அத்தர்

நீண்டநாள் திறக்கப்படாத ஒரு ‘ட‘ வடிவ குடியிருப்பு. அரசாங்கத்தால் வசதியில்லாதவர்களுக்கான மானியத்தில் ஒதுக்கப்படும் தீப்பெட்டி சைஸிலான வீடு. அறையில் புத்தகங்கள் மேல் புழுதி மேகம் போல் படர்ந்து கிடந்தது. கதவைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே புக, தூசுகள் ஒளியில் விண்ணேற்றம் சென்றன.

நிறைய அரபுப் புத்தகங்கள் – அதற்கான மலாய் வியாக்கியானங்கள். கோப்பி மங்குகள் குடித்த கறையோடு வடுப்பிடித்துக் கிடந்தன. சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த இந்தோனேசிய வலி சொங்கோ எனும் ஒன்பது இஸ்லாமிய பெரியவர்கள் படங்களில் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர். ஹேங்கரில் ஒன்றிரண்டு மலாய் பாஜூ மற்றும் ஏமனி இசார் சாரம் – சிவப்புக் கட்டங்களுடன் கொடியில் தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தபோது காய்ந்த ரோஜாப்பூக்கள் சக்கையாகப் புத்தகங்களிலிருந்து வந்து விழுந்தன. ரோஜாவைக் கசக்கினேன். மிச்சம் இருந்த ஈரத்தில் சாறு வழிந்து வாசனை பரப்பியது. பெயர்களின் மூலம் மனிதர்களை அறியும் நுண்ணுணர்விலிருந்து விடுப்பட்டு வாசனைகள் மூலம் மனிதர்களை அறியும் பக்குவத்திற்கு வந்து சில வருடங்கள் ஆகிறது.  பக்கத்து வீட்டில் சாளை மீனை வறுக்கும் வாசனை வீட்டை அடைந்திருந்தது.

பால்மர் மலைக்குன்றின் மேல் பச்சைவெளி படர்ந்து கிடக்கிறது. பச்சை மினாரா மரகதக்கல்லில் வெட்டியெடுத்ததுபோல் ஓங்கி நிற்கிறது. செண்பக மலர்களும் சாமங்கிப் பூக்களும் வாசனையாய் பூத்துக்கிடக்கும் பாதையின் வழியே தாகத்தோடு  நடந்துக்கொண்டிருந்தேன். நா வறண்டு, குன்றின் மீது ஏறமுடியாமல் அமர்ந்துவிட்டேன். மறைந்திருந்த வெள்ளை முயல் ஒன்று சடாரென பச்சைப்புல்லை கிழித்துக்கொண்டு நெட்டுருவாய் ஓடியது. முயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மெதுவாகப் பின்தொடர்ந்தேன். வெள்ளியருவி ஓடை இரைச்சலோடு ஓடிக்கொண்டிருந்தது. கைகளைக் குவித்து ஓடை தீர்ந்திடும் அளவுக்குக் குடித்திருப்பேன். திமிங்கலம் மீன்களை உண்டு அதன் முள்களால் உருவாகும் திரவத்தில் எடுக்கும் அம்பர் எனும் அத்தர் வாசனை நாசியை துளைத்தது. மிகவும் பரிச்சயமான வாசனை. கஸ்தூரியையும் அம்பரையும் கடைந்தெடுத்தால் ஒரு நகச்சுத்தியளவு ஒட்டிக்கிடக்கும் பிசினை கழுத்தின் வளையங்களின் இடுக்கில் தடவிவிட்டால் போதும். மூன்று நாட்களுக்கு அகலாத வாசனை. ஆனால் இயற்கையாகவே அம்பர் வாசனை துய்த்த மனிதரை இந்த தீவில் எங்கேனும் கண்டிருக்கிறீர்களா என மனிதர்களை கேள்விக்கேட்டுக்கொண்டிருக்கும்போது வாள் உருவும் சத்தம் கேட்டது.

வெள்ளை உடை தரித்த இரண்டு வீரர்கள் கையில் வாளுடன் நீண்ட தலைப்பாகையுடன் காவல் இருக்க, பச்சைத் தலைப்பாகையுடன் நீண்ட வெள்ளை தாடியுடன் இஸ்லாமிய சூஃபி பெரியவர் அகர் கட்டைகளிலான தஸ்பீஹ் மாலையை உருட்டிக்கொண்டிருந்தார். அருகில் மற்றொரு உருவம்.  ‘மினல்லாஹி இலல்லாஹி… மினல்லாஹி இலல்லாஹி…’ அதன் முதல் மணியை அவரது கட்டைவிரலுக்கும் பெருவிரலுக்கும் நடுவில் உருட்டியபோது நான் ஓடையிலிருந்து தூக்கியெறியப்பட்டு அவர்களுக்கு சமீபமாக நின்றுகொண்டிருந்தேன். மலாயன் புலிக்குட்டிகள் நான்கு ‘உர்ரென‘ சுற்றிக்கொண்டிருந்தன. உஸ்தாத் ஹாதியை அடையாளம் கண்டுக்கொண்டேன். விரைவாக அவர்களுக்கு அருகில் சென்று பெரியவரின் கைகளைப் பிடித்து முத்தமிட்டேன். ஆவலோடு உஸ்தாத் ஹாதியை நோக்கி பாய்ந்தபோது, சூஃபி பெரியவரின் கைகள் எனைத் தடுத்து நிறுத்தியது. உஸ்தாத் ஹாதி தனது முகத்தை வானத்தின் பக்கம் தடுத்து வைத்துக்கொண்டார். என் முகம் வாடிவிட்டது. சூஃபி பெரியவர் ஏதோ ஒன்றை ஆரம்பித்து வைக்கும்படி உஸ்தாதை பார்த்தார். கிஞ்சிற்றும் என் முகத்தை பாராமல் “…போய் விடு …போய்விடு… நீ வரும் நேரம் இதுவல்ல…” என விரட்டினார்.  எவ்வளவோ கெஞ்சியும் “இங்கே நிற்காதே …போய்விடு…போய்விடு” என விரட்டினார். அந்த அதட்டலில் திடீரென மயக்கம் களைந்தவனாய் சுதாரித்துக்கொண்டு மீண்டும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தேன்.

கன்னூஜில் அப்துல் கரீமின் ‘ரூஹூல் குலாப்’ அத்தர் என்றால் வெகு பிரபலம். அதன் நிலம் வறண்ட தக்காணபூமி என்றாலும் ரோஜாவின் சுகந்த வாசனை ஊரின் வனப்பில் கதகதப்பை தக்கவைத்திருக்கிறது. கன்னூஜில் எல்லா மனிதர்களின் மூக்குகளும் திறந்துவிடும் வாசனையின் உலகம். முகலாய சாம்ராஜ்யத்தின் வாசானாதி ஸ்தலம்.ரோஜாக்களை தரம் வாரியாக பிரிக்கும் நுணுக்கம் அறிந்த இளைஞன் ஜலீல் ராஜஸ்தானிலிருந்து வேலைக்கு வந்திருந்தான். ஜலீல் கரீமிற்கு இடதுகையாக இருந்தான். வெளியூரிலிருந்து வரும் திடவாசனை மூலப்பொருட்களை வாங்கி திரவங்களை கலந்து வாசனைத் திரவியமாக்கி அத்தர் போத்தல்களில் நிரப்புவதும் – பேக் செய்து வெளியூர்களுக்கு அனுப்புவதுமாய் அவனது வேலை.

துறுதுறுப்பான ஜலீலுக்கு பன்னீர் ரோஜாக்களைப் பிரித்து ஊறலில் போடுவதும், சூட்டில் வெந்து கிளம்பும் நீராவியைப் பிடிப்பதும் அதனோடு சேர்மானங்களைச் சேர்த்து குப்பிகளில் அடைப்பதும் வேலை. ஊறல் போடும் அடுப்பு அப்துல் கரீமின் வீட்டுக்கு பின்னால் இருப்பதால் அவ்வப்போது ஜொஹ்ரா இவனைப் பார்க்க வருவாள். அப்துல் கரீமின் ஒரே மகளான ஜொஹ்ராவின் இதழ்கள் நேர்த்தியான பன்னீர் ரோஜாவின் மடிப்புகளை வைத்திருந்தது. இதழ்களைச் சுருக்கி தனது முட்டைக்கண்களால் ஜலீலை பார்க்கும்போதெல்லாம் தான் எந்த வாசனைத் திரவியத்தை தயாரிக்கிறோம் என்ற அறிகுறியே இல்லாமல் ஆகிவிடுவான். இதழ்களைப் பிரித்து வாசனைத் திரவியமாக்கும் வித்தை ஜொஹ்ராவிடமும் நடந்தது. ஆறு டன் பன்னீர் ரோஜாக்களை நீராவி அடுப்பில் போட்டு வேகவைத்து கிடைக்கும் விலையுயர்ந்த ஒரு கிலோ ரூஹூல் குலாபை தோற்கடிக்கும் யாராலும் இன்னும் நுகரப்படாத ‘அத்தரை’ தன்னகத்தே வைத்திருந்தாள் ஜொஹ்ரா. “இந்த வேலையில அகச்சுத்தி முக்கியம். உன்னோட மனசதான் வேற வேற வகையில நீ அத்தரா அடைக்கிற…” என ஜலீலுக்கு புத்தமதி கூறிக்கொண்டே இருப்பார் அப்துல் கரீம். முகலாயர் காலத்திலிருந்து தனது மூதாதையர்கள் சொல்லிக்கொடுத்த சூத்திரத்தை வெகுரகசியமாக வைத்திருந்தவர். நம்பிக்கையின் மூலமாக ஜலீலுக்கு அதனை சொல்லிக்கொடுத்தார். அத்தர்காரனுக்கு சூத்திரம் மட்டுமல்ல – அவன் கைகளுக்கு எதை கலந்தால் மனிதர்களை வாசனையால் பரவசப்படுத்த முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் லட்சணம் தொழில் அல்ல ஞானம் என விவரிக்கும்போது அவரது உள்ளங்கையை விரித்து காண்பித்தார். அதில் பெரிய மலைக்குன்றின் மீது ரோஜாக்கள் பூத்திருப்பதை போன்று கைரேகைகள் தந்திகளாக பிரிந்து உள்ளங்கை முழுதும் வாசனையால் நிறைந்து கிடந்தது. ஜலீல்-ஜொஹ்ரா இருவரின் விருப்பத்தை அறிந்த அப்துல் கரீம் மண்வாசனை மிக்க மழைநாளில் இருவரது கரங்களையும் இணைத்து வைத்தார்.

பழைய குச்சிப்பள்ளி சூலியாவில் நான் அமர்ந்திருந்தபோது கனகாம்பர வாசனையும் சாமந்திப்பூ வாசனையுமாய் சைனா டவுன் மாரியம்மன் கோயிலிலிருந்து புறவாசல் வழியாக புறாக்களோடு பச்சை திரவியமாய் ஒளிர்ந்துக்கொண்டிருந்த சூபி மகானின் கால்மாட்டு. சந்தன ஊதுபத்திகளோடு வாசனை சேர்த்துக்கொண்டிருந்தது. கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தோல்வி வலியது. நீரில் நிற்கும் எண்ணெய்க் குமிழ் போல் சமூகத்தில் இருந்து அது விலகி நிற்க வைக்கிறது. மொத்தமாக இந்திய மளிகை சாமான்கள் எடுத்து விற்கும் சந்தையில் பல பேர் நுழைந்து இன்று எடுபடாத அளவிற்கு போய்விட்டது. வியாபாரம் நொடித்துப் போனது. முதலீடு மொத்தமும் பொருளாய் கிடக்கும்போது முதல் போட்ட நண்பன் வம்படியாய் தன் பங்கை வாங்கிக்கொண்டுப்போனான். வியாபாரம் பெரிதாய் தெரியாத என்னை, ஐடி துறையில் இருந்த என்னை இங்கே அழைத்து வந்து நட்டாற்றில் விட்டுப்போனான். பெரிய முதலைகளுடன் என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போனேன். வேர்ஹவுஸில் கிடந்த பொருட்களை பாதிவிலைக்கும், நட்டத்திற்கும் விற்று, நேற்றுக்கூட கூழாய் உருகிக்கிடந்த கருப்பட்டி அச்சுவெள்ளத்தை குப்பையில் கொட்டினேன். மனம் மழைபொய்த்த மண்போல் உலர்ந்துகிடந்தபோது மனதை உலுக்கி வரிகள் கொட்ட ஆரம்பித்தது.

‘..கண்டித்து எனை  வாட்டுதேபொல்லாக்  கலிகலி..

வண்டினம் பாடும் நன்னாகை வாழும் ஒலிஒலி..

பெண்டு தாய் சுற்றத்தார் வசைபேசச்  சொலி சொலி..

கண்டும் கேட்டும் தானேனே காப்பீர் ஒலிஒலி..

பாடி நாடிக் கூவப் கூவப்  பார்ப்பார்  இலிஇலி..

வாடிடும்  பயிர்க்கு  மழை மானும்  ஒலிஒலி..

ஆண் பெண்டு பிள்ளைபொன் பூ ஆ உயிர் கொலி கொலி

மானம்  ஓங்கும் புகழோய்  மதித்தான்  ஒலி ஒலி

ஈகை  யசன்குத்தூசு  ஈன்ற  இணையில் அலி அலி

நாகையான்  துயர்  அகல நாடும் ஒலி ஒலி….’

அப்துல்காதிறப்பா முனாஜாத் வரிகளை விடுவிடுவென ஓத ஆரம்பித்தேன். ஒரு கை தோளைத்தழுவியது. பிரகாசமான முகம். இந்திய முகமோ அல்லது மலாய் முகமோ அல்லது அரபிய சாயலோ இன்னதென்று கூறமுடியா முகம் அது. உஸ்தாத் ஹாதி என அறிமுகம் செய்துகொண்டார். அரைகுறைத் தமிழில் எனை விசாரித்தவர், டீ குடிப்பதற்காக வெளியே சென்ற போது பாக்கெட்டில் இருந்த கூடாங் காரம் சிகரெட்டை எரிதணலில் கருகும் கிராம்பு நறுமணத்தின் வாசனையின் புகையை ஊத ஆரம்பித்திருந்தார். வியர்வையில் துய்த்த அம்பர் வாசனை அவரது கழுத்து இடுக்குகளிலிருந்து வர ஆரம்பித்தது. மாயவாசனை. கையில் வாங்கிய கோப்பி மங்கின் வாசனையை நுகர்ந்துகொண்டு அவரது உடலின் பல பாகங்களிலிருந்து வந்து வாசனைகளில் திளைத்திருந்தேன். அகில் கட்டைகளை எரித்து புகையின் மீது அமர்ந்திருக்கும் அரேபிய பெண்களின் நறுமணம் அவரது மலாய் ஜூப்பாவில் பொங்கியதும், தாயுப் நகரத்து ஊத் கட்டைகள் எல்லாம் எரிந்து அவரது சட்டையில் அப்பிக்கொண்டதாய் வாசனை. அரேபிய தீர்க்கதரிசி யூனுசாரை விழுங்கிய திமிங்கலத்தின் திரவத்தில் எடுக்கப்பட்ட திரவியமா இது… கோப்பியை நுகர்ந்து மறுபடியும் வாசனைக்குள் நுழைகிறேன். பரிசுத்த ஆன்மா பல வாசனைகளை குழைத்து தரும் ஞானம் எனக்கு புதிதல்ல. கன்னூஜ் சூஃபி ஞானி அப்துல்கரீமின் வழித்தோன்றலான எனக்கு அது புதிதல்ல… பிராவாகிக்கும் பூரண முகம் எனை நோக்கி திரும்பியது. பையில் வைத்திருந்த வேதத்தை எடுத்து என் கைகளில் கொடுத்தார். மெதுவாகத் திறக்க சொன்னார். அரேபிய தீர்க்கதரிசி மூஸா பெருந்தகை ஞான போதகர் நபி ஹிள்ரு பெரியவரை கடலின் மடியில் ஞானத்தை அடைய சந்தித்த நிகழ்வை குறிக்கும் வேதவரிகள் கண்ணில்பட்டது. உன்னுடைய விலா எலும்பு இந்தியப் பெருங்கண்டத்தின் இஸ்லாமிய பெரியவர் அஜ்மீர் பெரியவரின் வழித்தோன்றல் என எனது கடந்த காலம் பற்றிக் கூறினார். மூடிவிட்டு மறுமுறை திறக்க சொன்னார். தீர்க்கதரிசி யூசுஃப் பெருந்தகையின் சிறைக்காலத்தில் தான் கண்ட கனவுகளுக்கு விளக்கத்தை கேட்ட சக கைதி தலையில் பறவைகள் கொத்திக்கொண்டிருந்த கனவின் நிகழ்வு வந்தது. தொழிலில் ஏமாந்துபோய் நிர்கதியாய் விட்டுப்போன நண்பனின் துரோகத்தைப் பூடகமாக எனது நிகழ்காலத்தைப் பற்றி கூறினார். மூடிவிட்டு மறுமுறை திறந்தபோது உயர்ந்த மாடத்தில் எரியும் ஜோதியையும் ஜைத்தூன் எண்ணெய்யின் குறிப்புகளும் வந்தபோது நேரம் வரும்போது கூறுகிறேன் எனக் கைகளைப் பார்த்தார்.  பெரிய மலைக்குன்றுகள் மீது ரோஜாக்கள் பூத்து குலுங்கி வாசனைகள் கிளைகளாக ரேகைகளில் ஓடும் விரிந்த உள்ளங்கையை பார்த்து புன்முறுவலிட்டார்.

‘விசாவுக்கு நாலு லட்சம் கட்டணும்…’என ஏஜன்ட் கூறியபோது, அத்தாவிடம் பெறுமதியான தொகை ஏதும் இல்லை. கீழடி வாசலில் அமைந்திருக்கும் பழைய புராதன கடை ஒன்றே சொத்து. புராதனம் என்றால் – தஞ்சை மராட்டிய மன்னன் அழைப்பின் பேரில் கன்னூஜிலிருந்து வந்த மூதாதையர்கள் கீழடியில் ஊதுபத்திகளையும் வாசனை திரவியங்களையும் செய்யக் குடியேறியவர்கள். மாணிக்கபூரிலிருத்து தனது சீடர்களுடன் சாகுல் அமீது எனும் ஞானி, தஞ்சை வந்திருந்த போது சரபோஜி மன்னன் தனது உடல்நிலை குறித்து முறையிட்டான். அரண்மனை மாடத்தில் அமர்ந்திருந்த புறாக்கூட்டத்தில் சில அடையாளம் கூறி  புறாவொன்றை பிடித்து வரச்சொன்ன போது ஜலீல் வேகமாக சென்று புறாவைப் பிடித்து வந்தார். அதன் இறக்கைகளுக்கு நடுவே செருகப்பட்ட குத்தூசிகளை ஒவ்வொன்றாய் பெரியவர் பிரிக்க – சரபோஜி மன்னரின் உடல்நோவு நீங்க ஆரம்பித்தது. ஜலீலை அழைத்த பெருந்தகை காதில் முணுமுணுக்க – வெட்டிவேரையும் மருதாணியையும் பீங்கானில் ஊறல் போட்டு கிடைத்த நீராவியில் வாசனை மருந்து செய்து நாற்பது நாட்கள் ஆவிபிடிக்கச் செய்தார். புதுவாழ்வு பெற்ற சரபோஜி மன்னரின் மரணம் வரையிலும் அகர்பத்திகளின் மணமும் வெட்டிவேரின் வாசனையும் அரசவையை அலங்கரித்தது. நாகூரில் இடம் வழங்கி சாகுல் அமீது பெருந்தகையை கெளரவித்தார் சரபோஜி மன்னர். ஞானியால் தொடங்கப்பட்ட தஞ்சை தரணியின் வாசனை உலகம் காலம் காலமாய் நானூறு ஆண்டுகளாக தொடர்வதை ஒரு முடிவுக்கு கொண்டு வர அத்தா திட்டமிட்டார்.

ஆலவிழுதுகளில் வடிந்த பால், பச்சை மணத்தோடு ஒரு சூலித்தாயின் பிரக்ஞையை ராதின் மாஸ் ஜியாரம் அமைந்திருக்கும் மவுண்ட் ஃபேபர் மலைத் தாயாக காட்சியளித்தது. அதன் கிளை மடியில் அமர்ந்து உஸ்தாத் ஹாதி, கண்களை மூடி அமர்ந்திருந்தார். நேர்கோட்டில் மஞ்சள் பெட்டகத்தில் ராஜகுலத்துக்கான மஞ்சள் நிறக் கொடி ஜாவா இளவரசி ராடின் மாஸ் அயூ மண்ணறை மீது, அவரது தந்தை பனெக்ரான் மீது உறுதியான இரண்டு இலச்சினைகள் பொருத்தப்பட்டிருந்தன. வேலை நாளின் பகல்பொழுதில் வேலையற்ற எனக்கு வெறுமையாய் காட்சியளித்தது. இலச்சினைகள் அவர்களது வாழ்வியலின் நீண்ட போராட்ட வாசனைகளின் மணம் மலையின் மீது பரப்பிக்கொண்டிருந்தது. ராஜதுரோகத்தில் வீழ்த்தப்பட்டவர்கள் வீறுக்கொண்டு எழுவதும் அதன் ஊடே மடிவதும் மரணம் ஒரு கொண்டாட்டத்தை நோக்கி நகர்கிறது. உன்னத லட்சியங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் லட்சியங்களால் ஞானிகள் வாழ்கிறார்கள்.

பழைய தெமாசெக் கடற்கரையில் நாசம் செய்த கடற்கொள்ளையர்களோடு போரிட்டு மடிந்த 25 சூஃபி பெரியவர்களை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தோம். உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவே பழைமை மாறாத சிறுகூரையில் அவர்களது நினைவிடம் அமைந்திருந்தது. உள்ளே நுழைந்ததும் திபுதிபுவென பூனைகள் வர ஆரம்பித்தன. இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டு பூனைகள் பருத்த புலிகள் போல் அடக்கரதலங்களில் உலா வர ஆரம்பித்தன. அதன் கூர்மையான கால்நகங்கள் மூலம் சுவர்களில் ஏறிக்குதிக்க ஆரம்பித்தன.  கூரைக்குப்பின் சிதிலமடைந்த கட்டிடத்தின் பின்பக்க வாயிலில் ராஜவாரிசுகளும் – ராணுவச் சிப்பந்திகளுமாய் மஞ்சள் – பச்சை கொடி இலச்சினையாகப் பொருத்தப்பட்ட மண்ணறைகள் ஹார்பர் துறைமுகத்தின் முகம் பார்த்திருந்தன. விரிப்பில் அமர்ந்து உஸ்தாத் ஹாதி கண்களை மூடி அமர்ந்தார். தாத்தாவின் காலத்தில் வீட்டிற்குள் நின்ற மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தருவித்த புனுகுப் பூனைகளும் ஜவ்வாதுப் பூனைகளும் நினைவுக்கு வந்தன. வரிவரியான உடலமைப்பைகொண்ட புனுகுப் பூனையின் வால்பகுதியில் அமைந்த மஞ்சள் பை, அதில் சுரக்கும் வாசனைமிக்க மஞ்சள் களிம்பு மற்றும் ஜவ்வாதுவை குழைத்து எடுக்கும் பசையை திருவிதாங்கூர் ஜமீனுக்கு அனுப்பிவைப்போம். சாம்பல் நிறத்தொரு பூனை உஸ்தாத் ஹாதியின் மடியில் அவரை பிரார்த்தனையில் இருந்து கவனத்தை விடுவித்தது. மூர்க்கமான கண்களுடன் எங்கள் இருவரையும் பார்த்தது. தெளிந்த கண்களை அகலவிரித்து எனை நோக்கிச்சொன்னார். அத்தர் வியாபாரம் செய் …

நூறு வருட பழமையான கடையை ஒத்திக்கு இரண்டு வருடம் கொடுத்துவிட்டு அத்தா வீட்டுக்கு திரும்பியிருந்தார். எவ்வளவோ கூறியும் அவர் கேட்கல. “இது சரியாக வராது.. இப்பலாம் யார் அத்தர் புழங்குறா.. எல்லாம் செண்ட் .. சின்தடிக்னு விவசாயத்துல பூச்சி மருந்து கலந்து நிலத்தை சீரழிச்ச மாதிரி…இந்த கெமிக்கல் வாசனையோட உலகத்தை சிதைச்சிடுச்சி. ஜவ்வாது சந்தனமும் தாழம்பு மகிழம்பு சாமாங்கினு இயற்கையான வாசனைகள் மீது பூச்சி மருந்து அடிச்சிட்டானுங்க. திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா வந்தா லால்குடி விஜயலெட்சுமி, வடுவூர் கிருஷ்ணமூர்த்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடும்போது அங்கே கமழும் பாரம்பரியமான ஜவ்வாது நம்ம கடையிலேர்ந்து தான் போகும் குன்னக்குடி வைத்யநாதன் முதல் வீணை தனம்மாள் வரை, வாத்தியக் கருவிகளின் நரம்புகளில் நம்ம கடையின் அத்தரை தடவி வாசிக்கும் பழக்கம் என பெரிய பாரம்பரியம் கொண்ட தொழில் நம்ம தொழில். சிதைஞ்சு போறத பாக்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. சரபோஜி ராஜா காலத்துல இந்த ஏரியா பேரே – அத்தர் மொஹல்லா. அகர் பிசின், தேவதாரு குச்சி, சந்தன சிறாய், இனியூரம்பட்டை, பூலாம்கிழங்கு, ஜாதிப்பத்திரி என விதவிதமா தாமரை இலையில மடிச்சுக்கொடுத்த கை.. இந்தக்கை…” என கண்கலங்கினார்.

 “அத்தா.. கொஞ்சம் ஆசுவாசமா இருங்க..”.

 “எப்படியிருக்குறது..?”  அவரை ஆரத்தழுவினேன்.

 “நம்ம மூதாதையர் காலத்துலேர்ந்து ஆரம்பிச்ச தொழில் – அறுபட்டுறக்கூடாதுன்னு வாசனை சூத்திரம் எழுதி வச்ச அப்துல் கரீம் பேரே உனக்கு வச்சேன்…”

 சிறிது நேரம் அமைதியாகிய அத்தா, “சேத்துக்குள்ள போறவனோடு கைய புடிச்சிப்போனா நாமளும் சேத்துக்குள்ள போகணும்… இந்த தொழில் ஏற்கனவே சேத்துக்குள்ள போச்சு.. நீ இதைவிட்டு சிங்கப்பூர் போய்டு… இதைவிட்டுப்போய்… உன் தங்கச்சிகளை கரையேத்து,” என கலங்கினார். நான் அவரை கையைப் பிடித்து சமாதானம் செய்தேன்.  அம்மா காயவைத்த பால் சட்டி பொங்கி வழியும் வாசனை கருகலாக வந்துகொண்டிருந்தது.

குப்பூஸ் ரொட்டிகள் வறுபடும் சூட்டு மணத்தில் பலநாட்டு வாசனைத் திரவியங்கள் மணக்கும் அரப் ஸ்தீரிட். வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வந்து போகும் வீதியின் முகப்பில் சுல்தான் பள்ளியை வெக்கத்துடன் குனிந்த தலையாக ‘அப்துல் கரீம் ஃபெர்ப்யூம்ஸ்’ கடை போர்டு பல்லைக்காட்டிக்கொண்டிருந்தது. அகில் கட்டைகள் எரிக்கும் அடுப்புகள், பலவண்ணமயமான குப்பிகள், ஒய்யார பெண்களின் கழுத்துப்போல நீண்ட குப்பிகள், காதலிகளை கவரும் வகையில் அதை அடைக்கும் சுருக்குப்பைகள், நீண்ட வரிசையில் குடுவைகளில் ராஜா அம்பர் , ஊத் சுல்தான் , ஊத் ஆசிக், சுபாஹ் மலாயிக்கத். இந்த இரண்டு வருடங்களில் நகரில் இரண்டு இடங்களில் வளர்ந்த கடை தஞ்சை கீழடி வாசலின் பராம்பரிய வாசனை திரவியங்கள் உடன் அரபு நாடுகளிலிருந்து வேதிக்கலப்பில்லாத வாசனை எண்ணைகளை விற்பனை செய்துவருகிறேன். உள்ளங்கை விரிய குழந்தையின் வாய் திறப்பதுபோல் குவிக்கும் உதடுகள் கொண்ட குப்பிகளில் ஊத்திக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது unknown நம்பரிலிருந்து வந்த அழைப்பு என்னை நிலைகுலையச் செய்தது. கடைப் பையனைப் பார்த்துக்கொள்ளக் கூறிவிட்டு, வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பாட்டாளிகளின் வியர்வை உலர்ந்துபோன மாலை நேர வாசனையில் ஹாஸ்பிட்டலுக்கு டாக்சியில் திரும்பிக்கொண்டிருந்தேன். எல்லாக் காலத்திலும் உறுதியாக நின்ற உஸ்தாத் ஹாதி, ஆறுமாதங்களாக அவரைப் பார்க்க முடியவில்லை. தன்னைப்பற்றி எந்த இடத்திலும் சிறுகுறிப்புக்கூட எனக்குத் தந்ததில்லை.

டிடிஎஸ்ஹெச் ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முகப்பு தரையை நீரால் துடைத்துக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளியின் உலர்ந்த வியர்வை வாசனை மருந்து வாசனைகளோடு பரவிக்கொண்டிருக்கும் வேளையில் சிவியர் கார்டியாக் அரஸ்ட் என நர்ஸ் தெரிவித்திருந்தார். எனை விசாரித்தவர், அவரது செல்போனில் இருந்தது ஒரே ஒரு கான்டக்ட் நம்பர் உங்களது மட்டும்தான் எனத் தெரிவித்தார். பலமுறை என்னோடு வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினால், பதிலே இல்லாமல் வேறுபக்கம் பேச்சைத் திருப்பி விடுவார் உஸ்தாத். காசுகொடுத்தாலும் அவர்போன பிறகு அவர் அமர்ந்த இடத்தில் அப்படியே இருக்கும். ஹஜ்ஜா பாத்திமா பள்ளியில் குழந்தைகளுக்கு குர்ஆன் சொல்லிக்கொடுத்து கிடைக்கும் வருமானம் மட்டுமே எனக்குத் தெரிந்து அவரது வாழ்வாதாரம். அந்தரங்க ரகசிய வாழ்வுக்கு முன்னால் ஒரு சுவர் இருந்தது அதற்கு பின்னால் யாரையும் அவர் அனுமதித்தில்லை.

அதற்கு அடுத்த மூன்றாவது நாள் அவர் இறந்தபோது எனது நண்பர் உட்பட ஐந்து பேர் அவரது உடலைச் சூழ்ந்திருந்தோம். அவர் ஏன் சம்சாரியாகவில்லை.. எங்கேயிருந்து வந்திருப்பார் என்ற கேள்வி எல்லாக் காலத்திலும் எனக்குள் குடைந்த கேள்வி. இறப்புச் சான்றிதழில் அவர் பெயருக்கு பின்னால் இருந்த ஒரே அடையாளம் ‘அல் ஹபசி’ மட்டும். நீண்ட பாரம்பரியமிக்க அரபுக் கிளையின் கோத்தரத்தின் அடையாளம். சுவா சூ காங் இடுகாட்டில் ஈரமண்ணைத் தோண்டி குழியில் இறங்கியபோது ஒரு மரத்தின் வேர் பூமியின் கீழாய் அறுப்பட்டு வாசனையை பரப்பிக்கொண்டிருந்தது. குழிக்குள் நின்று அவரை வாங்கிப்பார்த்த கணம் – அவரது கழுத்து இடுக்குகளிலிருந்து தெய்வீக சுகந்தமாய் அம்பர் வாசனை கிளம்பியிருந்தது. அழுகை பீறிட்டு வெள்ளையுடையில் தரித்த அவரது சடலத்தை கட்டியணைத்து முத்தமிட்டு அடக்கம் செய்துவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் அமர்ந்திருந்தேன்.

 அரசாங்கத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது.

‘உஸ்தாத் ஹாதி கார்டியன் நீங்க தானே..‘

‘ஆமாம்..’

‘அவரோட வீட்டுல நிறைய திங்க்ஸ் இருக்கு.. குப்பையில போட்டுடவா ..’

‘வேணாம்.. நான் வந்து எடுத்துக்குறேன்..’

என போனை அணைத்தபோது, அப்துல் கரீம் பெர்ஃப்யூம்ஸ் ஆரம்பிக்கும்போது உஸ்தாத் ஹாதி கூறிய  வார்த்தைகள் ஞாபகம் வருகிறது. “பூக்கள்தான் ஞானம்- அதனை எத்தனை முறை கசக்கினாலும் கசக்கிய கரங்களுக்கு வாசனையைத் தவிர வோறொன்றும் தராது. அதன் குறியீடே உனது வாசனைக் கடை.. எல்லோருக்குள்ளயும் பூ இருக்குதானே..”. என்றார் பலமாக சிரித்து.

5 comments for “அத்தர்

  1. July 6, 2021 at 8:34 pm

    பிரமிக்க வைத்த கதை. மரபும், ஞானமும், மொழியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவாகிய சிறப்பான கதை.

  2. Selvaraj Subburaj
    September 19, 2021 at 1:18 pm

    நான் இந்த கதையை நான்கைந்து முறை படித்தும், ஒன்றும் பிடிபடவில்லை

  3. Dhandapani
    November 2, 2021 at 5:00 pm

    ஞானம் கனிவ வது குருவின் அருளால் மட்டுமே. விடுபடாத ஞானச் சங்கிலியை அப்துல் வழி தொண்டங்குகிறார் ஹாதி. ஞானிக்கு உறைவிடமோ அடையாளமோ எதற்கு?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...