ஒன்றாக செத்துப்போக முடிவு செய்ததும் அந்த புளோக்கின் பன்னிரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து விடும் யோசனை தான் முதலில் வந்தது. இன்றைய சூழலில் ஆகச் சுலபமானது, ஆனால் சிறந்த முறையல்ல. அந்த வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். ஒருகணம் உச்சமேறிய அச்சமோ, கோபமோ, விரக்தியோ ஏதோவொன்று அந்தப் புள்ளியை நோக்கி அவர்களைத் தள்ளியிருக்கிறது. ஆனால் இவர்கள் நிரக்க வாழ்ந்தவர்கள். இவர்கள் ஒன்றாயிருந்த நேரங்கள் பல வியப்புகளை உள்ளடக்கியவை. உயரத்திலிருந்து குதித்து உயிர்நீங்குவது அந்த வாழ்க்கைக்கு ஏற்பில்லாதது.
பாகங்கள் உடைந்து குருதி பெருகி, முற்றிலும் சம்பந்தமில்லாத மனிதர்களுக்குள்ளும் கூட எதிர்மறை அதிர்வுகளை உண்டாக்கக் கூடியது. தங்களின் இறப்பில் அழகும் நிச்சலனமும் வேண்டும் என்று நினைத்தார் ருக்குமணி. ஒரு புனிதமான இடத்திற்குச் செல்கிறோம், அமைதியாக அல்லவா செல்ல வேண்டும். கோவிலுக்குப் போகும் போது ஒப்பாரி பாடிக்கொண்டா போவோம்! மிகவும் யோசித்து இறுதியில் அடுத்த நாள் இரவு உறக்கத்திலேயே இறந்துபோக இருவரும் முடிவு செய்தார்கள்.
எத்திராஜ் எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டார். அவரது தலையில் கொஞ்சம் நஞ்சமிருந்த கறுப்பு முடிகள் கடந்த மூன்று மாதங்களில் மொத்தமாய் நரைத்துப் பின்வாங்கியிருந்தன. மருத்துவம் அவரைப் பாதியாய் உருக்கியிருந்தது. கன்னங்கள் உட்குழிந்து தாடையெலும்புகள் தூக்கலாய்த் தெரிந்தன. அவர் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியேறியதும் கையைத் தரையில் ஊன்றி எழுந்தார் ருக்குமணி. உடல் அவரின் விருப்பத்திற்கு எதிர்திசையில் அவரை இழுத்தது. அறைக்குள்ளிருந்த அலமாரியை அடைவதற்குள் கொஞ்சம் உட்காரேன் என்று மீண்டும் மீண்டும் சொன்னது. அலமாரியின் கீழ்க்கடைசி இழுப்பறையில் போட்டு வைத்திருந்த மாத்திரைகளை ஒழுங்கு படுத்தி சிறு ப்ளாஸ்டிக் பெட்டியில் தனியாக எடுத்து வைத்த போது தானில்லாமல் போகும் உலகம் எப்படி இருக்கும் என்ற யோசனை அவரது மூளைக்குள் புரண்டபடி இருந்தது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாய் இருந்த ஒன்று, இதோ இப்போது இருக்கும் ஒன்று சட்டென இல்லாமல் போகமுடியும் என்ற எண்ணமே அவருக்கு வியப்பை உண்டு பண்ணியது. அல்லது இருக்கத்தான் போகிறதென்றால் உடல் துறந்ததும் எங்கே போகும்? மேலே மேலே மிதந்து மேகத்தைத் தாண்டி, நிலவைத் தாண்டி, கிரகங்களைத் தாண்டி. . . ஒரு பெரிய கண்ணாடி கோளத்துள் தானும் தன்னைச் சுமக்கும் உலகமும், சூரியனும் இருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தார். உடலிலிருந்து கிளம்பிய ஆன்மா அதற்கும் மேலே செல்ல முடியாமல் கீழேயும் இறங்கவும் முடியாமல் ஆழ்ந்த இருளுக்குள் கண்ணாடி விளிம்புகளில் முட்டித் தவிப்பதான படம் அவருக்குள் உருவானது. தரையில் கால் பதிக்காமல் மிதக்க வேண்டியிருக்கும் என்ற உணர்வே மெல்லிய அச்சத்தைக் கொடுத்தது. அவ்வப்போது கால்கள் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விடும் இன்றைய நாளில் தலைதூக்கும் இயலாமையை உண்டாக்கிய பயம்.
சன்னல் திரைச்சீலைகளை உருவி சலவை இயந்திரத்தில் போட்டார். படுக்கையின் மீதிருந்த விரிப்பை மாற்றினார். நிலைக்கண்ணாடிக்கு அருகில் சென்றார். முந்தைய தினத்திற்கும் அன்றைய தினத்திற்கும் எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் வயதேறுவதை மறைத்து என்றுமே இளமையாக உணர வைத்த அவரின் மாயக் கண்ணாடி, இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் பார்த்த போது வேறு ருக்குமணியைக் காட்டியது. திருமணமாகி வந்த போது இருந்த உருவத்திற்கும் இப்போது எதிரில் தேய்ந்து போய் நிற்கும் உருவத்திற்கும் அதிக ஒற்றுமைகள் இல்லை. இடுப்புவரை நீண்ட பின்னலும் பெரிய கண்களும் பொதுமிய கன்னங்களுமாய் இருந்த அந்த ருக்குமணியை மாற்றி யாரோ மெலிந்து ஓடாகிப் போன இவரை வைத்துவிட்டார்கள் என்று சொன்னால் நம்பிவிடக் கூடிய அளவிற்கான மாற்றம். அதைப் பார்த்தபடி, அதற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த களிம்புகளில் இனி பயன்படாது என்று தோன்றியவற்றை நெகிழிப் பைக்குள் போட்டார். சமையலறையின் சன்னல் கண்ணாடிகளை ஈரத் துணியால் துடைத்தார். நாட்காட்டியில் அடுத்த தினத்தைப் பேனாவால் சுழித்தார். பின்னர் அன்றைய தேதியில் தொடங்கி அடுத்த மூன்று தினக் கட்டங்களைச் சுட்டுவிரலால் தடவினார். பேனா உருவாக்கிய அழுத்தத் தடத்தைத் தவிர அவற்றிற்கிடையே எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.
அடுத்து உரப்பையை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போனார். பிள்ளைகளைப் போலச் செழித்து வளர்ந்திருந்த செடிகளிடம்,
‘அம்மா கூட இருக்க மாட்டேன். ஆனா உங்க நெனப்பு எங்கூடவே சுத்தும். போற இடத்தில் கெட்டியா இருந்து பிழைச்சுக்கோங்க!’ என்று சொன்னபடி நன்கு உரமிட்டு நீர் ஊற்றினார். இறுதி யாத்திரைக்குத் தயாராவதென்பது இதுவரை இல்லாத அனுபவமாக இருந்தது. எந்தப் பொருளையும் கட்டிக் கொண்டு போக இயலாத பயணம். எதையாவது மறந்து விட்டோமா என்ற கவலையைக் கூட உடன்தூக்கிச் செல்ல வேண்டாம்.
உலகில் இல்லாமல் போவதென்பது எப்படி இருக்கும். கடைசி மூச்சு உடலிலிருந்து வெளியேறும் சமயத்தை உணரமுடியுமா, அது எப்படியிருக்கும்! ஒருமுறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்துப் பிடித்து நிறுத்திப் பார்த்தார். ஆன்மாவின் இருப்பு அவருள் சடசடவெனப் பெருகி, நிறைந்து, அழுத்தமாகி, கனத்தது. சில நொடிகளில் அனிச்சையாக அம்முயற்சியைக் கைவிட்டார். மூச்சை நிறுத்தி உயிரை விட்டுவிட முடியாத அளவிற்கு நுட்பமாக வடிவமைக்கப்பட்ட தன்னை நினைத்து அவருக்கு வியப்பாயிருந்தது.
‘உன் யோசனைகளுக்கு வயசாகவேயில்லை தெரியுமா, உன்னை முதன்முதலா பார்த்தப்ப எப்படி பேசினியோ அதே பேச்சு தான்! நீ யுனிவர்சிட்டி படிச்சிருந்தியன்னா இன்னும் பெரியாளா வந்திருப்ப’ என்பார் எத்திராஜ்.
‘யூனிவர்சிட்டி படிச்சிருந்தேன்னா என் யோசனைக்கும் கிழடு தட்டிப் போயிருக்கும்!’
‘இப்பல்லாம் படிக்கக் காசு கூட கட்ட வேண்டாம், படிக்கிறியா’ என்றார். அவருக்குப் புற்றுநோய் என்பது உறுதியான அடுத்த வாரம், இதுநாள் வரை அவளைத் தனியாக இருக்கப் பழக்காமல் விட்டுவிட்டோம் என்ற குற்றவுணர்வு அவருள் அப்போது உருவாகியிருந்தது.
‘இந்த எழுபத்தியோரு வயசில படிச்சுட்டு எந்த வேலைக்குப் போக!’
எத்திராஜ் அன்று முழுவதும் ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தார். கண்ணுக்குத் தெரியாத அலைகளால் பின்னப்பட்ட உலகம், அதன் ஒட்டத்தில் பின்தங்கிவிட்ட தங்களின் நிலை அவருள் இயலாமையாய் பெருகியது. வெளியாளிடம் வாய் திறந்து உதவி கூட கேட்கமாட்டாளே என்று விசனம் உண்டானது. குழந்தை ஒன்று இருந்திருந்தால் தான் இறந்துபோவதைப் பற்றி இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டார்.
‘இன்னும் மிஞ்சி போனா அஞ்சாறு வருசம் இருப்பேனா, நானும் உன்கூட வந்துடறேன்’ என்று ருக்குமணி சொன்ன நாளில் அவர் அதிர்ந்தார்.
‘அதெல்லாம் ஒன்னும் வேணாம், சொந்த வீடு இருக்கு, சி.பி.எஃப்ல பணமிருக்கு. பேங்க்ல இருக்க பணத்தை வச்சி ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.’
‘வீட்டை சேவாவுக்கு விட்டா கொஞ்சம் காசு வரும்’ சொல்லும் போதே இதெல்லாம் போதுமா என்ற சந்தேகத்தில் அவரின் குரல் தேய்ந்தது.
‘இப்பவே கால் மணி நிதானமா நடந்தா, ரெண்டு மணி உட்காரச் சொல்லுது உடம்பு. நீ போன பின்னால வீட்டுக்குள்ளேயே தடவிகிட்டு உட்காரச் சொல்லுறியா, இல்லை எம்.ஆர்.டி வாசல்ல துண்டை விரிச்சு உட்காரட்டுமா?’
‘ஆண்டவன் கொடுத்தது, அவனா தான் எடுக்கணும், நாம முடிவு பண்றதில்லை!’
அவள் பதில் சொல்லவில்லை.
அடுத்த நாள் அருகிலிருந்த இரண்டு முதியோர் இல்லங்களைப் பற்றி விசாரித்து வந்தார்.
‘நம்ம வட்டாரத்தை விட்டு வெளியே கூடப் போக வேண்டாம்’
‘அதெப்படி நம்ம வீட்டை விட்டுட்டு வேற இடத்துக்கு, அதுவும் நீயில்லாம தனியா, நான் மாட்டேன்!’
ருக்குமணியின் கோபமும் பிடிவாதமும் அவருக்குள் வழிந்து எண்ணங்களில் படர இத்தனை நாட்கள் ஆகியிருந்தது.
எத்திராஜ் வீடு வந்த போது குளித்து புதுக் கைலியும் சட்டையும் அணிந்து விளக்கேற்றி வைத்திருந்தார் ருக்குமணி. வீடு மல்லிகை பத்தியின் வாசத்தால் நிறைந்திருந்தது.
‘நாளைக்குக் காலையில கேசவனை வரச் சொல்லியிருக்கேன்’.
இந்த இரண்டு நாட்களுக்குத் தேவைப்படாது என்று தோன்றிய பொருட்களையெல்லாம் அவன் எடுத்துச் செல்லும் வகையில் கூடத்தை ஒட்டியிருந்த சிறு அறையில் அழகாக அடுக்கி வைத்திருந்தார்.
‘பழைய மரச்சாமானையெல்லாம் எடுத்துட்டு போக டவுன் கவுன்சிலுக்கு போனடிச்சு சொல்லிடு’
இறுதி தினம்
நகராட்சி மன்றம் கொண்டு செல்ல வேண்டியவற்றைத் தவிர்த்து மற்றவையெல்லாம் எடுத்துப் போகப்பட்டு வீடு கிட்டத்தட்ட காலியாக இருந்தது. அன்று எத்திராஜ் வேறு எங்கும் செல்லவில்லை. காய்கறிகளை வெட்டிக் கொடுத்தார். சாம்பார் பொரியலுடன் வடை பாயசத்தையும் செய்திருந்தார் ருக்குமணி. இருவரும் திருமணமான நாள் முதற்கொண்டான சம்பவங்களைப் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிகழ்வுமே இவர்களின் வாழ்வுக்கென செதுக்கி உருவாக்கப்பட்டது போல நடந்திருந்தது. அவற்றைப் பேசப் பேச இடைப்பட்ட காலமெல்லாம் நழுவி அந்தக் காலத்திற்கே சென்றுவிட்ட ஒரு மயக்கம் உண்டானது.
ஆறு மணிக்கு மேல் இருவரும் கிளம்பி தங்கள் வீட்டுக்கருகிலிருந்த தெருக்களைக் கைகோர்த்தபடி சுற்றி வந்தார்கள். இத்தனை நாட்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட பார்வையில், இனி இவற்றைப் காணப் போவதில்லை என்ற நோக்கில் பழகிய இடங்களைப் பார்ப்பது, பழக்கமற்ற புதிய இடத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. அனைத்தும் நிறம் அடர்ந்து தெரிந்தன, மென்நீலத்தில் தொடங்கி மஞ்சளாகி ஆரஞ்சு நிறத்தில் பழுத்த இறுதி அஸ்தமனம் கூட. சீனக் கோயிலின் கூரைக்குப் புதிதாய் அடித்திருந்த சிவப்பு வண்ணம், சமூக மன்ற வாசலில் சுத்தப்படுத்தலையும் மீறி முளைத்திருந்த செடி, இவர்கள் கடக்கும் வரை பார்வையைப் பிடித்து விடாமல் நோக்கிய பூனை, ஒழுங்காய் வெட்டி விடப்பட்டிருந்த மரத்திலிருந்து அடமாய் குறுக்கே முளைத்த கிளை, இது போலச் சின்னச் சின்ன விஷயங்களெல்லாம் அன்று சட்சட்டென கண்ணில்பட்டன.
“எவ்வளவு அழகான இடம்ல்ல!”
“சூரிய மண்டலத்துக்கு வெளிய நின்னு பார்த்தா கட்டிடம் முளைச்ச இந்தப் பூமியில தூசியளவுக்கு தான் இருப்போம்ல்ல”
எத்திராஜ் புன்னகைத்தார்.
கையில் கடைசியாயிருந்த பணத்தை விரைவு ரயில் நிலையத்திற்கு அருகில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தவனின் கோப்பையில் போட்டார்கள். வாசித்தபடியே அவன் இவர்களைத் தலை குனிந்து வணங்கினான். அவனின் நன்றி இசையாக அவர்களைப் பின்தொடர்ந்தது.
அன்று படுக்கச் செல்லும் போது மறுநாள் வரப்போகும் கேசவனுக்காகக் கதவைச் சும்மாவே சாத்தி வைத்தார் ருக்குமணி. பின்னர் இறுதி கோப்பை பாயசத்தை இருவருமே ஒரே நேரத்தில் குடிக்கத் துவங்கினார்கள். அந்த நேரம் ருக்குமணி மிகவும் நிறைவாக உணர்ந்தார். இத்தனை நாட்கள் இல்லாத வழக்கமாய் நீட்டி உட்கார்ந்திருந்த ருக்குமணியின் கால்களை மெல்லப் பிடித்து விட்டார் எத்திராஜ். அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அவரை மெல்ல நகர்த்தி எழுந்து பாயசம் குடித்த கோப்பையை சிங்கில் கழுவி வைத்தார். படுக்கையறைக்கு வந்த போது எத்திராஜ் கண்களை மூடிப் படுத்திருந்தார். “தூங்கிட்டியா!” என்றபடி அருகில் படுத்து அவரது இடக்கையைப் பிடித்துக் கொண்டார் ருக்குமணி.
“நாம யாருக்காவது எழுதி வைக்கனுமா?”
“அதெல்லாம் வேண்டாம் படு” என்றபடி கொட்டாவி விட்டு மீண்டும் அவர் கண்களை மூடிக் கொண்டார்.
அப்போது எத்திராஜிடம் அதுவரை வெளிப்படுத்தியிராத எண்ணங்கள் நிறைய இருப்பதாக ருக்குமணிக்குத் தோன்றியது.
எவருடனும் அதிகம் ஒட்டாமலேயே பழகிய தங்களை யாரேனும் நினைவில் கொண்டிருப்பார்களா இல்லை முதிய தம்பதி மரணம் என்ற செய்தித்தாள் தலைப்பில் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையும் அடங்கிவிடுமா, இது போல நிறைய
இறுதி மூச்சு பிரியும் நொடிக்குள் அவற்றைப் பேசித்தீர்த்துவிட வேண்டும் என்ற உணர்வு ருக்குமணிக்குள் அவசரமாய் எழுந்தது. எத்திராஜின் பக்கம் திரும்பி
“தூங்கிட்டியா?” என்றார் மீண்டும்.
“ம்” என்ற குரல் எங்கோ ஆழத்திலிருந்து வந்தது.
திடீரென்று அவர் முதலில் போய் தான் பிழைத்துக் கொண்டுவிடுவோமோ என்ற பயம் ருக்குமணிக்கு உண்டானது. எத்திராஜிடமிருந்து மெல்லிய குறட்டையொலி வந்த போது அவர் சன்னல் இடுக்குகளில் நுழைந்த வெளிச்சத்தில் அடக்கமாய் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தபடி படுத்துகிடந்தார். தன்னைத் தனியே விட்டு விட்டு அவர் போய்விட்டால் எப்படிச் சமாளிப்போம் என்று அவருக்குத் திகிலாக இருந்தது. பேருந்தில் ஏறிச் செல்வது போல இருவரும் கைகோர்த்தபடி போக முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும், அல்லது இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று இருவரும் காலையில் எழுந்து இன்று உள்ளெடுத்ததை வயிற்றுக் கலங்கலாய் கழித்துவிட்டு மீண்டும் வாழத் தொடங்கிவிடுவோமா!
யோசனைகளினூடாக மெல்ல மெல்ல இருளின் ஆழத்தில் தொலைந்து போகத் துவங்கினார் ருக்குமணி.
அற்புதமான கதை. வெகுநாட்கள் நினைவில் நிற்கும். 🙂