சிறிய காடும் சில மனிதர்களும்

அழகு நிலா

மொத்தம் 18 தனித் தனி கட்டுரைகளைக் கொண்ட சிறுகாட்டுச் சுனை அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் தனித்தன்மையை, நாமறியாத பல புதிய வண்ணங்களைக் காட்டக்கூடிய தொகுப்பு. மிக எளிமையான மொழி நடையில்  சிரமமற்ற வாசிப்பை வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் அழகு நிலா. இக்கட்டுரைகள் வெறும் தகவல் கோர்வைகளாக அல்லாமல், உயிர்ப்பான அனுபவப் பின்னணியிலிருந்து யதார்த்தமான பாணியில்  எந்த மெனக்கெடல்களும் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பதாலேயே இப்படைப்பு தனித்து நிற்கிறது.

இக்கட்டுரைகள் பெரும்பாலும் சிங்கை வாழ் மக்களின்  வாழ்வியலின் பல வண்ணங்களையும், அவர்களின் நம்பிக்கை, கலாசாரம் போன்ற பல நுட்பமான தகவல்களையும் வழங்கியிருப்பதாகவே முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் இக்கட்டுரைகளில் பெரும்பான்மையானவை புலம் பெயர்  மக்களால்  சிங்கை நாட்டில் படர்ந்து விரிந்து கிடக்கும்  பல வண்ணங்கள் பற்றியது. என்னால் இவற்றை அப்படிதான் வகைப்படுத்திக்கொள்ள முடிகிறது. கூடுதலாக  அழகு நிலா அவர்களின் தமிழ் நாட்டு அனுபவங்களும் சிங்கை மண்ணின் தற்போதைய அடையாளங்களோடு ஒப்பீடளவில் பேசுவதும்  வாசிப்பை மேலும் மேலும் உவப்பாக்கியுள்ளது.

இத்தொகுப்பில் ‘பச்சை மனிதர்கள்’ என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது. இது பச்சைக் குத்தும் பாரம்பரியம் பற்றியதும். தமிழர்களின் பாரம்பரியமான பச்சைக்குத்தும் கலாசாரம் தற்போது ‘டேட்டூஸ்’ என்ற ஃபேசனாகவும், அதே வேளையில்  சில தரப்பினர் மத்தியில் இழிவுக்குறியதாகவும்  பார்க்கப்படும் முரண்பாடுகளை பேசுகிறது இக்கட்டுரை. தற்போது பச்சைக்குத்திக் கொள்ளும் சுதந்திரத்தைப் பல நாடுகள் வழங்கியுள்ளன. அவ்விதம் சிங்கப்பூர் பச்சைக்குத்த எந்த வயது வரம்பையும் வைத்திருக்கவில்லை. எனினும், சில பள்ளிக்கூடங்களில் பச்சைக்குத்தக்கூடாது என்ற விதிமுறை நிலவி வருகிறது. பள்ளிகளில் இத்தகைய தடைகள் ஏற்கத்தக்கதுதான் என்றாலும் சிங்கப்பூரில் ‘மெரினா பே சாண்ட்ஸில்’ உள்ள ஒரு இரவு நடன விடுதியில் டேட்டூஸ் உடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்பது ஆச்சரியப்பட வைக்கக்கூடிய தகவல்தான். பச்சைக்குத்தும் கலாசாரம் குறித்த மக்களின் மாறுபட்ட முரண்பட்ட பார்வையை நமக்கு அளித்திருக்கும் அதே வேளையில் அழகு நிலா அவர்களின் அம்மாச்சியின் வாயிலாக இந்தியர்களின் பச்சைக்குத்தும் பாரம்பரியத்திற்குப் பின்னால் தமிழ் நாட்டில் நிலவி வந்திருக்கும் ஒரு நம்பிக்கையையும் சுவாரசியம் குறையாமல் அறிய வாய்ப்பளித்துள்ளது இக்கட்டுரை. 

நாம் இறந்த பிறகு எமலோகத்திலிருக்கும் எமதர்மர் என்ன சீதனமாகக் கொண்டு வந்தாய் என கேட்கும் பொழுது ஒரு பிடி பச்சைக் கொண்டு வந்தேன் என சொல்லி நமது பச்சையைக் காட்டுவோமானால் நாம் நேராக சொர்க்கம் செல்வோம் என்பதே அம்மாச்சிப் பாட்டிக்கு அவரின் பெரியவர்கள் சொன்ன கதை. அதன் பொருட்டே காட்டாயத்தின் பேரில் நெற்றியிலும் கையிலும் பச்சைக் குத்தப்பட்டு ஒரு வாரம் காய்ச்சலுக்கு ஆளாகும் அம்மாச்சியின் நிலை நகைச்சுவையாகவே இக்கட்டுரையில் வந்துபோகிறது.  எனினும் கால மாற்றத்தால் அழகுநிலா அவர்களின் அம்மாச்சியோடு நெற்றியிலும் கைகளிலும் பச்சைக்குத்தும் வழக்கம் நின்றுவிடுகிறது. தொடக்கத்தில் இப்படி பல தொல் நம்பிக்கைகளின் பேரில் மக்களிடையே ஊடுருவிய இந்த பச்சைக்குத்தும் பாரம்பரியம் பின்னாட்கள் அன்பைக் காட்டும் குறியீடாக மாறிய சூழலையும் சொல்கிறார். அக்கால மனைவிமார்கள் அன்பின் பொருட்டே கணவனின் பெயரை பச்சைக்குத்திக்கொண்டுள்ளனர். கணவின் பெயரைச் சொல்ல வேண்டிய நிர்பந்தமான பல சூழல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும் கையில் குத்தப்பட்டுள்ள இந்தப் பச்சை அவர்களுக்கு உதவியுள்ளது. இன்றும் இந்தப் பச்சைக் குத்தும் பாரம்பரியம் கால மாற்றத்தில் பல பரிமாணங்களை அடைந்து அழிவின்றி வாழ்கிறது.

இத்தொகுப்பில்  ‘எச்சில் கூட்டின் துளிர்’ எனும் இக்கட்டுரை  சீனர்களின் பாரம்பரிய மருத்துவமாகிய Swiftleft எனப்படும் ஒரு பறவையின் எச்சில் கூட்டைப் பற்றியது. பல புலம் பெயர் இனத்தவர்களுக்கு இன்று வாழ்விடமாக இருக்கும் சிங்கப்பூர் அதன்பொருட்டே பன்முக கலாச்சாரங்களால், வாழ்வியலால், பண்பாடுகளால் நிரம்பி நிற்கவே செய்கிறது என்ற எண்ணத்தை இக்கட்டுரை என்னுள் ஏற்படுத்தியது. ஆனாலும் தனது பாரம்பரிய உணவுகளைப் பெறுவதில் அந்நிய நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் சிந்தனையில் படர்ந்து செல்லாமல் இல்லை.  அழகு நிலா அவர்கள் உடல் நலமின்றி மருத்துவ மனையில் இருக்கும் தன் சீனத் தோழியைப் பார்க்கச் செல்லும் அனுபவத்திலிருந்தே இக்கட்டுரையைத் தொடங்கி அதிலேயே முடித்துமிருக்கிறார். நான் முன்பு சொன்னது போலவே இந்த அவரது சுய அனுபவங்களிலிருந்து துளிர்த்தெழும் தகவல்களே இக்கட்டுரைகளை உயிர்ப்பித்து உணர்வூட்டுபவையாக உள்ளன. உண்மையில் மருத்துவ குணமுடைய எச்சில் கூடு நாம் முன்னமே அறிந்த தகவல் என்றாலும் அதை இன்னும் ஆழமாக இக்கட்டுரை வழி அறிய முடிகிறது. 

பெண் குருவி  முட்டையிட ஏதுவாக ஆண் குருவி தன் எச்சிலால் கட்டும் கூடுதான் இந்த எச்சில் கூடு எனப்படுகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து நாட்களில் இக்கூடு கட்டிமுடிக்கப்படுகிறது. இந்த பறவையின் எச்சிலில் மனிதர்களின் உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் உள்ளதென சொல்லப்படுகிறது. அதே வேளையில் இது தோல் பளபளப்பையும் அதிகரிக்கக்கூடியது என அறிய முடிந்தது. இத்தகைய தன்மையினையுடைய இப்பறவைக்கூடு அவை வாழுமிடம், உணவு, கூட்டின் நிறம், அதன் கட்டமைப்பு, மணம் ஆகியவற்றால் வேறுபடுகின்றனவாம்.  ஆரஞ்சு, வெள்ளை, கறுப்பு, சிவப்பு, பொன்னிற ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இக்கூடுகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் இவற்றில் முட்டையை ஒத்த மணம் கொண்ட ஆரஞ்சு நிறத்திலான கூடுகளே சிங்கப்பூரர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் இறகுகளை எச்சிலால் இணைத்துக் கட்டும் கறுப்பு நிற கூடுகள் மட்டும் மலிவான விலையில் கிடைக்கக்கூடியவையாம். 35 நாட்கள் உழைத்து தன் எச்சிலால் கட்டப்படும் கூட்டை மனிதன் எத்தனை சுலபமாக வியாபாரமாக்குகிறான் என்ற சராசரி அறக்கேள்வி என்னுள்ளும் எழவே செய்தது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு கேள்விக்கு அவசியமிருக்கவில்லை. காரணம், இப்பறவைகள்  முட்டையிட்டு, குஞ்சு பொரித்துப் பின் அவை பறந்தப்பின்பு காலியான பிறகுதான் இக்கூடுகள் சேகரிக்கப்படுகின்றன.   இன்று இவ்வகைப் பறவைகள் கூடு கட்டுவதற்கென்றே குகைப்போன்ற கட்டிடங்கள் வியாபார நோக்கில் கட்டப்படுகின்றன. அதில் இவ்வகைப் பறவைகள் கூடுகட்டி குஞ்சுப் பொரிக்கிறன. ஆனால்  இயற்கையாக உயர்ந்த குகைளில் கட்டப்படும் கூடுகளே அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளன. எனவே அவற்றின் விலையும் அதிகம். இப்படி பல தகவல்களை சேகரித்தப் பின் அதை தன் சீன தோழிக்காக அதிக விலைக்கொடுத்து வாங்கிச் செல்கிறார் அழகு நிலா அவர்கள். அந்த கூடு சீனாவிலிருந்து புலம் பெயர்ந்த தன் தோழிக்கு தன் தாயை நினைவூட்டுகிறது. இக்கட்டுரை என்னதான் எச்சில் கூட்டைப் பற்றி விரிவாக பேசியிருந்தாலும் சிங்கப்பூர் போன்ற புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும்  மக்கள் தங்களது தாய்நாட்டு பாரம்பரியங்களைப் பெறுவதில் இருக்கக்கூடிய சிக்கலையும் சேர்த்தே சொல்கிறது. பாரம்பரியத்தை சுமந்து வரும் கைகள் அனைத்தும் தாயின் கரங்களாகவே மாறிவிடுகின்றன.

‘சிறுகாட்டுச் சுனை’ எனும் கட்டுரை, இத்தொகுப்பில் தமிழக மக்களின் நம்பிக்கை நீட்சியை சிங்கையில் கண்டடையும் இன்னொரு அனுவத் தொகுப்பாகவே உள்ளது. அழகு நிலா சிறு வயது முதலே பார்த்துப் பழகிய ஒரு நாட்டாரியல் தெய்வ வழிபாட்டு முறையையும் சடங்கையும் இன்னும் ஆழமாக முழுமையாக அவருக்குப் புரிய வைத்த நிலம் சிங்கப்பூர் என்ற பதிவு வியப்பானது. தமிழர்களோடு புலம் பெயர்ந்து ஆச்சி என்ற நாட்டர் தெய்வம் சிங்கையில் ஏழாம் தலைமுறையாக இன்றளவும் நின்று நிலைக்கிறாள். கறுப்பு புடவை அணிந்து எட்டுக் கரங்களோடு தனது பாதங்களால் ஒருவனை மிதித்த வண்ணம் ஒரு பெண்ணை மடியில் கிடத்தி அவளது வயிற்றைக் கிழித்துக் குடலை அள்ளித் தின்றவாறும் ஒரு கரத்தில் குழந்தையை ஏந்தியவாறும் காட்சி அளிக்கும் நாட்டாரியல் தெய்வத்தை இன்று மலேசியாவில் பேச்சியம்மன் என்றே அறிகிறோம். சிங்கையில் அவள் ஆச்சியாக அறியப்படுகிறாள். பேச்சியம்மனின் இந்த ஆங்காரமான தோற்றத்துக்கு பல வாய்மொழிக் கதைகளை நாம் கேட்டிருக்கலாம். இன்றும் அது  பல வடிவங்களைப் பெற்ற கதையாகவே உள்ளது. இக்கட்டுரை அவற்றில் ஒரு வடிவத்தை சொல்லிச் செல்கிறது. தனது நாட்டைப் பகைவனிடம் இழந்த வல்லாளன் என்ற மன்னனொருவன் நிறைமாதக் கர்ப்பிணியான தனது மனைவியுடன் காட்டில் ஒளிந்து வாழ்கிறான். பிறக்கும் குழந்தையால் ஆபத்து என சோதிடர் வழி அறியும் அவன் பெரியாச்சி என்ற தேர்ந்த மருத்துவச்சியிடம் உதவி கேட்கிறான். அவனது மனைவியை மடியில் கிடத்து பெரியாச்சி பிரசவம் பார்க்கிறாள். கையிழெடுத்த குழந்தையைக் கொல்ல வரும் மன்னனைக் ஆங்காரமாக அழிக்கிறாள். கணவனைக் காப்பாற்ற நினைத்தெழும் தாயையும் கொன்று அவளது குடலை உண்கிறாள். பின்னர் காப்பாற்றிய அந்தக் குழந்தைக்கு சீராளன் என பெயரிட்டு வளர்க்கிறாள். இதுவே சிங்கையில் கண்ட ஆச்சியை தமிழகத்தில் பெரியாச்சியாக கண்டடைந்த அழகு நிலா அவரது தங்கை வழி கேட்டறிந்த தொன்மக்கதை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கை எனும் அதி நவீன நாட்டில் ஆச்சி என்பவள் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் குறைவின்றி பூஜிக்கப்படுவதும் சிங்கை வாழ் பெண்களால் வணங்கப்படுவதும் ஆச்சரியமளிக்கிறது. இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் மக்களின் நம்பிக்கையிலிருந்து துளிர்த்து வரும் இதுபோன்ற தொன்ம தெய்வங்கள் காலத்தால் நிலத்தால் அழியாதவை என்ற நம்பிக்கையை மனதில் நட்டுச் செல்கிறது இக்கட்டுரை.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த அழகு நிலா அவர்களின் இக்கட்டுரைகள் அவர் அறிந்தோ அறியாமலோ சிங்கை சார் இடங்கள், வரலாறு பரிணாமம் ஆகிய எல்லாவற்றிலும் தாய் நாட்டின் சாரல் சிறிதளவேனும் தேங்கி நிற்கிறது. அதுவே ஒரு ஒப்பீடளவிலான பார்வையை வழங்கி அறிதலை மேம்படுத்துகிறது. அப்படி அமைந்த கட்டுரைகளில் ‘சிங்கம் 2’ என்ற கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. சிங்கங்களே இல்லாத சீனா நாட்டில் சீன மக்களிடையே இன்றளவும் வேறூன்றி இருக்கும் சிங்க சிலை சார்ந்த நம்பிக்கைகள் வியப்பூட்டுபவையும் உள்ளூர கேள்விகளை எழுப்புபவையும்கூட. மேலே பெரியாச்சி, ஆச்சியாக சிங்கையில் வாழ்வது போல சீன மக்கள் வாழும் சிங்கையிலும் அவர்கள் நம்பிக்கையிலிருந்து வரும் பல சிங்க சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இக்கட்டுரையில் சிங்கங்களே இல்லாத சீன மக்களிடடையே சிங்கம் சார்ந்த நம்பிக்கைகள் உருவான கதையே பிரதானமானது. 

ஹான் வம்ச ஆட்சிக் காலத்தில்தான்  இச்சிங்க வகைகள் அறிமுகம் கண்டுள்ளன. அக்காலத்தில் பெர்ஸிய நாட்டிலிருந்து சீனாவிற்கு வந்த அரசியல் தூதர்கள் ஹான் வம்ச மன்னர்களுக்குச் சிங்கங்களை பரிசாக அளித்துள்ளார்கள். அதே காலக்கட்டத்தில் சீனாவிற்குள் நுழைந்த புத்தமதம், தீயசக்திகளை அழித்து உண்மையைக் காப்பதற்கான குறியீடாகவும், மேன்மையான கண்ணியம் பொருந்திய தெய்வீக விலங்காகவும் சிங்கத்தைக் கருதியுள்ளனர். இதுவே பின்நாட்களில் இச்சிங்க சிலைகள் வைக்க காரணமாக  அமைந்துள்ளது. இப்படி மக்களின் நம்பிக்கையின் வழி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட சிங்க சிலைகளிலும் காவல் சிங்கங்கள், கோயில் சிங்கங்கள், சுப சிங்கங்கள் போன்ற சில வகைகளில் உள்ளன. இவை காவல் காக்கக்கூடிய சிங்கங்களெனவும் கருதப்படுகின்றன. எனவே இவற்றை ஆங்கிலத்தில் Foo Dogs அல்லது Fu Dogs என அழைக்கின்றனர். ஜப்பானிலும் காணப்படும் இவ்வகை சிங்கங்கள் Komainu என்றழைக்கப்படுகின்றன. ஜோடிகளாகவே வைக்கப்பட்டிருக்கும் இவைகளில் ஒன்றின் வாய் திறந்தும்  மற்றொன்றின் வாய்  மூடியும் இருக்குமாம். இவ்விரு சிங்கங்களின் வாய் அமைப்பும் இணைந்து ‘ஓம்’ மந்திரத்தை ஒலிக்கிறது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இன்று மலேசியாவிலும் பல சீன கோவில்களில் காணக்கிடக்கும் இதுபோன்ற சிங்க சிலைகளின் பின்னணியில் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது சுவாரசியமாக உள்ளது. இந்தச் சிங்கங்களை கோயிலின் முகப்பிலிருக்கும் துவாரபாலகர்களின் தோற்றத்தோடே ஒப்பிடுகிறார் அழகுநிலா.  ஆனால் சீன சிங்கங்களை, தமிழ் நாட்டு இந்து கோயில்களில் வடிக்கப்பட்டிருக்கும் யாழி சிலைகளுடன் ஒப்பிடுவதே சிறப்பாக இருக்கும். தமிழ் நாட்டு கோயில்களில் காணப்படும் யாழி என்ற காவல் விலங்கும் தமிழ் நாட்டில் எங்கும் காணப்படாத ஒரு புதிரான விலங்கு வடிவம்தான். ஆனால் அது கோயில்களில் சிறப்பு இடம் பெற்றுள்ளது ஒப்பிடத்தக்கது. 

பறவைகள் பாடல் போட்டி  சார்ந்த தகவல்களை உணர்வுப்பூர்வமான அனுபவங்களோடு தொட்டுக் காட்டும் கட்டுரைதான் ‘முதுமையின் சிறகுகள்’. இக்கட்டுரையில் சிங்கப்பூரில் நடக்கும் பறவைப் பாடல் போட்டியைப் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூரில் 1950-களின் இறுதியில்  பறவை பொழுது போக்கு பிரபலமடைந்துள்ளது. எனினும் வெறும் பறவை வளர்ப்பாக இருந்த இந்த பொழுது போக்கு 1960-களின் இறுதியில்தான் பறவைப் பாடல் போட்டியாக முன்னேறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 1970-களில் அதிகமான பறவை மன்றங்கள் தொடங்கப்பட்டு போட்டிகள் பெருமளவில் நடத்தப்பட்டுள்ளன. அப்படி 1980-களில் நடைபெற்ற ஒரு பறவைப்பாடல் போட்டி சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொள்ளாயிரம் போட்டியளர்களைக் கொண்டு திருவிழா போல நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் இது ஆண்களுக்கே உரித்தான போட்டியாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆண் பறவைகளே இப்போட்டியில் பங்கு பெறவும் செய்கின்றன. உண்மையில் இப்போட்டி தொடக்கத்தில் பறவை சண்டையாக இருந்து பின் அது தடை செய்யப்பட்ட காரணத்தாலேயே பறவைப் பாடல் போட்டியாக மாறியுள்ளது. சிங்கையின் பல வட்டாரங்களில் ‘Birds Corner’ என்ற பகுதி இருப்பதே ஆச்சரியமான தகவல்தான். அதில் வார இறுதி நாட்களில் கூடும் பறவை ஆர்வலர்கள் கூரையில், வரிசை வரிசையாக உள்ள எண் பட்டைகள் பொருத்தப்பட்ட கொக்கிகளில் தங்கள் கூண்டுப் பறவைகளைத் தொங்கவிடுகிறார்கள். உண்மையில் கூண்டுப் பறவைகள் வீட்டிலேயே இருந்தால் அவை தனது இறகுகளையும் பாடும் திறனையும் இழந்துவிடுகின்றனவாம். நெருக்கமாக தொங்க விடுகையில் பறவைகள் ஒன்றோடொன்று அளவளாவுவதன் மூலம் குரலை வளப்படுத்திக் கொள்கின்றனவாம். இப்பறவைகளின் திண்மை, ஒலிவன்மை, பாடல் நீளும் கால அளவு, குரலின் தொனி, இறக்கைகளையும் வாலையும் பரப்பும் தோற்ற அமைவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றனவாம். எனினும், இதில் அனுபவம் இல்லாத அழகு நிலாவுக்கு அப்பறவைகளின் பாடல் எல்லாம் ஒன்று போலவே ஒலித்துள்ளது. அவரது அனுபவம் வழி நாம் நமக்கான அனுபவத்தையும் கணிக்கமுடிகிறது.  

ஒரு விதத்தில் இப்போட்டி பறவைகளுக்கு மட்டுமல்லாது உரிமையாளர்களுக்கு முதுமைக்காலத்தில் தங்களது நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டோராகவே இருக்கின்றனர் என்பதையும் கட்டுரையில் அறிய முடிகிறது. உண்மையில் இக்கட்டுரை சீனர்களின் இத்தகைய வித்தியாசமான வழக்கத்தைக் காட்டும் அதே வேளையில்  அங்கே அழகு நிலா சந்தித்த போட்டித்தளத்தில் வெற்றி பெற்ற பறவையின் உரிமையாளரான ஒரு சீனகிழவரின் ஆழ் மனதையும் தொட்டுக் காட்டியுள்ளது நெகிழச்செய்துள்ளது. எண்பது வயதைத் தொட்டுவிட்ட அவரின் இந்த பொழுது போக்கில் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என யாருக்கும் விருப்பமில்லை. எனவே, அவர்களைப் பொருத்த வரை இந்தப் பொழுதுபோக்கு அர்த்தமற்றதே. ஆனால், அவருக்குப் பிறகு அவரது பறவைகளை யார் பேணிக் காப்பது என்ற கவலை அந்தச் சீனருக்கு. அந்தச் சீனக் கிழவரின் வருத்தமிக்க விடைபெறலோடு இக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் நான் அதி நெருக்கமாய் உணர்ந்த மற்றொரு கட்டுரை ‘நானும் பொம்மை நீயும் பொம்மை’ ஆகும். இது ‘MINT’ மியூசியம் பற்றியது. அதாவது ‘Moment of Imagination and Nostalgia with toys’  என்ற பெயரின் சுருக்கமே ‘MINT’ ஆகும். இந்த அருங்காட்சியகம் 2006-ஆம்  ஆண்டு பொம்மைகளை வைப்பதற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இது Chang Yang Fa  என்ற ஒரு தனி நபருக்கு சொந்தமான அருங்காட்சியகம். கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொம்மைகள் இந்தக் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது உண்மையில் பூரிப்பையே ஏற்படுத்துகிறது. அதில் அவருக்கு ஆறு வயதில் கிடைத்த பொம்மையும் அடக்கமாம். பொம்மை ஒரு விளையாட்டு பொருள் அல்லது அழகு பொருள் என்ற அர்த்தத்தைத் தாண்டி ஒரு பொம்மைக்குள் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற கால அலைகளையே என்னால் இக்கட்டுரை வழி மீட்கமுடிந்தது. ஒவ்வொரு காலத்துக்குமான ஒவ்வொரு பொம்மைகளுடனும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நிச்சயமாக எண்ணற்ற நினைவுகள் உறைந்து கிடக்கும் என நான் நம்புகிறேன். இக்கட்டுரையும் அதையே சொல்லிச் சென்றது. ஒரு காலத்தை இழுத்துப் பிடிக்க அதை மீட்டுப்பார்க்க ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது நாட்டின் அடையாளங்களை, பரிணாமங்களை பாதுகாக்க அடுத்த அடுத்த தலைமுறைக்குக் கடத்த பொம்மைகள் கூட வழி செய்யும் என நான் இக்கட்டுரை வழி அறிகிறேன். 

அழகு நிலா அவர்களின் எல்லா கட்டுரைகளின் பின்னணியிலிருந்தும் வரும் ஒரு பாத்திரம்போல இக்கட்டுரையில் அவரது தோழி ஒரு மாறுபட்ட குணாதிசயத்தோடு வந்து போகிறார். அவர் பொம்மைகளோடு வாழ்பவர். பள்ளிப் பருவம் தொட்டே அவரது புத்தகப் பையில் பொம்மைகள் இருப்பது வழக்கம். ஆனால் அந்த வழக்கம் இந்த வயதிலும் அவரிடம் இருப்பது அவரது உலகத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. வயது மூப்பால், பணிச்சுமையால், நெருக்கடிகளால் என எந்த சூழலிலும் ஒரு குழந்தைக்கான ரசனையைக் கைவிடாமல் பேணி வரும் அந்த தோழி உண்மையில்  பாக்கியசாலி. சிங்கப்பூர் பிரஜையான அழகு நிலா அவர்கள் அந்தத் தோழியின் மூலமே சிங்கையில் அப்படி ஒரு அருங்காட்சியகம் இருப்பதை அறிந்து  அவரோடு அங்கே செல்கிறார். பொம்மைகள் குழைந்தைப் பருவத்துக்கானது மட்டுமல்ல அது கட்டற்ற பருவத்திற்கானது, என்றைக்குமானது என அறிகிறேன்.

உண்மையில் அழகுநிலா தகவல்களோடு நமக்கு அறிமுகப்படுத்தும் மனித மனங்களே இக்கட்டுரையின் பிரதான அம்சங்களாக உள்ளன. நகைச்சுவையாக, நெகிழ்ச்சியாக, உருகலாக, உணர்ச்சிப்புர்வமாக என பலவாரான மனநிலையை நம்மில் ஏற்படுத்தி அதற்குள் நம்மை ஒன்றிக்கவைத்திருக்கின்றனர். பச்சை மனிதர்களில், பச்சைக் குத்த அஞ்சி பயந்த அம்மாச்சி ஒரு நகைச்சுவை உணர்வை நம்மில் கடத்துகிறார். எச்சில் கூட்டின் துளி கட்டுரையில் ஹார்லிக்ஸுக்காக  மாமாவோடு மருத்துவமனையில் தங்கிய அத்தையும் அதே நகைச்சுவை உணர்வையே கடத்திச் செல்கிறார். முதுமையின் சிறகுகள் கட்டுரையில் தனக்குப் பின்னான காலத்தில் தன் பறவைகளை எண்ணி கலங்கும் சீனக்கிழவர் ஒரு கலங்கலான மனநிலையைத் தருகிறார். நானும் பொம்மை நீயும் பொம்மை கட்டுரையில் அவரது தோழியின் குழந்தமை நம்மை ரசிக்கத்தூண்டுகிறது. இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு விதமான மனிதர்களைக் காட்டுகிறார். இதில் பல கட்டுரைகளில் அழகுநிலா அவர்கள் மிக யதார்த்தமான பாணியில் தன்னைத் தானே நகைத்துக்கொள்வது ஒரு சுவாரசியம்தான். ஒட்டுமொத்தமாக இப்படைப்பு ஒரு யதார்த்த பாணியில் தன்னியல்பாக எழுதப்பட்ட அனுபவக்குவியல்கள், இதில் சிதறிக்கிடக்கும் தகவல்கள் சிங்கப்பூரை அடையாளம் காட்டுகின்றன. 

நூலை அமேசோனில் வாங்க

1 comment for “சிறிய காடும் சில மனிதர்களும்

  1. அழகுநிலா
    July 2, 2021 at 2:00 pm

    இந்த நூல் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன். மூன்று வருடங்களில் வந்த இரண்டாவது புத்தகப்பார்வை. மகிழ்ச்சி. பவித்திராவிற்கு அன்பும் நன்றியும். வல்லினத்திற்கு மனமார்ந்த நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...