானே அறிய முயலும் இளைஞனின் கதை. சிலருக்கு இலக்கியமும் சிலருக்கும் ஆன்மிகமும் இருப்பதுபோல சன்ஷிரோவுக்கு ஜூடோ இருக்கிறது. 

சன்ஷிரோவுக்குள் நிகழும் மனமாற்றத்துக்கு நிலவொளியால் பூக்கும் ஓர் அல்லி மலர் காரணியாக இருப்பது போலத்தான்  ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலில் மெர்சோ கொலை செய்ய வெய்யில் காரணமாக இருப்பதை படத்தைப் பார்த்த கணம் நினைத்துக்கொண்டேன். அப்படி நினைத்துக்கொள்வதே அத்திரைப்படத்தை நெருக்கமாக்கியது. இலக்கியத்தில் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோரைப்போல உலக சினிமா இயக்குனர்களும் ரசிகர்களும் உச்சரிக்கும் பெயராக அகிரா குரோசாவாவின் பெயர் உள்ளதை மெல்ல மெல்ல அறிந்துகொண்டேன். 

குரோசாவாவின் பங்களிப்புகளில் இரண்டு கூறுகள் மர்மமானவை என சத்யஜித் ரே சொல்கிறார். முதலாவது தற்காப்பு கலைகளின் அழுத்தம் மற்றது போர்க்காட்சியில் வன்முறை. இவைதான் ஜப்பானியர்கள் பண்பென்றால் ஏன் அதுபோன்ற காட்சிகளை ஜப்பானிய இரு பெரும் இயக்குனர்களான ஓசு, மிசோகுச்சி ஆகியோர் முன்வைக்கவில்லை என்றும் சந்தேகம் எழுப்புகிறார். அது ஆழமான கேள்விதான். ஆனால் குரோசாவாவின் திரைப்படங்களைப் பார்த்த வயதில் பெரிய தர்க்க சிந்தனை எதுவும் செயல்படவில்லை. ‘ரான்’ (Ran) திரைப்படத்தின் வாள்வீச்சு சண்டைகளையும் ‘யோஜிம்போ’ (Yojimbo) திரைப்படத்தின் வன்முறையையும் சுவாரசியமாகவே எதிர்கொண்டேன். இப்போது நினைத்தாலும் ‘யோஜிம்போ’ (Yojimbo)  ஒரு நல்ல சிறுகதையின் வடிவமாகவே எனக்குத் தோன்றும். அதன் தொடக்கமும் வளர்ச்சியும் கூர்மையும் அத்தகையது. 

ஒரு நகருக்குள் சாமுராய் ஒருவன் நுழைவதிலிருந்து திரைப்படம் தொடங்கும். அவனுக்கு இலக்கு என ஒன்றும் இல்லை. ஒரு நீண்ட குச்சியைத் தூக்கிப்போட்டு அது காட்டிய திசையில் நடந்தபோது அந்த நகரத்தை எதிர்கொள்கிறான். நகரத்தை அடைவதற்கு முன்பே வீதியில் காணும் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான வாக்குவாதத்திலும், பின்னர் நகரில் நுழைந்த பிறகு ஒரு நாய்  மணிக்கட்டுடன் வெட்டப்பட்ட ஒரு மனிதனின் கையைத் தூக்கிச்செல்லும் காட்சியிலும் அவனால் அவ்வூரில் நிலவிவரும் சிக்கலை அறியமுடிகிறது. 

இரு குண்டர் குழுக்களின் பின்னணியை அறிகிறான். சீபி, உஷித்தோரா ஆகிய இருவரும் அக்குழுக்களின் தலைவர்கள். சீபி நகரில் விபச்சார விடுதி நடத்துபவன். உஷிதோரா ஒரு காலத்தில் சீபியின் ஊழியனாக இருந்தவர். ஆனால் சீபிக்குப் பிறகு தனக்கு வரவேண்டிய அதிகாரம் சீபியின் மகனுக்குச் செல்லப்போகிறது என அறிந்தவுடன் தனக்கென ஒரு குழுவை உருவாக்குகிறான். இந்த இருவரின் அதிகாரப் போட்டியின் காரணமாக அந்தச் சிறு நகரம் மெல்ல மெல்ல சிதைகிறது. இந்தக் கதை முழுக்கவும் அவ்வூரில் மதுபான விடுதியை நடத்தும் கிழவன் சாமுராயிடம் சொல்கிறான். இரு குழுவினரும் அந்த சாமுராயின் வாள் வீசும் வேகத்தைக் கண்டு தத்தம் குழுவில் பாதுகாவலனாக இணையச் சொல்கின்றனர். அந்த ‘பாதுகாவலன்’ எனும் ஜப்பானிய ஒலிப்புதான்  ‘யோஜிம்போ’.  சாமுராய்  மக்களுக்குக் காவலனாக இருந்து இரு குழுவின் பகைமையைக்கொண்டே அவர்களை அழிக்கிறான். 

A Fistful of Dollars தொடங்கி விஜய் நடித்த போக்கிரி வரை ‘யோஜிம்போ’வின் தாக்கத்தில் உருவான திரைக்கதைகள் ஏராளம் இருக்கக்கூடும். எவ்வளவு போலித்தனம் செய்து ஒருவர்போல உடை அலங்காரம் செய்துகொண்டாலும்  கைரேகை என்பது தனித்துவமானது. கலைஞனின் கண்களும் அவ்வாறே. இப்படத்தின் தாக்கத்தில் எத்தனை திரைக்கதை அமைக்கப்பட்டாலும் குரோசாவா எனும் கலைஞனின் பார்வையில் திரண்டெழும் தனித்த சிந்தனையும் நுட்பமும் பிறரால் உருவாக்க முடியாதவை என்று இப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் புரியும்.

இப்படத்தில் குறியீடுகளால் பல காட்சிகளை தீவிரம் குறையாமல் விளக்கியிருப்பார் குரோசாவா. மொத்த ஊரின் சூழலையும் அங்கு நடக்கும் தீவிரத்தன்மையையும் நாயின் வாயிலுள்ள துண்டுபட்ட கையினால் சொல்வதும், சாமுராய் முதல் காட்சியில் ஒரு குச்சியின் வழிகாட்டுதலால் நுழைவதில் அவனது திக்கற்ற மனநிலையைச் சொல்வதும், ஊரைக் காப்பாற்றி புறப்படும்போது கிழவனின் கையில் இறுக்கியிருந்த கயிற்றுக்கட்டை ஒரே வெட்டில் அகற்றுவதும், அடிப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் சாமுராய் தேறி வரும் காட்சியில் காய்ந்த இலையைப் பறக்கவிட்டு கத்தியால் குத்துவதும் என ஒவ்வொரு காட்சியும் அதன் பின்புலத்தின் விரிவான புரிதலுக்காக உருவாக்கப்பட்டவை. 

சத்யஜித் ரே  சொல்வதுபோல சண்டையில் கை துண்டாகும் காட்சியும் கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டி வீழ்த்தும் வன்முறைக் காட்சிகளும் தாராளமாக இடம்பெற்ற திரைப்படங்களில் ஒன்று. குரோசாவா தன் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளைப் புகுத்துவதின் காரணங்களை வாசித்துள்ளேன். முதலாவது, குரோசாவா தன்னளவில் ஒரு சாமுராய் பண்பாட்டைக் கொண்டவர்; இரண்டாவது 13 வயதில் ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரது அண்ணன் தயக்கமின்றி பார்க்க போதித்ததன் விளைவு என்றும் சொல்லப்படுவதுண்டு. 

இந்தப்படம் அகிரா குரோசாவாவிற்கு ஓர் அடையாளத்தைத் தந்தாலும், பெரும்பாலான விமர்சகர்களும், திரைப்பட ரசிகர்களும் அகிராவையும் அடையாளப்படுத்திக்கொண்டது 1950இல் வெளியான ‘ராஷோமான்’,  1954-இல் வெளியான ‘செவன் சாமுராய்’ வாயிலாகத்தான். 

முன்பே சொன்னதுபோல ‘செவன் சாமுராய்’ நான் பார்த்த குரோசாவாவின் முதல் படம். அதன்  தொடக்கமே சுவாரசியமானது. உண்மையில் குரோசாவா தன் படங்களின் முதல் காட்சியிலேயே அதன் ஆதாரத்தன்மையிலிருந்து தொடங்கிவிடுவார். சிக்கல் சிடுக்குகளின் உச்சமான மனநிலையில் இருந்தே திரைப்படம் நகரும். 

‘செவன் சாமுராய்’ படத்தின் கதை 16-ம் நூற்றாண்டின் மத்தியில் நடப்பது. மலையடிவாரத்தில் இருக்கிற ஒரு சின்னக் கிராமத்தை திருடர்கள் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கும் விஷயம் அந்த கிராமத்தவர்களுக்கு தெரிய வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. அதனால் உண்டாகும் கிராமத்தவர்களின் பயத்திலிருந்தும் படபடப்பிலிருந்துமே கதை வேகமெடுக்கிறது.  கிராமத்தவர்கள் ஊர்ப் பெரியவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அவர், நகரத்துக்கு போய் பாதுகாப்பு வழங்கும் சாமுராய்களை வாடகைக்கு அழைத்து வந்து கிராமத்திற்கு காவல் போடலாம் என்கிறார்.

சாமுராய்கள் கிராமத்தைக் காப்பாற்றுவது ஒரு பக்கம் இருக்க, சாமுராய்களைத் தேடி அலையும் காட்சிகள் சுவாரசியமானவை. கிட்டத்தட்ட இந்தக் காட்சிகள் மட்டுமே ஒரு மணி நேரம் போகும். ஒரு முடிச்சில் இன்னொரு முடிச்சை போடுவதைப் போன்றது. சாமுராய்கள் கிடைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. காரணம், கிராமத்து மக்களால் சாமுராய்களுக்கு பணமோ, பொருளோ தரமுடியாது. சாப்பாடு மட்டுமே போடமுடியும். அதனால் பசியோடு இருக்கிற சாமுராய்களாகத் தேடிப்பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு. 

கடைசியில் கம்பெய்ங் என்கிற அனுபவம் வாய்ந்த சாமுராய் அவர்களுக்கு உதவ முன்வருகிறார். கிராமத்தை காவல் காக்க ஏழு சாமுராய்கள் தேவை. ஆனால் ஆறு பேர் மட்டுமே கிடைக்கிறார்கள்.  ‘கிக்குசியோ’ என்பவனை இவர்கள் இணைத்துக்கொள்ள மறுத்தும்; தொடர அனுமதியாது இருந்தும் அவன் இவர்களைத் தொடர்ந்தே செல்கிறான்.

பொழுதுபோக்கு திரைப்படத்துக்கும் கலைப்படத்துக்குமான இடைவெளி என்னவென்ற கேள்வியை மறுபடி மறுபடி கேட்டுக்கொள்ள வேண்டிய இடங்களை குரோசாவா உருவாக்குகிறார். கடைசியில் வெற்றிபெற்றது குடியானவர்கள், தோற்றது திருடர்களல்ல… சாமுராய்கள் என்று சொல்வதுதான் படமென எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட வாழ்க்கையில் நிகழும் சாகசம், தத்துவம், நுட்பமான மனித உணர்வுகள் என அதற்குள் ஆயிரமாயிரம் வண்ணங்கள் ஒளிர்கின்றன. அந்த வண்ணங்களை ஒருங்கே பூசி படைப்பாக்குவதில்தான் கலைஞனின் பங்களிப்பு உள்ளது. அதை செய்யாதவன் இயக்கம் தெரிந்த தொழில்நுட்ப நிபுணன் மட்டுமே. 

இப்படத்தில் சிமுரா எனும் மூத்த சாமுராய் ஒரு துறவியைப் போன்ற நிதானம் கொண்டவர் என்றால் கிக்குகியோ பக்குவமற்ற துடுக்கான வாலிபன். கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்டவன். கிராமத்தவர்களின் அற்பத்தனங்களுக்கு கிக்குகியோ காட்டும் முகமும் சிமுராவின் அணுகுமுறையும் வெவ்வேறனாவை. அப்படி ஏழு சாமுராய்களும் ஏழு வகையானவர்கள். அதனால் வானவில் போன்றவர்கள். ஆனால் அவர்களை ஒன்றாய் இறுக்கி வளைத்து வைத்திருப்பது பசி. 

ஏழு சாமுராய்களும் கொள்ளையர்களுடன் மோதும் காட்சியைப் போர்க் காட்சிகளைப் போலவே படமாக்கியிருக்கும் குரோசாவாவின் புறவெளியின் தொழில்நுட்பத்திறன் ஒருபுறமும் கிராம மக்களும் சாமுராய்களுக்குமான முரண், சாமுராய்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் முரண், ஒரு மனிதன் அவனுக்குள்ளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் முரண் என பதிவாகியிருக்கும் அகவெளி இப்படத்தை இன்றளவும் முதன்மையான திரைப்படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. நான்கு சாமுராய்களை பலிகொடுத்த பின்னர் மூத்த சாமுராய்க்கு ஒரு தரிசனம் கிடைக்கிறது. அது வெற்றி, தோல்வியைப் பற்றிய தரிசனம். அவர் சொல்கிறார், தோற்றவர்கள் திருடர்கள் அல்ல; சாமுராய்கள். வென்றவர்கள் பாசாங்குமிக்க கிராம மக்கள்.

குரோசாவாவின் இத்திரைப்படம் புறவயக்காட்சிகளை அதிகம் கொண்டது. எனவே ஒளியும், காற்றும், நீரும் என அனைத்தையுமே தன் திரைக்கதைக்கு ஏற்ப உட்செலுத்தி ஒளிர வைத்திருப்பார். ஆனால் முழுக்கவும் உளவியல் சார்ந்த திரைப்படத்தில் மனித முகங்களையும் மனங்களையும் அவர் காட்டும் விதம் இன்னும் ஆழமானது. இது அப்படியான ஒரு படம் இகிரு (IKIRU)

எல்லாப் படங்களிலும் குரோசாவாவின் தொடக்கம் மிக முக்கியமானதாக அமைந்திருக்கும். மையச் சிக்கலின் முடிச்சைக் காண்பித்து அதை மேலும் இறுக்கி இறுக்கி தொடரக்கூடியது. “இதோ தெரிகிறதே, இதுதான் வதனாபேயின் ஈரலின் எக்ஸ்ரே. இவருக்குப் புற்றுநோய். மிஞ்சிப்போனால், இன்னும் ஆறு மாதங்கள் உயிருடன் இருப்பார்,” என்ற அறிவிப்பின் பின்னணியில் வதனாபேயின் எக்ஸ்ரே படக்காட்சியுடன் தொடங்கும். உடல் ஒடிந்து மனம் தளர்ந்து வதனாபேயாகா நடித்துள்ளவர் செவன் சாமுராயில் வரும் மூத்த சாமுராயான தகாஷி ஷிமுராவேதான் (Takashi Shimura). 

வதனாபே அறுபது வயதான ஓர் அரசு அதிகாரி. முப்பது வருடங்கள் அவர் வாழ்க்கை ஒரே மாதிரியாக நகர்கிறது. எப்போதும் குனிந்தபடி கோப்புகளைப் பார்க்கும் கண்கள், விடுப்பே எடுக்காத பணி ஒட்டுதல், ஒரே மாதிரியான உணவு எனப் போய்க்கொண்டிருப்பவருக்கு தனது முடிவு காலம் தெரிந்தவுடன் நிகழும் மாற்றங்களே கதை. 

தனது வாழ்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு குடியிருப்புப் பகுதியின் முன் இருக்கும் சாக்கடையை அகற்றி, அங்கு ஒரு பூங்கா அமைக்க வேண்டுமென முடிவு செய்கிறார். அந்த துடிப்புடன் புறப்படுபவரின் மரணக்காட்சியில் படம் தொடரும். அவரது நினைவுகளைச் சக ஊழியர்கள், மேலதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் கூடியிருக்க, அவரைப் பற்றிய விவாதம் ‘சாக்கே’வோடு தொடங்குகிறது. அப்போதுதான் அந்தப் பூங்காவை அமைக்க வதனாபே செய்த செயல்கள் பேசப்படுகின்றன. 

அகிரா குரோசாவாவின் திரைக்கதை உத்தி மிகவும் சிலாகிக்கக்கூடியது. வதனாபேவுக்கு புற்றுநோய் என்பதைக் காட்டிய, அடுத்த காட்சியிலேயே தங்கள் பகுதியில் விளையாட்டு திடல் பழுதாகிவிட்டதை முறையிட வரும் பெண்களிடம் மெத்தனமாக இருக்கும் அரசு ஊழியர்களையும் காட்டுகிறார். இது தங்கள் பொறுப்பல்ல; அடுத்த மேசைக்குச் செல்லுங்கள் என அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றனர் அதிகாரிகள். அதே சமயம் எல்லோருமே இறுகிய முகத்துடன் இருக்கும் அலுவலகத்தில் கீழ்நிலை பெண் ஊழியர்  ஒருவர் மட்டும் எப்போதும் உற்சாகமாக இருப்பதையும் காட்டுகிறார். அவளால் சிரித்தும் கத்தியுமே அலுவலகத்தில் பேச முடிகிறது. அதனால் அவள் அந்நியமாகப் பார்க்கப்படுகிறாள். மகனிடம் சொல்ல வீட்டின் இருண்ட மூலையில் காத்திருப்பவர் காதுகளுக்கு மகனுக்கு தனது பணத்தில்தான் ஆர்வம் என்றும் தெரிய வருகிறது. குரோசாவா தொடக்கத்திலேயே அடுத்தடுத்த இவற்றைக் கோர்த்து ஒரு பூங்கொத்துபோல இறுக்கமாகவும் வண்ணமயமாகவும் உருவாக்குகிறார். அந்தப் பூங்கொத்திலிருந்து மெல்ல மெல்ல சரம் கோர்த்து நேர்த்தியான மாலைபோன்ற வளையமாக்கி எங்கும் சிதறிப் போகாத திரைக்கதையை உருவாக்கிவிடுகிறார்.  

மகனால் மனம் உடைந்து மது விடுதிக்குச் செல்பவர், அங்கு அறிமுகமாகும் எழுத்தாளரோடு இரவுப் பொழுதைக் கழிக்க முயல்கிறார். அவர் அதுவரை அனுபவிக்காத வாழ்க்கையை அந்த எழுத்தாளர் காட்டுகிறார். இரவு விடுதிகள், நிர்வாண நடனங்கள், கொண்டாட்டக் கூச்சல் எதுவும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவருக்கு அலுவலகத்தில் அந்நியமாகத் தெரியும் உற்சாகமான பெண்ணின் அருகாமை அப்போது தேவையாக உள்ளது. அவள் அவ்வேலையை விட்டுச் செல்வதாக சொல்கிறார். அவள் புதிதாக இணைய உள்ள பொம்மைத் தொழிற்சாலை பற்றி சொல்கிறாள். அதன் வழி அரூபமாக தான் ஜப்பானிலுள்ள அனைத்துக் குழந்தைகளிடமும் நெருங்கி இருக்கப்போவதை உணர்வதாகச் சொல்கிறாள். இந்தப் பகுதிதான் திரைப்படத்தின் ஆன்மா. வதனாபே தனக்கான மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள அவளது சொற்களின் வழியே முடிவெடுக்கிறார். அப்பெண்ணை தனியே உணவு விடுதியில் விட்டுவிட்டு உற்சாகமாகச் செல்கிறார். 

அவரது மரணத்திற்குப் பிறகுதான் விளையாட்டுத் திடலை உருவாக்கும் பணியில் தனது இறுதிக் காலங்களில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது அனைவருக்கும் தெரிய வருகிறது. அதற்காக பல அரசு அதிகாரிகளிடம் பேசக் காத்திருந்ததும், கேலிகளாலும் வசைகளாலும் அவமானப்பட்டதும் தன் நிலையில் இருந்து இறங்கி இறைஞ்சி நின்றதும் அழுததும் தெரியவருகிறது. 

அவர் பொம்மை வழி குழந்தைகளை நெருங்க விரும்பும் பெண் போலவே விளையாட்டுத் திடலின் வழி குழந்தைகளை நெருங்க நினைக்கிறார். குழந்தைகள் வழி தன் மீதி வாழ்வை அர்த்தப்படுத்த முனைகிறார். குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது. அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு மேலும் மேலும் கொடுப்பதன் வழியே தானும் அதைப்பெற முடியும் என உணர்ந்துகொள்கிறார். மகிழ்ச்சியை விதைப்பதுதான் அதை அறுவடை செய்வதற்கான வழியும் என்ற உண்மையை அறிகிறார்.

இறுதிக்காட்சியில் அந்தக் கிழவர் தன் முயற்சியால் உருவான பூங்காவின் ஊஞ்சலில் அமர்ந்து சோகமாகப் பாடும் வரிகளின் அர்த்தம் புரியாவிட்டாலும் அந்த முதுமையின் குரலில் இருந்த தளர்வு கண்ணீரைத் தூண்டக்கூடியதாக இருந்தது. செவன் சமுராயிலும் சன்ஷிரோ சுகடாவிலும் யோஜிம்போவிலும் வரும் சாகச நாயகர்கள் போலவே வதனாபேவும் ஒரு சாகச வீரர்தான். ஆனால் அவர் தனக்குள்ளேயேபோராடி வென்ற வீரர். அந்த வீரரையும் அறிவதும் அறிவிப்பதும்தான் கலைஞனின் கண்கள்.

குரோசாவா ஓர் இலக்கிய வாசகர். ஷேக்ஸ்பியர், பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி ஆகியோரின் கதைகளைத் தழுவி திரைப்படங்களை இயக்கியவர். எப்போதும் ஒரு கலைஞன் தன் கலையில் உச்சமான தருணங்களைத் தொட இன்னொரு கலை வடிவத்தின் அருகாமை அவசியமாக உள்ளது. இயல்பாகவே அவர்கள் மனம் அவ்வாறு இன்னொரு கலையின் மகத்துவத்தை எளிதில் அறிந்துகொள்கிறது. தான் காணும் கடவுளை இவன் வேறு வடிவில் காண்கின்றான் என அறிந்துகொள்பவர் எவரோ அவராலேயே தன் படைப்பை முழுமை செய்ய முடிகிறது. ஓர் எழுத்தாளனால் ஒளியைக் கொண்டு வர முடிவதுபோல ஓர் ஓவியனால் சப்தங்களையும் இசைக்கலைஞனால் வெளிச்சத்தையும் உருவாக்கமுடிகிறது. குரோசாவா இலக்கியத்துடன் இணைந்திருந்த விளைவுதான் ‘ரஷோமான்.’ ரயனோசுகே அகுடகாவா எழுதிய இரு சிறுகதைகளை இணைத்து உருவான திரைக்கதை அது.

அகிரா குரோசாவாவின் உச்சமான கலைப்படைப்பாக குறிப்பிடப்படும் ‘ரஷோமான்’ பெருமழையில் இருந்து தொடங்குகிறது. ரஷோமான் என்பது கியாடோ நகரத்தின் நுழைவாயில். பிரமாண்டமும் இடிபாடுகளும் இணைந்தே அது காட்சிகொடுக்கிறது. அத்தனை இடிபாடுகளையும் தாங்கி காலத்தின் சாட்சியாக நிற்கும் பிரமாண்டம் என்றும் அதை சொல்லலாம். ஒரு புத்த பிக்கு, விறகுவெட்டி, வழிப்போக்கன் ஆகியோர் அங்கு மழைக்கு ஒதுங்குகின்றனர். மூவருமே ஒரு கொலைவழக்கின் சாட்சிகளாக இருந்தவர்கள். எனவே அதைப் பற்றிப் பேசத்தொடங்குகிறார்கள். 

மூவருக்குமே காட்டினுள் கொலை செய்யப்பட்ட ஒரு சாமுராயைப் பற்றித் தெரிகிறது. அதோடு அந்த சாமுராயின் அழகான மனைவியை தோஜேமெரு என்ற திருடன் வன்புணர்ச்சி செய்துவிடுவதையும் மூவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் இந்த ஒரே நிகழ்வை நீதிமன்றத்தில் விறகுவெட்டி, தோஜோமெரு, சாமுராயின் மனைவி, மீடியம் வழி சாட்சி சொல்லும் சாமுராயின் ஆவி என நான்கு பேரும் நான்கு விதமாக விவரிப்பதுதான் கதை. நடந்த கொலையைப் பற்றி நால்வரும் அவரவர் கோணத்தில் விவரித்தாலும் அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது. இதில் எவரது கோணம் சரியானது என்று படம் தீர்மானிக்கவில்லை. இயக்குனரின் நோக்கம் சரி, பிழைகளைச் சொல்வதல்ல. அவரிடம் எப்போதும் கறுப்பு – வெள்ளை என்ற இருநிலைகளில் வாழ்க்கை இருந்ததில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டை கதைக்களனாகக் கொண்ட இப்படத்தில், ரஷோமான் நுழைவாயிலில் ஒரு குழந்தை கைவிடப்பட்டுக் கிடக்கிறது. ஆறு குழந்தைகளின் தந்தையான விறகுவெட்டி ஏழாவது குழந்தையாக வளர்க்க அக்குழந்தையை எடுத்துக்கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது. 

சன்ஷிரோவுக்கு நிலவின் குளிரைப்போல மெர்சோவுக்கு தகிக்கும் வெய்யில் போல தோஜேமெருவுக்கு காற்று உணர்ச்சி மாற்றத்துக்குக் காரணமாக உள்ளது. ஓய்வாகப் படுத்துகிடந்த அவனைக் குதிரையில் கடந்து செல்லும் பெண்ணின் முகத்திரையைக் காற்றுதான் அகற்றி உசுப்புகிறது. 

ஆனால் தனது எந்த விளக்கத்தையும் தோஜேமெரு சிரித்துக்கொண்டுதான் சொல்கிறான். பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே இருக்கிறாள். இந்த அழுகையையும் சிரிப்பையும் அகற்றிவிட்டால் இந்த இரு மனிதர்களும் யார் என்ற கேள்விதான் பார்வையாளன் முன் மிஞ்சி இருப்பது. விரட்டும் தோஜேமெருவும் பதுங்கும் பெண்ணும் ஒரே செயலுக்காக அவரவர் அணிந்துள்ள முகத்திரையின் நாடகமாகவே நால்வரும் சொல்லும் கதையைத் தொகுத்தால் கிடைக்கும் உண்மையாக உள்ளது. 

நான்கு கோணங்களில் ஒரு பெண்ணை சமூகம் அணுகும் விதத்தை குரோசாவா சொல்கிறார்.

திருடன் ஒரு மிருகத்தின் சாட்சியம்போலவே பாவனையின்றி வாக்குமூலம் கொடுக்கிறான். கணவனை சூழ்ச்சி செய்து கட்டி வைத்துவிட்டு அவன் பார்வையில் படும்படி வன்புணர்ச்சி செய்ததைச் சொல்கிறான். பின்னர் அப்பெண்ணே முன்வந்து தான் இருவருக்கு மனைவியாக இருக்கமுடியாது என்று சொல்லி இருவரில் ஒருவர் சாக வேண்டும் என்று  கூறியதால் இருவரும் கத்திச் சண்டை போட்டோம். அதில் அவள் கணவனைக் கொன்றேன் என்கிறான். ஆனால் இதற்கு முற்றாக வேறு நிலையில் மனைவியின் வாக்குமூலம் அமைந்திருக்கும். கணவனின் பார்வையைத் தாங்க முடியாதவள், “அப்படிப் பார்க்காதீர்கள். அதற்கு பதில் என்னை இந்தக் கத்தியால் கொன்றுபோடுங்கள்” என்று மயங்கி விழுகிறாள். நினைவு திரும்புகையில் அவள் கணவன் தற்கொலை செய்து இறந்திருக்கிறான். இவ்விரண்டுக்கும் முற்றும் முரணாக சாமுராய் ஆவி சொல்லும் கதை வருகிறது. தன்னிடம் வல்லுறவு கொண்ட திருடனிடமே தன் மனைவி ‘என்னை எங்காவது அழைத்துப் போ’ என்று சொல்கிறாள். ஆனால் அதற்கு முன் என் கணவனைக் கொன்றுவிடு என்று சொல்ல திருடன் சாமுராயைக் கட்டிலிலிருந்து விடுவித்து “இவளைக் கொல்லவா?” என்று கேட்கிறான். பயத்தில் அவள் தப்பியோட, அவமானத்தால் தான் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறது ஆவி. இச்சம்பவத்தைப் பார்வையாளனாக நின்று பார்த்த விறகு வெட்டி சொல்லும் கதை புதியது. அவளை வல்லுறவு செய்த பின் திருடன் அந்தப் பெண்ணிடம் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கேட்கிறான். அவன் காதலில் விழுந்துவிட்டான். அவள் தன் கணவனின் கட்டுகளை அவிழ்த்து திருடனுடன் சண்டையிடச் சொல்கிறாள். அதற்கு அவள் கணவன், “இந்தப் பெண்ணுக்காக நான் சண்டை போடப் போவதில்லை. நீயே அழைத்துப் போ,” என்று சொல்கிறான். “அவனைக் கொன்றுவிட்டு என்னைச் சாகச் சொல். அப்போதுதான் நீ சரியான ஆண் மகன்” என்று மனைவி சாமுராயிடம் சொல்ல, இருவரும் சண்டை போடுகிறார்கள். கணவன் மடிகிறான். 

நான்கு பேருடையை கதையிலும் நான்கு விதமான மனப்போக்கு பதிவாகிறது. திருடனின் கதையில் முதலில் திருடனை கத்தியால் தாக்க முயன்றாலும் அப்பெண் ஒரு தருணத்தில் திருடனுடன் மனம் ஒத்தே உறவு கொள்வதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருடன் தான் ஒரு வீரன் என்பதை தான் உருவாக்கும் கதையில் சொல்கிறான். மனைவியின் கூற்றுப்படி அவள் ஓர் அபலை. அவளிடம் துளியளவும் ஒப்புதல் இல்லாமல் நடந்துள்ள விபத்தாகச் சித்தரிக்கப்படுகிறது. கணவனின் ஆவி கதையில் அவன் திருடனுடன் சண்டையிட்டு தோற்கவில்லை. அவன் மனைவியால் ஏமாற்றப்பட்டவன். பெண் இத்தனை கொடுநஞ்சு என்பதாலேயே அவன் அவளை பொத்திப் பொத்தி பாதுகாத்தவனாகிறான். எனவே அவனிடம் இருந்த ஆதிக்க உணர்வுக்கு நியாயம் சூட்டுகிறான். விறகு வெட்டி சொல்லும் கதையில் இருவரையும் சண்டையிடச் சொல்லும் மனைவியின் குரலில் உக்கிரம் தொனிப்பது காட்சியாக்கப்பட்டுள்ளது. தன் அனுமதியின்றி வல்லுறவு செய்த திருடனையோ அந்த விபத்துக்குப்பின் தன்னை ஒரு உயிராக மதிக்காத கணவனையோ அவள் ஆண்களாக மதிக்கவில்லை. அவளுக்கு இருவரும் ஒருவரே. இருவரும் சாக வேண்டியவர்களே. 

நான்கு பார்வைகளில் ஒவ்வொரு நியாயங்கள். வெவ்வேறு நிரபராதிகள். வெவ்வேறு குற்றவாளிகள். இந்த சாம்பல் நிறக் காட்சிகள்தான் ரசிகனை இன்று வரை இப்படம் குறித்துப் பேச வைக்கிறது. வாழ்வில் காணவே கிடைக்காத உண்மைகளை ஒட்டிய பயத்தையும் தெளிவையும் ஒருங்கே உண்டாக்குகிறது.

சாமுராயைக் கட்டி வைத்த இடத்திற்கு அவன் மனைவியை அழைத்து வந்து வல்லுறவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் திருடனுக்கு என்ன? ஒரு புலி காட்டில் மானை வேட்டையாடுவதை ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தெரிந்தால் அதுதான் இதற்கும் பதில். அவன் வேட்டையில் சாகசத்தைக் காட்டுகிறான். எது தானோ அதுவாகவே முன்வந்து நிற்கிறான். இதற்கு எதிர்ப்பதமாக சாமுராய் மனைவியைப் பதுக்கி அழைத்துச் செல்கிறான். அறிய வகை வாள் இருப்பதாகச் சொல்லும் பொய்யை நம்பி பித்தனைப்போல திருடன் பின் ஓடி மாட்டிக்கொள்கிறான். இறுதியில் ஒரு திருடனிடம் சாமுராயான அவன் குத்துப்பட்டு இறக்காமல் கட்டிப்போடப்பட்ட அற்ப ஜீவனாகிறான். இந்த இருவரில் அப்பெண்ணை யார் உண்மையில் கவர்ந்திருப்பார்? கணவனாகிவிட்டபடியால் சாமுராயா? மிருகமாகி தன்மேல் இயங்கும் திருடனா? அடிமையாக நடத்தும் அன்பா? கட்டுப்பாடற்ற இச்சையின் வடிவமா? உலகியல் ஆசையால் மாட்டிக்கொண்டவனா? உடல் ஆசையால் வீழ வைத்தவனா? என்பதையே நான்கு கதைகளும் வெவ்வேறு விதமாகச் சொல்கின்றன. 

ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதிலை குரோசாவா ஒரு குழந்தையின் அழுகையில் சொல்கிறார். இடிந்து நிலைத்திருக்கும் பிரமாண்டம் வரலாறு என்றால் அதை இன்னமும் தாங்கி நிற்பது குழந்தையை ஏந்தும் கைகளில் உள்ள அன்பென்று படம் முடிகிறது. அது ராசோமனில் பெய்யும் மழைப்போல ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ளும். 

57 வருடங்கள் திரை உலகில் இயங்கிய அகிரா குரோசாவிற்கு 9-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கோல்டன் பரிசும் ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளன. அவருடைய பெயரிலேயே சான் ஃபிரான்ஸிஸ்கோவிலும் ஜப்பானிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர அவர் பெயரில் இயக்குனர் பள்ளியும் உண்டு. 1998ஆம் ஆண்டு தனது 88வது வயதில் காலமான அகிரா குரோசாவாவிற்கு இவை எதுவும் அர்த்தம் கொடுத்திருக்குமா எனத் தெரியவில்லை. கலைஞன் தன் கலையின் வழி வாழ்வின் உண்மையைத் தேடுபவன். அதை அறியும் வரை மட்டும்தானே அவன் மனதில் இவையெல்லாம் மினுமினுக்க முடியும்.

(Visited 96 times, 1 visits today)