சிங்கப்பூர் இயக்குனர் கே.ராஜகோபால் அவர்கள் இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளியான ‘A Yellow Bird’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து வருடங்களாக வாழ்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் எந்தச் சுவடுகளும் இல்லாமல் முற்றிலும் வேறொரு சிங்கப்பூரை எனக்கு அறிமுகம் செய்த படம் அது.
அனைத்து நாடுகளிலும் மக்களின் வாழ்க்கைப்பாடு பலவித அடுக்குகளாலும் சிடுக்குகளாலும் நிரம்பியது என்பது தெரிந்திருந்தாலும் சிங்கப்பூரில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு திரை அந்தச் சிடுக்குகளையும் சிக்கல்களையும் மறைத்து அனைவரையும் ஒரே அடுக்கில் வைத்துப் பார்க்க மனதைப் பழக்கிவிடுகிறது. ஆனால் கலையும் இலக்கியமும் அத்திரையைக் கிழித்தெறிந்து நிதர்சனத்தை நம் கண்முன் காட்சிப்படுத்துகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் உமா கதிரின் ‘ரோவெல் தெரு மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலும் வேறொரு சிங்கையை அறிமுகப்படுத்துகிறது.
உலக அரங்கில் வளர்ந்த நாடாக தன்னை நிலைநாட்டியிருக்கும் இக்குட்டித்தீவு அந்த இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள தொடர் மாற்றங்களைச் செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. அந்த மாற்றங்களில் ஒன்றாக தினசரி உருமாறும் நிலப்பரப்பில் ஒரு தெருவோடு தன்னை உணர்வுபூர்வமாகப் பிணைத்துக்கொள்ள ஏதுவாக கண்களும் மனதும் வாய்க்கப்பெற்ற மனிதர்கள் மிக அபூர்வமானவர்கள். உமா கதிர் அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு மனிதர். இந்தியாவிலிருந்து வேலை நிமித்தம் சிங்கப்பூரில் குடியேறிய பிறகு வாழ நேரிட்ட தேக்கா பகுதியிலுள்ள ரோவெல் சாலையில் அவர் சந்தித்த, பழகிய மனிதர்கள்தான் இத்தொகுப்பின் கதைமாந்தர்களாக உலா வருகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் சிவப்பு விளக்குப் பகுதியாக இருந்து, இப்போதும் அதன் மிச்சங்கள் இருக்கின்ற இத்தெருவில் குடியிருக்க முகம் சுளிப்பவர்களுக்கு மத்தியில் “என் மீதி வாழ்நாளை இத்தெருவிலேயே கழிக்கச் சொன்னால் கூட இங்கேயே இருக்க சம்மதிப்பேன் என்ற அளவு நேசிக்கிறேன்” என்று உமா கதிர் குறிப்பிடுவது ரோவெல் தெருவிற்கும் அவருக்குமான உணர்வுபூர்வமான பிணைப்பிற்கு சாட்சியாக இருக்கிறது.
பத்து சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் ‘களப எயிறு’ தவிர மற்ற அனைத்து கதைகளிலும் எழுத்தாளரின் வாழ்வனுபவம் அதிகமாகவும் புனைவு குறைவாகவும் பதிவாகி உள்ளது. பிற கதைகள் யதார்த்தவாத முறையில் புலன்களுக்கு உட்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்கையில் ‘களப எயிறு’ கதை மட்டும் கனவு, ஓவியம் மூலம் ஆழ்மனம் அறியக்கூடிய யதார்த்தத்தைச் சொல்லும் மீயதார்த்தவாத கதையாக இருப்பதால் சிறந்த கதையாக இருந்தாலும் இத்தொகுப்பில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. ஓர் எழுத்தாளனின் சிறப்பம்சம் புனைவை உண்மையைப் போல் சொல்வதென்றாலும் கூட தனது அனுபவத்தைக் கதைகளாக்கும் போது எழுத்தாளன் தேர்ந்த கதை சொல்லியாக மாறுகிறான். சிக்கலான மொழி, வித்தியாசமான உத்தி என பல குட்டிக்கரணங்கள் போட்டு ‘செய்யப்படும்’ சிறுகதைகள் வாசகனைச் சோர்வடையச் செய்யும் தற்போதைய இலக்கியச்சூழலில் உமா கதிர் போன்ற கதை சொல்லிகள் வாசகனுக்குத் தேவைப்படுபவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். விளையாட்டைக் கூட தீவிரமாக எடுத்துக்கொள்பவர்கள் ஒருவகை. வாழ்க்கையையே விளையாட்டாக எடுத்துக்கொள்பவர்கள் இன்னொரு வகை. ரோவெல் தெரு மனிதர்களில் சிலர் இரண்டாவது வகையினர். இவர்கள் நிகழ்காலத்திலிருக்கும் மனிதர்கள். கடந்த கால வாழ்வைப் பற்றிய பெரிய புகார் எதுவுமில்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் இந்த நொடியை அனுபவித்து வாழ்பவர்கள். கிடைக்கும் உணவை உண்டு, கிடைக்கும் இடத்தில் உறங்கி எழுந்து, கிடைக்கும் வேலையைச் செய்து ஆனால் அதற்காகவெல்லாம் கவலைப்படாமல் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து மகிழ்ந்திருப்பவர்கள். மார்க், ஜோஹன், அலி என்கிற அமுதலிங்கம், சீனுக்கிழவர், ஃபைசல், ரொனால்டோ என்கிற தங்கராசு, மாணிக்கம் போன்றவர்களைப் பார்க்கையில் “இவர்களைப் போல நம்மால் ஏன் வாழ இயலவில்லை?” என்ற கேள்வி வாசகனிடம் எழுவதைத் தடுக்க இயலாது. ‘நிகழ்காலத்தில் இருத்தல்’ என்ற தனித்தன்மையால் இத்தொகுப்பிலுள்ள மற்ற சராசரி கதைமாந்தர்களிலிருந்து இவர்கள் முற்றிலும் வேறானவர்களாகவும் அந்த வேறுபாட்டாலேயே வாசகனை அதிகம் கவரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
தாங்கள் சராசரிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும் சமூகத்தின் வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்பதையும் பகிரங்கமாக வெளிப்படுத்தவே இவர்கள் தங்களது உடலில் பச்சை குத்திக்கொள்கிறார்கள். தேள் படத்தையும் வேல் படத்தையும் பச்சையாகக் குத்திக் கொண்டிருக்கும் சரவணன், பாம்பு டாட்டூ குத்தியிருக்கும் செந்தில், கை முழுக்க டாட்டூ வரைந்து சுனிலின் பர்சைத் திருடுபவன், முதுகில் புலியின் படத்தைக் குத்தியிருக்கும் அலி போன்றவர்கள் ‘பச்சை’ என்ற மொழியின் வழியாக ஒருவிதமான மீறலையும் அந்நியத்தன்மையையும் வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
‘வேலைகள்’ என்று எடுத்துக்கொண்டால் இத்தொகுப்பில் உள்ள அளவிற்கு சிங்கப்பூர் இலக்கியத்தில் வேறு எங்கும் பதிவாகி இருக்காதென நினைக்கிறேன். மங்கு கழுவும் வேலை, வேலைக்கு ஆள் இறக்கும் ஏஜண்ட் வேலை, கூட்டிக் கொடுக்கும் வேலை, கேட்டரிங் வேலை, ஹான்ஸ் ஓட்டும் வேலை, மதுக்கூடத்தில் பவுன்சர் வேலை, சாப்பாட்டுக்கடை வேலை, ஆட்களை வேலையிடத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை, குமாஸ்தா வேலை, சாலை ஓரங்களில் புற்கள் கழிக்கும் வேலை, தோட்டப் பராமரிப்பு வேலை, பகலில் வெளியில் செல்லமுடியாதவர்களுக்கு உதவும் எடுபிடி வேலை, பண்டாரி வேலை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அவை வெறும் வேலைகளாக மட்டும் இல்லாமல் ஒரு வாழ்க்கையாகப் பதிவாகி இருப்பதுதான் இத்தொகுப்பின் பலம். அடிப்படை பொருளாதார தேவைக்காக மனிதன் மேற்கொள்ளும் பணி அவனது அகத்தையும் மகிழ்ச்சியையும் எவ்வாறெல்லாம் சிதைக்கிறது என்பதை ரோவெல் தெரு மனிதர்கள் வழியாக உணரமுடிகிறது.
இத்தொகுப்பின் முன்னோடித் தொகுப்பாக எழுத்தாளர் ஆ.மாதவனின் ‘கடைத்தெரு கதைகள்’ தொகுப்பைச் சுட்டலாம். இத்தொகுப்பு திருவனந்தபுரத்தில் ‘சாலைக் கம்போளம்’ என அழைக்கப்படும் வணிக வட்டத்தில் வாழும் மனிதர்களின் கதைகளைக் கொண்டுள்ளது. ஆ.மாதவனை ‘கடைத்தெருவின் கலைஞன்’ என்று அழைப்பது போல உமா கதிரை ‘ரோவெல் தெருவின் கலைஞன்’ என செல்லமாக அழைக்கலாம். இருவருக்குமிடையே ‘தெருவில் இறங்கி கதை சொன்னவர்கள்’ என்ற ஒற்றுமை இருந்தாலும் இவர்களது கதைமாந்தர்களிடம் இப்படி ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடியவில்லை.
சாலைக் கம்போளத்தின் மனிதர்கள் வறுமையாலும் ஏழ்மையாலும் சூழப்பட்டு வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்டுத் துயருறுபவர்களாக இருக்கையில் ரோவெல் தெரு மனிதர்கள் வஞ்சிக்க நெருங்கும் வாழ்க்கையைப் பார்த்துப் புன்முறுவல் புரிபவர்களாக இருக்கிறார்கள். கம்போளத்தின் மனிதர்கள் தினசரி வாழ்வின் அவலக் கசப்பை விழுங்க முடியாமல் திணறுகையில் ரோவெல் தெரு மனிதர்கள் தினசரி வாழ்வின் கசப்பினூடே இனிப்பை ருசிப்பவர்களாக இருக்கிறார்கள். கம்போள மனிதர்கள் இருண்மையையும் அதற்கான தர்க்கப்பூர்வமான நியாயங்களையும் கொண்டிருக்கையில் ரோவெல் தெரு மனிதர்கள் இருண்மைக்கு மத்தியிலும் சக மனிதர்கள் மீது அன்பையும் நேசத்தையும் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கிறார்கள். விபச்சாரியின் வருமானத்தைக் குற்ற உணர்வே இன்றி அபகரிக்கும் அப்புக்குட்டன், வயதான தாயின் சோற்றில் விஷம் வைத்துக் கொல்லும் மாடசாமி போன்ற கம்போள மனிதர்களைப் போலல்லாமல் சீனகிழவிக்கும் சேர்த்து பீர் ஆர்டர் செய்யும் மார்க், பணம் கிடைத்தவுடன் சீனுக்கிழவருக்கு புதுத்துணி வாங்கித்தரும் அலி, ரொட்டி கோசத்தைத் தேடிச் செல்லும் ஷாகுல், ஷீத்தல் மேடத்திற்காக தனது பக்தியைத் தோம்பில் போடும் வாத்தியார் போன்ற ரோவெல் தெரு மனிதர்கள் அருகிலிருப்பவர்களை அரவணைத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
‘களப எயிறு’ தவிர மற்ற அனைத்து கதைகளிலும் ஆண்களே பிரதான கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். குடும்ப அமைப்பில் தோல்வி, கோபம், தனிமை, காதல், பாலியல் விழைவு, முதுமை, நட்பு, நம்பிக்கை, போதை என பல தளங்களில் ஆண்களின் உலகத்தையும் அவர்களது உளவியலையும் இத்தொகுப்பு விரிவாகப் பேசுகிறது. வெற்றிகரமான விற்பனைப் பிரதிநிதியாக இருந்து விவாகரத்திற்குப் பிறகு தெருவிற்கு வரும் மார்க், அம்மாவைத் தப்பாகப் பேசியவனை அடிக்கும் செந்தில், விடுமுறையைக் கழிக்க நெருக்கமான நண்பர் ஒருவர் கிடைக்காமல் தவிக்கும் ஷாகுல், ரேச்சல் மீது காதல் கொண்ட மார்க், போர்வைக்குள்ளிருந்து போனில் பேசி பொண்டாட்டியிடம் சாமான் காட்டச் சொல்லும் பங்களாக்காரன், இரண்டு மகன்களால் விரட்டப்பட்ட சீனுக்கிழவர், பாத்தாமிற்கு பயணம் திட்டமிடும் நண்பர்கள் என ஆண்களின் உலகம் பரந்து விரிந்து புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.
இத்தொகுப்பிலுள்ள ஒரு கதையின் தலைப்பு ‘உதிரிகளின் பயணம்’. இந்த கதை மட்டுமல்லாமல் உமா கதிரின் அனைத்து கதைகளும் உதிரி மனிதர்களைத்தான் பிரதானப்படுத்துகின்றன. சமூகத்தில் சிதறிக் கிடக்கும் இவர்களை நாம் பெரிதாக பொருட்படுத்தாவிட்டாலும் இலக்கியத்தில் சந்திக்க நேர்கையில் வாழ்வு பற்றிய புதிர் தத்துவப் பார்வையாக நமக்குள் உருமாறுகிறது. பதினெட்டு வருடங்களாக மனைவியோடு சந்தோஷமாக குடும்பம் நடத்தும் மார்க் பிள்ளை இல்லாத காரணத்தால் மனைவி கேட்ட விவாகரத்துக்கு ஒத்துக்கொண்டு வீட்டை அவளுக்குக் கொடுத்துவிட்டு தெருவுக்கு வருகிறார். இதற்கு முற்றிலும் மாறாக ப்ளூடூத் ஜோஹன் மனைவி இறந்த பிறகு சொந்த வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்காமல் தெருவுக்கு வருகிறார். சீனுக்கிழவரோ மகன்களால் துரத்தப்பட்டுத் தெருவுக்கு வருகிறார். எது இவர்களை சாதாரண வாழ்விலிருந்து துரத்தியது என்பதையும் எப்புள்ளியில் இவர்களது வாழ்க்கை திசை மாறியது என்பதையும் யாராலும் துல்லியமாக வரையறுத்துவிட முடியாது. பெரும் மாயச் சுழலைக் கொண்டுள்ள வாழ்வு நாளை நம்மையும் உள்ளிழுத்து உதிரியாக வெளித்தள்ளலாமென்ற நிதர்சனமான உண்மை இவர்கள் மூலம் நமக்குள் தத்துவப் பார்வையாக விரிகிறது.
உமா கதிரின் கதைகள் நேரடித்தன்மையோடு ஒரு சம்பவத்தைச் சொல்வதாக இருந்தாலும் சில கதைகள் கூடுதல் வாசிப்பைக் கோருகின்றனவாகவும் அதன் மூலம் மேலதிகமான பொருள் தருவதாகவும் விளங்குகின்றன. உதாரணத்திற்கு ‘பிணை’ சிறுகதையில் செந்திலுக்கான பிணைத்தொகையை சரவணனும் சரவணனுக்கான தொகையை செந்திலும் மாறி, மாறி கட்டுவதன் வழி ஒரு சுழற்சியை முதல் வாசிப்பு காட்டினாலும் கூடுதல் வாசிப்பில் நட்புகளையும் உறவுகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கு ஈடாக நமது ஆசைகளையும், கனவுகளையும் வாழ்க்கையிடம் பிணையாக வைக்க வேண்டி இருக்கிறது என்ற பொருள் கிட்டுகையில் வாசிப்பு சுவாரசியமாகிறது.
அனைத்து கதைகளையும் வாசித்து முடித்தவுடன் ரோவெல் தெருவைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பமும் ரோவெல் தெரு மனிதர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசையும் வாசகன் மனதில் எழுவதுதான் இத்தொகுப்பின் வெற்றி. ஸ்டெரெயிட்ஸ் செட்டில்மெண்ட்டில் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்த காலகட்டத்தில் அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகராட்சி ஆணையராக இருந்த Doctor Thomas Irvine Rowell என்பவருக்குச் சொந்தமான நிலம் இப்பகுதியில் இருந்ததால் இச்சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரலாற்று மனிதரான ரோவேல் இச்சாலையின் பெயர் வழியாக என்றென்றும் வாழ்வதைப் போல உமா கதிர் மூலம் இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்ட ரோவெல் தெரு மனிதர்களும் நித்தியத்துவம் அடைகிறார்கள்.
ஜீரோ டிகிரி பதிப்பகம்