ஒளியாலான கதைகள்

சித்துராஜ்

சித்துராஜ் பொன்ராஜ் என்ற எழுத்தாளரை நான் அறிந்துகொண்டது 2016இல். சிங்கப்பூர் இலக்கியங்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொடர் விமர்சனக் கட்டுரைகளின் வழி சித்துராஜின் ‘மாறிலிகள்’ தொகுப்பு கவனம் பெற்றது. ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரை முக்கியமானது. தொகுப்பில் இருந்த சிறுகதைகளை ஒட்டிய ரசனை விமர்சனம் அன்றி, சித்துராஜ் என்கிற எழுத்தாளரின் வருகை சிங்கப்பூர் இலக்கியத்தில் எவ்வகையில் அவசியம் பெறுகிறது என உணர்த்துவதாக அக்கட்டுரை இருந்தது.  

‘மாறிலிகள்’ தொகுப்பை வாசித்தபோது முதலில் என்னைக் கவர்ந்த அம்சம் அலட்டல் இல்லாத மொழியில் அவர் உருவாக்கும் காட்சித்தன்மையும் கதாபாத்திர சித்தரிப்புகளும்தான். கிட்டத்தட்ட ‘மாறிலிகள்’ தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளிலுமே அவர் காட்டும் களம், கதையை நிகழ்த்திப் பார்க்க போதுமான விவரணைகளைக் கொண்டவை. கூர்மையும் நுட்பமும் கொண்ட அவரது மொழி, முறுக்கும் சிடுக்கும் இன்றி அத்தனை இலகுவாக கதையை நகர்த்திச் செல்கிறது. எளிய உவமைகள் வழி கதாபாத்திரங்களையும் அவர்களின் குணங்களையும் அறிவித்துவிடுகிறார். அதற்கு அவரிடம் அபாரமான அவதானிப்பு இருக்க வேண்டும். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒளியின்மேல் சித்துராஜுக்கு இருக்கும் கவனம் ஆச்சரியமானது. 

சித்துராஜ் கதைகளில் ஒளி பிரதான பங்கு வகிக்கிறது. தேர்ந்த ஒளிப்பதிவாளரைப்போல வெளிச்சத்தை தன் தேவைக்கு ஏற்ப கதைகளில் அலையவிட்டு அதையே கதையின் களச் சூழலுக்கும் கதாபாத்திர மன உணர்வுக்குமென ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறார். நகர சந்துகளில் வெய்யில் வெள்ளை யானை போல அசைகிறது. கட்டடங்களுக்கு இடையில் அதுவே வெள்ளைப் பூனைபோல உறங்குகிறது. மாலைச் சூரியன் ஒவ்வொருவர் தலையிலும் பொற்குழம்பாக வடிவதும் மதிய வெய்யில் அறைக்குள் வெள்ளிக்குழம்பாய் மிதப்பதும் காண்ணாடிக் கூரையை கடந்து வரும் ஒளி, சாம்பல் நீல மணல் திட்டுகளாய் மாறுவதும் என அநேகமாக ஒளியின் பங்களிப்பை அவரது எல்லா கதைகளிலும் காணமுடிகிறது. ஒரு பெண்ணின் தோல் வண்ணத்தை குறிப்பிட தாமிரத்தில் விளக்கை அடித்தால் கிடைக்கும் நிறம் என்கிறார். அதுவே துன்பத்தில் உழலும் பெண்ணுக்கு அறையில் உடைந்து நுழையும் சூரியத்துண்டு சாய்ந்துகொள்ளத் தூணாகிறது. படப்பிடிப்புக் குழுவினர் பயன்படுத்தும் விளக்கின் அசுர வெளிச்சத்தால் நேரடிப் பார்வைக்கு முகங்கள் சரியாகத் தெரியாததையும் எதிர்வெய்யிலில் வரும் பெண்ணை இடுக்கிக்கொண்ட கண்களில் பார்ப்பதையும் எளிதாய் சொல்லிவிட்டு நகரும் புறவயநடை நுட்பமான காட்சிகளை மனதில் ஏற்றுகின்றன. 

இந்த ஒளி, கதைக்களத்தின் மீது படிந்து செல்வதில் மட்டும் பங்களிக்கவில்லை. மாறாக, சித்துராஜின் கதைகளின் தனித்துவமே ஒளியில் ஊறிய வாழ்க்கையைச் சொல்வதில்தான் உள்ளதென தோன்றுகிறது. சித்துராஜின் சிறுகதைகளோடு பெரும்பாலான மலேசிய – சிங்கப்பூரின் சிறுகதைகளை ஒப்பீடு செய்து பார்க்கிறேன். அவற்றின் பொதுவான புற அம்சம் வறுமையும் இருட்டும் என்று சொல்லத் தோன்றுகிறது; அகநிலையில் உளவியல் சிக்கல் அல்லது அடையாளச் சிக்கல். கோட்பாட்டு ரீதியில் இருத்தலியல் அல்லது அந்நியமாதல். சித்துராஜ் சிங்கப்பூர் கதைகளை இவற்றில் இருந்து வெளியில் அழைத்து வருகிறார். அதன் வழியாக சிங்கப்பூரின் நவீன வாழ்க்கையை வாசகனுக்கு நெருக்கமாக்குகிறார். நவீன அலுவலக அழுத்தங்களில் சுழலும் ஆண்கள், உடலுக்கும் உறவுக்குமான மெல்லிய இடைவெளியில் பயணிக்கும் பெண், இரவு விடுதியில் நடனமாடும் பெண்ணின் அப்பா, அறுநூற்று நாற்பத்து ஏழு டாலருக்கு கைபேசி பில் கட்டும் மாணவன் என அவரது கதாபாத்திரங்கள் வித்தியாசப்படுவதுபோல நட்சத்திர விடுதிகளில் உள்ள காப்பி கடை, ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் சூழல், கட்டடக் குவியலுக்கு நடுவிலான அலைச்சல் என அவர் காட்டும் மேல்தட்டு மனிதர்களும் வாழ்க்கையும் தமிழ்க் கதைகளுக்குப் புதியவை. 

மலேசியாவில் அப்படியான வாழ்க்கை எழுதப்படவில்லை என்றே சொல்லலாம். இங்குள்ள சனிக்கிழமை கொண்டாட்ட இரவுகளும் கேளிக்கை விடுதிகளும் சூதாட்ட மையங்களும் வெளிச்சம் கொப்பளிக்கும் உயர்ந்த கட்டடங்களும் வலுவான பின்னணியில் நுழைந்த ஒரு கதைகூட நினைவுக்கு வராததை சித்துராஜின் புனைவுகள் மறுபடி மறுபடி நினைவுறுத்திக்கொண்டே இருந்தன.

‘மாறிலிகள்’ தொகுப்பில் உள்ள சில கதைகளும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சக்கூடியவைதான். அவற்றில் இரண்டு கதைகள் முக்கியமானவை. முதலாவது, ‘விடியல் தவம். சீனச் சமையல் நிபுணராக விரும்பும் சுகந்தன், ஒரு போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை வெல்கிறான். அவன் தன் தந்தையால் வெறுக்கப்பட்டவன். சமையல் கலையின் மீதிருக்கும் ஆர்வத்தாலும் அசைவம் சமைப்பதாலும் புறக்கணிக்கப்பட்டவன். அதனால் அடையாளமற்றவன். அவன் சமையல் வழி தொழிலைத் தேடிக்கொள்ளவில்லை. தனக்கான அடையாளத்தைத் தேடிக்கொள்கிறான். சீனச் சமையல் குருவின் முன் பணிந்து ‘எனக்கு எல்லாத்தையும் கொடுத்துருக்கியே’ எனும்போது அந்தக் கதை பிரிதொன்றாகி வலுகொள்கிறது. அவன் தனக்கான இன்னொரு அடையாளத்தை அடைகிறான். 

அதுபோல, ‘மூன்று சந்திப்புகள். முன்னால் இராணுவ பணியாளரான மாதவனுக்கு ஒரு வேலை தேவை. கேட்ட இடங்களில் வேலை கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கே முதல் வாய்ப்பு. சோர்வில் அவர் வயதே இருக்கும் நண்பரை தற்செயலாகப் பார்க்கிறார்; உடன் இரவு விடுதியில் நடனமாடும் அவரது மகள். அவளுக்குத் திருமணம் என்பதே அவள் அப்பாவுக்குக் கசக்கிறது. மணமகனுக்கு மதுபான விடுதியில் பணி என்பதும் ஒரு காரணம். இளையோரின் பெருக்கெடுப்பால் நிராகரிக்கப்பட்ட மாதவனுக்கு இளையவர்களால் வெளிச்சம் கிடைக்கிறது. அங்கு, அந்த நிமிடம் அவர் இராணுவ ஒழுக்கங்களைக் கழட்டி எறிகிறார். இப்போது அவர் ஓர் இளைஞர். அப்படி மாற அந்தப் பெண்ணின் தந்தையால் முடியாது. இருவரும் தங்கள் மேல் ஏற்றி வைத்திருந்தது சுமைதான். ஆனால் மாதவனால் அதைக் கழற்றி எறியமுடிகிறது. அவர் அக்கணமே மாதவ் ஆகிறார்.

இவ்விரு கதைகளுக்குள் ஓர் ஒற்றுமை உண்டு. சைவம் உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் அசைவ சமையல் நிபுணனான ஒரு சீனனிடம் தன்னை அறிவது; அதன் வழி தன் அடையாளத்தை மாற்றிக்கொள்வது; அதுபோல கட்டொழுங்கைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கும் ஓர் இராணுவ அதிகாரி இரவு விடுதி பாடகிக்காக தன்னை தளர்த்திக்கொள்வது; தன் பெயரையும் சுருக்கிக்கொள்ள முயல்வது என அதைப் புரிந்துகொள்ளலாம். சிங்கப்பூர் போன்ற பல இனங்கள் வாழும் சமுதாயத்தில் ஒவ்வொருநாளும் வேறொரு பண்பாட்டுச் சூழலுடன் மோதியும் முறுக்கியும் வாழும் சூழலில், மிக இயல்பாக நிகழக்கூடிய இந்த மாற்றங்களை சித்துராஜ் நுட்பமாகப் புனைவாக்கியுள்ளார். 

‘மாறிலிகள்’ தொகுப்பில் என்னை அதிகம் கவர்ந்த சிறுகதை, கர்ணயட்சினி’. முப்பத்து ஏழு வயது வரை காமத்தை அனுபவிக்காத பிரமிளா என்ற பெண்ணைப் பற்றிய கதை. இது ஒரு பெண்ணுக்கு எவ்வாறான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என கிண்டல் மொழியில் சொல்லிச் செல்கிறார் சித்துராஜ். தனக்குப் பிரத்தியேக சக்தி இருப்பதாக உணர்வதும், அதற்காக ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து அவர் மீது கவனத்தைக் குவிப்பதும் அதன் வழி சில சாதனைகள் செய்ய முயல்வதும் என பிரமிளாவின் மன அழுத்தத்தை சொல்லாமல் அவரது வினோத செயல்வழியாகவே காட்சிப்படுத்தி கதையை நகர்த்துகிறார். மன அழுத்தத்தால் பிரமிளாவின் உடல் பருத்துள்ளது. இயல்பற்ற சாந்தத்தை வலிந்து தன் மேல் திணித்துக்கொள்கிறாள். சித்துராஜின் கிண்டல் மொழி மெல்ல மெல்ல உருத்திரண்டு அவள் மேல் பரிதாபத்தைக் குவிக்கிறது. அவள் உணராத அல்லது உணர விரும்பாத இச்சை இன்னொரு பெண்ணிடம் எட்டிப்பார்க்கும் தருணத்தை சொல்லியுள்ள நுட்பம் இக்கதைக்கு கச்சிதமான வடிவத்தைக் கொடுக்கிறது.

கர்ணயட்சினி சிறுகதை உண்மையில் மனிதன் தன் அக உலகத்தில் காணும் இருட்டை அகற்ற புறத்தில் தேடும் விடிவுக்கான சாத்தியங்கள்தான். நமக்கு பல சமயங்களில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் கேலியாகவும் வினோதமாகவும் தெரியும். ஆனால் அதன் அடியாழத்தில் இருக்கும் கொதிப்பை காணும்போது இக்கதையை வாசிக்கும்போது நமக்குள் நிகழ்வதுபோல சிரிப்பு மெல்ல மெல்ல அடங்குகிறது. கர்ணயட்சினி கதைபோலவே சித்துராஜ் சிறுகதைகளின் உளவியல் அம்சங்கள் வெகு இயல்பாகப் பிணைந்து வருகின்றன. உதாரணமாக, மாறிலிகள் சிறுகதையில் வரும் ஜானகி தந்தை இறந்தபின் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் முக்கியமானது. பெண் பார்க்க வரும் தங்கவேலுவை சித்தரிக்கும்போது அவன் தோற்றம் ஜானகிக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் அவன் கோயிலின் காளியம்மன் விக்கிரகத்தைக் காட்டி ‘எனக்கு எல்லாம் அவதான்’ எனும்போது ஒரு நிமிடத்தில் அவளுக்கு அப்பாவின் நினைவு வந்து அவனைப் பிடித்துவிடுகிறது. அதுபோல, முடிவொழுக்கம் சிறுகதையில் இன்னொருவரின் மனைவியுடன் உறவுகொள்வதற்காக மாத்திரை சாப்பிட்டுவிட்ட பிறகு உடலின் போதாமையை சொற்களால், செயல்களின் வன்மத்தால் காட்டும் ரமேஷின் குணமும் சிறிய சத்தங்களால் அவனடையும் பதற்றமும் அவன் தாழ்வுணர்ச்சியின் கோரத்தைக் காட்டும் இடங்கள். இந்த உளவியல் சிக்கல்களைச் சொல்ல சித்துராஜ் சிடுக்கு மொழியைக் கையாளவில்லை. வழக்கமான தன் நேரடி கதை சொல்லலில் அதன் அத்தனை தீவிரத்தையும் வாசகனிடம் கடத்துகிறார்.  

இத்தொகுப்பில் என் வாசிப்புக்கு சாதாரண முயற்சியாக சில கதைகள் இருந்தன. ‘தர்ம ரதம் தமிழில் பலமுறை எழுதப்பட்ட வழக்கமான ‘டெம்ப்ளேட்டில்’ வேறொரு கதையைச் சொன்னதாகவே நான் புரிந்துகொண்டேன். நேர்மை மீறலால் எழும் குற்ற உணர்ச்சியும் அதன் எதிர்வினையும் என இக்கதையின் சாரத்தைச் சொல்லலாம். இது தமிழில் மிக மிக பழமையான டெம்ப்ளேட். பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன் இந்தச் சாயலில் சில சாதனைக் கதைகளையே கொடுத்துள்ளனர். 

அதுபோல சிறுகதையாக முழுமை அடையாமல் ஒரு சம்பவத்தை அதில் உள்ள மிகைஉணர்ச்சி தன்மையினால் மட்டுமே உருவாகியுள்ளது ‘அறம் கூத்தாகும் சிறுகதை. ஒரு பெரிய இன்ப நிகழ்வில் அதை ஒட்டிய துன்பம் அனுபவிக்கும் தனி மனிதனின் கண்ணீர் கதை. காது குத்து ஒரு சிறுவனுக்கு நடக்கப்போகிறது. வீடே இன்பமாக உள்ளது. அதில் கருக்கலைக்கப்பட்ட அவர்களின் கடைசி மகள் வீட்டின் மூலையில் துன்பத்தில் முடங்கியிருப்பதாகக் கதை முடிகிறது. கதை பத்து வயது பையனின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஆனால் பத்து வயது பையனின் மனம் எவ்வளவு செயல்படும் என்ற கவனம் இல்லாமல் எழுதப்பட்ட கதை இது. கருத்தரிப்பு ஊசியை நேராகக் கருப்பையில் செலுத்துவதையெல்லாம் சிறுவன் கதையில் விவரிக்கிறான். அதுபோல கதையில் சொல்ல வந்ததை வசனங்களால் கருத்துப்பிரதிநிதியாக வலிறுத்தும் தன்மையும் இக்கதையை பலவீனப்படுத்துகிறது. 

இதே அம்சம் ‘வெட்சிப் பூக்கள் சிறுகதையிலும் உண்டு. ‘வெட்சிப் பூக்கள்’ அப்பாவுக்கு நிகழவிருக்கும் மரணத்தை அம்மாவிடம் சொல்லாமல் மறைக்கும் மகனின் கதை. கதையின் இடையில் வெட்சிப் பூக்களை ஒரு காட்சியாக மாற்றி அதை தந்தையின் குறியீடாக மாற்றுகிறார். பின்னர் கதையில் ஏழு வரி கவிதையால் அந்த மனநிலையை மேலும் விளக்கவும் முயல்கிறார். மிக உச்சமான தருணம் சென்று அடையவிருந்த சித்துராஜின் சில கதைகள் இந்தக் கூடுதல் விளக்கங்களால் எளிமையாக்கப்பட்டுவிட்டதோ என்றும் தோன்றுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் முடிவொழுக்கம்.

முடிவொழுக்கம்’ கதையில் வரும் வசந்தி தன் கணவனின் நண்பனை உறவுக்கு அழைப்பதிலிருந்து தொடங்குகிறது. அவள் கணவனால் உறவு சாத்தியப்படவில்லை என அவன் நண்பனான ரமேஷை அணுகுகிறாள். பலவித தயக்கங்களுக்குப் பின்னர் அது நிகழ்கிறது. ஆனால் மாத்திரை கொடுக்கும் பலத்தாலும் பதற்றத்தாலும் அவன் முற்றிலும் காதலற்றவனாக அவளை அணுகுகிறான். அவளை அலட்சியம் செய்கிறான். அவசரப்படுகிறான். அதன் பின்னர் அவள் அவனை நாடவில்லை. அவ்விடத்தில் அக்கதை உச்சமாகச் சென்றுவிட்டது. வசந்தி கணவனிடம் எதிர்பார்த்தது காமம் மட்டுமல்ல. உடல் மட்டுமல்ல. கணவன் தன் ஆன்மீக நாட்டத்தாலும் அவளை விலகியே இருக்கிறான். அவள் ரமேஷிடம் எதிர்பார்த்ததும் அந்த அன்பின் துணையுடனான காமத்தை. தொலைபேசியில் அவன் சொற்களால் அதைதான் கொடுத்தான். ஆனால் நேரில் அவன் வேறொருவன். வசந்தி எதை எதிர்பார்க்கிறாள் என அவளே அறிந்துகொண்ட தருணம்தான் அது. அந்தத் தருணம் உச்சமானது. காமம் மட்டும் தேடும் பெண் எதனால் அவனைப் புறக்கணிக்கிறாள் என விரிவாகும் தருணம் அது. ஆனால் அதன் பின்னர் சில நாட்களிலேயே அவள் வேறொருவனுடன் பேசிக்கொண்டிருந்தாள் எனக் கதையை நீட்டிக்கும்போது அவள் அடைந்த அல்லது அடையவிருந்த உண்மை கதைக்குள் நிகழாமல் போகிறது. தனக்குள் எந்த மாற்றமும் நிகழாத பாலுறவின் தேவை மட்டுமே கொண்ட பெண்ணாக வசந்தி சுருங்கி விடுகிறாள். அதைச் சொல்லக்கூடாதா என்றால் சொல்லலாம். ஆனால் அதைதான் அவளே வெளிப்படையாகக் கதையின் தொடக்கத்திலேயே கேட்டு விட்டாள். அதையே கதையின் முடிவிலும் வலியுறுத்துவதன் அவசியம் என்ன?

இப்படி பலவீனமாக்கப்பட்ட மற்றுமொரு கதாபாத்திரம் சில்வியா (இரண்டாம் வாய்ப்பாடு). தான் ஆறு வருடமாகக் காதலித்த பிலிப்பைன்ஸ் பெண்ணான சில்வியாவை திருமணம் செய்யத் தயங்கும் காதலனிடம் அவன் மனச் சிக்கலை வசனங்களாலேயே உணர்த்தித் திருத்துகிறாள் காதலி. “உன் பிரச்சனை உன் அம்மாவோ, அப்பாவோ, இந்தச் சமுதாயமோ இல்லை. உன் பிரச்சினை நீதான். உனக்குள் எங்கேயோ இருக்கிற உன் இடத்தைப் பற்றிய தலைக்கனம்தான்.” “நீ முடிவெடுக்க தயங்கினால் நிச்சயம் உனக்காகக் காத்திருக்கமாட்டேன். எனக்கான வேறொரு வழியை அமைத்துக்கொள்வேன்” எனச் சொல்லித் திருத்துகிறாள். 

இவ்விரு கதைகளும் தமிழில் மிக அரிதாகவே எழுதப்பட்டவை. குறிப்பாக இரண்டாம் வாய்ப்பாடு. தன் சம அந்தஸ்தில் வேலை செய்யும் ஒரு பிலிப்பைன்ஸ் பெண்ணை திருமணம் செய்ய முரளிக்குத் தடையாக இருப்பது எது? பிலிப்பைன்ஸ் பெண்கள் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் மசாஜ் தொழில் செய்பவர்கள், பாலியல் சுகத்துக்காகவே படைக்கப்பட்டவர்கள், மிஞ்சிப் போனால் வீட்டு வேலைக்கு லாயக்கானவர்கள் என்பது மட்டும்தான் பொதுபுத்தியில் உள்ளது. இந்த எண்ணத்தை சுமந்துள்ள ஒரு மேல்தட்டு மனிதனுக்கு வந்துள்ள மனத்தடையை இக்கதை பேசுகிறது. இதே வாழ்க்கை முறை இருந்தும் மலேசியாவில் எழுதப்படாத நவீன வாழ்வின் சிக்கல் இது. ஆனால் ஒரு கதையின் விரிவுக்குத் தேவையாக இருப்பது அதன் முன்வைப்பு. வசந்தி மற்றும் சில்வியாவின் மீறலைச் சொல்வதில் இங்குச் சிக்கல் இல்லை. முடிவில் ஆசிரியர் ஏற்படுத்த முனையும் கிளர்ச்சியும் சிறிய திடுக்கிடலும் கதை பறந்து செல்வதைத் தடுக்கிறது. அது சென்று முடியவேண்டிய உளவியல் புள்ளியிலிருந்து விலகி தன்னைத்தானே எளிமைப்படுத்திக்கொள்கிறது.

இந்த வகையில் எழுதப்பட்ட மற்றொரு கதை தாளோர நாரைகள். சிங்கப்பூரின் பல சமூகக் கலாசாரங்களுக்கிடையே ஏற்படும் ஒட்டுதலுக்கும் புரியாமைக்கும் இடையேயான ஊடாட்டத்தை சொல்லும் ஒரு மெல்லிய காதல் கதை. ஜப்பானிய பெண்ணான ஹிரோகோ அழிந்துபோன தன் கிராமத்தை மீட்கும் லட்சியத்துடன் வாழ்பவள். சிங்கப்பூர் இந்தியனான வெங்கட்டுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் அவள் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். ஸ்ரீராம ஜெயம் எழுதுவதும் காகித நாரைகள் செய்து தொங்கவிடுவதும் வெவ்வேறு கலாசாரங்களுக்கிடையிலான நம்பிக்கைகளாக இருந்தாலும், இரண்டுமே கவனத்தைக் கூர்மையாக்கி, மனதை ஒருமுகப்படுத்துவதற்கான செயல்கள்தான் என்று சொல்லும் ஹிரோகோவே, “நீ வேறு நான் வேறு,” என்கிறாள். புரிதலுக்கு ஒரே அனுபவம் வேண்டும் என்கிறாள்.  லிட்டில் இந்தியாவில் சுற்றுவதும் தோசை சாப்பிடுவதும் மருதாணி இடுவதும் கலாசாரப் புரிந்துணர்வோ அதை ஏற்றுக்கொள்வதோ இல்லை என விவரிக்கும் அதே நேரத்தில், அவள் மனம் மாறுவதற்காக அவன் காகித நாரைகளை மடிப்பது, நம்பிக்கைகள் எந்த கலாசாரம் சார்ந்ததாக இருந்தால் என்ன என்ற பொதுமைப் பார்வையையும் முன்வைக்கிறது இக்கதை.

வாசகனுக்கு கூடுதலாகச் சில வரிகளில் விலக்கிச்சொல்வது பெரிய கலைக் குறைபாடு இல்லைதான். அது கதையின் விரிவைப் பாதிக்காத வரை அங்கீகரிக்கவும் செய்கிறோம். சித்துராஜ் கதையின் பல இடங்களிலும் வாசகனிடம் விளக்க அட்டையை நீட்டுவதுதான் சில கதைகளை பலவீனப்படுத்துகிறது. உதாரணமாக கதையின் தலைப்பைச் சொல்லலாம். ஒரு குறியீட்டை முதலில் மனதில் நிறுத்தி அதை தலைப்பாக்கி அந்தக் குறியீட்டை வைத்து சிறுகதையைப் புனைவதையும் இத்தொகுப்பில் காணமுடிகிறது. ‘முல்லை வனம்’, ‘வெட்சிப்பூக்கள்’, ‘தாரோள நாரைகள்போன்றவை அப்படி உருவானவை. இந்தக் குறியீடும் சித்துராஜுக்கு கதையில் தான் சொல்ல வந்ததை வலியுறுத்தவே உபயோகமாகிறது. கதையின் ஒரு சூழலில் இந்தக் குறியீடுகளைச் சொல்லி இறுதியில் ‘இதுபோலதான் அது’ என முடிக்கிறார். அது வாசகனுக்கு தான் சொல்ல வந்ததை வலியுறுத்தும் உப கருவியாகிறது. ‘முல்லை வனம்’ பாதுகாவலருக்குக் குறியீடாகிறது. ‘வெட்சிப்பூக்கள்’ தந்தைக்கு குறியீடு ஆகிறது.

துளசி மாடம்’, ‘தேவேந்திரன் பண்ணிய டிராமா’, ‘களங்கம்’, ‘மோகவல்லி போன்ற கதைகள் என் வாசிப்புக்கு எவ்விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. வேலையிடத்து சூழ்ச்சிகளை துளசி மாடமும் தேவேந்திரன் பண்ணிய டிராமாவும் பேசுகின்றன. ‘அது அப்படி நடந்தது’ என்பதைத் தவிர அவற்றை வாசித்து முடித்தபிறகு வேறெதுவும் தோன்றவில்லை. அதுபோல சித்துராஜின் பிற கதைகளில் திரண்டு வந்த மனித மனதின் உள்முரண்கள் ‘மோகவல்லி’ போன்ற பாலியல் மாற்று சிகிச்சைக்குப் பின்பான பெண்ணின் கதையில் உருவாகவில்லை. எளிய திருப்பங்கள், சிறிய மனமாற்றங்கள், கொஞ்சம் தேற்றல்கள்.

சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூர் நவீன இலக்கியச் சூழலில் தனித்த இடம்பிடித்துள்ளார். அவரது எழுத்துகள் விசாலமான சிங்கப்பூர் நிலம் முழுமையிலும் அலைந்து திரிய விரும்புகிறது. தமிழ் புனைகதைகளில் அவர் அணுகும் வாழ்க்கை வாசகர்களுக்கு புதிய மனிதர்களையும் அவர்களின் புதிய சிக்கல்களையும் அறிமுகம் செய்கிறது. ஒளியைக் கையில் ஏந்தி விளையாடும் அவர் வழி சிங்கப்பூரின் தமிழ் இலக்கியமும் ஒளி கொள்ளட்டும். அவர் புனைவுகள் தொடர்ந்து விவாதிக்கப்படுவதே அதற்கான வழி. 

அகநாழிகை பதிப்பகம்

ஆன்லைனின் வாங்க

1 comment for “ஒளியாலான கதைகள்

  1. July 2, 2021 at 11:52 am

    மிகக் கூர்மையான அவதானிப்பு. சித்துராஜ் கதைகளில் அங்கதமும் கவித்துவமும் கூடிவரும் கதைகள். நவீன் சொல்வதுபோல கதைகளுக்கான சரியான மொழியைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறார். அசல் சிங்கப்பூர் குடிமகன் என்பதால் சிங்கைக்குப் பெருமை சேர்க்கிறார். நியாயமான பார்வை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...