ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று ரோலாண்ட் பார்த்ஸின் ‘ஆசிரியர் இறந்துவிட்டான்’ the author is dead எனும் கோட்பாடு. 

அதாவது, இலக்கியப் பிரதியை எழுதி முடித்தவுடன் அதனை ஆசிரியரின் தன்னிலையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியதில்லை; வாசகன் அதற்கு மேலதிகமான வாசிப்புகளை அளித்து விரிவுபடுத்திக் கொள்வான் என்பதே ஆகும். இந்தக் கோட்பாட்டை ஒட்டி ழாக் தெரிதா (Jacques Derrita) கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு (Deconsturction) என்னும் கோட்பாட்டை முன்வைக்கிறார். தகர்ப்பமைப்பு என்பதை ‘எந்தவொரு கருத்தும் இலக்கியப்பிரதியும் அல்லது ஆளுமையையும் குறித்துத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கும் பார்வையைத் தகர்த்து, மீண்டும் புதிய கட்டமைவை உருவாக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கிக் கொள்ளுதலாக’ வரையறை செய்யலாம். 

மொழியின் நுண்ணழகான சொற்கள் தமக்குத் தாமே இருமை நிலைகளில் பொருளை அளிக்கின்றன. உதாரணமாக, பொய் எனும் சொல்லின் பொருளை உண்மை X பொய்மை என முரண்படுத்திக் கொள்வதன்  வாயிலாகவே பொருள் கொள்ள முடிகிறது. அதைப் போன்றே, இருள் என்ற ஒன்றை புரிந்து கொள்வதற்கு வெளிச்சம் என்ற ஒன்றைப் பற்றிய புரிதல் தேவைப்படுகின்றது.  சூழல்களின் பொருத்தப்பாட்டால் சொற்களின் பொருளும் சிக்குண்டு விடுகிறது; அவ்வாறே அதன் பொருளையும் சமூகம் விளங்கி கொள்கின்றது. அவற்றிலிருந்து பொருளைக் கட்டுடைப்பு செய்து எண்ணற்ற சாத்தியங்களின் மூலம் சொற்களை எதிர்கொள்வதையே பிரெஞ்சு தத்துவ அறிஞர் பின்கட்டமைப்புவாதம் (Post Structuralism), தகர்ப்பமைப்பு ஆகிய கோட்பாடுகளின் வாயிலாக முன்வைக்கிறார். 

எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் ‘விளம்பர நீளத்தில் ஒரு மரணம்’ எனும் நாவலின் தொடக்கத்திலே ழாக் தெரிதாவின் கோட்பாடுகளுடன் அத்தியாயங்கள் தொடங்கும் என்றிருந்தது. நாவலின் 30 அத்தியாயங்களும் தெரிதா பின்கட்டமைப்புவாதத்தை ஒட்டி நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் கொடுத்த மேற்கோள் வரிகளிலிருந்தே தொடங்குகிறது. 

இந்த நாவல் சிங்கப்பூரில் வசித்துவரும் தெரிதா டான் என்கிற சீனரின் தன்னுரையாடலிலிருந்து தொடங்குகிறது. சமூகச் சேவையைப் பணியாகக் கொண்டிருக்கும் டான், சுசீலா எனும் இந்தியப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். இந்தத் திருமணத்தில் இருவரின் பெற்றோர்களுக்கும் உடன்பாடில்லை. சுசீலா சிங்கப்பூரின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் இராசாயனக் கூடத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறாள். அந்தப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைப் பேராசியராக மீட்சூயி வாட்டாதா எனும் ஜப்பானியர் பணிபுரிகிறார். சுசீலாவுக்கும் வாட்டாதாவுக்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக தெரிதா டான் சந்தேகிக்கிறான். அவர்களின் உறவைப் பற்றியும், டான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வாசுதேவன் எனும் பெயரில் பேராசிரியர் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்கிறார். 

இந்த மையக் கதையோட்டத்திலிருந்து விலகி உதிரியாக இருக்கும் கதைமாந்தர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் வாசுதேவன். அவருடைய சிறுவயதில் வீட்டில் தங்கியிருக்கும் ஆடவரொருவரும் தன்னுடைய அண்ணியும் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவத்தை ஒட்டுமொத்தமாகப் பெண்களுக்கு எதிரான கசப்பாக மனத்தில் திரட்டி வைத்திருக்கிறார். சுசீலாவும் டானும் விவாகரத்து செய்து கொள்கின்றனர். வாட்டாதாவின் மனைவி யூரிகோ தற்கொலை செய்து கொள்கிறாள். டானைச் சந்திக்கச் செல்லும் வாட்டாதா காரொன்றால் மோதி இறந்துவிடுகிறான். இந்த மரணத்தை ஒட்டித் துப்பறியும் பாணியில் கதைமாந்தர்கள் தமக்குத் தாமே நிகழ்த்திக் கொள்ளும் அக விசாரமாகவும் தன்னுரையாடல்களாகவுமே நாவல் இருக்கிறது. அந்த மரணத்துக்கான காரணங்களைக் கட்டுடைப்பு செய்வதும் புதிய சாத்தியங்களை அளிப்பதாகவே நாவலைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

நாவல் முழுவதுமே வாட்டாதாவின் மரணத்துக்கான காரணத்தை அலசுவதாகவே அமைகிறது. அதனைக் கொலையாக உருவகிக்கும் வகையிலான சித்திரிப்புகளும் பின்னர் அனிச்சையான மரணமாக மாறுகின்ற சாத்தியத்துடன் நாவல் முடிகிறது. தருக்கப்பூர்வமாக அணுகப்படும் சம்பவங்களில் பிணைந்திருக்கும் உள்ளிழைகளால் அவை அடையும் மாறுதல்களையே இந்நாவலின் தத்துவமாக உருவகிக்கலாம். அவ்வாறே யூரிகோவின் மரணமும் டான் மனைவி மீது கொள்ளும் சந்தேகமும் எனச் சம்பவங்கள் பலரின் பார்வையில் விரியும் போது மாறி கொண்டே இருக்கிறது. இந்தக் கதைச் சட்டகத்தில் அகலிகையின் தொன்மத்தையும் ழாக் தெரிதாவின் பின்கட்டமைப்புவாதத்தையும் ஊடுபாவாக ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். 

ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அளிக்கப்பட்டிருக்கும் தெரிதாவின் மேற்கோள் வரிகள் கதையோட்டத்துடன் பொருந்தாமல் துருத்தியே நிற்கிறது. அந்த மேற்கோள் வரிகளை ஒதுக்கிவிட்டு நாவலை அணுகும் போதும் கூட விவரணைகளால் சம்பவங்கள் மாறுகின்றன என்பதை ஊகிக்க முடிகிறது. அந்த வரிகளுக்குத் தரப்படும் அழுத்தமானது சம்பவங்களை அவற்றின் தருக்க ஒழுங்குக்குள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை என்கிற கோட்பாட்டுப் புதிரை நிகழ்த்தச் செய்வதற்கான உத்தியாக எஞ்சுகிறது. சூழலின் பொருத்தப்பாடு அளிக்கும் பொருள்களினால் ஆனவையாகவே சம்பவங்கள் அமைகின்றன. எனவே, கதைமாந்தர்கள் வெளிப்படுத்தும் தன்னுரையாடல்களையும், சித்திரங்களையும் உண்மையும் கற்பனையும் பொய்யுமாக இருப்பதாகவே எண்ண வேண்டியிருக்கிறது. கதைமாந்தர்களின் உரையாடலையும் சித்தரிப்பையும் ஒன்றுக்கு ஒன்று ஒப்பிட்டுத் தருக்க அடிப்படையிலான ஒழுங்கைக் கதைக்குள் பேணி கொள்ள வேண்டியிருக்கிறது. 

உதாரணமாக, 5 ஆவது அத்தியாயத்தில் ஜெர்மனின் மியுனிக் நகரில் வாட்டாதாவும் சுசீலாவும் விடுதியறையில் தங்கி உறவு கொண்டதாகச் சித்திரிப்புகள் அமைகின்றன. பின்னர் வரும் சுசீலாவின் கடிதங்களில் அதனை மறுக்கும் விதமான சித்திரிப்புகள் அமைகின்றன. எனவே, ஒவ்வொன்றின் முரணையும் தருக்க ஒழுங்கையும் ஒப்பிட வேண்டியதாகிறது. அந்த வகையில், இந்நாவல் வெளிப்படுத்தும் புதிர்த்தன்மையைக் கட்டவிழ்ப்பதே முதன்மையாக இருக்கிறது. அகலிகையின் தொன்மத்தை எதிர்ச்சூழலில் வைத்து அணுகுவதற்கான புனைவுபுள்ளிகள் இருந்தும் அவை முறையாகக் கதையில் வார்த்தெடுக்கப்படவில்லை எனலாம். தன்னைக் கெளதமனாகக் கற்பனை செய்து கொள்கின்ற தெரிதா டான் தன் மனைவி வாட்டதாவுடன் உறவு கொள்கின்றபோது பிடிக்க எண்ணுகிறான். சுசீலா கற்பொழுக்கம் அற்றவள் என நிறுவுவதன் மூலம் ஒரே சமயத்தில் தன்னைக் கெளதம முனிவனாகவும் சாப விமோசனம் அளிக்கும் ராமனாகவும் கற்பனை செய்து கொள்கின்ற டானின் ஆணவத்தின் வெளிப்பாடாக மட்டுமே அமைகிறது. 

பல்வேறு பண்பாட்டினரும் ஒன்றாக வாழும் சிங்கப்பூர் சூழலில் பண்பாட்டு கலப்புகள் இயல்பாகி போகின்றன. இவ்வாறாக ஆண் பெண் உறவில் பண்பாட்டு, சூழல் வேறுபாடுகளும் சன்னமாகி மறைந்து போகின்ற போது நிகழ்கின்ற முரண்களையும் உளவியல் சிக்கலையும் காண முடிகிறது. பாரம்பரியப் பெருமைகளையும் வணிகச்செல்வாக்கையும் பேணும் சீனக் குடும்பத்தில் பிறக்கும் தெரிதா டான் வாழ்வின் மீது எவ்விதமான பிடிப்புகளுமற்று இருக்கிறான். கட்டாயத்தினால் வேறு வழிகளின்றி சமூகச்சேவையைப் பாடமாகக் கொண்டு படிப்பதும் அதையே வேலையாகக் கொள்வதும் சீனராக அவனது வீழ்ச்சியாகவே இருக்கிறது. ஓர் இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்வதும் அதனை உறுதி செய்வதாகவே இருக்கிறது. வேலையிலும் குடும்பப் பெருமையிலும் அமையும் வீழ்ச்சி மனதுக்குள் தாழ்வு மனப்பான்மையாக மாறி குரூரமாக உள்ளுறைகிறது. அதன் முடிவில்லாத ஊடாட்டமாகவே மனைவி மீதான சந்தேகம், அவளை வீழ்த்திப் பார்க்க துடிக்கும் உள்ளுணர்வு அமைகிறது. 

பெண்ணின் கற்பை முதன்மையாகக் கருதும் பண்பாட்டின் சுமை நவீன வாழ்விலும் தொடர்கிறது. பெண்ணைக் கற்புள்ளவள் X அற்றவள் என அர்த்தப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆண்கள் பெண்களின் மீது ஆதிக்கம் கொள்கின்றனர். //ஊருக்கு அடங்கினவ பரிசுத்தமானவ அடங்க மறுக்குறவ தேவடியாஇதுல ஒரு வகையான பொம்பளையைத் தெய்வமாத் தூக்கித் தூணில பிரச்சாரமா நிக்க வச்சுருக்காங்க. இன்னொரு வகை பொம்பளைங்கள விளம்பரப் பலகைகள்ல ஏத்தி வச்சிருக்காங்க//  என்ற சித்திரிப்பின் ஊடாக உணர்வுகளின் அலைகழிப்பு, வாழ்வியல் சூழல்களால் இந்த இருமைச் சட்டகத்துக்குள் அடக்க முடியாதப் பெண்களை ஏதாவது ஒரு துருவத்துக்குள் சமூகம் அடக்கும் போதான முரணைக் காண முடிகிறது. ஒரு சீனரைத் திருமணம் செய்து கொள்கின்ற சுசீலா பெற்றோர்களின் விருப்பமின்மையைத் தவிர பெரிதாக வேறொன்றையும் வீழ்ச்சியாக அடையவில்லை. ஆனால், தாழ்வெண்ணத்தால் சீண்டப்பட்ட கணவனால் உளம் சிதைக்கப்படுகின்ற பலி விலங்காக இருக்கிறாள். வாட்டதாவின் மனைவியான யூரிக்கோவும் சுசீலாவைப் போன்றே கணவனால் உளவியல் அடிப்படையில் தாக்கப்படுகிறாள்.  அவள் தானே விவாகரத்து அளிக்க வேண்டி வாட்டதா அழுத்தம் தருகிறான். அந்தத் தாக்குதலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ள வைக்கப்படுகிறாள். மலேசியாவில் வேலை செய்து விட்டுத் தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கின்ற இளைஞனொருவனின் மீதான வசீகரத்தால் உந்தப்பட்டு அவனுடன் ஒடிப் போகிறாள் வாசுதேவனின் அண்ணி. அதற்காகக் கணவனைக் குற்றவாளியாகச் சமூகம் எண்ணுகிறது. அவனுக்கு மறுமணம் செய்து குற்றவுணர்விலிருந்து இயல்பாகக் குடும்பம் மீள்கிறது. ஆண் பெண் உறவின் மீதான ஒவ்வாமை வாசுதேவனின் உளவியலில் வெறுப்பாக நீடிக்கிறது.

இந்த நாவல் வாட்டதா, தெரிதா டான், சுசீலா, வாசுதேவன் என நான்கு கதைமாந்தர்களின் நினைவுகளிலிருந்தும் தன்னுரையாடல்களிலிருந்தும் நகர்கின்றது. நாவலின் சில இடங்களில் ஆசிரியரே கதைசொல்லியாகவும் இருக்கிறார். நவீன உலகின் சிக்கலாகத் தங்களுக்கான தனி உலகை ஏற்படுத்திக் கொள்ளுதலை ஆசிரியர் உத்தேசிக்கிறார். நாவலின் கதைமாந்தர்களுக்குள் ஏற்படும் உரையாடல்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அவர்களின் அக உணர்வை வெளிப்படுத்த புறத்தகவல்களையே ஆசிரியர் பயன்படுத்துகிறார். உதாரணமாக, தெரிதா டான் தாழ்வுணர்வும் வன்மமும் இருபக்கங்களிலும் அழுத்தும் உளவார்ப்புடையவன். அவனது அக உலகைக் காட்டுவதற்காக ஒரு முழு நீளப்பாடலின் வரி, வேலைவிண்ணப்பக் கடிதங்கள், இறப்பு விளம்பரத்தின் வடிவமைப்பு, விலைப்பட்டியல் என ஆசிரியர் ஏற்படுத்திச் செல்லும் உத்திமுறைகள் தகவல்களாகவே எஞ்சுகிறது. சுசீலா விட்டுப் போகின்ற காதல் பாடலொன்றை டான் திரும்ப திரும்ப கேட்கிறான் என்ற சித்திரிப்பினூடே முழுப்பாடலின் வரிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சூழலில் நிகழ்கின்ற எளிய முரணைத் தாண்டி பாடல் வரிகளால் நாவலில் பெரிய தேவையொன்றுமில்லை. அதைக்காட்டிலும் அவனது தன்னுரையாடல்களும், சுசீலாவுடனான உரையாடலும் மன உணர்வை அணுக்கமாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்த நாவலின் நெடுகச் சிங்கப்பூரின் பன்மைத் தன்மைகளையும் கதைமாந்தர்களின் பண்பாட்டு முரண்களையும் விளக்கும் வகையில் தகவல்களும் செய்திகளும் நிறைந்து இருக்கின்றன. சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில், ஆம்ஸ்டிரடாமின் தோட்டம், ஜெர்மனின் சதுக்கம், தமிழ்நாட்டின் அய்யம்பேட்டை என நாவலின் நிலப்பரப்பு தாவித்தாவிச் செல்கிறது. வெவ்வேறு நாட்டினரும் பல்லின மக்களும் வாழும் சிங்கப்பூர் போன்ற பெருநகரொன்றின் பண்பாட்டு வெளி சிக்கலானதாக இருக்கிறது. அதிலும் இருவேறு பண்பாட்டுப் பின்னணி உடையவர்கள் திருமணம் புரிகின்ற போது முரண்கள் நிகழுகின்றன. டானின் குடும்ப வழக்கங்கள், வரலாறு, சடங்குகள் குறித்த தகவல்கள் நாவலில் விரிவாகவே அமைகின்றன.  ஆனால், அவற்றைக் கொண்டு டானுக்கும் சுசீலாவுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் முரணை வாசிப்பில் உள்வாங்கி கொள்ள முடியவில்லை. அதைப்போன்றே ஜப்பானியர் மரபு, அடுக்குமாடியில் நடைபெறும் மலாய்க்காரர் திருமணம், விபசன்னா தியானம் ஆகியன எவ்வித அழுத்தமும் இன்றி உதிரித் தகவல்களாகவே நிலைகொள்கின்றன. 

அதே சமயத்தில் டானின் பிறப்பாண்டு சீன சுழல்முறையாண்டில் தண்ணீர் எலியாக இருப்பதும் அதன் தன்மையுடன் ஒப்புமைப்படுத்தி  டானைத் தந்திரமும் நிலைமாறுகிறவனாகவும் காட்டுவது பொருத்தமாக இருந்தது.  நாவலில் இடம்பெற்றிருக்கும் நுண்சித்தரிப்புகளும் உவமைகளும் வாசிப்பில் அயர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருந்தன. குளிர்பானப் பாக்கெட்டுகளின் வடிவமைப்பை மெழுகினால் ஒட்டப்பட்டிருந்த குழாய்கள் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு…(பக் 54) என நீளும் விவரணைகள் வாசிப்பில் அயர்ச்சியை அளிக்கின்றன. அவ்வாறே நாவலில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு கதைமாந்தரின் குரலுக்கான உவமை, செயலுக்கான உவமைகள் ஆகியவையும் சோர்வையளிக்கின்றன. நாவலின் 55 ஆம் பக்கத்தில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாகச் சித்தரிக்கப்படுகிற சுசீலாவின் அப்பா 110 ஆம் பக்கத்தில் முப்பதாண்டுகளாக ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார் எனச் சொல்லப்படுகிறது. அதைப் போல சுசீலா 32 வயதாகியும் திருமணம் புரியாமல் இருக்கிறாள் (பக் 49) என அவளின் அம்மா புலம்புவதும் திருமணமாகி எட்டாண்டுகள் ஆனப்பின்னும் //36 வயது ஆகிவிட்டது// (பக் 105) எனச் சித்தரிப்பதும் தகவல் முரண்களாக இருக்கின்றன.

பல நூறு முடிச்சுகளின் இழு விசையாலே ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு மரணத்தின் பின்பான முரணான இழுவிசைகளாக இருக்கும் பன்மையான பண்பாட்டுப் பின்னணியில் ஏற்படும் அடையாளச்சிக்கல், ஆண் பெண் உறவு சிக்கல் ஆகியவையே இந்நாவலின் அடிநாதமாக அமைகிறது. 

காலச்சுவடு பதிப்பகம்

ஆன்லைனின் வாங்க

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...