Author: முகம்மது ரியாஸ்

செந்தாழை

கெம்பித்தாய்கள், குண்டா வாளால் ஒருவனின் தலையைச் சீவி மக்கள் கூடுமிடத்தில் வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள். இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்கு போல் கண்கள் துருத்திக்கொண்டு ஏக்கத்துடன் நம்மைப் பார்க்கின்றன. இன்னும் கடலில் மிதக்கும் பிணங்கள்… அவை கரையொதுங்கியதும், நாய் இழுத்துக்கொண்டு வருபவற்றை வந்துவேடிக்கை பார்ப்பவர்களிடத்தில் கூறுவதெல்லாம் என்ன… கவனமாக இருங்கள்… கவனமாக…

அத்தர்

நீண்டநாள் திறக்கப்படாத ஒரு ‘ட‘ வடிவ குடியிருப்பு. அரசாங்கத்தால் வசதியில்லாதவர்களுக்கான மானியத்தில் ஒதுக்கப்படும் தீப்பெட்டி சைஸிலான வீடு. அறையில் புத்தகங்கள் மேல் புழுதி மேகம் போல் படர்ந்து கிடந்தது. கதவைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே புக, தூசுகள் ஒளியில் விண்ணேற்றம் சென்றன.